பிரும்மம் என்கிற இறுதி உண்மையாகிய இறைவனிட மிருந்தே, பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் மூன்றாகப் பிறந்து தோன்றினார்கள். படைப்பை பிரும்ம தேவனும், காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் ஏற்றனர். பிரும்ம தேவனின் ஒரு தினம் முடிகிறபோது, மும்மூர்த்திகளைத் தவிர மற்ற எல்லாம் அழிவுறுகின்றன. பின்னர் பிரும்மதேவன் மீண்டும் படைப்பைத் தொடங்குகிறான் – என்ற விவரங்களைக் கூறி லிங்க புராணத்தை, லோமஹர்ஷணர், நைமிசாரண்யத்தில் கூடியிருந்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, விவரிக்கத் தொடங்கினார்.
யோகம், சிவனால் உபதேசிக்கப்பட்டது. இதைக் கற்பிப் பதற்காக, சிவன் ஒவ்வொரு கலியுகத்திலும், அவதரிக்கிறார். இதே போல ஒவ்வொரு த்வாபர யுகத்திலும், வேத வியாசராக அவ தரிப்பதும் சிவனே.
யோகம் என்பதை ஒருமைப்படுதல் என்று கூறலாம். இது எட்டு அங்கங்களாகப் பிரிந்து, அஷ்டாங்க யோகம் என்ற பெயருடன் விளங்குகிறது. யமம்; நியமம்; ஆஸனம்; ப்ராணாயாமம்; ப்ரத்யாஹாரம்; தாரணம்; த்யானம்; ஸமாதி என்பதே யோகத்தின் எட்டு அங்கங்கள். யமம் என்பது ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டு, உண்மையில் தவறாமல் நின்று, வன்முறை எண்ணங்களைத் தவிர்த்து, தன்னை தயார்படுத்திக் கொள்ளுதல்.
சில விதிமுறைகளை பின்பற்றுவது, நியமம்; பெண்களைத் தீண்டாமல் இருப்பது, பொறாமையைத் தவிர்ப்பது, தூய்மையைக் கடைப்பிடிப்பது, தானம் செய்வது, உபவாசம் இருப்பது போன்றவை இதில் அடங்கும்.
உடலில் உள்ள பத்து வாயுக்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, மூச்சுக் காற்றை தன்னுடைய கட்டில் வைப்பது ப்ராணாயாமம்.
–
யோகத்தில் ஈடுபடுவதற்கு, சரியான முறையில் அமர வேண்டும்; இது ஆஸனம்.
ஐம்புலன்களையும் அடக்கி, அவற்றினால் ஏற்படுகிற ஆசையிலிருந்து மனதை விடுவித்துக் கொள்வது – ப்ரத்யாஹாரம்.
மனதில் ஒரு தோற்றத்தை நிலை நிறுத்த வேண்டும் – இது தாரணம்.
மனத் தெளிவை ஏற்படுத்திக் கொண்டு, சிந்தனை அலை பாயாமல், மன ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவது த்யானம்.
த்யானத்தின் இறுதி கட்டத்தில், தன்னுடைய ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று உணர்ந்து, மாறா அமைதியைப் பெறுகிற நிலை –ஸமாதி.
யோகத்தை பயில்வதற்கும், கடைப்பிடிப்பதற்கும், உகந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கூச்சலும், இரைச்சலுமாக இருக்கிற இடங்கள் இதற்கு உகந்தவை அல்ல. யோகத்தை கடைப் பிடிப்பது, நடைமுறையில் எளிதான காரியமல்ல. பலவிதமான சிந்தனைகள், சந்தேகங்கள், தோற்றங்கள், ஊக்கமின்மை, ஆசை கள்… போன்றவை மனதை பல்வேறு திசைகளில் இழுக்கும்; அதையெல்லாம் கட்டுப்படுத்தி, யோகத்தில் ஈடுபடுகிற மனிதன் உண்மையான உயர்வை அடைகிறான். (ஆக, இன்று கடைப் பிடிக்கப்படுகிற ‘யோகா‘ அல்ல இது; இந்த ‘யோகா‘ உண்மையான யோகத்தின் ஒரு அம்சம் மட்டுமே. இன்றைய ‘யோகா‘, சுவாசத்தை சீராக்கி, உடலை ஒழுங்காக வைக்க உதவும்; உண்மையான யோகம், ஒரு மனிதனையே உயர்த்தி மனத் தெளிவை ஏற்படுத்தி விடும். அந்த யோகத்திற்கான வழிமுறைகளைத்தான் லிங்க புராணம் கூறுகிறது.)
சிவன் ஏன் லிங்க வடிவமாக வழிபடப்படுகிறார் என்பது பற்றி ரிஷிகள் கேட்க, லோமஹர்ஷணர் விளக்கினார்: (இந்த விவரம் சிவ புராணத்திலும் வருகிறது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.) பிரும்ம தேவனுக்கும், விஷ்ணுவிற்கும் ஒரு வாக்குவாதம் ஏற்பட, இருவரில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சையில் அவர்கள் இறங்கிய போது, அவர்கள் முன் பேரொளி வீசிக் கொண்டு ஒரு மகோன்னதமான லிங்கம் தோன்றியது.
இதைக் கண்டு வியந்த விஷ்ணுவும், பிரும்ம தேவனும் ஆர்வத்தினால் உந்தப்பட்டு, அந்த லிங்கத்தின் அடி, முடியைக் கண்டுவிட முனைந்தார்கள். பிரும்மதேவன் உச்சியைக் காணவும், விஷ்ணு அடியைக் காணவும் தீர்மானித்து, மேலும் கீழுமாகச் சென்றனர். எவ்வளவு தூரம் சென்றாலும், அவர்களால் அடி யையோ, முடியையோ காண முடியவில்லை. தங்களைவிட மிக உயர்ந்த சக்தியின் முன் நிற்கிறோம் என்பதை உணர்ந்து, அவர்கள் லிங்கத்தை வணங்கி நிற்க, ‘ஓம்‘ என்ற ஒலி எங்கும் சூழ்ந்தது. லிங்கத்திலிருந்து சிவன் தோன்றி, ஸகலமானவற்றிற்கும் ஆதாரமே லிங்கம்தான் என்று விளக்கினார்.
காயத்ரி மந்த்ரத்தை, விஷ்ணுவிற்கும், பிரும்ம தேவனுக்கும் சிவன் உபதேசம் செய்தார். அத்துடன், ‘நாம் மூவருமே, பிரும்மம் என்கிற இறுதி உண்மையின், மூன்று அங்கங்களே. படைப்பிற்கு பிரும்மனும், காத்தலுக்கு விஷ்ணுவும், அழிப்பதற்கு நானும் பொறுப்பேற்கிறோம். நமக்குள் பேதமில்லை‘ என்று கூறினார்.
இப்படி லிங்க புராணத்தில், மும்மூர்த்திகளில் சிவனே மிக உயர்ந்தவர் என்று விளக்குகிற பல நிகழ்ச்சிகள் இடம் பெறு கின்றன. ஏற்கெனவே வேறு சில புராணங்களில், விஷ்ணு வே சிறப்புடையவர் என்று கூறப்படுவதைப் பார்த்தோம். இவை முரண்பாடுகள் போல் தோற்றமளித்தாலும், ‘விஷ்ணுவும் சிவனும் ஒன்று என்கிற விஷயத்தை விளக்குகிற நிகழ்ச்சிகள்தான் இவை. இறைவனை ஒரு குறிப்பிட்ட வடிவில் மனதில் நிறுத்தி துதிப்பவனுக்கு, அந்த உறவின் மேன்மை வலியுறுத்திச் சொல்லப்பட்டால், அவனுடைய சிரத்தையும், முனைப்பும் வளரும்; அது அவனுக்கு நல்லது. இந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு புராணமும், ஒரு தெய்வத்தையே முதன்மையாகக் கொண்டாடுகிறது.
–
(நீதிமன்றமே முதன்மையானது என்று சொல்கிறபோது அதனுடைய முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. பாராளுமன்றமே மேன்மையானது – என்று சொல்கிறபோது, அதனுடைய பணியின் சிறப்பு வற்புறுத்தப்படுகிறது. அதுபோலத்தான் இதுவும். கான்ஸ்ட்டிட்யூஷன் – அரசியல் சட்டம், பிரும்மனைப் போன்றது; அதுவே இறுதி உண்மை; அதுவே தத்துவம். அதன் சிறப்புக்களைக் கொண்டே, நடைமுறை காரியங்களுக்காக, அந்த தத்துவமே நீதிமன்றம், பாராளுமன்றம், நிர்வாகம் என்று பிரிந்து பணி யாற்றுகிறது. ஒன்றை விட ஒன்று தாழ்ந்தது அல்ல. ஆனால் ஒன்றைப் பற்றி கூறுகிறபோது, அதனுடைய சிறப்புக்கள் மற்ற அங்கங்களின் பெருமைகளை விட மேன்மையானது என்பது போலவே, வர்ணனை அமையும்.
அதே சமயத்தில், நீதிமன்றத்தைப் பற்றிப் பேசுகிறபோது, பாராளுமன்றத்தின் உரிமைகள் குறிப்பிடப்படும்; பாராளுமன் றத்தைப் பற்றி விளக்குகிற போது, நீதிமன்றத்தின் அதிகாரம் பற்றியும் பேசப்படும். சிவ புராணங்களில், விஷ்ணுவின் மேன்மை இடம் பெறும்; வைஷ்ணவ புராணங்களில் சிவனுடைய சிறப்பு களும் வர்ணிக்கப்படும். இந்த உதாரணம் முழுமையானது அல்ல; மும்மூர்த்திகளின் முக்கியத்துவம், ஒன்றை ஒன்று தாழ்த்துவது அல்ல என்பதைப் புரிந்து கொள்ள, இந்த உதாரணம் உதவலாம் அவ்வளவுதான்.)
லிங்க புராணத்திற்கு திரும்புவோம். விஷ்ணுவின் சிறப்பை எடுத்துச் சொல்கிற துருவன் வரலாறு, லிங்க புராணத்தில் இடம் பெறுகிறது. சிவனின் பெருமையை விளக்குகிற பல நிகழ்ச்சி களும் கூறப்படுகின்றன. தாரகாசுரனை, ஸ்கந்தன் எனும் முருகன் வதம் புரிந்தான். அந்த தாரகாசுரனுக்கு வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்று மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் பிரும்ம தேவனை குறித்து தவம் புரிய, அவர் அவர்களுக்கு வரம் அருள முன் வந்தார்.
‘சாகா வரம் வேண்டும்‘ என்று மூவரும் கேட்டனர்.
அது இயலாது; நடப்பதற்கு கடினமான நிபந்தனைகளைக் கூறி, அவை நிறைவேறினால்தான் மரணம் என்று கோருங்கள். வரம் தருகிறேன்‘ என்று பிரும்ம தேவன் கூறினான்.
பொன், வெள்ளி, எஃகு ஆகியவற்றைக் கொண்டு மூன்று நகரங்களை அமைப்பது; வை பல ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒன்றாக நெருங்கும்; அந்த நேரத்தில் அந்த மூன்று நகரங்களையும் சேர்த்து ஒரே பாணத்தினால் யாராவது அழித்து விட்டால், அப்போது மூன்று சகோதரர்களும் மடிவார்கள் – என்ற நிபந்தனையை அந்த மூன்று சகோதரர்கள் விதித்துக் கொள்ள, பிரும்ம தேவன் அவ் வாறே அருளினான்.
இவ்வாறு, நிறைவேற்றுவதற்கு இயலாத ஒரு நிபந்தனையை விதித்ததன் மூலம், இந்த அசுரர்கள் கிட்டத்தட்ட அழியாத் தன்மையை பெற்று விட்டார்கள். தேவர்கள் இவர்களை அழிக்க விஷ்ணுவின் உதவியை நாடினர். விஷ்ணு, சிவனை அணுகித்தான் இந்த காரியத்தை சாதிக்க முடியும் என்று கூற, தேவர்கள் சிவனைத் துதித்தனர். அவரோ மூன்று அசுரர்களும் ஏதாவது பெரிய தவறு செய்தால் அவர்களை அழிக்க தான் முன்வருவதாகக் கூறிவிட்டார். விஷ்ணு, சாக்யமுனியை (புத்தர் மாதிரி) அனுப்பி அசுரர்கள் மனதைக் கெடுத்தார். சாக்யமுனியின் புதிய தத்துவங்களில் மயங்கி, அந்த அசுரர்கள் வேத நிந்தனை செய்ய, சிவன் ஒரே அம்பினால், அந்த மூன்று நகரங்களையும் எரித்து சாம்பலாக்கி, திரிபுரஸம்ஹாரி என்ற பெயர் பெற்றார்.
இப்படி பல வரலாறுகளைக் கூறுகிற லிங்க புராணம், சில கெட்ட சகுனங்கள் பற்றியும் விவரிக்கிறது. சூரியன் ஒளி மங்கினதாக ஒருவனுக்குத் தெரிந்தால், அவன் பதினோரு மாதங்களில் மரண மடைவான்; தங்கத்தையோ, வெள்ளியையோ வாந்தி எடுப்பது போல ஒருவன் கனவு கண்டால் அவன் பத்து மாதங்களிலும்; தங்க மயமான மரங்களைக் கனவில் காண்பவன் ஒன்பது மாதங்களிலும், திடீரென ஒருவனுக்கு எடை கூடுவதோ, குறைவதோ பெரிதாக நிகழ்ந்தால் அவன் எட்டு மாதங்களிலும்; ஒருவனது காலடிச் சுவடு, நிலத்தில் அரைகுறையாகப் பதிந்தால், அவன் ஏழு மாதங்களிலும்; ஒருவன் தலை மீது காக்கை உட்கார்ந்தால், அவன் ஆறு மாதங்களிலும்; ஒருவன் நடந்து செல்லும்போது, அவனை காக்கை கள் சுற்றிக் கொண்டாலோ, புழுதி சூழ்ந்தாலோ, அவனுடைய பிரதிபிம்பம் முழுமையாக இல்லாமற் போனாலோ, அவன் ஐந்து அல்லது நான்கு மாதங்களிலும்; தண்ணீரில் வானவில்லைப் பார்ப்பவன், மூன்று மாதங்களிலும்; தெளிந்த நீரில் ஒருவனுக்குத் தெரிகிற பிரதிபிம்பம் சிதறுண்டு தெரிந்தாலோ, தலையற்றுத் தெரிந்தாலோ அவன் ஓரிரு மாதங்களிலும் மரணமடைவான்!
நரசிம்ம அவதாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைவரும் அறிந்திருக்கக் கூடியவை. பிரகலாதனின் தந்தையாகிய ஹிரண்ய கசிபுவை வதம் செய்ய, விஷ்ணு சிங்க மனிதனாக, நரசிம்ம அவ தாரம் எடுத்து, ஒரு தூணிலிருந்து வெளிப்பட்டு, ஹிரண்ய கசிபுவைக் கிழித்துக் கொன்றார். அதன் பிறகு அந்த நரசிம்மம் என்ன ஆயிற்று என்பதை லிங்க புராணம் கூறுகிறது.
மிகவும் உக்ரமான குணம் கொண்ட நரசிம்மர், பெரும் நாசத்தை விளைவித்து விடுவார் என்று தேவர்கள் அஞ்சி, சிவனிடம் முறையிட்டனர். தன்னிடமிருந்தே வீரபத்ரனை சிவன் தோற்று விக்க, அவன் நரசிம்மரை அழித்தான். நரசிம்மரின் தோல் சிவனின் ஆடையாகியது; அவருடைய மண்டை ஓடு, சிவனின் மண்டை ஒட்டு மாலையில் இடம் பெற்றது. விஷ்ணு தனது வடிவை எய்தினார்.
இப்படி சிவனைப் போற்றுகிற பல நிகழ்ச்சிகளைக் கூறுகிற லிங்க புராணத்தில், விஷ்ணுவும் மற்ற பல தேவர்களும் சிவனைத் துதித்த போது, கூறிய சிவ சஹஸ்ர நாமமும் இடம் பெறுகிறது. சிவனின் பல தோற்றங்கள் பற்றிய விவரங்கள்; பாசுபத விரதத்தின் மேன்மை; பஞ்சாக்ஷர மந்திரத்தின் மகிமை; தியானத்தின் மூலம் ஞானத்தைப் பெறும் மார்க்கம்; எண் வகையான சித்திகள்; காசியின் சிறப்பு; ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்துக்களைக் கொண்ட பஞ்சா க்ஷரத்துடன் ‘ஓம்’ என்ற ஸம்ஸ்க்ருத எழுத்தும் சேர்ந்து ஆறெ ழுத்தாகி, ‘சிவ ஷடாக்ஷரி’ என்ற உயர்ந்த மந்திரமாவது; சிவனை மகிழ்விப்பதற்காக செய்ய வேண்டிய பல தானங்கள்; அவற்றில் எல்லா தானங்களிலும் உயர்வாகக் குறிப்பிடப்படுவது விஷ்ணு விக்ரஹ தானமே என்பது; பூகோளம் பற்றிய சில விஷயங்கள்; வான சாஸ்திரம் பற்றிய குறிப்புகள்; விஷ்ணுவை துதிப்பதால் கிட்டுகிற நற்பலன்கள்… போன்ற பல விஷயங்களைக் கூறி, முற்றுப் பெறுகிறது லிங்க புராணம்.