ஸ்ரீமத் பாகவதம் – 2

நாரதரின் யோசனையின்படி, ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றிய வியாசர், பின்னர், அதை தனது மகனாகிய சுகருக்கு உபதேசித்தார்.

சுகர், மிகச் சிறிய வயதிலேயே பெரும் ஞானத்தைப் பெற்றவர். அவர் எல்லாவற்றையும் துறந்து செல்கிறபோது, மகன் மீதான பாசத் தினால் வியாசர் உரக்கக் கூவி அவரை அழைத்தார். வனத்தில் இருந்த மரம், செடி, கொடிகள் எல்லாம்ஏன்? ஏன்?’ என்று கேட்டன. அப்படி,தான், மற்றது என்ற பேதங்களை எல்லாம் கடந்தவராக சுகர் விளங்கினார்.

ஒருமுறை, நதியில் பல பெண்கள் நீராடிக் கொண்டிருந்தபோது, சுகர் நதிக் கரையில் சென்று கொண்டிருந்தார். அவர் ஆடை கூட அணியாமல் போய்க் கொண்டிருந்தாலும், அந்தப் பெண்கள், அது பற்றி சிறிதும் கவலையின்றி நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர் அந்த வழியே சென்றார். அவரைப் பார்த்த அந்தப் பெண்கள் நாண மிகுதியினால் உடலை மறைத்துக் கொண்டு, கரையில் இருந்த துணிகளை எடுத்து அவசர அவசரமாக உடுத்திக் கொண்டனர்.

இதைப் பார்த்த வியாசர் வியந்தார். ‘என் மகன் இவ்வழியே சென்றான்; அவன் இளைஞன்; ஆடை கூட அணியவில்லை; ஆனால் நீங்கள் சிறிதும் கவலையில்லாமல் நீராடிக் கொண்டிருந் தீர்கள். நானோ வயதில் மிகவும் முதியவன்; ஆடை அணிந்துதான் செல்கிறேன்; இருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் நீங்கள் அனைவரும் கூச்சப்பட்டு, துணிகளை எடுத்து உடலை மறைத்துக் கொள்கிறீர்கள். ஏன் இப்படி?’ என்று கேட்டார் அவர்.

அந்தப் பெண்கள்முனிவரே! நீர் முற்றும் அறிந்தவராக இருந்தாலும், ஆண், பெண் என்ற வித்தியாசம் உங்கள் மனதில் இருக்கிறது. சுகருக்கோ அது சுத்தமாகக் கிடையாது. அவர் எல்லாவற்றையுமே ஒரே மாதிரியாகத்தான் நினைக்கிறார்; பார்க் கிறார். இதுதான் உங்கள் இருவருக்கும் இடையே உள்ள வித்தி யாசம்என்று பதில் அளித்தனர்.

அப்படிப்பட்ட, அனைத்தையும் கடந்த ஞானியாகிய சுகர், தனது தந்தையாகிய வியாசரிடமிருந்து அறிந்து கொண்ட பாகவத புராணத்தை, பரீக்ஷித்திற்குச் சொன்னார்.

அபிமன்யுவின் மனைவி உத்தரை; அசுவத்தாமாவின் அஸ் திரத்தினால், உத்தரையின் கர்ப்பத்திலேயே மரித்த குழந்தைக்கு, கிருஷ்ணர் உயிரளித்தார். அப்படி பிறந்த குழந்தைதான் பரீக்ஷித்.

பாரத யுத்தமும் முடிந்து, யாதவர்களும் பெரும் சண்டையிட்டுக் கொண்டு பேரழிவைச் சந்தித்து விட்ட வேளையில், பூபாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்திருந்த கிருஷ்ணர், வைகுண்டம் திரும் பினார். பூமியிலிருந்து அவருடைய பாதங்கள் அகன்றபோது, கலியுகம் தொடங்கியது. கிருஷ்ணர் வைகுண்டத்துக்குத் திரும்பிய, சிறிது காலத்தில், பாண்டவர்கள் ராஜ்யத்தை பரீக்ஷித்திடம் ஒப்ப டைத்து விட்டு, ஸ்வர்க்கத்தை நோக்கிய தங்களுடைய பயணத்தை மேற்கொண்டனர்.

ராஜ்ய பாரம் ஏற்ற பரீக்ஷித், பல மன்னர்களை யுத்தத்தில் வென்று, அவர்களிடமிருந்து கப்பம் பெற்றான். அவனுடைய ஆட்சியில், மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் திகழ்ந்தார்கள். தேசம் வளம் பெற்று விளங்கியது. அனைவரும் பரீக்ஷித்தின் மேன்மை யான குணங்களைப் புகழ்ந்தனர்.

ஒருநாள், பரீக்ஷித் ஸரஸ்வதி நதிக் கரையில் திரிந்து கொண் டிருந்தபோது, ஒரு மனிதன் ஒரு எருதையும், பசுவையும் துன்புறுத்துவதைப் பார்த்தான். அவனை தண்டிக்கப் போவதாக பரீக்ஷித் சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்த எருது, ஒரே ஒரு காலில் நின்று கொண்டு அவதியுறுவதைப் பார்த்து திகைத்தான்.

எருது, பரீக்ஷித் மன்னனைப் பார்த்துப் பேசியது. ‘எனக்கு எதனால் இந்த துக்கம் ஏற்பட்டது என்று என்னால் சொல்ல முடியவில்லை. சிலர் ஆத்மாவே துக்கத்திற்கு காரணம் என்று சொல் கிறார்கள்; சிலர் நவக்ரஹங்களே காரணம் என்கிறார்கள்; வேறு சிலரோ நமது கர்மமே காரணம் என்று கூறுகிறார்கள்; இன்னும் சிலரோ ஈச்வரனே காரணம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இப்படி விளக்க முடியாத ஏதோ ஒரு காரணத்தினால், துன்பம் உண்டாகிறது. எதனால் துன்பம் நேரிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், அதை நீக்குகிற வழியை எப்படித் தேடுவது? உண்மைகளை அறிந்த நீதான் இந்த நிலையை ஆராய வேண்டும்‘.

எருது பேசியது என்பதையும், அது விளக்கிய விஷயங்களை யும் பற்றி ஆலோசித்த பரீக்ஷித், அந்த எருது சாதாரணமான ஒரு மிருகம் அல்ல என்றும், அது தர்மத்தின் உருவம் என்றும் புரிந்து கொண்டான்.

இப்படி அறிந்து கொண்ட பரீக்ஷித் அந்த எருதைப் பார்த்து, தர்மமே இப்படி ஒரு எருதாக காட்சியளிக்கிறாய் என்பதை நான் உணர்கிறேன்என்று சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தான்: ‘தவம், தூய்மை, தயை, ஸத்யம் என்கிற உனது நான்கு கால்களில் முதல் மூன்று கால்கள்சந்தேகம், ஆசை, கர்வம் ஆகியவற்றினால் முறிக்கப்பட்டு, இப்போதுஸத்யம்என்ற காலில் மட்டும் நீ நிற்கிறாய். இதை இந்தகலியாகிய மனிதன், அஸத்யத்தின் உதவி கொண்டு முறிக்க முனைந்துள்ளான். பூமா தேவியே, இந்த பசுவின் உருவம் கொண்டு நிற்கிறாள். பகவானாகிய கிருஷ்ணர் பூவுலகை விட்டு போன பிறகு, இவள் துக்கமுற்று இருக்கிறாள். இப்போது அரசன் என்ற எனது கடமையை நிறைவேற்ற, இந்தக் கலியை நான் அழிக்கப் போகிறேன்‘.

இவ்வாறு கூறிய பரீக்ஷித் மன்னன், கலியை வெட்ட, தனது வாளை ஓங்கினான். சரண் அடைந்தவனை பரீக்ஷித் கொல்ல மாட்டான் என்பதை அறிந்த கலி புருஷன், மன்னனின் காலில் விழுந்து, தனக்கும் அவனே பாதுகாப்பானவன் என்று மன் றாடினான்; எல்லோரையும் விட்டு விலகுமாறு பரீக்ஷித், கலியிடம் கூறினான். கலியோ, யுக தர்மங்கள் நிச்சயிக்கப்பட்டவாறு நடக்க வேண்டும் என்பதால், தனக்கு சில இடங்களையாவது ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டான்.

சூதாட்டம்; குடி; பெண்களை தவறாக நடத்துவது; பிராணி களை ஹிம்சிப்பதுஆகியவை எந்த இடங்களில் இருக்கின் றனவோ, அங்கு கலி இருக்கலாம் என்று பரீக்ஷித் அனுமதித்தான். மேலும் ஒரு சில இடங்களை தனக்கு ஒதுக்குமாறு கலி கேட்டுக் கொள்ள, தங்கத்திலும், பொய் பேசப்படும் இடத்திலும், கர்வம், காமம், பொறாமை, துவேஷம்ஆகியவை நிறைகிற இடங்களி லும் கலி வசிக்கலாம் என்று பரீக்ஷித் விதி செய்தான். ஆக, கலியினால் பீடிக்கப்படாமல் இருக்க, இம்மாதிரி இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட பரீக்ஷித் ஒருமுறை வேட்டையாடச் சென்ற போது, தாகமுற்று தண்ணீருக்காக சுற்றுமுற்றும் பார்க்க, ஒரு ஆசிரமத்தில் அமர்ந்து நிஷ்டையில் இருந்த ஒரு ரிஷியைக் கண்டான். அவரிடம் சென்றுதண்ணீர் வேண்டும்என்று பரீக்ஷித் பலமுறை கேட்டும், அவர் பதில் அளிக்காமல் நிஷ்டையிலேயே இருந்தார். கோபமுற்ற அரசன் நிதானம் தவறி, அருகில் கிடந்த ஒரு செத்த பாம்பை ரிஷியின் கழுத்தில் போட்டு விட்டுப் போனான்.

சமீகர் என்ற அந்த ரிஷியின் மகனான சிருங்கி என்பவரும் தபஸ்வியே. அவர் இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்து, பரீக்ஷித், அன்று முதல் ஏழாவது தினத்தில் பாம்புகளின் அரசனான தக்ஷகனால் கடிக்கப்பட்டு மரணம் எய்துவான்என்று சபித்து விட்டார். இதை அறிந்த தந்தை, வருத்தமுற்று, கோபத்தினால் ஏற்படும் தீமைகளை மகனுக்கு விளக்கிச் சொல்லி, பரீக்ஷித் மன்னனுக்கு செய்தி தெரிவிக்க ஒரு சீடனை அனுப்பினார்.

சமீகரின் சீடன் மூலம் தனக்கு நேர்ந்த சாபத்தை அறிந்த பரீக்ஷித், தன்னுடைய செயலை நினைத்து வருந்தினான். முனிவர் மகன் மீது அவன் கோபமுறவில்லை. தன்னுடைய செய்கையின் பலனை, தான் அனுபவிக்கப் போவதாகவே அவன் உணர்ந்தான்.

பின்னர் தனது மகன் ஜனமேஜயனிடம் ராஜ்யத்தை ஒப்ப டைத்து விட்டு, கங்கை நதியின் தெற்குக் கரையில் தர்ப்பங் களைப் பரப்பி, அவற்றின் மீது அமர்ந்து, உயிர் பிரியும் நேரத்திற்காகக் காத்திருந்தான்.

அப்போது அங்கே வந்த சுகரை, பரீக்ஷித் நமஸ்கரித்து, தனக்கு உபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டான். மரணமடையும் தருணத்தை எதிர்நோக்கியுள்ள தான், அறிந்து கொள்ள வேண் டியது எதுவோ அதைக் கூறுமாறு, அவன் சுகரை வேண்டிக் கொண்டான்.

எல்லா தர்மங்களையும் அறிந்த சுகர், பரீக்ஷித் மன்னனைப் பார்த்து பேசத் தொடங்கினார்.

பரீக்ஷித் மன்னனே! நீ கேட்க விரும்புவது மேலான விஷயம். மக்களுடைய வாழ்நாள், இரவு நேரத்தில் தூக்கத்தில் கழிகிறது; பகலிலோ, பணத்தாசையினாலும், குடும்பத்தை நடத்திச் செல்கிற கவலையினாலும் கழிகிறது. மனிதனின் இளமைக்காலம் காமத்தில் கழிகிறது. தனது சரீரம், தனது மனைவி, தனது குழந்தைகள் போன்றவற்றின் மீது பெரும் ஆசையை மனிதன் வளர்த்துக் கொள் கிறான். பலரும் மரணமடைந்து கொண்டே இருப்பதைப் பார்த்தும் கூட, மனிதன், தான் அனுபவிக்கிற ஆசைகளும், அவற்றை யொட்டிய மகிழ்ச்சிகளும் நிரந்தரமானவை என்றே நினைத்து விடு கிறான்! இந்த அஞ்ஞானத்தை என்னவென்று சொல்வது?

இப்படி கழிக்கப்படுகிற காலம், தன்னால் வீணாக்கப்பட்ட காலம் என்பதை எப்போது ஒரு மனிதன் உணர்கிறானோ, அப்போது, அவனுக்கு நல்ல காலம். அவனுடைய புத்தி அப்போது பரமாத்மாவை நினைக்கும்.

விவேகமுள்ள மனிதன், தேகத்தைத் தாங்குகிற அளவிற்கு தேவையானதைத் தவிர, மற்றவற்றை நாட மாட்டான். பூமியாகிய படுக்கை இருக்கும்போது, உயர்ந்த கட்டிலும் மெத்தையும் எதற்காக? தன்னுடைய கைகள் இருக்கிறபோது, தலையணை எதற்காக? பிட்சையை ஏந்த இரு கைகள் இருக்கையில், விசேஷ மான பாத்திரங்கள் எதற்காக? திசைகளும், மரவுரிகளும் இருக்கிற போது, பட்டு பீதாம்பரங்கள் எதற்காக? கனி தரும் மரங்கள் இருக்கும்போது, உணவைப் பற்றிய கவலை எதற்காக? மலைக் குகைகளும், அது போன்ற இடங்களும் இருக்க, வீடுகள் எதற்காக? இயற்கை தருபவை எல்லாம் இருக்கும்போது, விசேஷ வசதிகள் எதற்காக?

இருப்பதுடன் திருப்தியுற்று நாராயணனையே மனதால் நினைத்து, அவரிடமே பக்தி கொண்டு, அவரிடமே லயித்திருப்பது உண்மையான விடுதலையைத் தரும். அப்படிப்பட்ட மேன்மை தருகிற பரமாத்மாவின் சரிதத்தைச் சொல்கிறேன்.’

இவ்வாறு பரீக்ஷித் மன்னனுக்கு, ஸ்ரீமத் பாகவதம் எனும் மஹா புராணத்தை, சுகர் கூற ஆரம்பித்தார்.