மகா பெரியவா திருவாய் மலர்ந்து தங்களிடம் ஏதாவது கேட்க மாட்டாரா என்று எண்ணற்ற கோடீஸ்வரர்கள் தவமாய்க் காத்திருந்த காலம் உண்டு. கோடிக்கணக்கான சொத்துக்களையும், வியாபாரத்தின் லாபத்தையும் ஸ்ரீமடத்துக்கு எழுதித் தருவதற்காக பெரியவா திருச்சந்நிதியில் காத்திருந்த அத்யந்த பக்தர்களும் உண்டு. ஆனால், பணம் இருக்கும் இடத்தின் பக்கம் என்றுமே கடைக்கண் பதித்ததில்லை மகா பெரியவா.
மகா பெரியவா ஏதாவது உத்தரவிட்டு விட்டால் போதும். அதை தெய்வ சங்கல்பமாக எண்ணி அதன்படி நடப்பார்கள் அவரது பக்தர்கள். மகானின் திருவாக்கை மீறி எவரும் எந்தக் காலகட்டத்திலும் நடந்ததில்லை. அவரிடம் இருந்து வெளிப்படும் வாக்கு – தேவ வாக்கு. தெய்வ சங்கல்பம். அதை மீறிச் செயல்படக் கூடிய தைரியமும் தெம்பும் எந்த ஒரு பக்தருக்கும் இருந்ததில்லை. தெய்வ வாக்கை மீறலாமா என்று சிந்தித்ததும் இல்லை.
விதி வசத்தால், மகா பெரியவாளின் திருவாக்கை மீறிய ஒருவரின் சோக நிகழ்வை இனி பார்க்கப் போகிறீர்கள். இது நடந்தது அநேகமாக 1945-46 களில் இருக்கலாம்.
கும்பகோணத்தை அடுத்த மஞ்சக்குடியில் தற்போது வசித்து வருபவர் திருமதி லக்ஷ்மி வேங்கடகிருஷ்ணன். வயது அறுபது. காவல்துறையில் சூபரின்டெண்டெண்ட்டாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். லக்ஷ்மியின் தந்தையார் பெயர் வேங்கட்ராமய்யர். தாத்தாவின் (அப்பாவைப் பெற்ற) பெயர் முத்துசாமி ஐயர். சொந்த ஊர் கும்பகோணத்துக்கு அருகே உள்ள தேப்பெருமாநல்லூர். புகழ் பெற்ற ராகு ஸ்தலமான திருநாகேஸ் வரத்துக்கு அருகில் உள்ள ஊர்தான் தேப்பெருமாநல்லூர்.
1940-களில் திருநாகேஸ்வரம் ரயிலடி, கடைத்தெரு என்று இன்னும் ஓரிரு இடங்களில் பெரிய அளவில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார் முத்துசாமி ஐயர். ஓரளவு வசதி உண்டு. வியாபாரமும் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
அப்போது க்ஷேத்ராடனமாக திருவிடைமருதூருக்கு வந்திருக்கிறார் மகா பெரியவா. ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியை தரிசித்து, அங்குள்ள ஸ்ரீமடத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். சந்திரமௌலீஸ்வரர் பூஜை, பாத பூஜை என்று ஸ்ரீமடமே அமர்க்களப்பட்டது. திருவிழா போல் ஜனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
தேப்பெருமாநல்லூரில் பெரிய அக்ரஹாரம் உண்டு. அங்கே அந்தணர்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். தங்கள் ஊருக்கு அருகில் உள்ள திருவிடைமருதூருக்கு வந்த பெரியவாளைத் தங்கள் ஊருக்கும் அழைத்து வந்து அவரது திருப்பாதம் அந்த மண்ணில் பட வேண்டும் என்று தேப்பெருமாநல்லூரில் வசித்து வந்த அந்தணர்கள் விருப்பப்பட்டனர். எனவே, ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் ஒரு குழுவாகப் புறப்பட்டுத் திருவிடைமருதூர் போய் பெரியவாளைத் தரிசித்து ‘தேப்பெருமாநல்லூருக்குப் பெரியவா வர வேண்டும்‘ என்று விக்ஞாபனம் செய்து கொண்டனர்.
பெரியவாளும் ஒரு புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அடுத்து வந்த ஒரு தினத்தில் தன் சிஷ்யகோடிகளுடன் தேப்பெருமாநல்லூர் வந்தார். ஊர் தேடி வந்த உத்தமமான மகானுக்குப் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தார்கள் ஊர்வாசிகள். நாகஸ்வரம் என்ன… வாழைமரம், தோரணம் என்ன… வேத கோஷ பாராயணம் என்ன என்று பெரிய அளவில் அசத்தி விட்டனர் தேப்பெருமாநல்லூர்வாசிகள்.
அங்கு பலரும் நடத்திய பாத பூஜையை ஏற்றுக் கொண்டு விஸ்தாரமான ஒரு கிரஹத்தில் தங்கி, பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகா பெரியவா. தேப்பெருமாநல்லூர்வாசிகளும் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் திரளாக வந்திருந்து மகா பெரியவாளைத் தரிசித்து, பிரசாதம் பெற்று மகிழ்ந்தனர். தங்களது கிராமத்துக்குப் பெரியவா விஜயம் செய்தது பூர்வ ஜன்ம பாக்கியம் என்பது போல் தேப்பெருமாநல்லூர் அன்பர்கள் மகிழ்ந்தனர்.
பெரியவாளிடம் பிரசாதம் வாங்குவதற்காக பக்தர்கள் நின்று கொண்டிருக்கும் வரிசையில் அருணாசலம் என்கிற சிறுவன் ஒருவனும் இருந்தான். இவன் மேலே சொன்ன வெங்கட்ராமய்யரின் கடைசித் தம்பி. அதாவது முத்துசாமி ஐயரின் கடைசி மகன். வயது ஒன்பது. பெரியவாளின் திருக்கரங்களால் பிரசாதம் பெற வேண்டும் என்கிற ஆர்வத்தின் காரணமாக அந்த வரிசையில் கலந்திருந்தான். வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக நகர நகர… அடுத்து அருணாசலத்தின் முறை வந்தது. முகத்தில் இனம் தெரியாத பூரிப்புடன் பெரியவா முன் நின்று பிரசாதம் வேண்டி, தன் வலது உள்ளங்கையை நீட்டினான்.
அந்தப் பரப்பிரம்மம் இவனை ஏற இறங்கப் பார்த்தது. பிறகு, “ஒம் பேர் என்ன?“ என்று கேட்டார் பெரியவா.
“அருணாசலம்“ என்றான்.
பிறகு, அவனுக்குக் கண்ஜாடை காண்பித்து ஓர் ஓரமாக நிற்கச் சொன்னார் பெரியவா. பள்ளிக்கூடத்தில் வாத்தியார் உத்தரவிட்டதும் அதைக் கேட்டு நடக்கிற மாணவன் போல் பெரியவா உத்தரவைக் கேட்டதும், ஓர் ஓரமாகச் சென்று நின்று கொண்டான் அருணாசலம். அங்கு நின்றிருந்தபடியே பெரியவாளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதை அடுத்து அங்கிருந்த உள்ளூர் பிராமண பக்தர் ஒருவரை அழைத்த பெரியவா, “இந்தப் பையனோட கிரஹத்துலேர்ந்து பெரியவா யாரும் இங்கே வந்திருக்காளா?“ என்று கேட்டார். உடனே அந்த உள்ளூர் பிராமணர் சுற்றும்முற்றும் பார்வையை ஓட்டி விட்டு, “யாரும் வரலே பெரியவா“ என்று உடல் வளைந்து சொன்னார்.
“இந்தப் பையனோட அப்பாவை ஒடனே என்கிட்ட கூட்டிண்டு வாங்கோ“ என்று உத்தரவிட்டார்.
அவ்வளவுதான். ஏன் கூப்பிட்டார், எதற்குக் கூப்பிட்டார் என்று எதுவும் கேட்காமல் ஒரு படையே அருணாசலத்தின் அப்பாவைத் தேடி ஓடியது. மற்ற பக்தர்களுக்கு வழக்கம்போல் பிரசாதம் தருவதைத் தொடர்ந்தார் பெரியவா.
ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்த அருணாசலம் நெளிந்தான். ‘எல்லாருக்கும் பிரசாதம் கொடுக்கறார்… என்னை மட்டும் ஏன் ஓரமாக நிக்க வைத்து விட்டார்? நான் ஏதேனும் தப்பு பண்ணி விட்டேனா? அதனால்தான் என் அப்பாவைக் கூட்டிண்டு வருமாறு ஆள் அனுப்பி இருக்காரா?‘ என்றெல்லாம் தன் வயதுக்கு ஏற்ற மாதிரி ஏதேதோ கற்பனை செய்து யோசித்துக் கொண்டிருந்தான்.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அருணாசலத்தின் அப்பா முத்துசாமி ஐயருடன் திரும்பி இருந்தது, தேடிப் போன குழு. கூடி இருந்த கூட்டத்தை ‘நகருங்கோ… நகருங்கோ…‘ என்று கைகளை நீட்டி விலக்கியவாறே மகா பெரியவா முன்னால் அவரை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ‘தாங்கள் சொன்ன பையனின் அப்பா இவர்தான்‘ என்கிற விவரத்தையும் பெரியவாளுக்குத் தெரிவித்தார்கள்.
வந்தவுடன் சாஷ்டாங்கமாக பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்தார் முத்துசாமி ஐயர். அவரை ஏற இறங்கப் பார்த்த பெரியவா, “ஒம் பையன் அருணாசலத்தை எங்களோட காஞ்சி ஸ்ரீமடத்துக்கு அனுப்புங்கோ. அங்கே வந்து அவன் கைங்கர்யம் செய்யட்டும்“ என்றார் பெரியவா நேரடியாக. சுற்றி வளைத்து எதுவும் பேசவில்லை.
முத்துசாமி ஐயருக்கு சட்டென்று என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குக் கடைக்குட்டி அவன். மகன் அருணாசலத்தின் மீது முத்துசாமி ஐயருக்குப் பாசம் அதிகம். எனவே, “சட்டுன்னு பதில் எதுவும் சொல்லத் தோணலை. எதுக்கும் எங்க ஆத்துல கலந்து பேசிண்டு பெரியவாளுக்குத் தகவல் சொல்றேன்“ என்று பதில் சொல்லி விட்டு, பையனைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் முத்துசாமி ஐயர்.
தன் வீட்டுக்கு வந்தார் முத்துசாமி ஐயர். மகா பெரியவா சொன்ன தகவலை வீட்டில் உள்ள அனைவரிடமும் தெரிவித்தார். இரண்டு விதமான கருத்துகள் வந்தன. கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. இறுதியில் தீர்மானமான முடிவுடன் முத்துசாமி ஐயர், “எம் பையனை நான் ஏன் மடத்துக்கு அனுப்பணும்? எனக்கு வசதி இல்லியா என்ன? அவன் இங்கயே இருக்கட்டும். பெரியவா அவரோட அபிப்பிராயத்தை சபைல சொன்னார். அது அவரோட கருத்து. ஆனா, எனக்கு அதுல இஷ்டமில்லை. அவன் இங்கேயே இருக்கட்டும்“ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஓட்டலுக்குக் கிளம்பி விட்டார்.
பெரியவாளின் கருத்தை உதாசீனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் முத்துசாமி ஐயருக்கு இல்லை. பாசம் அவரைக் கட்டிப் போட்டு விட்டது. அந்தப் பாசமே ஒரு மகானின் வாக்கை மீறும்படியாக ஆகி விட்டது.
பெரியவாளும் தேப்பெருமாநல்லூரில் இருந்து கிளம்பி அடுத்த முகாமுக்குப் போய் விட்டார். பெரியவா கேட்ட கேள்விக்கு உண்டான பதிலை அவருக்குத் தெரியப்படுத்தவும் இல்லை; தெரியப்படுத்தவும் தோணவில்லை முத்துசாமி ஐயருக்கு. ‘இல்லை‘ என்ற பதிலை ஏன் போய்ச் சொல்லுவானேன் என்றுகூட இருக்கலாம். அடுத்து வந்த ஒரு சில நாட்களில் முத்துசாமி ஐயர் குடும்பத்தினர் இந்த நிகழ்வை ஏறக்குறைய மறந்தே போய் விட்டனர்.
தேப்பெருமாநல்லூரில் இரண்டு விசேஷங்கள் மிகவும் பிரபலமாக நடக்கும். ஒன்று – நரஸிம்ம ஜயந்தி. இரண்டாவது – அருள்மிகு சுந்தரமகா காளியம்மனின் காளியாட்டம். இந்த ஊரை ஒட்டி வசித்து வருபவர்கள் இந்த விசேஷங்களை நன்கு அறிவார்கள். சுந்தரமகா காளியம்மனின் காளியாட்டம் அவ்வளவு விமரிசையாக நடக்கும். காளியின் உருவம் தாங்கியதும், அந்த அம்மன் வேடம் போட்டவருக்கு எப்படித்தான் அப்படி ஒரு அருள் வருமோ… யப்பப்பா… பார்த்தாலே மெய் சிலிர்க்க வைக்கும் வைபவம் அது.
காளியின் வேடம் ஏற்றதும், காளி வேடம் போட்டவருக்குஉக்கிரம் அதிகமாகும். எனவே, காளியை சாந்தப்படுத்த தெரு முழுக்கத் தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விளக்கேற்றி வைத்து, காளிக்கு விமரிசையாக தீபாராதனை காட்டுவார்கள். இளநீர், பால், மோர் என்று விநியோகம் குதூகலமாக நடக்கும்.
மகா பெரியவா தேப்பெருமாநல்லூருக்கு வந்து சென்ற பதினெட்டாவது நாள் இந்தக் காளியாட்ட வைபவம் வந்தது. ஸ்ரீசுந்தரமகா காளியம்மனின் அருள் பெறுவதற்காகவும், இந்தக் காளியாட்ட வைபவத்தைக் கண்டு தரிசிப்பதற்காகவும் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ஜனங்கள் வண்டி கட்டிக் கொண்டு வருவது வழக்கம்.
கிராமங்களில் திருவிழா என்றால், தெருவோரக் கடைகள் களை கட்டுமே… அதுபோல் காளியம்மன் கோயிலை ஒட்டிய சாலைகளில் ஏராளமான கடைகள் முளைத்திருந்தன. பலகாரக் கடைகள், பலூன் கடைகள், பஞ்சு மிட்டாய்க் கடைகள், விளையாட்டுப் பொருள் விற்கும் கடைகள் என்று ஆங்காங்கே திடீர் வியாபாரிகள் முளைத்திருந்தார்கள். வியாபாரம் ஜரூராக இருந்தது.
தங்கள் ஊரில் திருவிழா என்றால், அங்கு வசிக்கும் சிறுவர்களின் உற்சாகத்துக்குக் கேட்பானேன்… அரை டிராயரைப் போட்டுக் கொண்டு அதுகள் பண்ணும் அழிச்சாட்டியத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. காரணம், வயது அப்படி. பருவம் அப்படி. பெற்றோர்களாலும் பெரியவர்களாலும் ஒன்றும் பண்ண முடியாது.
அதுபோல் அருணாசலமும் தன் வயதை ஒத்த சிறுவர்களுடன் இந்தக் கடைகள் இருக்கும் பகுதியில் உற்சாகமாக ஓடித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தான் – அடுத்து தனக்கு என்ன நிகழப் போகிறது என்பது தெரியாமல்!
அருணாசலம் உள்ளிட்ட – அவனது வயதை ஒத்த சிறுவர்கள் பலரும் திருவிழா நடைபெறும் சுந்தரமகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ள பரந்த இடத்தில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறு வயதுப் பிள்ளைகளின் ஓட்டத்துக்கும் ஆட்டத்துக்கும் எவர் தடை விதிக்க முடியும்? அவர்களின் விளையாட்டு எவராலும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.
ஓடி விளையாடிக் களைத்த பசங்கள் திடீரென இரு அணியாகப் பிரிந்து கபடி ஆட்டத்தைத் துவங்கினர். அருணாசலம் அணி இருந்த பக்கம் ஓர் ஓரமாக பெரிய சாக்குப் படுதா கட்டப்பட்டிருந்தது. அந்த சாக்குப் படுதாவுக்குள் ஏதோ ஒரு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது போலும். அது என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி சிறுவர்கள் கவலைப்படவில்லை. விளையாட்டு மும்முரத்தில் இதை எல்லாம் கவனிக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கும்?
கபடி விளையாட்டு துவங்கியது. எதிர் அணியில் இருந்து கபடி கபடி என்று ராகம் போட்டுப் பாடிக்கொண்டே வந்த ஒரு சிறுவன், அருணாசலத்தை அவுட் ஆக்கும் மும்முரத்தில் அவன் காலை லாகவமாக வாரி விட்டான். அவ்வளவுதான்… பொசுக்கென்று நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அருணாசலம் நிலைகுலைந்து போனான். அந்த நேரம் பார்த்து எப்படித்தான் அப்படி ஒரு பெரிய காற்று திடீரென்று வீசியதோ தெரியவில்லை… பலத்த காற்று வீசவும், அருணாசலத்துக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்த சாக்குப் படுதா கொஞ்சம் விலகவும்… அந்த சோக சம்பவம் நடந்துவிட்டது.
சாக்குப் படுதாவுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறியாத சிறுவன் அருணாசலம் தடுமாறிப் போய் தூக்கி வீசப்பட்டு உள்ளே விழுந்தான்.
அருணாசலம் விழுந்த இடத்தில் திருவிழாவுக்கென்று தற்காலிக எண்ணெய் பலகாரக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. மிகப் பெரிய எண்ணெய்ச் சட்டிக்குள் வடை, பஜ்ஜி, முறுக்கு போன்ற தின்பண்டங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர் சிலர். கொதித்துக் கொண்டிருக்கிற எண்ணெய்ச் சட்டிக்குள் எதிர்பாராமல் விழுந்த அருணாசலத்தை, அடுப்பில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு வேறு ‘திக்‘கெனப் பற்றிக்கொண்டது.
கலகலப்பாக இருந்த இடம், கவலை சூழ்ந்த இடமாகி விட்டது. உடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் அங்கிருந்த வியாபாரிகளும், திருவிழா காண்பதற்கு ஆலயம் வந்திருந்த பக்தர்களும் பதறிப் போய் அருணாசலத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். ஓரிருவர் தைரியமாக முன்வந்து அருணாசலத்தைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தார்கள். அதற்குள் அவனது உடல் வெந்துபோயிருந்தது. நெருப்பின் எரிச்சலும், வலியின் வேதனையும் அவனைச் செயலிழக்கச் செய்தன. அவனிடம் இருந்து ஈனஸ்வரமான முனகல் மட்டும் வந்துகொண்டிருந்தது. அருணாசலத்தின் அண்ணனான வேங்கட்ராமய்யர், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுப் பதறிப் போய் ஓடி வந்தார். வாடிய இலை போல் துவண்டு கிடக்கும் தம்பி அருணாசலத்தைப் பார்த்துக் கதறினார். உடனே, ஒரு மாட்டு வண்டி பூட்டப்பட்டு கும்பகோணம் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்கள். ஆனால், பாதி வழியிலேயே விதி வசத்தால் அருணாசலம் இறந்து போனான்.
ஒன்பது வயது… உலகத்–தையே இன்னும் பார்க்காத பருவம். சாகும் வயதா இது? அண்ணனான வேங்கட்–ராமய்யரும், வண்டியில் இருந்தவர்களும் இட்ட மரண ஓலம், அந்த பிராந்தியத்தையே கலங்க வைத்தது.
ஆனால், அருணாசலத்துக்கு இப்படி ஒரு துர்சம்பவம் நிகழ இருக்கிறது என்பதை மகா பெரியவா தன் ஞான திருஷ்டியால் உணர்ந்திருக்–கிறார். அந்தப் பச்சிளம் பாலகனை விதியின் பிடியில் இருந்து மீட்கவேண்டும் என்று விருப்பப்பட்டிருக்கிறார். இல்லை என்றால், எத்தனையோ பேர் ஸ்ரீமடத்தின் கைங்கர்யத்துக்கு வரத் தயாராக இருக்கும்போது, சம்பந்தமே இல்லாமல் அருணாசலத்தை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்துக் கேட்பானேன்? அவனது அப்பா முத்துசாமி ஐயரைத் தன்னிடம் வரச் சொல்லி ஏன் பேசுவானேன்?
இந்த அப்பாவிச் சிறுவன் அருணாசலம் ஸ்ரீமடத்துக்கு வந்து நல்வாழ்க்கை பெறட்டுமே என்கிற ஆதங்கத்தில் அப்படிக் கேட்டிருக்கிறார் மகா பெரியவா.
தவறு செய்தவர்கள் திருந்துவதற்கும், சாவின் விளிம்பில் உள்ளவர்கள் மீள்வதற்கும் தெய்வங்களும் மகான்களும் ஒரு சந்தர்ப்பத்தை நிச்சயம் தருவார்கள். அதை நாம் உணர்ந்து செயலாற்றவேண்டும். அப்படிச் செயலாற்றத் தவறினால், விளைவுகள் வேறு விதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பமும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனத்தால் அருணாசலத்துக்கு வாய்த்தது. அது பயன்படுத்த முடியாமல் போனது சோகமே!
அருணாசலத்தின் தந்தையான முத்துசாமி ஐயர் தலையில் அடித்துக்கொண்டு அழுதார். “என் கடைக்குட்டி அருணாசலத்தை இப்படி இழந்து தவிக்கிறேனே… எமனுக்கு அவனை பலி கொடுத்துட்டு நிராதரவா நிக்கறேனே… இதெல்லாம் முன்கூட்டியே தெரிஞ்சுதான் அந்த மகான், அவனைக் கேக்கறாருன்னு எனக்குத் தெரியாம போயிடுத்தே… அவன் விதி இப்படி ஆகும்னு தெரிஞ்சுதான் மடத்துக்கு இவனைத் தர்றியானு கேட்டது புரியாம போயிடுத்தே… மகா பெரியவா வார்த்தையை உதாசீனப்படுத்திட்டேனே… அந்த மகானது வார்த்தைகளை அலட்சியப்படுத்திட்டு இப்ப அவஸ்தைப்பட்டு நிக்கறேனே… அவரது வார்த்தையை மதிச்சு இவனை அனுப்பி இருந்தா, இன்னிக்கு எல்லார் கண் முன்னாலேயும் உயிரோடவாவது அருணாசலம் நடமாடிண்டு இருப்பானே“ என்று பலரது முன்னிலையிலும் கதறி அழுதார்.
மாபெரும் தீர்க்கதரிசி மகா பெரியவா போன்ற மகான்களால் மட்டுமே இது போன்ற விதியின் விளையாட்டுகளை அறிய முடியும். இதுபோல் பலரையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காப்பாற்றியிருக்கிறார் மகா பெரியவா. ‘ஊருக்குக் கிளம்பட்டுமா?‘ என்று பெரியவாளிடம் சிலர் உத்தரவு கேட்கப் போகும்போது, ‘இன்னிக்கு ராத்திரி மடத்துல தங்கிட்டு, நாளை காலைல கௌம்பு‘ என்பார் பெரியவா. அந்த உத்தரவை தெய்வத்தின் வாக்காகக் கருதி, அதற்குக் கட்டுப்பட்டு, மனதில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அங்கேயே தங்கிவிடுவார்கள், மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்கள். அடுத்த நாள் காலை நாளிதழ்களில் ஒரு செய்தி வரும். அதாவது, முதல் நாள் இரவு இந்த அன்பர் கிளம்புவதாக இருந்த சாலையிலோ, ஆகாய மார்க்கத்திலோ, இருப்புப் பாதையிலோ ஏதோ ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டதாகச் செய்தி இருக்கும்.
அருணாசலத்தின் அண்ணன் வேங்கட்ராமய்யரின் (இவர்தான் அருணாசலத்தை மாட்டு வண்டியில் போட்டுக் கொண்டு கும்பகோணம் ஆஸ்பத்திரி போனவர்) மகளான திருமதி லக்ஷ்மி வேங்கடகிருஷ்ணன் தற்போது கும்பகோணத்தை அடுத்த மஞ்சக்குடியில் வசித்து வருகிறார். அருணாசலம் சிறு வயதில் இறந்துபோனதால், அவருக்கென்று திதி கொடுக்க யார் இருக்கிறார்கள்? எனவே, ஒவ்வொரு வருடமும் அந்த நினைவு தினத்தன்று, சிறுவர்கள் சிலரை அழைத்து அவர்களுக்கு சாப்பாடு போட்டு வருகிறார்.