வராஹ புராணம்

வராஹம் என்றால், பன்றி உருவம் என்பது மட்டுமல்ல அர்த்தம். சூழ்ந்து கொள்வதுவரா; அஹஎல்லைகளைக் கடக்காத தன்மையை நிலைநிறுத்துவது. எல்லாவற்றையும் சூழ்ந்து, அனைத்திற்கும் எல்லைகளை வகுத்து நிறுத்துவதுவராஹம். இருளிலிருந்த பூமியை, எங்கும் சூழ்ந்தவர், அதை வெளிக் கொணர்ந்து, அதன் எல்லையை வகுத்தவர்வராஹர்.

யக்ஞம் என்றால் யாகம். யக்ஞ வராஹம் என்றும் சொல் வதுண்டு. உலகைப் படைத்தது யாகம்; வராஹம் உலகை மீட்டது. இந்த இரண்டின் ஐக்யமே யக்ஞ வராஹம். அதனால்தான், வராஹ உருவத்தின் பல அங்கங்கள், ஒரு யாகத்தின் முப்பத்தி ஐந்து அம்சங்களாக வர்ணிக்கப்படுகிறது.

இனி வராஹ புராணத்திற்கு வருவோம். ஒருமுறை பூமாதேவி விஷ்ணுவை அண்டிஉங்கள் மகிமைகளை எனக்கு விளக்குங்கள். உங்களை அடைவது எப்படி? படைப்பின் தொடக்கம் என்ன? நான்கு யுகங்களின் தன்மை யாது?’ என்றெல்லாம் பல கேள்வி களைக் கேட்டாள். அப்போது வராஹ உருவை எடுத்திருந்த விஷ்ணு, பூமாதேவிக்குக் கூறிய விவரங்கள்தான் வராஹ புராணம்.

எல்லா படைப்புக்கும் ஆதாரமாக இருப்பது பரமாத்மாதான். அதற்கு பிறப்போ, இறப்போ கிடையாது. அதன் அம்சங்கள் வெவ்வேறு உருவத்தில், வெவ்வேறு குணங்களோடு தோன்றி படைப்புத் தொழிலைச் செய்யும். உலகின் பல வஸ்துக்களிலும், ஜீவன்களிலும், மூன்று குணங்கள், வெவ்வேறு அளவில் கலந்து காணப்படும். தூய்மையைக் குறிக்கிற ஸத்வ குணம்; உணர்ச்சி களையும், ஆர்வத்தையும் குறிக்கிற ரஜோ குணம்; அறியாமையைக் குறிக்கிற தமோ குணம்ஆகியவைதான் ஒவ்வொரு படைப்பிலும் வெவ்வேறு அளவில் கலந்திருக்கின்றன.

இயற்கை சக்திகளாக காணப்படுவதுஐந்து; நிலம், நீர், தீ, காற்று, விண் அல்லது ஆகாயம், ஆகியவை படைப்பின் பஞ்ச பூதங்கள், அல்லது அம்சங்கள். விஷ்ணுவிடமிருந்து தோன்றிய ப்ரும்ம தேவன், படைப்புக் கடமையை நிறைவேற்றினான். அவனால், மரீசி, ப்ருகு, புலஸ்த்யர், அத்ரி, வசிஷ்டர்என்று பல ரிஷிகளும், நாரத ரிஷியும் தோற்றுவிக்கப்பட்டனர்.

நாரதர் ஒருமுறை ப்ரியவ்ரதன் என்பவனை சந்தித்தார். அவனிடம் அவர், தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை விளக்கினார்: வேதத்வீபம் என்ற இடத்தில் ஒரு அழகான ஏரி இருக்கிறது. அதில் மலர்ந்திருந்த பல தாமரைப் பூக்களின் அருகில் பேரழகு வாய்ந்த ஒரு பெண்மணியைக் கண்டேன். அவளை யார் என்று நான் கேட்டபோது, அவள் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அப்போது அவளிடமிருந்து ஒளி படைத்த மூன்று உருவங்கள் தோன்றி, உடனே மறைந்து விட்டன. அவளை யார் என்று மீண்டும் கேட்டேன்

இவ்வாறு கூறிய நாரதர், மேலும் தொடர்ந்து, அந்தப் பெண்மணி தன்னிடம் கூறியதை விவரித்தார்.

அவள், நாரதரிடம், ‘நான்தான் வேதங்களின் தாய் போன்ற வளாகிய ஸாவித்ரி. இப்போது இங்கே தோன்றிய மூன்று ஒளி உருவங்கள்ரிக், யஜுர், ஸாம வேதங்கள். தீயனவற்றை எல்லாம் அழிக்கிற ரிக் வேதம்; பிரும்ம தேவனே ஆகிற யஜுர் வேதம்; சிவனே ஆகி, பாவத்தை அழிக்கிற ஸாம வேதம்ஆகியவைதான், நீ உணர்ந்து கொள்ளத் தவறிய ஒளி உருவங்கள். என்னையும், அந்த வேதங்களையும் புரிந்து கொள்ளாததால், நீ கற்றது அனைத்தும் உன்னை விட்டு விலகும்‘.

இவ்வாறு கூறிய ஸாவித்ரி தேவியைப் பார்த்து நாரதர், ‘நான் எப்படி என் அறிவைத் திரும்பப் பெறுவது?’ என்று கேட்டார். அதற்கு ஸாவித்ரி, நாரதரை அந்த ஏரியில் நீராடுமாறு சொல்லி, அப்படிச் செய்தால், இழந்த கல்வியைப் பெறுவதுடன் மட்டு மல்லாமல், முன் ஜென்மத்தை அறியவும், நாரதருக்கு அந்த ஸ்நானம் வழி செய்யும் என்று கூறினாள்; அவரும் அவ்வாறே செய்தார்.

நாரதர் தனது முன் பிறவியில், அவந்தி நகரில், ஸாரஸ்வதன் என்ற பெயருடன் பிறந்திருந்தார். ஸாரஸ்வதன் ஒருநாள், தனியே அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, வாழ்க்கையின் நிலை யற்ற தன்மையை உணர்ந்தான். தன் உடமைகளை தனது மகன் களிடம் கொடுத்து விட்டு, அவன் தியானத்தில் ஈடுபட்டான்.

இதனால் மகிழ்ந்த நாராயணர், ஸாரஸ்வதன் முன் தோன்றி, அவன் விரும்பிய வரத்தைக் கேட்குமாறு சொன்னார். தான் நாராயணனுடனேயே ஐக்கியமாகி விட வேண்டும்என்ற வரத் தைக் கேட்டான் ஸாரஸ்வதன்.

அது வேண்டாம். நீ இன்னும் வாழ வேண்டும்.நீ தர்ப்பணம் செய்து உன்னுடைய முன்னோர்களுக்கு நீர் அளித்ததும், உன் னுடைய பக்தியும் என்னை மகிழ்வித்துள்ளன. நாரதன் (நீரை அளிப்பவன்) என்ற பெயர் பெற்று நீ கீர்த்தியுடன் விளங்குவாய் என்று கூறி விஷ்ணு அருள் புரிந்தார்.

ஸாரஸ்வதன், தன் வாழ்க்கை முடிந்தவுடன், விஷ்ணுவின் அருளினால் ப்ரும்ம தேவனின் புதல்வனாகப் பிறந்து, நாரதன் என்று பெயர் பெற்றான். இந்த விவரத்தையெல்லாம், ப்ரியவ்ர தனுக்கு எடுத்துக் கூறிய நாரதர், விஷ்ணுவை துதிக்கும் ஸ்தோத்திரம் ஒன்றையும் அவனுக்கு உபதேசித்தார்.

இந்த நிகழ்ச்சிகளை வராஹர் கூறக் கேட்ட பூமாதேவி, மும்மூர்த்திகள் பற்றி கேட்க, ‘ப்ரும்ம தேவனும், சிவனும்நாராயணனின் தோற்றங்களேஎன்று வராஹர் விளக்கினார். அனைத்துப் படைப்புமே நாராயணனின் அம்சமே. இதை பூமாதேவிக்கு விளக்கிவிட்டு, வராஹர் மேலும் தொடர்ந்தார்.

செயல், அறிவு ஆகியவற்றின் தன்மை பற்றி ஒருமுறை அச்வசிரன் என்ற அரசன் கபிலரிடம் கேட்க, அவர் ஒரு நிகழ்ச்சியை வர்ணித்தார். ப்ருஹஸ்பதியைக் காணச் சென்ற வாஸு என்ற அரசனும், ரைவ்யர் என்ற முனிவரும், ப்ருஹஸ்பதியிடம்எது பெரிது? அறிவா அல்லது செயலா?’ என்று வினவினார்கள்.

ப்ருஹஸ்பதி, ‘நான் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். அதில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்என்று கூறி, மேலே சொன் னார்: ‘ஸம்யமானன் என்பவன் உண்மையான ப்ராம்மணனாக வாழ்ந்தான். அவன் ஒருமுறை கங்கையில் நீராடச் சென்றபோது, நிஷ்டூரகன் என்ற வேடன் பறவைகளைப் பிடித்துக் கொண்டிருப்ப தைப் பார்த்தான். ‘அந்தப் பறவைகளைக் கொன்று விடாதே. அது கொடிய பாவம் என்று வேடனிடம் அந்த ப்ராம்மணன் கூறினான்.

நிஷ்டூரகன் கேட்டான் : ‘நான் யார் இந்தப் பறவைகளைக் கொல்வதற்கு? எல்லா ஜீவராசிகளிடமும் உள்ளது புனிதமான ஆத்மாதான் எனும்போது, இவற்றை நான் கொன்றுவிட முடியுமா? எந்தச் செய்கையுமே, தான் செய்ததாக எந்த மனிதனும் கூற முடி யாதே! அப்படி ஒரு மனிதன் சொல்லிக் கொண்டால், அவன் அகங்காரத்தில் சிக்கி, நற்கதியை அடைகிற வாய்ப்பை இழப்பான், அல்லவா? செய்யப்படுவது எதுவாயினும், செய்வது ப்ரும்மமே!’

ஸம்யமானன், வேடனின் ஞான உரை கேட்டு திகைத்து நிற்க, அந்த வேடன் ஒரு தீயை மூட்டி, மேலே எழும்பிய அந்தத் தீயின் நாக்குகளில் (ஜ்வாலைகளில்) ஒன்றை அணைத்து விடுமாறு ஸம்யமானனிடம் சொன்னான்.

ஸம்யமானன் அந்த ஜ்வாலைகளில் ஒன்றை அணைக்க தண்ணீரைக் கொட்டியபோது, தீ முழுமையாக அணைந்து விட்டது. அப்போது வேடன்தீயும், அதன் நாக்குகளும் ஒன்றே அல் லவா? அவற்றில் பேதம் காண்பது எவ்வாறு ? நீ ஒரு ஜ்வாலையை அணைக்க முயன்ற போது, முழுத் தீயுமே அணைந்து விட்டது. இதேபோல, படைப்புகள் அனைத்தும் ப்ரும்மனின் வடிவங் களே. மனிதனின் உயிருக்கு வேறொருவர் என்ன செய்தாலும், உள் உறையும் அந்த ப்ரும்மனுக்கு ஒன்றும் நேர்வதில்லை. ஆகையால், தனது கடமைகளைச் செய்கிறபோது, தான் என்ற அகந்தையின்றி மனிதன் செயலாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். தான் செய்கிறோம் என்ற நினைப்பின்றி, எல்லாச் செயல்களையும் மனிதன் புரிய வேண்டும்‘.

இவ்வாறு விளக்கம் கூறிவிட்டு, அந்த வேடன் விடைபெறத் தயாரானபோது, மேல் உலகிலிருந்து ஒரு அழகான விமானம் வந்திறங்கி, அவனை நல்லுலகிற்கு ஏற்றிச் சென்றது.

இதை ப்ருஹஸ்பதி வர்ணித்தபோது, செயலின் தன்மையை, அறிவின் மூலமாகப் புரிந்து கொண்ட ரைவ்யனும்,வாஸுவும் தங்கள் இடங்களுக்குத் திரும்பினர்.

வைஷ்ணவி தேவி பற்றியும் வராஹ புராணம் சொல்கிறது. ஸரஸ்வதியையே, வைஷ்ணவியாக வராஹர் குறிப்பிடுகிறார் என்பது வராஹ புராணத்திலிருந்து தெரிகிறது. வைஷ்ணவி தேவியின் நிஷ்டை கலைந்தபோது, அவளிடமிருந்து கணக்கற்ற பேரழகு மிக்க பெண்மணிகள் தோன்றினார்கள். இவர்களையும் வைஷ்ணவி தேவியையும்ப்ரும்ம தேவனைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தபோது, கண்ட நாரதர் வியப்புற்றார். அவர் மனதில் ஒரு திட்டம் உருவாயிற்று.

மஹிஷாஸுரன் என்ற கொடிய அரக்கனை அழிக்கிற வழி அவர் மனதில் உருப்பெற்றது. அதையொட்டி, நாரதர், மஹி ஷாஸுரனுடைய நகரத்திற்குச் சென்று அவனிடம் போய், ‘பேரழகு பெற்ற வைஷ்ணவி தேவியே உனக்கு ஏற்ற மனைவி என்று கூறி, அவன் மனதில் ஆசையைத் தூண்டினார்.

அசுரர்களின் அரசன் உங்களை மணக்க விரும்புகிறான்என்ற தகவலைத் தாங்கி, ஒரு பெரும் படையுடன், ஒரு தூதுவன் வைஷ்ணவி தேவியிடம் அனுப்பப்பட்டான். வைஷ்ணவி தேவி, இந்த தூதை நிராகரித்தாள். மஹிஷாஸுரன் அவளை கைப்பற்றித் தூக்கிச் செல்ல தீர்மானித்தான். பத்து கைகள் கொண்ட உருவத்தை ஏற்று, வைஷ்ணவி தேவி, தன்னை எதிர்த்து வந்த மஹிஷாஸுரனுடன் யுத்தம் செய்தாள். யுத்தத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாத மஹிஷாஸுரன் பயந்து ஓட, வைஷ்ணவி தேவி அவனைத் துரத்திச் சென்று, அவனை தனது காலின் கீழ் போட்டு, தனது ஈட்டியினால் அவன் தலையைக் கொய்தாள். பெரும் மகிழ்வு எய்திய தேவர்கள், வைஷ்ணவியின் மஹிஷாஸுர மர்த்தனத்தைப் போற்றி, அவளைக் குறித்து செய்த துதியாகிய தேவி ஸ்தோத்ரம், சக்தி வாய்ந்தது.

ஸத்யதபன் என்ற ரிஷி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியையும், பூமா தேவிக்கு வராஹர் கூறினார். ஒருமுறை அவர் மரத்தை வெட்டுகிறபோது, அவர் கைவிரல் வெட்டுப்பட்டது; அதி லிருந்து ரத்தம் சொட்டுவதற்குப் பதிலாக, புகை வந்தது; விரலை எடுத்து வைத்தவுடன் அது மீண்டும் ஒட்டிக் கொண்டு விட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சில தேவர்கள், இந்திர னிடம் அந்த ரிஷியின் மகிமையை எடுத்துரைக்க, அவனும் விஷ்ணுவுமாகச் சேர்ந்து அவரை சோதிக்க முனைந்தனர்.

வேடனின் அம்பினால் அடிக்கப்பட்ட ஒரு காட்டுப் பன்றியாக விஷ்ணுவும், அதைத் தேடிச் சென்ற வேடனாக இந்திரனும் உருமாறினார்கள். காட்டுப்பன்றி ரிஷியின் ஆசிரமத்தினுள் நுழைந்தது.

தன் அம்பினால் அடிபட்ட காட்டுப்பன்றி அங்கு வந்ததா என்பதை ஸத்யதபரிடம் வேடன் கேட்க, அவர் யோசித்தார். ‘வேடனின் கேள்விக்கு பதிலைக் கூறி அவன் பசிக்கு உதவுவதா அல்லது காட்டுப் பன்றியைக் காப்பாற்றுவதா?’ என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது.

ஒவ்வொரு ஜீவனும் தனக்கு உகந்ததைச் செய்ய வேண்டும். ஜீவன்களின் அங்கங்களும், தங்களுக்கு உரிய செயலையே செய்ய வேண்டும். கண்களின் செயல் பார்ப்பதுபேசுவது அல்ல; வாயின் செயல் பேசுவதுபார்ப்பது அல்ல; ஆகையால் தான் பார்த்ததை கண்களால் சொல்ல முடியாது; தான் பார்க்காததை வாயினால் பேச முடியாது‘ – இவ்வாறு சிந்தித்து வேடனின் கேள்விக்கு பதில் கூறாமல் மௌனமாக இருந்து விட்டார் ஸத்யதபன். அவருடைய சிந்தனை ஓட்டத்தை அறிந்த விஷ்ணுவும், இந்திரனும், அவருடைய நல்லெண்ணத்தை மெச்சி, அவருக்கு நற்கதி அளித்தனர்.

தர்மம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை விளக்குகிற இந்த நிகழ்ச்சி; விஷ்ணுவிற்கு விருப்பமான விஷயங்கள்; ச்ராத்தத்தின் முக்கியத்துவம் ; திதிகளைப் பற்றிய விவரங்கள்; யுகங்களின் தன்மை, பூகோள விவரங்கள்; சில பாவங்களுக் கான பிராயச்சித்தங்கள்போன்ற பலவற்றைக் கூறி, நிறைவு பெறுகிறது வராஹ புராணம்.