மஹாபாரதத்தின் நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டுகிற பல விஷயங்களில் ஒன்று – பழிக்குப் பழி வாங்குவது என்று ஆரம் பித்தால், அது நீண்ட சங்கிலித் தொடராக போய்க் கொண்டே யிருக்கும் என்பது.
இதற்கு துரோணரின் சரித்திரம் ஒரு சான்று. பரத்வாஜ மஹ ரிஷியின் மகனாகிய துரோணர், அக்னிவேச்யர் என்பவரின் ஆச்ரமத்தில் தங்கி, அஸ்த்ர வித்தை பயின்றார். அவருடன் கூட அங்கே பயின்ற மாணவர்களில் ஒருவன் – அந்நாட்டு இளவரச னாகிய த்ருபதன். துரோணரும், த்ருபதனும் நெருங்கிய நண்பர்கள் ஆ னார்கள். தான் அரசு பதவி ஏற்கிறபோது, பாதி ராஜ்யத்தை துரோணருக்குத் தரப் போவதாக, த்ருபதன் கூறும் அளவிற்கு, அந்த நட்பு வளர்ந்தது.
பல வருடங்கள் கழிந்தன. த்ருபதன் அரசனானான். அப்போது துரோணர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தார். அவருடைய மனைவியும், க்ருபரின் சகோதரியுமாகிய க்ருபி வற்புறுத்தவே, த்ருபதனை சந்தித்தால் தனது வறுமை நீங்கும் என்று நினைத்த துரோணர், அரச சபைக்குச் சென்றார். தன் மகன் அச்வத்தாமாவிற்கு, பால் கூட வாங்கித் தர முடியாத கடுமையான வறுமை நீங்கும் என்றுதான் அவர் நினைத்தாரே தவிர, த்ருபதன் தனது மாணவப் பருவத்தில் கூறிய மாதிரி, பாதி ராஜ்யம் தருவான் என்று எதிர்பார்க்க வில்லை. ஆனால், த்ருபதன் சபைக்கு துரோணர் சென்ற போது, அவருக்கு பெரும் அவமரியாதை நிகழ்ந்தது. பழி வாங்கும் படலத்திற்கு இதுதான் அஸ்திவாரமாக அமைந்தது. அரச சபைக்குச் சென்ற துரோணர், த்ருபத மன்னனைப் பார்த்து, தங்களுடைய மாணவப் பருவத்தை நினைவுபடுத்திப் பேசினார்.
த்ருபதன் கடும் கோபமுற்றான். ‘என்னைப் பார்த்து, நண்பன் என்று கூற, உமக்கு என்ன துணிச்சல்! புத்தி மாறாட்டம் நேரிட்டு விட்டதா? பால்ய நட்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு வயது கூடும் போது மறந்து போகிறது. பணக்காரனுக்கு ஏழை நண்பனாக இருக்க முடியாது. வலியவர்களுக்கும், இளைத்தவர்களுக்கும் இடையே நட்பு என்பது நினைத்துப் பார்க்க முடியாதது‘ என்று கூறி தனது சபையை விட்டு துரோணரை வெளியேற்றினான் த்ருபதன்.
பெரும் மனத் துன்பத்தை அடைந்த துரோணர் மனதில், ஒரு உறுதியான தீர்மானம் உண்டாயிற்று. தன் மனதிலேயே ஒரு சபதத்தைச் செய்து கொண்ட அவர், ஹஸ்தினாபுரம் சென்றார். பீஷ்மர், அவரை பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் அஸ்திர வித்தைகளில் உயர் பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். துரோணரும் சம்மதித்தார். த்ருபதன் தனக்கு இழைத்த அவ மானத்தை மனதிலேயே நினைத்துப் பொருமிக் கொண்டிருந்த துரோணர், தனது மாணவர்களாகிய பாண்டவர்களையும் கௌரவர் களையும் பார்த்து, ‘என் மனதில், நான் ஒரு சபதம் மேற்கொண் டிருக்கிறேன். பயிற்சி முழுமையாக முடிந்த பிறகு, நீங்கள் அதை எனக்கு நிறைவேற்றித் தர வேண்டும் என்று விரும்புகிறேன்‘ என்று சொன்னார்.
அர்ஜுனன், நீங்கள் உங்கள் மனதில் நினைத்துள்ள காரியம் எதுவாக இருந்தாலும் சரி, அதை நான் நிறைவேற்றித் தருவேன்‘ என்று வாக்குறுதி அளித்தான்.
பின்னர், பல நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, பயிற்சி முடிந்த நிலை யில், துரோணர் தன்னிடம் பயின்ற மாணவர்களை அழைத்து, உங்களிடம் நான் எந்த குருதட்சணையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். பாஞ்சால மன்னன் த்ருபதன் என்னை முன்பு அவமதித்தான். அவனுடன் போர் செய்து, அவனை யுத்தக் கைதியாகப் பிடித்து, என் முன் கொண்டு வந்து அவனை நிறுத்த வேண்டும். இதுவே நீங்கள் எனக்குத் தரக்கூடிய குரு தட்சணை‘ என்றார்.
துரியோதனன் முதலியோர் முயற்சித்து, த்ருபதனை வெல்ல முடியாமல் திரும்பினர். அர்ஜுனன் சென்று, த்ருபதனுடன் போரிட்டு வென்று, அவனை கைதியாகப் பிடித்து, துரோணர் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.
துரோணர், பழி வாங்கினார். த்ருபதா! உன்னிடம் இப்போது தேசம் எதுவுமில்லை. உன்னுடையதாக இருந்த தேசம், இப்போது என்னுடையது. தேசம் எதுவுமில்லாத நீ, ஒரு தேசத்தையே வைத்திருக்கும் எனக்கு சமானமானவன் அல்ல; அதனால் நீ எனக்கு நண்பன் ஆக முடியாது‘ என்று பேசி, த்ருபதன் முன்பு செய்த மாதிரியே அவனை அவமானத்திற்குள்ளாக்கினார்.
பின்னர், இப்போதும் உன் நட்பை நான் விரும்புவதால், தேசமில்லாத உனக்கு, என் தேசத்தில் பாதியைத் தருகிறேன். அப்போதுதானே நாம் நட்பு கொண்டாட முடியும்?’ என்று மேலும் த்ருபதனை தலைகுனிய வைத்தார்துரோணர்.
பாதி ராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டு, தலைகுனிந்து, அவமதிக்கப்பட்டு திரும்பிய த்ருபதன், துரோணரை பழி வாங்க உறுதி பூண்டான். பழி வாங்கும் சங்கிலியில் அடுத்த தொடர் வந்தது. த்ருபதன் (அர்ஜுனனை மணக்கக் கூடிய பெண்ணைப் பெறுவதற்காக செய்த யாகத்தில்), துரோணரைக் கொல்வதற்காக வென்றே ஒரு மகனை வேண்டிப் பெற்றான். அப்படி அவன் பெற்ற மகன்தான் த்ருஷ்டத்யும்னன். வில், அம்பு, கேடயம் தரித்தவனாக, இளைஞனாகவே த்ருஷ்டத்யும்னன் வேள்வித் தீயிலிருந்து தோன்றினான்.
இந்த நிகழ்ச்சி ஊர் அறிந்த விஷயமென்பதால், துரோணரும் தன்னைக் கொல்வதற்காகவே, த்ருபதன் வேண்டிப் பெற்ற மகன் த்ருஷ்டத்யும்னன் என்பதை உணர்ந்திருந்தார். அப்படியிருந்தும், அவன் அஸ்திர வித்தை பயில தன்னை நாடி வந்தபோது, ‘விதியை வெல்ல யாராலும் முடியாது; நடப்பது நடக்கட்டும்‘ என்று தீர்மானித்து, அவனுக்கு அஸ்திர வித்தை கற்பித்தார் துரோணர். அவன் பெரிய வில்லாளியானான்.
பாரதப் போரில், துரியோதனன் படைக்கு துரோணர் தலைமை தாங்கிய போது, பாண்டவர் படை பெரும் நாசத்தைச் சந்தித்தது. இப்படியே தொடர்ந்து துரோணர் போரிட்டால். பாண்டவர் படையே அழிந்து விடும் என்று கிருஷ்ணர் அஞ்சினார். துரோணரை வீழ்த்த வேறு வழி இல்லாத நிலையில், அவரை செயலிழக்கச் செய்வதற்காக, அவருடைய மகன் அச்வத்தாமா இறந்தான் என்று அவரிடம் பொய் சொல்லி, அவரைச் சோர்வடையச் செய்வதுதான் ஒரே வழி என்று கிருஷ்ணர் கூற, பீமன் அந்த பொய்ச் செய்தி யைக் கூறினான். துரோணர் நம்பவில்லை; அதனால் தர்மபுத்திர னிடம் ‘அது உண்மையா‘ என்று கேட்கிறார். தர்மபுத்திரரும் அதை உறுதி செய்கிற வகையில் பேச, துரோணர் ஆயுதங்களை கீழே போட்டு, தேர்த் தட்டில் உட்கார்ந்து, நிஷ்டையில் அமர்ந்தார். அந்த நிலையில், அவர் மீது பாய்ந்து, அவர் தலைமுடியைப் பிடித்து, அவர் தலையை அறுத்தான் த்ருஷ்டத்யும்னன். த்ருபதன், மகனைப் பெற்ற காரியம் நிறைவேறியது. இத்துடன் கூட, பழி வாங்கும் படலம் முடியவில்லை.
துரியோதனன் தரப்பு, யுத்தத்தில் தோல்வியுற்று, துரியோதன னும் அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் நிலையில், இரவு நேரத் தாக்குதலை நடத்திய அச்வத்தாமா, பாண்டவர் தரப்பைச் சார்ந்தவர் களில் முதலில் தேடியது த்ருஷ்டத்யும்னனைத்தான். ‘மிகவும் கோழைத்தனமாக, உனது ஆச்சார்யரான என் தந்தையை, அவர் ஆயுதங்களைக் கீழே போட்டு நிஷ்டையில் அமர்ந்திருந்த போது, கொன்ற பாவியே!’ என்று கூறி, த்ருஷ்டத்யும்னனின் தலை முடி யைப் பிடித்து, அவன் கழுத்தைச் சீவிக் கொன்றான் அஸ்வத்தாமா.
இப்படி பழி தீர்க்கும் படலம் தொடர்ந்தது; முடியவில்லை. இறுதியில் அஸ்வத்தாமா சபிக்கப்பட்டு, அலைந்து திரிந்தான்.
அதாவது, ஒருவர் மாறி ஒருவர் பழி வாங்கிக் கொண்டிருந்தால், அந்தச் சங்கிலி தொடரும். ஒருவனால் தீங்கிழைக்கப்பட்டவன், அவனை பழி வாங்குவான்; அவன் பதிலுக்கு மீண்டும் ஏதாவது செய்வான்… இது இப்படியே தொடரும். யாராவது ஒருவர் ‘இனி இது வேண்டாம்‘ என்று நினைத்தால் ஒழிய, இதற்கு முடிவு
ல்லை.
பீஷ்மர் சம்பந்தமாகவும் இதை நாம் பார்க்கலாம். தனது (ஒன்றுவிட்ட) சகோதரன் விசித்திரவீர்யனுக்கு மணம் செய்விப் பதற்காக, காசி தேசத்து அரசன் நடத்திய சுயம்வரத்திற்கு பீஷ்மர் சென்றார். அங்கே பல அரசர்கள், ‘பிரம்மச்சர்ய விரதம் பூண்டு விட்டு, சுயம்வரத்துக்கு வந்தவர்’ – என்று அவரைக் கேலி பேசு. கிறார்கள். பழி வாங்கும் படலம் ஆரம்பமானது.
அரசர்களின் கேலியைக் கண்டு கோபமுற்ற பீஷ்மர், காசி தேசத்து அரசனின் பெண்களாகிய அம்பை, அம்பிகை, அம்பா லிகை – மூவரையும் தனது தேரில் ஏற்றி, மற்ற அரசர்களை யுத்தத் திற்கு அழைத்தார். சால்வன் என்பவன் மட்டும் பீஷ்மர் தேரை நிறுத்துகிற அளவிற்குப் போராடினான். ஆனால் அவரால் தோற் கடிக்கப்பட்டு விரட்டப்பட்டான்.
தான் கவர்ந்து வந்த மூன்று பெண்களையும் விசித்திரவீர்ய னிடம் ஒப்படைத்து விட்டு, திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார் பீஷ்மர், அந்த மூன்று பெண்களில் மூத்தவளாகிய அம்பை, பீஷ்மரிடம், ‘நான் சால்வனை மனதால் வரித்து விட் டேன்‘ என்று கூற, அவளை அவனிடமே அனுப்புகிறார் பீஷ்மர்.
சால்வனோ, ‘வேறொருவனால் வெல்லப்பட்ட பெண்ணை என்னால் மணக்க முடியாது‘ என்று கூறி விடுகிறான். அம்பை மீண்டும் பீஷ்மரிடமே சென்று தன்னை மணக்குமாறு கேட்கிறாள். தன்னுடைய பிரம்மச்சர்ய விரதத்தின் காரணமாக அவர் மறுக்கிறார். மீண்டும் சால்வனிடம் அவள் போக, அவன் மீண்டும் மறுக்க, பீஷ்மரிடம் அவள் மீண்டும் செல்ல, அவர் மறுபடி மறுக்க, விரக்தி அடைந்து, கோபமும் கொண்டு, கடும் தவம் புரிகிறாள் அம்பை.
பீஷ்மரைக் கொல்லக் கூடிய வன்மை வேண்டும் – என்ற அவள் வேண்டுதலை ஏற்ற முருகப் பெருமான், அவள் முன் தோன்றி, ஒரு மாலையைக் கொடுத்து, அதை அணிபவன் பீஷ்மரைக் கொல் வான் என்று கூறி மறைகிறார்.
அந்த மாலையை அணிந்து, பீஷ்மரின் பகையை சம்பாதிக்க எந்த அரசனும், எந்த வீரனும் சம்மதிக்கவில்லை. அவள் மீண்டும் தவமிருந்து பரமசிவனிடமிருந்து ‘பீஷ்மரின் ஆயுள் முடிவு, உன் னுடைய மறு பிறப்பினால் ஏற்படும்’ என்ற வரத்தைப் பெறு கிறாள்.
மறு பிறவியை உடனே அடைய விரும்பிய அம்பை, தீயில் விழுந்து மாய்கிறாள். த்ருபத மன்னனுக்கு மகளாகப் பிறந்து சிகண்டினி என்ற பெயரைப் பெறுகிறாள். பின்னர் ஒரு கந்தர்வ ராஜன், அவளுக்கு தனது ஆண்மையைக் கொடுத்து, அவளிட மிருந்து பெண்மையைப் பெற்றுக் கொள்கிறான்.
ஆண் உருவத்தை அடைந்த சிகண்டினி, சிகண்டி என்ற பெயரைப் பெற்று த்ருபத மன்னனை மீண்டும் அடைந்தான். பழி வாங்குகிற வேகம் சிகண்டியை விடவில்லை. பாரத யுத்தம் நடக்கிறபோது, சிகண்டியை முன் நிறுத்தி, அர்ஜுனன் பீஷ்மரை எதிர்த்தால், அவரை வீழ்த்தி விடலாம் என்ற யோசனையை பீஷ்மரிடமிருந்தே தெரிந்து கொண்ட தர்மபுத்திரர் சொல் கேட்டு, அர்ஜுனன், சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை எதிர்க்கிறான். சிகண்டி, ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. பெண்ணாக இருந்து ஆண் உரு பெற்றவன் என்பதால், அவனை எதிர்த்து யுத்தம் செய்ய பீஷ்மர் மறுத்தார். சிகண்டி பல பாணங்களை அவர் மீது போட, அவர் மலைபோல் அசையாமல் நின்றார். அப்போது அர்ஜுனன் அவரைத் தாக்க, அவர் வீழ்ந்தார்.
இப்படி அம்பை, சிகண்டியாக நின்று பீஷ்மர் மீது பழி தீர்த்துக் கொண்டதுடன், இது முடியவில்லை. இரவு நேரத் தாக்குதலில், சிகண்டியை இரு கூறாகப் பிளந்து கொன்றான் அச்வத்தாமா.
பழி வாங்குவது என்பது தொடர் நிகழ்ச்சியாக போகாமல் இருக்க, எடுத்த எடுப்பிலேயே ஒருவராவது அந்த எண்ணத்தைக் கைவிட்டால்தான் முடியும். மஹாபாரத நிகழ்ச்சிகள் உணர்த்து கிற பல நீதிகளில் இதுவும் ஒன்று.