எழுந்திரு சீதே….எங்கே ராமன்?

ஞ்சை மாவட்டத்தில் காவிரி பாயும் புண்ணிய பூமிதிருவையாறு. காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு ஆகிய ஐந்து நதிகள் இங்கே பாய்வதால் இது திரு ஐயாறு என்றானது. திருவையாறில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் திருப்பூந்துருத்தியை அடுத்து உள்ள கிராமம்நடுக்காவிரி. இரண்டு சிவத் தலங்கள் இங்கு உண்டு. ஒரு காலத்தில் வேத பண்டிதர்கள் வாழ்ந்த சிற்றூர்.

இப்போது சொல்லப் போகும் கதை நடந்தது 1942-ஆம் வருடம் என்று சொல்லப்படுகிறது. நடுக்காவிரியில் வசித்து வந்தவர்களுள் ஒருவர் சின்னஸ்வாமி ஐயர். இறை பக்தியில் தங்களையே வருத்திக் கொண்ட குடும்பம் இது. ஆச்சார அனுஷ்டானங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தவர் சின்னஸ்வாமி ஐயர். தர்ம சிந்தனை கொண்டவர். திருவையாறு பக்கம் வரும்போது மகா பெரியவா இவரது கிரஹத்துக்கு அவசியம் விசிட் செய்வார்.

பகல் வேளையில் வீட்டில் சிவ பூஜை செய்வார் சின்னஸ்வாமி ஐயர். அது முடிந்ததும், உள்ளூரில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று ஈசனை மனமுருகி வழிபடுவார். இரவு வேளையில் ராமாயண உபன்யாசம் செய்வார். சிவவைணவ பேதம் இவருக்குக் கிடையாது. உள்ளூர்க்காரர்கள் உட்பட அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தும், இவரது ராமாயண உபன்யாசம் கேட்க அன்பர்கள் வருவதுண்டு.

இவருடைய மகன் பெயர் ராமச்சந்திரன் என்பதாகும். ராமச்சந்திரனின் மனைவி பெயர்சீதாலட்சுமி (என்ன ஒரு பொருத்தம்!). ராமச்சந்திரன் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அப்போது இந்தக் குடும்பம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தது. அதன் பிறகு 13 வருடங்கள் உருண்டோடியும், சீதாலட்சுமி மணி வயிறு வாய்க்கப் பெறவில்லை. துள்ளி விளையாட வீட்டில் ஒரு குழந்தை இல்லையே என்கிற கவலை எல்லோருக்கும் இருந்தது. ஆனாலும், மகா பெரியவா மீது அதீத பக்தி கொண்ட குடும்பம் என்பதால், தன் வம்சம் வளர வேண்டும் என்றால், அது மகா பெரியவாளின் அனுக்ரஹத்துடன் நடக்கும் என்று தீர்மானித்து விட்டார் சின்னஸ்வாமி ஐயர்.

ராமச்சந்திரன்சீதாலட்சுமி தம்பதியும், மகா பெரியவாளின் அருள் இருந்தால் நமக்குக் குழந்தை பாக்கியம் இருக்கும் என்று திடமாக நம்பினர்.

கருணை தெய்வம் கண் திறக்காமல் இருக்குமா?

இந்தக் காலகட்டத்தில் நடுக்காவிரிக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. நடுக்காவிரியில் உள்ள சாமி ஐயர் என்பவரது வீட்டுக்கு மகா பெரியவா வந்து தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் நடந்தன. ஊர் எல்லையில் இருந்து மகா பெரியவாளுக்கு நாதஸ்வர இன்னிசையுடன் பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு கொடுத்தார்கள், அக்ரஹாரத்தில் வசித்து வந்த அந்தணர்கள்.

வேத கோஷம் முழங்கதிரளான ஆன்மிக அன்பர்களுடன் பூர்ணகும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டு தெருவில் கன ஜோராக நடந்து வந்துகொண்டிருந்தது அந்த கலியுக தெய்வம்.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மகா பெரியவாளுக்கு அமோக வரவேற்பு. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பழங்கள், புஷ்பம், கல்கண்டு, திராட்சை, முந்திரி போன்றவற்றை மகா பெரியவாளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி, நமஸ்காரம் செய்து அவரை வரவேற்றனர்.

அடுத்து, அவரது பாதையில் வரப் போகும் வீடுசின்னஸ்வாமி ஐயரது வீடு. அவரது மருமகள் சீதாலட்சுமி அப்போதுதான் வாசலில் நீர் தெளித்து, அழகான கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

திருவையாறு அருகே உள்ள நடுக்காவிரியின் வீதிகளில் வேத கோஷம் முழங்கதிரளான பக்தர்களின் நாம ஜப பாராயணத்துடன் கருணை தெய்வம் கிராமத்து மக்களுக்கு ஆசி வழங்கியபடி சிவ சொரூபமாக உலா வந்து கொண்டிருந்தது.

அக்ரஹாரத்தில் வசிக்கும் சாமி ஐயர் என்பவரது வீட்டில்தான் மகா பெரியவாளும் அவரது சிஷ்யகோடிகளும் தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டிருந்தன. தங்குவதற்கும் உணவுக்கும் அங்கே தடபுடல் ஏற்பாடுகள். சாமி ஐயரது வீட்டுக்குச் செல்லும் வழியில்தான் சின்னஸ்வாமி ஐயரின் வீடு.

பதின்மூன்று வருடங்கள் உருண்டோடியும் தனக்கு புத்திர பாக்கியம் இன்னும் வாய்க்கவில்லையே என்கிற ஏக்கத்துடன் வாழ்ந்து வந்த சின்னஸ்வாமி ஐயரின் மருமகளான சீதாலட்சுமி, மகா பெரியவாளை வரவேற்கும் முகமாகத் தன் வீட்டு வாசலில் நீர் தெளித்து, அவசர அவசரமாக மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்தார் (இவருக்கு முதல் குழந்தை பிறந்து இறந்த தகவலை ஏற்கெனவே சொல்லி இருந்தோம்).

க்ஷேத்திராடனத்தின் ஒரு பகுதியாக நடுக்காவிரிக்கு விஜயம் செய்திருக்கும் மகா பெரியவா, எப்படியும் தங்களுக்குக் குழந்தை வரத்தை அருள்வார் என்று சீதாலட்சுமி – ராமச்சந்திரன் தம்பதியர் பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர்மகா பெரியவாளின் நடுக்காவிரி விஜயம் எப்படியும் தங்களுக்கு நல்ல செய்தியைச் சொல்லும் என்று அவர்கள் திடமாக நம்பினர்.

மகா பெரியவாளை நம்பினோர் கைவிடப்பட்டதாக சரித்திரம் உண்டா? அகராதியில் அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

நம்பிக்கையைப் பொய்க்க விடுவாரா காஞ்சி மகான்?

வீட்டு வாசலில் அழகாக மாக்கோலம் போட்டுக் கொண்டிருக்கும் சீதாலட்சுமியைப் பார்த்த மாத்திரத்தில், ஊர்வலத்தில் இருந்து சற்றே விலகி, விறுவிறுவென நடந்து வந்து மாக்கோலத்தின் அருகேஅதன் மீது தன் திருப்பாதங்கள் படாமல் நின்றார் பெரியவா. சீதாலட்சுமி விதிர்விதிர்த்துப் போய்விட்டார்.

தனக்கு அருகே அந்த நடமாடும் தெய்வம் நின்று கொண்டிருப்பதை சீதாலட்சுமியால் நம்ப முடியவில்லை. தடாலென்று மகானது திருப்பாதங்களில் வீழ்ந்தார். எங்கிருந்துதான் பொலபொலவென்று கண்ணீர் வந்ததோ, தெரியவில்லைமகா பெரியவாளின் திருப்பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினார் சீதாலட்சுமி. பக்தியின் மிகுதியால் அவரால் பேசக்கூட முடியவில்லை.

எழுந்திரு சீதேஎங்கே உன் ராமன் (ராமச்சந்திரன்)? கூப்பிடு அவனை என்றவர், எவரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், சீதாலட்சுமியின் வீட்டுக்குள்அதாவது சின்னஸ்வாமி ஐயரின் வீட்டுக்குள் நுழைந்தார்.

மகா பெரியவாளின் உத்தரவை நிறைவேற்ற வேண்டுமே! தன் நாயகன் எங்கே இருக்கிறான் என்று பதைபதைப்புடன் அக்கம்பக்கம் தேட ஆரம்பித்தார் சீதாலட்சுமி.

தன் வீட்டுக்குள் முன்னறிவிப்பே இல்லாமல் பொசுக்கென்று மகா பெரியவா நுழைந்ததைக் கண்டு சின்னஸ்வாமி ஐயர் ஏகத்துக்கும் பிரமித்துவிட்டார். பெரியவாளைத் தரிசிப்பதற்காக அப்போது அவரது வீட்டில் குழுமி இருந்த உறவினர்களும் நெகிழ்ந்து, மகானின் திருப்பாதங்களில் நமஸ்கரித்தனர்.

தனக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட வீடு போல் விறுவிறுவென்று நுழைந்த மகா பெரியவா தன் பார்வையால் அங்கும் இங்கும் துழாவினார். பிறகு, தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கும் ஓர் அறையைத் தானே திறந்து அதற்குள் சென்றார்.

அந்த அறைஅதிகம் பயன்பாட்டில் இல்லாதது. வீட்டுக்கு அதிகம் பயன்படாத கடமுடா பாத்திரங்களையும் மூட்டை முடிச்சுகளையும் அந்த அறையில் போட்டு வைப்பது சின்னஸ்வாமி ஐயரின் குடும்ப வழக்கம். பொசுக்கென மகா பெரியவா அந்த அறையின் கதவைத் திறந்ததால், உள்ளிருந்து தூசி புழுதிப் படலமாகக் கிளம்பியது. திடீரெனக் கிளம்பிய புழுதி, அங்கே கூடி இருந்த சிலருக்கு இருமலை வரவழைத்தது. ஆனால், மகா பெரியவா எதைப் பற்றியும் கவலைப்படாமல், அழுக்கேறிப் போயிருந்த தரையைத் தன் மேல் வஸ்திரத்தால் ரெண்டு மூன்று முறை தட்டிவிட்டு, தரையிலேயே அந்த வஸ்திரத்தை விரித்து, அதில் சலனமே இல்லாமல் அமர்ந்து கொண்டார்.

வீட்டில் அப்போது இருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக அந்த அறையில் குழுமிவிட்டனர்.

சின்னஸ்வாமி ஐயர் மெள்ள பெரியவாளை நெருங்கி, “பெரியவாஇந்த ரூம் ரொம்ப டஸ்ட்டா இருக்கு. ஹால்ல எழுந்தருளி எல்லோருக்கும் அனுக்கிரஹம் பண்ணலாமே? என்று சொன்னதை, மகா பெரியவா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதற்குள் சீதாலட்சுமி தன் கணவன் ராமச்சந்திரனுடன் ஓடோடி வந்து பெரியவாளின் முன்னால் நின்றார். இருவரும் இணைந்து மகா பெரியவாளை நமஸ்கரித்தனர்.

ராமா (ராமச்சந்திரா)… உடனே போய் உன் வீட்டுப் பசுமாட்டில் இருந்து பால் கறந்து ஒரு சொம்பில் கொண்டு வா என்றார் பெரியவா.

உத்தரவு பிறந்த அடுத்த விநாடி, வீட்டில் இருந்து ஒரு சொம்பை எடுத்துக்கொண்டு மாட்டுக் கொட்டடிக்குப் போனார் ராமச்சந்திரன். ஒரு பசுமாட்டிடம் இருந்து பாலைக் கறந்து எடுத்து வந்து அதை மகா பெரியவா முன் வைத்தார்.

எதற்குப் பசும்பால் கேட்டார்? தாக சாந்தி செய்து கொள்வதற்காக இருக்குமோ? என்று பலரும் குழம்பிய நிலையில், அடுத்து என்ன சொல்லப் போகிறார்செய்யப் போகிறார்

என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் அனைவரும் பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த வேளையில் சீதாலட்சுமியும் ராமச்சந்திரனும் மீண்டும் ஒரு முறை மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தனர். கண்களை மூடி ஒரு சில நிமிடங்கள் ஜபித்த மகா பெரியவா பிறகு ராமச்சந்திரனைப் பார்த்து, “ராமாஇந்தப் பாலைக் கொண்டுபோய் குடமுருட்டி ஆற்றிலே விட்டுடு. பிறகு, சொச்சம் இருக்கும் கொஞ்சூண்டு பாலைக் கரையில் ஊற்றி விட்டு, அந்த இடத்தில் இருக்கும் மண்ணைக் கொஞ்சம் தோண்டு. அதில் ஒரு அஸ்திவாரம் தெரியும். அதன் மேல் ஒரு விநாயகர் கோயில் கட்டு. க்ஷேமமா இருப்பே என்று சொன்ன பெரியவா, துண்டை உதறிவிட்டு எழுந்து வெளியே வந்தார். சாமி ஐயரது வீட்டை நோக்கி நகரும் யாத்திரையில் கலந்தார்.