ஸ்கந்த புராணம்

நைமிசாரண்ய வனத்தில் கூடியிருந்த ரிஷிகளின் வேண்டு கோளுக்கு இணங்க, வியாசரின் சீடர் லோமசர் என்பவர் விவரித்தது, ஸ்கந்த புராணம். சிவ துதியுடன் ஆரம்பிக்கிற இந்தப் புராணம், மற்ற புராணங்களைக் காட்டிலும் பெரியது. ஸ்கந்தனுக்கு, பார்வதி தேவியினால் கூறப்பட்டு, ஸ்கந்தனால் நந்திக்கு உரைக்கப்பட்டு, பின்னர் நந்தியின் மூலமாக அத்ரி முனிவர் அறிந்து கொண்ட புராணம் இதுஎன்று கூறப்படுவது உண்டு; ஸ்கந்தனாலேயே ப்ருகு முனிவருக்கு உபதேசிக்கப்பட்டு, அவரிடமிருந்து இதை அறிந்து கொண்ட ச்யாவனர், ரிசீகர் என்ற ரிஷிகள் இதைப் பரப்ப, பின்னர் வியாசர் ஒருங்கிணைத்துக் கூறியதே ஸ்கந்த புராணம் என்ற கருத்தும் நிலவுகிறது.

முருகப் பெருமான் எனப்படும் ஸ்கந்தனின் தோற்றத்தையும், உயர்வையும் வர்ணிப்பதால் இது ஸ்கந்த புராணம் என்று பெயர் பெற்றாலும், இதில் சிவனின் பெருமை பெரிதும் பேசப்படு கிறது. ஸம்ஸ்க்ருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தனது கனவில் தோன்றிய முருகன் பிறப்பித்த ஆணையின்படி, ஸ்கந்த புராணத்தை, கந்த புராணம்என்று தமிழில் செய்து, அதை கந்தகோட்டத்தில் அரங்கேற்றினார். முருகனே அவருக்கு முதலடி எடுத்துக் கொடுத்தார். அரங் கேற்றத்தின்போது, அதில் இலக்கணப் பிழை இருப்பதாகக் கூறிய புலவர்கள் முன்பு, முருகப் பெருமானே ஒரு புலவர் உருவில் வந்து, இலக்கண விளக்கம் அளித்து, பின்னர் மறைந்தார்.

ஸ்கந்த புராணத்தின் பல விவரங்கள், கந்த புராணத்திலும் அவ்வாறே அமைந்தாலும், சில மாறுபடுகளும் உண்டு. ஆனால் அவை புராணத்தின் தன்மையையோ, போக்கையோ மாற்றி விடு பவை அல்ல. இந்த சுருக்கத்தில், நாம் ஸ்கந்த புராண விவரங்கள், கந்த புராண நிகழ்ச்சிகள் ஆகிய இரண்டையும் இணைத்தே பார்க்கிறோம்.

தக்ஷனின் யாகத்தை சிவபெருமான் அழித்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, லோமசர், இந்திரசேனன் என்ற மன்னன் எப்படி தன்னையுமறியாமல் சிவனின் பெயரை உச்சரித்து நற்கதி அடைந்தான் என்பதை விளக்கினார்.

சிவனின் அருகிலேயே இருக்கிற பேற்றை, நந்தி பெற்றது எப்படி என்பது இப்புராணத்தில் வர்ணிக்கப்படுகிறது.

வர்த்தகம் புரியும் வைசிய குடும்பத்தில் பிறந்து, பெரும் செல்வந்தராக வாழ்ந்த நந்தி, அவந்தி நாட்டுப் பிரஜை. அவர் வாழ்ந்து வந்த ஊரில், ஒரு ஏரியின் அருகில், ஒரு சிவன் கோவில் இருந்தது. ஒவ்வொரு தினமும் காலையில் சென்று சிவனை வணங்குவது நந்தியின் வழக்கம்.

நந்தியைப் போலவே, தினந்தோறும் சிவனை வணங்கும் வழக்கத்தை ஒரு வேடனும் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் சிவன் கோவிலுக்கு வந்தபோது, அவனுக்கு முன்பாக அங்கே வந் திருந்த நந்தி விட்டுச் சென்றிருந்த மலர்கள் மற்றும் சில நகைகள் போன்றவற்றைக் கண்டான். இவற்றையெல்லாம் உதைத்துத் தள்ளிவிட்டு, தான் கொண்டு வந்திருந்த நீர், வில்வ இலைகள், மானின் மாமிசம் ஆகியவற்றை சிவனுக்கு அர்ப்பணித்தான் அந்த வேடன்.

அடுத்த தினம் நந்தி வந்து இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சிவனின் புனிதத்தை யாரோ பாழ்படுத்துவதாகத் தீர்மானித்து, லிங்கத்தையே கோவிலில் இருந்து எடுத்துக் கொண்டு போய், தன் வீட்டிலேயே ஒரு தங்கப் பீடத்தின் மீது அதை வைத்தார்.

இதற்கும் அடுத்த தினம் கோவிலுக்கு வந்த வேடன், சிவ லிங்கத்தைக் காணாமல் துயருற்று, ‘சிவனே! நீ எங்கு சென்றாய்! உடனே என் எதிரில் தோன்றுவாயாக!’ என்று கத்தினான்.சிவன் காட்சி தரவில்லை. உடனே அந்த வேடன், தனது குடலையே பிடுங்கி, லிங்கம் எடுக்கப்பட்டதால் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் அதை வைத்துக் கதறினான். அவனுடைய பக்தியின் ஆழத்தை மெச்சிய சிவன், அவன் முன் தோன்றி, ‘கைலாயத்தில் தனது த்வாரபாலகர்களில் ஒருவராக நீ திகழ்வாய்என்று வரமளித்தார்.

இதற்கிடையில், கோவிலுக்கு வந்த நந்தி, சிவனே நேரில் வேடனுக்குக் காட்சியளித்த நிகழ்ச்சியை அறிந்தார். ‘என்னைப் பற்றியும் சிவனிடம் எடுத்துச் சொல்என்று வேடனிடம் வேண்டி னார் நந்தி.

வேடன், சிவனிடம் வைசிய குடும்பத்தில் பிறந்து பெரும் செல்வந்தராகத் திகழ்கிற நந்தி, உங்களை தினமும் பூஜிக்கிறார் என்று கூறினான்.

சிவன்என்னுடைய பக்தர்களில் சிறந்தவர்களுக்கு, குலப் பிரிவும் கிடையாது; செல்வமும் கிடையாதுஎன்றார். ஆனால் வேடன் மீண்டும் மீண்டும் நந்தியின் பக்தியை எடுத்துரைக்க, அவனுடைய வார்த்தைகளை ஏற்று, வேடன் போலவே நந்தியும் கைலாயத்தில் துவாரபாலகராக இருப்பார் என்று வரமளித்தார் சிவன்.

கூர்ம புராணம் போன்ற நூல்களில், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில், நந்தியின் வரலாறு கூறப்படுகிறது; அவர் எப்படி பெரும் தவமிருந்து அதன் பலனாக சிவனால் ஏற்கப் பட்டார் என்பது அதில் வர்ணிக்கப்படுகிறது. இப்படி சிவ பக்தியினால் மேன்மையுற்றவர்கள் சிலரைப் பற்றி கூறிவிட்டு இப்புராணம் சிவலிங்கத்தின் உயர்வைக் கூறுகிறது. பரமாத்மா என்பது லிங்கமே; எல்லா படைப்புகளும் இறுதியில் லிங்கத்தில்தான் ஐக்கியமாகின்றன; ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுமே லிங்கத்தில் அடங்குவதால், அது குணமற்ற தாகிறது. (ஸகுணம்என்பது வர்ணிக்கக் கூடியது; உருவம் உடையது; இது உருவ வழிபாட்டில் ஈசன் தரும் காட்சி. நிர்குணம் என்பது வர்ணனைக்கெல்லாம் அப்பாற்பட்ட இறுதி உண்மை; இது உருவமற்றது, ஞானிகளினால் உணரப்படுவது.)

அடுத்து, ஸ்கந்தனின் தோற்றம். தக்ஷன் நடத்திய யாகத்தில் அவமதிக்கப்பட்ட தாயனி தன்னையே தியாகம் செய்து கொண்டபோது, சிவன் தியானத்தில் அமர்ந்தார்.

ஒரு சிறுவனால் மட்டுமே தன்னை அழிக்க முடியும்என்று வரம் பெற்றிருந்த தாரகாஸுரன், தேவர்களை ஹிம்ஸிக்கத் தொடங்கினான். ‘சிவனுடைய மகன் தாரகாஸுரனை அழிப்பான்என்ற அசரீரியின் வாக்கைக் கேட்ட தேவர்கள் விரும்பியபடி ஹிமவானுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கௌரி, உமா என்ற பெயர்களுடைய பார்வதியின் அவதாரமாகிய அந்தப் பெண், சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்தாள். அவர்கள் இருவருக்கும் மணம் முடிக்க தேவர்கள் செய்த பல முயற்சிகள் வீணாயின. இறுதியில் பார்வதியின் தவத்தினால் மகிழ்ந்த சிவன் அவளை மணந்தார்.

விஷ்ணு, பிரும்ம தேவன் ஆகியோரால் அனுப்பப்பட்ட அக்னிதேவன், பார்வதியின் கோபத்திற்கு ஆளானாலும், அவ னுக்கு சிவனுடைய தேஜஸின் ஒரு பகுதியை அவள் அருளி னாள். அதைத் தாங்க முடியாத அக்னி தேவன், அந்த தேஜஸை, ஏரி நீரில் செலுத்தினான்.

ஸப்தரிஷிகளின் மனைவிகளில், வசிஷ்டர் மனைவி அருந்ததி யைத் தவிர, மற்ற ஆறு பேரும் அந்த ஏரியில் நீராட, அந்த தேஜஸ் அவர்களை அடைந்தது. அவர்கள் அதை இமயமலையில் சேர்க்க, அங்கிருந்து அந்த சக்தி நீரோடு கலந்து, கங்கையில் சேர்ந்தது. கங்கைக் கரையில், அந்த சக்தியிலிருந்து ஸ்கந்தன் தோன்றி னான். வானத்தில் கிருத்திகை நட்சத்திரங்களாகத் தோன்றுமாறு, தங்களுடைய கணவர்களால் சபிக்கப்பட்டிருந்த கிருத்திகைகள் தாங்கியிருந்த சக்தியினால் பிறந்தவன் என்பதால், ஸ்கந்தனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் உண்டாயிற்று. ஆறு முகங்களோடு அவன் தோன்றியதால், அவன் ஷடானன் என்ற ஆறுமுகனானான். சிறுவன் என்பதால் குமரன் என்றும் துதிக்கப்பட்டான்.

தாரகாஸுரனை அழிக்கக் கூடிய, சிறுவன் தோன்றிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் தேவர்கள் ஸ்கந்தனை தங்களுடைய சேனை களுக்குத் தலைவனாக்க, அவன் சேனாபதியானான். (தேவஸேனா, என்கிற ஸேனாவை மணந்ததால், அவளுடைய பதியாகி, ஸேனாபதி என்ற பெயர் பெற்றான் என்றும் கூறலாம்).

இதற்கிடையில், அக்னி தேவனால் தான் கைவிடப்பட்டதாக நினைத்து விட்ட, அவனுடைய மனைவிஸ்வாஹா‘, ஸ்கந்த னிடம் முறையிட, அவர்நீ அக்னியுடனேயே இணைந்திருப் பாய். இனி யாகங்களில் அக்னிக்கு அர்ப்பணம் செய்யப்படும் போதுஅக்னயே ஸ்வாஹாஎன்ற வார்த்தைகளே உச்சரிக்கப்படும். இவ்வாறாக அக்னியுடனேயே நீ இணைந்து விளங்குவாய்என்று அருள்புரிந்தார். இதனால்தான் யாகங்களிலும், ஹோமங்களிலும் அக்னிக்கு செய்யப்படுகிற அர்ப்பணம்அக்னயே ஸ்வாஹாஎன்ற வார்த்தைகளினாலேயே செய்யப்படுகிறது. இவ்வாறே, யாகங். களில் நடக்கிற எல்லா அர்ப்பணங்களிலும் அக்னிக்கு ஒரு பங்கு உண்டு என்றும்கங்கையின் மைந்தன் என்ற பொருளில் தனக்கு காங்கேயன் என்ற பெயர் வழங்கும் என்றும், முறையே அக்னி தேவனுக்கும், கங்கைக்கும் முருகன் அருளினார்.

தாரகாஸுரன் பெரும் படையுடன் தேவர்களை வந்தெதிர்க்க, தேவர் படை திணறியது. இந்திரன், வீரபத்ரன் போன்றோர் எல்லாம் வீழ்ந்தார்கள். ஸ்கந்தனே நேரில் நின்று வீழ்த்தினால்தான் தாரகா ஸுரனை வதம் செய்ய முடியும் என்பதை உணர்ந்த விஷ்ணு, அதை ஸ்கந்தனிடம் கூற, அவர் யுத்த களத்தில் இறங்கி, தாரகா ஸுரனை தனது வேலினால் மாய்த்தார்.

தாரகாஸுரன் கொடியவனாக இருந்தாலும், அவன் சிவ பக்தன் என்பதால், அவனை வதம் செய்ய நேர்ந்தது பற்றிய வருத்தம் ஸ்கந்தனுக்கு இருந்தது. இதற்காக ஏதாவது பரிகாரம் செய்ய விரும்பிய அவர், விஷ்ணுவிடம் இது பற்றி கேட்க, விஷ்ணு ‘சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தால், அது தகுந்த பரிகாரமாகி, மனநிம்மதியைத் தரும்’ என்று கூறினார்.

கூ

ஸ்கந்தன் மூன்று சிவலிங்கங்களை ஸ்தாபித்தார். தாரகா ஸுரனை வதம் புரிய தீர்மானித்த இடத்தில் ஒன்று; அவன் மீது தனது வேல் பாய்ந்த இடத்தில் ஒன்று; தாரகாஸுரனின் உயிர் பிரிந்த டத்தில் ஒன்று – என மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்து, மூன்று சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து, தனது மன வருத்தத்தை நீக்கிக் கொண்டார் ஸ்கந்தன். இவற்றில் முதல் லிங்கம் – ப்ரதிக் ஞேஸ்வரர் (ப்ரதிக்ஞை – தீர்மானம் தோன்றுவது); கபாலேஸ்வரர்- இரண்டாவது லிங்கத்தின் பெயர் (கபாலம், மண்டை ஓடு – வேலை பாய்ச்சிய இடம்); மூன்றாவது – குமரேஸ்வரன். (இது குமரனின் பெயர் கொண்ட லிங்கம்).

காசி நகரத்தின் உயர்வு இப்புராணத்தில் விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்கந்தனும் ஒருமுறை சனகருக்கும், வேறு பல ரிஷிகளுக்கும் காசியின் பெருமைகளை எடுத்துரைத்தார். சிவ னுக்கு மிகவும் பிடித்தமான இடம் காசி. அங்கு ஒரு மாதம் வாழ்ந்தாலே புண்ணியம்; ஆயுள் முழுவதும் காசியில் வாழ்பவன் பல யாகங்கள் நடத்திய பலனைப் பெறுகிறான்; காசியில் மரணம் எய்துபவன்,நல்லுலகம் செல்கிறான். இந்த விவரங்கள் மட்டு மின்றி, காசி நகரம் சில முறை தாக்குதல்களுக்கு உள்ளாகி, பெரும் சேதங்களைச் சந்தித்தது என்பதும் இப்புராணத்தில் கூறப்படுகிறது.

காசி தவிர, ராமேஸ்வரம், அருணாசலம், போன்ற புண்ணிய ஸ்தலங்கள் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. வள்ளியை முருகன் மணந்த நிகழ்ச்சியை கந்த புராணம் விரிவாகச் சொல்கிறது. விநாயகருக்கும்,சுப்ரமண்யருக்கும் இடையே உலகைச் சுற்றி வந்து பழத்தைப் பெறுகிற போட்டி நடந்தபோது, விநாயகர் தனது தாய், தந்தையராகிய சிவனையும், பார்வதியையும் வலம் வந்து, பழத்தைப் பெற்று விட்டார் என்பது பிரபலமாகியுள்ள விவரம். ஸ்கந்த புராணத்தின்படி, விநாயகர் அருணாசலத்தை (அந்த மலையை ) வலம் வந்தார்; சிவபெருமானே, அருணாசலம் என்பதாலும், அவரே மூவுலகமும் என்பதாலும், உலகை வலம் வந்த சாதனை நிறைவேறியது என்று கூறி, அவர் பழத்தைப் பெற்றார். அந்தக் கனியை விநாயகருக்குத் தருகிற போது, சிவன் ‘என்னுடைய அசையாத் தோற்றமே அருணாசலம். இந்த மலையை வலம் வருகிறவன் பெரும் புண்யம் எய்துவான்’ என்று விளக்கி னார். வெங்கடாசலம் பற்றியும் பேசுகிற இப்புராணம், சூரபத்மன் வதம் பற்றி விரிவாகச் சொல்கிறது.

ஞானத்தை அருள்வதில் விசேஷத் தன்மை உடையதாகக் கருதப்படுகிற ஸ்கந்த புராணம், பிரபாஸம் என்கிற புண்ய தீர்த்தத்தின் மகிமையைச் சொல்லி, முற்றுப் பெறுகிறது.