ஈச்வரன், த்வைத=அத்வைத பாலம்

இதற்குப் பதில் ஈச்வரன்தான், ஈச்வர க்ருபைதான். ஜீவத்வம் ஒரே த்வைதம். ஆத்மா ஒரே அத்வைதம். அதனால் ஜீவத்வத்துக்குக் காரணமான மனஸையும், ஜீவபாவம் அற்ற ஆத்மாவையும் ஸம்பந்தப்படுத்தமுடியாமல், ‘இது எப்படி ஸாத்யம்? அதெப்படி ஸாத்யம்?’ என்று கேள்விகள் கேட்கிறோம். இங்கேதான் ஈச்வரன் வருகிறான்.

ஈச்வரன் எப்படியிருக்கிறான்? த்வைதத்துக்கும் அத்வைதத்துக்கும் ஒரு பாலம் மாதிரி அவன் இருக்கிறான். ஒன்றையன்று தொட்டுக்கொள்ள முடியாத த்வைதஅத்வைத இக்கரைஅக்கரைகளை ஸம்பந்தப்படுத்தி வைக்கும் பாலமாக அவன் இருக்கிறான். உள்ளுக்குள்ளே அத்வைதமான ஆத்ம ஸ்வரூபமான இருக்கிறான். வெளியிலே த்வைதமான இத்தனை ப்ரபஞ்ச நாடகக் கூத்தும் அடிக்கிறான். நம் மனஸை அவன் ஏவிவிட்ட மாயை கட்டிப்போட்டு ஒரு சின்னக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அவன் இம்மாதிரி மனஸினால் கட்டுப்பட்டவன் அல்ல. ‘ஆத்மாவானது மாயையோடு சேர்ந்துதான் ஈச்வரன், ஜீவன் இருவருமே உண்டாயிருந்தாலும், ஜீவன்தான் மனஸிடம் மாட்டிக்கொண்டு முழிப்பவன்; ஈச்வரன் அப்படி மனிஸனால் பந்தப்படுத்தப்பட்டவன் அல்லஎன்று அத்வைத சாஸ்த்ரத்தில் நிறையச் சொல்லியிருக்கிறது. லோக வ்யாபாரமெல்லாம் திட்டம்போட்டுச் செய்யும் மஹா மனஸ், Cosmic Mind என்று ஈச்வரனையே சொல்லலாம்; ஆனால் அவனுக்குக் கட்டுப்படுத்தகிற உபாதியாக மனஸ் என்பது இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அவன் என்னவும் பண்ணுவான். நம் புத்திக்குப் புரியாததெல்லாம் அவனுக்கு ஸாத்யம். ‘ஜீவ மனஸோ, புத்தியோ அந்தஃகரணமோ எப்படி இதைப் பண்ணமுடியும், அதைப் பண்ணமுடியும்?’ என்று கேள்வி கேட்பது போல,’ஈச்வரன் எப்படி இன்னது பண்ணமுடியும்?’ என்று கேட்க முடியாது. மனஸினால் கட்டுப்படாதவனாதலால், எதுவும் செய்ய அவனால் முடியும்.

ஜீவன் தன் அந்தஃகரணத்தைக் கொண்டு என்ன ப்ரயத்னம் பண்ணமுடியுமோ, அவ்வளவும் பண்ணினபின் அது அழிந்து நாசமடைவதற்கும், அதற்கு எட்டாததை (ஆத்மாவை) ஜீவன் எட்டுவதற்கும் அவன்தான் வழி செய்கிறான். ஜீவபாவத்தின் உச்சிக்கு ஒருத்தன் போய், அங்கேயிருந்தும் ஆத்மாவைத் தொடமுடியவில்லை என்று கண்டுகொண்டு ஆத்மாநுபவத்துக்குத் தவிக்கும்போது, ஜீவபாவத்தை அழித்து, இந்த்ரியமனோபுத்திகளை இல்லாமல் பண்ணி, தன்னுடைய உள் ஸ்பரூபமான ஆத்மாவிலே ஐக்யப்படுத்திக்கொள்கிறான்.