அன்றைய தினம் மகா பெரியவாளை தரிசிப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தனர் ரவிகுமாரும் சூரியகுமாரும். அன்று விடுமுறை தினம் என்பதால், ஸ்ரீமடத்தில் பெரியவாளின் தரிசனம் பெறுவதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம்.
கூட்டத்தில் ஒரு மாதிரி மெள்ள நகர்ந்து பெரியவாளின் அருகே சென்றுவிட்டனர் சகோதரர்கள் இருவரும். சட்டென்று அவருக்கு முன்னே போய் நின்றால், பிரசாதம் தந்து அனுக்ரஹித்து உடனே அனுப்பிவிடுவார்கள் என்பதால், தரிசன வரிசையில் இருந்து சற்று நகர்ந்து ஓர் ஓரமாக நின்றார்கள். பெரியவாளின் திருமுகத்தை – அவருக்கு எதிரே நின்றபடி நீண்ட நேரம் தரிசனம் செய்யவேண்டும் என்பது இருவரின் ஆசை. எனவே, பெரியவாளின் எதிரே நின்றபடி மெய் மறந்து காணப்பட்டார்கள்.
இவர்களுக்கு நேர் எதிரே சங்கர சொரூபியாக பெரியவா அமர்ந்திருந்தார். சாதாரண விவசாயியில் இருந்து ஆரம்பித்து படாடோபமான ஆசாமிகள் வரை வந்து பெரியவாளை தரிசித்துச் சென்றுகொண்டே இருந்தார்கள். வருகிற பக்தர்கள் ஒவ்வொருவரும் பெரியவா திருச்சந்நிதிக்குக் காணிக்கையாகத் தங்களது வசதிக்கு ஏற்றபடி ஏதோ பொருட்களை சமர்ப்பித்துக் கொண்டே இருந்தார்கள்.
பெரியவா முன் எண்ணற்ற மூங்கில் தட்டுகள் வித விதமான பொருட்களைச் சுமந்து காணப்பட்டன. பழங்கள், அரிசி, பூமாலைகள், வில்வ மாலைகள், முந்திரி–பாதாம் உள்ளிட்ட வகைகள், வஸ்திரங்கள், ஸ்ரீமடத்துப் பூஜைக்கு உண்டான திரவியங்கள் என்று பல தினுசுகளில் இருந்தன மூங்கில் தட்டுகள்.
எல்லா பொருட்களின் மீதும் தன் பார்வையை ஓட்டிய ரவிகுமார், சூரியகுமாரைப் பார்த்து, “பார்த்தியா… பெரியவா தரிசனத்துக்காக அவரவர் தங்களது விருப்பப்படி பல வஸ்துக்களை வாங்கி வந்து சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், இதில் ஒன்றே ஒன்று மட்டும் இல்லை பார்த்தியா“ என்று கேட்டார் குசுகுசுப்பாக.
சூரியகுமாரும் தன் பங்குக்கு மீண்டும் அந்தத் தட்டுகளின் மீது ஒரு முறை பார்வையை ஓட்டிவிட்டு, “நீ எதைச் சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியறது. பணத்தைதானே சொல்றே?“ என்று ரவிகுமாரைப் பார்த்துப் பட்டென்று கேட்டார்.
ரவிகுமாருக்கு ஆச்சரியம் – தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை மிகத் துல்லியமாகக் கணித்துவிட்டாரே என்று.
பிறகு சூரியகுமாரைப் பார்த்து, “ஆமாம்… இந்த மகானோட சந்நிதியில் யாராவது பணக் கட்டுகளைக் கொண்டுவந்து சமர்ப்பித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். நீயும் அதைச் சரியாகச் சொல்லிவிட்டாய். ஒரு மடம் என்றால், எத்தனை நிர்வாகங்கள் இருக்கும். மகானின் சந்நிதியில் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அந்தஸ்து இருக்கவேண்டும். இல்லை என்றால், அவை இங்கே வந்து சேரவே சேராது. அதுவும், பெரியவா சந்நிதியில் பணத்தைக் கட்டுக் கட்டாகச் சமர்ப்பிப்பதற்கு நல்ல மனம் இருக்க வேண்டும். எல்லோராலும் இது முடியாது“ என்று மெதுவாகச் சொன்னார்.
இவர்கள் இருவரும், மிகவும் மெதுவான குரலில் பேசிய சம்பாஷணை இது.
ஒரு பக்தன் தன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை அறியாதவரா அந்த மகான்?
அடுத்த கணம் அந்த சந்நிதானத்தில் ஒரு பரபரப்பு. யாரோ ஒரு முக்கியஸ்தரைக் கூட்டி வந்தார் மடத்துக் காரியதரிசி ஒருவர். பஞ்சகச்சம் அணிந்திருந்தார் அந்தப் பிரமுகர். அவரை ஒட்டினாற்போல் மடிசார் அணிந்தபடி அவரின் மனைவி.
கேரளாவில் இருந்து காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருக்கும் அந்தத் தம்பதியரை மிகவும் பவ்யமாக பெரியவாளுக்கு அறிமுகப்படுத்தினார் காரியதரிசி.
தன் வலக் கையை உயர்த்தி ஒரு புன்னகையுடன் ஆசிர்வதித்தார் பெரியவா.
தான் கொண்டுவந்திருந்த இரண்டு மூன்று பிரமாண்ட பைகளை அங்கே வைத்தார் கேரள பிரமுகர். “மூங்கில் தட்டும் ஒரு கூடையும் வேண்டும்“ என்று காரியதரிசியிடம் மிக மெதுவாகக் கேட்டார்.
அடுத்த கணம் ஒரு சிஷ்யனைக் கூப்பிட்டு காரியதரிசி சொல்ல… இரண்டு மூன்று காலி மூங்கில் தட்டுகளும் ஒரு மூங்கில் கூடையும் வந்தன.
ரவிகுமார், சூரியகுமார் உட்பட அங்கே கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் கேரளப் பிரமுகரின் நடவடிக்கைகளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
தான் கொண்டுவந்திருந்த ஒரு பைக்குள் கையை விட்டு, பழங்களை எடுத்து ஒரு மூங்கில் தட்டில் வைக்க ஆரம்பித்தார் கேரளப் பிரமுகர். அவர் மனைவியும் இதற்கு உதவினார்.
கருணை தெய்வத்தைத் தன் கண் முன்னே கண்டதும், கேரளத்து மாமியின் கண்கள் பனித்தன. ஒருவேளை மகா ஸ்வாமிகளை இந்தத் தம்பதியர் நேரில் தரிசித்துப் பல வருடங்கள் ஆகி இருக்கலாம்! மகானிடம் ஏதோ சொல்வதற்கு மாமி முயற்சித்தபோது வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. நா குழறியது. அந்தக் குடும்பத்தினரின் சுபிட்சத்துக்காகக் காஞ்சி மகான் என்ன அற்புதத்தை – எந்தக் காலத்தில் நிகழ்த்திக் காண்பித்தாரோ? யார் கண்டது? மகானுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் மட்டும் அல்லவா அந்த அற்புதமும் அதிசயமும் தெரியும்?! ஒருவேளை அந்த நன்றிக் கடனைத் தீர்ப்பதற்காகத்தான் இந்தப் பயணம் அமைந்ததோ என்னவோ?!
பழம், உதிரி புஷ்பங்கள், பூமாலைகள், கல்கண்டு, முந்திரி, திராட்சை போன்ற அனைத்தையும் ஆத்மார்த்தமாக எடுத்து – ஒவ்வொரு பழத்தையும் தன் மேல் வஸ்திரத்தால் துடைத்து காலி மூங்கில்தட்டுகளில் நிரப்பினார் கேரள பிராமணர்.
எல்லாமே ஃப்ரெஷ்ஷான கனிகள். அவர்கள் கொண்டு வந்திருந்த வண்ணமிகு பூக்களும் மணத்தை ஏகத்துக்கும் பரப்பின. முந்திரியும் திராட்சையும் தரத்தில் உயர்ந்ததாகத் தெரிந்தன. பெரியவா சாப்பிடவேண்டும் என்கிற விருப்பத்துடன் அந்தக் கனிகள் வாங்கி வரப்பட்டன என்பது அவர்கள் நெகிழ்ச்சியுடன் எடுத்து வைக்கும் பாங்கிலேயே தெரிந்தது.
பழம், பூ போன்றவற்றைத் திருச்சந்நிதியில் வைப்பதற்கு மூங்கில்தட்டுகளைக் கொண்டுவரச் சொன்னார்கள். மூன்று தட்டுகளிலும் எல்லாவற்றையும் வைத்தாயிற்று! அதென்ன மூங்கில் கூடை? அது எதற்கு? அவ்வளவு பெரிய மூங்கில் கூடையில் எதை வைக்கப் போகிறார்கள்?
ரவிகுமார், சூரியகுமார் உட்பட ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமுமே மூங்கில் கூடையில் எதை வைக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தார்கள்.
நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் அந்த சங்கர சொரூபம், பாந்தமாக வீற்றிருந்தது. தன் அருகே வந்து அவசர அவசரமாகப் புறப்படும் பக்தர்கள் சிலருக்குப் பிரசாதம் வழங்கி, ஒரு புன்னகையுடன்அனுப்பிக்கொண்டிருந்தது.
தாங்கள் கொண்டுவந்திருந்த இன்னொரு பெரிய பையை கேரள மாமி அவிழ்க்க ஆரம்பித்தார். அநேகமாக அந்தப் பைக்குள் இருப்பதைத்தான் எடுத்துக் கூடைக்குள் வைக்கப் போகிறார்கள் போலிருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் தீர்மானித்தார்கள். ரவிகுமாரும் சூரியகுமாரும் பெரிய பை திறக்கப்படுவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தப் பைக்குள் இருந்து புத்தம் புது நூறு ரூபாய் நோட்டு அடங்கிய கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மூங்கில்கூடையில் வைக்க ஆரம்பித்தார் பிராமணர். இதைப் பார்த்த அடுத்த கணம் ஸ்தம்பித்துப் போனார்கள் ரவிகுமாரும் சூரியகுமாரும். சற்று முன் தாங்கள் நினைத்ததற்கும், அடுத்து இங்கே நடக்கும் இந்தக் காட்சியையும் ஒரு விநாடி அவர்களால் நம்ப முடியவில்லை.
அந்தப் பெரிய பைக்குள் இருந்த பணம் அனைத்தும் கூடைக்கு இடம் பெயர்வதற்கும், கூடை நிரம்புவதற்கும் சரியாக இருந்தது.
கூடை நிரம்பிய பின் பெரியவாளை நோக்கிப் பணிவுடன் நிமிர்ந்தனர் கேரளத் தம்பதியர். ‘பெரியவா சந்நிதிக்கு இதை எல்லாம் சேர்க்கணும்னு பிரயாசைப்பட்டு கேரளாவிலேர்ந்து புறப்பட்டு வந்தோம். பெரியவா அனுக்ரஹம் பண்ணி இதை ஏத்துக்கணும். எங்களை ஆசிர்வாதம் பண்ணணும்‘ என்று சொல்லி, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார் பிராமணர். அவருடன் மாமியும் நமஸ்கரித்தார்.
தான் வீற்றிருந்த ஸ்தானத்தில் இருந்தபடியே ரவிகுமார் மற்றும் சூரியகுமார் நின்றிருந்த திசை நோக்கி, தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்தார் மகா பெரியவா. ஒரு புன்னகையை அவர்களை நோக்கி வீசினார் அந்தக் கலியுக மகான்.
திடீரென்று தங்களை நோக்கிப் பெரியவா தன் பார்வையைத் திருப்பியதும், அரண்டுவிட்டனர் சகோதரர்கள் இருவரும். என்ன செய்வதென்று தெரியாமல் நெளிந்தனர். ‘என்ன… ரெண்டு பேர் மனசுல நினைச்சதும் இப்ப நடந்துடுத்தா?‘ என்று கண்களாலேயே அந்தப் பரப்பிரம்மம் கேட்பதுபோல் அவர்களுக்குப் பட்டது.
சகோதரர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உடல் நடுங்கியது. பிறகு, என்ன நினைத்தார்களோ தெரியவில்லை… விருட்டென்று முன்னால் வந்து பெரியவாளை நமஸ்கரித்து, கைகட்டி, வாய் பொத்தி நின்றனர்.
ஒரு புன்னகைக்குப் பின் அவர்களுக்குப் பிரசாதம் தந்தார். கூடவே, கேரளத் தம்பதியரை அருகே அழைத்து அவர்களுக்குக் குங்குமப் பிரசாதமும், ஒரு எலுமிச்சம் பழமும் கொடுத்தார்.
அத்தனை பணக் கட்டுகள் அந்தக் காலத்தில் பெரிய தொகை. அப்போதெல்லாம் ஐந்நூறு ரூபாய் கிடையாது. எனவே, நூறு ரூபாய் கட்டுக்களாகக் கொண்டுவந்திருந்தார் கேரள பிராமணர். அந்தப் பணத்தைப் பெரியவா தொடக்கூட இல்லை. மடத்து மேனேஜரை சைகை காட்டி அழைத்தார். தன் முன்னால் கூடையில் இருக்கும் பணத்தைக் காண்பித்து, ‘ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிக்கு வெச்சுக்கோ. கணக்குல சேர்த்துடு‘ என்று சொல்லி அனுப்பியது அந்தப் பரப்பிரம்மம்.
தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறிய சந்தோஷத்தில், மீண்டும் ஒரு முறை பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்னை புறப்பட ஆயத்தமானார்கள் ரவிகுமாரும் சூரியகுமாரும்.
கேரளத் தம்பதியரும் உத்தரவு வாங்கிக்கொண்டு புறப்பட்டனர். அப்போது அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டனர். “பாரேன்… லட்சம் லட்சமா பணத்தைக் கொண்டு வந்து பெரியவா சந்நிதில கொட்டிட்டு, ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தையும் குங்குமத்தையும் என்ன சந்தோஷமா வாங்கிண்டு போறார். இவ்ளோ பணத்தை இந்தச் சந்நிதில சமர்ப்பிக்கறப்ப அவர் முகத்துல ஒரு பணிவு இருந்ததே பாக்கணும். தொண்டு பண்ற மனசுன்னா இப்படித்தானே இருக்கணும். ஆஹா“ என்று புளகாங்கிதப்பட்டு அவர்களை வாழ்த்தினர்.
உண்மைதானே! தெய்வீகம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கும், திருக்கோயில் டொனேஷனுக்கும் பணத்தை அள்ளித் தரும் பலரிடம் இன்று எங்கே பணிவு இருக்கிறது? ‘நான் தருகிறேன்… நான் தருகிறேன்…‘ என்கிற கர்வம் அல்லவா மிஞ்சி இருக்கிறது?!
அதை எல்லாம் தாண்டி லட்சக்கணக்கான ரூபாயை – அதுவும் பல வருடங்களுக்கு முன் இது எத்தனை பெரிய தொகை! இவை அனைத்தையும் பெரியவா சந்நிதியில் சமர்ப்பித்துவிட்டு, அவர் திருக்கரத்தால் வழங்கப்பட்ட குங்குமத்தையும் ஒரே ஒரு எலுமிச்சம்–பழத்தையும் கோடி ரூபாய்க்குச் சமமாக அல்லவா பாவித்து எடுத்துச் செல்கிறார்கள் இந்தக் கேரளத் தம்பதியர். இது போன்ற உள்ளம் இருப்பவர்கள் வாழட்டும் பல்லாண்டு!