அது 1980-களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மகா பெரியவா, ஓர் உதவியாளரை அழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்த உதவியாளர். மகானின் உத்தரவை நிறை வேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.
“திருவண்ணாமலைல யோகி ராம்சுரத்குமார் தெரியுமோ உனக்கு?“
உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும் பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காக திருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவை அவரை நான் சேவிச்சிருக்கேன்.“
“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப் போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி, உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா“ என்றார்.
“உத்தரவு பெரியவா“ என்று நமஸ்காரம் செய்து விட்டு, அந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினார்.
திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்று அவரை நமஸ்கரித்த பின், விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்“ என்று ஆசிர்வதித்தார் அந்த உதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும் பயணமானார்கள்.
அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மகா பெரியவாளின் முன்னே இருந்தார் யோகி ராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மகா பெரியவா, திடீரென்று கீழே தரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்கு முன்னால் – அதாவது அவரை நேர் பார்வை பார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மகான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இருவருடைய அதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்து விழவில்லை.
யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த உதவியாளருக்கு வியப்பு. ‘ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள்‘ என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. சுவாமிகளும் பேசக் காணோம். யோகியும் பேசக் காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்று குழம்பினார்.
சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப் புன்னகைத்தார் பெரியவா.
‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப் போகிறார்கள் போலிருக்கிறது‘ என்று தீர்மானித்தார் உதவியாளர்.
அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார் பெரியவா.
வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.
“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா“ என்றார்.
உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவே இல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்து விட்டது என்கிறாரே?‘ என்று குழம்பி நின்றபோது, யோகி எழுந்து விட்டார்.
இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.
பெரியவாளும் யோகியும் பேசாமல் பேசியது என்ன?
விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர்?
மடத்தில் இருந்து வெளியே வந்த உதவியாளர் தவித்துப் போனார்.
‘அப்படி என்னதான் மகா ஸ்வாமிகளும், யோகி ராம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்தி இருப்பார்கள். இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால், யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா என்கிறாரே மகா பெரியவா?‘
உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள் இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார் யோகி.
“என்னப்பா… உள்ளே நாங்கள் என்ன செய்தோம் என்று யோசிக்கிறாயா?“ என்று மெள்ளக் கேட்டார்.
“ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே?“ என்றார் படபடப்பாக உதவியாளர்.
“ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்“ என்று யோகி சொல்ல… உதவியாளர் விழித்தார். பிறகு, யோகியே ஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.
பெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில் ஜீவ சமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்து வந்தார்.“
யோகி: “ஆம்…“
பெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும் பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்கு அடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு, கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜபத்தின் மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாம ஜபம் உச்சரிக்கச் செய்தார்.“
யோகி: “ராம்… ராம்…“
பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல் பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாம ஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறது என்று பிரசாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.“
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.“
பெரியவா: “அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிற இடத்தில் இன்றைக்கும் ராம ராம என்கிற ஜப ஒலி வந்து கொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடி கொண்டிருக்கிற இடமே – கோவிந்தபுரமே ராம நாம பூமியாக இருக்கிறது.“
யோகி: “ராம் ராம்…“
பெரியவா: “பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராம நாம சிந்தனையில் வாழும் நீ அங்கேயே நிரந்தரமாக இருந்து விடேன்.“
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குத் திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.“
பெரியவா: “உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி.“
யோகி: “ஆம். இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.“
பெரியவா: “ஆஹா… அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச் சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பிய வேலை பூர்த்தி ஆகி விட்டது. நீ புறப்படு.“
– இந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம் சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய் மூடவில்லை. மௌனத்தின் மூலமே மிகப் பெரிய சம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பது உதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
யோகியார் திருவண்ணாமலையில் இருந்த ஆரம்ப காலத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து யாராவது பக்தர்கள் தன்னை தரிசிக்க வந்தால், அவர்களை நிற்கச் சொல்லி சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பாராம். யோகியாரைத் தரிசிக்க வந்த பக்தர் திகைத்துப் போய் நிற்பார். அப்போது யோகியாரே சொல்வாராம்: “அடேய்… நீ ரொம்ப புண்ணியம் செய்திருக்கிறாய். காஞ்சி ஆச்சார்யரின் புண்ணிய பூமியில் இருந்து அவரிடம் இருந்து ஆசிகளையும் புண்ணியத்தையும் எனக்குக் கொண்டு வந்திருக்கிறாய். நான் ஒரு சாதாரண பிச்சைக்காரன். உன்னைத் தரிசிக்கும்போதே என் மனக் கண்ணில் மகா ஸ்வாமிகளைப் பார்க்கிறேன். எப்பேர்ப்பட்ட மகான்.“
அந்த அளவுக்குக் காஞ்சி ஆச்சார்யரின் மேல் யோகியாருக்கு அளவு கடந்த பக்தி உண்டு. ஒரு முறை மகா பெரியவா திருவண்ணாமலை பகுதிக்கு யாத்திரையாகச் சென்றிருக்கிறார். சீனிவாச ஐயர் என்கிற பக்தரின் இல்லத்துக்கு மகா பெரியவா எழுந்தருளி இருந்தார்.
பெரியவாளின் தரிசனத்துக்காக ஏராளமான கூட்டம் சீனிவாச ஐயர் வீட்டில் கூடி இருந்தது. தான் வணங்கும் தெய்வமான மகா பெரியவா திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார் என்கிற தகவலைக் கேள்விப்பட்ட யோகியார் (பிரபலமாகாத நேரம்), அந்த இல்லத்துக்கு ஓடி வந்தார்.
பக்தர்கள் கூட்டத்தோடு கூட்டமாக முண்டி அடித்து முன்னேறினார். ஒரு கட்டத்தில் மகா ஸ்வாமிகளே, இவரை அடையாளம் கண்டுகொண்டு தன் அருகே வரவழைத்து ஆசி வழங்கினாராம். இந்த நிகழ்வு, பெறற்கரிய பாக்கியம் என்று யோகியார் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.
தேசப் பற்றும் ஒரு சிறந்த பக்திதான் என்பதை மகா பெரியவா அவ்வப்போது வற்புறுத்திக் கொண்டே இருப்பார். அதற்கு உதாரணம் போல் அமைந்த சம்பவம் இது.
அது 1962-ஆம் வருடம்… சீனாவுக்கும் பாரதத்துக்கும் யுத்தம் நடந்தது. அப்போது மகா பெரியவா இளையாற்றங்குடியில் முகாமிட்டிருந்தார். இந்த யுத்தத்தில் நாம் ஜெயிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கு அனைவரும் தங்கம் கொடுத்து உதவ வேண்டும் என்று முழங்கினார். அவரது இந்தப் பேச்சு, அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது.
மகா ஸ்வாமிகளது அந்த உரை பின்வருமாறு:
“நம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்து நேரும்போதெல்லாம் நம்மைக் காத்து வரும் பராசக்தி, பாரதத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு உருவமாக எழுந்தருளி இருக்கிறாள். மகாராஷ்டிரத்தில் துளஜா பவானி. காஷ்மீரத்தில் க்ஷீரபவானி. பாஞ்சாலத்தில் ஜ்வாலாமுகி. கூர்ஜரத்தில் அம்பாஜி. உத்தரப் பிரதேசத்தில் விந்தியவாசினி. வங்காளத்தில் காளி. அஸ்ஸாமில் காமாக்யா. கர்நாடகத்தில் சாமுண்டி. கேரளத்தில் பகவதி. தமிழ்நாட்டில் காமாட்சி.
இப்படி அம்பிகை பல பெயர்களுடனும் உருவங்களுடனும் ஆங்காங்கே அமர்ந்து, குழந்தைகளாகிய நம்மை எல்லாம் காத்து வருகிறாள். அம்பாளின் பெயர் ஹேமவதி என்றும் உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஹேமம்‘ என்பதற்கு தங்கக் காசு என்று பொருள். நாம் நமது ஜன்ம பூமியை ரட்சிப்பதற்காக நமக்குக் கிடைக்கக் கூடிய தங்கத்தை தேசத்துக்காக அர்ப்பணம் செய்து வருகிறோம்.
ஒவ்வோர் ஊரிலும், கிராமங்களிலும் எழுந்தருளி இருக்கக் கூடிய அம்பிகையின் திருவடிகளில் ஓர் எள் அளவாவது தங்கத்தினால் அமைத்த புஷ்பத்தை அர்ப்பணம் செய்து, அதன் பின் அதை தேசத்துக்காக அர்ப்பணம் செய்தோம் என்றால், நமது நாட்டுக்கு வெகு சீக்கிரத்தில் விஜயலட்சுமி தேடி வருவாள். அதாவது, வெற்றி என்கிற விஜயலட்சுமி தேடி வருவாள்
சத்ருக்களிடம் நமக்கு எப்போதும் சிநேகத் தன்மை இருக்க வேண்டும். அது காமாட்சியின் கடாட்சத்துக்கு முக்கியமான ஓர் அடையாளம். சத்ருக்கள் தப்பு வழியில் சென்றால், அவர்களை நாம் தண்டிக்க வேண்டியது அவசியம்.
ஒரு அரசன் அல்லது நீதிபதி தனது மித்திரனோ, புத்திரனோ… தப்பு வழியில் சென்றால் அவர்களை அவன் எப்படி தண்டிக்கிறானோ, அதுபோல் சத்ருக்களைத் தண்டிக்க வேண்டும். ஆனால், அவர்களிடம் துவேஷம் இருக்கக் கூடாது. துவேஷத்துடன் எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.
பகவத் கீதையில் பகவான் சொல்லும்போது அகங்காரம் இல்லாமலும், பற்று இல்லாமலும் உலகம் முழுவதையும் நாம் நாசம் செய்தாலும், பாவம் நம்மை ஒட்டாது என்கிறார். அவ்விதமே யுத்தத்தை நாம் அவசியமாகச் செய்ய வேண்டி நேரும்போதும் துவேஷமும் பகைமையும் நமக்கு இருக்கக் கூடாது. எல்லோரிடத்திலும் அன்பு இருக்க வேண்டும்.“