நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பர் – குணசேகரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது நண்பர் – சுந்தரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் இணைந்து சென்னையில் ஒரு பிஸினஸ் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. பிறகு, ஏனோ தெரியவில்லை. தொழிலில் ஒரு தொய்வு. ‘நீயா, நானா?‘ என்கிற வரக்கூடாத மோதல், இருவரிடமும் ஒரு கட்டத்தில் தலை காட்டிவிட்டது. ஈகோ பிரச்னை.
லட்சம் லட்சமாகப் பணம் கொட்டிய தொழிற்சாலை திடீரென இழுத்து மூடப்பட்டது. ஆனாலும், அங்கே பணிபுரிந்த தொழிலாளர்கள், “இப்படி திடீரென்று உங்கள் பிரச்னையால் இழுத்து மூடிவிட்டால், எங்கள் பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்வோம்? எங்களுக்கு சம்பளத்தைக் கொடுங்கள். இல்லாவிட்டால், செட்டில்மெண்ட் பண்ணுங்கள்“ என்று கொடி பிடிக்கத் தொடங்கினார்கள்.
சுந்தரேசன் இந்தப் பிரச்னையில் கண்டுகொள்ளாமல் ‘எஸ்கேப்‘ ஆகி விட்டார். மாட்டிக்கொண்டவர் குணசேகரன்தான். இயற்கையாகவே மனிதாபிமானம் கொண்ட குணசேகரன், விவகாரம் விகாரமாக மாறாமல் இருப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஏதோ சரிசெய்து தொழிலாளர்களுக்கு ஓரளவு சம்பளத்தைக் கொடுத்துக்கொண்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் விவகாரம் நீதிமன்றத்துக்கே போய்விட்டது. ‘பேசித் தீர்க்கலாம்‘ என்று இருந்த பிரச்னை, வேண்டாத சில அன்பர்களின் தூண்டுதலால் வழக்காகி விட்டது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன், மகா பெரியவாளின் பக்தர். எப்போதோ யாரோ ஒரு நண்பர், தான் காஞ்சிபுரம் செல்லும்போது, ‘சும்மா வாயேன்‘ என்று குணசேகரனையும் கூட்டிக்கொண்டு போனார். பெரியவாளின் தீர்க்கமான பார்வை குணசேகரன் மேல் விழுந்தது. அவரைத் தன் அருகே வரவழைத்து, நலம் விசாரித்துப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.
முன் பின் வந்திராத ஒரு சந்நிதியில் தனக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறதே என்று மகிழ்ந்தவர், பெரியவாளின் திருமுகத்தைப் பார்த்து ஆசி பெற்றுத் திரும்பினார். நண்பருடன் காரில் திரும்பும்போதெல்லாம் ‘மகா பெரியவா‘ இவரது நினைவில் வந்து போனார்.
அதன் பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் காஞ்சிபுரம் சென்று, பெரியவாளைத் தரிசித்துத் திரும்புவார் குணசேகரன். அது அவரது மனதுக்கும் இதமாக இருக்கும்.
தொழிற்சாலைப் பிரச்னை மெள்ளத் தலை தூக்கும்போது அது இந்த அளவுக்குப் போகும் என்று குணசேகரன் எதிர்பார்க்கவில்லைதான். இத்தனைக்கும் அவருடைய பங்கு பெருமளவு அந்தத் தொழிற்சாலையில் முடங்கிக் கிடந்தது.
இப்போதுதான் மகா பெரியவா அவரது நினைவுக்கு வந்தார். அதோடு, இவரது வழக்கை நடத்தி வரும் வக்கீலும், குணசேகரனின் ‘பெரியவா‘ பக்தி பற்றித் தெரிந்து, “வாருங்களேன்… ஒரு முறை காஞ்சிபுரம் போய் பெரியவாளைப் பார்த்துவிட்டு வருவோம். மனசுக்கும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்“ என்றார்.
‘வக்கீல் என்பவர் தன் வாதத் திறமையை வைத்து வழக்கை நடத்தாமல் பெரியவாளைப் போய்ப் பார்க்கலாம் என்கிறாரே‘ என்றெல்லாம் சிந்திக்காமல், அப்போதைய நிலையை உத்தேசித்து, “அப்படியே ஆகட்டும். நாளை காலை காஞ்சிபுரத்துக்குப் புறப்படுவோம். வண்டியை ரெடி பண்ணுங்கள்“ என்றார் குணசேகரன்.
“சரி… நான் நாளை காலை காரில் வந்து உங்களையும் கூட்டிக் கொண்டு காஞ்சிபுரம் புறப்பட்டுப் போவோம்“ என்று கொஞ்ச தூரம் நடந்திருப்பார் வக்கீல்.
அப்போது குணசேகரன் வக்கீலைப் பார்த்து, “ஒரு நிமிடம்…“ என்றார்.
என்ன சொல்லப் போகிறார் என்று திரும்பிப் பார்த்தார் வக்கீல்.
வக்கீலைப் பார்த்து குணசேகரன், “ஒரு நிமிடம்…“ என்றதும், “சொல்லுங்க சார்“ என்று அவரை நோக்கித் திரும்ப நடந்து வந்தார் வக்கீல்.
காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளைப் பார்த்து ஆசி வாங்குவதில் குணசேகரனுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், பணம் சம்பந்தப்பட்ட – லௌகீகமான ஒரு விஷயத்துக்காக அவரிடம் போய், ‘இழந்த செல்வ வளங்களை நான் திரும்பப் பெறுவேனா?‘ என்று கண்ணீர் மல்க நிற்பதில் குணசேகரனுக்கு விருப்பம் இல்லை.
‘மகா பெரியவா – உயர்ந்த ஒரு ஸ்தானத்தில் இருக்கும் பீடாதிபதி. அவருக்கு எத்தனையோ அலுவல்கள் இருக்கும். மடம் சம்பந்தப்பட்ட அலுவல்களில் அறிவுரை வழங்க வேண்டும். ஆலயத் திருப்பணி சம்பந்தமாகத் தன்னைப் பார்க்க வரும் வெளியூர் அன்பர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அடுத்தடுத்து எங்கெங்கு க்ஷேத்ராடனம் புறப்பட வேண்டும் என்று குறிப்புகள் கொடுக்க வேண்டி இருக்கும். இதை எல்லாம் தாண்டி திருமணம் போன்ற சுப காரியங்களுக்காக உதவி கேட்டுத் தன்னிடம் வரும் ஏழை, எளிய மக்களுக்குப் பொருளுதவி செய்ய வேண்டும். இப்படி பல பொறுப்புகளில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் அவரை எனது சொந்தப் பிரச்னைக்காக அணுக வேண்டுமா?‘ – இதுதான் குணசேகரனுக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் புதுக் குழப்பம்.
பலரும் தங்களது சுய தேவைகளுக்காகவும், வசதி பெருகவும், விளம்பரத்துக்காகவும் மடாதிபதிகளைத் தேடிப்போகும் இந்தக் காலத்தில் குணசேகரன் வித்தியாசமானவர்தான்.
“என்ன சார்… கிளம்பிப் போன என்னை, ஏதோ சொல்லணும்னு கூப்பிட்டீங்க. என்கிட்ட பதில் எதுவும் பேசாம யோசனையிலேயே மூழ்கி இருக்கீங்களே?“ – வக்கீல் சற்றுப் பொறுமை இழந்தே கேட்டார்.
“இல்லீங்க… என்னோட ஒரு பர்சனல் பிராப்ளத்துக்காக அவர்கிட்ட போகணுமானு யோசிக்கிறேன். உங்களை மாதிரி ஒரு வக்கீலை அணுகி கேஸை நடத்தி, விஷயத்தை நல்லபடியா முடிக்கணும். இல்லாட்டி, எதிராளிகிட்டயே சமாதானமா போயி பேசி முடிச்சிடணும். நான் சொன்னதுல, ரெண்டாவது வழிக்கு சாத்தியம் இல்லே. முதல் வழி – அதான் கோர்ட்… நீங்க இருக்கீங்க. உங்க வாதத்திறமையாலயும், நம் பக்கம் இருக்கும் நியாயத்தை ஆதாரமா கொண்டும் இந்த கேஸ்ல ஜெயிக்கலாமே?“ – வெகு யதார்த்தமாக குணசேகரன் பேசுவதைக் கேட்டு வக்கீல் பிரமித்து நின்றார். ஒரு சில நொடிகளுக்கு எதுவும் பேசவில்லை.
பிறகு சொன்னார்: “உங்களை மாதிரியே பலரும் இருந்தா, மடாதிபதிகள் இன்னும் பல நல்ல பணிகளைச் செய்ய முடியும்தான். உங்க உயர்ந்த எண்ணத்தைப் பாராட்டறேன். இருந்தாலும், இந்த வழக்கை முடிப்பதற்காக அவரிடம் சிபாரிசுக்கு நாம் போகவில்லை. இந்த வழக்கை நல்ல முறையில் நடத்துவதற்கு அவரது அனுக்கிரஹம் பெறப் போகிறோம், அவ்வளவுதான்.“
‘சரி… மகானைப் பார்த்து அவரது அனுக்கிரஹத்தையும் வாங்கிக் கொண்டு விடுவோம். அவர் அருளால் வழக்கு சுமுகமாக முடியட்டும்‘ என்று தீர்மானித்த குணசேகரன், “ஓகே… நாளை காலை காரில் வந்துவிடுங்கள். நீங்கள் சொல்வதும் சரி என்றுதான் படுகிறது“ என்றார்.
மறுநாள் காலை…
குணசேகரனின் இல்லத்தில் இருந்து காஞ்சியை நோக்கி கார் புறப்படத் தயாரானது.
காரின் முன் ஸீட்டில் வக்கீல் அமர்ந்துகொண்டார். பின் ஸீட்டில் குணசேகரன்! மறக்காமல் வழக்கு சம்பந்தப்பட்ட கேஸ் கட்டுகளையும், ஃபைல்களையும் குணசேகரனுக்குப் பக்கத்தில் அடுக்கி வைத்தார். இது வக்கீலின் ஏற்பாடு.
இதைப் பார்த்ததும் குணசேகரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘காஞ்சி மகானின் அருளாசியின் மேல் வக்கீலுக்கு இப்படி ஒரு அபரிமிதமான நம்பிக்கையா!‘ என்று வியந்தார்.
அப்போது வக்கீல் சொன்னார்: “சார்… ஒரே ஒரு விஷயம் மட்டும் நினைவில் இருக்கட்டும். காஞ்சி மகான் நம்மளைப் பார்த்து ஆசி வழங்கறாரோ இல்லையோ… மடத்துல கூட்டம் எப்படி இருக்கும்னு நமக்குத் தெரியாது. மகான் வெளில வர்றப்ப, அவரோட பார்வை இந்த கேஸ் கட்டு மேல படும்படியா கார் கதவை ஞாபகமா நாம திறந்து வைக்கணும். தீர்க்க முடியாத இந்தப் பிரச்னையை அவரே தீர்த்து வைப்பார்.“
“வக்கீல் சார்… எனக்கும் இந்த நம்பிக்கை இருக்கு. அதுக்காக சின்னப்பிள்ளைத்தனமா, அவரோட பார்வை கேஸ் கட்டு மேல படும்படியா கார் கதவைத் திறந்து வைக்கணும்னு நீங்க சொல்றது, ரொம்ப ஓவரா படுது“ என்று சிரித்தார் குணசேகரன்.
ஆனால், வக்கீல் சிரிக்கவில்லை. “சார்… எத்தனையோ பிரபலமா இருக்கிற டாக்டரா இருந்தாலும் சரி… முக்கியமான வழக்குல தீர்ப்பு சொல்லப் போற நீதிபதியா இருந்தாலும் சரி… அன்னிக்கு வீட்டுலேர்ந்து புறப்படறதுக்கு முன்னாடி பூஜையறைக்குப் போய், ஒரு நிமிடம் வேண்டிக் கொண்டுதான் ஆஸ்பத்திரிக்கோ, கோர்ட்டுக்கோ கிளம்புவாங்க. இதுதான் சார் யதார்த்தம். நம்மளையும் மீறி இருக்கிற ஒரு சக்திதான் சார் உங்களையும் என்னையும் வழி நடத்திச் செல்லுது. இதை அனுபவபூர்வமா என் வாழ்க்கையில பல சந்தர்ப்பத்துல உணர்ந்தவன் நான்“ என்று வக்கீல் விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, கார் ஸ்ரீபெரும்புதூரைத் தாண்டியது.
காஞ்சி மடத்தில் மகா பெரியவாளின் ஆசி பெறுவதற்காக அன்றைய தினம் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. மடத்தின் வாசலில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
குணசேகரனும் வக்கீலும் சென்ற கார், மடத்தின் வாசல் அருகே நிறுத்தப்பட்டது. வக்கீல் ரொம்பவும் உஷார் பேர்வழி. இருக்கின்ற கூட்டத்தையும் பரபரப்பையும் பார்த்துவிட்டு, ஒருவேளை மகா பெரியவாளை நேரில் சந்தித்து தரிசிக்க முடியுமோ முடியாதோ என்ற கவலையில், அவர் மடத்தை விட்டு வெளியே வரும்போது பார்வை பட வேண்டும் என்பதால், அதற்குத் தோதான இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லியிருந்தார் டிரைவரிடம்.
மடத்தின் உள்ளே இருவரும் சென்றார்கள்.
எதிர்பார்த்தபடியே பெரியவாளின் அருகே சென்று அவரின் கனிவான ஆசியையும், நெகிழ வைக்கும் தரிசனத்தையும் இருவராலும் பெற முடியவில்லை.
சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தது வீணாகிவிட்டதோ என்று லேசாக யோசித்தார் குணசேகரன். ‘பெரியவாளின் அருகே சென்று அவரை தரிசிக்க முடியாவிட்டால் என்ன? ஆலய தரிசனத்துக்காக அவர் வெளியே வரும்போது, அவரது பார்வையாவது பட்டால் போதும்‘ என்ற எண்ணத்தில் இருவரும் வெளியே வந்தனர். மடத்தின் உள்ளிருந்து மகான் வெளியே வரும்போது அவரது பார்வை படும்படியான இடத்தில் இருவரும் நின்றனர்.
வக்கீல் வேறு காரின் பின்கதவை – அதாவது கேஸ் கட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும் பின் சீட்டை அவ்வப்போது சிறு குழந்தை போல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார். பின்னே… பெரியவா வெளியே வரும்போது அந்த அவசர நேரத்தில் கார் கதவு திறக்காமல் மக்கர் செய்தால் என்ன பண்ணுவதாம்?
திடீரென மடத்தின் உள்ளிருந்து வெளியே வரும் பக்தர்கள் எண்ணிக்கை பெருகியது. ‘ஆஹா… பெரியவா வரப் போகிறார் போலிருக்கிறது‘ என்று வக்கீல் லேசாக பரபரப்பானார்.
மகா பெரியவாளின் அத்யந்த சீடர்களும், வேத பண்டிதர்கள் சிலரும் வேக வேகமாக மடத்தின் வாசல் அருகே வந்தனர்.
“தள்ளுங்கோ… தள்ளுங்கோ… கோயில் தரிசனத்துக்காக பெரியவா வர்றா… எல்லோரும் ஓரமா நில்லுங்கோ… வழி விடுங்கோ“ என்றபடி பெரியவாளின் உதவியாளர்கள் சிலர் கைகளை அசைத்தபடி வெளியே வந்தனர்.
ஸ்ரீசந்திர மௌளீஸ்வரரைத் தன் பார்வையால் தரிசித்தபடி மகா பெரியவா விறுவிறுவென வெளியே வந்தார்.
இத்தனை நேரமாகத் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்து பலருக்கும் தரிசனத்தையும், ஆசியையும் வழங்கிய சோர்வு துளிக்கூட அந்தக் கருணை தெய்வத்தின் முகத்தில் தெரியவில்லை.
மடத்தின் வெளிவாசலைத் தாண்டி வீதியில் இறங்கினார்.
குணசேகரனும் வக்கீலும் பெரியவாளின் தரிசனம் கிடைப்பதற்காக அந்த மகானின் திருநாமத்தையே உள்ளுக்குள் ஜபித்தபடி உணர்ச்சிப்பெருக்குடன் இருந்தனர் காரின் அருகே.
எத்தனையோ ஜனத்திரள் அங்கே பெருமளவில் கூடி இருந்தாலும், இந்த இருவரையும் தன் தீட்சண்யமான பார்வையால் பார்த்த மகா ஸ்வாமிகள் ஒரு கணம் நின்றார்.
விறுவிறுவென வெளியே வந்த ஸ்வாமிகள், ஏன் ‘ப்ரேக்‘ போட்டு நின்றார் என்பது, அந்தக் கருணை தெய்வத்தைத் தவிர வேறு யாருக்குத்தான் தெரியும்?
பரம்பொருளே அவர்தானே!
மடத்தை விட்டு விறுவிறுவென வெளியே வந்த மகா பெரியவா, திடீரென ப்ரேக் போட்டு வாசலில் நின்றதும், குணசேகரனும் வக்கீலும் மெய்சிலிர்த்துப் போனார்கள். எதை எதிர்பார்த்துத் தாங்கள் காத்திருந்தோமோ, அந்த நிகழ்வு இப்போது நடக்கப் போகிறது என்கிற எண்ணம் அந்த இருவரையும் குதூகலப்பட வைத்தது. ‘பெரியவா கடாட்சம் மட்டும் இப்போது கிடைத்துவிட்டால் போதும். சிக்கலில் இருந்து குணசேகரன் நிச்சயம் விடுபட்டு விடுவார்!‘ – வக்கீல் மனதுக்குள் பெரியவா தியானத்தைத் துவங்கிவிட்டார்.
இருந்தாலும் மனிதனுக்கு இரட்டை மனதல்லவா? குணசேகரன் இப்போதும் குழப்பமாகவே இருந்தார். ‘எலும்புக்கூடுகள் மட்டுமே துருத்திக்கொண்டு வெளியே தெரிகிற மாதிரி இருக்கிற ஒரு சரீரம், காஷாய வஸ்திரத்தைத் தன் மேல் போர்த்திக்கொண்டு செல்கிறது. தன்னையே வருத்திக் கொள்கிறது. வேளா வேளைக்கு ஆகாரம் கிடையாது. ஆடம்பரம் இல்லை. அதிகாரம் இல்லை. அநாவசிய பேச்சுக்கள் இல்லை. இப்படிப்பட்ட ஒரு மானுட தெய்வத்தின் முன்னால் எதை எதையோ வேண்டித்தானே இத்தனை பேர் குவிகிறார்கள்? நானும் அப்படித்தானே!‘ என்று குணசேகரனுக்குள் ஒரு குறும்படமே ஓடிக் கொண்டிருந்தது.
‘லாங் ஷாட்‘டில் இருந்து மகா பெரியவா, இவர்களைப் பார்த்தார். தான் நின்ற இடத்தில் இருந்தபடியே குணசேகரனையும் வக்கீலையும் மட்டும் சாத்வீகமாகப் பார்த்துப் புன்னகைத்தார். பிறகு இவர்களை நோக்கி நடந்து வந்தார். அருகே… மிக அருகே… பெரியவா நெருங்க நெருங்க… இருவரது உடலிலும் அளக்க முடியாத அதிர்வு அலைகள் ஏற்பட்டன.
வக்கீல்தான் பரபரப்பாகச் செயல்பட்டார். நடக்கப் போகின்ற இந்த அருள் நாடகத்தின் சூத்ரதாரி அவர்தானே! தாங்கள் வந்த காரின் பின் கதவை, மகா பெரியவாளின் பார்வை படும்படியாகத் திறந்து வைத்தார். ‘கேஸ் ஜெயிக்கணும். குணசேகரன் இழந்த நிம்மதி, மீண்டும் அவருக்குக் கிடைக்க வேண்டும்.‘
திறந்து வைக்கப்பட்ட காரின் பின்இருக்கைப் பக்கம், மகா பெரியவாளின் தீட்சண்யப் பார்வை விழுந்தது.
பார்வையாலே ஆசிர்வதித்த மகான், அடுத்த நொடியிலேயே அங்கிருந்து நகன்றார். நடந்தார்.
கோயில் தரிசனத்துக்காக அந்த குணக் குன்று தளர்வறியா நடை போட்டு தடுமாற்றம் இல்லாமல் விரைவாக நகர்ந்தது. உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் குணசேகரனும் வக்கீலும் தாங்கள் நின்ற இடத்திலேயே, மகான் செல்லும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்கள்.
“பெரியவா… பெரியவா…“ என்று அந்த நடமாடும் சர்வேஸ்வரனின் திருநாமம் உச்சரித்து, பக்தர்கள் திருக்கூட்டமும் பின்னாலேயே தொடர்ந்தது. ‘ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர‘ கோஷம் காஞ்சி வீதிகளை நிறைத்தது.
தெய்வமே தெய்வத்தை வணங்கச் செல்கிறது. தாயைத் தரிசிக்கத் தனயன் செல்கின்றான்.
பெரியவா தரிசனம் செல்லட்டும். அன்னையோடு அவர் அளவளாவட்டும்.
நாம், குணசேகரனிடம் திரும்புவோம்.
இவரும் வக்கீலும், இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை. கேஸ் கட்டுக்கள் நிரம்பி இருக்கும் காரின் பின் கதவைக்கூட மூட மறந்து நின்றிருந்த வக்கீலின் கண்களில் நீர். குணசேகரன், நிறைசேகரனாகத் தெரிந்தார். ஆனாலும், மகா பெரியவாளைத் தனது ஒரு அல்ப தேவைக்காகத் துன்புறுத்தி விட்டோமோ என்று உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தார்.
வந்த வேலை, சுபமாக முடிந்துவிட்டது. சென்னையை நோக்கி இருவரும் புறப்பட்டனர்.
“வக்கீல் சார்… எல்லாம் ஓகே… நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்க முடியாத தரிசனம் இது. திருவாய் மலர்ந்து அவர் எந்த வார்த்தைகளைச் சொல்லாவிட்டாலும், நாம் இருக்கக்கூடிய இடத்துக்கு அந்தக் கருணை தெய்வமே நடந்து வந்து… சே! பணம், மனுஷங்களை என்னென்ன பாடு படுத்துது“ – சொல்லி முடிக்கும்போது குணசேகரனின் குரலில் குழறல்.
குணசேகரனின் உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்பதை வக்கீல் நன்றாகவே அறிவார். அதனால், பதில் ஏதும் பேசவில்லை. அமைதி காத்தார்.
சென்னைக்கு வந்து சேர்ந்ததும் குணசேகரனை அவரது மனைவி எதிர்கொண்டார். இன்முகத்துடன் வரவேற்றாள். பிசினஸ் விஷயத்தில் இதுவரை இறங்குமுகமாக இருந்ததால், குணசேகரனின் மனைவி சமீப நாட்களாக சற்று வாடித்தான் போயிருந்தாள்.
ஆனால், தன் மனைவியின் முகத்தில், சமீப நாட்களில் இது போன்ற ஒரு மலர்ச்சியை குணசேகரன் பார்த்ததில்லை. அதனால், ஆரம்பத்தில் சற்று தடுமாறினார் குணசேகரன்.
“என்னங்க… உங்க வரவை எதிர்பார்த்துதான் ரொம்ப ஆவலோட காத்திட்டிருக்கேன். முதல்ல, சூடா காபியோ, ஜில்லுன்னு ஜூஸோ கொண்டு வரட்டுமா? டயர்டா இருப்பீங்களே…“ என்றாள்.
வக்கீலுக்கும் இந்த விஷயம் அரசல்புரசலாகத் தெரியும் என்பதால், தன் கண்களைக் கசக்கிப் பார்த்துக் கொண்டார் – ‘நடப்பதெல்லாம் கனவா நனவா‘ என்று.
குணசேகரன் இயல்புக்கு வந்தார். “காபி, ஜூஸெல்லாம் அப்புறம் சாப்பிடறோம். விஷயம் என்னன்னு முதல்ல சொல்லு. உன்னோட சந்தோஷத்தைப் பார்க்கவே எனக்கு ஆனந்தமா இருக்கு. விஷயத்தைச் சொல்லு“ என்று சோபாவில் சற்று சரிவாக அமர்ந்தார்.
“நம்ம தொழிற்சாலை இருக்கிற இடத்தை உடனே வாங்கிடணும்னு ஒருத்தர் வந்தார். என்ன விலை வேணும்னாலும் கொடுக்கிறதுக்குத் தயாரா இருக்கேன்னு சொன்னார்“ – மனைவி மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தியதை குணசேகரன் குழப்பமாகப் பார்த்தார்.
பிறகு, “நீ சொல்றது நல்ல விஷயம்தான். ஆனா, அந்த இடத்தை நான் மட்டும் எப்படித் தனியா விக்க முடியும்? நானும் சுந்தரேசனும் சேர்ந்துல்ல இந்த பிஸினஸை ஆரம்பிச்சோம். இப்ப எனக்கும், அவனுக்கும்தான் ‘டெர்ம்ஸ்‘ சரி இல்லாம பிரச்னை கோர்ட், கேஸுன்னு போயிடுச்சே?“ – நிறுத்திய குணசேகரன், மனைவியின் முகத்தைத் தீர்க்கமாக ஏறிட்டார்.
“இருங்க… நான் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சொல்லி முடிக்கவே இல்லை. தொழிற்சாலைய வாங்க வந்த பார்ட்டிங்க முதல்ல சுந்தரேசனைப் போய் பார்த்துப் பேசிட்டாங்களாம். ‘குணசேகரன் என்ன முடிவெடுத்தாலும், அதுல எனக்குப் பூரண சம்மதம். கோர்ட், கேஸை எல்லாம் வாபஸ் வாங்கிக்கலாம்‘னு சொல்லிட்டாராம்.“
தன் மனைவி சொன்ன செய்தி, இன்ப அதிர்ச்சியாகத் தாக்கியது குணசேகரனை.
“நீ சொல்றதெல்லாம் நெஜமா?“
“ஆமாங்க. இந்தாங்க… இதுதான் இடத்தை வாங்க வந்த பார்ட்டியோட போன் நம்பர். நீங்க வந்ததும் உங்களை உடனே பேசச் சொன்னாங்க“ என்று போன் நம்பர் எழுதிய ஒரு துண்டுக் காகிதத்தைக் கணவரிடம் கொடுத்தார்.
உணர்ச்சி மேலிட அதே கணத்தில் வக்கீலை இறுக அணைத்துத் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார் குணசேகரன்.
பிறகென்ன…
போன் பேசப்பட்டது.
பார்ட்டி வரவழைக்கப்பட்டது.
பேரம் பேசி முடிக்கப்பட்டது.
இரு தரப்பாரும் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.
பெரும்தொகை கை மாறியது.
‘இந்த இடத்துக்கு இவ்வளவு விலையா?‘ என்று குணசேகரனும் சுந்தரேசனும் வியந்தார்கள். வக்கீலும் உடன் இருந்து எல்லாவற்றையும் இணக்கமாக முடித்துக் கொடுத்தார்.
எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து நிம்மதியாக ஹாலில் அமர்ந்தார் குணசேகரன். அங்கே, புன்னகை ததும்பும் முகத்துடன் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மகா பெரியவா படம் தன்னைப் பார்த்து, ‘என்ன… எல்லாம் சுபமா முடிஞ்சுதா?‘ என்று கேட்பதைப் போல் இருந்தது.
ஹாலிலேயே அவரது திருவுருவப் படத்துக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்தார் குணசேகரன். அவரது கண்களில் ஆனந்த வெள்ளம் ஆறாகப் பெருகியது. மகா பெரியவாளுக்கு மனமார நன்றி சொன்னார்.
வக்கீல் ஃபீஸும், தேவை இல்லாத அலைச்சலும் இப்போது மிச்சமாயிற்று. இருந்தாலும், இந்த ஃபீஸை, மகா பெரியவாளுக்கு அல்லவா அர்ப்பணிக்க வேண்டும்! யோசித்த குணசேகரன், அடுத்து வந்த ஒரு சுப தினத்தில் வேத விற்பன்னர்களைத் திரட்டி, பிரமாண்டமான ஓர் அதிருத்ர ஹோமத்துக்கு ஏற்பாடு செய்தார்.
கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவுக்குத் தாராளமாகச் செலவு செய்து, தன் நன்றியை மகா பெரியவாளுக்குக் காணிக்கை ஆக்கினார்.
மகா பெரியவாளின் ஒரு தீட்சண்ய பார்வைக்கு உண்டான மகத்துவம் இப்போது புரிந்ததா?