அரசு நிர்வாகம் பற்றி அர்த்தசாஸ்திரம் கூறுகிற பல விஷயங்களில் சிலவற்றை ஏற்கெனவே பார்த்தோம். மற்ற தர்ம சாஸ்திரங்கள் போலவே, அர்த்தசாஸ்திரமும் அரசனை மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறது: ‘ஒருவனை நெருப்பு நண்டினால், அவ னுடைய உடலின் ஒரு பகுதியோ, அல்லது உடலே கூடவோ பொசுங்கி விடும்; ஆனால் அரசனை விரோதித்துக் கொள்பவன், மனைவி மக்களோடு சேர்ந்து அழிவான்; அரசன் நினைத்தால் ஒருவனை நன்றாக வாழவும் வைக்கலாம் ‘.
‘அறிவு பூர்வமான தகுதிகள்; சக்தி பூர்வமான தகுதிகள்; தன்னுடைய தன்மை ரீதியிலான தகுதிகள் – ஆகிய மூன்றுமே ஒரு அரசனுக்குத் தேவை. அறிந்து கொள்ளும் ஆர்வம்; அறிந்ததை மனதில் நிறுத்திக் கொள்ளும் ஆற்றல்; கேட்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுதல்; கேட்டதில் எதை நிராகரிப்பது, எதை ஏற்பது என்று ஆலோசித்து தீர்மானிக்கிற திறன்… ஆகியவை அறிவுபூர்வமான தகுதிகள்.
‘தைரியம், உடனடியாகச் செயல்படுகிற தன்மை; சாமர்த்திய மாகச் செயல்படுகிற திறன்; உக்ரம் ஆகியவை சக்தி பூர்வமான தகுஇகள்.
‘ஞாபகத் திறன்; தீய பழக்கங்கள் இல்லாமை; கலைகளில் தேர்ச்சி; இயதைச் செய்ய வெட்கப்படுகிற குணம்; சாதாரண காலத்திலும், நெருக்கடி நேரத்திலும் 9ராகச் செயல்படுகிற மனோபாவம்; உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் இருக்கிற குணம்; கோபம், பேராசை, நிச்சயமின்மை, அவதூறு பேசுவது போன்றவற்றைத் தவிர்த்து விட்டிருக்கிற மனம்; நேர்கொண்ட பார்வை; சிரித்த முகத்துடனும், கெளரவத்தை விட்டுக் கொடுக்கா மலும் பேசுவது; பெரியோர் வார்த்தைகளை மதிப்பது ஆகியவை, தன்னுடைய தன்மை ரீதியான தகுதிகள்.
இவை அனைத்துமே ஒரு அரசனிடம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் கெளடில்யர். எப்போது ஒரு நாட்டுடன் யுத்தம் செய்வது, எப்போது யுத்தத்தைழ் தவிர்ப்பது என்பவை பற்றி யெல்லாம் இந்த நூல் மிக விரிவாகப் பேசுகிறது. ‘எதிரியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பலவீனமான நிலை இருந்தால் – சமாதானத்தை நாட வேண்டும்; எதிரியை விட பலம் மிகுந்து இருந்தால், யுத்தத்தை நாட வேண்டும். எதிரியினாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது – நம்மாலும் எதிரியை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலை இருந்தால், பேசாமல் இருந்து விட வேண்டும்’ என்று சொல்கிற கெளடில்யர், மேலும் இவ்வாறு கூறுகிறார் :
“தனக்கு சமமான பலம் உடைய, அல்லது தன்னை விட பலம் கூடிய எதிரியுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்; தன்னை விட பலவீனமான எதிரியுடன் யுத்தம் செய்ய வேண்டும்; ஏனென்றால் தன்னை விட பலத்தில் மிஞ்சிய அரசனுடன் யுத்தம் செய்வது தனியாய் நின்று கொண்டு யானையுடன் போரிடுவது போல: சம பலம் உள்ள அரசனுடன் யுத்தம் செய்வது :- அரைகுறையாகச் சுடப்பட்ட இரண்டு மண்பாண்டங்கள் மோதிக் கொள்வது போல – அது இரு தரப்புக்குமே நாசம்; ஆனால் பல வீனமானவனோடு யுத்தம் செய்தால், அது – மண் பாண்டத்தை பாறாங்கல்லினால் நொறுக்குவது போல ‘.
பலம் மிக்க அரசன் சமாதானத்தை விரும்பவில்லை என்றால் – அவனிடம் விட்டுக் கொடுக்க வேண்டும். சம பலம் உள்ளவன் சமாதானத்தை விரும்பவில்லை என்றால் – அவனுக்கு ஏதாவது ஒரு கெடுதலைச் செய்ய வேண்டும்; –அந்த சூடு அவனைச் சமாதானத்தை நாடச் செய்யும்; சூட்டிற்கு இணைக்நி சக்தி உண்டு; சூட்டினால் காய்ச்சப்படாத உலோகம், இன்னொரு உலோ கத்துடன் சேராது; அது போலவே இதுவும்.
அயல்நாட்டு உறவைப் பொறுத்தவரையில் – அதாவது வேறு ஒரு அரசனோடு காட்ட வேண்டிய அணுகுமுறைகள் பற்றி பேசுகிற போது, அர்த்தசாஸ்திரம் வகுத்துள்ள வழிமுறைகள் முற்றிலும் காரியார்த்தமானவை. அயல்நாட்டு அரசனுடன் கொள்கிற உறவு முறையில், ‘தனக்கு எது நல்லது‘ என்பதையே ஒரு அரசன் கவனிக்க வேண்டும். இதுதான் இப்போது ‘என்லைட்டன்ட் ஸெல்ஃப் இன்ட்ரஸ்ட்! – அதாவது ‘விவரமறிந்த சுயநலம்’ என்று கூறப் படுகிறது. அயல்நாட்டு உறவில் இன்றும் கூட, இது ஒரு அடிப்படை தேவை. இந்த அணுகுமுறையைத்தான் யுத்தம், சமாதானம் போன்ற விஷயங்களில் கெளடில்யர் வலியுறுத்துகிறார். அயல்நாடுகளுடன் செய்து கொள்ளப்படுகிற ஒப்பந்தங்கள் பற்றி பேசுகிற அர்த்தசாஸ்திரம், ஒப்பந்தங்களை மீறுவதற்கான வழி முறைகளையும் சொல்கிறது. ஒப்பந்தங்களை மீறுவது என்பது கூட, ஒரு அரசன் அவசியம் கையாள வேண்டிய வழிமுறையாகச் சில நேரங்களில் ஆகிவிடும் என்பதை உணர்ந்து, அதற்கான கால நேரங்களை இந்த நூல் வர்ணிக்கிறது.
அது மட்டுமல்லாமல், எதிரி நாட்டில் உளவாளிகள் மூலமாக, கலகங்களைத் தோற்றுவிப்பதும், மக்களிடையே பரஸ்பர விரோதங் களை வளர்ப்பதும் கூட ஒரு அரசனுக்கு சில சமயங்களில் தேவைப் படக் கூடிய அணுகுமுறையாக அர்த்தசாஸ்திரத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது. இதற்காக எதிரி நாட்டிற்குள் எந்த வகையான உளவாளிகள் அனுப்பப்பட வேண்டும்; அங்கே அவர்கள் எந்த மாதிரியான மனிதர்களை அணுக வேண்டும்; எந்த எந்த வகை மனிதர்கள் எந்தெந்த வகையில் பயன் தருவார்கள்… என்பதெல்லாம் பல கோணங்களிலிருந்து அணுகப்பட்டு மிக விரிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன.
நட்பு நாட்டு அரசர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கெளடில்யர் விவாதிக்கிறார். இது பற்றி முந்தைய சில நூல்கள் கூறியதை ஏற்க மறுத்து, அதற்கான காரணங்களை யும் அவர் கூறுகிறார் : ”பரஸ்பர பிரச்னைகள் நட்பை உறுதி செய்ய உதவும். நட்பு அரசர்களில் இரு வகை உண்டு; நமது கட்டுப் பாட்டுக்குள் வந்து விடாத, ஆனால் உறுதியாக நட்பு பாராட்டுகிற அரசன் ஒரு வகை; நமது கட்டுப்பாட்டுக்குள் வந்தும் கூட, அவ்வப்போது உறுதி குலைகிற அரசன் ஒரு வகை; முந்தைய நூலாசிரியர்கள் ‘கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டாலும், உறுதி காட்டுகிற அரசன் மேல்! என்று கூறுகின்றனர்; கெளடில்யன் இதை மறுக்கிறான்; உறுதி நழுவினாலும் கூட, கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்ட அரசனே மேல்; பயன்படுகிற வரையில்தான் ஒரு அரசன் நட்பு அரசனாகிறான்; அதுவரை நம் கட்டுப்பாட்டில் இருப்பவனே மேல் என்று கெளடில்யன் கூறுகிறான்…
இவ்வாறு சொல்லி விட்டு ‘மிகவும் ஏற்கத்தக்க நட்பு அரச னிடம் ஆறு அம்சங்கள், இருக்க வேண்டும் – உறுதி; நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பது; தேவைப்படுகிற போது ராணு வத்தை உடனடியாகத் தயார் நிலையில் வைப்பது; பரம்பரை பரம்பரையாக நட்பு கொண்டிருப்பது; மேன்மை; இரட்டை வேடம் போடாமல் இருப்பது.
மற்ற அரசர்கள் நம்மிடம் இரட்டை வேடம் போடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிற கெளடில்யரே, சற்றும் தயக்கமில்லாமல், மற்ற அரசர்களிடம் நாம் இரட்டை வேடம் போட வேண்டிய அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் வர்ணிக்கிறார். இது முரண்பாடானதல்ல. ராஜநீதி என்பது, மனித நீதியிலிருந்து சில நேரங்கள் மாறுபட்டதாகத் தான் இருக்க முடியும் என்பதை உணர்ந்து, ஏற்று, அந்த சிக்கலான பாதையை செப்பனிட்டுத் தருகிற நூல் அர்த்தசாஸ்திரம்.
போர் முறைகளிலிருந்து – தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு அரசன் எடுக்க வேண்டிய முயற்சிகள் வரை பலவற்றைப் பற்றியும் இந்நூல் வர்ணிக்கிறது. போர் செய்கிற தருணம் வந்துவிட்டால், நாள், ் நக்ஷ்த்திரங்களைப் பார்த்துத் தயங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்றும் எச்சரிக்கிறார் கெளடில்யர்
அர்த்தசாஸ்திரத்தின் இறுதிப் பகுதியில், அதிர்ச்சி தரத்தக்க. விஷயங்கள் இடம் பெறுகின்றன. யார் கண்ணுக்கும் தெரியாமல் ‘இன்விஸிபிள்’ ஆகி விடுவது; காடு, மலை, மேடுகளைக் கடந்து செல்ல நேரிட்டாலும், கால் வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது; எதிரி நாட்டில் நோய் பரவச் செய்வது; உடனடி மரணத்தையோ, அல்லது சிறிது சிறிதாக வரும் மரணத்தையோ விளைவிப்பது; எதிரிப் படையினரின் கண்களைக் குருடாக்குவது; பசியே எடுக்காமல் ஒரு மாதக் காலத்தைக் கடக்கக் கூடிய திறன் பெறுவது; நடு நிசி நேரத்தில், முழு இருட்டில், எல்லாவற்றையும் பார்க்கும் திற னைப் பெறுவது; தன்னுடைய நிழல் கூட மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்வது; ஒரு படையையே நீண்ட காலம் தூங்க வைத்து விடுவது; மூடிய கோட்டைக் ககவை உடனடியாகத் திறந்து விடுகிற வழிமுறை… என்று பல யுக்திகள் இந்நூலின் இறுதி பாகத்தில் வர்ணிக்கப்படுகின்றன.
ஏவல், சூன்யம் மாதிரி பல விஷயங்களும் பேசப்படுகின்றன. கூழாங்கல்லிலிருந்து – முள்ளம் பன்றியின் முள் உட்பட – ஒட்டகம், ஓநாய், நரி போன்ற மிருகங்களின் கண்கள் வரை, பல பொருட்கள் பட்டியலிடப்பட்டு, எந்தெந்த காலத்திற்கு எவை எவை தேவை என்பது கூறப்படுகிறது. சில மந்திரங்களும் தரப்பட்டிருக்கின்றன; இந்த மந்திரங்களில் சிவன், விஷ்ணு, முருகன், அம்பிகை போன்ற தெய்வங்கள் குறிப்பிடப்படவில்லை. மாறாக, சிறு தேவதைகளே இந்த மந்திரங்களினால் துதிக்கப்படுகின்றன – அமிலா, இமிலா, வாயுசாரா, பலி, விரோசனன், சம்பரன், நாகன், நிகும்பன்… என்றெல்லாம் பலரைத் துதிக்கிற மந்திரங்கள் இவை.
சரி. இதை எதிரி நாட்டவர் நம் மீது பிரயோகித்து விட்டால் என்ன செய்வது? அப்படிப்பட்ட தாக்குதல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. இதற் கும் பல பொருட்கள், பல மூலிகைகள் போன்றவை குறிப்பிடப் பட்டுள்ளன.
இவையெல்லாம் இன்று பலிக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் இதில் குறிப்பிடப்படுகிற பல மூலிகைகளும், பொருட்களும் எவை என்பது மொழி பெயர்ப்பாளர்களுக்குப் புரியவில்லை; அதனால் ஒரு வகை மூலிகை; ஒரு வகை மிருகம்; ஒரு வகை செடி… என்றெல்லாம் பொருள் கூறப்படுகிறது. மந்திரங்களும் முழுமையாக இல்லை. அவற்றைப் பிரயோகம் செய்யும் வழிமுறையும் மேலெழுந்தவாரியாகவே விளக்கப் படுகிறது. ஆகையால் இதையெல்லாம் இன்று பரீட்சித்துப் பார்க்க முடியாது.
இவற்றை எல்லாம் சொந்த நாட்டில் பயன்படுத்துமாறு கெளடில்யர் கூறவில்லை. எதிரிகளிடம் பயன்படுத்துவதற்காக இவை கூறப்படுகின்றன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
சொந்த நாட்டைப் பொறுத்தவரையில், மிக உயர்ந்த நோக்கம் அரசனுக்கு விதிக்கப்படுகிறது.
ப்ரஜா ஸுகே ஸுகம் ராக்ஞ:
ப்ரஜானாம் ச ஹிதே ஹிதம்.
ந ஆத்மப்ரியம் ஹிதம் ராக்ஞ:
ப்ரஜானாம் து ப்ரியம் ஹிதம்.
மக்களின் மகிழ்ச்சியில்தான், அரசனின் மகிழ்ச்சி இருக் கிறது; மக்களுக்கு இதமானதே, அரசனுக்கு இதமானது; அரசனுக்கு, அவனுடைய விருப்பம் நன்மை செய்யாது; மக்கள் விருப்பம் எதுவோ, அதுவே அரசனுக்கு நன்மை.
நிர்வாக சாஸ்திரம், ஆட்சிமுறை, யுத்தவழிமுறைகள் என்றெல்லாம் பார்க்கும்போது, எடுத்துக் கொள்ளப்பட்டவிஷயங் களின் வீச்சிலும் சரி, கருத்தின் ஆழத்திலும் சரி, கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்துக்குநிகரானஒருநூல் உலகின் எந்தபாகத்திலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பலஆண்டுகள் முன்பாக, இயற்றப்பட்டிருக்கமுடியுமா? நம் நாட்டுப் பொக்கிஷங்களுள், அர்த்தசாஸ்திரமும் ஒன்றுஎன்பதில் சந்தேகமில்லை.