இதிஹாஸங்கள் – 5

ஆட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக, ஸீதையின் விஷயத்தில் கடுமை காட்ட வேண்டிய அவசியம் ராமருக்கு நேரிட்டது என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இதில் மட்டுமல்ல, பொதுவாகவே கூட ஆரம்பத்திலிருந்தே, அரச தர்மம், அரசனின் வார்த்தை, ஆட்சி முறைமை போன்றவற்றில் எல்லாம் ராமருக்கு முழுமையான ஈடுபாடு இருந்தது என்பதை, வால்மீகி ராமாயணத்தில், பல இடங்களில் நாம் பார்க்கிறோம்.

இதற்கு சரியான எடுத்துக்காட்டு, பரதனிடம் ராமர் கேட்ட கேள்விகள். ராமர், பட்டத்தை துறந்து, காட்டுக்குப் போன செய்தி கேட்டு துடித்துப் போன பரதன், அவரைச் சந்தித்து மீண் டும் நகருக்கு அழைத்து வந்து, அவரே அரச பதவியை ஏற்குமாறு செய்கிற எண்ணத்துடன் காட்டிற்குச் செல்கிறான். பரிவாரங்கள் புடைசூழ வந்த பரதனை வரவேற்ற ராமர், தனது குடும் பத்தினர் நலன்களைப் பற்றி விசாரிக்கிறார்இது ஒரு சம்பிரதாய அளவில், சில வார்த்தைகளிலேயே முடிந்து விடுகிறது. ஆனால், அதற்குப் பின்னால் ஆட்சி எவ்வாறு நடக்கிறது என்ற ராமரின் விசாரணை நீண்டதாக அமைகிறது. ‘இது நடக்கிறதா?; இது நடக்காமல் இருக்கிறதா?’ என்று ஒரு நீண்ட கேள்விப் பட்டிய லையே பரதன் முன் வைக்கிறார் ராமர்.

அந்தப் பட்டியலை முழுமையாகப் பார்த்தால், ஆட்சி எப்படி நடக்க வேண்டும், எதை எதைச் செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்என்பது பற்றியெல்லாம் ராமருக்கு இருந்த தீர்மானமான கருத்துக்கள் நமக்குத் தெளிவாகும். ஆக, ஸீதை விஷயத்தில் மட்டுமல்லஎப்போதுமே எதிலுமே, ராஜதர்மத்தை ராமர் பெரிதும் மதித்து நடந்து கொண்டார். பரதனிடம் கேட்ட கேள்விகள் மூலமாக, ராஜ தர்மத்தைப் பற்றி ஒரு பாடமே நடத்தி விட்ட ராமர் கூறியவற்றில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

அடுத்த தினம் செய்யப்பட வேண்டிய காரியங்கள் குறித்து, அதற்கு முன்னிரவில் ஆழ்ந்து யோசனை செய்கிறாயா?’ என்று பரதனைப் பார்த்து கேட்கிறார் ராமர். அதாவது சிம்மாசனத்தில் அமர்ந்து, உத்திரவைப் பிறப்பிக்கும்போது மட்டுமல்ல; இரவிலும் கூட ஒரு மன்னன் ராஜ காரியங்களைப் பற்றி தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டும்.

நீ மட்டுமே யோசித்து, முடிவுகளை எடுத்து விடாமல் இருக் கிறாயா?’ என்பது அடுத்த கேள்வி. ஒரு அரசன், எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும், அவன் மட்டுமே சிந்தித்து முடி வெடுத்தால், அந்த முடிவு, பல விவரங்களைப் புரிந்து கொள்ளா மலே எடுக்கப்பட்ட முடிவாக அமைந்து விடுகிற வாய்ப்பு உண்டு. பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் எடுக்கப்படுகிற முடிவாக வும் அது இருந்து விடக்கூடும். இது தவிர்க்கப்படுகிறதா என்பது ராமரின் கேள்வி.

சரி, அதற்காக தான் எடுக்க இருக்கிற முடிவுகளை, அரசன் பறைசாற்றிக் கொண்டிருப்பதாஎன்ற சந்தேகம் எழலாம். ராமரின் அடுத்த கேள்வி, நமக்கு எழக்கூடிய இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறது. ‘பலரோடு கலந்து ஆலோசனை நடத்தாமல், குறிப் பிட்ட ஒரு சிலருடன் மட்டும் ஆலோசனை நடத்துகிறாயா?’ என்று கேட்கிறார் ராமர். அது மட்டுமல்ல, அதைத் தொடர்ந்துசிலருடன் மட்டும் கலந்து ஆலோசித்து, நீ எடுக்கிற முடிவு, அந்த காரியம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே வெளியே பரவி விடாமல் இருக்கிறதா?’ என்றும் கேட்கிறார். அதாவதுஅஃபிஷியல் ஸீக்ரட்ஸ்பாதுகாக்கப்பட வேண்டும். அதைப் பாதுகாக்கிற நபர்களுக்கே, அது முன் கூட்டித் தெரிவிக்கப்படலாம். இதை ராமர் விளக்குகிறார். ‘நீ எடுக்கிற முடிவு, அது நிறைவேற்றப்பட்ட பிறகுதான்அல்லது உடனே நிறைவேற்றப்படப் போகிறது என்ற நிலையில்தான்மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறே நடக்கிறதா?’ என்றும் கேட்கிறார் ராமர். ஒரு அரசு நிர்வாகத்தின் ஆரம்பப் பாடங்கள் மாதிரி அமைகின்றன இந்தக் கேள்விகள்.

பெண்கள் மரியாதையுடன் நடத்தப்படுகின்றார்களா? அவர்களுக்குச் சரியான பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா?’ என்றும் ராமர் கேட்கிறார். மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு, பெண்கள் உரிமை, பெண் விடுதலைஎன்ற பேச்செல்லாம் இல்லாத காலம். அந்தக் காலத்தில், ஒரு ராஜ்ஜியத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுவது எவ்வளவு அவசியமாகக் கருதப்பட்டது என்பதை ராமரின் கேள்வி சுட்டிக்காட்டுகிறது.

அதே சமயத்தில் இன்றைய பெண் உரிமையாளர்கள் ஏற்க முடியாத ஒரு விஷயமும், ராமரால் குறிப்பிடப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேசிவிட்டு, அவர்களை முற் றிலும் நம்பி விடாமல் இருக்கிறாயா? அவர்களுக்கு ரகசியங்கள் தெரிவிக்கப்படாமல் இருக்கின்றன அல்லவா?’ என்றும் கேட்கிறார் ராமர். இது பெண்களின் இயற்கையான சுபாவத்தை ஒட்டிய கேள்வி. இதில் அடங்கி இருப்பது, அலங்கார கோஷம் அல்ல; அனுபவ உண்மை.

வர்த்தகர்கள், பயிர்த் தொழில் செய்பவர்கள் ஆகியோர், தங்கள் தொழில்களில் எந்த இடையூறுகளையும் சந்திக்காமல் இருக் கிறார்களா?’ விவசாயம் அவசியம்; ஆனால் அது மட்டுமே போதாது. ஆகையால் வர்த்தகத்தின் நன்மையையும் ஒரு அரசு பேண வேண்டும் என்பதைக் காட்டுகிற கேள்வி அது. தொழிற் சாலைகளும், பொருளாதாரமும் பெருகி, உலகமய வர்த்தகம் தோன்றி விடாத காலத்திலேயே, அயல்நாட்டிற்கு ஏவல் பணி செய்யாமலேயே, முதலாளிகளுக்கு விலை போய்விடாமலேயே கூட, ‘விவசாயம் மட்டும் போதாது; வர்த்தகமும் தேவைஎன்ற நிலை இருந்ததை நமக்குப் புரிய வைக்கிற கேள்வி இது. இப்போதுஅக்ஸெஸிபிலிடிபற்றி நிறைய பேசுகிறோம். ஆட்சி புரிகிறவர்கள், யாராலும் சந்திக்க முடியாதவர்களாக இருந் தால், அது பற்றி விமர்சனம் எழுகிறது. இந்த விஷயம் கூட, அப்போதே ராமரால் பேசப்பட்டிருக்கிறது. பரதனைப் பார்த்து ராமர் கேட்ட கேள்விகளில் ஒன்று :

பணியாட்கள், அரசனை எப்போது வேண்டுமானாலும், தங்கள் இஷ்டப்படி சந்திக்கலாம் என்கிற நிலையும் தவறானது. அவர்கள் அரசனை சந்திப்பது என்பது மிகவும் கடினம் என்ற நிலை யும் தவறு; இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுத்தரமான நிலைதான் சரியானது. அதுதான் ஆட்சிக்கு நன்மை தரும். நீ அவ்வாறு நடந்து கொள்கிறாயா?’ இப்படி, இன்றைய ஆட்சியாளர்களுக்கும், பொருந்தக் கூடிய அறிவுரை அன்றே வழங்கப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் பற்றியும், பற்றாக்குறை பட்ஜெட் பற்றியும் ஆண்டு தோறும் நாம் பேசுகிறோம். இது பற்றி ராமர் கருத்துஅதாவது அன்றைய ராஜதர்மம் அவருடைய ஒரு கேள்வியில் இவ்வாறு

டம் பெறுகிறது :

உன்னுடைய செலவு, உன்னுடைய வரவை மிஞ்சி விடாமல் பார்த்துக் கொள்கிறாயா?’ இங்கே ராமர்உன்னுடையஎன்று சொல்வது – ‘ஆட்சியில்என்ற பொருள் உடையது. ஆட்சியின் பிரதிநிதியாகத்தான், அங்கே பரதனைக் காண்கிறார் ராமர். அதாவது, பற்றாக்குறை பட்ஜெட் போடுகிற இன்றைய வழிமுறையை, அன்றைய ராஜதர்மம் ஏற்கவில்லை. அதைச் சரியான பொருளாதார நிர்வாகமாக அன்றைய ஆட்சியாளர்கள் பார்க்கவில்லை.

நீதி நிர்வாகம் பற்றியும் ராமர் பேசுகிறார்: ‘நன்னடத்தை உடையவன், சரியான விசாரணையின்றி, தண்டனைக்குள்ளாகி விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதா? ஒருவனுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில் விசாரணையில் தொடர் புடையவர்களின் பொருளாசையால், அந்தக் குற்றவாளி விடு விக்கப்படாத வண்ணம் நீதி நிலைநாட்டப்படுகிறதா? ஒரு பணக் காரனுக்கும், ஒரு ஏழைக்குமிடையே ஒரு விவகாரம் வருகிறபோது, உனது அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல், அவர்களுடைய வழக்கை விசாரிக்கிறார்களா? ஆக, ஒரு நீதி விசாரணையில் நிகழ்ந்து விடக் கூடிய தவறுகள் பற்றி சிந்தித்துப் பார்த்து, அந்தத் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது ஆட்சியாளனின் கடமை என்பதை அன்றைய ராஜதர்மம் வலியுறுத்தியிருக்கிறது. நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது; அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டுவிடக் கூடாது; பணக்காரனையும், ஏழையையும் நீதிமன்றம் சரிசமமாக நடத்த வேண்டும்என்பதெல்லாம், ஏதோ மேலைநாடுகளிடமிருந்து நம்மிடம் வந்து சேர்ந்து விட்ட, ‘இம்போர்ட்டெட் தர்மங்கள்அல்ல. இந்த நாட்டிலேயே பல பற்பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இதில் எல்லாம் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. ஹிந்து தர்மத்தில், நீதி நிர்வாகம் ஒரு சிறப்பிடம் பெற்றிருந்தது. அதனால்தான் ராஜதர்மத்தின் ஒரு பகுதியாக நீதி நிர்வாகம் பல நூல்களிலும் விவரிக்கப்பட் டிருக்கிறது. ராமரின் கேள்விகளும் இதையே சுட்டிக்காட்டுகின்றன.

நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று கூறும்போது ராமர் ஒரு நீதியைச் சொல்கிறார்: ‘பரதா!தவறாக தண்டிக்கப்பட்டு விட்டவன் சிந்துகிற கண்ணீர், மன்னனின் குலத்தையே அழிக்க வல்லது என்பதை உணர்ந்து, வழக்குகள் விசாரிக்கப்படுகின்றனவா? இன்றுநூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண் டிக்கப்பட்டு விடக் கூடாதுஎன்பது ஒரு தத்துவம்; அவ்வளவே. ஆனால் அன்றே, நிரபராதிக்கு அளிக்கப்படுகிற தண்டனை, அரசனின் குலத்தையே அழிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது தத்துவம் அல்லகடும் எச்சரிக்கை.

இவையெல்லாம், கேள்விகள் மூலமாக, ராமர் பரதனுக்கு எடுத்துரைத்த ராஜதர்மத்தின் ஒரு சிறு பகுதியே என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ராஜ தர்மத்திலும், அரசனின் கடமையிலும் ராமர் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை உணர்ந்தால், ஸீதையை அவர் நடத்திய விதம், ஒரு அரசன் என்கிற முறையில்தானே தவிர, ஒரு கணவன் என்கிற முறையில் அல்ல என்பது தெளிவாகும். வால்மீகி ராமாயணத்தில், நாத்திக வாதமும் இடம் பெறுகிறதுஅதுவும் மிகக் கடுமையாக. வனத்தில் வாழ்கிற ராமரை, மீண்டும் நகருக்கு அழைத்துச் செல்ல பரதன் முயற்சிக்கிறபோது, அவ னுடைய முயற்சிக்கு ஆதரவாக, ராமரை எப்படியாவது அயோத் திக்கு திரும்பச் செய்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில், ஜாபாலி என்கிற அந்தணர் பேசுகிற பேச்சு அப்பட்டமான நாத்திக வாதம்.

இன்றைய நாத்திகவாதிகள், ஏதோ தாங்கள்தான், தங்களுடைய அறிவாற்றல் மூலமாக, பல கேள்விகளை எழுப்பி விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறுகிற ஜாபாலியின் நாத்திகவாதம், இதையெல்லாம் மிஞ்சுகிறது. அதாவது, இன்றைய நாத்திகவாதிகள் எந்த வாதத்தை யும் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை.

ஜாபாலி கூறுகிற வாதங்களை மறுத்து, ராமர் தர்மத்தை எடுத்துரைக்கிறார். அதில் அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையும், அதன் மேன்மையும் வெளிப்படுகின்றன. அதேபோல, லக்ஷ்மணன் தர்மத்தை நொந்து பேசுகிற கட்டமும் வருகிறது. தர்மம் என்பதே வேண்டாத, விரும்பத்தகாத, நன்மை பயக்காத ஒரு வெற்று வாதம் போல லக்ஷ்மணன் பேசுகிறான். அதை மறுத்து ராமர், தர்மத்தின் வலிமையை எடுத்துரைக்கிறார்.

ஹிந்து மத நூலில் எல்லாம் இது ஒரு சிறப்பம்சம். இதுதான் சரி என்று சொல்லி, அவை நிறுத்தி விடுவதில்லை. அப்படிச் சொல்லப்பட்டதற்கு எதிரான வாதங்களையும் எடுத்துரைத்து, அவற்றைச் சந்தித்து, அவற்றின் தவறான அணுகுமுறையை தெளி வாக்கி, தர்மத்தை விளக்குவதுஎன்கிற வழிமுறையை ஹிந்து மத நூல்கள் பலவற்றில் காணலாம். வால்மீகியின் ராமாயணமும் இதே வழியைக் கடைப்பிடிக்கிறது.

இவ்வாறு தர்மங்களை விளக்கிச் சொல்கிற வால்மீகியின் காப்பியத்தை இசைத்த லவகுசர்கள், இறுதியில் இந்த வரலாற்றின் சிறப்பைக் கூறுகிறார்கள்: ‘மன்னர்களுக்கு வெற்றியைத் தருவதும், வேதங்களைச் சார்ந்து நிற்பதும், புண்ணியத்தைத் தருவதுமாக, வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட இந்தக் காப்பியம்; கேட்பவர் களின் பாவங்களை எல்லாம் அகற்றுகிறது இதைத் தொடர்ந்து கேட்கிற தூயமனம் படைத்தவர்களுக்கு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், சிறந்த புகழ், சகோதர அன்பு, ஆழ்ந்த அறிவு, மாறாத சக்தி ஆகியவற்றை கொடுக்க வல்லது இந்த ராமாயண காவியம்!

அடுத்து, இதே போல சுருக்கமாக, மஹாபாரதம் பற்றி, ஒரு பார்வை.