விதுரருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிய மைத்ரேயர்,
மஹாவிஷ்ணுவின் மேன்மைகளை விவரித்து விட்டு, சிருஷ்டி யைப் பற்றி விளக்கங்கள் அளித்தார். ப்ரும்ம தேவன், மஹா விஷ்ணுவிடமிருந்தே தோன்றியதையும், அவருடைய அருள் பெற்று, படைப்புத் தொழிலைச் செய்ததையும் எடுத்துரைத்தார்.
பின்னர் வராஹவதாரம் பற்றிய விவரங்களைக் கூறினார். ஹிரண்யாக்ஷனை, பகவான் அந்த அவதாரத்தில் அழித்த விவ ரத்தைக் கேட்டுக் கொண்ட விதுரர், ஹிரண்யாக்ஷன் பற்றி மேலும் விவரங்களை அறிய விரும்புவதாகத் தெரிவித்தார்.
மைத்ரேயர், ஹிரண்யாக்ஷன் பிறந்த காரணத்தைக் கூறினார்: தக்ஷனுடைய பெண்ணாகிய திதி தேவி, மக்கட்பேறு விரும்பி, அதற்காக, தன்னுடைய கணவனாகிய கச்யபரிடம் ஒருமுறை, சேர்க்கையை விரும்பினாள். அவரோ தொடர்ந்து நிஷ்டையில் இருந்து வந்தார்; அதுவுமின்றி, திதி மன்மதனால் பீடிக்கப்பட்ட வளாக அவரை நாடிய நேரம்,சூரியன் அஸ்தமனமாகிற சமயம்.
கச்யபர் தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றுமே, மனைவி யினால் ஒருவனுக்குக் கிட்டுகின்றன. ஆகையால் அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற, அவன் கடமைப்பட்டவனாகிறான். மனைவி இருப்பதால்தான், கிருஹஸ்தன் மற்ற நிலைகளில் வாழ்பவர்களை விட, மேம்பட்டவனாகத் திகழ்கிறான். ஆகை யால் உன் இஷ்டத்தை நிறைவேற்றுவது என் கடமை‘ என்று சொல்லி விட்டு, மேலும் தொடர்ந்தார்.
‘உனக்கு மகன் பிறக்கும் வழி சொல்கிறேன். ஆனால் அதற்கு இது நேரமல்ல. இது பரமசிவன் தனது காளையின் மீதேறி, உலா வரும் நேரம். சுடலையில் வீசுகிற தூளிகள் அவருடைய சடை முடிமேல் படிந்திருக்கின்றன. தன்னுடைய உடலில் விபூதியைப் பூசிக் கெர்ண்டிருக்கிற அவர், எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறவினர், உறவு அல்லாதவன்; நெருங்கியவன், விலகியவன்; நண்பன், விரோதி என்று யாரும் கிடையாது. அவருக்கு அனைவரும் சமமே. அவித்யை என்கிற அஞ்ஞானத்தை கடக்க விரும்புகிற பண்டிதர்கள், பரமசிவனின் குறைகளற்ற சரித்திரத்தை எப்போதும் நினைக்கிறார்கள். இறுதி யில் எதற்கும் உதவாமற் போகிற உடலைப் பெரிது என்று எண்ணி, அதற்கு ஆடைகளை அணிவித்து, வாசனை திரவியங்களைப் பூசி, அலங்கரிப்பவர்கள் – பரமசிவனின் சரித்திரத்தைப் பரிகசிப்பார்கள். ஆனால் ப்ரும்ம தேவன் போன்றவர்கள், படைப்புத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டு தங்கள் தங்கள் கடமை களைச் செய்து வருவது, அவரால்தான். இந்த உலகிற்குக் காரணம் அவர்தான். மாயையே அவருக்குக் கட்டுப்பட்டு கிடக்கிறது. அப்படிப்பட்ட பரமேச்வரன், சஞ்சரித்துக் கொண்டிருக்கிற இந்த நேரம், நமது சேர்க்கைக்கு உகந்த நேரம் அல்ல என்பதால், சற்று பொறுத்துக் கொள்‘.
இவ்வாறாக கச்யபர் எடுத்துச் சொல்லியும் கூட, திதி, தனது ஆவலை அடக்க மாட்டாமல், அவரைத் தொடர்ந்து நிர்பந்தம் செய்தாள். இது விதிப்படி நடக்கிறது என்று தீர்மானித்து, கச்யபர், பரமசிவனை மனதினால் துதித்து விட்டு, அந்த அகால வேளை யில், மனைவியுடன் கூடினார்.
நடந்தது முறையல்ல என்பதை அறிந்த கச்யபர், நீராடி விட்டு, ப்ராணாயாமம் செய்து, மீண்டும் தியானத்தில் அமர்ந்தார். அப்போது, திதி, ஆசையினால் தனது கணவனை நிர்பந்தித்த தனது செயலை எண்ணி வெட்கப்பட்டு, அவரிடம் சென்று தலைகுனிந்து நின்று பேசினாள். ‘ஸகல ஜீவராசிகளுக்கும் அதிபதியாகிய பரமசிவனுக்கு நான் அபராதம் செய்து விட்டேன். என்னுடைய இந்தச் செய்கையினால், அவர் கோபம் கொண்டு, என்னுடைய கர்ப்பத்தை சிதைக்காமல் இருக்க, தாங்கள்தான் அருள்புரிய வேண்டும். எல்லாவற்றையும் தோற்றுவிப்பவரும், மங்களமானதையே செய்பவரும், பக்தர்களைக் காப்பாற்று பவரும், தீயவர்களை அழிப்பவரும், நல்லவரல்லாதவரிடம் பெரும் கோபம் உடையவருமான ருத்திரனை நமஸ்கரிக்கிறேன். அந்த உக்கிரனை வணங்குகிறேன். அந்த மஹாதேவனை வேண்டு கிறேன். வேடர்கள் கூட பெண்களிடம் கருணை காட்டுகிறார்கள்; அப்படியிருக்க, அனைத்து ஜீவராசிகளின் தன்மைகளையும் அறிந்த அந்த பகவான் ருத்திரன், என் மீது தயை காட்ட வேண்டும்‘.
இப்படி திதி வேண்டியபோது, கச்யபர் தன்னுடைய நியமங் களை முடித்துக் கொண்டு அவளுக்கு பதில் அளித்தார். ‘உன் னுடைய மனம் அசுத்தப்பட்டது; உன் காமம், கூடாத நேரத்தில் நம்மை கூட வைத்தது. நான் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், நீ என்னை நிர்பந்தித்ததால், உன்னுடைய கர்ப்பத்திலிருந்து, இரு கொடிய மகன்கள் பிறப்பார்கள். பெரும் பலவான்களாக விளங்கப் போகும் அவர்கள், மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்வார்கள். எந்தத் தவறும் செய்யாத மனிதர்களும், அந்த இருவரின் கொடுமை களுக்கு உள்ளாவார்கள். பெண்கள் அவமதிக்கப்படுவார்கள். பெரியோர்களுக்கெல்லாம் தீமை புரிந்து, அவர்களை கோபமுறச் செய்வார்கள். அப்போது மஹாவிஷ்ணு கோபம் கொண்டு, பூமியில் அவதரித்து, அவர்களை அழிப்பார்‘.
இவ்வாறு சொல்லி விட்டு, அவர் மேலும் தொடர்ந்தார் ஆனாலும், செய்த தவறை நினைத்து, இப்போது நீ வருந்துகிறாய்; பரமசிவனிடம் மன்னிப்புக் கோருகிறாய்; அவரிடமும் விஷ்ணு விடமும் உன் மனம் இப்போது லயிக்கிறது; கணவனாகிய என் னுடைய தயவையும் வேண்டுகிறாய். இந்தக் காரணங்களினால், உனக்குப் பிறக்கப் போகும் இரு மகன்களில் ஒருவனின் புதல்வன், பெரியோர்களால் ஏற்கப்படுவான். பகவானுடைய மேன்மையைக் கூறி மகிழ்கிற மக்கள், அவனுடைய கீர்த்தியையும் பற்றிப் பாடு வார்கள். அந்தக் குழந்தையின் ஞானம், பகவானையும் கூட மகிழ்விக்கும். சிறந்த பக்தனாகவும், மேன்மையான ஞானம் பெற்றவனாகவும், பெரும் புகழ் படைத்தவனாகவும் அவன் திகழ்வான்‘.
இப்படி கச்யபர் கூறியதைக் கேட்ட திதியின் மனம் நிம்மதி யுற்றது. (திதிக்குப் பிறந்த இரு மகன்கள், ஹிரண்யாக்ஷனும், ஹிரண்யகசிபுவும். வராஹவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனையும், நரசிம்மாவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவையும் மஹாவிஷ்ணு அழித்தார். ஹிரண்யகசிபுவின் மகனாகிய பிரஹலாதன், மேலே குறிப்பிட்ட சிறப்புகளை எல்லாம் பெற்றவனாகத் திகழ்ந்தான்.)
திதி கர்ப்பம் தரித்திருந்தபோது –ப்ரும்ம தேவருடைய மனதின் தீர்மானத்தினால் தோன்றியிருந்த அவருடைய ‘மானஸபுத்திரர்‘கள், பற்றை அழித்தவர்களாகவும், ஆகாச மார்க்கமாகவே சஞ்சரிக்கிற தன்மை பெற்றவர்களுமாக திகழ்ந்து வந்தனர். சனகர் முதலான அவர்கள் ஒருமுறை, மஹாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, வைகுண் டம் சென்றார்கள்.
அங்கே இரண்டு துவாரபாலகர்கள் (வாயில் காப்போர்) பிரம்பு கொண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். பகவானை தரிசிக்கிற எண்ணத்திற்கு ஏற்பட்ட இந்தத் தடை, அந்த முனிகளை கோபமுறச் செய்தது.
துவாரபாலகர்களே! அந்த மஹாபுருஷனிடம் யார்தான் போகக் கூடாது? உங்கள் உள்ளத்தில் குடிகொண்டுள்ள கபடம்தான், மற்றவர்களிடத்தில் தவறு காண உங்களைத் தூண்டுகிறது. பக வானுக்கோ, இந்த மாதிரி பேத புத்தி சிறிதும் கிடையாது. நீங்கள் நல்ல அறிவை பெறுவதற்காகவே இதைச் சொல்கிறோம்–ஆசை, துவேஷம், கோபம் முதலியவை குடிகொண்டுள்ள பூலோகத்திற்கு நீங்கள் செல்வீர்களாக!
அந்த இரண்டு துவாரபாலகர்களும், தங்கள் தவறை உடனே உணர்ந்து, அந்த முனிகளிடம் மன்னிப்பு கோரினார்கள். அதற்குள் ளாகவே நடந்ததைத் தெரிந்து கொண்டு, மஹாவிஷ்ணு லக்ஷ்மி தேவியுடன் தனது பக்தர்களை நாடி அங்கே வந்துவிட்டார்.ஜயன், விஜயன் என்ற இரண்டு வாயில்காப்போரும், அவரிடம் மன்னிப்பு கோரினர். ‘என்னுடைய பக்தர்களுக்கு செய்யப்பட்ட அவமதிப்பு, எனக்கு செய்யப்பட்டதேயாகும். அதேபோல, என் னுடைய பணியாட்களினால் செய்யப்படுகிற தவறு, நான் செய்ததேயாகும். ஒருவனுடைய பணியாள் தவறாக நடந்து கொண் டால், அவன் யாரிடம் பணிபுரிகிறானோ அவனும் தவறாகவே பேசப்படுகிறான். பணியாளின் குற்றம், எஜமானைப் பாதிக்கிறது. என் பக்தர்களுக்கு, என்னுடைய கையே தவறு இழைத்தால் கூட, அந்தக் கையை நான் வெட்டி விடுவேன். ஆகையால் நீங்கள் இருவரும் செய்த தவறுக்கு, நீங்கள் தண்டனையை அனுபவித்துத் தான் தீர வேண்டும்‘ என்று அவ்விருவரையும் பார்த்துக் கூறிய மஹாவிஷ்ணு, தன்னுடைய பக்தர்களாகிய முனிகளிடம் பேசினார்:
இவர்கள் இருவரும் செய்த தவறுக்கு, சரியான பலனை அனுபவித்து, பின்னர் இவர்கள் என்னிடமே மீண்டும் சேரட்டும். இவர்களுடைய சாப காலம் முடிவதற்கு ஒரு கால நிர்ணயமும் நீங்கள் செய்தால், அது எனக்கு மகிழ்வு தரும்‘.
இவ்வாறு கூறிய மஹாவிஷ்ணுவை வணங்கி அந்த முனிகள், இவர்களுக்கு நீங்கள் என்ன விதிக்கிறீர்களோ, அதுவே சரியானதாக இருக்கும். இவர்களை நாங்கள் சபித்தது எங்களுடைய தவறு. ஆகையால் எங்களுக்கும் சரியான தண்டனையை அளியுங்கள்‘ என்று வேண்டி நின்றனர்.
மஹாவிஷ்ணுவோ, ‘நீங்கள் சபித்ததற்கான காரணத்தில் தவறு இல்லை. அந்த சாபம் என்னால் அளிக்கப்பட்டது என்றே கருதுங் கள். இவர்கள் பூவுலகில் என்னை பழிப்பவர்களாக இருந்து, என் நினைவாகவே இருந்து, என்னாலேயே அழிக்கப்பட்டு, என் னிடமே மீண்டும் வந்து சேரட்டும்‘ என்றார்.
பின்னர் அவர் ஜயன், விஜயன் என்ற அந்த இருவரிடமும் ஒரு விளக்கம் அளித்தார்: ‘முனிகளின் சாபத்தை என்னால் போக்கிவிட முடியும்.ஆனால், அப்படி அதைப் பயனற்றதாக்குவது முறையாக இருக்காது. தவிர, முன்பு ஒருமுறை லக்ஷ்மி தேவியையே நீங்கள் தடுத்தீர்கள். அப்போது லக்ஷ்மிதேவியே உங்களுக்கு இப்படி நேரிடும் என்பதைக் குறிப்பிட்டார். ஆகையால் பூவுலகில் பிறந்து, என்னை பணிந்து, என்னால் அழிக்கப்பட்டு, பாவம் நீங்கியவர் களாக என்னையே மீண்டும் அடைவீர்களாக!
அந்த ஜயன், விஜயன் ஆகிய இருவரும்தான், கர்ப்பமுற்றிருந்த திதிக்கு, ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற இரு மகன்களாகப் பிறந்தனர்.
இவ்வாறு ஹிரண்யாக்ஷனின் வரலாற்றையும், வராஹ அவதாரத் தில் அவனை விஷ்ணு அழித்ததையும் மைத்ரேயர், விதுரருக்கு எடுத்துரைத்தார்.