‘தேனீ, தான் சேகரித்த தேனை தானே முழுமையாக உண்டு
விடுவதில்லை; பிறருக்கும் தந்து விடுவதில்லை; சேகரித்து வைக்கிறது. அதை மனிதன் எடுத்துக் கொண்டு போய் விடு கிறான். பல மனிதர்கள், இது மாதிரியாக, தாங்களும் அனுபவிக் காமல், பிறருக்கும் கொடுக்காமல் செல்வத்தைச் சேர்த்து வைக் கிறார்கள். இறுதியில், அதை வேறொருவன் எடுத்துப் போய் விடுகிறான். தானும் அனுபவிக்காமல், மற்றவர்களுக்கும் உதவா மல் சேர்த்து வைப்பது பயனற்றது என்பதை, தேனீயைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வேடன் எழுப்புகிற குரலைக் கேட்டு மான் அசையாது நிற்கிறது; அப்போது அது வேடனால் கொல்லப்படுகிறது. காட்டில் வாழ்கிற ஸந்யாஸி, பாடல்கள் முதலியவற்றைக் கேட்டுக் கொண்டு, அதில் இன்பம் பெற்று காலத்தை கழிக்க முனைந்தால், வேடனின் குரலைக் கேட்டு பிரமித்து நிற்கிற மானுக்கு ஏற்படுவது போன்ற நாசம்தான் ஏற்படும்.
மீன், தூண்டிலில் உள்ள புழுவை ருசிக்க ஆவல் கொண்டு, சிக்கி, மரணம் அடைகிறது. நாக்கைக் கட்டுப்படுத்தாதவன் ருசியில் விருப்பம் கொண்டு, அதனால் கேட்டை அனுபவிப்பான். நாக்கை அடக்கி, மற்ற இந்த்ரியங்களையும் வென்று விட முயல்கிற விவேகிகள், உணவைப் பெரிதாக நினைப்பதில்லை. நாக்கை அடக்காமல், மற்ற இந்த்ரியங்களை வென்றுவிட நினைக்கிற வன் தோல்வியைத்தான் அடைவான். நாக்கைக் கட்டுப்படுத்தி னாலே, மற்ற இந்த்ரியங்களை வெல்வது எளிதாகி விடும்‘.
யதுவிற்கு பல விஷயங்களிலிருந்து, தான் கற்ற பாடத்தை விவரித்துக் கொண்டிருந்த அந்தணர், தனது அனுபவத்தைத் தொடர்ந்து கூறினார்.
பிங்களா என்று ஒரு தேவதாசி, விதேஹ நகரத்தில் வசித்து வந்தாள். அவளிடமிருந்தும் நான் சிறிது தெரிந்து கொண்டேன். ஒருநாள் இரவு நேரத்தில், அவள் வழக்கம்போல், நன்றாக அலங் காரம் செய்து கொண்டு, தன்னுடைய வீட்டின் வாயிற்படியில் நின்று தெருவில் போகிறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல செல்வந்தனாக காட்சியளிக்கிற மனிதன் யாராவது தெருவில் சென்றால், அவனை உள்ளே அழைத்துச் செல்வது அவளுடைய பழக்கம்.
அன்றும் அதே போல அவள் காத்திருந்தும், செல்வந்தன் யாரும் அவளுக்குக் கிட்டவில்லை. உள்ளே போவதும், வெளியே வந்து காத்திருப்பதுமாக இரவில் பாதி நேரத்தை அவள் கழித்து விட்டாள். அவள் முகம் வாடியது. ‘செல்வத்தின் மீது தான் வைத்துள்ள ஆசைதானே, இப்போது ஏற்படுகிற ஏமாற்றத்திற்கும், அதனால் விளைகிற மனத் துன்பத்திற்கும் காரணம்?” – என்று அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
அவள் மனம் மேலும் இது பற்றி சிந்தித்தது. ”துக்கம், பயம், தொல்லை – போன்றவற்றைத் தவிர, வேறு எதை இந்த மனிதர்கள் எனக்குத் தரப் போகிறார்கள்? இந்த சரீரம் என்கிற வீட் டில் என்ன இருக்கிறது? எலும்புகளால் ஆன தூண்களைக் கொண்ட இந்த வீடு – தோல், சதை, முடி, நகம் போன்றவைகளினால் கட்டப் பட்டதுதானே? மலம், சிறுநீர் போன்றவை இதில் நிரம்பியிருக் கின்றன. அப்படிப்பட்ட ஒரு சரீரம் கிடைக்காதா என்று, இரவில் பாதி நேரம் காத்து நிற்கிற என்னுடைய அறிவீனத்தை என்ன வென்று சொல்வது? இது என்ன வாழ்க்கை?’
‘இப்படி சிந்தித்த அவள், ஒரு உணர்வைப் பெற்றாள்: “மஹா விஷ்ணுவிற்கு என் மீதும் கருணை பிறந்திருக்கிறது. அதனால் தான் கெட்ட நடத்தையுள்ள என் மனதில் இன்று இப்படிப் பட்ட சிந்தனை தோன்றியுள்ளது. நான் அதிருஷ்டசாலி. அதனால் தான் பகவானின் உபகாரம் எனக்குக் கிட்டியுள்ளது. தெய்வத்தின் அருளால் கிடைத்த இந்த நல்லறிவை இழக்க நான் விரும்ப வில்லை. விஷய சுகங்களில் பற்றில்லாமல், மன வைராக்கியத்தை அடைந்து, ஆத்மாவை உணரப் போகிறேன்“.
இவ்வாறு நிச்சயித்துக் கொண்ட பிங்களா, கவலையற்று நிம்மதியாக உறங்கினாள். எவராவது செல்வந்தன் வர மாட்டானா என்று ஏங்கித் தவித்து, வீட்டின் உள்ளுக்கும், வெளிப்புறத்துக்கு, மாக அலைந்து கொண்டிருந்தபோது, தூக்கம் இல்லாமல் தவித்த அவள், இப்போது மயக்கம் தீர்ந்தவளாக, அமைதியைப் பெற்றாள்.
‘விஷய சுகங்களை நாடுவதும், ஆசைகளை வளர்த்துக் கொள் வதும் துன்பத்தைத்தான் தரும் என்பதையும், ஆசையை அறுப்பது பேரின்பத்தைத் தரும் என்பதையும், பிங்களையின் அனுபவத்தி லிருந்து நான் தெரிந்து கொண்டேன்‘.
யதுவிற்கு, அந்தணர் தனது அனுபவங்களைத் தொடர்ந்து கூறினார்: ‘குராரம் என்று ஒரு பறவை. இது தனது வாயில் மாமிசத்தைக் கவ்வியது. அதை விடாமல் தன்னிடமே வைத்துக் கொண்டிருந்த அந்தப் பறவையை, ஆகாரம் எதுவும் கிடைக்காத மற்ற சில பறவைகள் துன்புறுத்தின. அப்போது அந்தப் பறவை, அந்த மாமிசத்தைக் கீழே போட்டது. மற்ற பறவைகள், அதை துன்புறுத்துவதை விட்டு விட்டன; அதன் அருகில் கூட செல்ல வில்லை. தனக்கு எதன் மீது ஆசை உள்ளதோ, அதை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றே மனிதன் முனைகிறான்; இதனால் அவனுக்கு துன்பம்தான் கிட்டுகிறதே தவிர, இன்பம் கிடைப்பதில்லை; இதைப் புரிந்து கொண்டு, எந்த மனிதன் எதை யும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் இருக்கிறானோ, அவன் இன் புறுவான் – என்பதை அந்தப் பறவையிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன்.
சிறுவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் கவலையற்று இருந்தான். வீடு, வாசல்; மனைவி, மக்கள்; மானம், அவமானம்…. போன்ற பிரச்னைகள் அவனுக்கு இல்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டவன் எப்படி கவலையில்லாமல் இருக்கிறானோ, அதே போல எதுவும் தெரிந்து கொள்ளாதவனும் கவலையற்று இருக்கிறான்; கொஞ்சம் தெரிந்து கொண்டு, எல்லாம் தெரிந்தது போல நடந்து கொள்ள முனையும்போதுதான் கவலை பிறக்கிறது. சிறுவன் மனதில் களங்கமில்லை; அவனுக்குக் கவலையில்லை. களங்கம் இல்லாதவன் கவலையற்று இருப்பான் என்பதை, அவனைப் பார்த்து நான் புரிந்து கொண்டேன்.
‘சிறுமி ஒருத்தி, தன் வீட்டில் யாருமில்லாத சமயத்தில், தன்னை மணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் வீட்டுக்கு வந்திருந்த குடும்பத்தினருக்கு உணவு சமைப்பதற்காக, நெல்லைக் குத்தத் தொடங்கினாள். இதை வந்தவர்களுக்குத் தெரியாமல் செய்வது தான் கெளரவம் என்று நினைத்து, அவள் நெல் குத்தத் தொடங்கிய போது, அவள் தன்னுடைய கையில் அணிந்திருந்த வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதி சப்தம் எழுப்பின.
இந்த சப்தத்தை அடக்குவதற்காக, அந்தப் பெண் அந்த வளை யல்களை ஒவ்வொன்றாக உடைத்தாள். ஒவ்வொரு கையிலும், இரண்டு இரண்டு வளையல்களே மீதமிருந்த நிலையில், அவள் நெல் குத்துவதை மீண்டும் தொடங்கினாள். அவையும் கூட ஒன் றோடு ஒன்று உரசி சப்தம் எழுப்பின. உடனே ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு வளையலை உடைத்தாள்; இப்போது ஒரு கையில், ஒரு வளையல் என்றிருந்த நிலையில் நெல் குத்தினாள். எந்த சப்தமும் வரவில்லை. அநேகர் உள்ள இடத்தில் வசித்தால் மோதல் வரும்; இருவராக ஒரு இடத்தில் இருந்தாலும் வாக்குவாதங்களுக்கு வாய்ப்பு உண்டாகும். சிறுமியின் கைவளையல் போல, தனித்து, ஒருவனாக மட்டுமே உலகில் சஞ்சரிப்பதுதான், ஞானி கடைப் பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்பதை, அந்தப் பெண்ணிட மிருந்து தெரிந்து கொண்டேன்.
அம்பை கோணல் இல்லாமலும், கூர்மையாகவும் செய்ய முனைகிற தொழிலாளியின் அருகில் எந்த சப்தம் எழுந்தாலும், அவன் காதுகளில் அது விழுவதில்லை. தன் காரியத்திலேயே அவன் முனைப்பாக இருக்கிறான். பல திசைகளில் செல்கிற மனதைக் கட்டுப்படுத்தி, முயற்சியின் மூலமாக அதை ஒருமுகப் படுத்த வேண்டும்; இப்படித் திகழ்பவனுக்கு வெளியில் நடப்பது எதைப் பற்றியும் கவலை இருக்காது – என்பதை அம்பு செய்யும் அந்தத் தொழிலாளியிடமிருந்து தெரிந்து கொண்டேன்.
‘பாம்பு விஷமுள்ளதா, அல்லது விஷமற்றதா என்பது அதைப் பார்த்தவுடன் தெரிந்து விடுவதில்லை; அது தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை; அது தனியாகவே நட மாடுகிறது. முனிவனும் இதே போல, தான் எத்தன்மையுடையவன் என்பதை பறைசாற்றிக் கொண்டிராமல், ஓரிடத்தில் தங்காமல், தனியாக ஸஞ்சரிக்க வேண்டும். இதை பாம்பினிடமிருந்து நான் புரிந்து கொண்டேன்.
பட்டுப்பூச்சி, தானே ஒரு வலையைப் பின்னுகிறது; பின்னர் தானே அதை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு விடுகிறது. பரமாத்மா இப்படித்தான், ஜகத்தை சிருஷ்டி செய்து, பின்னர் அதைத் தனக்குள்ளேயே இழுத்துக் கொண்டு விடுகிறான். இந்த உண் மையை பட்டுப்பூச்சி எனக்கு உணர்த்தியது.
‘குளவி, புழுவின் கூட்டிற்கு வெளியே இருந்து, சப்தித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்டு, கூட்டினுள்ளே உள்ள புழு, இந்த எண்ணத்திலேயே திளைக்கிறது. இப்படி குளவியை நினைத்து நினைத்து, அந்தப் புழு குளவியாகவே மாறுகிறது. மனிதன் பயத்தினாலோ, பகையினாலோ உந்தப்பட்டு, ஒன்றையே மனதில் நினைத்துக் கொண்டிருந்ததால், அவனும் அது போலவே மாறி விடுவான் என்ற உண்மையை குளவி எனக்கு உணர்த்தியது‘.
இவ்வாறு கூறிய அந்தணர், ‘இப்படிப் பல விஷயங்களிலிருந்து உண்மைகளைப் புரிந்து கொண்ட நான், என்னுடைய சரீரத்திட மிருந்தும் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்‘ என்று கூறி மேலும் தொடர்ந்தார்.
‘பல பெண்களை மணம் செய்து கொண்டவனை, அந்தப் பெண்கள் ஆளுக்கு ஒரு திசையில் இழுப்பதுபோல, மனிதனை அவனுடைய இந்த்ரியங்கள் இழுக்கின்றன. ருசிக்காக, நாக்கு ஒரு பக்கம் இழுக்கிறது; தாகம் ஏற்பட்டு, தொண்டை ஒருபுறம் அவனை இழுக்கிறது; பசியினால், வயிறு ஒரு பக்கம் இழுக்கிறது; வாசனை யினால் கவரப்பட்டு, மூக்கு ஒருபுறம் இழுக்கிறது; அழகைக் கண்ட கண் ஒருபுறம் இழுக்கிறது…. உடலின் பல இந்த்ரியங்களினால் இப்படிப் பல பக்கங்களில் இழுக்கப்பட்டவனாக மனிதன் அல் லாடுகிறான். ருசி, பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர், உடல் இன்பத்திற்கு பெண் சேர்க்கை என்பனவெல்லாம் மிருகங்களுக் கும் இருக்கின்றன; அதில் மனிதனுக்கு என்ன உயர்வு? மிருக ஜென்மத்திலும் கிட்டுகிற இதையெல்லாம் ஒதுக்கி, வைராக் கியத்தைப் பெற்று, உயர்வு பெறும் வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே உண்டு. அதை அவன் நழுவ விடக் கூடாது’.
இவ்வாறு தான் கற்றதையெல்லாம் அந்த அந்தணர், யதுவிற்கு விவரித்த நிகழ்ச்சியை, கிருஷ்ணர் உத்தவருக்கு எடுத்துச் சொன் னார். கிருஷ்ணரின் உபதேசம் மேலும் தொடர்ந்தது.