பேரனை குணமாக்கிய பெரியவா

கா பெரியவா, மாபெரும் மகான் மட்டுமல்லதன்வந்திரியின் பரிபூரண ஆசி பெற்ற மாபெரும் மருத்துவர். எத்தனையோ பேரின் தீர்க்க முடியாத வியாதிகளைமருத்துவர்களுக்கே சவாலாக இருந்த பல சிக்கலான வியாதிகளைதன்னை நாடி வந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு வெகு சுலபமாகத் தீர்த்து வைத்திருக்கிறார் மகா பெரியவா. அந்தக் குடும்பத்தினரின் முகத்தில் அதீத மகிழ்ச்சியை வரவழைத்தவர். சாந்தமான முகத்தோடு பலருடைய சங்கடங்களைக் களைந்தவர். பேசாமலேயே பேசியவர்.

மருந்து, மாத்திரைகள்மருத்துவமனையில்தான்! இவருடைய சந்நிதானத்தில் விபூதிகுங்குமம்பழங்கள் மட்டுமே! அலோபதி மருத்துவம் தீர்த்து வைக்க முடியாத ஒரு வியாதியை, பெரியவா கொடுத்த ஆரஞ்சு பழம் தீர்த்து வைத்துவிடும். அந்தத் திருக்கரங்களுக்கும் ஸ்பரிசத்துக்கும் அவ்வளவு மகத்துவம் உண்டு.

ரொம்பவும் சிக்கலான கேஸ் என்று மருத்துவர்கள் கைவிட்டிருப்பார்கள்அத்தகையோரின் குடும்பத்தினர் ஏதோ ஒரு வகையில் காஞ்சி மகா பெரியவாளுக்கு பக்தர்களாய் இருப்பார்கள்மருத்துவர்களால் கைவிடப்பட்டு விட்டால் அடுத்து அணுக வேண்டிய இடம் – இறைவன்தானேஎனவேதான் காஞ்சிக்கு ஓடோடி வருவார்கள். மகானின் முன் மண்டியிட்டுத் தங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கொட்டுவார்கள்.

சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால், மகா பெரியவாளின் ஆசிர்வாதத்துக்கு பாத்தியதைப்பட்ட பல அன்பர்கள், வியாதி வெக்கை என்றால் மருத்துவமனைக்கே போக மாட்டார்கள். நேரே பிராட்வேயில் பஸ் பிடித்துக் காஞ்சிபுரம் சென்று பெரியவாளின் சந்நிதானத்தில் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்திருப்பார்கள். அவரது திருக்கரங்களால் விபூதி பெற்றுக்கொண்டு நெற்றியிலும் தேகத்திலும் பூசிக் கொள்வார்கள். இதுதான் ட்ரீட்மெண்ட். அடுத்த சில நிமிடங்களில் அவர்களைப் பீடித்திருந்த வியாதி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதை அனுபவபூர்வமாக அனுபவித்து உணர்ந்த பல பேர் இன்றும் இருக்கிறார்கள். அந்த ஆசிர்வாதத்தின்பவர் அப்படி!

வாருங்கள், அப்படிப்பட்ட ஒரு பக்தர் குடும்பத்து அனுபவத்தைப் பார்ப்போம்.

ஸ்ரீகாஞ்சி மடத்தில் கைங்கர்யம் செய்து வந்தவர் நரசிம்மன் என்பவர். சென்னையில் வாசம். அவர் துணைவியாரின் பெயர் ராஜேஸ்வரி. கணவர் மடத்தில் ஊழியம் செய்து வருவதாலும், மகா பெரியவா மேல் தான் கொண்ட அதீத பக்தியாலும் அடிக்கடி ராஜேஸ்வரியும் மடத்துக்குச் சென்று அந்த மகானைத் தரிசித்து வருவது வழக்கம். அதோடு, தன்னால் இயன்ற சேவைகளையும் அவ்வப்போது செய்து வருவார்.

ஒரு முறை மகா பெரியவாளைத் தரிசிக்க காஞ்சிபுரம் சென்றிருந்தார் ராஜேஸ்வரி. பீடத்தில் ஆச்சார்ய ஸ்வாமிகள் தரிசனத்தில் மனமுருகித் திளைத்திருந்தபோது, திடீரென்று தான் அவசரமாக சென்னை திரும்ப வேண்டும் என்று ஒரு சிலரிடம் கூறினார். இதை அடுத்து, மடத்தை விட்டு உடனே புறப்பட்டார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்தவர், சென்னைக்குப் புறப்படத் தயாராக இருந்த ஒரு பேருந்தில் ஏறி, காலியான இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டார்.

மடத்தில் பெரியவா தரிசனத்தில் இருந்தபோது, தான் ஏன் திடீரென சென்னைக்குப் புறப்பட்டோம் என்பதற்கான காரணத்தை ராஜேஸ்வரி யோசித்தபோது அதற்கான பதில் அவருக்குத் தெரியவில்லை. ‘ஒருவேளை மகா பெரியவா என்கிற சக்தி எனக்குள் புகுந்து சென்னைக்குப் போ என்று விரட்டி இருக்குமோ…. எதற்காக நான் இப்படி அவசரப்பட்டுக் கிளம்ப வேண்டும் என்றெல்லாம் யோசித்த ராஜேஸ்வரிக்கு எந்த விடையும் சிக்கவில்லைஉள்ளுக்குள் ஏதோ ஓர் உந்துதல், அவரை சென்னைக்குத் திரும்பச் சொன்னது. அவ்வளவே!

சென்னையில் இறங்கி ஒரு ஆட்டோவைப் பிடித்து அவசர அவசரமாக வீட்டுக்குப் போனபோதுதான் ராஜேஸ்வரிக்கு அந்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது. அதாவது ராஜேஸ்வரியின் மகள் வயிற்றுப் பேரனான பிரவீன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது மேல்மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டான் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல். பிரவீனுக்கு வயது பத்து.

ஆசை ஆசையாகக் கொஞ்சி விளையாடிய பேரன், மண்டை உடைந்து ரத்த வெள்ளம் பெருகி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறான் என்கிற தகவலைக் கேட்ட ராஜேஸ்வரிக்கு மயக்கம் வராத குறைதான். அப்போது வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றி, பேரன் அனுமதிக்கப்பட்டிருக்கும் வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அழுது புலம்பியபடியே, பேரன் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனையை அடைந்த ராஜேஸ்வரி, அவனுடைய முகத்தைக் கூடக் காண முடியாமல் தவித்தார். காரணம்அவன் அப்போது .ஸி.யூ. வார்டில் இருந்தான். அதோடு, அவனுடைய நிலை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறிவிட்டதால் பிழைப்பதே சிரமம் என்றனர். தலையில் அடிபட்டிருப்பதால், மூளையில் உள்ள நரம்புகள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், கை கால்கள் பழையபடி செயல்படுமா என்பதும் சந்தேகமே என்றவாறு பல அதிர்ச்சி குண்டுகளை அள்ளி வீசினார்கள்.

ஏற்கெனவே மனமொடிந்து போயிருந்த ராஜேஸ்வரிக்கு, மருத்துவர்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு தகவலும் பலமும் நம்பிக்கையும் தருவதாக இல்லை. அப்போது அவர் முடிவெடுத்தார். ‘இனி இந்த மருத்துவர்களை நம்பி பிரயோஜனமில்லை. கண் கண்ட மருத்துவரான காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் போய் அவரது பாதார விந்தங்களைத் தொழுது, பிரார்த்தித்தால்தான் பிரவீன் மீண்டும் உயிர்த்தெழுவான். ‘பாட்டி பாட்டி என்று பாசத்துடன் கட்டிக் கொள்வான்.

அவ்வளவுதான். தன் மகளிடம் (பிரவீனின் அம்மா) விவரத்தைச் சொல்லி, பேரனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். “இந்த நேரத்தில் என் அருகில் இல்லாமல் நீ எங்கே போறேம்மா? என்று மகள் வருத்தத்துடன் கேட்க, அவளது தலையைக் கோதி, “இந்த டாக்டருங்களை எல்லாம் நம்பினா சரிப்படாது. இது கோளாறுஅது கோளாறுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. எனக்கு எம் பேரன் பழையபடி உருக்குலையாம வரணும். அவனோட சிரிச்ச முகத்தை எந்நேரமும் நான் பார்த்திட்டே இருக்கணும். காஞ்சிபுரம் போய் எனது கண்கண்ட தெய்வத்துக்கிட்டே பிரார்த்தனையைச் சொல்லிட்டு வரேன். அதுதான் இப்ப நமக்குத் தேவைப்படற மருந்து என்று சொல்லிவிட்டு, மகளின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் விடுவிடுவென்று புறப்பட்டு விட்டார் ராஜேஸ்வரி.

காஞ்சி மடத்தில் தன் பீடத்தில் பரப்பிரம்மமாக வீற்றிருந்தது அந்த கருணை தெய்வம். அன்று பக்தர்கள் பெருமளவில் அங்கே இல்லை. எங்கோ ஓரிடத்தில் சிலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் ருத்ரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கலியுக தெய்வமான மகா பெரியவா, அனைத்தையும் காது கொடுத்துக் கேட்ட வண்ணம் அமைதியாக இருந்தார்.

பொசுக்கென்று உள்ளே நுழைந்தார் ராஜேஸ்வரி. அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் அழுகையாக மகா பெரியவாளின் முன்னால் வெளிப்பட்டது. கைங்கர்யம் செய்துகொண்டிருந்த ஒரு சில ஊழியர்கள் ராஜேஸ்வரியை ஏற்கெனவே அறிந்திருந்ததால் சற்று உரிமையுடன் அவரிடம் நெருங்கி, ஆறுதல் படுத்தினர். “அழாம என்ன விஷயம்னு பெரியவாகிட்ட சொன்னாதானே தெரியும். நிதானத்துக்கு வாங்கோ என்று தேற்றினர்.

அந்த பரப்பிரம்மம், அதே அமைதியுடன் வீற்றிருந்தது. அவருக்குத் தெரியாத அசைவுகளா? அவருக்குத் தெரியாத உண்மைகளா?

காற்றின் அனுமதி இல்லாமல் இலை அசையுமா? காலனின் அனுமதி இல்லாமல் உயிர் போகுமா? காற்றையும் கட்டுப்படுத்துபவர்; காலனையும் கட்டுப்படுத்துபவர் அந்த மகா ஸ்வாமிகள் ஆயிற்றே! அவருக்குத் தெரியாதா எதை எப்போது அரங்கேற்ற வேண்டும் என்று?!

மகா பெரியவா முன் மண்டியிட்டு அமர்ந்த ராஜேஸ்வரி புலம்பித் தள்ள ஆரம்பித்தார். “உங்களுக்கு நாங்கல்லாம் எப்படி சேவை பண்ணிண்டிருக்கோம். உங்ககிட்டயே இருந்து சேவை பண்ற என் கணவர் என்னிக்கானும் தப்பா நடந்துண்டிருக்காரா? ஏன் எங்களை இப்படி சோதனை பண்றேள்? உங்களுக்கு பக்தர்களா இருந்துண்டு, இது மாதிரியான சோதனை எல்லாம் எங்களால தாங்க முடியாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்.

ராஜேஸ்வரியின் கதறல் சத்தம் பெரியவாளைச் சங்கடப் படுத்துமோ என்று பயந்த மடத்து ஊழியர் ஒருவர், அவரிடம் நெருங்கி ஏதோ சொல்ல முற்பட்டார். ஒரு கணத்தில் மகா பெரியவா இதைப் பார்த்துவிட்டு அந்த ஊழியரிடம் விரலாலே சைகை செய்து, ‘தொந்தரவு செய்யாதே என்று குறிப்பால் உணர்த்தினார். வாயைப் பவ்யமாகப் பொத்தியபடி வந்த வேகத்திலேயே பின்னுக்கு நகர்ந்து போனார் ஊழியர்.

பெரியவாளின் மௌனம் விலகவே இல்லை.

அவருக்கு முன்னால் ஒரு தட்டில் விபூதியும் குங்குமமும் இருந்தன. அருகில் ஒரு ஆப்பிள் காணப்பட்டது. ஆப்பிளைத் தன் கையில் வைத்துக்கொண்டு இப்படியும் அப்படியும் சில மந்திரங்களை ஜபித்தபடி உருட்டினார். பிறகு, ஆப்பிளை விபூதிகுங்குமம் அடங்கிய அந்தத் தட்டில் வைத்தார். அதைத் தன் இடக் கையில் வைத்துக் கொண்டார். வலக் கையில் குங்குமத்தை எடுத்துக்கொண்டார். அந்த ஆப்பிள் பழம், அப்போது பெரியவாளுக்குக் காஞ்சி காமாட்சியாகக் காட்சி அளித்ததோ, என்னவோஆப்பிளுக்குக் குங்கும அர்ச்சனையைத் தொடங்கினார்.

ராஜேஸ்வரியின் அழுகை கொஞ்சம் குறைந்திருந்தது. அவரது மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. அர்ச்சனை முடிந்த பிறகு அந்த ஆப்பிளைக் கையில் எடுத்த மகா பெரியவா, தன் வலக் கையில் வைத்து சில விநாடிகள் உருட்டினார். பிறகு ராஜேஸ்வரியைப் பார்த்து, ‘இந்தா வாங்கிக் கொள் என்பதாக அவரது கையில் இட்டார்விபூதி, குங்கும பிரசாதத்தைக் கொடுத்தார். பிறகு திருவாய் மலர்ந்தார். “ஒண்ணும் பயப்படாதபேரன் பொழச்சு வந்து நன்னா ஓடி ஆடுவான்இந்த விபூதி, குங்குமத்தை அவனுக்கு இட்டு விடு

முந்திரியும் நெய்யும் போட்ட சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட மாதிரி இருந்தது, பெரியவாளின் திருவாக்கு. ‘நான் வணங்கும் கருணைத் தெய்வமே ஞான திருஷ்டியில் சொல்லி விட்டதுஉன் பேரன் ஓடி ஆடுவான் என்று. இதை விட எனக்கு என்ன ஆசி வேண்டும் என்று பூரிப்புடன் சென்னைக்குப் புறப்பட்டார் ராஜேஸ்வரி.

வடபழனி தனியார் மருத்துவமனையில் பேரன் பிரவீனை இன்னமும் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டிலேயே வைத்திருந்தார்கள். காஞ்சி தெய்வம் கொடுத்த பிரசாதத்தோடு ராஜேஸ்வரி அந்த வார்டின் வெளியே காத்திருந்தார். மகளுக்கும் ஓரளவு தைரியம் சொல்லி நம்பிக்கை ஊட்டி இருந்தார். பேரனை நேரில் பார்த்தால்தானே இந்த விபூதியையும் குங்குமத்தையும் அவன் நெற்றியில் இட்டுவிட்டு, மகா பெரியவாளின் பரிபூரண ஆசிக்கு அவனை ஆட்படுத்த முடியும்? ஆனால், .சி.யூ. வார்டுக்குள் நுழைய அனுமதி இல்லையே?

ஆஸ்பத்திரி வராந்தாவிலேயே காத்திருந்தார் ராஜேஸ்வரி.

பேரனுக்கு விபூதி, குங்குமம் இட முடியுமா? கடவுளேஅதற்கான வாய்ப்பை எனக்குக் கொடு என்று மகா ஸ்வாமிகளிடமே மானசீகமாக வேண்டினார்.

எந்தத் தெய்வமானாலும் அதை நம்பிவிட்டால், முழு மனதுடன் நம்மை அதனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ‘நல்லதோகெட்டதோஇதை நல்லபடியாகப் பார்த்து முடிப்பது உன் வேலை என்று ஒதுங்கிவிட வேண்டும்ஆன்மிகத்துக்கு இதுதான் அவசியம்.

தெய்வத்திடம் முறையிட்ட பிறகும், ‘இது சரியாகுமாஇல்லை எதிர்மறையாகப் போய் முடியுமா? என்று சந்தேகப்படுவது நாம் நம்பிக்கை வைத்திருக்கும் தெய்வத்தின் சக்தியையே சந்தேகப்படுவது போல் ஆகும்.

ராஜேஸ்வரி இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார். ‘மகா பெரியவா கொடுத்த விபூதியும் குங்குமமும் மட்டுமே போதும்என் பேரன் குணமடைந்துவிடுவான் என்பதாக முழு மனதுடன் நம்பிக்கொண்டிருந்தார்.

மகா பெரியவா அனுக்கிரஹித்துக் கொடுத்த விபூதி மற்றும் குங்குமத்தைத் தன் பேரன் பிரவீனுக்கு இட்டுவிட முடியுமா என்கிற தவிப்புடன் அவன் அனுமதிக்கப்பட்டிருந்த .சி.யூ. வார்டின் வாசலிலேயே தவமாய் தவம் இருந்தார் ராஜேஸ்வரி. நேரம் ஓடிக்கொண்டு இருந்ததே தவிர, பேரனைப் பார்க்க முடியுமோ என்று கவலைப்பட்டார்.

தவிர, உறவினர்கள் அனைவரும் வராந்தாவிலேயே குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருந்தனர். அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாக இருந்தது. நர்ஸ்கள் ஏதேதோ தாள்களை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடுவதும், டாக்டர்கள் இறுக்கமான முகத்துடன் வெளியே வருவதும் நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி நடந்துகொண்டே இருந்தது.

ராஜேஸ்வரி அந்தப் படபடப்பின் இடையேயும் காஞ்சி மகா ஸ்வாமிகளைத் தொடர்ந்து பிரார்த்தித்துக்கொண்டே இருந்தார். ‘எம் பேரனுக்கு ஒன்றும் ஆகக் கூடாது. பிரவீனுடைய மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் எந்த விதமான சேதமும் ஆகக் கூடாது. நீங்கதான் மருத்துவரா இருந்து எம் பேரனைக் காப்பாத்தணும் பெரியவா. உங்களை விட்டா எனக்கு வேற யாரும் இல்லை என்று உருகி உருகி, தனக்குள் வேண்டுகோள் வைத்துக்கொண்டே இருந்தார்.

திடீரென .சி.யூ. வார்டின் கதவு திறந்தது. ஓரிரு வார்டு பாய்களும் நர்ஸ்களும் கொஞ்சம் வேகமாக வெளியே வந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் இப்படிக் கூட்டம் சேர்ந்துஅதுவும் படபடப்பாக அவர்கள் இருப்பதைக் கண்ட ஒரு மூத்த டாக்டர் சத்தம் போட்டார். “இங்கே பாருங்கஇப்படி எல்லாரும் இங்கே கூடி நின்னுட்டிருந்தா எங்களால வேலை பார்க்க முடியாது. உங்க குழந்தையை நல்லபடியாபழைய நிலைக்கு மீட்டுக் கொண்டு வரணும்னுதான் நாங்கல்லாம் போராடிட்டிருக்கோம். இவ்வளவு பேர் இங்கே ஒண்ணா கூடி நிக்காதீங்க. ரிசப்ஷனுக்குப் போங்க. அங்கே வெயிட் பண்ணுங்க. ஏதானும் தேவைன்னா நாங்களே வந்து உங்களைக் கூப்பிடுவோம் என்று உச்சஸ்தாயியில் சொல்லி விட்டு, இவர்களின் ரியாக்ஷனை எதிர்பார்க்காமல் .சி.யூ. வார்டுக்குள் நுழைந்தார்.

மூத்த மருத்துவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து பிரவீனின் உறவினர் ஒருவர், குறிப்பிட்ட சிலரை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். ராஜேஸ்வரியையும் பார்த்து இதே வாசகங்களைக் கொஞ்சம் பவ்யமாகச் சொன்னார். ஆனால், ராஜேஸ்வரியோ கெஞ்சினார். “நான்பாட்டுக்கு இப்படி ஓரமாத்தான் இருக்கேன்டா. எம் பேரனை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு, இந்தப் பிரசாதத்தை அவன் நெத்தியில் இட்டு விட்டா நான் இங்கிருந்து போயிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, .சி.யூவின் கண்ணாடிக் கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டு ஒரு சக்கரப் படுக்கையில் பிரவீனைப் படுக்க வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள் வார்டு பாய்ஸ் சிலர்.

அவ்வளவுதான்இதைப் பார்த்த அடுத்த கணமே ராஜேஸ்வரி பரபரப்பானார். அங்கிருந்த அனைவருமே கிடைத்த ஓரிரு விநாடியில் அந்தப் பிஞ்சின் முகத்தைப் பார்த்து ஆறுதல் அடையலாமே என்றுதான் இருந்தார்கள். பிரவீனை நெருங்கி வந்தார்கள்.

தள்ளுங்கதள்ளுங்க என்றபடி வார்டு பாய்ஸ் சக்கரப் படுக்கையை மெள்ளத் தள்ளிக்கொண்டு வந்தார்கள்கிடைத்த இடைவெளியில் சட்டென்று பிரவீன் அருகே தடுமாற்றத்தோடு போனார் ராஜேஸ்வரிஅவனது தலையில் பலமாகக் கட்டுப் போட்டிருந்தார்கள். மகா ஸ்வாமிகள் கொடுத்த விபூதியையும் குங்குமத்தையும் பொட்டலத்தைப் பிரித்து வைத்துத் தயாராக இருந்தார்.

பிரசாதத்தை அவன் நெற்றியில் இடலாம் என்று அருகில் போனபோது, அந்தப் பிஞ்சின் நெற்றியைத் தேடத்தான் வேண்டி இருந்தது ராஜேஸ்வரிக்கு. காரணம் முகத்தில் கண்களைத் தவிர வேறு எந்தப் பகுதியும் அப்போது வெளியே தெரியவில்லை. தலை முழுக்கபேண்டேஜ் போடப்பட்டிருந்ததுபிரவீனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லைமயக்க நிலையில் அவன் இருந்தான்.

நகர்ந்துக்க பாட்டிஉன் பேரனுக்கு ஸ்கேன் எடுக்கத்தான் போயிட்டிருக்கோம். நீங்கல்லாம் இப்படி இவனை சூழ்ந்துகிட்டு நிக்கறது பெரிய டாக்டருக்குத் தெரிஞ்சா, எங்க வேலை காலி என்றபடி, சக்கரப் படுக்கையைத் தள்ளிக்கொண்டு ஸ்கேன் எடுக்கச் செல்வதில் மும்முரம் காட்டினார்கள் வார்டு பாய்ஸ்.

அப்போது அந்த வார்டு பாய்ஸைப் பார்த்து, “ஒரே ஒரு நிமிஷம்ப்பாஅவன் நல்லபடியா பொழச்சு வரணும்னு காஞ்சி புரம் போய் கருணை தெய்வமான மகா பெரியவாகிட்டேர்ந்து பிரசாதம் வாங்கிண்டு வந்திருக்கேன். இதை மட்டும் அவன் நெத்தியில் இட்டு விட்டுடறேன். அவ்வளவுதான் என்றபடி கையில் விபூதியை எடுத்தபடி, பிரவீனின் முகம் அருகே குனிந்தார் ராஜேஸ்வரி.

தன்னையும் அறியாமல் ராஜேஸ்வரியின் கண்கள் தளும்பின. இருக்காதே பின்னே! விபூதியை இடுவதற்கு நெற்றியில் சின்ன இடத்தைக்கூடக் கஷ்டப்பட்டுத் தேட வேண்டி இருக்கிறதே?!

சீக்கிரம் வெச்சு விடும்மா என்று வார்டு பாய்ஸ் அவசரப்படுத்தியதும், விரைவாகச் செயல்பட்டார் ராஜேஸ்வரி. மின்னல் வேகத்தில் பிரவீனின் முகத்தில் தெரிந்த சிறு இடத்தில் விபூதியையும் குங்குமத்தையும் மகா பெரியவாளை நினைத்து இட்டு விட்டார். இதைக் கண்டு பிரவீனின் தாய் கண் கலங்கினாள். வார்டு பாய்ஸும் நர்ஸ்களும், ராஜேஸ்வரியைப் பார்த்து, “கலங்காதீங்கநல்லபடியா மீண்டு வருவான் உங்க பேரன் என்று சொல்லிவிட்டுத் தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள்.

இவ்வளவு நேரம் பதைபதைப்புடன் தெரிந்த ராஜேஸ்வரியின் முகத்தில் இப்போதுதான் ஒரு தெம்பு வந்தது. அதாவது, பேரனே குணமாகித் திரும்பி வந்ததைப் போல் அவரது முகம் காணப்பட்டது. ‘என் வேலை முடிஞ்சுடுத்து. இனி அவனைக் காப்பாத்த வேண்டியது மகா பெரியவா வேலை என்பதான தெம்பு அது.

பிரவீனின் உறவினர்கள் அனைவரும் அமைதியாக வராந்தாவிலேயே காத்திருந்தார்கள். “இப்போது எடுக்கக் கூடிய ஸ்கேன் ரொம்ப முக்கியம். அதன் ரிசல்ட்டை வைத்துதான் அடுத்து பிரவீனுக்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்அவன் பூரண குணமாகித் திரும்புவானா என்பதெல்லாம் தெரியும் என்று வேறு ஒரு நர்ஸ் சொல்லி விட்டுப் போனது, பலரது வயிற்றிலும் புளியைக் கரைத்தது போல் இருந்தது.

ஸ்கேனின் ரிசல்ட் வருவதற்காக அனைவரும் மனதில் திகிலோடு காத்திருந்தார்கள். ஒரு வழியாக ரிசல்ட்டை எடுத்துக் கொண்டு ஒரு டாக்டர் .சி.யூ.வின் உள்ளே நுழைந்தார். ராஜேஸ்வரி பரபரப்பு அடங்காமல், “டாக்டர்ஸ்கேன் ரிப்போர்ட் எப்படி இருக்கு? அவனுக்கு ஒண்ணும் பாதிப்பு இல்லையே? எழுந்து ஓட ஆரம்பிச்சிடுவான் இல்லியா? என்று கேட்டுக்கொண்டு இருந்ததை அரைகுறையாகக் காதில் வாங்கிய மாதிரியும் வாங்காத மாதிரியும் உள்ளே போய் விட்டார் டாக்டர்.

ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அதே டாக்டர் .சி.யூவின் உள்ளிருந்து வெளியே வந்தார்.

பிரவீனை சக்கரப் படுக்கையில் வைத்துக் கூட்டிப் போய், புதிதாக எடுத்து வந்த ஸ்கேனின் ரிசல்ட்டை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர் அனைவரும்.

ஸ்கேன் ரிசல்ட்டுடன் .சி.யூவுக்குள் சென்ற டாக்டர், போன வேகத்திலேயே திரும்பி வந்ததைப் பார்த்ததும், ராஜேஸ்வரி உட்பட வராந்தாவில் காத்திருந்த அனைவரும் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டார்கள்.

என்னாச்சு டாக்டர்சொல்லுங்க. எம் பேரன் பிரவீனுக்கு ஒண்ணும் இல்லேன்னுதானே ஸ்கேன் ரிசல்ட் சொல்லுது? எங்களுக்கு நல்ல செய்தி சொல்லுங்க என்று பரபரப்புடன் பேசினார் ராஜேஸ்வரி.

மெடிக்கல் மிராக்கிள்! என்று ஆச்சரியத்தோடு சொல்லி நிறுத்திய அந்த டாக்டர் சற்று அமைதி காத்தார்அடுத்து அவர் என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறார் என்பதைக் கேட்பதற்காக அனைவரும் பதைபதைப்போடு இருந்தனர்.

ஒரு சில விநாடிகளுக்கு அந்த வராந்தாவே அமைதியாக இருந்தது. இதற்குள் .சி.யூவுக்குள் இருந்து வந்த வேறு சில டாக்டர்களும் இவர்களிடம் கலந்தனர்.

ஸ்கேன் ரிசல்ட்டைக் கையில் வைத்திருந்த டாக்டரே ஆரம்பித்தார். “எப்படி சொல்றதுன்னு தெரியல. முந்தி எடுத்த ஸ்கேனுக்கும் இந்த ஸ்கேனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

வித்தியாசம்னாஎன்ன சொல்றீங்க டாக்டர்? புரியும் படியா எங்களுக்குச் சொல்லுங்க என்று படபடத்தார் பிரவீனின் தாயார்.

நத்திங் டு ஒர்ரீ. நீங்க கவலைப்படும்படியா ஒண்ணும் இல்லே. சந்தோஷமா இருங்க. முதல்ல எடுத்த ஸ்கேன்ல பிரவீனோட மூளை நரம்புகள் அனைத்தும் ஏகத்துக்கும் பழுதடைந்த நிலையில இருந்ததா ரிப்போர்ட் சொல்லிச்சு. ஆனா, இப்ப எடுத்த ஸ்கேன்ல அதுக்கான அறிகுறி எதுவுமே இல்லை. அதாவது அவனோட மூளை நரம்புகள் எல்லாம், நார்மலா அவன் இருக்கறப்ப எப்படி இருக்குமோ, அதே நிலைலஅதாவது நல்ல மாதிரியாவே இருக்குன்னு சொல்லுது. எங்களோட மெடிக்கல் சர்வீஸ்ல இப்படி ஒரு வித்தியாசமான கேஸை நாங்க பார்த்ததே இல்லை என்று முகத்தில் ஆச்சரியம் காட்டினார் அந்த டாக்டர்அவருடன் இருந்த பிற டாக்டர்களும் இதே கருத்தை அவர்களிடம் வலியுறுத்திச் சொன்னார்கள் ஆச்சரியத்துடன்.

அப்படிச் சொல்லுங்க டாக்டர். அதுதான் என் னோட மகா பெரியவா மகிமை. இப்ப சித்த முன் னாடி பிரவீனுக்கு ஸ்கேன் எடுக்கறதுக்காக அவனைக் கூட்டிட்டுப் போனாங்க இல்லஅதுக்கு முன்னாடி காஞ்சிபுரத்துல மகா பெரியவாளைப் பார்த்து எங் குறையைச் சொல்லி, அவர்கிட்டேர்ந்து வாங்கிட்டு வந்த பிரசாதத்தை அவன் நெத்தியில் பூசிவிட்டேன். அந்த மகானின் மகிமைதான், இந்த ஸ்கேன் ரிசல்ட்டை ஒண்ணும் இல்லாம பண்ணிடுச்சு. வேறென்னமெடிக்கல் மிராக்கிளாவதுமண்ணாங்கட்டியாவது என்று குரல் அதிரச் சொல்லி, முகம் நிறைய மலர்ச்சி காட்டினார் ராஜேஸ்வரி.

அதன் பிறகு வந்த நாட்களில் ஓரிரு சின்னச் சின்னப் பிரச்னைகள் பிரவீனைப் பாதித்தது என்றாலும், ஒரு வாரத்திலேயே உருக் குலையாமல் உற்சாகமாக வெளியே வந்தான் அந்த பாலகன்.

ஒரு மருத்துவ அதிசயத்தையே நிகழ்த்திவிட்டு, வீடு திரும்பப் போகும் அவனை ஒட்டுமொத்த மருத்துவமனையுமே கூடி வழி அனுப்பி வைத்தது.

இந்த மகத்தான மாற்றங்களை மகா பெரியவா தவிர, வேறு யாரால் நிகழ்த்த முடியும்? மண்டை உடைந்து, மூளை நரம்புகள் சிதைந்து, பொட்டலமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்த மகன், முழுசாகஅழகாக அவனே நடந்து வெளியே வந்ததைப் பார்த்த அவன் தாய், பாச மிகுதியால் இறுக அணைத்துக் கொண்டாள்.