சிருஷ்டி – படைப்பு; ஸ்திதி – இருப்பதைக் காப்பது; ப்ரளயம் – பேரழிவு. இந்த மூன்றிற்கும் உரிய தெய்வங்களாக முறையே ப்ரம்மதேவன், விஷ்ணு, சிவன் ஆகியோரை ஹிந்து மதம் வழிபட்டு, மும்மூர்த்திகள் என்று கொண்டாடுகிறது. இதில் ஆஸ்திகர்கள் சிலருக்கே கொஞ்சம் மனக்குழப்பம் உண்டு. நாஸ்திகர்கள் ‘எல்லாமே கற்பனை; பொய்; மோசடி! என்று கூறி நம்பிக்கையையே நிராகரிப்பதால், அவர்களுக்கு ‘இந்த மூவரில் யார் பெரியவர்?” என்ற கேள்வியே அநாவசியமானது. ஆனால் நம்பிக்கை உடையவர்கள் மனதில் சில நேரங்களிலாவது, ‘மும் மூர்த்திகளில் யார் பெரியவர்?! என்ற கேள்வி எழத்தான் செய் கிறது.
இதில் ப்ரம்மதேவனைப் பற்றிக் கூட, அவ்வளவு சர்ச்சைகள் இல்லை; அவருக்குக் கோவில்கள் இல்லை என்பதாலோ என் னவோ, மற்ற இருவருடன் சேர்த்து வைத்து ‘யார் பெரியவர்?” என்ற கேள்வியை ப்ரம்மதேவனைப் பற்றிப் பலரும் எழுப்புவ இல்லை. ஆனால் சிவனையும், விஷ்ணுவையும் பற்றி அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
இவர்கள் மூவருமே ஒன்றுதான். அது மட்டுமல்ல, பல இடங்களில் ஒருவருக்குக் கூறப்படுகிற மேன்மைகளும் சிறப்புகளும், மற்றவர்களுக்கும் கூறப்படுகின்ரன. இறைவன் ஒருவர்தான் என்று வற்புறுத்துகிர அதே சமயத்தில் ஒவ்வொரு தனி மனிதனுடைய மனப்பக்குவமும் வெவ்வேறானது என்ற உண்மையை ஹிந்து மதம் உணர்ந்திருப்பதால், இறைவனை உணர்வதற்கு பல பாதைகளைக் காட்டுகிறது.
ஒரு மனிதன் காரியாலயத்தில், மானேஜிங்க் டைரக்டராக, கெடுபிடியுடன் நடந்து கொண்டு, திறமை படைத்த நிர்வாகி – என்ற பெயருடன் விளங்குகிறான்; அந்தத் துறையில் அவனை அறிந்தவர்கள் அவனை நிர்வாகியாகத்தான் பார்ப்பார்கள். அதே மனிதன், பெரிய டென்னிஸ் ஆட்டக்காரனாகவும் இருக்கிறான்; அந்தத் துறையில் அவனை அறிந்தவர்கள் அவனுடைய ஆட்டத் இறமையைத்தான் மதிப்பார்கள். அவனே, ஒரு சமூக சேவை மையத்தின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, முனைந்து செயலாற்றுகிற போது, அதனுடன் தொடர்பு கொண் டவர்கள் அவனைச் சமூக சேவனாகத்தான் பார்ப்பார்கள். நிர்வா தியாக அவனைப் பார்க்கிறவர்கள், ‘ஆட்டக்காரனாவது ஒன்றா வது, இந்த நிர்வாகிக்கு நிகர் உண்டா?” என்று கேட்கலாம். சமூக சேவகனாகப் பார்ப்பவர்கள், ‘மகத்தான சேவை புரியும் இவ னுக்குச் சமம் யார்?” என்று நினைக்கலாம்.
மூன்றுமே அவன்தான். அவரவர்களுக்குப் பிடித்த வகையில் அவனைப் பார்க்கிறோம். ஒரு மனிதனாலேயே இப்படிக் காட்சி யளிக்க முடியும் எனும்போது, இறைவனால் முடியாதா? ‘என்னை நீ முழுமையாக உணர்ந்து, என் தத்துவத்தை அறிந்து, என்னைத் தொழுதால்தான், என் அருள் உனக்குக் இட்டும்!” என்று இறைவன் கூறுவதாக ஹிந்து மதம் நினைக்கவில்லை. இறைவன் கருணைமிக்கவன். நாம் எல்லோருமே ஞானிகளாகி விட்டால், அவனுக்குத் திருப்திதான்; ஆனால் ‘அப்படி எல்லோ ரமே ஞானிகளாகி விடுவோம் என்று அவன் நினைக்கவுமில்வை – அப்படி ஞானம் பெறாதவர்களைக் கைவிடுவேன்’ – என்று அவன் கூறவும் இல்லை.
‘சரி. வா. உனக்கு எந்த ரூபம் பிடிக்கிறதோ, அந்த ரூபத்தில் நான் உனக்காக வருகிறேன். நீ பக்தியுடன் ஓர் இலையைக் கொடுத்தாலும், ஒரு துளிநீர் கொடுத்தாலும் அதை நான் ஏற்கறேன்! என்று கூறி, இறை உணர்வுக்கு இட்டுச் செல்லும் பாதை யில், நம்மை அவன் அழைத்துச் செல்கிறான்.
ஆகையால், வெவ்வேறு வழிகளில் இறைவனை வழிபடு வது பற்றி நமக்கு எந்த மனக்குழப்பமும் தேவையில்லை. நாம் இன்று தீர்மானித்து, நாளை புரிந்து கொண்டு அதற்கு மறுதினம் ஞானம் பெற்று, இறைவனை உணர்ந்தவர்களாகவிட முடியாது. ‘இது படிப்பினால் பெறுவதல்ல; தவத்தினால் மட்டுமேதான். இதைப் பெற முடியும் என்று வேதமே கூறுகிறது.
தவம் என்பது, வெயில், மழை பாராமல் ஒற்றைக்காலில் நின்றோ, முள்ளின் மீது அமர்ந்தோ செய்வது அல்ல. தவம் என் பது முயற்சி. சிரத்தையுடன் செய்யப்படுகிற முயற்சி. நம்பிக்கை யுடையவர்கள் இன்று செய்யக்கூடிய முயற்சி, இறைவழிபாடு தான். அதற்குப் பலன் உண்டு என்று பகவத் கதை முதல், பல புராணங்கள் உட்பட, வேதங்களில் ஆதாரத்துடன் கூறப்படுகின்றன.
இந்தப் பின்னணியில், மும்மூர்த்திகள் பற்றி வேதம் கூறுவ தைப் பார்ப்போம். ப்ரம்மதேவன், ஹிரண்யகர்பன் என்றும் வர் ணிக்கப்படுகிறான். அதாவது தங்கம் போன்ற கர்ப்பம். அந்த இப்பந்தத்திலிருந்துதான், உலகம் உண்டாகியது என்று ஒரு வர் ணனை கூறுகிறது. சிருஷ்டியைப் பற்றிக் கூறப்படுகிற பல வர் ணனைகளில் இது ஒன்று. எல்லா ஜீவராசிகளும் அவனால் தோற்று விக்கப்பட்டவை என்பதால் – அவன் பிரஜாபதி. தேவதச்சனா கிய விச்வகர்மாவும் அவனே என்றும் கூறப்படுகிறது. அவன் லோகங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் லோகேசன். காலம் அவனுக்குட்பட்டது. அறிவை அளிப்பவன் அவனே. நான்கு வேதங்கள், நான்கு யுகங்கள் ஆகியவற்றிற்கு இருப்பிடம் என்ப தைக் குறிக்க அவன் நான்முகனாகக் காட்சியளிக்கின்றான்.
ப்ரம்மதேவனே, ப்ரஹஸ்பதி என்றும் ப்ரஹ்மணஸ்பதி என் றும் கூறகிற விளக்கம் பற்றிச் சென்ற அத்தியாயத்தில் பார்த் தோம். இந்த ப்ரஹ்மணஸ்பதி குறித்த வேத மந்த்ரம் இவ்வாறு அமைந்திருக்கிறது.
கணானாம் த்வா கணபதி(கும்) ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்.
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம்
ப்ரஹ்மணஸ்பத ஆ ந: ச்ருவன்னூதிபி:
ஸீத ஸாதனம்
மஹா கணபதையே நம:
தேவ கணங்களுக்குத் தலைவனாக, அதன் காரணமாகக் கண பதி என்ற பெயரைப் பெற்ற உம்மைப் போற்றி அழைக்கின் றோம். நீர் அறிவாளிகளுள் அறிவு மிக்கவர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். ஒளி படைத்தவர்களில் இறந்தவர். வேதங்களுக்கு எல்லாம் நாயகர். உமது பிடத்தில் எழுந்தருள்வீராக. மஹா கண பதியாகிய உமக்கு நமஸ்காரம்.
இதில் கணபதி என்ற பெயர் வந்தாலும், இந்தத் துதி ப்ரஹ்மணஸ்பதியைக் குறித்ததே. வேதங்களுக்கும் நாயகன் ப்ரம்ம தேவன்: அந்தச் சிறப்புடன் ப்ரஹ்மணஸ்பதி இதில் வர்ணிக்கப் படுகிறார். இருவரும் ஒருவரே என்று கூறப்படுவதற்கு இதுவும் ஒரு சான்று.
இந்த மந்த்ரத்தின் அடிப்படையில், பிற்காலத்தில் விநாயகர் போற்றப்படுகிறார். அதாவது ப்ரம்மதேவனாகிய, ப்ரஹ்மணஸ் பதியின் சிறப்புக்கள் விநாயகரிடம் அமைந்துள்ளன. அவ்வகை யில் பார்த்தால், பிள்ளையார் கோவில்கள் எல்லாம் ப்ரம்ம தேவன் ஆலயங்களே! இவ்வாறு வாசிஷ்ட கணபதி என்பவரும், கபாலி சாஸ்திரிகள் என்பவரும் தங்களது உரைகளில் கூறுவதாக, பல ஆண்டுகளுக்கு முன் சங்கர நாராயணன் என்ற வேத விற் பன்னர் நிகழ்த்திய உரைகளில் எடுத்துச் சொன்னார்.
இதே போல, வேதங்களில் சூரியனுக்குக் கூறப்படுகிற இறப்புகளில் பல, விஷ்ணுவின் மேன்மைகளாக வர்ணிக்கப் படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். மஹா விஷ்ணு வாமன அவதாரத்தில் தனது காலடிகளால் மூவுலகையும் அளந்த நிகழ்ச்சி வருகிறது. இதற்கும் கூட வேதங்களே ஆதாரம். மூவடிகளால், மூன்று உலகங்களையும் விஷ்ணு அளந்ததாக வேதம் கூறுகிறது.
வேதத்தில், அதிதி, காச்யபன் ஆகியோருக்கு இந்திரனும், விஷ்ணுவும் மகன்கள் என்றும் கூறப்படுகிறது. இந்திரனே, விஷ் ணுவைவிட வேதத்தில் அதிகம் போற்றப்படுகிறான் என்று கூறப் பட்டாலும், விஷ்ணுவின் மகிமைகள் சிறப்பாகவே பேசப்படு இன்றன. புருஷ ஸுக்தத்தில் வர்ணிக்கப்படுகிற பரம புருஷன் விஷ்ணுவே என்ற கருத்துடையவர்களும் உண்டு.
‘விஷ்ணுவின் பெருமைகளும், மேன்மைகளும் எவராலும் அடைய முடியாதது! என்று ரிக் வேதம் கூறுகிறது. விஷ்ணுவின் அவதாரங்களில் சிலவற்றைப் பற்றியும் வேதமே சொல்இிறது. அவர் ஆதிசேஷன் மீது உறங்குகிறவர். உறங்குகிறவர் என்றால் நம்மைப் போன்று தூக்கத்தில் ஆழ்ந்து விடவில்லை; அது யோகம். சேஷம் என்றால் மீதி இருப்பது. ப்ரளயத்தில் எல்லாம் அழிந்து, அதன் பின் தொடக்கத்தில் – ‘ஆதியில் – இருந்தது அந்த மீதி (சேஷம்) தான். அதுவே ஆதிசேஷன். அனந்தன் என் றால் முடிவற்றது. அதுவும் அவனே. எங்கும் நுழைகிற சூரி யனே, எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணு – என்றும் விளக் கங்கள் கூறுகின்றன.
சிவனைப் பற்றி வேதம் கூறுவதைப் பார்க்க, ருத்ரம் என்ற வேதப் பகுதியே முக்கியமானது. இதில் ருத்ரனைப் பற்றிக் கூறப் படுகிற வர்ணனைகளும், துதிகளும், பெயர்களும் கூட சிவனுக்கு அப்படியே பொருந்துகின்றன.
நம : சிவாய – என்கிற மந்திரமும் வேதம் கூறுவதே. திரு டர்களுக்கும் அதிபதி என ருத்ரன் வர்ணிக்கப்படுகிறான். பக்தர் களின் உள்ளத்தைக் கவர்வதால் அவன் இப்படிப் போற்றப்படு வதாக விளக்கங்கள் கூறுகின்றன. ‘உள்ளம் கவர் கள்வன்” என்று ஞானசம்பந்தர் சிவனைப் பாடியதும் இதனால்தான். மருத்துவர் களுள் சிறந்தவனாகவும், யோகிகளின் தலைவனாகவும் ருத்ரன் வேதத்தில் போற்றப்படுகிறான். இதைத் தவிர இந்திரனுக்குச் சொல்லப்படுகிற பல வர்ணனைகளும், சிவனுக்குக் கூறப்படு இன்றன என்பது கவனிக்கத்தக்கது.
லிங்க வடிவத்தில் சிவன் வழிபடப்படுவதில், ஒரு தத்துவம் அடங்கி உள்ளது. லிங்கத்தின் நடுவில் உள்ள தண்டு – ருத்ர பாகம்; அதன் அடிப்பகுதி – ப்ருமம் பாகம்; மையத்தில் உள்ள பகுதி – விஷ்ணு பாகம். ஆக ப்ரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாமே ஓர் உருவமாக, சிவலிங்கமாக வழிபடப்படுகிறது. சிவன் – என் பதற்கு, ‘பேரழிவின் போது சகல படைப்புகளும் உறைகிற இடம்! என்ற ஒரு பொருள் கூறப்படுகிறது. இதே பொருள் லிங்கம் என்ற சொல்லிற்கும் உண்டு. பொதுவாகச் சிவம் என்றால் மங்களம்; அதற்கு சின்னம் லிங்கம் அதாவது சுபத்தின் சின்னம் சிவலிங்கம்.
சங்கரநாரயணன் பிரசங்கங்கள் பற்றி மேலே குறிப்பிட்டிருந் தேன். அவர் சுட்டிக் காட்டிய, கபாலி சாஸ்திரிகளின் ஆராய்ச்சி விளக்கம் பற்றியும் கூறியிருந்தேன். அதே விளக்கத்தில் முருக னுக்கும், வேதத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.
வேதத்தில் அக்னி, சேனைத் தலைவனாக வர்ணிக்கப்படு இறாொன்; சுப்ரமண்யர் என்கிற முருகனும் தேவசேனாபதி. வேதத் இல் மண்ணுலகையும் விண்ணுலகையும் தொடர்புபடுத்துகிறவன் அக்னி; விண்ணுலக தேவசேனையையும், மண்ணுலக வள்ளி யையும் மணந்து, இந்தத் தொடர்பை ஏற்படுத்தியவர் முருகன்; அக்னி, சொல்லை ஏற்படுத்தியவர்; முருகன், ஞானத்தை உணர்த்து பவன். அக்னிக்குப் பிறப்பிடம் நீர்; சுப்ரமண்யரும் நீரில்தான் உதித்தவர். அக்னிக்கு ஏழு தாய்மார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆறு கன்னிகளும், பார்வதியுமாக ஏழு தாய்மார்கள் முருகனுக்கும் கூறப்படுகின்றது. இது மட்டுமல்ல. சுப்ரமண்யருக்கு உரிய கிரஹம் செவ்வாய்; அக்னி – அங்காரகன்.
நவக்ரஹங்களைப் பூஜிக்கும்போதுகூட, வேத மந்த்ரங்கள் ஓதப்பட்டு, வேதத்திலிருந்து வருகிற தொடர்பு வலியுறுத்தப்படு இறது. வாஹனங்களுக்கும்கூட வேதத் தொடர்பு எத்தகையது என் பது விளக்கப்பட்டிருக்கிறது.
ஆதிசேஷனைப் பற்றி மேலே பார்த்தோம். கருத்மா என்ப வன் இறவாமையை அளிப்பவனாக வேதங்களில் வர்ணிக்கப் படுகிறான்; இவனே இறப்பின்மையைத் தருகிற அமிர்தத்தைக் கொண்டு வந்த கருடனாக, புராணங்களில் வணங்கப்படுகிறான்; வேதங்களில், கருத்மா இரட்டை நாக்குடைய நேர்மையற்ற மனி தர்களைத் தண்டிப்பான்; இதைக் குறிக்கிற வகையில், கருடன் இரட்டை நாக்குடைய பாம்பைக் கொத்திக் கொல்கிறான். ஹம்ஸம் அறிவுக்குச் சின்னமாக வேதத்தில் வர்ணிக்கப்படுகிறது; அதுவே ப்ரம்மதேவனின் வாகனமாக புராணத்தில் கூறப்படுகிறது. வேதத்தில் அக்னிக்குச் சிகை உண்டு; சிகை என்றால் முடி (கிரீடம் என்பது போல); சிகி என்றால் மயில்; அதுவே முருகனின் வாகனம் என்று புராணங்களில் குறிக்கப்படுகிறது.
இப்படி இன்று வணங்கப்படும் தெய்வங்கள், வெவ்வேறு உருவங்கள் கொண்டதாக இருந்தாலும், அனைத்துமே வேதத்துடன் தொடர்பு கொண்டவையே. ஆகையால் வேதங்களில் கூறப்பட்ட தெய்வங்களை மறந்துவிட்டு, இன்று வேறு ஏதேதோ கற்பனை தெய்வங்கள் வணங்கப்படுகின்றன – என்ற கூற்று ஏற்கத் தக்க தல்ல. வேதங்களின் தொடர்பு இன்றும் உள்ளது என்பதைத் இரு மணம், உபநயனம் போன்றவற்றில் ஓதப்படுகிற மந்திரங்களில் இருந்தும், ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றில் கூறப்படுகிற மந்திரங்களிலிருந்தும் உணர்ந்து கொள்ளலாம். அவையெல்லாம் வேத மந்திரங்களே. அவை இடம் பெறாத சுப நிகழ்ச்சிகளும் கிடையாது; இறுதிச் சடங்கும்கூட கிடையாது.
இப்படி, இதுதான் தொடக்க காலம் – என்று அறுதியிட்டு கூற முடியாத காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வருகிற சாஸ்வதமான விஷயமாக இருப்பதால்தான், இது சனாதன தர் மம் என்று அழைக்கப்படுகிறது.
இவையெல்லாம் அனாவசியம் என்று கருதுகிறவர்களுக்கும், ‘இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, என்ன செய்யப் போகி றோம்” என்று நினைப்பவர்களுக்கும் – ஒரு சம்ஸ்க்ருத வழக்குச் சொல்லில் ஆதரவு கிடைக்கிறது.
தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்
மேலுலகில் மோர் கிடைக்காதே!
‘மோரின் சுவை பெரிது, மேலுலகில் அது இல்லை‘ என்பது போன்ற பொறுப்பற்ற எண்ணத்தை விடுத்து, இந்தச் சுவை என்ன என்பதை அறிய முயல்வோம்.