ஸ்ரீமத் பாகவதம் – 19

உத்தவருக்கு உபதேசம் செய்து முடித்த கிருஷ்ணர், அவரை பத்ரிகாச்ரமம் சென்று, அங்கே மரவுரி அணிந்து, தன்னையே நினைத்து தியானம் செய்யுமாறு பணித்தார். உத்தவர், கிருஷ்ணரின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு, பத்ரிகாச்ரமம் சென்று, தவம் செய்து, பகவானையே அடைந்தார்.

இந்த விவரத்தைக் கூறிய சுகரைப் பார்த்து, பரீக்ஷித் மன்னன், தனது சரீரத்தை பகவான் விட்டது எவ்வாறு?’ என்று கேட்க, சுகர் அந்த விவரங்களை வர்ணிக்கத் தொடங்கினார்.

துவாரகையில் பல துர்நிமித்தங்கள் தோன்றியதை கிருஷ்ணர் கவனித்தார். பெரும் நாசம் விளைகிற நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் உணர்ந்து, ‘யாதவ குலத்திற்கு, ரிஷிகள் இட்ட சாபம் பலிக்கும் நேரம் வந்து விட்டது. வயதில் முதியவர்களும், பெண்களும்,குழந்தைகளும் சங்கத்வாரம் என்ற இடத்திற்கு செல்லட்டும். மற்றவர்கள் ப்ரபாஸம் எனும் புனித ஸ்தலத்திற்குச் செல்வோம்என்று யாதவர்களிடம் கூறினார்.

(சாபம் பலிக்கும் நேரம் வந்து விட்டது என்று கிருஷ்ணர் குறிப்பிட்டது, யாதவர்கள் தாங்களாகவே தேடிக் கொண்ட வினை. சில முனிவர்களும், நல்லோர்களும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்தபோது, யாதவர்கள் அவர்களை கேலி செய்து வேடிக்கை பார்க்கும் விபரீத எண்ணத்தைக் கொண்டார்கள். தங்களில் ஒருவனுக்கு பெண் வேடமிட்டு, அவன் வயிற்றில் துணி மூட்டையைக் கட்டி வைத்து, அந்த ரிஷிகளின் முன் அவனை நிறுத்திய யாதவர்கள், ரிஷிகளைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டனர்: ”நீங்கள் எல்லாம் பெரிய மஹான்கள். இந்தப் பெண்ணுக்கு, என்ன குழந்தை பிறக்கும் என்பதை உங்கள் சக்தியைப் பயன்படுத்தி, நீங்கள் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவளுக்கு பிறக்கப் போவது ஆணா, பெண்ணா? எது பிறக்கும்?”

இப்படி அவர்கள் கேட்டவுடன் ரிஷிகள் கோபம் கொண்டு, ”உலக்கை பிறக்கும். அந்த உலக்கையால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு, உங்கள் குலம் பெரும் அழிவைச் சந்திக்கும்என்று சாபமிட்டனர். விஷமம் செய்து மகிழ்ச்சியுற நினைத்த யாதவர்கள் கலக்கமுற்றனர். ரிஷிகள் கூறியபடியே, பெண் வேடம் தரித்தவன் வயிற்றிலிருந்து ஒரு உலக்கை வெளியாயிற்று. “இதனால் நாசம் விளையுமேஎன்று அஞ்சிய யாதவர்கள், அதை உடைத்து பொடி செய்து தண்ணீரில் விட்டனர். அந்த தண்ணீர் பாய்ந்த இடத்தில் கோரைப்புல் முளைத்தது.)

கிருஷ்ணர் கூறியபடியே, சாபம் பலிக்கும் நேரம் வந்தது. அந்நிலையில் யாதவர்களிடையே ஒரு சாதாரண விஷயத்தில் வாக்குவாதம் ஆரம்பித்தது. அது முற்றி சண்டையாகியது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கோரைப்புல் ஒவ் வொன்றும் ஒரு உலக்கையாகவே மாறியது. அதைப் பயன்படுத்தி யும் யாதவர்கள் பரஸ்பரம் தாக்கிக் கொண்டார்கள்.

நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், தந்தை, மகன்என்ற எல்லா உறவுகளையும் மறந்து யாதவர்கள் ஒருவரையொருவர் பல ஆயுதங்களால் தாக்கி, உலக்கைகளாக மாறிய கோரைப்புல்லாலும் தாக்கிக் கொண்டு, நாசமாவதைக் கண்ட கிருஷ்ணரும், பலராமரும், அவர்களை சண்டையிட வேண்டாம் என்று தடுக்க முயன்றனர். ஆனால் அம்முயற்சி பலிக்கவில்லை. யாதவர்கள் பெரும் அழிவை எய்தினர். இந்த அழிவும் கிருஷ்ணர் உண்டாக்கியதுதான். பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்திருந்த அவர், யாதவர்களின் அழிவையும் திட்டமிட்டார். அதுவுமின்றி அவர்கள் பெற்ற வெற்றிகளால் அவர்களுக்கு அகந்தை உண்டாகி, தீய வழிகளையே நாடுகிற சுபாவம் தோன்றும் என்பதை உணர்ந்து, அதைத் தடுக்கவும் கூட, ஒரு பேரழிவு தேவை என்று கிருஷ்ணர் நினைத்தார். இந்தக் காரணங்களினால்தான், ரிஷிகள் சாபத்திலிருந்து தொடங்கி, யாதவர்கள் அழிவு வரை பல நிகழ்ச்சிகளும் நடந்தன.

இதன் பின்னர் பலராமர், ஸமுத்திரக் கரையில் அமர்ந்து தியானம் செய்து, மேல் உலகம் சென்றார். கிருஷ்ணரோ ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அவருடைய இடதுபாதம், வலது தொடையின் மீது வைக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில், ஜரன் என்ற பெயருடைய ஒரு வேடன் அந்தப் பகுதியில் உலவிக் கொண்டிருந்தான். வேட்டையாடுவதற்காக மிருகங்களை அவனுடைய கண்கள் தேடிக் கொண்டிருந்தன. அப்போது அவன் பார்வையில், கிருஷ்ணரின் இடதுபாதம் பட்டது. அவன் நின்ற இடத்திலிருந்து, அதைப் பார்த்த அவன், அது ஒரு மானின் முகம் என்று நினைத்து, அதைக் குறி வைத்து, ஒரு அம்பை எய்தான். அந்த அம்பின் நுனியில், யாதவர்கள் அடித்துக் கொண்டு அழிவதற்கு பயன்பட்ட உலக்கைகளின் துகள் ஒட்டிக் கொண் டிருந்தது.

அம்பை எய்த வேடன், மான் வீழ்ந்தது என நினைத்து அதை எடுத்துப் போவதற்காக, அது இருந்த மரத்தின் சமீபம் வந்து பார்த்தபோது, தன்னால் அடிக்கப்பட்டது மான் அல்ல என்பதை யும், கிருஷ்ணரைத்தான் தனது அம்பு தாக்கியது என்பதையும் உணர்ந்து அதிர்ச்சியுற்றான்.

செய்வதறியாது திகைத்த வேடன், கிருஷ்ணரின் அருகில் சென்று, அவரை நமஸ்கரித்து, “ப்ரபுவே! என்னை மன்னியுங்கள். நான் பெரும் பாவம் செய்து விட்டேன். என்னுடைய குற்றத் தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இல்லைஎன்னை தண்டி யுங்கள்என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டான். கிருஷ்ணர்,நீ பயப்பட வேண்டாம். என்னுடைய எண்ணத் தின்படி எது நடக்க வேண்டுமோ, அதுதான் நடந்திருக்கிறது. நான் திட்டமிட்டதை, நீ செய்திருக்கிறாய். அவ்வளவுதான். ஆகையால் நீ வருந்தத் தேவையில்லை. பெரும் புண்ணியங்களைச் செய்த வர்கள் அடைகிற ஸ்வர்க்க பதவியை, நீ எய்துவாய்!” என்று கூறி, அந்த வேடனை அனுக்ரஹித்தார்.

அந்த வேடன், கிருஷ்ணரை மும்முறைகள் வலம் வந்து நமஸ்கரிக்க, அப்போது அங்கே ஒரு தேவலோக விமானம் வந்து அவனை ஏற்றிச் சென்ற அதிசயம் நடந்தது.

இதன் பின்னர் கிருஷ்ணர் இருக்கும் இடம் தேடி வந்த அவருடைய தேரோட்டியாகிய தாருகன் வந்து, அவரை நமஸ் கரித்து, “உங்களைக் காணாமல், எனக்கு எல்லாமே இருட்டாகத் தான் தெரிகிறது. நான் திக்குதிசை அறியவில்லை. மனதில் நிம்மதி யில்லைஎன்று கூறினான்.

அவன் அவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே, கருடனைக் கொடியாகக் கொண்ட கிருஷ்ணரின் ரதம், ஆகாயம் சென்றது. சக்கரம் முதலிய கிருஷ்ணரின் ஆயுதங்களும், அந்த ரதத்தைப் பின்தொடர்ந்து ஆகாய மார்க்கமாகச் சென்றன.

வியப்புற்று நின்ற தாருகனைப் பார்த்து, ‘நீ துவாரகைக்குச் செல். அங்கே எஞ்சியிருக்கிறவர்களிடம், பலராமன் மறைந்ததை யும், யாதவர்கள் சந்தித்த பேரழிவையும், என்னுடைய முடிவையும் செய்திகளாகத் தெரிவிப்பாயாக! துவாரகையில் இனி யாரும் வசிக்க வேண்டாம். அந்நகரம் கடலில் மூழ்கப் போகிறது. பெண்களும், வயோதிகர்களும், குழந்தைகளும் இந்திரப்பிரஸ்தம் செல்ல வேண் டும் என்று நான் கூறியதாக, எல்லோரிடமும் சொல்வாயாக! அர்ஜுனன் வந்து, பாதுகாப்பாக இருந்து, அவர்களை அழைத் துச் செல்வான். தாருகனே! நடந்தவை எல்லாம் என்னுடைய மாயையினால் ஏற்பட்ட நிகழ்ச்சிகள், என்று புரிந்து கொண்டு, ஞானத்தை எய்துகிற பாதையைப் பின்பற்றி, அமைதியை அடை வாய்!” என்று கூறி, அவனை அனுப்பி வைத்தார்.

இப்படி கிருஷ்ணர் சொன்ன மாதிரியே அர்ஜுனன் வந்து, யாதவ பெண்மணிகளையும், குழந்தைகளையும், வயோதிகர்களை யும் அழைத்துக் கொண்டு, இந்திரப்பிரஸ்தம் செல்கிற நிகழ்ச்சி மஹாபாரதத்தில் விவரிக்கப்படுகிறது. அம்மாதிரி யாதவர்களை அர்ஜுனன் அழைத்துச் சென்றபோது, கொள்ளைக்காரர்கள் சிலர், வழிமறித்து, அவர்களை ஹிம்ஸித்து, யாதவப் பெண்மணிகளிடம் இருந்த நகை முதலியவற்றையெல்லாம் அபகரிக்கிறார்கள்; அர்ஜுனன் பலவாறாக அவர்களுடன் சண்டையிடுகிறான். ஆனால் அவர்களை வெல்ல அவனால் இயலவில்லை. இறுதியில் தனது பிரசித்தி பெற்ற காண்டீபத்தையே அர்ஜுனன் பயன்படுத்துகிறான். அதுவும் பயனற்றுப் போக, கொள்ளையர்களின் தாக்குதலுக்குப் பின் எஞ்சியவர்களை அழைத்துக் கொண்டு, அர்ஜுனன் செல் லும்போது, வழியில் வியாசர் எதிர்ப்படுகிறார்.

அவரிடம் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறிய அர்ஜுனன், ‘பாரதப் போரில், பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா, துரி யோதனன்என்று பல மஹா வீரர்களை எதிர்த்து என் திறமை யைக் காட்டினேன். இப்போது சாதாரண கொள்ளைக் கூட்டம் ஒன்றை என்னால் விரட்டி அடிக்க முடியாமற் போனதே! இது ஏன்?’ என்று மனம் வருந்தி கேட்டான்.

வியாசர், ‘காலம். அதுதான் காரணம். உனக்கு காலம் இப்போது பயன்படவில்லைஎன்று பதில் சொன்னார்.

எவ்வளவுதான் திறமை படைத்தவனாக இருந்தாலும், காலம் ஒத்துழைக்கவில்லை என்றால், ஒன்றையும் சாதிக்க முடியாது என்கிற உண்மையை விளக்குகிற நிகழ்ச்சி இது.)

தாருகனை அனுப்பி விட்டு, கிருஷ்ணர் வைகுண்டம் செல் வதைக் காண்பதற்காக, பார்வதியுடன் பரமேஸ்வரன், ப்ரும்ம தேவன், இந்திரன் முதலான பலரும், ஸித்தர்களும், கந்தர்வர் களும், ரிஷிகளும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், அப்ஸரஸ்களும் வந்து கூடினார்கள். புஷ்பங்களைப் பொழிந்தார்கள். அவர்களு டைய விமானங்களினால் சூழப்பட்ட ஆகாயம்,பிரமிப்பைத் தருகிற வகையில் காட்சியளித்தது. பகவான் தனது உலகை அடைந்தார். இதைக் கூறிய சுகர், பரீக்ஷித்தைப் பார்த்து, ‘அரசனே! பகவான் இவ்வுலகைப் படைத்து, அதில் தானும் பிரவேசித்து, இறுதியில் அதை அழிக்கவும் செய்கிறார். இப்படி பகவான் அவதாரம் எடுப்பதும், பின்னர் அது முடிந்து தனது உலகம் திரும்புவதும், ஒரு நாடகக் கலைஞன் வேடமிட்டு நடித்து விட்டு, பின் அந்த வேஷத் தைக் கலைத்து விடுவது போலத்தான்! அஸ்வத்தாமா எய்த ப்ரம்மாஸ்திரத்தினால் கர்ப்பத்திலேயே பொசுக்கப்பட்ட உன்னை, உயிர்ப்பித்தது பகவானே! அப்படிப்பட்டவருக்கு தன்னுடைய சரீ ரத்தைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய காரியமல்ல. ஆனால், அந்த சரீரத்தினால் ஆக வேண்டியது இனி எதுவுமில்லை என்பதால், பகவான் அதை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தார்அவ்வளவு தான்“.

இப்படி பரீக்ஷித்திற்கு உண்மையை உணர்த்திய சுகர், இதைத் தொடர்ந்து கலியுகத்தில் உண்டாகப் போகிற மன்னர்களின் வரிசை களையும், உலகமும் மனிதர்களும், கலியுகத்தில் இருக்கப் போகிற நிலையையும் விவரித்தார்.