கடலூரில் சிவானந்தபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சேஷய்யர். ‘சிவானந்தபுரம் சேஷய்யர்‘ என்றால் அந்தப் பகுதியில் அவ்வளவு பிரபலம். ஓ.டி. என்று சொல்லப்படும் ஓல்டு டவுன் ஏரியாவில் ஒரு பகுதிதான் சிவானந்தபுரம். பரமாச்சார்யர் மேல் மிகுந்த பக்தி கொண்டவர் இவர். பெரியவாளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் வேறு எதுவும் இவருக்குத் தேவை இல்லை. அந்த அளவுக்கு ஒரு பக்தி.
அப்படிப்பட்ட பெரியவாளின் பக்தரான சேஷய்யருக்கும் ஒரு பிரச்னை இருந்தது. செல்வம் ஏகத்துக்கும் இருக்க, வாரிசுகள் மட்டும் வீட்டில் இல்லை. தினமும் மருகிப் போனார்.
‘மகா பெரியவாளுக்கு விசுவாசமான பக்தராக இருந்தவருக்கே பிரச்னையா?‘ என்று கேட்கிறீர்களா?
சேஷய்யருக்குத் திருமணம் ஆகிப் பத்து வருடங்கள் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லை. இது அவரது மனதை ரொம்பவே உறுத்தச் செய்தது. அக்கம்பக்கத்து வீடுகளில் மழலைகள் கூடிக் குதூகலித்து விளையாடுவதைப் பார்க்கும்போது எந்தத் தகப்பனுக்கு – தாய்க்கு குழந்தை ஆசை வராது? இத்தனைக்கும் மகா பெரியவாளின் அனுக்கிரஹத்தைப் பரிபூரணமாகப் பெற்ற பக்தர் இவர். எப்படியும் தன் மனக்குறையை மகா பெரியவாளிடம் ஒருமுறை நேரில் சொல்லி, ஆசி பெற வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்.
மகா பெரியவா கடலூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள திருவதிகை, விழுப்புரம், மங்கலம் போன்ற எந்த ஊருக்கு வந்தாலும், வலியச் சென்று தொண்டுள்ளத்தோடு உதவி செய்யும் உள்ளம் கொண்டவர் சேஷய்யர். அதில் ஒரு ஆத்ம திருப்தி கொள்வார். ‘பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்வது முற்பிறவியில் தான் செய்த புண்ணியம்‘ என்று மற்றவர்களிடம் சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்வார்.
சேஷய்யரின் நல்ல நேரம்… அடுத்த சில வாரங்களுக்குள் மகா பெரியவா, கடலூருக்கு வருவதாக ஸ்ரீமடத்தில் இருந்து தகவல் வந்தது. கடலூருக்கு வந்தால் சேஷய்யரின் வீட்டில்தான் பெரியவா தங்குவது வழக்கம். எனவே, இந்த முறையும் அவரது வீட்டில் தங்க இருப்பதாக மடத்து அதிகாரிகளால் தகவல் தரப்பட்டது. மனம் குதூகலித்த சேஷய்யர், ஆச்சார நெறிமுறைகளோடு பெரியவா தன் வீட்டில் தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை துரித கதியில் துவங்கினார். தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மாட்டுத் தொழுவம் மற்றும் குதிரை லாயங்களைச் சுத்தப்படுத்தினார். பெரியவா அங்கே தங்குவதற்கு கிணற்றடி அருகே ஒரு கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டது. காஞ்சி மடத்தில் இருந்து வரும் ஊழியர்கள் அனைவரும் தங்குவதற்கு இடம் ஏற்படுத்தப்பட்டது.
பெரியவா கடலூருக்கு வந்த தினத்தில் ஊரே திமிலோகப்பட்டது. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் திரண்டு வந்து, பெரியவாளைத் தரிசித்துச் சென்றனர். இதற்கெல்லாம் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் சேஷய்யர். கூட்டம் சற்றுக் குறைந்த வேளையில் பெரியவாளை நெருங்கிய சேஷய்யர், தன் நெடுநாள் மனக்குறையைச் சன்னமான குரலில் சொல்லி இருக்கிறார்.
“ஏக சம்பத்துக்காரன் நீ… எது உனக்கு சாஸ்வதமாக வேண்டும்? தன சம்பத்தா? புத்திர சம்பத்தா என்பதை நீயே முடிவு செய்து கொள். எதுவாக இருந்தாலும், அதற்கு பகவான் உனக்கு உதவுவார்“ என்று சொல்லி, அவரை ஆசிர்வதித்தார் பெரியவா.
தன சம்பத்தா? புத்திர சம்பத்தா?
‘தனம் – அதாவது செல்வம் இருந்தால், சௌகரியமாக வாழலாம்; தலைமுறை வசதியாக வாழலாம். ஆனால், தலை முறை செழிப்பதற்கு புத்திர சம்பத்துதானே வேண்டும்?‘
யோசித்த சேஷய்யர் ஒரு முடிவுக்கு வந்தார். செல்வத்தைக் கஷ்டப்பட்டாவது சம்பாதித்து விடலாம். அதை இப்போது இழந்தாலும் பரவாயில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் சம்பாதித்து விடலாம். தற்போதைய தேவை – புத்திர சம்பத்துதான். இப்படி இவர் முடிவெடுத்த அடுத்த கணத்தில் இருந்தே இவர் ஆச்சரியப்படும்படியான சம்பவங்கள் நடந்தேறின. அதாவது, சேஷய்யரின் தம்பிக்குத் திருமணம் முடிப்பதற்கென்று ஓரிடத்தில் பெண் பார்த்து நாளும் குறித்து விட்டார்கள். ஆனால், பாருங்கள்… அந்தத் தம்பிக்குத் திடீரென திருமணத்தில் இஷ்டம் இல்லை. அதாவது, இல்லறத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. துறவு அவரை அழைத்தது. எனவே, சந்நியாசி ஆகி வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார்.
தம்பிக்கென நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டார், விஷயம் கேள்விப்பட்டுப் பதறிப் போனார்கள். “ஐயையோ… எங்கள் பெண்ணை இனி யார் திருமணம் செய்து கொள்வார்கள்? இப்படித் திடுதிப்பென கல்யாணம் நின்று போய் விட்டதே…“ என்று சேஷய்யர் வீட்டாரிடம் புலம்பினார்கள். அவர்களுக்கும் மனம் சங்கடப்பட்டது. ‘தம்பி இப்படிச் செய்து விட்டானே‘ என்று எல்லோரும் கொதித்துப் போனார்கள். சாதாரணமான ஒரு தினத்தில் இப்படிச் சொல்லிவிட்டுப் போயிருந்தார் என்றால்கூட யாரும் ஏதும் சொல்ல மாட்டார்கள். இப்போது இன்னொரு குடும்பத்தின் பெண்ணையும் நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டானே என்றுதான் எல்லோரும் கவலைப்பட்டனர்.
இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்பதற்காக இரண்டு குடும்பத்து உறுப்பினர்களும் உட்கார்ந்து பேசினர். இறுதியில் ஒரே முடிவுதான் எடுக்கப்பட்டது. அதாவது, பெண் வீட்டாரின் கௌரவம் காப்பாற்றப்படுவதற்கு சேஷய்யரே இந்தப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள். முதலில், சேஷய்யர் சம்மதிக்கவில்லை. என்றாலும், பிற்பாடு அனைவரும் சமாதானம் பேசி சேஷய்யரையும் அவரது மனைவியையும் இதற்கு உடன்பட வைத்தனர். முதல் மனைவி, சேஷய்யரை விட பத்து வயது இளையவர். இரண்டாவது மனைவியோ சேஷய்யரை விட இருபது வயது இளையவர் (சேஷய்யர் பிறந்த வருடம் – 1892). சேஷய்யருக்கும் முதல் மனைவிக்கும் திருமணம் நடந்தது – 1915-ஆம் ஆண்டு. இரண்டாவது மனைவியுடன் திருமணம் நடந்தது – 1925-ஆம் ஆண்டு.
இரண்டாவது திருமணம் செய்து ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன. இந்த மனைவிக்கும் மணி வயிறு வாய்க்கவில்லை. சேஷய்யர் மனம் கலங்கினார். ‘ஏக சம்பத்துதான் உனக்கு என்று மகா பெரியவா கூறினாரே… ஒருவேளை தனம் சேர்ப்பதில் எனக்கு நாட்டம் இருப்பதால், புத்திர சம்பத்து தடைபடுகிறதோ?‘ என்று யோசித்தார் சேஷய்யர். இந்த வேளையில் அருகில் இருக்கும் ஓர் ஊருக்கு மகா பெரியவா திடீரென விஜயம் செய்தார். அங்கே சென்று அந்த மகானைச் சந்தித்து மீண்டும் தன் மனக்குறையைச் சொல்ல முடிவெடுத்தார் சேஷய்யர். புறப்பட்டார்.
“பெரியவா… சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு இரண்டாவது திருமணமும் என் விருப்பம் இல்லாமலேயே நிறைவேறியது. சரி, புத்திர பாக்கியத்துக்காக இறைவன் நடத்தும் லீலை இதுவோ என்று நினைத்திருந்தேன். ஆனால், இரண்டாவது மனைவிக்கும் புத்திர பாக்கியம் இதுவரை வாய்க்கவில்லை. தங்களின் ஆசிர்வாதம் வேண்டி இங்கு வந்துள்ளேன்“ என்றார் சேஷய்யர் பவ்யமாக.
பெரியவா புன்னகைத்தார். அவருக்குச் சில பழப் பிரசாதங்களைக் கொடுத்து, “உன் இரண்டாவது மனைவியிடம் இதைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்“ என்றவர், “கார்த்திகை தீபம் நேரத்தில் திருவண்ணாமலை போய் கொப்பரையில் நெய் தீபம் ஏற்று“ என்று சொன்னார்.
“அப்படியே ஆகட்டும் பெரியவா“ என்று சந்தோஷமாக அந்த அருட் பிரசாதங்களை வாங்கிக் கொண்டு கடலூர் சிவானந்தபுரம் வந்த சேஷய்யர் தன் இரண்டாவது மனைவியிடம் அவற்றைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். அதே சூட்டோடு கார்த்திகை தீபத் திருநாளும் வந்தது.
திருவண்ணாமலை புறப்பட்டார். கொப்பரையில் நெய் தீபம் ஏற்றினார். ‘இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். ரமணாஸ்ரமம் போய் ரமண மகரிஷியையும் பார்த்து ஆசி வாங்கிக் கொண்டு வருவோம்‘ என்று திருச்சுழி மகானின் தரிசனம் வேண்டி, அவரது குடிலுக்குள் சென்றார்.
பகவான் ரமணரை சேஷய்யர் சந்தித்தபோது அவர் கேட்டார்: “ஏக சம்பத்தா? எது தேவை என்று முடிவு செய்து விட்டாயா? தன சம்பத்தா? புத்திர சம்பத்தா?“
சேஷய்யர் விதிர்விதிர்த்துப் போய்விட்டார். கடலூரில் காஞ்சி மகான், தன் ஒருவனிடம் மட்டும் கேட்ட அதே கேள்வியை இவரும் கேட்கிறாரே? இதைத்தான் ஞான திருஷ்டி என்கிறார்களா?
ரமணர் மீண்டும் கேட்டார்: “என்னப்பா… என்ன சம்பத்து தேவை என்று முடிவு செய்து விட்டாயா? பரவாயில்லை. எதுவாக இருந்தாலும் திடமாக முடிவெடு.“
திக்பிரமை அகலாமல் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டார். வரும் வழியில் அவர் எடுத்த முடிவுதான் – ‘புத்திர சம்பத்தே எனக்குப் போதும்.‘
இதன் பிறகு நடந்ததை அதிசயம் என்று சொல்வதா? அருள் என்று சொல்வதா? அடுத்து வந்த சில நாட்களுக்குள்ளேயே சேஷய்யருக்கு அவரது இரண்டாவது மனைவியிடம் இருந்து அந்த இன்பச் செய்தி கிடைத்தது. அவள் கருவுற்றிருக்கிறாளாம். பத்து மாதங்களில் வீட்டில் ‘குவா குவா‘ சத்தம், அனைவரையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது.
ஒன்றல்ல… இரண்டல்ல… அடுத்தடுத்து பத்துக் குழந்தைகளுக்குத் தாய் ஆனார் அந்த இரண்டாவது மனைவி. மழலைகள் சத்தம் வீட்டில் பெருகப் பெருக… மகா பெரியவாளின் வாக்கும் பலித்தது. ‘தனம் இருந்தால் புத்திர பாக்கியம் இருக்காது. புத்திர பாக்கியம் இருந்தால் தனம் இருக்காது.‘
அந்த மகானின் வாக்குதான் எத்தனை சத்தியமான உண்மை! பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கித்தான் போனார் சேஷய்யர். பிற்காலத்தில்தான் இந்தக் குடும்பம் சற்றுத் தலை எடுத்தது.