பாரத மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவும் – இங்கு ஜனித்திருக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் – அது மரமோ, செடியோ, கொடியோ, புழுவோ, பூச்சியோ… ‘இத்தகைய புண்ணிய பூமியில் நாம் புனிதப் பிறப்பு எடுத்திருக்கிறோமே‘ என்று அனுதினமும் பெருமை கொள்ள வேண்டும்; பாரத மண்ணைப் போற்றி வணங்க வேண்டும்.
இந்த மண்ணுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக் கடன் – இறை சேவைதான்! இங்கு அவதரித்த ரிஷிகளும் மகான்களும் அதை செவ்வனே செய்துள்ளார்கள். தங்களைச் சார்ந்திருக்கும் மனித குலத்தின் அமைதிக்கும் இதையே வலியுறுத்திச் சென்றுள்ளார்கள்.
மகான்கள் என்பவர்களும் மனிதனாக இந்த மண்ணில் தோன்றியவர்கள்தான். ஒரு தாயின் கருவறைக்குள் பத்து மாதம் குடி இருந்தவர்கள்தான்.
இருந்தாலும், மனிதனுக்கும் மகானுக்கும் என்ன வேறுபாடு?
மனிதர்கள் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; இறக்கிறார்கள்.
மகான்கள் அவதரிக்கிறார்கள்; அருள்கிறார்கள்; முக்தி அடைகிறார்கள்.
மனிதனும் மகான் ஆகலாம். எப்போது?
ஆசைகளை வேரறுக்கும்போது.
– புலன்களை அடக்கும்போது.
– தர்ம சிந்தனை தலைதூக்கும்போது.
இப்படி மிகச் சிறந்த உதாரண புருஷராக வாழ்ந்த ஒரு மகான்தான் – காஞ்சி மகா ஸ்வாமிகள்! இவரது தரிசனத்தால் இன்புற்றவர்கள் ஏராளம்; அடைந்த பலன்களோ தாராளம். சுவாரஸ்யமான அவரது வாழ்க்கைச் சரிதம்தான் இந்த நூல். இதுவரை கேள்விப்பட்டிராத அனுபவங்களும், படித்திராத சுவையான செய்திகளும் இந்த நூலை அலங்கரிக்கப் போகிறது.
அதற்கு முன், அவரது அருளாசிக்குப் பாத்திரமான ஒருவரது மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பார்ப்போம்.
இந்த சம்பவம் நடந்து சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். சதாசிவம்– ஜானகி, கும்பகோணத்தில் வசித்து வந்த தம்பதியர். பக்தியில் பெருமளவு திளைத்திருந்த இவர்களுக்கு ஒரே ஒரு மகன். அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்தான்.
சென்னையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற சதாசிவத்துக்குத் தன் எஞ்சிய நாட்களை ஓர் ஒப்பற்ற ஆன்மிக க்ஷேத்திரத்தில் செலவிட வேண்டும் என்பது உயரிய விருப்பம். எனவே, மனைவி ஜானகியோடு கும்பகோணத்துக்குக் குடி பெயர்ந்தார். கோயில்கள் நிறைந்த அந்தப் புனித நகரில் அவரது பொழுதுகள் ரொம்பவும் நிம்மதியாகவே கழிந்தன. தினமும் காவிரி ஸ்நானம், கோயில்– குளம் என்று ஜானகியோடு பயணித்து வந்தார்.
சதாசிவத்தின் தந்தையார் வைத்தீஸ்வரனுக்கு அந்தக் காலத்தில் – மகா பெரியவா மேல் அபரிமிதமான பக்தி இருந்தது. மகனைக் கூட்டிக் கொண்டு அடிக்கடி காஞ்சிபுரம் பயணிப்பார் வைத்தீஸ்வரன். மகா ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் சதாசிவத்துக்கு அடிக்கடி வாய்த்தது. மகா ஸ்வாமிகளின் மேல் இருந்த இந்த பக்தி, சதாசிவத்தின் பிற்காலத்திலும் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை.
தந்தையார் வைத்தீஸ்வரன் காலமான பின்னும் மகா ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில் இருக்கும் காலத்தில் ஒவ்வொரு அனுஷ (பெரியவாளின் ஜன்ம நட்சத்திரம்) தினத்தன்றும் தம்பதி சமேதராகக் காஞ்சிக்குச் சென்று விடுவார் சதாசிவம். இதில், எந்த ஒரு இடையூறோ, மாற்றமோ வந்ததில்லை. தான் கும்பகோணத்தில் இருந்தாலும் சரி… சென்னையில் இருந்தாலும் சரி… அனுஷ தினத்தன்று ஸ்வாமிகள் காஞ்சியில் இருக்கிறாரா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு தன் பயணத்தைத் துவங்கி விடுவார். ஒருவேளை, க்ஷேத்திராடனம் காரணமாக காஞ்சிபுரம் தவிர்த்து வேறு எங்கேனும் மகா ஸ்வாமிகள் முகாமிட்டிருந்தால், அப்போது பயணப்பட மாட்டார். சிவ சொரூபமான ஆச்சார்யாளை, அனுஷ தினத்தன்று காஞ்சியில் கண்டு வணங்குவது என்பதை, இப்பிறவியில் தான் பெற்ற பெரும் பேறாக எண்ணி பூரித்திருந்தார் சதாசிவம்.
நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓய்வு பெற்ற வாழ்க்கையைக் கொஞ்சம் நிம்மதியாகவே கழித்து வந்தார் சதாசிவம். கும்பகோணத்தில் இவர் வசித்து வந்த காலத்தில், காஞ்சிக்குச் செல்லும்போது, முதல் நாள் இரவே புறப்பட்டு விடுவார். சென்னைக்குச் செல்லும் ஏதேனும் ஒரு அரசுப் பேருந்தில் பயணித்து விழுப்புரம் சென்று விடுவார். பிறகு, அங்கிருந்து வேறொரு பேருந்தில் காஞ்சிக்குப் பயணப்படுவார். இது எந்த விதமான சிக்கலும் இல்லாமல் நல்ல விதமாகப் போய்க் கொண்டிருந்தது. ‘இதெல்லாம் மகா பெரியவாளின் அருள்தான்‘ என்று தன் மனைவியிடம் பெருமையாகச் சொல்லி சந்தோஷப்படுவார் சதாசிவம்.
எதுவுமே சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தால் அதில் ஒரு சுவாரஸ்யமும் இருக்காது; விறுவிறுப்பும் இருக்காது. எந்த ஒரு நிகழ்விலும் ஒரு தடையோ, இடர்ப்பாடோ வந்தால்தான் அதில் ஒரு ரசிப்புத் தன்மை இருக்கும். அந்தத் தடையில் இருந்து மீளும்போது நம்மையும் அறியாமல் ஒரு பரவசம் ஏற்படும்; பரமானந்தம் கிடைக்கும். இதனால்தான் தன்னைத் தரிசிக்க வரும் நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் அவ்வப்போது ஏதாவது சோதனைகளைத் தந்து பின் சுமுகமாக ஆட்கொண்டு அருள்வான் ஆண்டவன்.
அவ்வளவு ஏன்… ஒரு கல்யாணம் என்று வந்தால், மகளின் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன், பெண்ணைப் பெற்ற தகப்பனுக்கு ஓரிரண்டு இடைஞ்சல்கள் வந்து, அதில் இருந்து அவர் சுமுகமாக மீண்டால்தான் அந்தக் கல்யாணம் பின்னாட்களில் சிறப்பாகப் பேசப்படும். ‘யப்பப்பா… நம்ம பானுவோட கல்யாணத்தன்னிக்குக் கார்த்தால மாப்பிள்ளை பல் தேய்க்க சீர்வரிசை கொடுத்தப்ப, திரட்டுப்பால் அனுப்பலையேனு மாப்பிள்ளையோட அப்பா எந்த அளவுக்கு நடு மண்டபத்துல உக்காந்து கலாட்டா பண்ணார்? நல்லவேளை, பக்கத்துலயே ஆவின் கடை இருந்ததுனால பொழைச்சோம். பானுவோட அப்பாவே பதறி அடிச்சிண்டு போய் வாங்கிண்டு வந்துட்டார்‘ என்றெல்லாம், பிற்காலத்தில் சிலாகித்துப் பேசுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், அல்லவா?
கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு சம்பவம், சதாசிவத்தின் அனுஷ யாத்திரையின்போது நிகழ்ந்து விட்டது. குறிப்பிட்ட அந்த அனுஷ தினத்தன்று மகா ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில்தான் இருக்கிறார் என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொண்டார் சதாசிவம். மனைவி ஜானகியிடம் சொல்லி விட்டு, முந்தைய நாள் மாலையே காஞ்சிபுரம் புறப்பட்டு விடுவது என்பதுதான் திட்டம். மகா ஸ்வாமிகளின் தரிசனத்துக்கு உண்டான பழங்கள், கல்கண்டு போன்றவற்றை மாலை வேளையில் வாங்கி வரலாம் என்று தன் வீட்டு வாசலுக்கு வந்தவருக்கு சின்ன அதிர்ச்சி. வழக்கமான பரபரப்புடன் காணப்படும் அந்தத் தெரு, அன்று சுரத்து குறைந்து காணப்பட்டது. தெருவின் ஓரத்தில் ஆங்காங்கே விரிக்கப்பட்டிருக்கும் கடைகளையும் காணவில்லை.
குழம்பித் தவித்த சதாசிவத்தின் முகத்தைப் பார்த்த ஒரு கீரை வியாபாரி – அவர் வீட்டு அருகே கடை விரித்திருப்பவர், “என்ன சாமீ… பையும் கையுமா கடைக்குப் பொறப் படறியா… மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னை யாம். ஒரு கட்சிக்காரங்க கூட்டமா திரண்டு வந்து எல்லா கடைங்களையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டுப் போறாங்க. ‘நமக்கேன் வம்பு‘னு எல்லா கடைக்காரங்களும் மூடிட்டு வீட்டுக்குப் பொறப் பட்டுட்டாங்க. அதான் தெருவே வெறிச்சோடிக் கிடக்கு“ என்றார்.
“அட ஈஸ்வரா… வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ?“ என்று கீரை வியாபாரியிடமே ஒரு கேள்வியைப் போட்டார் சதாசிவம். “ஏஞ் சாமீ… அரசியல் பிரச்னைனு சொல்றேன்… கடைங்களையே பூட்ட வெச்சவங்க, பஸ்ஸுங்களை மட்டும் ரோட்டுல போக விடுவாங்களா… புளியஞ்சேரி போகணும்னு ஒண்ணரை மணி நேரமா உக்காந்திருக்கேன். இன்னிக்கு நடை யாத்திரையாத்தான் வீட்டுக்குப் போகணும் போலிருக்கு. சரி சாமீ… நான் பொறப்படறேன். ரோட்டுல கீட்டுல அலையாத… எவனாவது கல் விட்டு அடிச்சுரப் போறான்“ என்று சொல்லி விட்டு அந்த புளியஞ்சேரி கீரை வியாபாரி, காலியான கூடையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு நடையைக் கட்ட ஆரம்பித்தார்.
தளர்வான முகத்தோடு வீட்டுக்குள் வந்தார் சதாசிவம். “ஏங்க… பழங்கள் வாங்கிட்டு வர்றேன்னு போனீங்க… வெறும் பையோட வந்திருக்கீங்க… எதுவுமே வாங்கலையா?“ என்று பரபரத்தாள் ஜானகி. விஷயத்தை முழுவதுமாக மனைவிக்கு விளக்கினார் சதாசிவம். பிறகு, “என்ன ஜானகீ… இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்தன்னிக்கு காஞ்சிபுரம் போக முடியுமானு தெரியலியே… ஏன் இந்த சோதனை?“ என்று கலங்கியவர், மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். பிறகு, “சரி, நான் வாசல்ல உக்காந்துக்கறேன். ஏதாவது பஸ் போறதானு பாக்கறேன். நாளைக்கு நாம காஞ்சிபுரத்துல இருக்கணும்னு பிராப்தம் இருந்தா, நிச்சயம் அங்கே இருப்போம்“ என்று சொல்லி விட்டு, வாசலுக்கு வந்தார். மெள்ள வீட்டு வாசலில் நின்று, சாலையின் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. கார் வந்த வேகத்தைக் கண்ட சதாசிவம், மெள்ளப் பின்வாங்கி பிரமிப்புடன் நின்றார். பிறகு, காருக்குள் இருந்து யார் இறங்குகிறார்கள் என்பதை வியப்புடன் கவனிக்க ஆரம்பித்தார்.
பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன்– நெற்றி நிறைய விபூதி தரித்த ஒருவர் டிரைவர் இருக்கையில் இருந்து கீழே இறங்கினார். உள்ளே– அவருடைய மனைவி முன் இருக்கையில் இருந்தார். இப்படிப்பட்ட ஒருவர் காரில் இருந்து இறங்கியதைப் பார்த்ததும், சதாசிவத்துக்கு என்ன சொல்வது என்று தோன்றவில்லை. எதற்காக இவர் இங்கே காரை நிறுத்தினார் என்பதும் புரியவில்லை. பஞ்சகச்ச ஆசாமியே ஆரம்பித்தார்: “சார், நமஸ்காரம்… எம் பேரு சங்கரன். உள்ளே இருக்கிறது என் மனைவி. தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். என் மனைவிக்குத் திடீர்னு தலைவலி. அவளுக்கு ஒரு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா, எல்லாமே பறந்தோடி விடும். இன்னிக்குன்னு பார்த்து ஓட்டல் எதுவும் இல்லை. திடீர்னு ஏதோ களேபரத்தால எல்லா ஓட்டலும் மூடிட்டா போலிருக்கு. உங்களைப் பார்த்தவுடனே காரை நிறுத்தினேன். இது உங்க வீடுன்னு நினைக்கறேன். உங்களுக்கு சிரமம் இல்லேன்னா, எனக்கும் என் மனைவிக்கும் ஸ்ட்ராங்கா ஒரு காபி கொடுக்க முடியுமா?“
புதியவரின் தேஜஸையும், அவரது அணுகுமுறையையும் பார்த்தால், அவர்களுக்கு சாப்பாடே போடலாம் போல இருந்தது சதாசிவத்துக்கு. எனவே, கொஞ்சமும் தயங்காமல், “தாராளமா… உள்ளே வாங்கோ. காபி என்ன… டிபன் வேணும்னாகூட பண்ணித் தர்றேன். என் மனைவி ஜானகியும் இருக்கா. வாங்கோ“ என்று இருவரையும் பார்த்துக் கனிவாகச் சொன்னார்.
வண்டியை ‘லாக்‘ செய்து விட்டு, சங்கரனும் அவரது மனைவியும் சதாசிவத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தனர். அதற்கு முன் சங்கரனின் மனைவி, மறக்காமல் சில பழங்களையும் மல்லிகைப்பூவையும் எடுத்துக் கொண்டாள். புதியவர்களின் வீட்டுக்கு நுழைவதற்கு முன், ஏதாவது எடுத்துச் செல்லுதல் பண்பாடு ஆயிற்றே!
ஜானகி போட்டுக் கொடுத்த மணக்கும் காபியைக் குடித்து முடித்து விட்டு, இருவரும் வாயார வாழ்த்தினார்கள். பிறகு, புறப்பட ஆயத்தம் ஆனார்கள். அப்போது சதாசிவம், “இப்ப நீங்க எதுவரைக்கும் பயணப்பட்டுண்டிருக்கேள்?“ என்று கேட்டார். ஒருவேளை சங்கரன், ‘சென்னை‘ என்று சொன்னால், போகிற வழியில் தானும் தன் மனைவி ஜானகியும் தொற்றிக் கொண்டு போகலாமே என்கிற ஒரு நப்பாசை. “நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன். ஆறு மாசம் ஆஸ்திரேலியால எம் பையனோட இருந்தேன். போன வாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு. பெரியவாளைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிண்டு வரலாம்னு கிளம்பினேன். நீங்களும் வரேளா? வண்டில இடம் இருக்கு“ என்று அவராகவே அழைப்பு விடுத்தபோது, சதாசிவமும் ஜானகியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பிறகென்ன… சதாசிவமும் ஜானகியும், ஏதோ கிடைத்த உடைகளை ஒரு பைக்குள் அள்ளிக் கொண்டு சங்கரனுக்கு மனமார்ந்த நன்றியையும் சொல்லி விட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து வந்து காருக்குள் ஏறிக் கொண்டார்கள்.
மகா பெரியவாளின் நெகிழ்வான சரிதத்தை மனமுருகப் பேசிக் கொண்டு வந்தபோது கார் சேத்தியாத்தோப்பைத் தாண்டி விட்டது. அதன் பிறகு, சதாசிவத்தின் கண்கள் மெள்ள செருகவே… சங்கரனிடம் சொல்லி விட்டுக் கண் அயர்ந்தார்.
நேரம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. சதாசிவம் கண் விழித்தபோது, காஞ்சி சங்கர மடத்தின் வாசலில் கார் நின்றிருந்தது. ஒரு கார் மடத்து வாசலில் நள்ளிரவு வேளையில் வந்து நிற்பதைப் பார்த்து ஓடோடி வந்தார், யூனிஃபார்ம் அணிந்திருந்த மடத்தின் வாட்ச்மேன். சதாசிவமும் அவரது மனைவியும் கீழே இறங்கிக் கொண்டதும் அவர்களைப் பார்த்து, “உங்களை மடத்தின் வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன். என்னோட நண்பர் ஒருவர் பக்கத்துல இருக்கார். நான் அவா கிரஹத்துல தங்கிட்டு, நாளைக்குக் கார்த்தால உங்களை வந்து பார்க்கறேன்“ என்று சொல்லி விட்டு, புயல் போல் வண்டியை ஓட்டிக் கொண்டு நகர்ந்தார் சங்கரன். ஒரு சில நொடிகளிலேயே, அந்த கார் சதாசிவத்தின் பார்வையில் இருந்து மறைந்தது.
மறுநாள் காலை… அனுஷத்தன்று பெரியவாளைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் மடத்தில் கூடி இருந்தனர். மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் தான் வாங்கிய பழங்கள், கல்கண்டு, புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக் கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் சதாசிவமும் அவருடைய மனைவி ஜானகியும் பெரியவா தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். கூடவே, நேற்று இரவு தான் சந்தித்த சங்கரனையும் ஜனத் திரள் இடையே தேடினார்; ஆனால், அவரோ, அவரது மனைவியோ பார்வையில் சிக்கவில்லை. ‘எப்படியும் மடத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் அவரை மீண்டும் ஒரு முறை பார்த்து நன்றி சொல்லி விட வேண்டும்‘ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சதாசிவம்.
அப்போது ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர், சதாசிவத்தின் தோளைத் தொட்டு, “மாமா… கூப்பிட்டுண்டே இருக்கேன்… அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா… வாங்கோ, எம் பின்னால“ என்று சொல்லி விட்டு, சதாசிவத்தின் பதிலையும் எதிர்பாராமல் விறுவிறுவென்று நடந்தார். எதுவும் புரியாமல் உதவியாளரைப் பின்தொடர்ந்தனர் இருவரும்.
வேத விற்பன்னர்களும் பாடசாலை மாணவர்களும் சூழ்ந்திருக்க… சாட்சாத் சிவபெருமானே கயிலாசத்தில் காட்சி தருவது போல் தன் ஆசனத்தில் அந்தப் பரபிரம்மம் வீற்றிருந்தது. முகத்தில் சாந்தம் தவழ, அந்த சங்கர சொரூபம் தன்னைத் தேடி வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தது. அந்த மகானின் ஒரு பார்வை அசைவுக்காக அங்கே பல பண்டிதர்களும் செல்வந்தர்களும் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக காத்து நின்றிருந்தனர்.
“வாப்பா சதாசிவம்… கும்மோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு“ என்று மகா பெரியவா திருவாய் மலர்ந்தபோது ஆடித்தான் போனார் சதாசிவம். “ஆமாம் பெரியவா… அங்கே ஏதோ பிரச்னை… கடைங்களும் இல்லை… பஸ்ஸும் இல்லை…“
“அதான், சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே… அப்புறம் என்ன… இந்தா“ என்று அவர் பிரசாதத்தை நீட்டவும், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், தன் இரு கைகளையும் தாழப் பிடித்து, பிரசாதத்தை வாங்கிக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு, “சங்கரன்னு ஒருத்தர்… அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார். அவருக்குத்தான் நன்றி சொல்லணும்“ என்றார் குரலில் குழைவாக.
“மடத்துக்கு வரணும்னு நினைச்சே… வந்துட்டே… இனிமே சங்கரனாவது, கிங்கரனாவது“ என்று பெரும் குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்தப் பரபிரம்மம். சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால், புரியாதது மாதிரியும் இருந்தது. முகம் குழப்பத்துடனே காணப்பட்டது. “பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடுத்து… மடத்துல போஜனம் பண்ணிட்டு, ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா“ என்று ஆசிர்வதித்தார் பெரியவா.
நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல், வெளியே வந்த சதாசிவம், நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டார். அவரை அருகே அழைத்தார். “ஏம்ப்பா… நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே… அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?“ என்று கேட்டார்.
“என்ன சாமீ… நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ… காலைலதானே நான் வந்திருக்கேன்.“
சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார். “இல்லேப்பா… நேத்து ராத்திரி நான் உன்னைப் பார்த்தேனே… இதே இடத்து வாசல்ல…“ என்றார், புருவம் உயர்த்தி. “என்ன சாமீ நீங்க… சொன்னதையே திரும்பத் திரும்பத் சொல்றீங்க… நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்க இல்ல சாமீ“ என்று சொல்லி விட்டு, பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிக்குத் திரும்பினார்.
சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. “அப்படி என்றால்….. நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக் கொண்டு வந்த சங்கரன் யார்?“ என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார். சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார்.
“பெரியவா…“ என்று பெரும் குரலெடுத்து அழைத்து, அந்த மடத்தின் வாசலில்– மண் தரையில் – பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம். கூடவே, அவரது மனைவியும்!