இப்போது சொல்லப்போகும் சம்பவம் நடந்து சுமார் இருபத்தைந்து அல்லது முப்பது வருடங்கள் ஆகியிருக்கும்.
குஜராத் மாநிலம் பரோடா நகரில் வசித்து வருபவர் பாஸ்கரன். அங்கேயே செட்டிலாகிப் பல வருடங்கள் ஓடிவிட்டன. ஏதோ ஒரு வேலை விஷயமாக சென்னைக்கு வந்திருந்தார். அவர் எதிர்பார்த்த கால அவகாசத்துக்குள் வந்த வேலை சுபமாக முடிந்துவிட்டது. அப்போதுதான் மயிலாப்பூரில் மகா பெரியவா முகாமிட்டிருக்கிறார் என்று யாரோ பாஸ்கரனுக்குத் தகவல் சொன்னார்கள்.
மகா பெரியவாளைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்ததால், அவரை தரிசிக்க மிகவும் ஆவல் கொண்டார். மயிலாப்பூரில் மகா பெரியவா தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் இடத்துக்குச் சென்றார் பாஸ்கரன்
ஆனால், பெரியவா அங்கே இல்லை. அங்கிருந்து திருப்பதிக்குக் கிளம்பிப் போய்விட்டதாகச் சொல்லப்பட்டது. பாஸ்கரனுக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும், பெரியவாளை தரிசிக்க வந்துவிட்டு, அவரை தரிசிக்காமல் பரோடா செல்ல அவருக்கு மனமில்லை. மறுநாள் அதிகாலை ஒரு பேருந்து மூலம் திருப்பதி செல்லலாம் என்று முடிவெடுத்தார்.
இன்னும் ஓரிரு நாட்களில் பரோடா செல்லவேண்டும். சென்னையில் இருந்து ரயிலுக்கு டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என்றாலும், அதற்குள் மகா பெரியவாளை எப்படியாவது தரிசனம் செய்துவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியம் எடுத்துக்கொண்டார். ‘இது சாத்தியப்படும்‘ என்று அவருக்குத் தோன்றவில்லை. இருந்தாலும், ‘இந்த தரிசனம் சாத்தியப்பட வேண்டும்‘ என்று ஆத்மார்த்தமாக மகா பெரியவாளையே பிரார்த்தித்துக்கொண்டார். அடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்னரே பஸ் ஏறி, திருப்பதி சென்று, மகா பெரியவாளை அங்கு தரிசித்துவிட்டு மெட்ராஸ் திரும்பி விடலாம் என்று தீர்மானித்தார்.
திட்டமிட்டதுபோல் அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்குத் திருப்பதி செல்லும் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தார் பாஸ்கரன். நான்கு மணிநேரப் பயணத்துக்குப் பிறகு திருப்பதியில் இருந்தார். ஆனால், என்னே துரதிர்ஷ்டம்… அங்கும் ஏமாற்றம் அவரைத் துரத்தியது. திருப்பதியில் இருந்து ராய்சோட்டி என்கிற இடத்துக்குப் பெரியவா புறப்பட்டுப் போய்விட்டதாகத் தகவல் சொன்னார்கள்.
ஒரு பக்கம் ஏமாற்றம் இருந்தாலும், குறிப்பிட்ட நாளில் பரோடாவுக்குப் பயணம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததாலும், திருப்பதி க்ஷேத்திரத்தில் பாஸ்கரன் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். அதாவது, மகா பெரியவா எங்கே இருக்கிறார் என்று தேடி, அவரை தரிசிக்காமல் இங்கிருந்து மெட்ராஸ் திரும்பக் கூடாது என்பதே அந்தத் தீர்மானம்.
ராய்சோட்டிக்கு எங்கே பேருந்து ஏறவேண்டும் என்று கடைக்காரரிடம் விசாரித்து அறிந்தார். பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து, உரிய பேருந்தில் ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தார். இவர் ஏறி அமர்ந்த ஒரு சில நிமிடங்களில் பேருந்து பெரும் சத்தத்துடன் புறப்பட்டது.
வந்த காரியம் இன்னும் பூர்த்தி ஆகவில்லையே என்கிற ஏக்கத்தாலும், அதிகாலையிலிருந்தே பயணித்து வருவதாலும், பெரியவாளை தரிசிக்கும் வரை உணவு எதுவும் உட்கொள்ளக் கூடாது என்கிற வைராக்கியத்தினாலும் பேருந்தில் லேசாகக் கண்ணயர்ந்தார் பாஸ்கரன். அது நல்ல தூக்கத்தில் கொண்டு விட்டது.
மாலை சுமார் நான்கு மணி இருக்கும். பேருந்தில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த பாஸ்கரனை நடத்துநர் தட்டி எழுப்பினார், ‘சார்… நீங்க கேட்ட ராய்சோட்டி வந்திடுச்சு. எறங்கிக்குங்க.‘
கண்களைத் துடைத்துக்கொண்டு அவசர அவசரமாகப் பேருந்தில் இருந்து இறங்கினார் பாஸ்கரன். அக்கம்பக்கம் சுற்றிப் பார்த்தார். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது மாதிரி இருந்தது.
ராய்சோட்டி என்பது மிகவும் சிறிய கிராமம். ‘இந்தக் கிராமத்துக்கு மகா பெரியவா உண்மையிலேயே வந்திருப்பாரா? எப்படியோ… அவரது தரிசனம் மட்டும் எனக்குக் கிடைத்து விட்டால் போதும்‘ என்று மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டு சாலை ஓரத்தில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்குச் சென்றார். மகா பெரியவாளின் அடையாளத்தை மிகத் தெளிவாகச் சொல்லி, ‘இப்படி ஒரு துறவி இந்த வழியாகப் போனாரா அல்லது இந்த ஊரில் தங்கி இருக்கிறாரா?‘ என்று விசாரித்தார்.
அந்தக் கடைக்காரர், ‘அப்படி யாரும் இங்கே வரல சாமீ… தோ, ஒரு பஸ்ஸு வந்து நிக்குது பாருங்க… அந்த டிரைவர்கிட்ட போய் விசாரிங்க… அவங்களுக்கு எப்படியும் தெரியும்‘ என்று சற்றுத் தள்ளி மெயின் ரோட்டில், அப்போதுதான் வந்து நின்று கொண்டிருக்கிற ஒரு பேருந்தைக் காட்டினார் கடைக்காரர். அது கடப்பாவுக்குச் சென்றுகொண்டிருக்கிற பேருந்து. இன்ஜினை ஆஃப் செய்தார் டிரைவர்.
கிராமவாசிகள் என்பதற்கு உண்டான அடையாளங்களுடன் மூட்டை முடிச்சுகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்து கொண்டு ஒரு சில பயணிகள் பேருந்திலிருந்து இறங்கினர். பெட்டிக் கடைக்காரர் சொன்னபடி டிரைவரிடம் விசாரிக்கலாம் என்று அந்தப் பேருந்துக்குள் ஏறினார் பாஸ்கரன்.
வண்டியை ஓட்டி வந்த இஸ்லாமிய டிரைவருக்கு அடர்ந்து வளர்ந்த தாடி. தலையில் குல்லா அணிந்திருந்தார். பாஸ்கரன் படிக்கட்டு வழியாகப் பேருந்துக்குள் ஏறிய சமயம், தன் இருக்கையில் இருந்து அந்தப் பக்கத்தில் உள்ள சிறு கதவைத் திறந்துகொண்டு சாலையில் குதித்தார் டிரைவர். அங்கிருந்த ஒரு கடைக்குப் போய் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி ‘மடக் மடக்‘ என்று ஒரே மூச்சில் குடித்தார். டிரைவர் இங்கே கடையில் இருப்பதைக் கவனித்த பாஸ்கரன், பேருந்திலிருந்து இறங்கி, அவரை நோக்கி வேகமாக நடந்தார்.
மகா பெரியவா எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிவதற்குத் தற்போது இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு – இந்த இஸ்லாமிய டிரைவர்தான். இவரும் சரியான தகவலைச் சொல்லாவிட்டால் பாஸ்கரன் என்ன செய்வாரோ?!
‘ராய்சோட்டி கிராமத்துக்கு பெரியவா வரவில்லை என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் அவர் இந்தப் பக்கத்தில் எங்கு முகாமிட்டிருக்கிறார்? என் கேள்விக்கு விடை கிடைக்குமா?‘ என்கிற சந்தேகத்துடன் இஸ்லாமிய டிரைவரை நெருங்கி, மகா பெரியவா பற்றிய அடையாளங்களைச் சொல்லி, மிகுந்த பவ்யமாக விசாரித்தார் பாஸ்கரன். சட்டென்று டிரைவர் முகத்தில் ஒரு பிரகாசம். ‘நீங்கள் சொல்லும் அடையாளங்களுடன் வயதான ஒரு சாமியாரை கடப்பா செல்லும் வழியில் பார்த்தேன். சாலையில் விறுவிறுவென்று நடந்து போய்க் கொண்டிருந்தார். எப்படித்தான் அவ்வளவு வேகமாக அவரால் நடக்க முடிகிறதோ, தெரியவில்லை…‘ என்றார் டிரைவர், ஆச்சரியம் ததும்ப.
பாஸ்கரன் முகத்தில் ஒரு நம்பிக்கை. மகா பெரியவா இந்த ஏரியாவில்தான் முகாமிட்டிருக்கிறார் போலிருக்கிறது. டிரைவரிடம் கேட்டார்: ‘அவரை தரிசிக்கவேண்டும் என்பதற்காக மெட்ராஸில் இருந்து வந்திருக்கிறேன். கடப்பா செல்லும் வழியில் அவரைப் பார்த்ததாகச் சொல்கிறீர்களே… அவர் இருக்கும் இடத்தை எனக்கு அடையாளம் சொல்ல முடியுமா?‘
‘இந்தப் பேருந்தில் ஏறிக்கொள்ளுங்கள். அந்த இடம் என் நினைவில் இருக்கிறது‘ என்று டிரைவர் உற்சாகமாகச் சொல்ல… பாஸ்கரன் பேருந்தில் ஏறிக்கொண்டார். டிரைவருக்கு அருகில் இருந்த ஒரு காலி இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
கடமுடா சாலையில் பேருந்து சென்றுகொண்டே இருந்தது. அதிக வேகத்தில் அந்தச் சாலையில் பயணம் செய்ய முடியாது. சாலையின் கண்டிஷன் அப்படி!
மாலையும் மங்கிவிட்டது. சிறு தூறல் வேறு நசநசவென்று கொட்டிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். பாஸ்கரனைப் பார்த்து, ‘அதோ பாருங்கள்… அங்கே சிறு சிறு விளக்குகள் எரியுதே… நீங்கள் அடையாளம் சொன்ன சாமியார் அங்கேதான் இருக்கவேண்டும். போய்ப் பாருங்கள்‘ என்றார்.
பாஸ்கரனுக்கு ஒரு தடுமாற்றம். ‘பஸ்ஸை விட்டு இறங்கி, அங்கே போய்ப் பார்த்த பிறகு பெரியவா இல்லை என்றால், என்ன செய்வது? இருட்டு வேளை… மழை வேறு… இடமோ காடுபோல் காணப்படுகிறதே‘ என்று யோசித்தார். இதைப் புரிந்துகொண்டாரோ என்னவோ, அந்த இஸ்லாமிய டிரைவரே பாஸ்கரனைப் பார்த்து, ‘சாமீ… நீங்க சொன்ன சாமியார் அங்கே இல்லேன்னா ரொம்ப நேரம் நிக்காதீங்க… ஒடனே திரும்பிடுங்க… அந்த மலைப் பகுதியில கரடிங்க நடமாட்டம் உண்டு. இதே எடத்துல வந்து நில்லுங்க. நான் கடப்பா போயிட்டு, கொஞ்ச நேரத்துல திரும்பிடுவேன். உங்களை அப்ப பஸ்ல ஏத்தி பாதுகாப்–பான இடத்துல கொண்டுவிட்டுடறேன்‘ என்று கரிசனமாகச் சொன்னார் டிரைவர்.
‘ரொம்ப சந்தோஷம்‘ என்று டிரைவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுப் பேருந்திலிருந்து இறங்–கினார் பாஸ்கரன். அவர் அடையாளம் காண்பித்த மலைப் பகுதியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார். ரொம்பவும் அத்துவானக் காடுபோல் இருந்தது அந்தப் பகுதி. ‘இப்படி ஒரு பாதுகாப்பு இல்லாத பகுதியில்தானா பெரியவா முகாமிட்டிருக்கிறார்?‘ என்று வியந்தபடியே நடந்தார்.
தொலைவில் வெளிச்சப் பொட்டு தெரிந்த பகுதியைப் பார்த்ததும், அவருக்குள் ஒரு நம்பிக்கை துளிர்த்தது, மகா பெரியவா இங்கேதான் முகாமிட்டிருக்க வேண்டும் என்று. அந்த நம்பிக்கையும் பொய்க்கவில்லை. அந்த இடத்தை நெருங்க நெருங்க, வைதீக அந்தணர்களின் நடமாட்டம் இருப்பதைக் கண்டு பரவசப்பட்டார் பாஸ்கரன்.
அது ஒரு பள்ளிக்கூடம். கிராமத்துப் பள்ளிக்கூடம் என்பதால், சுத்தமும் சுகாதாரமும் கொஞ்சமும் அங்கே இருக்கவில்லை. பாவம், சுகாதாரம் குறைந்து காணப்பட்ட அந்த இடத்தில் சில வைதீக அந்தணர்கள் தோதாக அமர்ந்து, வெகு சிரத்தையாக வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை நெருங்கி, ‘மகா பெரியவா எங்கே இருக்கிறார்?‘ என்று கேட்டார் பாஸ்கரன். அதற்கு அவர், ‘இப்–போதுதான் தன் இருப்பிடத்துக்கு அவர் கிளம்பினார். அதோ தெரிகிறது பாருங்கள் ஒற்றையடிப் பாதை… அது வழியே செல்லுங்கள். பெரியவாளை தரிசனம் செய்து விடலாம்‘ என்றார். மீண்டும் வேத பாராயணத்தில் மூழ்கி விட்டனர்.
அடையாளம் காண்பித்த பாதையில் வேகமாக நடந்தார் பாஸ்கரன். தூறல் இன்னும் விடவில்லை. இந்த ஒற்றையடிப் பாதையில் கன்னாபின்னா என்று செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றில் பல – முட்செடிகள்! செடிகளின் மேல் படாமல் நடப்பது சிரமமாக இருந்தது. குளிர் வேறு வாட்டி எடுத்தது. விளக்கு வெளிச்சம் இல்லாமல் பாதையில் நடப்பது பெரும் சிரமம்போல் இருந்தது.
‘இந்தச் சூழ்நிலையில் கட்டிய வஸ்திரத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் எப்படித்தான் அந்தப் பரப்பிரம்மத்தால் இருக்க முடிகிறதோ… ஈஸ்வரா‘ என்று பிரமித்தார் பாஸ்கரன்.
ஒரு கட்டத்தில் தனக்குச் சில அடிகளுக்கு முன்னால் மகா பெரியவா நடந்து சென்றுகொண்டிருப்பதைப் பார்த்து விட்டார் பாஸ்கரன். யாரோ ஒரு சீடன் கைவிளக்கு காண்பிக்க… அவனுக்குப் பின்னால் அந்த தெய்வம் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று நின்ற பெரியவா, ‘பின்னால யாரோ ஒருத்தர் வர்றா மாதிரி சத்தம் கேக்கறதே‘ என்றார். திரும்பிப் பார்த்த சீடனும், ‘ஆமா பெரியவா… யாரோ ஒரு பக்தர் ஒங்களை தரிசனம் பண்றதுக்கு வர்றாப்ல தெரியறது‘ என்றான். உடனே, ‘அவாளுக்கு வெளிச்சம் காண்பி. எனக்கு எதுக்கு?‘ என்றார் சீடனிடம்.
பெரியவா தன் இருப்பிடத்துக்குள் நுழைந்தார். ஒரே கும்மிருட்டு. தான் கொண்டுபோயிருந்த கைவிளக்கைச் சீடன் அங்கே தரையில் வைத்த பிறகுதான், அந்த இடத்துக்குள் ஓரளவு ஒளி வந்தது. தரையில் அமர்ந்த பெரியவா, புதிதாக வந்தவரை நிமிர்ந்து பார்த்தார்.
பாஸ்கரன் பரவசமானார். இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான தரிசனத்தை எதிர்பார்த்துதானே அதிகாலையில் இருந்து பயணித்து வந்துகொண்டிருக்கிறார். சாஷ்டாங்கமாக விழுந்தார். அவருடைய விழிகளில் இருந்து நீர் பெருகியது. பெரியவா ஆசிர்வதித்தார்.
ஜகம் புகழும் அந்தக் கருணைக் கடல் அன்று குடிகொண்ட அந்த இடத்தை உற்று நோக்கினார் பாஸ்கரன். அது, மிகப் பழைமையான ஓட்டுக் கட்டடம். சுவரில் ஆங்காங்கே காரை பெயர்ந்து காணப்பட்டது. அறையின் மூலையில் ஏதோ விவசாய தான்யம் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
தரையும் ஒரே மாதிரி இல்லை. ஆங்காங்கே குண்டு–குழிகள். மழை இன்னும் நின்றபாடில்லை. ஒருவேளை இந்த மழை சற்றே பெரிதாகப் பெய்ய ஆரம்பித்தால், இந்தக் கட்டடம் தாங்குமா என்கிற சந்தேகமும் பாஸ்கரனுக்கு வந்தது.
‘காஞ்சி ஸ்ரீமடத்தின் ஒப்புயர்வற்ற ஒரு பீடாதிபதி குடி இருக்கும் இடம் இப்படியா இருப்பது?‘ என்று நினைக்கும்போது பாஸ்கரனின் கண்கள் நனைந்தன.
தங்கி இருக்கக்கூடிய இடத்தின் வசதிகளா மகான்களுக்கு முக்கியம்? போகத்தைத் துறந்ததுதானே சந்நியாச வாழ்க்கை! அவர்களின் ஜபமும் தவமும் இடையூறு இல்லாமல் நடக்க வேண்டும். அதற்காகத்தானே ஆடம்பரத்தையும் பகட்டையும் துறந்து கல்லிலும் முள்ளிலும் பயணித்தார்கள்!
குண்டும் குழியுமாக இருந்த அந்தப் பழைமையான ஓட்டுக் கட்டட வீட்டில் ஒரு மூலையில் சென்று அமர்ந்தார் பெரியவா. தான் வைத்திருந்த கைவிளக்கை ஒரு ஓரத்தில் வைத்தான் சீடன். பாஸ்கரன் எதிரே நின்றுகொண்டிருந்தார். கை நீட்டி பாஸ்கரனை அருகே வரவழைத்து, அவரின் பூர்வாஸ்ரமம் பற்றி விசாரித்து அறிந்தார். பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்தார். உடன் இருந்த ஒரு சீடனிடம், ‘இவருக்கு ஆகாரத்துக்கு ஏதாவது கொடு‘ என்பதுபோல் ஜாடை காட்டினார்.
“வெளியூர்ல இருந்து வந்திருக்கேள். மத்தியானம் வேற சாப்பிடல. பசியா இருக்கும். மொதல்ல ஆகாரம் பண்ணுங்கோ“ என்று பெரியவா சொன்னதே ஏதோ கல்யாணப் பந்தியில் விருந்து சாப்பிட்ட மாதிரி இருந்தது பாஸ்கரனுக்கு.
உச்சி குளிர்ந்து போனார் பாஸ்கரன். மீண்டும் ஒரு முறை அந்த மகானை நமஸ்கரித்தார்.
அதற்குள் வெளியே போன சீடன் உணவுப் பொட்டலம் ஒன்றும் ஒரு டம்ளரில் நீரும் கொண்டுவந்து பாஸ்கரனிடம் கொடுத்தான்.
அப்போதுதான் பாஸ்கரனுக்கு நினைவு வந்தது – அதிகாலை சென்னையில் புறப்படும்போது ஒரு டம்ளர் காபிக்குப் பிறகு தான் எதுவுமே உட்கொள்ளவில்லை என்று. பசி வயிற்றைக் கிள்ளியது. அதுவும் பெரியவாளே பிரத்தியேகமாகச் சொல்லி ஆகாரம் வந்து சேர்ந்திருக்கிறது.
அதை வாங்கிக்கொண்டு மெள்ள நடந்து அடுத்திருந்த ஒரு அறைக்கு வந்தார். பொட்டலத்தைப் பிரித்தார் பாஸ்கரன். உள்ளே, அரிசி உப்புமாவும் சந்திரமௌளீஸ்வரர் பூஜையின் பிரசாதமான மைசூர் பாக்கின் ஒரு துண்டமும் இருந்தன. நிதானமாகச் சாப்பிட்டார். அந்த அறையின் ஒரு மூலையில் போர்வை போர்த்திக்கொண்டு ஓரிருவர் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ஒரு சில நிமிடங்களில் அந்தச் சீடனே மீண்டும் பாஸ்கரனிடம் வந்தான். “இன்னும் சற்று நேரத்தில் ஒரு கார் இங்கே வரும். அதில் கடப்பா சென்றுவிட்டு, அங்கிருந்து தாங்கள் சென்னைக்குச் செல்லவும் என்பது பெரியவா உத்தரவு“ என்று சொன்னான். இவரது பதிலைக்கூட எதிர்பார்க்காமல் போய் விட்டான்.
பாஸ்கரனுக்கு சந்தோஷமாக இருந்தது. தனது திட்டப்படி சென்னைக்குச் சென்று குஜராத் புறப்படவேண்டுமே என்று அப்போதுதான் கவலையில் இருந்தார். இதை அறிந்துகொண்டு, பெரியவா எப்படி ஒரு நல்ல தகவல் அனுப்பியிருக்கிறார் என்று நெகிழ்ந்தார்.
பெரியவா ஓய்வுக்குச் சென்றுவிட்டதால், புறப்படும்போது பாஸ்கரனால் அவரை தரிசிக்க முடியவில்லை. அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு, சீடன் சொன்ன காரில் ஏறிக்கொண்டார்.
அந்த காரில் வைணவ அந்தணர் ஒருவர் வந்திருந்தார். கடப்பா வரை காரில் சென்றுவிட்டு, அதன் பின் அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் செல்பவர் அவர். இதே பயணத் திட்டம், பாஸ்கரனுக்கும் தோதாக அமைந்துவிட்டது.
சென்னைக்கு வந்ததும், வைணவ அந்தணருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினார் பாஸ்கரன். தனது திட்டப்படி உரிய நாளில் குஜராத் புறப்பட்டுப் போனார்.