வீதிக்கே வந்தளித்த விஸ்வரூப தரிசனம்

கும்பகோணத்தில் இருந்து அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை திருத்தலம் செல்லும் வழியில் வருகிற சிறு கிராமம் திம்மகுடி. காவிரியை அருகில் கொண்ட வளமான கிராமம்.

தெய்வ அனுக்ரஹத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பல பிராமண நிலச் சுவான்தார்கள் இங்கே வசித்து வந்தனர். தெய்வ பக்தியிலும் சாஸ்திர சம்பிரதாயத்திலும் ஊறித் திளைத்தவர்கள். அதுவும் காஞ்சி மகா ஸ்வாமிகள் மீது கொள்ளை பக்தி கொண்டவர்கள். பெரியவா எப்போது கும்பகோணம் வந்தாலும், பெரும்பாலும் அவரது விசிட்டில் திம்மகுடி சேர்ந்து விடும். அத்தகைய வேளைகளில் ஊரே அமர்க்களப்படும்.

பெரியவா திம்மகுடி வரும்போது இங்கு அவர் தங்கும் வீடுகளுள் ஒன்றுடி.எஸ். சீனிவாச ஐயர் வீடு. இவருக்கு இதே அக்ரஹாரத்தில் இரண்டு மூன்று வீடுகள் அப்போது உண்டு. பெரியவா திம்மகுடி வரும்போது, சகல வசதிகளும் கூடிய ஒரு வீட்டைப் பெரியவா தங்குவதற்கு ஒதுக்குவது சீனிவாச ஐயரது வழக்கம். தவிர, வந்து செல்லும் அனைவருக்கும் போதிய வசதிகளையும் ஏற்படுத்தித் தருவார். பெரியவாளின் பூஜைகளுக்கும் தியானத்துக்கும் சிஷ்யகோடிகள் தங்குவதற்கும் ஏற்ற பெரிய வீடாக அது அமைந்திருந்தது.

பெரியவா எப்போது இங்கு வந்து முகாமிட்டாலும், திம்மகுடி மட்டும் அல்லாமல் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்துச் செல்வது வழக்கம். அப்படி ஒரு முறை திம்மகுடியில் சீனிவாச ஐயரது வீட்டில் முகாமிட தன் படையுடன் வந்தார் பெரியவா. ஒரு மதிய வேளையில் பலமான வரவேற்புக்குப் பின்னர் சீனிவாச ஐயரது வீட்டுக்குள் தன் திருப்பாதம் எடுத்து வைத்தார். கிராமமே திருவிழா கோலம் பூண்டது.

பெரியவா எங்கு முகாமிட்டாலும், அந்த இடத்தில் தெய்வீக மணம் கமழ ஆரம்பித்து விடும். கோபூஜை, பூஜை புனஸ்காரம், நைவேத்தியம், வேத பாராயணம் என்றெல்லாம் பிரமாதப்படும். பக்தர்களுக்கு தரிசனம் தந்த பின் இரவில் அங்கேயே தங்கினார் பெரியவா.

மறுநாள் அதிகாலை பெரியவாளின் விஸ்வரூப தரிசனம். மகா பெரியவாளின் பக்தர்கள் அனைவரும், இந்த விஸ்வரூப தரிசனத்தை அடிக்கடி தரிசித்திருப்பார்கள். அத்தகைய தரிசனம், இந்தப் பிறவியிலேயே தாம் பெற்ற பேறு என்பதாக புளகாங்கிதம் அடைவர். பெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை அடிக்கடி தரிசித்து, அதில் இன்புற்றவர்கள் பெரியவா எந்த மாநிலத்தில் முகாமிட்டாலும், விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்று திடீரென ரயிலோ பஸ்ஸோ பிடித்து ஓடி விடுவார்கள். திம்மகுடியில் மகா பெரியவாளின் இரவுப் பொழுது கழிந்தது. அதிகாலை மூன்றரை மணி இருக்கும். பெரியவா தங்கி இருந்த அறையில் ஒரு திரை போட்டிருந்தார்கள். அந்தத் திரை விலக்கப்பட்டு, பெரியவா வெளிப்படும் வேளையே விஸ்வரூப தரிசனம்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் பெரியவா வெளிப்பட்டு விஸ்வரூப தரிசனம் தருவார் என்று நூற்றுக்கணக்கான பக்தகோடிகள் அந்த அதிகாலை வேளையில் குளித்து முடித்து, படு ஆச்சாரமாகக் காணப்பட்டனர்.

திம்மகுடி டி.எஸ். சீனிவாச ஐயரின் இரண்டாவது பெண்ணின் பெயர் ராஜம் என்கிற ராஜலட்சுமி (தற்போது து 8 1. கும்பகோணத்தில் சி க் கி றா ர். கும்பகோணத்தில் பிரபலமான ஆடிட்டரும், அங்கு அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீமடத்தின் ஸ்ரீகார்யமுமான வெங்கடசுப்பனின் மூத்த சகோதரி இவர்). பள்ளிப் பருவத்தில் இருந்தாள். தன் வீட்டுக்கு வந்து முகாமிட்டிருக்கும் பெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தைத் தானும் தரிசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் பூரிப்போடு இருந்தாள் ராஜம். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டுப் பட்டுப்பாவாடையும் சட்டையுமாக வீட்டையே வளைய வளைய வந்து கொண்டிருந்தாள்.

அப்போது யதேச்சையாக ராஜத்தின் தாயார் அங்கே வந்தார். குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்த தன் மகளை அழைத்தார். “என்னடீ ராஜம்ஆத்து வாசல்ல இன்னும் கோலமே போடலியேவிறுவிறுன்னு ஓடி ஒரு படிக் கோலத்தைப் போட்டுட்டு வா என்றார்.

ராஜத்துக்குக் காற்று இறங்கின பலூன் மாதிரி ஆகிப் போனது. பெரியவா இன்னும் சில நிமிடங்களுக்குள் விஸ்வரூப தரிசனம் தருவார் என்று இங்கே ஏராளமானோர் மூடப்பட்ட திரையையே பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்த வேளையில் தான் மட்டும் வெளியே போய் கோலம் போடப் போனால், அந்தக் காட்சியை தரிசிக்கும் பாக்கியம் தனக்கு அமைந்து விடாமல் போய் விடுமே என்று தவியாய் தவித்தாள்.

தாயாரின் உத்தரவையும் மீற முடியாது. “இன்னும் என்னடீ மசமசன்னு நிக்கறேபோசீக்கிரம் போய்க் கோலத்தைப் போடு என்று சொல்லி விட்டு, அந்த அம்மையார் பெரியவாளின் பூஜைக்குத் தேவைப்படும் ஒரு பொருளை சுமந்து சென்றார்.

பெரியவா முகாமிட்டிருக்கும் அறைக்கு வெளியேஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷம் மெள்ள வலுப் பெற ஆரம்பித்ததுஅடுத்த ஓரிரு விநாடிகளில் பெரியவா விஸ்வரூப தரிசனம் தருவார் என்பதாக சீடர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். மூக்கை உறிஞ்சியபடி கோலமாவு டப்பாவை எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போனாள் ராஜம்மனதை மட்டும் மகா பெரியவாளிடம் வைத்து விட்டு!

தாயாரின் கட்டளையை மறுக்கவும் முடியாமல், மீறவும் முடியாமல் (அந்தக் காலத்தில் தாயார் இட்ட பணி என்றால், அப்படி மதிப்பு கொடுத்துச் செய்தார்கள் குழந்தைகள்!) கோல மாவு டப்பாவை எடுத்துக் கொண்டு, இரட்டைப் பின்னலைச் சுழற்றியபடி விலுக்கென்று வெளியே போனாள் ராஜம்.

இன்னும் ஓரிரு நிமிடங்களுக்குள் பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் கிடைத்துவிடும் என்கிற பக்தி பரபரப்புடனும் சந்தோஷத்துடனும் பெரியவா தங்கியிருந்த அறைக்கு வெளியே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

பெரியவாளின் அத்யந்த சிஷ்யர்கள் சிலர் பெரியவா கைங்கர்யத்துக்கென உள்ளே இருந்தனர்.

இரு கைகளையும் கூப்பிய வண்ணம், ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்தை முழங்கிக்கொண்டு அந்தக் கலியுக தெய்வத்தின் ன்றைய முதல் தரிசனத்துக்காக ஏங்கிக் காத்திருந்தார்கள் பக்தர்கள்.

ராஜம் கோலம் போடும் பணியில் தன்னந் தனியே வாசலில் இருந்தாள். பொழுது இன்னும் விடியவே இல்லை. அதிகாலை நான்கு மணிகூட ஆகவில்லை. பக்தர்களுக்கு காபி கொடுப்பதற்காக யாரோ ஒருவர் பித்தளைப் பாத்திரத்தில் நுரை பொங்கும் பாலை எடுத்துக்கொண்டு போனார். கும்பகோணத்தில் இருந்து சர் சர்ரென்று இரண்டு மூன்று கார்களும் அந்த வேளையில் வந்து, கோலம் போட்டுக்கொண்டிருந்த ராஜத்தின் அருகில் நின்றன. வந்து சேர்ந்த எல்லோரும்பஞ்சகச்சமும் மடிசாருமாக இறங்கினார்கள். மடிசார் மாமிகளின் தலையில் இருந்த மல்லிகைப்பூவின் மணம் கமகமத்தது.

பரபரவென்று காரில் இருந்து இறங்கிய ஒரு மாமி, கோலம் போட்டுக்கொண்டிருந்த ராஜத்திடம் வேக வேகமாக வந்து, “பெரியவா விஸ்வரூப தரிசனம் ஆச்சோ? என்று கேட்டாள். எங்கே, இவ்வளவு தொலைவு வந்துவிட்டு, அந்தத் திருக்காட்சியைத் தான் தவற விட்டுவிடுவோமோ என்று அந்த மாமிக்குக் கவலை!

எப்படி இருக்கும் ராஜத்துக்கு?! கோலம் போடுவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு, அந்த மாமியை அண்ணாந்து பார்த்து, “சீக்கிரம் போங்கோஇனிமேதான் பெரியவா தரிசனம் தரப் போறார் என்றவள், ‘எனக்குத்தான் அந்த பாக்கியம் கொடுத்து வைக்கலை என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டு, தரையில் இறங்கிய பாவாடையைக் கொஞ்சம் தூக்கி மீண்டும் இடுப்பில் செருகிக்கொண்டாள். கீழே குனிந்து, விட்ட இடத்தில் இருந்து கோலத்தைத் தொடர்ந்தாள்.

அக்ரஹாரத்தில் சில வீடுகளின் வாசல்களில் தண்ணீர் தெளித்துப் படிக் கோலம் போடப்பட்டிருந்தன. ஆனால், எவர் வீட்டு வாசலிலும் ஆட்கள் தென்படவில்லை. எல்லோரும்தான் சீனிவாச ஐயரது கிரஹத்தின் உள்ளே முகாமிட்டிருக்கிறார்களே! கிட்டத்தட்ட தெருவே காலி!

வீட்டின் உள்ளிருந்து இம்மி பிசகாமல் கோரஸாகஅட்சர சுத்தமாக வந்துகொண்டிருந்தஜய ஜய சங்கர கோஷம் ராஜத்தின் காதுகளில் விழுந்துகொண்டிருந்ததுயாரோ ஒரு வேத பண்டிதர், ஏற்ற இறக்கத்துடன் பெரியவாளின் தரிசனத்தை எதிர்பார்த்து பாராயணம் செய்துகொண்டிருந்தார்.

பெரியவா தங்கியிருந்த அறைக்கு வெளியே திரை இருந்த பக்கமாக இரு சிஷ்யர்கள் வந்து நின்றனர்.

பெரியவா வரப் போறா – பக்தர்கள் கூட்டத்தில் முணுமுணுப்புதேவை இல்லாத பேச்சுக்களின் வீச்சு கொஞ்சம் குறைந்தது.

பிரம்ம முகூர்த்தம்குளித்து முடித்து படு ஆசாரம்மனம் முழுக்க மகான் பற்றிய சிந்தனைஇந்த வேளையில் அவரது விஸ்வரூப தரிசனம் என்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!

சீனிவாச ஐயரது குடும்பத்தினர்ராஜம் தவிரபெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை வெகு அருகில் இருந்து தரிசிக்க வேண்டும் என்பதற்காக, அந்தத் திரைக்குப் பக்கத்தில் கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தனர். கூட்டத்துக்குப் பின்னால் நின்றிருந்தவர்கள், ‘முன்னால் நிற்கின்ற கூட்டம் மறைக்கின்றதே என்பதற்காக நின்ற வாக்கிலேயே முன்னங்கால்களைத் தரையில் நன்றாக ஊன்றி எம்பி எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இன்னும் ஒரு சில விநாடிகளில் பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் கிடைத்துவிடும்!

வாருங்கள், வாசலுக்குப் போவோம். சிறுமி ராஜம் மட்டும் தன்னந்தனியாக நின்று கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாளே!

பெரியவாளின் விஸ்வரூப தரிசனக் காட்சியை தரிசிக்கும் வாய்ப்பு நழுவிப் போனாலும், ராஜத்துக்குப் பொறுப்பு உணர்வு அதிகம்! தன் தாயார் தனக்கு இட்ட பணியைச் செவ்வனே முடித்துக்கொண்டிருந்தாள். கடனுக்கென்று கோலத்தை அவசர அவசரமாகப் போட்டு முடித்துவிட்டால், அவளும் ஓடிப் போய் கூட்டத்தில் கலந்து, விஸ்வரூப தரிசனத்தைப் பார்க்கலாம். ஆனால், அவள் மனது அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இவரது தரிசனம் கிடைக்காதா? என்று எத்தனையோ பக்தர்கள் ஏங்கிக் காத்திருக்கும் ஒரு மகான் தன் வீட்டில் வந்து தங்கி இருக்கிறார் என்றால், அது மாபெரும் பண்டிகை ஆயிற்றே! திருவிழா ஆயிற்றே! அத்தகைய நேரத்தில் ஏதோ காமா சோமா என்று ஒரு கோலத்தைப் போடலாமா? அழகாகப் படிக்கோலம் போட்டு, அதன் விளிம்புகளில் காவியைத் தீட்டி, தானே அதை ரசித்து அழகுபடுத்திக் கொண்டிருந்தாள் ராஜம்.

படிக்கோலத்தின் மையத்தில்அதாவது சதுரத்துக்குள் ஏதாவது அழகு பண்ணவேண்டும் என்று விரும்பிய ராஜம், தான் போட்ட கோலத்தின் மீது தன் கால் பதிந்துவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதையின் காரணமாகக் கால்களைச் சற்று அகல வைத்துக்கொண்டு, விரல்களில் கோல மாவை எடுத்து நடு சதுரத்துக்குள் போட்டு முடித்துக்கொண்டிருந்தாள்.

கோலம் போடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்ததால், வேறு எதையும் கவனிக்கும் சூழ்நிலையில் இல்லை ராஜம். இன்னும் ஒரு சில விநாடிகளில் கோலத்தை நிறைவு செய்துவிடப் போகிறாள்.

ராஜத்தின் குனிந்த தலை இன்னும் நிமிரவில்லை.

திடீரென அவளது விரல்கள் கோலத்தைப் பூர்த்தி செய்வதை நிறுத்தின.

அவளுக்குப் பக்கத்தில்வெகு அருகில் யாரோ ஒருவர் நின்றுகொண்டிருப்பது போல் உணர்வு தோன்றியது.

ஒரு கணம் தடுமாறினாள். பிறகு, ஒருவாறு சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்தவள் கையில் இருந்த கோல மாவு டப்பாவைத் தரையில் தவற விட்டாள்.

அவளது கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. வாயில் இருந்து ஏதோ வார்த்தைகள் மெள்ள எழும்பித் தானாகவே அடங்குகின்றன.

பெரியவாமகா பெரியவா – தன்னையும் அறியாமல் வாய் விட்டுச் சொல்லி, பொதேல் என்று தரையில் விழுந்து அந்தத் திருவுருவத்தை நமஸ்கரித்தாள்.

ராஜத்துக்கு முன்னால் பளிச்சென்று நின்றிருந்த அந்தப் பரப்பிரம்மம்மகா பெரியவாசங்கர வடிவம் பலமாகச் சிரித்தது. “என்னவிஸ்வரூப தரிசனம் உனக்குக் கிடைக்கலையேனு ஏங்கிண்டிருந்தியேஇப்ப நன்னா ஆச்சா? என்றார், புன்னகை மாறாமல்.

ஆச்சு பெரியவாநன்னா ஆச்சு பெரியவா என்று அவரையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தவள், அடுத்து தான் என்ன செய்வது என்று தடுமாறினாள்.

அந்த வீட்டு வாசலில் அந்த வேளையில் பெரியவாளையும் ராஜத்தையும் விட்டால், காக்காகூடக் கிடையாது. எல்லோரும் வீட்டுக்குள் அல்லவா இந்த தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள்?!

பெரியவா பற்றிய சிந்தனையுடன் இருந்த ராஜத்துக்கு எப்பேர்ப்பட்ட தரிசனம் வாய்த்தது! ஆஹா! பக்திக்கு அந்தப் பரமனே இரங்கி வருபவர் அல்லவா?

விரலைச் சொடுக்கி, ராஜத்தை நனவுலகுக்கு அழைத்த பெரியவா, “உள்ளே குடுகுடுன்னு ஓடிப் போ… ‘பெரியவாளோட விஸ்வரூப தரிசனத்தை நாந்தான் மொதல்ல பார்த்தேன்னு எல்லார்ட்டயும் பெருமையா சொல்லுஎம் பின்னாடி பெரியவா வந்திண்டிருக்கார்னு சொல்லு என்று பெரியவா தன் திருவாய் மலர்ந்த அடுத்த கணம், தன் இரு கைகளாலும் பட்டுப்பாவாடையைப் பிடித்துக்கொண்டு வாசல்படி ஏறி, பிரமாண்ட வீட்டின் உள்ளே ஓடினாள்.

அந்தச் சிறுமியின் ஆசையை நிறைவேற்றி வைத்த பரப்பிரம்மம், சாதுவாய் அவள் பின்னே தொடர்ந்து வீட்டுக்குள் சென்றது. பொசுக்கென்று வெளியே ஓடி வந்த சிஷ்யர்கள் மகானுக்கு வழி ஏற்படுத்தித் தந்தார்கள்.

திரை விலகி, பெரியவா தரிசனம் தருவார் என்று காத்திருந்த சீனிவாசன் குடும்பத்தினரும் ஒட்டுமொத்தக் கூட்டத்தினரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

கூட்டத்தினரிடையே குழந்தை ராஜம் கும்மாளமிட்டுச் சொன்னது: “பெரியவாளோட விஸ்வரூப தரிசனத்தை நான்தான் மொதல்ல பார்த்தேன். இதோ, உங்களுக்கெல்லாம் தரிசனம் தர்றதுக்குப் பெரியவா வந்திண்டிருக்கார்ர்ர்ர்

வீடே பரபரப்பானது. திரையிட்ட அறைக்குள் இருந்த பெரியவா, வெளியே கோலம் போட்டுக்கொண்டிருந்த ராஜத்துக்கு எப்படி விஸ்வரூப தரிசனம் காண்பித்தார் என்பதைப் பற்றி ஆளாளுக்கு சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

அதுதான் பெரியவா!

சிறுமியான இந்த ராஜத்துக்கு இந்த ஒரு அருட்காட்சி மட்டும்தான் என்றில்லை. அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆட்கொண்டு, அருளாசி புரிந்திருக்கிறார் காஞ்சி மகான்.

சில வருடங்கள் கடந்த பின் ராஜத்துக்குத் திருமணம் ஆகி விட்டது. கும்பகோணத்தில் பிரபலமான கண்ணாவையர் குடும்பத்தில் சம்பந்தம் ஆகி இருந்தது.

ராஜத்துக்குத் திருமணம் முடிந்த சில காலத்தில் மகா பெரியவா ஒரு முறை கும்பகோணத்துக்கு க்ஷேத்ராடனம் வந்திருந்தார்.

கோயில் நகராம் கும்பகோணத்தின் காவிரிக் கரை ஓரம் மடத்துத் தெருவில் விஸ்தாரமாக அமைந்துள்ள ஸ்ரீசங்கர மடத்துக்கு மகா பெரியவா ஒரு முறை க்ஷேத்ராடனமாக வந்திருந்தார். மகா பெரியவா எப்போது கும்பகோணம் வந்தாலும், அவரை தரிசிக்க வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது என்று முன்பே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். அந்த அளவுக்கு மகா பெரியவாளுக்கும் கும்பகோணத்துக்கும் இயற்கையாகவே ஒரு பந்தம் அமைந்துவிட்டது. ஸ்ரீமடத்து முக்கியஸ்தர்களும், காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், இன்ன பிற சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து கட்டுப்படுத்த முயன்றால்கூட அந்த பக்தர்கள் கூட்டத்தை ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டுவர முடியாது. அந்த அளவுக்குத் திமிலோகப்படும்.

ஆனாலும், பெரியவா கிருபையால் அந்தக் கூட்டத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காது. முறை தவறிய செயல்கள் எதுவும் எட்டிப் பார்க்காது. கட்டுப்பாடுகளை மீறி தாங்கள் இருந்தாலும், தங்களுக்குள் மனக் கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு, ஒழுங்கு முறையுடன் நடந்துகொள்வர் பக்தர்கள்.

திருமணமாகி கும்பகோணத்துக்கு ராஜம் வந்திருந்த வேளை அதுபொதுவாக அந்தக் காலத்தில் கட்டுப்பாடுடன் வசிக்கும் எந்த ஒரு குடும்பத்துப் பெண்ணும் தேவை இல்லாமல் தனியாக வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்ல மாட்டார்கள். உயர்தர குடும்பங்கள் பலவற்றிலும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை இது. தான் எந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டுப் போனாலும், புகுந்த வீட்டில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொண்டு இல்லறம் செழிப்பதற்கு மருமகள்கள் ஒத்துழைத்தார்கள்.

திருமணத்துக்கு முன் திம்மகுடியில் வசித்தபோது தான் வசித்த வீட்டுக்கு அக்கம்பக்க வீடுகளுக்கு அவ்வப்போது செல்வது தவிர, வேறு எங்கும் சென்று பழக்கம் இல்லை ராஜத்துக்கு. கும்பகோணத்துக்கு புகுந்த வீட்டுக்கு வந்த பிறகும், கிட்டத்தட்ட அதே நடைமுறைதான். ராஜம் வீட்டை விட்டு வெளியே எங்கும் தனியாகச் செல்வதில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை.

இந்த வேளையில்தான் மகா பெரியவா கும்பகோணம் வந்திருந்தார். அப்போதெல்லாம் ஒரு மாட்டு வண்டியில் மைக் கட்டிக்கொண்டு, பெரியவாளின் வருகையைத் தெருத் தெருவாகப் போய்ச் சொல்வது வழக்கம். அந்த வகையில் ராஜம் இருக்கும் தெருவுக்கும் அந்த மைக் அறிவிப்பு வந்தது. தவிர, அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் ராஜத்தின் வயதை ஒத்த ஒரு சில பெண்கள், ராஜத்திடமே வந்து, மகா பெரியவா கும்பகோணம் வரப் போவதாக முன்னறிவிப்பு செய்து, அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிநிரல் முழுவதையும் ஒப்புவித்துச் சென்றனர்.

திருமணமாகி கும்பகோணம் வந்ததும், அந்த மகானின் தரிசனம் தனக்குக் கிடைக்கப் போகிறதே என்று ராஜத்துக்கு உள்ளூர சந்தோஷம். மனம் பூரித்தது.

சாதாரணமாக புகுந்த வீட்டில் உள்ள ஒரு மருமகள், எங்காவது வெளியில் செல்லவேண்டும் என்றால், மாமியாரிடமோ கணவரிடமோ அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களிடமோ, தான் இந்த இடத்துக்கு இன்ன காரணத்துக்காகச் செல்ல வேண்டும் என்று சொல்லி, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை வேண்டி நிற்பதுதான் வழக்கம்.

ஆனால், ‘ஸ்ரீசங்கர மடத்துக்குச் சென்று மகா பெரியவாளை தரிசித்து வரட்டுமா? என்று கேட்டால், எங்கே வீட்டில் உள்ள மாமியாரோ அல்லது வேறு எவராவது பாதுகாப்பு அல்லது பயம் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி அனுமதி மறுத்து விடுவார்களோ என்று கலக்கம் அடைந்தார் ராஜம்.

அனுமதி கேட்டால்தானே உத்தரவு கிடைப்பதில் சங்கடம்? இதையே ஒரு தகவலாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனால்..? இப்படி ஓர் எண்ணம் ராஜத்துக்குத் தோன்றியது.

அன்று மதியம் ஸ்ரீமடத்தில் சந்திரமௌளீஸ்வரர் பூஜை. அதன் பின் பெரியவா தன் கையால் எல்லோருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்குவார். பெரியவா திருக்கரங்களால் தீர்த்த பிரசாதம் வாங்குகிற பேறு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? அன்றைய தினம் பெரியவா கையால் எப்படியாவது தீர்த்த பிரசாதம் வாங்கியே தீருவது என்று மகா பெரியவாளை மனதில் பிரார்த்தித்துக்கொண்டு கொஞ்சம் பயத்துடனே மாமியாரிடம் போனார் ராஜம்.

பூஜையறையில் இருந்த மாமியார், ராஜம் வருவது கண்டு, “என்னம்மா? என்று கனிவுடன் கேட்டிருக்கிறார். எப்படித்தான் அப்படி ஒரு தைரியம் ராஜத்துக்கு வந்ததோ தெரியவில்லை… “பெரியவா இன்று சங்கர மடத்தில் பூஜை செய்கிறார். அவர் கையால் தீர்த்த பிரசாதம் வாங்கவேண்டும். நான் கிளம்புகிறேன் என்று படபடவெனச் சொல்லியிருக்கிறார்.

போகட்டுமா? என்று கேட்காமல்போய் வருகிறேன் என்று செய்தியாகச் சொல்கிறாளே என்று மாமியார் தன் மருமகளை வியந்து பார்த்தார்இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்அந்தக் காலத்தில் விட்டுக்கொடுக்கும் மனப் பான்மை நிறையவே இருந்திருக்கிறதுஏதடா… மருமகள் வந்து இப்படித் தகவலாகச் சொல்கிறாளே… வளை எப்படி அனுமதிக்கலாம்? என்று உத்தமமான அந்த மாமியார், ராஜத்துக்குத் தடை விதிக்கவில்லை.

ராஜத்தின் கணவரான தன் மகனை அழைத்தார் மாமியார். “ராஜம் சங்கர மடம் போய் பெரியவாளை தரிசிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். எப்போது அவள் புறப்பட வேண்டுமோ, அந்த நேரத்தில் அவளைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு போய் அங்கு விட்டுவிட்டுப் பிறகு கூட்டிக்கொண்டு வா என்று மகனிடம் உத்தரவாகச் சொன்னார், அந்த அம்மையார்.

மாமியார் உத்தரவிட்ட அதே வேளையிலேயே, “சந்திரமௌளீஸ்வரர் பூஜை மதியம் ரெண்டு மணிக்கு ஆரம்பிக்கும். பூஜை முடிந்து பெரியவா தீர்த்த பிரசாதம் கொடுக்க ஆரம்பிப்பார். அதை வாங்கி முடிப்பதற்குள் சாயந்திரம் ஐந்து மணி ஆகிவிடும் என்கிற தகவலையும் அனைவரும் கேட்கும்படி பொத்தாம்பொதுவாகச் சொல்லி வைத்தார் ராஜம்.

அதாவது மீண்டும் தன்னை அழைத்துச் செல்வதற்கு மாலை ஐந்து மணிக்கு சங்கர மடம் வந்தால் போதும் என்பதே இதன் பொருள்.

அன்றைய தினம் மதிய வேளையில் தன் மனைவி ராஜத்தை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு மடத்துத் தெருவில் இருந்த ஸ்ரீசங்கர மடத்தில் விட்டுவிட்டுத் தன் பணி நிமித்தமாக வேறு எங்கோ சென்றுவிட்டார் கணவர்.

தெரு முழுக்க ஜனம். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷம் ஸ்ரீமடத்தை மட்டும் அல்லாமல் அந்தத் தெருவையே நிறைத்திருந்தது. பக்தர்கள் கடலில் நீந்தித்தான் உள்ளே சென்றார் ராஜம்.

அந்தப் பரப்பிரம்மம் தன் ஸ்தானத்தில் கன கம்பீரமாக வீற்றிருந்தது. புன்னகை வதனத்தோடு கூடிய கருணையே உருவான திருமுகம். தண்டத்தைக் கையில் ஏந்திக்கொண்டு, தன் அருகே வந்து செல்லும் பக்தர்களை ஆசிர்வதித்துக் கொண்டு, பிரசாதம் வழங்கிக்கொண்டிருந்தது. சில மணித் துளிகள் கரைந்த பின், “ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் பூஜைக்கு எல்லா ஏற்பாடுகளும் தயார் என்று சிஷ்யர்கள் வந்து மகா பெரியவாளிடம் பவ்யமாகச் சொன்னார்கள்.

அந்த சிவ சொரூபம், சிவபெருமானுக்குப் பூஜை செய்ய ஆரம்பித்தது. தன்னைத் தானே பூஜை செய்துகொள்ளுதல் என்பது இதுதானோ?! பெரியவா செய்யும் பூஜையைப் பார்த்து, தன்னை மறந்த நிலையில் இருந்தனர் பக்தர்கள்.

ஏராளமான பக்தர்கள் உள்ளே இருந்தாலும், பூஜை துவங்கிய வேளையிலிருந்து ஒரு சிறு சத்தம்கூட எழவில்லை. ஸ்ரீமடத்தின் ஒரு மூலையில் வேத பாராயணம் மட்டும் கணீரென்று நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் பெரியவா பூஜை செய்யும் திருக் காட்சியையே பார்த்து மனமார பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

சுமார் நாலரை மணி வாக்கில் பூஜை முடிந்து, ஆரத்தி நிகழ்ந்தது. இதை அடுத்து, பெரியவாளிடம் தீர்த்த பிரசாதம் வாங்கிக்கொள்வதற்காக அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நிற்கத் தொடங்கினர். பெண்கள் வரிசையில் தன்னையும் ராஜம் இணைத்துக்கொண்டபோது அவருக்கு முன்னால் ஏராளமானோர் மளமளவென வந்து கூடி விட்டது தெரிந்தது. இத்தனை பேருக்கும் பெரியவா தீர்த்தம் கொடுத்து, தான் தீர்த்தம் பெறுவதற்குள் நேரம் ஓடிப் போய் விடுமோமாமியார் ஏதாவது நினைப்பாரோ என்றெல்லாம் ராஜத்தின் மனம் மெள்ள சஞ்சலம் அடையத் தொடங்கியது.

ஸ்ரீமடத்து ஊழியர்களும் பெரியவாளின் சிஷ்யர்களும், தீர்த்த பிரசாதம் வாங்குவதற்கென்று பெண்கள் நின்றிருந்த வரிசையை துரிதப்படுத்திக்கொண்டிருந்தனர். அந்த மகானின் திருக்கரங்களால் தீர்த்த பிரசாதம் பெற்ற பெண்கள், முகத்தில் ஆனந்தம் பொங்க நகர்ந்துகொண்டிருந்தனர்.

ராஜத்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துகொண்டே வந்தது. அந்த நேரம் பார்த்து, ஒரு தர்மசங்கடம் ராஜத்துக்கு!

காலையில் குளித்து முடித்து, பெரியவா தரிசனத்துக்காகக் கிளம்பும்போது தலையைப் பின்னிக்கொள்ளாமல், அப்படியே அழகாக முடிந்துகொண்டு வந்திருந்தார் ராஜம். தலைமுடியை ஒன்றாக எடுத்து உச்சந்தலையில் போட்ட முடிச்சு அதுவரை கலையாமல் அப்படியே இருந்தது. கிட்டத்தட்ட பெரியவாளின் அருகே செல்கிற நேரத்தில் அந்தத் தலை முடிச்சு அவிழ்ந்து விட்டது. அதாவது தலைவிரி கோலமாக இருந்தது. இதோடு எப்படி மகா பெரியவா அருகே சென்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள முடியும்? இது அபசாரம் அல்லவா? (இந்தக் காலத்தில் தலைவிரி கோலத்துடன் இருப்பதுதான் ஃபேஷன் என்று ஆனது சோகமே!)

தலையை முடிந்துகொண்டால், முடியின் ஸ்பரிசம் பட்ட அந்தக் கையை உடனே சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால், பெரியவா கையால் தீர்த்த பிரசாதம் வாங்குகிற கை சுத்தமாக இருக்க வேண்டும். தலையை முடிந்த கையோடு அப்படியே தீர்த்தம் வாங்கிக் கொண்டால், அது மகான்களையே அவமதிப்பது போலாகும். அதைவிட பாவம் வேறு எதுவுமே இல்லை.

இப்போது இருப்பதுபோல் வெளியே செல்லும்போதெல்லாம் வாட்டர் பாட்டில் கையில் வைத்திருக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் இல்லை. அப்படி ஒருவேளை தண்ணீர் மாதிரி ஏதாவது கையில் இருந்தால், அவசர அவசரமாகத் தலையை முடிந்துகொண்டு, சட்டென்று ஓர் ஓரமாகப் போய்த் தண்ணீர் விட்டுக் கையைக் கழுவிக்கொண்டு, மீண்டும் வரிசைக்குள் வந்து விடலாம். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை.

சரிவரிசையில் இருந்து நகர்ந்து போய், நிதானமாகத் தலையை முடிந்துகொண்டு, தண்ணீர்க் குழாய் இருக்கும் இடத்தில் கையைக் கழுவிக்கொண்டு மீண்டும் வந்தால், பழைய இடம் கிடைக்காது. நீண்டு காணப்படும் பெண்கள் வரிசையில் கடைசியாகப் போய்த்தான் நிற்க வேண்டும். ‘ஒருவேளை மாமியாரிடம் முறையாக அனுமதி வாங்கி வராததால்தான், இப்படி ஒரு தண்டனை தனக்குக் கிடைத்திருக்கிறதோ என்றுகூ ராஜம் கவலைப்பட்டார்.

முன்னால் இருப்பவர்கள் வேகமாக நகர நகரராஜத்திடம் படபடப்பு கூடியது.

பெரியவா பார்வையில் இருந்து வெகு தொலைவில் விலகித்தான் ராஜம் நின்றிருந்தார். ‘ஆனது ஆகட்டும் என்று தலைமுடியை இரு கைகளாலும் எடுத்து, அப்படியே முடிந்து கொண்டார் ராஜம். கொஞ்சம் படபடப்பு குறைந்தது. இருந்தாலும், தலைமுடி பட்ட கையால், பெரியவாளின் தீர்த்த பிரசாதத்தை எப்படி ஏற்பது என்கிற சஞ்சலமும் இருந்தது.

வரிசை விறுவிறுவென நகர்ந்து இதோ, ராஜத்தின் முறையும் வந்துவிட்டது.

தீர்த்த பிரசாதம் வேண்டி, இடக்கையை அடியிலும், வலக்கை மேலுமாக வைத்து முந்தானையையும் சேர்த்துப் பிடித்து பெரியவாளின் முன் இதயம் படபடக்க நின்றார் ராஜம். தீர்த்தம் வேண்டி வலக் கையை பெரியவாளிடம் மிக பவ்யமாக நீட்டிக் கொண்டிருந்தாலும், அந்தக் கை அவ்வளவு சுத்தமாக இல்லையே என்கிற கவலை ராஜத்தை ஏகத்துக்கும் வதைத்துக்கொண்டிருந்தது.

பெரியவாளின் திருச்சந்நிதியில் அபசாரம் செய்கிறோமே என்கிற தவிப்பு மனதைப் பிசைந்தது. என்றாலும், அந்த நேரத்தில் வேறு வழி இல்லை என்பதால், மனதை ஒருவாறு சமாதானப்படுத்தி, தீர்த்த பிரசாதத்துக்காகக் கையை நீட்டிய வண்ணம் நின்றுகொண்டிருந்தார் ராஜம்.

ஒரு புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்த அந்தப் பரப்பிரம்மம், ஒரு உத்தரணி தீர்த்தத்தை ராஜத்தின் வலக் கையில் விட்டு, “இதை சாப்டுடாதேகீழே விட்டுடு என்றதே பார்க்கணும்கண்களில் நீர் குபுக்கென்று எட்டிப் பார்க்க, அந்தத் தீர்த்தத்தைப் பெரியவா உத்தரவுப்படி அப்படியே கீழே விட்டார் ராஜம். பிறகு, ஈரமாகிப் போயிருந்த வலக் கையால் இடது உள்ளங்கையையும் நன்றாகத் துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டார். அபசாரம் அகன்றுவிட்டதாக நெகிழ்ந்து போனார் ராஜம்.

இப்ப ஒன் கை சுத்தமாயிடுத்து. ஜலம் வாங்கிக்கோ என்றபடி ராஜத்தின் கைகளில் இன்னொரு முறை தீர்த்தம் விட்டார் பெரியவா. ‘மகா பெரியவா சரணம்மகா பெரியவா சரணம் என்று அவரது திருநாமத்தை உச்சரித்தபடியே, அந்தத் தீர்த்தத்தை வாங்கி அருந்தி, தன் தலையிலும் பக்தி சிரத்தையுடன் தெளித்துக்கொண்டார் ராஜம்.

இதன் பின் வீடு திரும்பும்போது அவருக்கு ஒரு நிம்மதி இருந்தது.

மகா பெரியவாளைகலியுக தெய்வம், ‘கண் கண்ட தெய்வம், ‘கருணைக் கடல் என்றெல்லாம் சொல்கிறோம்எல்லாமே சத்தியமான வார்த்தைகள்தன் சந்நிதியில் தவறுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்அறியாமல் நடக்கின்ற தவறுகளைப் பொறுத்தருள்வார்; அறிந்தே நடக்கின்ற தவறுகளைத் திருத்துவார். இவர் போன்ற ஒரு மகான் சமீப காலத்தில் வாழ்ந்ததில்லை. இனி வரப் போவதும் இல்லை என்பது பெரியவா பக்தர்களின் வாக்கு.