குங்குமம் எடுக்க ஏன் தயக்கம்?

வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது.

காஞ்சி சங்கர மடத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு ஆகி இருந்தது. அதுவும், மகா ஸ்வாமிகள் இந்த பூஜையில் கலந்துகொள்ளும் சுமங்கலிகளை ஆசிர்வதிப் பதற்காகக் கலந்துகொண்டார்.

மடத்தில் நடக்கும் சுமங்கலி பூஜைமகா பெரியவாளே ஆசிர்வதிக்கும் பூஜைஇப்படிப் பல சிறப்புகள் இந்த வைபவத்துக்கு இருந்ததால் காஞ்சிபுரம், சென்னை, கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட பல வெளியூர்களில் இருந்து சுமங்கலிகள் ஆர்வமாக வந்து இதில் கலந்து கொண்டனர். சுமார் ஆயிரக்கணக்கான சுமங்கலிகள் பங்கெடுத்துக் கொண்ட பிரமாண்டமான திருவிழா!

அன்றைய தினம், மடமே கோலாகலப்பட்டது. வாழைமரங்கள் என்னமாவிலைதோரணம் என்னவேத பாராயணம் என்ன என்று ஆன்மிக மணம் எங்கும் கமழ்ந்தது.

மஞ்சள் முகத்தோடு காட்சி தந்த அனைத்து சுமங்கலிகளின் முகங்களிலும் அம்பாளின் அம்சமான குங்குமம் ஏகத்துக்கும் பிரகாசித்தது. வந்திருக்கும் சுமங்கலிகளைப் பார்த்தாலே, அவர்களுக்கு நமஸ்காரம் செய்யலாம் போன்றதொரு தெய்வீகக் களை, அனைவரின் முகத்திலும் தெரிந்தது.

இவர்களிடையே, வித்தியாசமாக ஒரு பெண்மணி தெரிந்தார். நடுத்தர வயது இருக்கும். அவரது நெற்றி மட்டும் மூளியாகக் காணப்பட்டது. குங்குமம் இல்லை. பூஜை செய்ய வந்தது மாதிரியும் தெரியவில்லை.

சுமங்கலி பூஜை செய்துகொண்டிருந்த பல பெண்மணிகள், வித்தியாசமாகத் தெரிந்த இந்த அம்மையாரைப் பார்த்ததும் நெளிந்தார்கள். ‘இவள் சுமங்கலிதானா? நெற்றியில் குங்குமம் இல்லையே? அப்படி என்றால், இந்த பூஜை நடக்கும் இடத்துக்குள் ஏன் வந்தாள்? என்பது மாதிரியான பல சந்தேகங்கள், அவர்களுக்குள்.

ஒரு சில பெண்மணிகள்குங்குமம் இட்டுக்கொள்ள இவள் மறந்துவிட்டாள் போலிருக்கிறது என்றெண்ணி, தாங்கள் கையில் வைத்திருந்த விதம் விதமான குங்குமச் சிமிழை அவர் பக்கம் நீட்டி, “எடுத்துக்கோங்கோ என்றனர், பரிவுடன்.

ஆனால், அந்தக் குங்குமச் சிமிழைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஏதோ பார்க்கக்கூடாத ஒன்றைப் பார்த்துவிட்டது மாதிரியும், தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பொருள் போலவும் விலகி விலகி நடந்தார் அந்தப் பெண்மணி. இனியும் இங்கு நின்று கொண்டிருப்பது சரிப்படாது என்று தீர்மானித்தவராக, பூஜை நடந்துகொண்டிருக்கும் அந்த ஹாலின் ஒரு மூலையை நோக்கி விறுவிறுவென்று நடந்து சென்று நின்றார்.

மகா ஸ்வாமிகளின் பார்வையில் இது படாமல் போகுமா?

தன் பீடத்தில் இருந்தபடியே, அந்தப் பெண்மணியைப் பார்த்து அருகே வருமாறு சைகை காட்டினார். பெரியவா யாரை அழைக்கிறார் என்று முதலில் ஆளாளுக்குக் குழம்பிய சுமங்கலிகள், பிறகுதான் நெற்றியில் குங்குமம் இல்லாத அந்தப் பெண்மணியை அழைக்கிறார் என்று தெளிந்து, அவரிடம் விவரம் சொன்னார்கள்.

ஆனால், அந்தப் பெண்மணி, மகா பெரியவாளின் சந்நிதானத்துக்கு அருகே செல்ல, மிகவும் தயங்கினார். தான் இருந்த இடத்திலேயே அடமாக நின்று கொண்டிருந்தார். கொஞ்சமும் நகரவில்லை. மகா பெரியவா அழைக்கிறார் என்பது தெரிந்தும், சுரத்தில்லாத முகத்துடன் காணப்பட்ட அவரைப் பார்த்ததும், சிலருக்குக் கோபமே வந்தது. “போங்கோஅந்தக் கருணைத் தெய்வம் உங்களைத்தான் கூப்பிடறது. சீக்கிரம் போங்கோ என்றனர் சில சுமங்கலிகள்.

இருந்த இடத்தை விட்டுப் பெண்மணி நகரவில்லை என்பது தெரிந்தும், மகா பெரியவா தனது அழைப்பை விடவில்லை. மீண்டும், இந்தப் பெண்மணிக்கு சைகை காட்டி அருகே வரச் சொன்னார்.

இதற்கு மேல் அந்தப் பெண்மணியால் அங்கு நின்று கொண்டிருக்க முடியவில்லை. அதற்குள், ஒரு சீடன் இவரிடம் வேக வேகமாக வந்து, “வாங்கோபெரியவா கூப்பிடறார் என்று வலுக்கட்டாயமாக – கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தான்வேறு வழி இல்லாமல், சீடனைப் பின்தொடர்ந்து பெண்மணியும் நடந்தார்.

மகா பெரியவாளின் சந்நிதானத்தின் முன் நெற்றியில் குங்குமம் இல்லாத அந்தப் பெண்மணி நின்று கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை. கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

ஏம்மாசுமங்கலி பூஜை நடக்கற இடத்துல குங்குமம் இல்லாமமூளி நெத்தியோட நின்னுண்டுருக்கியே என்று நிதானமாகக் கேட்டார் மகா பெரியவா.

மீண்டும் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தார் அந்தப் பெண்மணி. அதற்குள் மகா பெரியவா, “தோ பாரம்மாஇது சந்நிதானம். இங்கே பூஜை நடந்திண்டிருக்கு. எத்தனை சுமங்கலிகள் வந்திருக்கா பாரு. இந்த இடமே எவ்வளவு மங்களகரமா இருக்கு. இந்த வேளைல நீ மாத்திரம் கண்ணீரும் கம்பலையுமா இருந்தா, நன்னாருக்குமா? குங்குமம் வெச்சுக்கோ என்றார்.

இல்லே பெரியவாநான் குங்குமம் வெச்சுக்கப் படாது என்றார், தெளிவாக.

பெரியவா பதில் ஏதும் பேசவில்லை. பிறகு, அந்தப் பெண்மணியே தொடர்ந்தார்: “என்னோட கணவர் ராணுவத்துல இருந்தார். எல்லைப் பகுதியில் நடந்த ஒரு சின்ன யுத்தத்துல அவர் இறந்து போயிட்டதா எனக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு சேதி வந்தது. ஆனா, அவரோட உடம்பு வரல. முதல்ல இந்தச் சேதியை நான் நம்பலை. அவர் நிச்சயம் உயிரோட இருப்பார்னு நம்பிண்டு இருந்தேன். வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிண்டு இருந்தேன்அவர் பத்திரமா திரும்பி வரணும்னு. ஆனா

சற்றே நிறுத்திய அந்தப் பெண்மணி, அடக்க முடியாமல் வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு திடமான குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தார்: “என்னோட கணவர் போர்முனைல இறந்துட்டார்னு ரெண்டு மூணு தடவை பேப்பர்ல நியூஸ் வந்துடுத்து. அதனோட கட்டிங்கும் எங்கிட்ட இருக்கு. தவிர, மிலிட்டரில இருக்கிறவா சிலரும் இதை உறுதிப்படுத்திச் சொன்னா. அதுக்கு மேல இந்த விஷயத்தை நம்பாம என்னால இருக்க முடியல. என்னோட தலைவிதினு திடப்படுத்திண்டுட்டேன். நான் இன்னிக்கு ஸ்ரீமடத்துக்கு வந்ததே அகாலமா மரணமான அவரோட கர்மாவை எப்படி நான் செய்யணும்னு உங்ககிட்டே கேக்கறதுக்குத்தான்.

அந்தப் பரப்பிரம்மம் சாதுவாக வீற்றிருந்தது. ஹாலே அமைதியாக இருந்தது.

அந்தப் பெண்மணியே தொடர்ந்தார்: “இன்னிக்கு இங்கே இப்படி ஒரு சுமங்கலி பூஜை நடக்கப் போற விஷயம் எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன். சுப காரியம் நடக்கிற இடத்துல நான் நுழைஞ்சிருக்கவே மாட்டேன். அவருக்கான கர்மாவை செஞ்சு, அவரோட ஆத்மா சாந்தி அடையணும். இதுதான் என் பிரார்த்தனை. நீங்கதான் எனக்கு உபாயம் சொல்லணும். நீங்க இப்ப போகச் சொன்னா இன்னொரு நாள் நான் வர்றதுக்குக்கூடத் தயாரா இருக்கேன்.

மகான், சாதாரணப்பட்டவரா? எங்கோ இருந்துகொண்டு, வேறெங்கோ நடப்பதை ஞான திருஷ்டியால் அறிந்து சொல்பவராயிற்றே! இந்தப் பெண்மணிக்கு என்ன உபாயம் சொல்லப் போகிறார் என்று வந்திருந்த சுமங்கலிகள் உட்பட அனைவரும் தவித்தவாறு காணப்பட்டனர்.

கண்களை மூடிச் சில நிமிடங்கள் தியானத்தில் இருந்த பெரியவா, பின் கண் விழித்தார். அப்போது அவருடைய தேஜஸைப் பார்த்தால், சாட்சாத் சிவ சொரூபமாகவே தெரிந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் உருக்கமாக அவரைத் தரிசித்தனர்.

தன் முன்னால், குங்குமம் இருந்த மரப் பேழைக்குள் கை விட்டார். தன் கை நிறைய குங்குமத்தை எடுக்கவில்லை; அள்ளினார். அந்தப் பெண்மணியிடம் புன்முறுவலாக அதை நீட்டினார்.

பெண்மணி விதிர்விதிர்த்து நின்றார்.

உடன் இருந்த சுமங்கலிகளும் திகைத்துப் போய்க் காணப்பட்டனர்.

முக்காலமும் உணர்ந்த மகான் ஒருவர், புன்னகை ததும்பும் முகத்துடன் தன் திருக்கரங்களால் குங்குமத்தை அள்ளித் தரும்போது, சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி வெலவெலத்த நிலையில் காணப்பட்டார். குங்குமத்தைப் பெற்றுக்கொள்ள ஏனோ அவரது கைகள் முன்வரவில்லை. உடலிலும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது.

அப்போது உடன் இருந்த மற்ற சுமங்கலிகள், “வாங்கிக்கோங்கோமகா பெரியவா கையாலயே உங்களுக்குக் குங்குமம் தர்றார்இதுக்குப் பெரிய பாக்கியம் வேணும் என்று சொல்ல… நடுங்கும் தன் வலக்கையை நீட்டி அந்தக் குங்குமப் பிரசாதத்தை அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

அந்த வேளையில் திருவாய் மலர்ந்தார் மகா பெரியவா. “நெத்தியில இட்டுக்கோம்மா. உன்னோட வருத்தம் தேவை இல்லாதது. உன் கணவர் உயிரோட இருக்கார். கூடிய சீக்கிரமே உங்கிட்ட அவர் திரும்ப வரப்போறார். உன் முகம் பிரகாசம் பெறப் போறது.

இந்த வார்த்தைகளை அவரது திருவாக்கில் இருந்து பெற்ற பின், அந்தக் குங்குமத்தை மிகுந்த பயபக்தியுடன் தன் கண்களில் முதலில் ஒற்றிக்கொண்டார் பெண்மணி.

ஒரு பெண்ணுக்கு எது முக்கியம்?

சொத்தா? சுகமா? ஆடம்பரமா?

இவை எதுவுமே இல்லை.

தழையத் தழையத் தன் கழுத்தில் மங்கலகரமான மஞ்சள் கயிறு புரள்வதைத் தவிர, வேறு எதுதான் ஒரு பெண்ணுக்கு நிரந்தர சுகத்தைத் தந்துவிட முடியும்? தன்னையே வருத்திக் கொண்டு, தன் கணவனுக்குப் பணிவிடை செய்பவள்தானே நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க முடியும்! அவனுடைய சுகத்தையும் சந்தோஷத்தையும் கண்டு மகிழ்ந்து, தானும் இன்புறுபவள்தானே நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க முடியும்?!

உயிரோடு இல்லை என்று ஆறு மாதங்களாக ஆணித்தரமாக நம்பி வந்த துக்ககரமான ஓர் உண்மை, மகா பெரியவா திருச்சந்நிதி முன்னால் இன்று பொய்யாகிப் போனது. ‘உயிரோடு இல்லை என்று நம்பப்பட்ட தன் கணவன் திரும்ப வரப் போகிறான் என்று இவர் சொன்ன வாக்கு பொய்யாகுமோ? மகானின் ஆசி, பலிக்காமல் போனதுண்டோ? அதுவும்சாட்சாத் சிவ சொரூபமாக நடமாடிக் கொண்டிருக்கும் இந்தக் கலியுக தெய்வம் சொன்னது எப்படிப் பலிக்காமல் போகும்?

கண்களில் நீர் தாரை தாரையாகக் கொட்டதன் வாழ்வே புனர்ஜன்மம் அடைந்ததாகக் கருதிமகான் அருளிய அந்தக் குங்குமப் பிரசாதத்தைத் தன் நெற்றியில் கொண்டு போய், பெரிய பொட்டாகத் தீற்றிக்கொண்டாள் பெண்மணி. அப்போது அவர் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அங்கே திரளாகக் குழுமி இருந்த சுமங்கலிகள் பலரும் அந்தப் பெண்மணிக்குத் தங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் சொன்னார்கள். பூஜையில் கலந்துகொண்ட சுமங்கலிகள் பலரும் அந்தப் பெண்மணிக்கு பூ, வெற்றிலைபாக்கு, குங்குமம் அடங்கிய பிரசாதங்களைக் கொடுத்து, சூழ்நிலையை மெருகேற்றினார்கள்.

மடத்தின் உள்ளே வரும்போது மூளி நெற்றியுடன் வந்த பெண்மணி, அங்கிருந்து புறப்படும்போது நெற்றி நிறைய பிரகாசிக்கும் குங்குமத்துடன் வெளியே வந்தது பற்றிப் பலரும் வியந்துதான் பேசினார்கள்.

அதிசயங்களையும் அற்புதங்களையும் அடிக்கடி நிகழ்த்தி வரும் மகா பெரியவா, இந்தப் பெண்மணியின் வாழ்விலும் திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்தினார், அடுத்து வந்த நாட்களில்.

ஒரு வாரம் ஓடிற்று. மகா பெரியவாளின் திருவாக்கு பலிக்கப் போகும் திருநாளாக அந்த நாளின் அதிகாலைப் பொழுது அமைந்தது.

இறந்ததாகக் கருதப்பட்ட அவருடைய கணவர் அன்றுமெலிந்து போய், முகத்தில் பொலிவிழந்து, தேகத்தில் சுரத்திழந்துவீட்டுக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் பெண்மணி, அதிசயித்துப் போனார்.

அல்பாயுசில் போனதாகக் கருதப்பட்ட வாழ்க்கையில், அள்ளிக்கொடுத்த குங்குமம் அற்புதமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது கண்டு நெகிழ்ந்தாள்; நெக்குருகினாள்.

கணவரைக் கண்ட மாத்திரத்தில் அவரது திருப்பாதங்களில் விழுந்து கால்களைக் கட்டிக்கொண்டு தேம்பினாள். அவனது தேகத்தை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டு விசும்பி விசும்பி கதறினாள். “என்னை விட்டுட்டு இவ்ளோ நாள் எங்கே போனீங்க? என்னென்னவோ சேதி எல்லாம் வந்து என்னைப் பாடா படுத்திடுச்சே என்று புலம்பியவளை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தார்.

நீ கேள்விப்பட்ட செய்தி எல்லாம் நிஜம்தான். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பையே தொட்டுவிட்ட நான் இறந்ததாகக் கருதப்பட்டேன். எந்தவிதமான சலனமும் சன்னமான மூச்சுக் காத்தும் இல்லாமல் இருந்த என்னை எதிரிகள், ‘இறந்து விட்டான் என்று கருதி, என் உடலை எங்கோ இழுத்துக் கொண்டுபோய் அநாதரவாகப் போட்டுவிட்டார்கள். ‘நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்வது மிகவும் மேலானது என்றுதான் அப்போது என் நிலைமை இருந்ததுயாரோ சில மலைவாசிகளின் புண்ணியத்தால், எனக்கு புனர்ஜன்மம் கிடைத்தது. என்னைக் காப்பாற்றினார்கள். உனது பிரார்த்தனையும், தாலி பாக்கியமும்தான் என்னை மீண்டும் இங்கே கொண்டுவந்தது என்று சுருக்கமாகச் சொல்லி, தன் மனைவியைக் கட்டிக்கொண்டு நீண்ட நாள் பாசத்தை வெளிப்படுத்தினார் அவரது கண்களும் பனித்தன.

உடனே புறப்படுங்கள்காஞ்சிக்குச் செல்வோம். உங்களுக்கு மறுவாழ்வு தந்து, இழந்த பிரகாசத்தை என் முகத்தில் மீண்டும் தவழவிட்டது அந்தக் கருணை தெய்வம்தான். அவருக்கு நன்றி சொல்லி, அவரது திருப்பாதம் தொழுது வருவோம். அதன் பிறகுதான் அன்ன ஆகாரம் என்று மனைவி சொல்ல… அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தை நோக்கிப் பயணித்தார்கள்.

இவர்கள் இருவரும் குதூகலமாக மடத்துக்குள் நுழையும்போதே, அங்கிருந்த பலரும் இவர்களை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள் போலிருக்கிறது! “போன வாரம்தான் இந்தம்மா இங்கே வந்து, தன் கணவனுக்கு இறுதிக் கார்யங்களை எப்படிச் செய்யவேண்டும் என்று கேட்பதற்காக மடத்துக்கு வந்திருந்தார். பெரியவாதான் குங்குமம் கொடுத்து, சந்தோஷமா அனுப்பி வெச்சா என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

தன் பீடத்தில் படு அமர்க்களமாக அமர்ந்திருந்த அந்தப் பரப்பிரம்மம், இவர்களைப் பார்த்துப் பெரிய புன்முறுவல் பூத்தது. “வாம்மாபுருஷனோட சந்தோஷமா வந்திருக்கேஇனிமே, உனக்கு எந்தக் குறையும் இருக்காது என்று சொல்லி, மீண்டும் பிரசாதம் வழங்கியது.

அவரது திருவடிக்கு ஆனந்தக் கண்ணீரையும் சாஷ்டாங்க நமஸ்காரத்தையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள் அந்தத் தம்பதியர்.