சாப்டூர் ஜமீந்தாரும் கலவை கலகலப்பும்

கா பெரியவாளை தரிசிக்கும் பேறு பெற்றவர்கள் பாக்கியவான்கள். இதில் சந்தேகம் இல்லை. அதே வேளையில் இவரை தரிசிக்கும் பேறு பெறாதவர்கள் பாக்கியவான்கள் இல்லை என்று சொல்ல முடியாது. எவரெவருக்கு நேரில் சந்திக்கவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே இந்தப் பேறு அமையும்.

மகானை தரிசிக்கும் வாய்ப்பு பெறாத அடுத்த தலைமுறையினர், அவரது திருவுருவை பூஜையறையிலும் தங்களது பணி சார்ந்த இடத்திலும் வைத்து வழிபட்டுக்கொண்டுதான் வருகிறார்கள்.

ஆனால், காஞ்சி பீடத்தைப் பற்றியே தவறான அபிப்பிராயத்தை ஒரு ஜமீன்தார் மேல் விதைத்துவிட்டார் அங்கே பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர். அந்த ஊழியருக்கு இப்படி ஒரு கருத்து எப்படி வந்தது என்று தெரியவில்லை. “நாமெல்லாம் காஞ்சி மடத்துக்குப் போகவே கூடாது. அங்கிருக்கும் ஆச்சார்யர்களை தரிசிக்கக் கூடாது என்று அந்த இளைய ஜமீன்தார் மனதில் பதிய வைத்துவிட்டார் ஊழியர் ஒருவர்மிகச் சிறு வயதிலேயே இது நடந்தது.

தவறான இந்த போதனைக்கு ஆளானவர்சாப்டூர் ஜமீன்தார் நாகய்யசாமி காமய நாயக்கர் என்கிற பெரிய ராஜா. மதுரையை அடுத்து இருக்கிறது சாப்டூர். தற்போது சாப்டூர் ஜமீனாக இருப்பவர் இந்தப் பெரிய ராஜா. இவருக்கு வயது 78. தேர்ந்த ஆன்மிகவாதி.

தவறான இந்த போதனையால் தன் இளம் வயதில் காஞ்சி புரத்துக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தும், ஸ்ரீமடத்துக்குப் போகாமலே இருந்திருக்கிறார் பெரிய ராஜா. ஊழியரின் தவறான போதனைகள் இவரது மனதில் அப்படியே பதிந்துவிட்டன.

ஆனால், மகா பெரியவாளின் அனுக்ரஹம் எப்படி இருக்கும் என்பதை யார் அறிவார்?! எங்கோ நடந்தாலும், என்ன நடக்கிறது என்பதை அவர் அறியாமலா இருப்பார்?

1963-ஆம் வருடம் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு பிரமாண்ட அளவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிக் குழுத் தலைவர் பி.டி. ராஜனின் அயராத உழைப்பினாலும், எண்ணற்ற அருளாளர்களின் உபயத்தாலும் 28.6.1963 அன்று காலை ஒரே நேரத்தில் பதினான்கு கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மகத்தான வைபவம் அது. மகா பெரியவாளும் ஸ்ரீஜயேந்திரரும் இந்தக் கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டனர். கலந்துகொண்டதோடு மட்டும் அல்லாமல் கும்பாபிஷேகப் பணிக்குத் தேவையான ஆலோசனைகளையும் அளித்து வந்தனர். குழுத் தலைவர் பி.டி. ராஜன் அவ்வப்போது மகா பெரியவாளைச் சந்தித்து, திருப்பணி விவரம் குறித்து விவாதித்து, அவரது அறிவுரைக்கேற்ப நடந்துகொண்டார்.

கும்பாபிஷேகத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலேயே ஸ்ரீஜயேந்திரருடன் மதுரைக்கு வந்துவிட்டார் மகா பெரியவா. பாலாலயம் செய்துவைக்கப்பட்ட அம்பாளையும் ஈசனையும் தரிசித்து யாகசாலைப் பணிகளை மேற்பார்வை இட்டார்கள். இருநூறு சிவாச்சார்யர்கள் கும்பாபிஷேகப் பணியில் இருந்தனர்.

இந்தக் கும்பாபிஷேகத்துக்கு சாப்டூர் ஜமீனுக்கு இரண்டு சிறப்பு அனுமதிச் சீட்டு (ஸ்பெஷல் பாஸ்) வந்தது. அப்போது சாப்டூர் ஜமீன் குடும்பம், மதுரையில் உள்ள பங்களாவில் முகாமிட்டிருந்தது. அப்போதைய ஜமீன்தார் (பெரிய ராஜாவின் தந்தை), தன் மகன் பெரிய ராஜாவை அழைத்தார். “நீயும் உன் மனைவியும் போய் இந்த கும்பாபிஷேக விழாவை அருகில் இருந்து மனம் குளிர தரிசித்துவிட்டு வாருங்கள் என்றார் அவர்.

அதற்கு பெரிய ராஜா, “வேண்டாம் வேண்டாம். தாங்கள் சென்று தரிசிப்பதே சிறந்தது. தங்களை மதித்து, தங்களுக்காக அனுப்பப்பட்டிருக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டுகள் அவை என்று அன்புடன் மறுத்திருக்கிறார்ஆனால், தந்தையோ, “வேண்டாம். நீதான் போகணும். நாங்கள் இந்த பங்களாவின் மாடியில் இருந்தபடி கும்பாபிஷேக வைபவத்தைப் பார்ப்பதற்கு ஸ்பெஷல் டெலஸ்கோப் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். ஜமீனில் இருந்தவாறே நாங்கள் தரிசித்துவிடுவோம் என்றார்அதன் பின், பெரிய ராஜா சந்தோஷத்துடன் சம்மதித்தார்.

கும்பாபிஷேக தினத்தன்று பெரிய ராஜாவும் அவர் மனைவியும் வி.வி..பிக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஓர் இடத்தில் வசதியாக இருந்தபடி தரிசித்தனர். கும்பாபிஷேகம் முடிந்த பின் அன்னை மீனாட்சியை தரிசிக்க இருவரும் வேக வேகமாக சந்நிதியை நோக்கிச் சென்றனர். அதாவது, கும்பாபிஷேகக் கூட்டம் இங்கே வருவதற்கு முன்னதாக அன்னையை தரிசித்துவிடவேண்டும் என்பது பெரிய ராஜாவின் எண்ணம். அதுபோல் அன்னையை நிதானமாக தரிசனம் செய்துவிட்டு ஆலயப் பகுதியில் வெளியே நடந்து வந்தபோது, எதிரே மகா பெரியவாளும் ஜயேந்திரரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

கும்பாபிஷேகத்தைக் கண்டு தரிசித்துவிட்டு, மீனாட்சியின் தரிசனத்துக்காக இரு பெரியவாளும் வந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷம் ஆலயத்தையே நிறைத்ததுஆச்சார்யர்களுக்குப் பின்னால் மடத்துச் சிப்பந்திகள், பக்தர்கள், போலீஸார், ஆலய அதிகாரிகள் என்று ஏராளமான கூட்டம். எதிரும் புதிருமாக இப்படி மகா பெரியவாளைச் சந்திப்போம் என்று பெரிய ராஜா நினைக்கவே இல்லை. சட்டென்று அந்த இடத்தில் வேறு எங்கும் ஒதுங்கவும் முடியாது. நேருக்கு நேராகக் கடந்து செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

பெரிய ராஜாவுக்கு எதிரே விறுவிறுவென்று நடந்து வந்து கொண்டிருந்த மகா பெரியவா, பெரிய ராஜாவைக் கண்டதும், அப்படியே நின்றார். பெரிய ராஜாவும் மகா பெரியவாளின் எதிரே என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டார். ஸ்வாமிகளின் பின்னால் வந்துகொண்டிருந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் அப்படியே நின்றது.

எதிரே நின்றுகொண்டிருப்பவர் சாப்டூர் ஜமீன் என்பதை உள்ளூர்வாசிகள் அறிவார்கள். ‘ஒருவேளை சாப்டூர் ஜமீனை மகா பெரியவாளுக்குத் தெரியும் போலிருக்கிறது. எனவே, அவரை ஆசிர்வதிப்பதற்காக நிற்கிறார் போலிருக்கிறது என்று நினைத்து மடத்துச் சிப்பந்திகளும் ஆலய அன்பர்களும் அமைதியாக இருந்தனர்.

மகா பெரியவாளின் பார்வை நேருக்கு நேராக நிலை குத்தி நிற்கும் இடத்தில் பெரிய ராஜா நின்றிருந்தார். பெரிய ராஜாவை ஒரு சில விநாடிகளுக்கு தீட்சண்யமாகப் பார்த்தார் மகா பெரியவா.

அவ்வளவுதான்! அந்தப் பார்வையின் காந்த சக்தியால் கவரப்பட்ட பெரிய ராஜாவுக்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லைசட்டென்று பெரியவாளின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். எழுந்தார். கைகளைக் கூப்பி வணங்கினார். பெரிய ராஜாவின் விழிகளில் ஏன் என்றே புரியாத வகையில் கரகரவென்று கண்ணீர் வடிந்தது.

ஒரு புன்னகையோடு பெரிய ராஜாவை ஆசிர்வதித்த மகா பெரியவா, விறுவிறுவென்று அன்னை மீனாட்சி சந்நிதியை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

எந்த மடத்துக்கு நாம் போகக் கூடாதுஎந்த ஆச்சார்யரை நாம் வணங்கக்கூடாது என்று பெரிய ராஜாவுக்குச் சொல்லப்பட்டதோ, அந்த அட்வைஸ், அன்னை மீனாட்சியின் சந்நிதி அருகே தவிடுபொடியாகிவிட்டது.

கண்களில் இப்படி ஒரு அருள் சக்தியைக் கொண்டிருக்கிற உண்மையான ஒரு மகானை வணங்கக் கூடாது என்று ஏன் நமக்குச் சொன்னார்கள்? என்று பெரிய ராஜாவுக்குக் குழப்பமான குழப்பம். இப்படிப்பட்ட ஒரு கருணை தெய்வத்தை இத்தனை நாட்களாக நாம் வணங்காமல் இருந்துவிட்டோமே என்று ஏங்கினார்.

அன்னை மீனாட்சியின் அருளால் இன்று தரிசனம் ஆகி விட்டது. அடுத்து…? அந்த மகானின் அருகில் நெருங்கி, அவரது திருமுகத்தையே வெகு நேரத்துக்குப் பார்த்து தரிசித்து, அவரது அருளையும் ஆசியையும் பிரத்தியேகமாகப் பெறமாட்டோமா? என்று ஆசைப்பட்டார் பெரிய ராஜா. அதற்குரிய நாளும் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் வரத்தான் செய்தது.

கும்பாபிஷேகம் முடிந்த கையோடு மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள நாராயணபுரத்தில் வியாச பூஜையும் வியாச பாரத ஆகம சில்ப சதஸும் நடந்தன. வெளியூர் மற்றும் உள்ளூர் பண்டிதர்கள், அறிஞர்கள், பக்தர்கள் என்று திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.

சாப்டூர் ஜமீனுக்கு வேண்டப்பட்டவர் சுப்ரமணிய வாத்தியார் என்பவர். ஜமீனுக்கு வந்து அந்தக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு டியூஷன் நடத்துவார். சுப்ரமணிய வாத்தியார் மேல் ஜமீனுக்கு அவ்வளவு ஒரு மரியாதை. பெரிய ஸ்காலர். மதுரை ஜமீனுக்கு வந்த அவர், பெரிய ராஜாவை அணுகி, “வாருங்கள் சின்ன ஜமீன்நாராயணபுரம் போய் மகா பெரியவாளை தரிசித்துவிட்டு வருவோம் என்று இயல்பாக அழைத்தார்பெரிய ராஜாவுக்கு ஆனந்தம்ஏதோ மகா பெரியவாளே வந்து தன்னை அழைப்பது போன்ற ஒரு பிரமை அவருக்கு.

சுப்ரமணிய வாத்தியாருக்கு மடத்து அதிகாரிகள் முதற்கொண்டு, ஆச்சார்யர்கள் வரை அனைவருமே அத்துப்படி. மடத்துச் சம்பிரதாயங்கள் எல்லாம் அறிந்தவர். எல்லோரிடமும் நல்ல பழக்கம் உண்டு. எனவே, இவருடன் சென்றால், மகா பெரியவாளை வெகு அருகில் இருந்தபடி தரிசிக்க முடியும் என்று தீர்மானித்த பெரிய ராஜா, அன்றே அவருடன் புறப்பட்டார்.

நாராயணபுரத்தில் மகா பெரியவாளின் முகாம் கோலாகலமாக இருந்தது. சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், சிற்பிகள், ஆதீனகர்த் தாக்கள், தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் என்று தமிழகத்தின் பல ஊர்களிலும் இருந்து வந்திருந்தார்கள். மகா பெரியவாளிடம் பெரிய ராஜாவை அழைத்துச் சென்ற சுப்ரமணிய வாத்தியார், அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். “இவரை நன்னா தெரியுமேமீனாட்சி அம்மன் கோயில்ல பார்த்தேனே என்றார் பெரியவா.

பெரிய ராஜாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பெரியவாளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண் டிருந்தார்.

ஒரு சில விநாடிகளுக்குப் பின், “ராஜான்னா கிரீடம், சிம்மாசனம்இதெல்லாம் உங்களுக்கு உண்டோ? என்று பெரிய ராஜாவிடம் ஒரு குழந்தை மாதிரி கேட்டார் மகா பெரியவா.

அதற்கு ரொம்பவும் பவ்யமாக, “அப்படி இல்லே பெரியவாதாங்கள் சொல்வதெல்லாம் சமஸ்தானங்களுக்குத்தான். நாங்களெல்லாம் ஜமீன் பரம்பரை. மரியாதை அதிகம் இருக்கும். விசேஷ நாட்களில் மட்டும் கிரீடம் அணிவோம். அவ்வளவுதான் என்றார் பெரிய ராஜா.

பிறகு, “உங்களுக்குத்தான் இந்த கிராமங்கள் எல்லாமே அத்துப்படி ஆயிற்றேஇங்கு நாளை முதல் ஒரு சதஸ் துவங்க இருக்கிறது. அதைத் துவங்குவதற்கு முன்னால் கிராமத்து வாத்தியங்கள் எல்லாவற்றையும் வரவழைத்து கொஞ்ச நேரம் வாசிக்கச் சொல்லிக் கேட்கலாம் என்று ஆசை. ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டார் பெரியவா.

பெரிய ராஜாவின் மனம் குளிர்ந்தது. “ஆஹாதாங்கள் கேட்டது என் பாக்கியம். இன்றைக்கே நான் ஏற்பாடு செய்து விடுகிறேன். கிராமத்து வாத்தியக் கலைஞர்கள் அனைவரும் நாளை இங்கே கூடி, பிரமாண்டமான அளவில் கச்சேரி நிகழ்த்துவார்கள் என்றார் பெரிய ராஜா.

அதன்படி அடுத்த நாள் நாராயணபுரத்தில் இருந்த ஸ்ரீமடத்து முகாம், கிராம இசைக் கலைஞர்களால் நிரம்பியது. அற்புதமான அவர்களின் கச்சேரியை மகா பெரியவாளும், அங்கே கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கேட்டு ரசித்தார்கள்.

கச்சேரி முடிந்த பிறகு, ஸ்ரீமடத்து சார்பில் அவர்களுக்கு கௌரவம் செய்வதற்காக ஒவ்வொருவரையும் அழைத்து பெரியவா பணமுடிப்பும் பிரசாதமும் தருவதாக இருந்தது. ஆனால், வந்திருந்த இசைக் கலைஞர்கள் அனைவரும் பெரியவாளை வணங்கி, “ஐயாபிரசாதம் கொடுங்க. சந்தோஷமா வாங்கிக்கறோம். பணமெல்லாம் வேண்டாம். ஜமீன் துரை எங்களை வரச் சொன்னாரு. வந்தோம். எதுவா இருந்தாலும் அவருதான் எங்களுக்கு எல்லாமே என்று பண முடிப்பைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

உடனே பெரியவா, சுப்ரமணிய வாத்தியாரை அழைத்து, “இவாள்லாம் மடம் சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியில் வாசிச்சிருக்கா. அதுக்கு மடம் கௌரவம் பண்றதுதான் முறை. ஜமீனுக்கு உடனே எடுத்துச் சொல்லுங்கோ என்று சொல்ல… அடுத்த விநாடியே ஜமீனுக்குப் போய் பெரிய ராஜாவை அழைத்துவந்துவிட்டார் சுப்ரமணிய வாத்தியார்.

மகா பெரியவாளிடம் வந்த பெரிய ராஜா, “இந்தக் கலைஞர்களுக்கு சாப்டூர் ஜமீனே உரிய மரியாதையை செய்து விடும். அதற்குரிய பாக்கியத்தை எங்களுக்கே தாருங்கள் என்று கேட்க… மகா பெரியவா அதை ற்கவில்லை. பிறகு, ஸ்வாமிகளிடம் பிடிவாதம் பிடிக்காமல் அவரது கருத்தை ஏற்றுக்கொண்டார். இசைக் கலைஞர்களிடம், “மடம் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பெரிய ராஜா சொல்ல, மரியாதை செய்யப்பட்டது. நிறைவான அந்த மரியாதையில் உள்ளம் குளிர்ந்தார்கள் கிராமிய இசைக் கலைஞர்கள்.

சாப்டூர் ஜமீன்தாரான பெரிய ராஜாவும், அவருக்கு வேண்டப்பட்டவரான காசி சாமியார் என்பவரும் கலவைக்குப் போய், மகா பெரியவாளை தரிசித்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது.

மகான்கள் சில தகவல்களைப் பேச்சுவாக்கில் நேரில் சொல்வார்கள்.

சில தகவல்களை அக்கம்பக்கம் நிகழும் சில சம்பவங்களின் மூலம் குறிப்பால் உணர்த்துவார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து வாழ்க்கையில் செயல்படவேண்டும் என்பதற்காகவே இப்படி.

மகா பெரியவாளிடம் இத்தகைய அனுக்ரஹம் பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சாப்டூர் பெரிய ராஜாவுக்கு சில அனுபவங்களை உணர்த்த வேண்டும் என்பதற்காக அவருடன் நெடுநேரம் உரையாடி விட்டு, சென்னைக்குப் புறப்பட இருந்தவரை அன்று கலவையிலேயே தங்க வைத்தார் பெரியவா. எவருக்கும் கிடைக்காத மாபெரும் பாக்கியம் சாப்டூர் பெரிய ராஜாவுக்குக் கிடைத்தது என்றே சொல்லவேண்டும்.

பெரிய ராஜாவின் குடும்பத்துக்கு வேண்டியவர் ஒருவர் அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற திருத்தலங்களை எல்லாம் தரிசித்துவிட்டுத் திரும்பி இருந்தார். அவர் காசிக்கு அடிக்கடி சென்று வருபவர். எனவே, அவரை அறிந்தவர்கள்காசி சாமியார் என்று அழைத்து வந்தார்கள்ப்போதும் இறை இன்பம் தேடுவதிலேயே இருப்பார் இவர். அதுபோல் மகான்களையும் தேடித் தேடி தரிசிப்பார்.

தனது வட இந்திய ஆன்மிக யாத்திரை திருப்திகரமாக முடிந்த பின், காஞ்சி மகா பெரியவாளை தரிசித்து அவரது ஆசி பெற வேண்டும் என்று விரும்பினார் காசி சாமியார். அந்த மகான் குடிகொண்டிருக்கும் காஞ்சி திருக்கோயிலுக்குச் சென்று அவரது திருப்பாதங்களை நமஸ்கரிக்க ஆசைப்பட்டார். தனது இந்த ஆசையைப் பெரிய ராஜாவிடம் சொன்னார். அதற்கு, காசி சாமியாரை சென்னைக்கு வருமாறும், அங்கிருந்து காஞ்சிக்குச் சென்று பெரியவாளை தரிசிக்கலாம் என்றும் சொன்னார் பெரிய ராஜா.

அதன்படி காசி சாமியார் சென்னையில் உள்ள சாப்டூர் ஜமீன் பங்களாவுக்கு வந்தார். ஒரு தினத்தில் இருவரும் சென்னையிலிருந்து பேருந்து ஏறி காஞ்சிக்குப் புறப்பட்டனர். மகா பெரியவாளுக்குச் சமர்ப்பிப்பதற்காக கால் கிலோ உலர்ந்த திராட்சையும் கால் கிலோ கல்கண்டும் வாங்கி வைத்துக் கொண்டார் பெரிய ராஜா.

ஏற்கெனவே மதுரையில் மகா பெரியவாளின் அனுக்ரஹம் பெற்ற பாக்கியத்தால் இந்த முறை அவரை தரிசிக்க பெரும் ஆவல் கூடியது பெரிய ராஜாவுக்கு.

காஞ்சிபுரத்தில் இறங்கி, ஸ்ரீமடத்துக்குச் சென்றனர் இருவரும். ஆனால், பெரியவா அப்போது காஞ்சியில் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. காசி சாமியாருக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. ஸ்ரீமடத்தில் விசாரித்ததில், பெரியவா கலவையில் முகாமிட்டிருப்பதாகச் சொன்னார்கள்.

காஞ்சி ஸ்ரீமடத்தின் 67-ஆவது ஆச்சார்யராக விளங்கியவர் மகா பெரியவாளின் குரு ஆவார். 66-ஆவது ஆச்சார்யராக விளங்கியவர் மகா பெரியவாளின் பரமகுரு ஆவார். இந்த இரு ஆச்சார்ய புருஷர்களும் கலவையில் பிருந்தாவனஸ்தர் ஆகி உள்ளனர். எனவே, தன் மனம் விரும்பும்போதெல்லாம் கலவைக்குச் சென்று அங்கு தங்கி இருப்பதும், தியானத்தில் ஈடுபடுவதும், பிருந்தாவனங்களை தரிசிப்பதும் மகா பெரியவாளின் வழக்கம். தன் வாழ்நாளின் பல சந்தர்ப்பங்களில் பெரியவா கலவைக்கு வந்து தங்கி இருந்திருக்கிறார்.

காஞ்சிபுரத்திலிருந்து பயணித்து, மாலை சுமார் 4 மணி வாக்கில் பெரிய ராஜாவும் காசி சாமியாரும் கலவையை அடைந்தனர்.

பெரியவா முகாம் நோக்கி மெள்ள நடக்க ஆரம்பித்தனர்.

சிறு வாயிலினுள் நுழைந்து, மடத்துக்குள் பிரவேசித்தனர். பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. வேதம் பயிலும் சில சிறுவர்கள் மகா பெரியவாளின் கைங்கர்யப் பணிகளுக்காகக் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அங்கே, ஒரு திண்ணையில் தண்டம் ஏந்தி, அந்த சங்கர சொரூபம் வீற்றிருந்தது. மாலை வேளையிலும் அவரது முகத்தில் கோடி சூரியப் பிரகாசம் தெரிந்தது.

ஆஹா! என்னே ஒரு ஏகாந்தமான தரிசனம்!

இத்தகைய ஒரு தரிசனத்தில் பெரிய ராஜாவும் காசி சாமியாரும் மெய் மறந்து காணப்பட்டனர். குருபீடமான காஞ்சிபுரத்தில்கூட இப்படி ஒரு தரிசனம் எவருக்கும் கிடைக்காது!

அந்த சங்கர சொரூபத்தை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர்.

இருவரையும் பார்த்துக் கனிவாகப் புன்னகைத்தார் பெரியவா.

தன்னைப் பற்றி ஏதோ சொல்வதற்காக பெரிய ராஜா வாயைத் திறக்கும் முன்னதாக, “அதான் நன்னா தெரியுமேசாப்டூர் ஜமீன்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திலயும், நாராயணபுரத்துலே சதஸ் நடந்தப்பவும் பார்த்தேனே என்ற மகா ஸ்வாமிகள், பொசுக்கென காசி சாமியார் பக்கம் திரும்பி, “என்னவைஷ்ணவிதேவியை தரிசனம் பண்ணலியோ? என்று கேட்டார்.

காசி சாமியார் லேசாக அதிர்ந்துவிட்டார். இருக்காதா பின்னே! தான் வட இந்திய யாத்திரை போய்விட்டுத் திரும்பிய செய்தி இவருக்கு எப்படித் தெரியும்?!

பெரியவா இன்னமும் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த காசி சாமியார், சில விநாடிகளுக்குப் பிறகு, “ஆமா சாமீவைஷ்ணவிதேவி போகல என்றார் குரலில் நடுக்கத்துடன்.

அடுத்த தடவை போறப்ப வைஷ்ணவிதேவியையும் தரிசனம் பண்ணுங்கோ. ரொம்ப விசேஷம் என்ற பெரியவா, காசி சாமியாரிடம் ஆன்மிகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். பல திருத்தலங்களின் மகிமைகளை எடுத்துச் சொன்னார் மகா பெரியவா. பெரிய ராஜாவும் பவ்யமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

தங்களிடம் பேசுவதற்கு மகா பெரியவா காட்டும் ஆர்வம் பெரிய ராஜாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ‘இந்து மதத்தின் புகழ் பெற்ற ஒரு மடத்தின் ஆச்சார்ய புருஷர் தங்களிடம் ஏன் எண்ணற்ற விஷயங்களை அவ்வளவு ஆர்வமாகப் பேசுகிறார்? அவர் நினைத்தால், இந்தியாவில் உள்ள வேத வல்லுநர்களைத் தன் இடத்துக்கு வரவழைத்து, அவர்களுடன் பேசி மகிழலாமே? அதை எல்லாம் விட்டுவிட்டுத் தங்களிடம் ஏன் பேசிக் கொண்டிருக்கிறார்? என்று பெரிய ராஜாவுக்குப் பெரும் ஆச்சரியம்!

பூர்வ ஜன்மத்தில் தான் பெற்ற பாக்கியம் இது என்பதாக மகிழ்ந்திருந்தார் பெரிய ராஜா.

இடையிடையே தன் அருகே ஏதேதோ தகவல்கள் சொல்லிச் செல்வதற்காக வந்து போகும் பாடசாலை மாணவர்களையும், காரியதரிசிகளையும் பெரியவா கண்டுகொள்ளவில்லை.

அப்போது சர்புர்ரென்று ஐந்தாறு கார்கள் விரைந்து வந்து ஸ்ரீமடத்தின் வாசலில் நிற்கும் சத்தம் கேட்டது.

மகா பெரியவாளைத் தவிர, அங்கே இருந்தவர்கள் அனைவரும் பரபரப்பானார்கள்.

வருவது யாராக இருக்கும்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக எல்லோரும் வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அவ்வளவு ஏன், மகா பெரியவாளிடம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த பெரியராஜாவும், காசி சாமியாரும்கூட ஒரு கணம் தங்களை மறந்து வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

ஆனால், பெரியவா எந்த விதப் பரபரப்பும் காட்டவில்லை.

திபுதிபுவென ஒரு கூட்டம் வந்தது. சுமார் பதினைந்து பேருக்கும் மேலே இருக்கும். சென்னையில் பிரபலமாக இருக்கும் ஒரு ஓட்டல் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. வந்தவர்கள் அனைவரும் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருந்தார்கள். தங்கள் கைகளில் ஏந்தியிருந்த தட்டுகளில் பழங்கள், மல்லிகைச் சரங்கள், முந்திரி, பாதாம், திராட்சை, கல்கண்டு என்று தினுசு தினுசாகக் காணிக்கைப் பொருட்களை நிரப்பி வைத்திருந்தார்கள்.

பெரியவா அமர்ந்திருந்த திண்ணையின் அருகே அவர்கள் நெருங்கும் முன்னதாக அங்கேயே இருக்கும்படி சைகை காண்பித்துவிட்டது பரப்பிரம்மம். ‘யாரோ இருவர் பெரியவாளின் முன் அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று வந்தவர்களும் சபை நாகரிகம் கருதி, அங்கேயே நின்றுவிட்டனர்.

வந்தவர்கள் பக்கம் பார்வையைத் திருப்பாமல், “வட இந்தியாவுல என்று பெரிய ராஜாவையும் காசி சாமியாரையும் பார்த்துப் பெரியவா ஏதோ பேசத் துவங்கும்போது, “சாமீயாரோ வந்திருக்காங்க என்றார் காசி சாமியார் பவ்யமாக.

ஆனால், பெரியவா அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

தான் துவக்கிய வட இந்திய யாத்திரை குறித்து இவர்களிடம் மிகவும் விஸ்தாரமாகப் பேசினார்.

பெரிய ராஜாவுக்கும் இருப்புக்கொள்ளவில்லை. ‘பெரும் கும்பலாக வந்தவர்களைக் காக்க வைத்துவிட்டு நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறாரே ஸ்வாமிகள்வந்தவர்கள் நம்மை ஏதாவது தவறாக நினைக்கப் போகிறார்கள் என்றெல்லாம் நினைத்து, புதிதாக வந்தவர்களையும் பெரியவாளையும் மாறி மாறித் திரும்பிப் பார்த்தார். ஊஹும்! ஏனோ, தெரியவில்லைஅவர்களைப் பெரியவா கண்டுகொள்ளவே இல்லை.

மகான்களின் சில செயல்களுக்கு நாம் காரணம் தேடக் கூடாது என்பதாகத்தான் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்ஆனால், அந்த நேரத்தில் பெரிய ராஜாவுக்கும் காசி சாமியாருக்கும் இது தெரியவில்லை.

பதினைந்து நிமிடம் போயிருக்கும். மடத்தின் முக்கியமான சிப்பந்தி ஒருவர் பெரியவா அருகே வந்தார். மெட்ராஸ்லேர்ந்து இன்னார் வந்திருக்கா என்பதாக, சற்றுத் தள்ளி நின்று கொண்டிருப்பவர்களைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். “போய் என்னன்னு கேட்டுண்டு வா ன்று அனுப்பினார் பெரியவா.

இந்த நேரத்தில் பெரிய ராஜாவும் காசி சாமியாரும் சற்றே ஒதுங்கி அமர்ந்தனர். சென்னையிலிருந்து வந்தவர்கள், ஆசிர்வாதம் வேண்டி ஒருவேளை முன்னே வரலாம் என்கிற காரணத்துக்காக இந்த முன்னெச்சரிக்கை. ஆனால், இதைக் கவனித்த பெரியவா, அவர்களைப் பழைய இடத்திலேயே அமரச் சொன்னார்.

எனவே, மெள்ள நகர்ந்து தாங்கள் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் மீண்டும் அமர்ந்துகொண்டனர் இருவரும்.

மடத்துச் சிப்பந்தி, வந்தவர்களின் அருகே சென்றார். ஏதோ விசாரித்தார். பிறகு, பெரியவாளின் அருகே வந்தார். “அவா குடும்பத்துல கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காளாம். பெரியவாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிண்டு போறதுக்காக வந்திருக்காளாம் என்றார், வாயைப் பொத்தியபடி.

இருந்த இடத்தில் இருந்தபடியே அவர்களைப் பார்த்துக் கையை உயர்த்தி ஆசிர்வதித்தார். பிறகு, பிரசாதம் கொடுத்து, அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு சொன்னார். பெரிய ராஜா பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்துவிட்டார்.

பெரிய ராஜா மற்றும் காசி சாமியாருடனான இந்தச் சந்திப்பு சுமார் மூன்று மணி நேரத்தையும் தாண்டியது.

மணி இரவு எட்டைத் தாண்டிவிட்டது.

பெரியவாளிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு சென்னைக்குப் புறப்படலாம் என்று பெரி ராஜா தீர்மானித்த வேளையில் திடீரென சைரன் மாட்டிய ஒரு கார் அலறலுடன் வாசலில் வந்து நிற்கும் ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து வேறு சில கார்களும் வந்தன.

அரசு அதிகாரிகள் சிலர் பெரியவா சந்நிதானத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தனர். அங்கிருந்த காரியதரிசிகளிடம், பெரியவாளின் ஆசி வேண்டி பெல்ஜியம் ராணி வந்திருப்பதாகச் சொல்லச் சொன்னார்கள். அந்தக் காரியதரிசிகளும் பரபரப்புடன் பெரியவாளிடம் ஓடி வந்து தகவல் தெரிவித்தார்கள்.

உள்ளே வந்துகொண்டிருக்கும் டாம்பீகமான கூட்டத்தைப் பார்த்து பெரிய ராஜாவும் காசி சாமியாரும் மெள்ள எழுந்து, வெளியேற முற்பட்டனர். ஆனால், சட்டென்று அவர்களைக் கவனித்த பெரியவா, ‘உட்காருங்கள் என்பதாக சைகை காட்ட, பேச்சு மூச்சு இல்லாமல் அதே இடத்தில் அமர்ந்தார்கள்.

இரவே சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும் திட்டம் காலாவதியாகிப் போனது. இப்போதே நேரம் இரவு எட்டரை. இனி, இங்கிருந்து பஸ் கிடைப்பது அரிது!

பெல்ஜியம் ராணியும், அவரைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினரும் வந்தனர்.

என்னே ஆச்சரியம்!

பெல்ஜியம் ராணி தமிழர்களின் கலாசார உடையான புடவை அணிந்திருந்தார். இருக்கின்ற கொஞ்சம் தலைமுடியைஅப்படியே அவிழ்த்துப் போட்ட நிலையில் இல்லாமல்ஒரு ரப்பர் பேண்ட் போட்டிருந்தார். நெற்றியில் பொட்டு. தலையில் ஒரு பூக்கிள்ளல்.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆடவர்கள் அனைவரும் பட்டு வேஷ்டிஅதுவும் பஞ்சகச்சமாகக் கட்டி, மேலே அங்கவஸ்திரம் அணிந்திருந்தார்கள். நெற்றியில் திருநீறு பளபளத்தது.

இத்தகைய ஒரு காட்சியைப் பார்க்க விநோதமாகவும் பரவசமாகவும் இருந்தது.

இந்தக் கூட்டத்தைப் பார்த்து மகா பெரியவாளே ஆச்சரியம் காண்பித்தார் முகத்தில். நம் கலாசாரத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்துப் பிரமித்தார். அவர்களை அருகே அழைத்துத் தரையில் அமர வைத்தார்.

பிறகு, பெரிய ராஜா பக்கம் திரும்பினார். “இவாளுக்கு என்ன பிரசாதம் தரலாம்? என்று கேட்டார்.

பெரிய ராஜா திகைத்துப் போய்விட்டார். மாபெரும் ஆச்சார்யரான காஞ்சி ஸ்வாமிகள் தன்னை தரிசிக்க வந்திருக்கும் ஒரு வி.வி..பி. பக்தர் குடும்பத்துக்கு என்ன பிரசாதம் தரலாம் என்று தன்னிடம் ஆலோசனை கேட்கிறாரே என்று நெகிழ்ந்து விட்டார்.

பெரியவாளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல், அவரைப் பார்த்துப் புன்னகைத்தபடியே இருந்தார் பெரிய ராஜா. ஒரு சில விநாடிகள் கழித்து, “கேட்டேனேஇவாளுக்கு என்ன பிரசாதம் கொடுக்கலாம்னு? என்று விடாமல் கேட்டார் பெரியவா.

என்ன பதில் சொல்வதென்று திகைத்தார் பெரிய ராஜா.

ஓலைக் கொட்டகையும் மர பெஞ்ச்சுகளும், பசுமாட்டின் கத்தலும் வேதம் படிக்கின்ற சிறுவர்களின் நடமாட்டமும் அந்த பெல்ஜியம் மகாராணியை வியக்க வைத்தன. ஒவ்வொன்றையும் வியப்பால் விரிந்த விழிகளுடன் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பெரிய ராஜாவிடம் இருந்து பதில் வரவில்லை என்றாலும், பெரியவா விடவில்லை. “சொல்லுஇவாளுக்கு என்ன பிரசாதம் கொடுக்கலாம்?

பெரியவா இஷ்டம். எனக்கு எதுவும் சொல்லத் தோணலை – பெரிய ராஜா நெளிந்தார்.

இதற்கு முன்னால் வந்துவிட்டுப் போன பக்தர்கள், சமர்ப்பித்திருக்கும் மூங்கில் தட்டுகளைப் பார்வையால் ஆராய்ந்தார் பெரியவா. வகை வகையான பழங்கள், பிரிக்கப்படாத பாதாம், முந்திரி பாக்கெட்டுகள் என்று தாராளமாக இருந்தன. சற்றுத் தள்ளி ஒரு பாலிதீன் கவருக்குள்பெரிய ராஜா வாங்கி வந்திருந்த கல்கண்டை சற்றே எம்பி, தன் கையில் எடுத்தார் மகா பெரியவா (கால் கிலோ உலர்ந்த திராட்சையும் கால் கிலோ கல்கண்டும் வாங்கி வந்து பெரியவா திருச்சந்நிதியில் பெரிய ராஜா சமர்ப்பித்திருந்தார் என்பதை முன்பு சொல்லியிருந்தோம்). அந்த கவரைப் பிரித்து, அதில் இருந்து ஒவ்வொரு கல்கண்டுக் கட்டியாக எடுத்து பெல்ஜியம் ராணி மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பிரசாதமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தார் மகா பெரியவா. மிகுந்த பயபக்தியுடன் அதை வாங்கினார்கள். இதை என்ன செய்வது என்பது புரியாமல் அவர்கள் திகைத்தார்கள். ‘இது சாப்பிடும் பொருள்தான் என்று அருகில் இருந்த ஒருவர் ஆங்கிலத்தில் விளக்கிச் சொன்னதற்குப் பிறகு, அனைவரும் அதைத் தங்கள் வாயில் போட்டுக்கொண்டனர். கல்கண்டு தந்த தித்திப்புச் சுவையோடு பெரியவாளை இரு கரம் கூப்பி வணங்கினார்கள்.

அந்நிய தேசத்தை ஆளும் ஒரு மகாராணிக்கு ஏதோ மிகப் பெரிய பொருளை ஆசிர்வாதமாகக் கொடுக்கப் போகிறார் என்று ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பெரிய ராஜா, ஏகத்துக்கும் நெகிழ்ந்து போனார். அன்புடன் தான் வாங்கி வந்து சமர்ப்பித்திருந்த கல்கண்டை அந்த இடத்தில் தேடி எடுத்து, இவர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறாரேஇதற்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்கவேண்டும் என்று உருகிப் போனார். மெய்சிலிர்த்தார். அவர் கண்கள் கலங்கின.

நெகிழ்வின் காரணமாக விழிகள் ததும்பும் நிலையில் தன் முன் அமர்ந்திருந்த பெரிய ராஜாவுக்கும் அவர் நண்பர் காசி சாமியாருக்கும் ஆளுக்கு ஒரு கல்கண்டுத் துண்டைப் பிரசாதமாகத் தந்து புன்னகையுடன் அவர்களை ஆசிர்வதித்தார்.

இரவு சுமார் எட்டரை மணி வாக்கில் பெல்ஜியம் குடும்பம் விடைபெற்றுப் போனது.

இப்போது மகா பெரியவா முன்னால் பெரிய ராஜாவும் காசி சாமியாரும் மட்டுமே இருந்தனர்.

விடிகார்த்தால அஞ்சரை மணிக்கு மெட்ராஸ் பஸ் இருக்கு. அந்தப் பக்கம் பள்ளிக்கூடம் கிட்ட போங்கோ. வசதியா படுத்துக்கலாம். ரெஸ்ட் எடுத்துண்டு கிளம்புங்கோ என்று சொன்ன பெரியவா, விறுவிறுவென எழுந்து தன் முகாம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஓரிரு சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர், அதே வேகத்தில்.

கலவை மடத்தை ஒட்டி இருக்கும் அந்தப் பள்ளிக்கூட வளாகத்துக்குச் சென்றனர் பெரிய ராஜாவும் காசி சாமியாரும். பெரியவாளை அமர வைத்துச் செல்லும் சைக்கிள் ரிக்ஷா ஓர் ஓரமாக அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே நீண்ட திண்ணை போன்று காணப்பட்ட இடத்தில் துண்டை விரித்துப் படுத்தார்கள் இருவரும். அசதியின் காரணமாகப் படுத்த ஒரு சில நிமிடங்களிலேயே உறங்கிப் போயினர்.

அடுத்த நாள் அதிகாலை மணி நாலரை இருக்கும்.

ஸ்நானம் செய்வதற்காகத் தன் ஜாகையில் இருந்து எழுந்து வெளியே வந்தது அந்தப் பரப்பிரம்மம். அதிகாலை வேளையில் அவரது தரிசனத்துக்காக சில பக்தர்கள் கூடி இருந்தனர். அவர்களுக்கு எல்லாம் தன் பார்வையால் ஆசிர்வாதம் வழங்கி விட்டு, பெரிய ராஜாவும் காசி சாமியாரும் படுத்து உறங்கும் பள்ளிக்கூடத் திண்ணையின் வழியே நடந்தார். அங்கே இரு ஆசாமிகள் படுத்து உறங்குவதைக் கண்டு ஒரு கணம் நின்றார்.

படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் பெரிய ராஜாவின் அருகில் வந்த பெரியவா, அவரது காதுக்கு அருகில் தன் தண்டத்தை வைத்துடொக் டொக்கென்று தரையில் இரண்டு மூன்று முறை தட்டினார்அவ்வளவுதான்… பொசுக்கென்று கண் விழித்து எழுந்த பெரிய ராஜாவும் காசி சாமியாரும் திடுக்கிட்டனர். விஸ்வரூப தரிசனத்தை இவர்கள் இருக்கும் இடம் தேடி வந்து தந்து அருளுகிறாரே!

சொன்னேனேஅஞ்சரை மணிக்கு ஃபர்ஸ்ட் பஸ். முகம் அலம்பிண்டு, மடத்துல காபி குடிச்சுட்டுப் புறப்படுங்கோ

எத்தகைய ஓர் உத்தரவு!

தூங்குபவர் அசதியின் காரணமாகத் தூங்கிவிட்டு, பஸ்ஸைக் கோட்டை விட்டுவிடப் போகிறாரே என்கிற கவலையில் காதுக்கு அருகில் தண்டத்தை வைத்து எழுப்பிய அந்தப் பரப் பிரம்மத்தின் திருவடிகளில் தடாலென விழுந்து நமஸ்கரித்தார் பெரிய ராஜா.

ஒரு புன்னகையைச் சிதற விட்டுவிட்டுத் தன் அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்காகஜெட் வேகத்தில் நடையைப் போட்டார் காஞ்சி மகான்.

தற்போதும் இந்த நிகழ்வைச் சொல்கிற பெரிய ராஜா, உணர்ச்சி மேலிடுதலின் காரணமாக ஏகத்துக்கும் நெகிழ்ந்து போகிறார்.