தீரா நோய் தீர்த்த பாததூளி மண்

கா பெரியவாளின் பார்வை மட்டுமல்ல. அவரது திருப்பாதம் பட்ட மண்ணே ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது.

மருத்துவர்களால் போக்க முடியாத ஒரு வியாதியை, இந்த மண் போக்கியது.

என்ன சம்பவம்? என்ன விவரம்?

காஞ்சி மகா பெரியவா நம்மிடையே நடமாடி வந்த காலத்தில் அவரை ஒரு கலியுக தெய்வமாகவே கருதி, தரிசித்து பக்தியில் திளைத்தார்கள் அன்பர்கள். பெரியவாளின் திருப்பார்வையே பக்தர்களுக்குப் பல விமோசனங்களைக் கொடுத்தது. பீடாதிபதி என்கிற முறையில் ஸ்ரீமடத்திலேயே தங்கி இருக்காமல், இந்தியா முழுதும் க்ஷேத்ராடனம் செய்து, எண்ணற்ற திருக்கோயில்களை தரிசித்தார் பெரியவா. வழிபாடுகள் இல்லாமல் இருந்த திருக்கோயில்களில் பூஜை முறைகளைத் துவக்கி வைத்தார். சம்பந்தப்பட்ட திருத்தலத்தின் பெருமைகளைப் பலரும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்தினார்.

அந்த மகானின் திருப்பாதம் பட்ட கிராமங்களும் நகரங்களும் ஆசிர்வதிக்கப்பட்ட புண்ணியத் தலங்கள் ஆயின. மகா பெரியவா காஞ்சியில் இருக்கும்போது அங்கு சென்று தரிசிப்பதைவிட, அவர் க்ஷேத்ராடனங்களுக்குச் செல்லும்போதெல்லாம், அவருடன் பயணப்பட்டு கைங்கர்யம் செய்து, மன நிறைவும் ஆத்ம சந்தோஷமும் அடைந்த பக்தர்கள் ஏராளம். அத்தகைய பக்தர்களின் குடும்பங்கள் இன்றளவும் அந்த மகானின் ஆசிர்வாதத்தால் சகல சுபிட்சத்தோடும் வாழ்ந்து வருகின்றன.

வைஷ்ணவ வெங்கட்ராமன் என்பவர், மகா பெரியவா மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தார். வெங்கட்ராமன் என்கிற இவரைவைஷ்ணவ வெங்கட்ராமன் என்று நாமகரணம் சூட்டியவரே மகா பெரியவாதான்சென்னையில் பிராவிடண்ட் ஃபண்ட் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்சென்னை வாணுவம்பேட்டையில் ஜாகை (தற்போது ஓய்வு பெற்ற பின் மடிப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்).

பெரியவாளை தரிசனம் செய்யச் செல்வது என்றால், வெங்கட்ராமனுக்கு அப்படி ஒரு சந்தோஷம். பெரியவாளின் உத்தரவை, இறைவனின் திருவாக்காகக் கருதுவார். சத் காரியங்கள் மேற்கொள்வார்.

பணிபுரிந்த காலத்தில் தன் நண்பர்களுடன் காசிக்குச் செல்லும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது வெங்கட்ராமனுக்கு. சந்தோஷத்துடன் பயணமானார். கங்கையில் ஸ்நானம் செய்து, ஸ்ரீவிஸ்வநாதர்ஸ்ரீவிசாலாட்சிஸ்ரீஅன்னபூரணி ஆகிய தெய்வத் திருமேனிகளை தரிசித்தார். கங்கையில் சேகரிக்கப்பட்ட புனித ஜலம் நிரம்பிய ஒரு சொம்பை எடுத்து வந்து, தன் தாயிடம் கொடுத்து நமஸ்காரம் செய்தார்.

தன்னால் பயணப்பட முடியவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தாலும், தன் மகன் காசி யாத்திரையைச் சிரத்தையோடு முடித்திருக்கிறானே என்று அந்தத் தாய்க்கு விவரிக்க முடியாத ஆனந்தம். வைணவ பாரம்பரியத்தில் ஊறி இருந்தாலும், மகனது இந்தக் காசி யாத்திரையை எண்ணி, மனம் பூரித்தார் அந்த அன்னை. அடிக்கடி காஞ்சி ஸ்ரீமடம் சென்று பெரியவாளின் தரிசனம் பெற்றுத் திரும்புகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்த மகானின் அருள் திறன் பற்றியும் பக்தி அனுபவங்களையும் கேட்டு வியப்பார் தாயார்.

வெங்கட்ராமன் நமஸ்காரம் செய்து தன் கையில் சேர்ப்பித்த கங்கா ஜலத்தைஎன்ன நினைத்தாரோ தெரியவில்லைஅந்தத் தாயார் மீண்டும் மகனிடமே கொடுத்தார். ‘வெங்கட்ராமாஒரு பூரண அமாவாசை காலத்துல பெரியவா இந்த கங்கா ஜலத்தைத் தன் ஸ்நானத்துக்கு சேர்த்துண்டார்னா எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ என்ன பண்றேஇந்த கங்கா ஜல சொம்பை மகா பெரியவாகிட்ட கொடு. அமாவாசை புண்ணிய காலத்துல இந்த சொம்பு ஜலத்தையும் பெரியவா தன் ஸ்நானத்துக்கு சேர்த்துக்கணும்கிறது என் ஆசை என்று அந்தத் தாயார் சொல்லி முடித்தபோது, அவரது விழி ஓரங்களில் நீர்த் துளிகள் லேசாகக் கோத்திருந்தன.

தாயாரிடம் இருந்து பயபக்தியுடன் அந்தக் கங்கை சொம்பை வாங்கிக்கொண்டார் வெங்கட்ராமன். ‘இனி இது மகா பெரியவாளுக்குச் சேரவேண்டியது என்று பத்திரப்படுத்திக் கொண்டார்.

பெரியவாளை தரிசிக்க வேண்டும் என்று அவரது அத்யந்த பக்தர்கள் எப்போது நினைத்தாலும், அதற்கு உண்டான வழிவகைகளையும், பயணத் திட்டத்தையும் பெரியவாளே எப்படியாவது ஏற்படுத்தித் தந்துவிடுவார். அதுபோல் காசி சொம்புடன் பெரியவா தரிசனத்துக்காக ஏங்கி இருந்த வெங்கட்ராமனுக்கும் ஒரு சந்தர்ப்பம் தானாக அமைந்தது.

அப்போது மகா பெரியவா ஹம்பியில் முகாமிட்டிருந்தார். விஜய நகர மன்னர்களின் தெய்வ பக்தியை இன்றும் பறை சாற்றிக்கொண்டிருக்கும் புனிதத் திருத்தலம் இது. அந்நிய மதத்தினரின் பாதிப்புக்கு உள்ளான திருக்கோயில்களை அங்கே இன்றும் தரிசிக்கலாம். அங்குள்ள ஒரு சிவன் கோயில் அருகே மகா பெரியவா முகாமிட்டிருந்தார். சிதிலமடைந்த சிவன் கோயில் அருகே திண்ணை போன்ற ஒரு மேடையில் பெரியவா சங்கர சொரூபமாக வீற்றிருப்பார். திரளான ஜனங்கள் வந்து அவரை தரிசித்து, பிரசாதம் வாங்கிச் செல்வார்கள்.

பெரியவா ஹம்பியில் இருப்பதை அறிந்து தன் நண்பர்கள் சிலருடன் சென்னையிலிருந்து பயணப்பட்டார் வெங்கட்ராமன். மறக்காமல் தன் தாயார் கொடுத்த கங்கா ஜல சொம்பை எடுத்துக்கொண்டார்.

முதல் நாள் இரவு முழுதும் பயணப்பட்டு ஹம்பிக்கு வந்து சேர்ந்தார் வெங்கட்ராமன். அன்றைக்கென்று பார்த்து அமாவாசை வேறு. தான் கொண்டுவந்திருந்த கங்கா ஜல சொம்பை எப்படியாவது பெரியவாளிடம் சேர்ப்பித்து, அன்றைக்கு அவர் செய்யும் ஸ்நானத்தைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க வேண்டும் என்று தீர்மானித்தார் வெங்கட்ராமன். கைவசம் தான் வைத்திருந்த சொம்பை அந்த மகா சந்நிதானத்தில் சேர்ப்பித்தார். பெரியவாளின் அமாவாசை ஸ்நானத்தின்போது இந்த ஜலம் சேரவேண்டும் என்கிற தன் தாயின் விருப்பத்தையும், தான் காசி சென்று வந்த விவரத்தையும் சுருக்கமாகக் கூறினார் வெங்கட்ராமன். புன்னகையுடன் தன் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதிப்பது போல் அனுக்ரஹித்து, அந்த ஜலத்தை ஏற்றுக் கொண்டார் பெரியவா.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. கங்கா ஜலத்தை பெரியவாளிடம் சேர்ப்பித்துவிட்டாரே தவிர, பெரியவா இன்னும் ஸ்நானம் செய்யப் போவதாகக் காணோம். ‘அமாவாசை தினம் வேறுதுங்கபத்திரா ஸ்நானத்துக்குப் பெரியவா கிளம்புகிறாற்போல் தெரியவில்லையே. அமாவாசைக் காலமும் தாண்டிவிடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் வெங்கட்ராமன்.

அன்றைய தினம் சிவன் கோயிலில் சாட்சாத் பரமேஸ்வரனாக வீற்றிருந்த பெரியவாளை தரிசிக்க உள்ளூர் மக்கள் மட்டும் அல்லாமல் பல வி..பிக்களும் வந்திருந்தனர். ஆந்திர அரசியல் பிரமுகர் சென்னாரெட்டி, சுமார் இருநூறு பேருடன் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இங்கிலாந்து அரச குடும்பத்தினர்) என்று எண்ணற்ற பிரமுகர்கள் பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தனர். எல்லோருக்கும் தரிசனம் கொடுத்து முடித்தபோது மதியம் மணி மூன்றைத் தாண்டிவிட்டது.

பெரியவா திடீரென தன்இருக்கையில் இருந்து எழுந்தார். ‘பெரியவா ஸ்நானம் பண்ணப் போறா என்று யாரோ ஒரு பக்தர், தன் பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னார். அவ்வளவுதான்அங்கேயே இருந்த வெங்கட்ராமன் இந்தத் தகவலைக் கேட்ட மாத்திரத்தில் நெகிழ்ந்து போனார். ‘பெரியவாளின் ஸ்நானத்துக்கென்று தன் அம்மா கொடுத்தனுப்பிய கங்கா ஜல தீர்த்தம் புனிதம் அடையப் போகிறது என்று மனம் பூரித்தார்.

ஹம்பி சிவன் கோயில் சற்று மேடான இடத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்து துங்கபத்திரா நதிக்குச் செல்ல வேண்டும் என்றால், பல படிகள் கீழிறங்கிப் பயணப்பட வேண்டும். ஸ்நானம் செய்யச் செல்லும்போது வேறு எவர் உதவியையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று தனியே கீழே இறங்க ஆரம்பித்தார் பெரியவா. வெங்கட்ராமன் மற்றும் அவருடன் வந்த சென்னை அன்பர்களும் பெரியவாளைத் தொடர்ந்து ஓட ஆரம்பித்தார்கள்.

துங்கபத்திரா ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நதியில் இறங்கினார் காஞ்சி மகா ஸ்வாமிகள். மகா பெரியவா நதியில் இறங்கியபோது மதியம் மணி 3.32. அப்போது மடத்து ஊழியர் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் சொன்னார்: ‘இன்னிக்கு சரியா 3.32-க்குத்தான் அமாவாசை பொறக்கறது. பெரியவாளைப் பார்த்தேளாஅவர் ஸ்நானம் பண்றப்ப மணி 3.33. மகான்களோட பேச்சுக்கும் செயல்பாட்டுக்கும் நாம விளக்கம் தேடக் கூடாதுன்னு சொல்லுவா. இன்னிக்கு எத்தனையோ பிரபலங்கள் எல்லாரும் வந்து ஸ்வாமிகளை தரிசனம் பண்ணிட்டுப் போனா. அவாளோட பேசி, எத்தனையோ பக்தாளுக்கு அனுக்ரஹம் பண்ணாலும், இந்த அமாவாசை வேளை பொறக்கறதை அவர் மறக்கலை, பார்த்தேளாசரியா டயம் ஆனோன்ன, ஸ்நானத்துக்கு ஓடி வந்துட்டார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த வெங்கட்ராமன் மெய்சிலிர்த்துப் போனார். ‘பெரியவாளின் அமாவாசை ஸ்நானம் இதனால்தான் தாமதம் ஆயிற்றோ? என நினைத்து அவரை மானசீகமாக வணங்கினார்.

ஒரு புண்ணிய கால தினத்தில்பெரியவா ஸ்நானம் செய்யப் போகின்ற தருணத்தில் தானும் அங்கு இருக்கிறோமேஇது எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று பூரித்தார் வெங்கட்ராமன்பெரியவா ஸ்நானம் செய்கின்ற இடத்திலிருந்து சுமார் பத்தடி தள்ளி நின்று, அவர் குளித்து முடித்தவுடன் வரும் நீரைத் தன் மேனியில் அள்ளி விட்டுக்கொண்டு சந்தோஷப்பட்டார் வெங்கட்ராமன். பெரியவாளின் மேனியைத் தீண்டிய நீராயிற்றே! இதற்கு எத்தனை மகத்துவம் இருக்கும்!

ஸ்நானத்தின்போது மறக்காமல் தான் கொண்டுவந்திருந்த கங்கா ஜலத்தையும் தன் மேனியில் விட்டுக்கொண்டார் பெரியவா. விறுவிறுவென்று கரை ஏறினார். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் சிவன் கோயிலை நோக்கி ஏற ஆரம்பித்தார். இப்படிப் பொசுக்கென்று பெரியவா ஏற ஆரம்பித்ததும், அவருடன் வந்த சிஷ்யர்கள் திணறினார்கள். ஒரு சிலர் பெரியவாளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவருக்குப் பின்னால் ஓட ஆரம்பித்தனர்.

இந்தக் களேபரத்தில் பெரியவா பயன்படுத்தும் விபூதிப் பாத்திரமும், அவர் அணிந்து நனைந்த ஈர வஸ்திரமும் கரையிலேயே இருந்தன. ஒரு சிஷ்யர் வேகமாக வந்து இவற்றை எடுத்துக்கொண்டு மேலே விரைந்தார்.

வெங்கட்ராமனும் அவரது நண்பர்களும் பெரியவா புறப்பட்டுப் போன ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு அவரைத் தொடர்ந்து ஏற ஆரம்பித்தனர்.

அப்போது ஒரு அபூர்வக் காட்சியைக் கண்டார் வெங்கட்ராமன். ஸ்நானம் செய்துவிட்டு சிவன் கோயிலை நோக்கி பெரியவா சென்ற தடம் முழுக்க மண் நிரம்பிய பாதை. ஸ்நானம் செய்துவிட்டுச் சென்றதால், பெரியவாளின் திருப்பாதம் பட்ட சுவடுகள் சற்றும் கலையாமல் ஆங்காங்கே தெரிந்தன. இன்னமும் ஈரம் பதிந்திருக்கும் அந்த மண்ணைப் பார்த்ததும், ‘நடமாடும் அந்த சர்வேஸ்வரனின் திருப்பாதம் பட்ட மண், எத்தகையதோர் பிரசாதம்இந்தப் பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்குமா? இதைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் என்ன? என்று தோன்றியது வெங்கட்ராமனுக்கு.

உடனே, பெரியவாளின் திருப்பாதம் எங்கெல்லாம் பதிந்திருக்கிறதோ, அங்கெல்லாம் தரையில் அமர்ந்தார். அவரின் திருப்பாதம் பட்ட மண்துகள்களைஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர திருநாமம் சொல்லிச் சேகரித்தார்கைவசம் தான் வைத்திருந்த ஒர பட்டுத் துணியில் இந்த மண்துகள்களைச் சேகரம் செய்துகொண்டார். அதை முடிந்து வைத்து பத்திரப்படுத்தினார். சென்னைக்குத் திரும்பினார். ஆனால், இவர் சேகரித்து வைத்த புனித மண்ணின் மகத்துவம் சுமார் நாலைந்து வருடம் கழித்து, அவருக்குத் தெரிய வந்தது.

சென்னைக்கு வந்ததும் ஹம்பியில் நடந்த சமாசாரத்தைத் தன் தாயாரிடம் ஒப்பித்தார் வெங்கட்ராமன். பெரியவாளின் அமாவாசை ஸ்நானத்துக்குக் கங்கா ஜலம் சேர்ப்பிக்கப்பட்டதையும், அமாவாசை மிகத் துல்லியமாக துவங்கிய வேளையில் துங்கபத்திராவில் ஸ்நானம் செய்த பெரியவா, கங்கா ஜலத்தையும் தன் ஸ்நானத்துக்குப் பயன்படுத்திக்கொண்டதையும் சொன்னார் வெங்கட்ராமன். பிறகு, பட்டுத் துணியில் முடிந்து வைக்கப்பட்ட பெரியவா பாதம் பட்ட மண்துகளைத் தன் தாயாரிடம் மிகுந்த பயபக்தியுடன் கொடுத்து, அது சேகரிக்கப்பட்ட விவரத்தையும் சொன்னார். பெரியவாளின் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த அம்மையாரும் அதை வாங்கி பூஜையறையில் வைத்தார். பிறகு, பெரியவா தன் கைப்பட கொடுத்த விபூதியை அந்த மண்துகளோடு கலந்தார். பெரியவா திருநாமம் சொல்லி, அதைத் தன் நெற்றியில் அணிந்துகொண்டார் அந்த உத்தமி.

பெரியவாளின் அத்யந்தமான இன்னொரு பக்தர்குலபதி டாக்டர் எஸ். பாலகிருஷ்ண ஜோஷி என்பவர். ‘குலபதி என்கிற பட்டத்தை இவருக்குக் கொடுத்தவரே மகா பெரியவாதான்இவர், குஜராத்தி பிராமணர். பெரிய பண்டிதர். ஆசிரியப் பணியில் ஆரம்ப காலத்தில் இருந்தவர். சென்னை புரசைவாக்கத்தில் கேசவ ஐயர் தெருவில் வசித்து வந்தார். முக்கியமான சம்ஸ்க்ருத உரைகளை குஜராத்தி மொழியில் மாற்றம் செய்யும் பணியைப் பெரியவா இவரிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால், அதற்கும் ஒரு தர்மசங்கடம் வந்தது. ஏற்கெனவே குலபதி ஜோஷிக்கு ஒரு முறை மாரடைப்பு வந்து, பிழைத்துவிட்டார். தற்போது அடுத்து ஒரு அட்டாக் வந்திருந்தது. பிழைப்பது கடினம் என்று மருத்துவர் சொல்லி விட்டார்.

.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, கடுமையான கட்டுப்பாடுகளைச் சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். மருத்துவர்கள் சொன்ன அறிவுரைப்படி, அவர்கள் தந்த மருந்துகளைச் சாப்பிட்டு வீட்டிலேயே சில காலத்துக்கு ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஜோஷிக்கு.

அன்றைய தினம் மாலை வேளையில் குலபதி ஜோஷி என்பவரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார் வெங்கட்ராமன். தன் ஆச்சார்யன் ஸ்தானத்தில் ஜோஷியை மதித்தார் வெங்கட்ராமன். ஜோஷியின் மேல் அவ்வளவு மரியாதை உண்டு வெங்கட் ராமனுக்கு. ஜோஷியைப் பார்த்தாலே கையெடுத்துக் கூப்புவார்.

தன் ஆச்சார்யன் மார டைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு வெகுவாகக் கவலைப்பட்டார் வெங்கட்ராமன். மருத்துவர்களும் ஒரு நல்ல பதில் சொல்லத் தயங்கும் இத்தகைய சூழ்நிலையில், பெரியவா பிரசாதம் மட்டுமே அவரைக் காக்கும் என்று பூரணமாக நம்பினார் வெங்கட்ராமன். ஜோஷியைப் பார்க்கச் செல்லும்போது, பெரியவா பிரசாதமான ஹம்பி மண்துகள்களையும் எடுத்துக் கொண்டார்.

வெங்கட்ராமனை இன்முகத்துடன் வரவேற்றார் ஜோஷி. “வெங்கட்ராமாவா வாநான் எப்படி இருக்கேன்னு பாக்க வந்துட்டியாக் கும்எனக்கு என் உயிரைப் பத்திக் கவலையே இல்லை வெங்கட்ராமாபெரியவா என்கிட்ட சில அசைன்மெண்ட் கொடுத்திருக்கா. அதை முடிக்க முடியாம போயிடுவேனோன்னு பயப்படறேன் என்றார் ஜோஷி, பெரியவா மீதிருந்த பக்தியுடன்.

கவலைப்படாதேள்பெரியவா அனுக்ரஹம் உங்களை எப்பவும் காப்பாத்தும். பெரியவா அசைன்மெண்ட் நன்னா பூர்த்தி ஆகும்.

சமஸ்கிருதத்துல இருக்கிற சில அபூர்வப் புத்தகங்களை குஜராத்திக்கு மொழிபெயர்க்கச் சொல்லி, என்கிட்ட கொடுத்திருக்கா பெரியவா. அந்த ஒர்க் நடந்திண்டிருக்கு. எல்லாமே சாஸ்திரம், வழிபாடுனு நம்ம கல்ச்சர் சம்பந்தப்பட்டது.

ஆஹாஎவ்வளவு உத்தமமான பணியை பெரியவா ஒப்படைச்சிருக்கா. அந்த வேலை முடியாம தேவரீரை எமன்கிட்ட அனுச்சிடுவாரா பெரியவா? என்ற வெங்கட்ராமன், “பெரியவா பிரசாதம் கொண்டுவந்திருக்கேன். ஹம்பில அவரோட திருப்பாதம் பட்ட மண் இது. தேவரீர் மேல்சட்டை பொத்தானைக் கொஞ்சம் கழற்றினால், இந்தப் பிரசாதத்தை உம் மார்புல தடவி விடுவேன் என்று சொன்னார் வெங்கட்ராமன்.

பெரியவாளின் திருநாமம் சொன்ன மாத்திரத்திலேயே ஒரு புத்துணர்வு வந்தவர்போல் தன் மேல்சட்டைப் பொத்தான்களைக் கழற்றினார் ஜோஷி. அவர் அருகே சென்று, பிரசாதத்தைக் கையில் எடுத்து, அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மனசுக்குள்ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஜோஷியின் மார்பில் தடவ ஆரம்பித்தார் வெங்கட்ராமன்ஜோஷியும் ஆனந்தமாகக் கண்களை மூடிக்கொண்டு இந்த சுகத்தை அனுபவித்தார்.

அதன் பின் அங்கிருந்து புறப்பட்டுப் போனார் வெங்கட்ராமன். அப்போது வெங்கட்ராமனுக்கு ராமநாதபுரத்தில் உத்தியோகம். எனவே, அன்று இரவே சென்னையை விட்டுக் கிளம்ப வேண்டிய சூழ்நிலை!

அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கு குலபதி பாலகிருஷ்ண ஜோஷியை மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்காக வரச் சொல்லியிருந்தார்கள். எனவே, அன்று மாலை கிளம்பிப் போய், மருத்துவர்களைச் சந்தித்தார் ஜோஷி. அட்மிஷன் போடுவதற்கு முன் எதற்கும் ஒரு முறை பரிசோதித்துவிடலாம் என்று சில பரிசோதனைகளை மேற்கொண்டனர் மருத்துவர்கள். சோதனைகள் எடுத்த பிறகு, ஜோஷியை ஓரிடத்தில் அமரச் சொன்னார்கள்.

சுமார் அரை மணி நேரத்துக்குள் இந்தச் சோதனையின் முடிவுகளைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்தனர். “வாட் மிராக்கிள் என்று விழிகள் விரித்து தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்அதற்குக் காரணம் உண்டு.

அதாவது, தற்போது எடுக்கப்பட்ட ஜோஷியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளின்படி, மிகச் சமீபத்தில் மாரடைப்பு நோயால் தாக்கப்பட்டதற்கு உண்டான எந்த அறிகுறியும் உடலில் இல்லை. ஒரு அடையாளமும் இல்லை. ஆனால், ஒரு சில நாட்களுக்கு முன் ஜோஷிக்கு எடுக்கப்பட்ட .சி.ஜி. டெஸ்ட்டில் அவர் அபாயமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் ஒரே ஒரு நாள் .சி.யூ.வில் அனுமதித்து, தீவிர சிகிச்சை கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அதுவும், ஜோஷிக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து, அவரை வீட்டுக்கு அனுப்பினர் மருத்துவர்கள். இந்த சமாசாரங்கள் எல்லாமே தற்போது இவரைப் பரிசோதித்திருக்கும் மருத்துவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால்ஆனால்இப்போது எடுக்கப்பட்ட சோதனையின் முடிவு வேறு விதமாகநல்ல விதமாக இருக்கிறதே!

அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், ஜோஷியைத் தன் அறைக்கு வரவழைத்தார். எதிரே அமர வைத்த பிறகு, “இந்த இரண்டு நாட்களுக்குள் வேறு ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டீர்களா? என்று கேட்டார்.

அப்படி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லையே என்றார் ஜோஷி இயல்பாக.

இல்லைஇரண்டே நாட்களுக்குள் உங்கள் உடலில் பல மாறுதல்கள் தெரிகின்றன என்று தலைமை மருத்துவர் துவங்கிய பிறகு, “பல மாறுதல்களாஎன் உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டதா? என்று பதற்றத்தோடு கேட்டார் ஜோஷி.

அவசரமாக, “அப்படி இல்லைஎல்லாமே நல்ல மாறுதல்கள்தான். உங்கள் உடல்நிலை பரிபூரணமாக இருக்கிறது. மாரடைப்பு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்பதற்குண்டான எந்த ஒரு அடையாளமும் உங்கள் உடலில் இல்லை. இது நல்ல தகவல்தான் என்றாலும், இப்படி உங்கள் உடலில் நிகழக் காரணமானது எது என்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுதான் நாங்கள் குழம்பிக் கிடக்கிறோம் என்று அந்தத் தலைமை மருத்துவர் சொன்னபோதுதான் ஜோஷிக்கு ஒரு விஷயம் உறைத்தது.

சார்ஒரு விஷயம் சொல்லணும் உங்ககிட்டகாஞ்சி மகா பெரியவாளோட பக்தர் நான். என்னோட நண்பன் ஒருத்தன் ஹம்பியில இருந்து பெரியவா காலடி பட்ட மண்துகளை பிரசாதமா எடுத்துண்டு வந்தான். ‘ஜோஷிஉன் மார்புலதானே பிரச்னைஇதோ, பெரியவா பிரசாதத்தைத் தடவி விடறேன்எல்லா பிரச்னையும் ஓடியே போயிடும்னு சொல்லி என் மார்புல பூசிவிட்டான்அவன் பூசிவிடறப்ப ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரனு சொல்லிண்டே பூசிவிட்டான்அவன் தடவி விடும்போதே என் உடம்பில் ஏதோ ஒரு மாற்றம் தெரியறாப்ல இருந்தது. என் நண்பனும் இதைத் தடவிட்டு, ‘சீக்கிரமே உன் மார்பு வலி சரியாயிடும்னு சொன்னான்முந்தாநாள் நடந்த விஷயம் சார் இது என்றார் படபடப்பாக.

தலைமை மருத்துவர் முகம் மலர்ந்தார். “யெஸ். உங்கள் உடம்பில் நடந்திருக்கிற இந்த மாற்றங்கள் ஒரு மருத்துவ அதிசயம். அந்த மகானின் ஆசிர்வாதமும் அனுக்ரஹமும் இல்லாமல் இப்படி உங்கள் உடலில் மாற்றம் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. கையைக் கொடுங்கள் ஜோஷியூ ஆர் லக்கி மேன். யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் என்றவர், ஜோஷியின் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

பின்னாளில் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட வெங்கட்ராமனும் ஏகத்துக்கும் மகிழ்ந்தார். பெரியவாளின் பிரசாதத்துக்கு இருக்கின்ற மகத்துவம்தான் என்னே!

அதன்பின் குலபதி பாலகிருஷ்ண ஜோஷி, மகா பெரியவாளின் அருளால் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் பல வருடங்கள் சௌகரியமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.