அறிவுரைகளை ள மூன்று வகைகளைச் சார்ந்தவைகளாகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். ஒன்று – ‘ப்ரபுஸம்மிதம்‘; இது ஒரு அதிகாரி இடுகிற கட்டளைகள் போன்றவை; வேதங்கள் கூறுகிற உபதேசங்கள் இவ்வகையானவை. இரண்டு – ஸுஹ்ருத் ஸம்மிதம்; இவை ஒரு நெருங்கிய நண்பன் காட்டுகிற நல்வழிப் பாதை; உயர்ந்த நிலையை அடைந்துள்ள ஞானிகள் கூறுகிற உபதேசங்கள் இவ்வகையானவை. மூன்று – காந்தா ஸம்மிதம்; நிர்பந்திக்காமல், மேல் நிலையிலிருந்து கொண்டு உபதேசமும் செய்யாமல், பேச்சுவாக்கில், ஒரு மனைவி தன் கணவனுக்கு சரியான வழியை சுட்டிக் காட்டுவது போல, கூறப்படுகிற நன்னெறிகள்; இதி ஹாஸங்கள், புராணங்கள் போன்றவை கூறுகிற அறிவுரைகள் இவ்வகையானவை.
புராணங்கள் பற்றிய சுருக்கங்களை இத்தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் நாம் பார்த்தோம். புராணங்கள் பழமையானவை. புராணம் என்ற வார்த்தைக்கே, பழமையானது என்பது பொருள். வேதங்களிலேயே கூட புராணங்கள் பற்றிய குறிப்புகள் வரு கின்றன. இவற்றில், ஒரு மைய வரலாறு கூறப்படுவதில்லை; ஒவ்வொரு புராணத்திலும் பல நிகழ்ச்சிகள் வர்ணிக்கப்படு கின்றன. அத்துடன், உபநிஷத்துக்களை உள்ளடக்கிய வேதங்கள் கூறுகிற தத்துவங்களிலும் பல, புராணங்களில் விரிவாக இடம் பெறுகின்றன. இதிஹாஸங்கள், இதிலிருந்து மாறுபட்டவை. இவை ஒரு முக்கியமான வரலாற்றை மையமாகக் கொண்டு, அது தொடர்பான நிகழ்ச்சிகளைக் கூறுபவை. அவற்றில் வருகிற உபகதைகள் மைய வரலாற்றின் போக்கைத் தடுத்து விடாது. புராணம் என்பதற்கு பழையது என்ற பொருள் உள்ளது போல, இதிஹாஸம் என்ற சொல்லிற்கு ‘இவ்வாறு நடந்தது‘ என்பது பொருள். அதாவது, இவை சாத்திரங்கள். ராமாயணமும், மஹாபாரதமும் ஹாஸங்கள்.
ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டையுமே சற்று விரிவாக, இரு புத்தகங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இருந் தாலும், ஹிந்து மஹா சமுத்திரம் – என்கிற இந்தத் தொகுப்பில், அந்த இரண்டு இதிஹாஸங்கள் பற்றிய ஒரு பார்வை அவசிய மாகிறது. இல்லாவிடில், இந்த ஸமுத்திரத்தின் விரிவையும், ஆழத்தையும், அதன் பிரமிக்கத்தக்க கம்பீரத்தையும், நாம் முழுமையாகப் பார்க்கவில்லை என்று ஆகிவிடும். ஆகையால், இவ்விரு இதிஹாஸங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.
மஹாபாரதம் நமது சிந்தனையுடன் பேசுகிறது; ராமாயணம் நமது இதயத்துடன் உறவாடுகிறது. இந்த இரண்டு இதிஹாஸங் களிலுமே தர்ம நியாயங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன; விதியின் வலிமை வலியுறுத்தப்படுகிறது; தர்மம் என்பது எவ்வளவு சூட்சுமமான விஷயம் என்பது விளக்கப்படுகிறது; யுத்த தர்மம் எத்தகையது என்பது விவாதிக்கப்படுகிறது; அரசனின் கடமை: கள் பட்டியலிடப்படுகின்றன….
இப்படிப்பட்ட ஒற்றுமை இவற்றிற்கு இடையில் இருந்தாலும், வித்தியாசமும் இருக்கிறது. சூது, தந்திரம், சதி, அரசியல் யுக்தி… போன்றவற்றிற்கு மஹாபாரதத்தில் இருக்கிற இடத்தை ராமா யணத்தில் காண முடியாது. மாறாக, பாசம், தியாகம், சுயநல மில்லாத தன்மை, பெற்றோரிடம் காட்டப்பட வேண்டிய மரி யாதை, கற்பின் உயர்வு போன்ற விஷயங்கள் ராமாயணத்தில் பெறுகிற முக்கியத்துவத்தை, மஹாபாரதத்தில் பெறவில்லை.
அர்த்தசாஸ்திரம் கூட விவரிக்காத அளவிற்கு, தந்திரமான வழிமுறைகள் மஹாபாரதத்தில் இரு தரப்பினராலும் கையாளப் படுகின்றன. மிகப் பெரிய துறவி கூட செய்யாத தியாகங்களை, ராமாயண பாத்திரங்கள் செய்கின்றன. மஹாபாரதம் வெற்றியை நோக்கி, அதையே குறியாக வைத்துச் செல்கிற வழிமுறையை வர்ணிக்கிறது. ராமாயணம், தன்னலம் கருதாமல், தர்மத்தின் பாதையிலேயே செல்லும் நெறியை வர்ணிக்கிறது. ஒன்று – வெல் லும் வழி; மற்றொன்று வாழும் வகை.
இந்த வித்தியாசங்களின் காரணம், இவை நடைபெற்ற காலங்களாகக் கூட இருக்கலாம். ராமாயணம், த்ரேதா யுகத்தில் நடந்தது; மஹாபாரதம், த்வாபர யுகத்தில் நடந்தது; சொல்லப் போனால் கலி ஆரம்பிக்கிற காலம் நெருங்கிவிட்ட சமயத்தில் நடந்தவையே மஹாபாரத நிகழ்ச்சிகள். இதனால் கூட, தர்ம நியாயங்களுடன் சேர்ந்து, வெற்றி காணும் வேகமும், மஹா பாரதத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு காரணமாகி விடுகின்றன. ஸத்வ குணம் ஓங்கியிருந்த காலம் ராமாயண காலம்; ரஜோ குணமும், ஸத்வ குணத்துடன் கலந்து விட்ட காலம் மஹாபாரத காலம் என்றும் இதைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
பூபாரத்தைக் குறைப்பதற்காக, மஹாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். மஹாபாரதத்தில் அவர் கௌரவ, பாண்டவர்களை கொண்டு, இந்த அவதார காரியத்தை நிறைவேற்றினார். ராமா யணத்திலோ, ராவண ஸம்ஹாரத்திற்காகத் தோன்றிய ராமர், தானே முன்னின்று அதைச் செய்கிறார். அதனால், தெய்வம் மனிதனாகவே வாழ்ந்த வரலாற்றைக் கூறுவது ராமாயணம் அதனால்தான் ராமரின் செயல்பாடுகள் அனைத்தும், ஒரு மனிதனின் செயல்களாகவே பார்க்கப்பட்டு, இன்றும் ஆராயப்படுகின்றன. சில ரிஷிகளும், வேறு சிலரும், ராமர் விஷ்ணுவின் அவதாரமே என்பதை உணர்ந்திருந்தனர். ஆனால் தன்னிடமே இது சுட்டிக்காட்டப் படுகிறபோது, ராமர், ‘தசரதரின் மகனாகிய ராமன் என்கிற பெயரையுடைய ஒரு மனிதனாகவே என்னை நான் உணர்கிறேன்‘ என்று கூறுகிறார்.
தேவர்களாலோ, அஸுரர்களாலோ, வேறு யாராலோ கொல்லப்பட முடியாது; மனிதனால் மட்டுமே அழிவு உண்டு என்ற வரத்தைப் பெற்றவன் ராவணன். அதனால்தான், விஷ்ணு மனிதனாக அவதாரம் செய்து, மனிதனாக வாழ்ந்து, மனிதனாகவே நின்று ராவண வதத்தைப் புரிந்தார்.
இப்படி மனிதனாகவே வாழ்ந்ததால், மனித பலவீனங்கள் ஒரு சிலவற்றை, ராமரும் காட்டியுள்ளார். சோதனைகளைத் தாங்க முடியாமல், அவர் பட்ட துயரம்; துரோகத்தைச் சகிக்க முடியா மல் அவருக்கு ஏற்பட்ட கோபம்; எடுத்துக் கொண்ட காரியம் நிறைவேறுமா என்பது பற்றிய அவருடைய சந்தேகம்; முயற்சிகள் பலிக்காத போது அவரிடம் காணப்பட்ட மனச் சோர்வு….. போன்றவை மனிதர்களுக்கே உரிய குணாதிசயங்கள். இப்படிப் பட்ட அனுபவங்களை ராமரும் பெற்றார்; ஆனால் அவற்றை வென்று, அவற்றைக் கடந்து, வியக்கத்தக்க வீரத்தையும், பிரமிக்கத்தக்க போர்த் திறனையும், மனதை உரைய வைக்கிற உறுதியையும், வேறொருவரிடமும் காண முடியாத பெருந் தன்மையையும், வேறு பல உயர்ந்த குணங்களையும் காட்டி நிற்கிறார் ராமர். அதனால்தான் அவர் புருஷோத்தமன் என்று போற்றப்படுகிறார்.
இதிஹாஸங்களிலும், புராணங்களிலும் உள்ள ஒரு நேர்மை யான அணுகுமுறை ராமாயணத்திலும் காணப்படுகிறது. இவற்றில் எல்லாம், சரித்திர நாயகனை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், மற்றவர்களைத் தாழ்த்திக் காட்டுகிற அணுகுமுறை கிடையாது.உலகில் உள்ள பல மத நூல்களிலும் சரி, சரித்திர நூல் களிலும் சரி, இந்த பலவீனம் காணப்படும். உயர்ந்தவர் ஒருவரைப் பற்றிச் சொல்லப் புகும்போது, அவருக்கு எதிரானவர்களைத் தாழ்த்தி, அவர்களிடம் நல்ல குணங்களே இல்லையென்று இந்த நூல்கள் எல்லாமே வர்ணிக்கும். ஆனால் ஹிந்து மத இதிஹாஸங் களிலும் சரி, புராணங்களிலும் சரி, நாயகன் சற்று சறுக்கிய நிகழ்ச்சி களும் கூறப்படும்; அவரை எதிர்த்தவர்களிடம் இருந்த நல்ல அம்சங்களும் வர்ணிக்கப்படும். இது ஹிந்து மதம் தொடர்பான நூல்களுக்கே உள்ள நேர்மைத் துணிவு. இந்த அணுகுமுறையை ராமாயணத்திலும் பார்க்கலாம். ராவண ஸம்ஹாரம்தான், சரித்திர நாயகனாகிய ராமர் மேற்கொண்ட கடமை. ராவணன் பெண்கள் விஷயத்தில் பலவீனம் உடையவன். அவனுடைய ஆட்களால், ரிஷிகள் ஹிம்ஸிக்கப்பட்டனர். ஸீதை யின் மீது மோகம் கொண்டு, அவளை அவன் கடத்திச் சென்றான். இப்படிப்பட்டவனைப் பற்றிக்கூட, பல நல்ல விஷயங்களை ஆங்காங்கே எடுத்துக்கூற வால்மீகி தவறவில்லை.
‘சாஸ்திரங்களைக் கற்றறிந்தவன்; உலக நடப்புகளையும் நன்றாகவே உணர்ந்து கொண்டவன்; தர்மத்தை எடுத்துரைப்பதில் திறமை வாய்ந்தவன்; தேவர்களுக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்றவன்; ராஜதர்மத்தை நுட்பமாக அறிந்தவன்…’ என்றெல்லாம் ராவணன் போற்றப்படுகிறான். அது மட்டுமல்ல ஹனுமான் கட்டப்பட்டு, ராவணன் முன்பு கொண்டு போய் நிறுத்தப்படுகிற போது, இலங்காபுரி மன்னனைப் பார்த்து, அவருக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. ஹனுமான் வியந்து இவ்வாறு நினைக்கிறார்: ‘என்ன அழகு! இந்த முகம் எடுத்துக்காட்டுகிற மதிநுட்பம்தான் எத்த கையது! இந்தக் கண்களில் தெரிகிற துணிவுதான் எப்பேர்ப்பட்டது! என்ன வீரம்! மங்கலம் பொருந்திய ஸகல லட்சணங்களும் அமையப் பெற்ற, இப்படி சிறப்புடன் திகழ்கிற, ஒரு ராட்சஸ மன்னனா! இவன் மட்டும் நன்னடத்தை உடையவனாக ருந் திருந்தால், தேவர்களின் உலகத்தையே ஆண்டிருப்பானே! இந்திரன் உட்பட எல்லா தேவர்களையும் காப்பாற்றக் கூடியவனாக இவன் திகழ்கிறானே! இவன் நினைத்தால், பூமி முழுவதையுமே ஒரு ஸமுத்திரமாக்கி விடுவான் போலிருக்கிறதே!’
இப்படி ராவணனைப் பார்த்து, ஹனுமார் மட்டும்தான் வியந்தார் என்பதில்லை. யுத்த களத்திற்கு ராவணன் வந்தபோது, அவனைப் பார்த்த ராமர், விபீஷணனிடம் சொல்கிறார் : அரக்கர் தலைவனாகிய ராவணனுக்குத்தான் என்ன தேஜஸ்! அவனிட மிருந்து வீசுகிற ஒளியின் காரணமாக, அவனைப் பார்ப்பது, சூரியனைப் பார்ப்பது போல் கடினமாக இருக்கிறதே! அந்த ஒளி காரணமாக, அவனை என்னால் முழுமையாகப் பார்க்கவும் இயல வில்லையே! தேவர்களுக்கும் கூட இப்படி ஒளிவீசுகிற சரீரம் இருக்குமா என்பது சந்தேகமே! அரக்கர்கள் சூழ அவன் வருவதைப் பார்க்கும்போது, மரணமே நகர்ந்து வருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறதே!
இந்த அளவிற்கு – அவதார புருஷனே மலைத்து நின்றான் என்று கூறுகிற அளவிற்கு ‘வில்லனை’ வர்ணிக்கிற துணி உலகின் வேறு எந்த நூலுக்கு இருக்கும்? இது இதிஹாஸங்கள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றில் காணப்படுகிற ஒரு பெரும் சிறப்பு என்பதில் சந்தேகமில்லை. கொடியவனிடம் காணப்பட்ட சிறப்புகளையும் கூறி, அவற்றையும் மீறித்தான் அவனுடைய தீய குணம் காரணமாக அவன் அழிக்கத் தக்கவன் ஆனான் என்று கூறுகிற உண்மைப் பற்று இந்த நூல்களில் எல்லாம் இருக்கிறது.
இவைகள் எல்லாம் வெறும் கதைகளாக இருந்திருந்தால், ‘வில்லன்’ இவ்வாறு போற்றப்பட்டிருக்க மாட்டான். எந்தக் கதாசிரியரும், தன்னுடைய கதாநாயகனைத்தான் உயர்த்திக் காட்டு வாரே தவிர, அவனுடைய எதிரியின் சிறப்புகளைப் பட்டியலிட மாட்டார். நடந்த நிகழ்ச்சிகள், வாழ்ந்த பாத்திரங்கள், உணர்ந்த அனுபங்கள் .. ஆகியவற்றைப் பேசுவதால்தான், இதிஹாஸங் களும், புராணங்களும் இப்படிப்பட்ட விஷயங்களைக் கூறுகின்றன. ஏனெனில் அவை செய்திகள்; கற்பனை அல்ல.
ராமாயணம் பற்றி, இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.