விஷ்ணு புராணம்!

புராணங்களிடையே, விஷ்ணு புராணத்திற்கு ஒரு விசேஷ முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மற்ற புராணங்களைப் போலவே, இதிலும், உலக சிருஷ்டி போன்ற விஷயங்கள் வர்ணிக்கப்படுகின்றன. துருவன், பிரஹலாதன், ஜடபரதர் போன்றவர்களின் சரித்திரங்கள்; ஸ்ரீ ராமரைப் பற்றிய ஒரு சிறு விவரத் தொகுப்பு; கலியுகத்தில் தர்மங்களின் வீழ்ச்சி; ஸ்ரீ கிருஷ் ணரைப் பற்றிய விவரங்கள்என்ற விஷயங்களும் இப்புராணத் தில் அடங்குகின்றன. யுக தர்மங்களும், வர்ணாச்ரம தர்மமும் விவரிக்கப்படுகின்றன.

விஷ்ணுவே, த்ரிமூர்த்திகளின் காரண கர்த்தா என்று கூறுகிற இந்தப் புராணம், பக்தியின் மேன்மையை வலியுறுத்துகிறது.

பராசர முனிவர், மைத்ரேயருக்குக் கூறுவதாக இது அமைந் துள்ளது. விஷ்ணுவின் மேன்மையை விளக்கிய பராசரர், வராஹ அவதாரத்தை விளக்கினார். மஹாவிஷ்ணு வராஹ (பன்றி) உருவம் கொண்டு, பூமியை நீரின் ஆழத்திலிருந்து மேலே கொண்டு வந்து, உலகைப் படைத்தார்.

சமுத்திரம் தேவர்களாலும், அசுரர்களாலும் கடையப்பட்டு, அதிலிருந்து அமிர்தம் கிட்டியது என்பது எல்லோரும் அறிந்த ஒரு புராண சம்பவம். இதை வர்ணிக்கிற விஷ்ணு புராணம், இது ஏன் அவசியமாகியது என்பதைக் காட்ட, ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறது. துர்வாச மஹரிஷியிடம் ஒரு அருமையான பூமாலை இருந்தது. தனது யானையாகிய ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்த இந்திரனுக்கு, அவர் அதை அளித்தார். அவனோ, அதை தான் வைத்துக் கொள்ளாமல், யானையின் தலை மீது வைத்தான். அது மாலையை கீழே தள்ளி மிதித்து விட்டது. துர்வாசர் கோபமுற்று இந்திரனை சபிக்க, அவன் தனது செல்வத்தை எல்லாம் இழந்தான். இந்திரலோகம் மட்டுமல்லாமல், மற்ற இடங்களும் பொலி விழந்தன.

தேவர்களைத் தாக்குவதற்கு ஏற்ற தருணத்திற்காகக் காத்திருந்த அசுரர்கள், இப்போது தேவர்களை ஹிம்சித்தனர். பொலிவிழந்த தேவர்கள்,வன்மை நீங்கியவர்களாக அஸுரர்களிடம் தோல்வி யுற்றனர். செய்வதறியாமல் அவர்கள் பிரும்ம தேவனிடம் சென்று முறையிட, அவர், அவர்களை விஷ்ணுவிடம் அனுப்பினார்.

அமிர்தத்தைப் பெறுவதுதான் தேவர்களின் துன்பம் தீர்வதற்கான வழி என்று தீர்மானித்து, ‘சமுத்திரத்தைக் கடைய வேண்டும்என்று விஷ்ணு கூறினார். பாற்கடல் கடையப்பட்டதற்கான காரணத்தை இவ்வாறு எடுத்துச் சொல்கிறது விஷ்ணு புராணம். கடலைக் கடந்து, அதன் மூலம் கிட்டிய அமிர்தம், தேவர்களை சக்தி பெறச் செய்ய, அவர்கள் அஸுரர்களை வென்றார்கள்.

துருவ சரித்திரமும் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. சிறிய தாயாரால் கொடுமைப்படுத்தப்பட்டு, சிறுவனாக இருந்தபோதே தவ நிலையை மேற்கொண்டு, மிக உன்னதமான ஸ்தானத்தை அடைந்தவன் துருவன். ரிஷிகளின் உபதேசத்தைக் கேட்டு, த்வாதசாக்ஷர மந்திரத்தைத்தான், அவன் தனது தவ நிலையில் ஜபித்தான். ‘த்வாதசாக்ஷரம்என்றால், ‘பன்னிரண்டு எழுத்துக்கள்என்று அர்த்தம். ‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய என்பது ஸம்ஸ்க்ருதத்தில் பன்னிரண்டு எழுத்துக்களைக் கொண்டது. அதுவே த்வாதசாக்ஷர மந்த்ரம். ஸ்ரீ நாராயணன், அவன் முன் தோன்றி, அவன் துருவ நக்ஷத்திரமாக விளங்க அருள்புரிந்தார்.

பிரஹலாதன் வரலாறும் விவரிக்கப்படுகிறது. கசியபரின் மனைவியாகியதிதிக்கு பிறந்த ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற இருவரில் விஷ்ணு, வராஹ அவதாரம் எடுத்தபோது, அவ ரால் ஹிரண்யாக்ஷன் அழிக்கப்பட்டான். ஹிரண்யகசிபுவிற்கு பிறந்த மகன்களில் பிரஹலாதன் ஒருவன். தன்னையே எல்லோரும் வணங்க வேண்டும் என்ற ஹிரண்யகசிபுவின் ஆணையை மீறி இவன் நாராயணனை வணங்க, அவனைப் பலவிதமான பயங்கர வழிகளில் கொன்று விடவும் ஹிரண்யகசிபு முனைந்தான். இறுதி யில் நரசிம்மாவதாரம் எடுத்த விஷ்ணு, தூணிலிருந்து வெளிப்பட, அவருடைய கையினால் அவன் அழிந்தான். பிரஹலாதர் பல காலம் அரசனாக இருந்து பிறகு நல்லுலகம் எய்தினார்.

நரகத்தில் பல வகை உண்டு என்று கூறுகிற விஷ்ணு புராணம், அவற்றில் சிலவற்றின் பெயரைக் கூறி, எத்தகைய பாவங்களைச் செய்தவர்கள், எத்தகைய நரகங்களுக்குச் செல்வார்கள் என்பதை யும் சொல்கிறது. பொய் சாட்சியம் அளிப்பவர்கள்; கருச்சிதைவு செய்பவர்கள்; குடிகாரர்கள்; திருடர்கள்; கொலையாளிகள்; தன்னை நம்பியவர்களை கைவிட்டு விடுபவர்கள்; வேதத்தைப் பழிப்பவர் கள்; பெரியவர்களை அவமதித்து நடந்து கொள்பவர்கள்; பிறரை அவதூறு செய்பவர்கள்; ஏவல், சூன்யம் போன்றவற்றைப் பயன் படுத்துகிறவர்கள்; உணவைத் தனியே உட்கொள்பவர்கள்; பறவை களையும், மிருகங்களையும் கூண்டில் அடைத்து வளர்ப்பவர்கள்; மரங்களை வெட்டி வாழ்பவர்கள்என்று பலவித பாவச் செயல் களைச் செய்பவர்களின் பட்டியல் இந்நூலில் தரப்பட்டிருக்கிறது.

பாதாள உலகங்கள்; மேல் உலகம், சூரியனின் தன்மைகள்; காலக் கணக்கு; சந்திரனுடைய பதினாறு கலைகள்; பூகோள விளக்கங்கள்; இமயத்திற்கு தென்புறம் உள்ள பாரத வர்ஷம் (பாரத தேசம்)… போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் விரிவாகக்

கூறப்பட்டிருக்கின்றன.

ஜடபரதர் வரலாற்றில், ஞானத்தின் உயர்வு எடுத்துக்காட்டப் பட்டிருக்கிறது. விஷ்ணு பக்தியில் திளைத்த பரதர் என்ற அரசர், ஒரு மான் குட்டியை ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றி னார். பின்னர் அதன் மீது அவருக்கு மிகுந்த பற்று உண்டாகி விடவே, அதைக் காணாத போதெல்லாம் மனம் வருந்தினார். இறுதியில் சாகும் தருவாயில் கூட அவருடைய மனம், அந்த மான் மீதே லயித்திருந்த காரணத்தினால், அவர் தனது அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார். அவ்வாறு பிறப்பெய்துவதற்குக் காரணமாக இருந்த அவருடைய கர்ம பலன் முடிந்து விடவே, அவர் தனது அடுத்த பிறவியில் ஒரு ஞானவானாகப் பிறந்தார். அவர்தான் ஜடபரதர். மற்றவர்கள் அவரைப் பைத்தியக்காரன் என்று நினைத்து ஒதுங்குகிற அளவுக்கு, அவர் எல்லாப் பற்றுக்களையும் நீக்கி, உடலைப் பேணும் அவசியத்தைக் கூட மறந்து, கால் போன போக்கில் அலைந்தார். இதனால் பரதர் என்ற அவருடைய பெயருடன், ஜடம் என்பது அடைமொழியாகச் சேர்ந்து கொள்ள, அவர் ஜடபரதர் என்றே அழைக்கப்பட்டார்.

ஒரு சமயத்தில், அரசன் பல்லக்கில் வந்து கொண்டிருக்க, பல்லக்கை சுமப்பவர்கள், ஓர் மரத்தடியில் இருந்த ஜடபரதரையும் தங்களுடன் சேர்த்து பல்லக்கை சுமக்க வைத்தார்கள். மற்றவர் களின் நடைக்கும், ஜடபரதரின் நடைக்கும் வித்தியாசம் இருக் கவே, பல்லக்கு தடுமாற்றம் கண்டது. காரணம் புதிய ஆள்தான் என்பதை அறிந்து கொண்ட அரசன், ஜடபரதரைப் பார்த்து, ‘என்ன ஆயிற்று? சிறிது நேரமே பல்லக்கைச் சுமந்திருக்கிறாய். அதற்குள் களைத்து விட்டாயா? உன்னால் இந்த பாரத்தைக் கூட சுமக்க முடிய வில்லையா? பார்த்தால் நல்ல பலமுள்ளவனாகத்தானே தெரி கிறாய்?’ என்று கேட்டார்.

ஜடபரதர்பல்லக்கை நான் சுமக்கவில்லை. நான் பலவானும் அல்ல. நான் களைத்துப் போகவுமில்லை. நான் எதையும் சுமக்கவுமில்லைஎன்று பதில் கூறினார்.

நீ சொல்வது விநோதமாக இருக்கிறது. நீ பலமுள்ளவன் என்பது உன்னைப் பார்த்தாலே தெரிகிறது. நீ என் பல்லக்கை, உன் தோளிலே சுமக்கிறாய் என்பதையும் நான் பார்க்கிறேன். களைப்பு உண்டாவது புரிந்துக் கொள்ளக் கூடியதே. அப்படியிருந்தும், நீ ஏன் எல்லாவற்றையும் மறுக்கிறாய்?’ என்று அரசன் கேட்டான்.

ஜடபரதர் நீ யார்? நான் யார்என்று கேட்டு விட்டு, மேலும் தொடர்ந்தார்: ‘என்னுடைய உடலையும், உன்னுடைய உடலையும் பற்றி நீ பேசுகிறாய். நான் என்பது என்னுடைய சரீரமல்ல. அதே போல நீயும், உனது உடல் அல்ல. நமது ஆன்மாக்கள்தான் நாமாக இருப்பது. பலமுள்ளது என்றோ, களைப்புற்று விட்டது என்றோ, பல்லக்கை தோளில் சுமக்கிறது என்றோ, என் ஆன்மாவைப் பற்றி எவ்வாறு கூற முடியும்?’

இவ்வாறு பேசிவிட்டு ஜடபரதர் என்கிற பரதர் மௌனமானார். அரசன் பல்லக்கை விட்டு கீழிறங்கி, அவருடைய காலில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டு, அவர் மேலும் சொல் வதை கேட்க ஆவலுடையவனாக நின்றான். ‘ஆன்மா அழிவற்றது; அது வெவ்வேறு உடல்களை எடுத்துக் கொள்கிறது; இவ்வாறு பல பிறப்புகளில் பல் சரீரங்களை மேற்கொள்கிற ஆன்மாஜீவாத்மா; பரமாத்மாவோ, விஷ்ணுவேதான். அது எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் வேற்றுமையின்மையைக் காண்பவன் ஞானியாகிறான்; பரமாத் மாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஜீவாத்மாவைக் காண் பவன், மாயையில் சிக்கியவன்; கர்மங்களின் பலனாக ஆன்மாக் களுக்கு தேவர், மனிதன் என்பது போன்ற பாகுபாடெல்லாம் தோன்றுகிறது; இந்த கர்ம பலன் நீங்குகிறபோது, வியாபித் திருப்பது பரமாத்மா ஒன்றேஎன்று ஜடபரதர் விளக்கினார்.

மேலும் அந்த அரசனுக்கு அவர். ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார். ருபு என்று பிரும்ம தேவனுக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பிறவியிலேயே ஞானம் பெற்றவர். நிதாகர் என்பவர் அவருடைய சீடர். பல கலைகளையும் கற்ற நிதாகருக்கு, ஆன்ம ஞானம் கிட்டவில்லை. ஒருமுறை நிதாகரை, ருபு சந்தித்த போது, குருவிற்கு சீடர் நிதாகர் உணவு அளித்து உபசரித்து விட்டு, ‘திருப்தியாக இருந்ததா?’ என்று கேட்டார்.

ருபு பசி, தாகம் உள்ளவன் உணவு அருந்தினால், அந்த உபாதைகள் நீங்கி திருப்தி அடைவான். எனக்குப் பசியோ, தாகமோ இல்லாததால், திருப்தி உண்டாக இடமில்லை. ஆன்மாவிற்கு பசி, தாகம் என்பதெல்லாம் கிடையாது. மனதிலிருந்து, வேற்றுமை களை எல்லாம் அகற்றி விட்டால், இம்மாதிரி கேள்விகள் பிறக் காது. கர்மங்களின் விளைவாக, ஏற்படுகிற வேற்றுமைகள் ஆன்மாவைத் தீண்டுவதில்லைஎன்ற முடிவையும் கூறினார்.

ருபுவின் காலில் விழுந்து வணங்கிய நிதாகர், பல வருடங்கள் கழித்து, மீண்டும் ருபுவினால் சந்திக்கப்பட்டான். அப்போதும் ருபு, ‘உண்மையான ஞானம் பெற்றவன் வேற்றுமைகளைக் காண மாட்டான். எல்லாம் ஒன்றே என்ற பக்குவம் பெற்றால்தான் ஒருவன் ஞானியாகிறான்என்ற பாடத்தை மீண்டும் நிதாகருக்குக் கற்பித்தார்.

இந்த குரு, சீடர் கதையைக் கூறிய ஜடபரதர், மன்னனிடம், ‘நீ பெற வேண்டியது இந்த ஞானம்தான்என்று கூறி அவருக்கு உபதேசம் செய்தார். மன்னன் ஞானத்தை அடைந்தான். இப்படி ஞானியாக வாழ்ந்த ஜடபரதர், மோக்ஷத்தைப் பெற்றார்.

இப்படிப்பட்ட சில சரித்திரங்களைக் கூறுகிற விஷ்ணு புராணம், மன்வந்தரங்களை வர்ணிக்கிறது. ஒவ்வொரு மன் வந்தரத்திலும், ஸப்தரிஷிகள் வெவ்வேறானவர்கள் என்ற தகவல் அளிக்கப்படுகிறது. நாம் இருப்பது ஏழாவது மன்வந்தரம். இதற்கு அதிபரானவர்வைவஸ்வத மனு.

வேத வியாஸராக பணிபுரிகிறவர்கள் கூட, வெவ்வேறான வர்கள் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. வேதத்தைப் பிரித்து அளிப்பவர் வேதவியாஸர். இனி வரப் போகிற துவாபர யுகத்தில், அச்வத்தாமா வேத வியாஸர் ஆக பணிபுரிவார் என்றும் இப் புராணம் கூறுகிறது.

விஷ்ணுவிடம் பக்தி செலுத்துபவர் யம பயத்திலிருந்து விடுபடுகிறார் என்பதை இப்புராணம் வலியுறுத்திக் கூறுகிறது. யமனுக்கும், ஒரு கிங்கரனுக்கும் நடந்த உரையாடலாகிய யம கீதைஎன்ற உபதேசத்தில் யமதர்மன், இந்த பக்தியின் மேன் மையை விளக்கி, விஷ்ணுவை ஆராதிப்பவனிடம் தன்னால் நெருங்க முடியாது என்று கூறுகிறான்.

எவன் தர்மத்தின் பாதையிலிருந்து விலகாமல், எல்லோரிட மும் சமமாக நடந்து கொண்டு, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், யாருக்கும் அச்சத்தை விளைவிக்காமல், விஷ்ணுவின் ஆணை யாக எண்ணி தன் கர்மாக்களை செய்து கொண்டு வாழ்கிறானோ அவனே விஷ்ணு பக்தன். அவன் இனிமையாகத்தான் பேசுவான்; பொறாமை அவனிடத்தில் இருக்காது; எவருடைய பொருளையும் அவன் நாட மாட்டான்; அப்படிப்பட்டவர்களை தீண்ட முயற்சி செய்யாதே!’ என்று யமன் விளக்கினான்.

இவ்வாறு விஷ்ணு பக்தர்களின் மேன்மையைக் கூறிவிட்டு, இப்புராணம் சிராத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. அரச வம்சங்கள் விளக்கப்படுகின்றன. ராமருக்குப் பிறந்த லவ குச் சகோதரர்களைப் பற்றி மட்டுமல்லாமல், அதற்குப் பின்னரும் அந்த வம்சத்தில் தோன்றியவர்கள் பற்றி விஷ்ணு புராணம் கூறுகிறது; இது சூர்ய வம்சம். பாண்டவர்கள் பற்றியும் குறிப்பிடப்படுகிறது; இது சந்திர வம்சம்.

ஹிரண்யகசிபுவே, இராவணனாக பிறந்து, பின்னர் சிசுபால னாகவும் பிறப்பெடுத்து, இறுதியில் மோக்ஷம் பெற்றான் என்ற விஷயமும் இப்புராணத்தில் வருகிறது. எதிர்கால நிகழ்ச்சிகளை யும் வர்ணிக்கிற இப்புராணம், கௌடில்யரின் உதவியால் சந்திரகுப்தன், நந்தர்களை வீழ்த்தி அரசன் ஆவான் என்றும், அதன் பின்னர் வந்த அரசர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. தர்மம் எதிர்காலத்தில் மிகவும் சீரழிந்துப் போய், கல்கி அவதாரம் தோன்றும் என்றும் விஷ்ணு புராணம் சொல்கிறது. இப்புராணத்தில் மிக முக்கியமான விஷயம், விஷ்ணுவிடம் பக்தி செலுத்து வதன் உயர்வு என்று சொல்லலாம்.