ஆசீர்வதித்து கொடுத்த வேல்

கா பெரியவாளின் அன்பையும் ஆசியையும் பெற்ற பக்தர்கள், பூரணமாக ஆசிர்வதிக்கப்பட்ட வர்கள். யாத்திரையாகப் பல இடங்களுக்கு காஞ்சி தெய்வம் பயணித்தபோது, தங்களது சொந்த ஊரில் அவரைச் சந்தித்து, சேவை செய்த நல்லிதயங்கள் பல.

பெரியவா தங்கள் ஊருக்கு வர மாட்டாரா, தங்கள் இல்லத்தில் பிக்ஷை ஏற்றுக்கொள்ள மாட்டாரா, இங்கேயே ஒரு சில நாட்களுக்கு முகாமிட்டுத் தங்க மாட்டாரா என்று ஏங்கிய வசதி படைத்தவர்கள் ஏராளம். ஒவ்வொரு கிராமத்துக்கும் பெரியவா விஜயம் செய்யப் போவதாக முன்கூட்டியே தகவல் போனதும், அங்குள்ள பல பிரபலங்கள், ‘எங்கள் இல்லத்தில் மகா பெரியவா தங்கட்டும். அவர் அனுஷ்டானங்களைச் செய்வதற்கு உண்டான வசதிகள் இங்கே இருக்கின்றன. உணவு தயாரித்து வழங்குவதற்கும், சீடர்கள் தங்குவதற்கும், பக்தர்கள் தடை இல்லாமல் வந்து தரிசனம் செய்து திரும்புவதற்கும் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றெல்லாம் குறிப்பிட்டு, ஸ்ரீமடத்துக்குக் கடிதம் எழுதுவார்கள்.

ஆனால், எந்த நாளில் எந்த இடத்தில் தங்க வேண்டும் என்று ஸ்ரீமடத்தின் அதிகாரிகளுடன் கலந்து பேசித் தீர்மானிப்பார் பெரியவா. எவருக்கும் எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார் மகா பெரியவா.

பெரியவா தங்கள் இல்லத்துக்கு வருகிறாரோ, இல்லையோஅவர் தங்கி இருக்கும் இடமே ஒரு கோயில்தான் என்றெண்ணி, அந்த முகாமுக்குச் சென்று அவரை தரிசித்து, ஆசி பெற்றுத் திரும்புவதும் பலரது வாடிக்கை. காஞ்சி ஸ்வாமிகள் ஒரு கிராமத்தில் தங்கி இருக்கிறார் என்றால், அந்த ஊர், பெரியவா வந்து சேருவதற்கு முன்பிருந்தே விழாக் கோலம் பூண ஆரம்பித்து விடும்.

1945-ஆம் ஆண்டு மகாமகத்தை ஒட்டி கும்பகோணத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. மகாமக தீர்த்தக் குளத்தில் நீராடினார். பல மாதங்கள் கும்பகோணத்தை ஒட்டிய ஊர்களுக்கு விஜயம் செய்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அடுத்த வருடம் ஏப்ரல் வரை உள்ள ஆறு மாத காலத்துக்கு ஆடுதுறையை அடுத்துள்ள மேலூர் என்கிற கிராமத்தில் ஸ்வாமிகள் தங்கி இருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த ராமச்சந்திர ஐயர், குறிப்பிடத் தகுந்த மிராசுதார். பெரியவாளின் பக்தர். தன் சொத்துக்களை மடத்தின் தர்ம காரியங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, பெரியவா சேவையே இனி எனக்குத் தேவை என்று உளம் பூரித்தவர் அவர்.

1946-ஆம் ஆண்டு வியாச பூஜை கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் கோலாகலமாக நடந்தது. சுமார் நான்கு மாதங்கள் இந்த மடத்திலேயே தங்கி இருந்து, அவ்வப்போது அக்கம்பக்கக் கிராமங்களுக்கும் விசிட் செய்தார் பெரியவா.

காவிரிக் கரை ஓரம் அமைந்துள்ளது இந்த ஸ்ரீமடம். மகா பெரியவா எப்போது இந்த ஸ்ரீமடத்தில் தங்கி இருந்தாலும், அவரைத் தரிசிக்க வரும் பக்தர்கள், அதற்கு முன்னால் காவிரிக் கரையில் ஸ்நானம் செய்துவிட்டு, அப்படியே ஸ்ரீமடத்துக்கு வந்து பெரியவாளையும் அங்குள்ள பிற ஆச்சார்யார்களின் அதிஷ்டானங்களையும் தரிசித்துவிட்டுப் போவது வழக்கம்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள கொட்டையூர், பாபுராஜபுரம், திம்மக்குடி, இன்னம்பூர், திருப்புறம்பயம், விஷ்ணுபுரம், அசூர், தேப்பெருமாநல்லூர், திருவிடைமருதூர் என்று பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் புறப்பட்டு வருவார்கள், பெரியவாளைத் தரிசிக்க. கும்பகோணத்துக்கு பெரியவா வந்தாலே, கோலாகலம்தான்.

இப்போது, மகா பெரியவாளின் கும்பகோண விஜயத்துக்கு வருவோம். ஸ்ரீமடத்தில் பெரியவா முகாமிட்டிருந்தபோது, தன் கணவர் சுப்ரமண்யத்துடன் மகா ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றார் மதுரம் என்கிற பக்தை. அப்போதுதான் அவருக்குத் திருமணம் ஆகி இருந்தது.

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம்திம்மக்குடி. இந்தக் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் மதுரம் சுப்ரமண்யம். நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள கொத்தங்குடி, சுப்ரமண்யத்தின் பூர்வீகம்.

மதுரத்தின் திம்மக்குடி வீட்டுக்கெல்லாம்கூட மகா பெரியவா வந்து, சில மணி நேரங்கள் தங்கி இருந்து அவரது குடும்பத்தை ஆசிர்வதித்துச் சென்றதுண்டு. மகானின் பூரண அருளைப் பெற்ற குடும்பம் என்றே சொல்ல வேண்டும்.

பெரியவா நம்மூருக்கு வந்திருக்காளேனு சும்மா தரிசனம் பண்ணப் போறேன். மனசுல பிரார்த்தனைனு ஒண்ணும் இல்லே என்று பலர் வெளிப்படையாகச் சொன்னா லும், மனதுக்குள் ஒரு கோரிக் கையையோ பிரார்த்தனை யையோ வைத்துக்கொண்டு தானே தரிசனத்துக்குப் புறப்படுகிறார்கள்?

அப்படித்தான் மதுரமும் சுப்ரமண்யமும் கும்பகோணம் ஸ்ரீமடத்துக்குப் பெரியவாளைத் தரிசிக்கப் புறப்பட்டார்கள். இருவருடைய மனதிலும் ஒரு பிரார்த்தனை இருந்தது. மருத்துவ உலகால் தீர்க்க முடியாதவற்றை மகான்கள்தானே தீர்த்து வைப்பார்கள்?

மதுரத்தின் மாமியார்மாமனார்அதாவது சுப்ரமண்யத்தின் பெற்றோர் காசிநாதய்யர், குஞ்சம்மாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு பிரார்த்தனைக்காகத்தான் இருவரும் கும்பகோணம் ஸ்ரீமடத்துக்கு வந்தார்கள். ‘தாய்க்குத் தாயாகவும், மாமியாருக்கு மாமியாராகவும் இருந்து வரும் குஞ்சம்மாள், பூரண நலம் பெற வேண்டும் என்பது மட்டுமே மதுரத்தின் பிரார்த்தனையாக இருந்தது.

மதுரத்தின் மாமியார் குஞ்சம்மாளுக்கு அப்போது வயது சுமார் நாற்பத்தைந்து இருக்கும். பாழாய்ப் போன வயிற்று வலி ஏனோ அவரைப் பாடாய் படுத்தியது. வலி என்றால், சாதாரண வலி இல்லை. அத்தகைய நேரங்களில் குஞ்சம்மாள் அழுதே விடுவார். மாமியார் படும் அவஸ்தையை நேரில் பார்த்து மனம் குமுறுவார் மருமகளான மதுரம். அந்த நேரத்தில் வேறென்ன செய்ய முடியும், பாவம்?!

உபாதையின் உபத்திரவம் உச்சத்துக்குப் போகபகலிலும் இரவிலும் நிம்மதி இன்றித் தவித்தார் குஞ்சம்மாள். இதற்காக காசிநாதய்யர் தேடாத மருத்துவர் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. எல்லாமே செய்து பார்த்தாயிற்று. பணத்தையும் செலவழித்தாயிற்று. ஆனால், நிவாரணம்தான் காணோம். இதற்கு மேல் காசிநாதய்யர் என்ன செய்வார்?

மாமியாரின் அவஸ்தையையும் மாமனாரின் மன உளைச்சலையும் கண்டு கண் கலங்கினார் மதுரம். அந்த வேளையில் கும்பகோணம் ஸ்ரீமடத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. ‘வாருங்கள்நம்மூருக்கு வந்திருக்கிறார் காஞ்சி ஸ்வாமிகள். அவரிடம் போய் நம் பிரார்த்தனையைத் தெரிவிப்போம். அவர் நிச்சயம் அருள்வார் என்று தன் கணவர் சுப்ரமண்யத்திடம் சொல்ல, அவரும் சந்தோஷமாகப் புறப்பட்டு விட்டார், கும்பகோணத்துக்கு.

கும்பகோணம் நகரமே அன்று கோலாகலமாக இருந்தது. எங்கெங்கு பார்த்தாலும், வேத கோஷம் என்னபாராயணம் என்னபக்தர்கள் கூட்டம் என்னஇப்படி ஜே ஜேவென்றிருந்தது. ஸ்ரீமடத்துக்குள் நுழையவே முடியாதபடி ஜன வெள்ளம். மடத்துக்கு அருகில் உள்ள இடங்களில் கட்டப்பட்டிருந்த யானை, ஒட்டகம், குதிரை போன்றவற்றை வேடிக்கை பார்க்க என்றே மழலையர் பட்டாளம் குதூகலத்துடன் கூடிக் கும்மாளம் போட்டது.

கொத்தங்குடி ஸ்ரீநிவாச ஐயரை நன்கு அறிந்தவர் மகா பெரியவா. அவருடைய பேரன்தான் இந்த சுப்ரமண்யன். எனவே, மடத்துக்குள் போனதும் பெரியவாளை உடனடியாகச் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. தன் மனைவி மதுரத்தையும் உடன் அழைத்துக் கொண்டு, அங்கே கூடி இருந்த பக்தர்கள் எனும் கடலை நீந்தி பெரியவா சந்நிதானத்தை அடைந்தார் சுப்ரமண்யம்.

இவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே தன் புன்னகையால் முதலில் ஆசிர்வதித்தார் பெரியவா. பிறகு, “என்னப்பாகொத்தங்குடி ஸ்ரீநிவாசய்யர் பேரனா? எப்படி இருக்கே? என்று நலம் விசாரிக்கத் துவங்கியபோதே, மதுரத்தின் முகத்தில் ஆனந்தம் களை கட்டியது. எதைத் தேடி வந்தோமோ, அதுவே கிடைத்துவிட்டது போல் பூரித்தார்.

சொல்லும்மாஏதோ சொல்லணும்னு நெனைக்கிறியே என்ற பரப்பிரம்மம், மதுரத்தைப் பார்வையால் ஊடுருவியது.

அவ்வளவுதான்! மெல்லிய தேம்பலுடன் பேசத் துவங்கினார் மதுரம். தன் மாமியாருக்கு இருக்கும் வயிறு உபாதையை கண்ணீருக்கிடையே விலாவாரியாகச் சொல்லி முடித்தார்.

உங்காத்து பூஜை ரூம்ல வேல் இருக்கோ? என்றார் மகா பெரியவா.

ஸ்வாமி விக்கிரகங்கள் எல்லாம் இருக்கு. ஆனா, வேல் எதுவும் இல்லை பெரியவா – மிகுந்த பவ்யமாகச் சொன்னார் மதுரம்.

சுவாமிமலைக்குப் பக்கத்துலதானே உங்க ஊர் இருக்கு (திம்மக்குடியில் இருந்து அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை ஒண்ணரை கி.மீ. தொலைவு). சொக்கத் தங்கத்துல ஒரு வேல் பண்ணு. இதோ, பார்இந்த சைஸ்தான் இருக்கணும் என்று தனது வலது ஆட்காட்டி விரலை உயர்த்திக் காண்பித்தார் பெரியவா.

அப்படியே ஆகட்டும் பெரியவா என்று மதுரமும் சுப்ரமண்யமும் தலை ஆட்டினார்கள்.

இரு இருஇன்னும் நான் முடிக்கலேஇந்த வேலை எங்கயும் கடையில கிடையில போய் வாங்கிடப் படாது. நல்ல ஆசாரிகிட்ட கொடுத்துப் பண்ணச் சொல்லணும். அந்த ஆசாரி, நல்ல குடும்பஸ்தனா இருக்கணும். பாத்துக்கோ.

பெரியவா ஸித்தம்

அந்த வேல் உன் கைக்கு வந்தவுடனே அதை எடுத்துண்டு, என்னை வந்து பாருங்கோ. நாலு மாசம் இங்கதான் இருப்பேன்.

அந்த வேலுக்கு பூஜை புனஸ்காரமெல்லாம் எப்படி பெரியவா? – மதுரம் ஆர்வமாகக் கேட்டார்.

அவசரப்படாதேவேலை எடுத்துண்டு வா. எல்லாமும் சொல்றேன் என்று இருவருக்கும் பிரசாதம் கொடுத்து, நிறைவாக அனுப்பி வைத்தார் பெரியவா.

மதுரமும் சுப்ரமண்யமும் மடத்தை விட்டு வெளியே வந்தவுடனே, எந்த ஆசாரியிடம் இந்த வேல் செய்யக் கொடுக்கலாம் என்றே சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தது. ‘நல்ல சம்சாரியாக இருக்க வேண்டும் என்று பெரியவா சொல்லி விட்டாரே?

ஒரு வழியாகத் தங்கள் குடும்பத்துக்குப் பழக்கமான ஒரு ஆசாரியிடம்காஞ்சி மடத்துப் பெரியவா சொன்ன பணி என்று விஸ்தாரமாகச் சொல்லி, வேல் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். கூடவே, பெரியவா சொன்ன அளவையும் சொன்னார்கள்.

வேல் செய்யவேண்டியதன் முக்கியத்துவம் ஆசாரிக்கும் புரிந்துவிட்டது போலிருக்கு. அவரும் தன் வேலையைச் செவ்வனே முடித்துவிட்டுக் கூலியை வாங்கிக்கொண்டு போய் விட்டார்.

நற்பலனகளை அளிக்கப் போகிற தங்க வேல், இப்போது மதுரத்தின் கையில். இதை மகா பெரியவாளிடம் காட்ட வேண்டுமே! அப்போதுதானே அதற்கு எப்படி பூஜை செய்வது என்று சொல்வார்.

மகா பெரியவா இப்போது கும்பகோணம் பகுதியில் எந்த ஊரில் முகாமிட்டிருக்கிறார்?

மெள்ள விசாரிக்க ஆரம்பித்தார் மதுரம்.

மகா பெரியவா சொன்னபடி தங்க வேல் செய்தாகிவிட்டது. இதை அவரிடம் காட்டி அனுக்ரஹம் பெறவேண்டும். வேலுக்கு தினப்படி உண்டான பூஜா முறைகளையும் கேட்க வேண்டும். – மதுரம் மற்றும் அவரது கணவர் சுப்ரமண்யம் இந்த நினைப்பில்தான் இருந்தனர்.

மதுரத்தின் கவலை இன்னொரு விதமாகவும் இருந்தது. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரிஅதாவது, என்னதைச் செய்தால் மாமியார் குஞ்சம்மாளின் வயிறு உபாதையும், மாமனார் காசிநாதய்யரின் மன உளைச்சலும் தீரும் என்பதுதான் அது.

இந்த இரண்டும் நடக்க வேண்டுமென்றால், நீ இதைச் செய்ய வேண்டும் என்று கடினமான எந்த ஒரு வேலையையோ, சவாலையோ கொடுத்தாலும், மதுரம் அந்த நேரத்தில் அதைப் பூர்த்தி செய்திருப்பார். அப்படிப்பட்ட ஓர் அவஸ்தையை அவரது மாமியாரும், இதைப் பார்த்துக் கொண்டிருக்க நேரிட்ட மாமனாரும் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

ஆயிற்று. சந்நிதானத்தில் வந்து சங்கடங்களைக் கொட்டியாயிற்று. அதற்குரிய தீர்வையும் மகா பெரியவா சொல்லி இருக்கிறார். இனி, அதற்கு உண்டான பூஜை புனஸ்காரங்களை நிறைவேற்ற வேண்டியதுதான்!

இந்த நேரத்தில்தான் பக்கத்து வீட்டு மாமி ஒருவர் மதுரத்திடம் ஏதோ பேச வரும்போது, “என் நாத்தனார்ஆனதாண்டாபுரம் வானு கூப்பிடறாஅவாத்துக்கும் போய் நாளாறதுஇந்த வேளையில போனா, பெரியவாளையும் பாத்து தரிசனம் பண்ண மாதிரி இருக்கும். இப்ப அங்க முகாமிட்டிருக்காராம் என்றார் யதேச்சையாக.

மதுரத்தின் முகத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பரவசம் பரவியது. ‘மகா பெரியவா ஆனதாண்டாபுரத்தில் முகாமிட்டிருக்கிறாரா? வேல் தயாரானதும், தான் எங்கே முகாமிட்டிருந்தாலும், கொண்டுவந்து காட்டிவிட்டுப் போகச் சொன்னாரேஅதைத்தானே நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிற நினைப்பு சட்டென்று மேலிட… அதுவரை பேசிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லிக்காமல் கொள்ளாமல் வீட்டுக்குள் விடுவிடுவென வந்தார்.

பூஜையறையில் இருந்த கணவர் சுப்ரமண்யத்திடம் ஓடி வந்தார். “ஏங்கநாம இன்னிக்கே ஆனதாண்டாபுரம் போறோம். பெரியவா அங்கேதான் இருக்காராம். வேலைக் கொண்டுபோய் அந்த மகான்கிட்ட காமிச்சுட்டு வருவோம். பூஜை எப்படிப் பண்றதுனு சொல்றேன்னு சொன்னாரே?!

சுப்ரமண்யம் என்ன சொல்வார்..? “சீக்கிரம்சீக்கிரம் ரெடியாகு என்றார்.

ஆசாரி செய்து கொடுத்த தங்க வேலை, அழகான ஒரு பெட்டிக்குள் வைத்து, இரண்டு புஷ்பங்களையும் அதில் போட்டு பயபக்தியுடன் மூடினார் மதுரம். இந்த வேல்தானே அவரது மாமியாரின் வயிற்று உபாதையைப் போக்க இருக்கிறது!

இருவரும் ஆனதாண்டாபுரத்துக்குப் புறப்பட்டனர்.

ஆனதாண்டாபுரம் என்பது சிறு கிராமம். இங்கு எழுந்தருளி உள்ள சிவாலயத்தில் தரிசனம் தரும் ஈசன் திருநாமம்பஞ்சவடீஸ்வரர். அர்ச்சகர் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் அருமையான சிவத்தலம். ஆனந்தர் என்கிற முனிவருக்கு ஈசன் இங்கே நடராஜ கோலத்தில் தரிசனம் தந்தமையால் இந்த ஊர்ஆனந்த தாண்டவபுரம்அதுவே மருவி ‘ஆனதாண்டா புரம் ஆனதுமயிலாடுதுறைக்கு அருகில் உள்ளதுவேதம் படித்த அந்தணர்கள் அதிகம் வாழ்ந்த ஊர்.

ஆனதாண்டாபுரத்தில் மகா பெரியவா முகாமுக்குத் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். ஜபம், பாராயணம் என்றெல்லாம் அமளிதுமளிப்பட்டிருந்த அந்தக் கீற்றுக் கொட்டகையில் சங்கர சொரூபமாக வீற்றிருந்தது அந்தப் பரப்பிரம்மம். யாரோ ஒரு புண்ணியவான் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம், கொட்டகையின் இன்னொரு பக்கத்தில் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.

வாராது வந்த மகான் தங்கள் ஊரில் எழுந்தருளி இருக்கிறாரே? என்கிற சந்தோஷத்துடன் உள்ளூர் பிரமுகர்கள் அனைவரும் ஸ்வாமிகளுக்கு பிக்ஷை செய்தனர். பழங்கள், புஷ்பங்கள், கல்கண்டு, திராட்சை, முந்திரி போன்ற பொருட்களை மூங்கில்தட்டில் வைத்து அவருக்கு சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர்.

ஆனதாண்டாபுரம் முகாமுக்குள் நுழைந்த மதுரமும் சுப்ரமண்யமும், தாங்கள் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களை ஒரு மூங்கில்தட்டில் வைத்து, தங்க வேல் அடங்கி இருக்கும் அந்தப் பேழையையும் அதில் வைத்தனர். பவ்யமாக பெரியவா முன்னால் போய் நின்றனர்.

வாப்பா, கொத்தங்குடி ஸ்ரீநிவாச ஐயர் பேரனே என்று கடகடவென்று சிரித்த மகா பெரியவா, தம்பதியை ஆசிர்வதித்தார். இருவரும் நமஸ்கரித்தனர்.

இரண்டடி முன்னால் வந்த மதுரம், “வேல் பண்ணிக் கொண்டு வந்துட்டேன். பெரியவா அனுக்ரஹம் பண்ணணும் என்று சொல்லி, தன் கையில் வைத்திருந்த மூங்கில்தட்டை, அவரது திருப்பார்வை படும்படியான இடத்தில் தரையில் வைத்தார். மூங்கில்தட்டின் மீது தன் பார்வையைப் பதித்தார் பெரியவா. பிறகு, “உன் வேலை முடிஞ்சுடுத்துன்னு சொல்ல வர்றியா? என்று மீண்டும் சிரித்தது பரப்பிரம்மம்.

பிறகு, மதுரத்தைப் பார்த்து, “அந்த வேலை இங்கே எடுத்து வை என்றார் பெரியவா.

அந்தப் பேழையைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு அதைத் திறந்து பெரியவாளுக்கு அருகே வைத்தார் மதுரம். மகா பெரியவாளின் திருப்பார்வை பட்டுவிட்டாலே, அதற்குபவர் கூடிவிடுகிறது இல்லையா? அதனால்தான், மதுரம் அதைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு திறந்து வைத்தார்.

பார்வையாலேயே பூஜித்து, அதைத் தன் திருக்கரங்களால் எடுத்து, மதுரத்திடம் கொடுத்தார் பெரியவா. பிறகு, “இதுக்கு எப்படி பூஜை பண்ணணும் தெரியுமா? என்று கேட்டுவிட்டுச் சொல்ல ஆரம்பித்தார்.

பூஜை ரூம்ல வெச்சுடு. தினமும் மடியா பாலபிஷேகம் பண்ணு. செம்பருத்திப் பூ தெரியுமோல்லியோ? அந்தப் பூவைக் கொண்டு, வேலை முருகனா பாவிச்சு அர்ச்சனை பண்ணு. ஏதேனும் ஒரு நைவேத்தியம் இருந்தா நல்லது. ஒரு கற்பூர ஆரத்தி காண்பிச்சுட்டு பூஜையை முடிச்சுக்கோ.

அப்படியே செய்யறேன் பெரியவா – மதுரம் பவ்யமாகச் சொன்னார்.

நான் இன்னும் முடிக்கவே இல்லேஇன்னும் சொல்றேன் கேளு. இந்த பூஜையை நீ செஞ்சு முடிச்சதும், அபிஷேக பிரசாதமான பாலை உன் மாமியாருக்குக் கொடு. அர்ச்சனையா பண்ணினியேசெம்பருத்திப் பூஅதை எல்லாம் சேகரிச்சு, உன் மாமியாருக்கு சாப்பிடக் கொடு.

ஆகட்டும் பெரியவாதினமும் விரதம் எதுவும் இருக்க வேண்டாமா பெரியவா?

சஷ்டி அன்னிக்கு மட்டும் விரதம் இருந்து இதைப் பண்ணு. மிச்ச நாள்ல பரவால்லை. மறந்துடாதேஅபிஷேகப் பாலையும், செம்பருத்திப் பூ பிரசாதத்தையும் உன் மாமியார் டெய்லி சாப்பிடணும்.

உத்தரவு பெரியவா என்று அவரை நமஸ்கரித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டனர் மதுரமும் சுப்ரமணியமும்.

அடுத்த நாளில் இருந்தே தங்க வேலுக்கு பூஜை துவங்கியது. மாமியாரான குஞ்சம்மாளுக்கு பெரியவா சொன்னபடி பிரசாதமும் தரப்பட்டது.

இதை அடுத்து ஓரிரு நாட்களிலேயே குஞ்சம்மாளுக்கு ஒரு மாற்றம் தெரிந்தது. இது நாள் வரை தன்னைப் பாடாய்ப் படுத்தி வந்த வயிற்று வலி உபாதை, மெள்ள மெள்ளக் குறைய ஆரம்பித்தது. எத்தனையோ மருத்துவமனைப் படிகள் ஏறியும் தீர்க்க முடியாத வயிற்று வலி, ஒரு மகானின் பிரசாதத்தால் விடைபெற்றது.

அதன் பின் முற்றிலுமாக அவஸ்தை நீங்கப் பெற்றுத் தனது 84-வது வயதுவரை பூரண ஆரோக்கியத்துடன் இருந்தார் குஞ்சம்மாள்.

மதுரம் நம்மிடம் சொன்னார்: “செம்பருத்திப் பூவைத் தண்ணீரில் அலசிவிட்டுச் சாப்பிடுவது, வயிற்று உபாதைக்குச் சிறந்தது என்பதைப் பின்னாளில் ஒரு பத்திரிகையில் படித்தேன். இருந்தாலும், அவரவருக்கு என்ன மாதிரியான உபாதை என்பதை மருத்துவர் தவிர எவர் அறிய முடியும்? வயிறு சம்பந்தப்பட்ட வலி என்றால், எல்லோரும் செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டே குணம் தேடிக்கொள்ளலாமே! இது நடைமுறையில் சாத்தியமா?

அதனால்தான் மகா பெரியவா ஒரு மகானாக எங்கள் குடும்பத்துக்கு விளங்கினார். மருந்தைத் தருபவர் மருத்துவர் ஆகட்டும்மகானாக இருக்கட்டும்அதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டாமா? என் மாமியாரின் வயிற்று வலி உபாதையைப் போக்கிய காஞ்சி மகான் எங்கள் குடும்பத்துக்கே தெய்வமாகி விட்டார் என்றவர் தனக்கு நேர்ந்த இன்னொரு அனுபவத்தையும் சொன்னார்.

அப்போது நான் திம்மகுடியில் இருந்தேன். எங்கள் குடும்பம் ரொம்பப் பெரியது. திருமணமான நேரம் அதுஆன்மிகத்தில் என்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள ஏனோ, மனம் விரும்பியது. ஏதாவது மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளலாமா என்று மனம் சிந்தித்தது. திருமணமாகி சில வருடங்களே ஆகி இருக்கும் இந்தக் காலத்தில் நாமாக ருத்திராட்சத்தையோ, ஸ்படிக மாலையையோ எப்படி அணிந்து கொள்வது? இதற்கென்று இருக்கும் ஆச்சார்யர்களின் ஆலோசனைப்படி அல்லவா இதை எல்லாம் அணிய வேண்டும் என்றும் யோசித்தேன். இப்படிப்பட்ட எண்ணம் ஏன் அந்த வயதில் தோன்றியது என்பதை இப்போது நினைத்தாலும், எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அந்த வேளையில் கும்பகோணம் பகுதிக்கு யாத்திரையாக வந்திருந்த பெரியவா எங்களது திம்மகுடி வீட்டுக்கும் விஜயம் செய்தார்.

திம்மகுடி அக்ரஹாரத்தில் உள்ள அனைவரும் எங்கள் வீட்டில் குழுமிவிட்டனர். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷம் திம்மகுடி யையே திமிலோகப்படுத்தியது.

வீட்டுக்குள் வருவதற்கு முன் பூர்ணகும்ப மரியாதை, பாத பூஜை எல்லாம் நடந்தது. கலியுக நடமாடும் தெய்வமான அந்த மகான் எங்கள் வீட்டுக்குள் வந்து அமர்ந்தார். வீட்டில் உள்ள எல்லோரையும் ஆசிர்வதித்துவிட்டு, என்னை மட்டும் ஒரு பார்வை பார்த்தார்.

பிறகு, என் அண்ணனை அருகே வருமாறு அழைத்தார்.

பவ்யமாக அவர் வந்துபெரியவா உத்தரவு என்று பணிந்து நின்றார்.

உள்ளேபெரிய மர பீரோவுக்குள்ள ஒரு பவழ மாலை இருக்கும். அதை எடுத்துண்டு வா என்றார் பெரியவா நிதானமாக.

எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். நம் வீட்டு மர பீரோவுக்குள் பவழ மாலை இருப்பது இவருக்கு எப்படித் தெரியும் என்கிற வியப்பு அது. காரணம் அப்படி ஒரு பவழ மாலை எங்கள் வீட்டில் இருப்பது எனக்குக்கூட அதுவரை தெரியாது.

அடுத்துச் சொல்லப் போவதைத் துவங்குவதற்கு முன் மதுரத்தின் கண்களில் இருந்து நீர்த் துளிகள் பனித்தன.

திம்மகுடியில் மதுரத்தின் வீட்டு பீரோவில் இருக்கும் பவழ மாலையை எடுத்து வருமாறு, மதுரத்தின் அண்ணனுக்கு உறவினர்களுக்கு மத்தியிலும், திரளான ஊர்க்காரர்களுக்கு இடையிலும் உத்தரவு போட்டார் மகா பெரியவா.

இந்த வீட்டில் இத்தனை வருடங்கள் நான் புழங்கி வந்தும் இப்படி ஒரு பவழ மாலை இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே என்று குழம்பினார் மதுரம்.

இதை அடுத்து திம்மகுடி வீட்டில் நடந்ததை மதுரமே ஆனந்தக் கண்ணீருடன் விவரிக்கிறார்.

மகா பெரியவா குறிப்பிட்ட அறையில் இருந்து பவழ மாலையை எடுத்து வருவதற்காக என் அண்ணன் உள்ளே போனார். ஏதோ என் மன ஓட்டத்தை அறிந்துகொண்டவர் மாதிரி மகா பெரியவா புன்னகையுடன் என்னையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான், என் கணவர் உட்பட பெரும்பாலான குடும்ப உறுப்பினர் அனைவரும், ‘மகா பெரியவாளே சொல்கிறார் என்றால், அதில் ஒரு விசேஷம் இருக்கும். அந்தப் பவழ மாலை மூலமாக யாருக்கோ ஒரு நல்லது நடக்கப் போகிறது போலும் என்று தீர்மானித்து, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தோம்.

என் அண்ணன் அரக்கப் பரக்க உள்ளிருந்து வந்தான். அவன் கையில்வெள்ளிக் குப்பிகளால் மூடப்பட்ட பவழ மாலை இருந்தது. பெரியவா சொன்ன அடையாளத்தை வைத்து அதை எடுத்து வந்திருந்தான். பல வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்ததால், பொலிவு கொஞ்சம் குறைந்திருந்தது. தன் வெண்ணிற மேல்துண்டால் அந்தப் பவழ மாலையைச் சற்றே துடைத்துவிட்டு, பயபக்தியுடன் அதைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்தான்.

அருகில் இருந்த ஒரு பித்தளைச் சொம்பில் இருந்து கொஞ்சம் தீர்த்தத்தை அந்த மாலையின் மேல் விட்டார் மகா பெரியவா. மகானின் கை பட்டாலே புண்ணியம். அதை மேலும் புனிதம் ஆக்குகிறார் போலிருக்கு என்று நினைத்தேன். பிறகு, என்னைப் பார்த்தார்.

வாம்மாஇந்த வயசுலயே ஆன்மிக ஞானம் வேணும்னு ஆசைப்பட்டு, அதுக்கு என்ன மாலை போட்டுக்கலாம்னு நீதானே கொஞ்ச நாளா குழப்பத்தில் இருந்தே? அப்படின்னு கேட்டுட்டு, ஒரு நிமிடம் கண்களை மூடிண்டு இருந்துட்டு, சுவாமிகள் என் கையில் பவழ மாலையைப் போட்டார்.

பெரியவாளின் ஆசியைத் தாங்கிய அந்தப் பவழ மாலை என் கையில் விழுந்ததும், சிலிர்த்துப் போய்விட்டேன். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு வைக்கவேண்டும் என்று என் மனதுக்குள் மட்டும் நான் தீர்மானித்தது இந்தப் பரப்ரம்மத்துக்கு எப்படித் தெரியும்? என் கணவர் உட்பட வீட்டினர் எவருக்கும்கூட இந்த விஷயம் தெரியாதே? அங்கு கூடி இருந்த திரளான ஜனங்களும் இந்த அற்புத அருள் காட்சியைப் பார்த்து வியந்து போனார்கள்.

மகா பெரியவா ஆசிர்வதித்துக் கொடுத்த அந்தப் பவழ மாலையைக் கண்களில் ஒற்றிக்கொண்டு கழுத்தில் அணிந்து, என் கணவருடன் சேர்ந்து அவரை நமஸ்கரித்தேன். புன்னகையால் ஆசிர்வதித்தார். காஞ்சி ஸ்வாமிகளின் திருக்கரங்களில் இருந்து பவழ மாலையை வாங்கும்போது எனக்கு வயது சுமார் முப்பதுக்குள்தான் இருக்கும். இறை வழிபாட்டில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாலையை அணிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் இருந்தாலும், அதன் மகத்துவம் அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இல்லறத்திலேயே இருந்து விட்டதால், இது பற்றி யோசிக்க அவகாசம் கிடைத்ததில்லை.

ஆச்சுசுமார் நாற்பது வருஷம் ஓடியாச்சு. ஆனால், இப்போது அந்தச் சம்பவத்தை நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல வேண்டும். இந்தப் பவழ மாலை என் கழுத்துக்கு வந்த பிறகு, இன்றைய தினம் வரை நிம்மதியாகவும் இறை பக்தியுடனும் இருந்து வருகிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும், அதற்கும் மேலான ஓர் அமைதியை இந்தப் பவழ மாலை எனக்குக் கொடுத்தது என்பதை அவசியம் சொல்லவேண்டும். இந்த அமைதியும் பொறுமையும், ஆன்மிக நாட்டமும் என்றென்றும் என்னிடம் இருக்க வேண்டும் என்பதை விரும்பித்தான் மகா பெரியவா அனுக்ரஹம் செய்து என்னிடம் கொடுத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

எத்தகைய ஒரு குழப்பத்தில் இருந்தாலும், அந்த மாலையை ஒரு மந்திர சக்தியாக நினைத்து, சில நிமிடங்களுக்குக் கையில் பிடித்திருப்பேன். என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கும் குழப்பமோ, பிரச்னையோசில நிமிடங்களில் பனி போல சட்டென்று விலகிவிடும். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த மாலையைப் பிரித்து, அதில் உள்ள பவழ மணிகளை என் குடும்பத்தினருக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டேன். என் காலத்துக்குப் பிறகும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு மகா பெரியவாளின் ஆசி தொடர வேண்டாமா? அவர்கள் சந்ததியும் நன்றாக இருக்கவேண்டும் அல்லவா?

மகா பெரியவாளின் அருளால் என் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் இன்று பல இடங்களில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எங்களது திம்மகுடி வீட்டில் காலடி எடுத்து வைத்து அவர் செய்த ஆசியினாலும், அனுக்ரஹத்தாலும்தான் இன்று நாங்கள் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறோம்.

நீண்ட பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் மதுரம்.