மகா பெரியவா – திருவள்ளூர் ராமசந்திர ஐயரின் மாப்பிள்ளை சீனிவாச ஐயர் சம்பந்தப்பட்ட இன்னொரு சுவையான நிகழ்வைப் பார்ப்போம்.
அது 1969-ஆம் வருடம். ராணுவத்தில் கெமிக்கல் தொடர்பான ஒரு பிரிவில் பணி புரிந்தவர் சீனிவாச ஐயர். இதன் பாதிப்போ என்னவோ, முதுமைக் காலத்தில் தன் இரு கண்களிலும் பார்வையை சுத்தமாக இழந்திருந்தார் சீனிவாச ஐயர். சுமார் ஏழு வருடங்களுக்குக் கொஞ்சமும் பார்வை இல்லாமலே குடும்பத்தினரின் உதவியுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
இழந்த பார்வை திரும்பக் கிடைக்குமா என்று சென்னையில் உள்ள பிரபலமான கண் ஆஸ்பத்திரி உட்பட பல மருத்துவர்களையும் சந்தித்தார் சீனிவாச ஐயர். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக ஏறி ஏறி இறங்கியதிலேயே ஓரிரு வருடங்கள் ஓடி விட்டன. ஆனால், பலன்தான் பூஜ்யம்! ‘இழந்த பார்வையைத் திரும்பப் பெறுவதற்கு உண்டான வாய்ப்பு ஒரு சதவிகிதம்கூட இல்லை. கண்களில் இனி ஒளி கிடைப்பதற்கு சந்தர்ப்பமே இல்லை. இறுதிக் காலம் வரை அவர் இப்படியேதான் இருக்க வேண்டும்‘ என்றே அனைத்து மருத்துவமனை ரிப்போர்ட்டுகளும் சொல்லி விட்டன. எனவே, வீடே கதி என்று அமர்ந்திருந்தார் சீனிவாச ஐயர்.
சீனிவாச ஐயரின் நெருங்கிய நண்பர் – ஜி.கே. மூர்த்தி. ஹைதராபாத்தில் வசித்துக் கொண்டிருந்தார். சென்னைக்கு வரும்போதெல்லாம் சீனிவாச ஐயரையும் கூட்டிக் கொண்டு காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளை திவ்யமாக தரிசனம் செய்து திரும்புவது மூர்த்தியின் வழக்கம். இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீமடம் சென்று மகா பெரியவாளை தரிசித்து அவரின் அனுக்ரஹத்துக்கு ஆளாகிவிட்டதால், ஒரு நாள் இரவு அந்த மகானே மூர்த்தியின் கனவில் வந்து ஏதேதோ விவரங்கள் சொன்னார். ஆனால், அந்தக் கனவு ஒரு கோர்வையாக இல்லாத காரணத்தால், மகா பெரியவா கனவில் வந்து என்ன விஷயத்தைச் சொன்னார் என்பதை அடுத்த நாள் காலை மூர்த்தியால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், கனவில் வந்த ஓரிரு காட்சிகள் எதனோடும் ஒட்டாமல் துண்டு துண்டாக இருந்தது. இதற்கான விளக்கத்தை மகா பெரியவாளையே நேரில் தரிசித்து அவரிடம் இருந்து பெறலாம் என்கிற எண்ணத்துடன் ஒரு நாள் பொசுக்கென சீனிவாச ஐயரின் வீட்டுக்கு (சென்னை) வந்தார் மூர்த்தி.
தன்னுடன் காஞ்சிபுரம் வருமாறு சீனிவாச ஐயரை அழைத்தார் மூர்த்தி. ‘எனக்கே பார்வை சரி இல்லை. இந்த நிலையில் நான் காஞ்சிபுரம் வந்து என்ன செய்யப் போகிறேன்? அந்த மகானை இங்கிருந்தபடியே மானசீகமாக தரிசிக்கிறேன். நீ போய் வா‘ என்று மூர்த்தியிடம் சொன்னார். ஆனால், மூர்த்தி சமாதானம் ஆகவில்லை. எப்படியாவது தன் நண்பனைக் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்கிற அவரது தளராத உறுதி, இறுதியில் ஜெயித்து விட்டது.
அடுத்த நாள் அதிகாலை ஒரு காரில் சீனிவாச ஐயர், அவரது மனைவி கிரிஜா, இவர்களின் மகன்கள் கோபி, ஜெயராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய ஐவரும் காஞ்சி ஸ்ரீமடத்தை நோக்கிப் பயணித்தனர்.
காஞ்சி ஸ்ரீமடத்தில் அன்று பெரியவா தரிசனத்துக்கு அவ்வளவாகக் கூட்டம் இல்லை. இதுவே மூர்த்திக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. மகா பெரியவா திருச்சந்நிதியில் அவருக்கு முன்பாக ஐந்து பேரும் அமர்ந்தனர். பெரியவா இவர்களைக் கண்டுகொள்ளாமல் தன் அருகே இருந்த ஒரு சிஷ்யனிடம் ஏதோ ஒரு விவரத்தை சற்றே உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். யதேச்சையாக இந்த சம்பாஷணையைக் காது கொடுத்துக் கேட்ட மூர்த்தி நெகிழ்ந்து போனார். காரணம் – அவரது கனவில் மகா பெரியவா வந்து என்ன விவரத்தைச் சொன்னாரோ, அதற்கான பதிலாகவும் விளக்கமாகவும் அமைந்திருந்தது மகா பெரியவாளின் அந்தப் பேச்சு. தன்னைத் தேடி வந்தவனுக்கு எப்படி விடை சொல்ல வேண்டும் என்று அந்த மகானுக்குத் தெரியாதா?
ஸ்தம்பித்துப் போன மூர்த்தி ரொம்பவும் குஷியாகி, மகா பெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து விட்டு, ‘புரிஞ்சுண்டேன் பெரியவா. எனக்கு எல்லாத்துக்கு விடை கிடைச்சுடுத்து‘ என்று சொல்லி, அவரது திருமுகத்தையே ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். மூர்த்தியின் கையில் குங்குமத்தை அள்ளிப் போட்டு அவருக்கு உத்தரவு கொடுத்தார். ‘சரி, பெரியவாளே உத்தரவு கொடுத்த பின் இங்கே இருக்கக் கூடாது‘ என்று அங்கிருந்து நகர்ந்தார். தான் மட்டும் தனியே சில ஆலயங்களை தரிசித்து வரலாம் என்பதாகப் புறப்பட்டார்.
இப்போது பெரியவாளுக்கு முன்னால் சீனிவாச ஐயர், கிரிஜா, கோபி, ஜெயராஜ் ஆகிய நால்வர் மட்டும்! ‘என்ன… திருவள்ளூர் ராமசந்திர ஐயர் பேத்தி…‘ என்று மகா பெரியவா, கிரிஜாவைப் பார்த்து உற்சாகமாக அழைக்க… இந்த திருவார்த்தையைக் கேட்ட சீனிவாச ஐயர் நெகிழ்ந்து போனார். இரு கரங்களையும் குவித்து அந்த மகானுக்கு தன் சந்தோஷத்தைத் தெரிவித்தார்.
என்ன ப்ராப்ளம்?‘ என்று சீனிவாச ஐயரைக் காட்டி, ஜாடையாலேயே கிரிஜாவிடம் கேட்டார் மகா பெரியவா.
தன் கணவருக்குப் பார்வை போன விஷயத்தையும், ஏழு வருடங்களாக அவர் இப்படியேதான் இருந்து வருகிறார் என்பதையும் கண்கள் கலங்கச் சொன்னார் கிரிஜா. ஆசிர்வதித்து அட்சதையும், குங்குமமும் கொடுத்தார் மகா பெரியவா.
ஒரு சில நிமிடங்கள் பேசிய பின், இவர்களுக்கு உத்தரவு கொடுத்தார் மகா பெரியவா. அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்து அங்கிருந்து வெளியே வந்தனர். ‘மூர்த்தி வந்தவுடன் சென்னைக்குப் புறப்பட வேண்டும்‘ என்று தீர்மானித்து, ஸ்ரீமடத்தில் இருந்து வெளியே வந்து சாலையில் கால் வைத்தனர்.
சட்டென்று ஸ்ரீமடத்தின் உள்ளிருந்து சீடன் ஒருவன் மூச்சிரைக்க வந்தான். ‘நல்ல வேளை… நீங்க இன்னும் பொறப்படலை. உங்க நாலு பேரையும் உடனே கூட்டிண்டு வரச் சொன்னா பெரியவா‘ என்றான்.
யாருக்கும் எதுவும் புரிபட வில்லை. ஆசிர்வதித்து உத்தரவு கொடுத்த பின் பெரியவா ஏன் அழைக்கிறார்?
மனைவியின் உதவியுடன் மீண்டும் ஸ்ரீமடத்தின் உள்ளே நிதானமாக நடந்து செல்ல ஆரம்பித்தார் சீனிவாச ஐயர்.
மகா பெரியவாளின் கருணையை எப்படிச் சொல்வது? தெய்வம் அல்லவா அங்கே குடி கொண்டிருக்கிறது?!
உள்ளே போனார்கள். கூட்டம் அதிகமில்லை. பெரியவாளின் சிஷ்யர்கள் தவிர, ஓரிரு பக்தர்கள் மட்டுமே இருந்தார்கள். மிகவும் ஏகாந்தமாக பெரியவா வீற்றிருந்தார்.
கிரிஜா மெள்ள கைப்பிடித்துத் தன் கணவன் சீனிவாச ஐயரைப் பெரியவா அருகே அழைத்துச் சென்றார். மகன்கள் இருவரும் பவ்யமாக ஓரமாக நின்றனர்.
காலை வசதியாக மடக்கி வைத்துக் கொண்டார் பெரியவா. பிறகு, கிரிஜாவைப் பார்த்து, “ஒன் ஆத்துக்காரரோட கண் ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். இன்னிக்கு இங்கேயே தங்கிடுங்கோ. கார்த்தால தரிசனத்துக்கு வாங்கோ. அப்ப வெவரம் சொல்றேன்“ என்று சொல்லி விட்டு அடுத்த கணம் சட்டென்று எழுந்தார். தன் ஜாகையை நோக்கி விறுவிறுவென நடந்தார். பெரியவா நடந்து செல்லும்போது அவரது திருவடிகளை நோக்கி நமஸ்காரம் செய்தனர் அங்கிருந்த ஒரு சில பக்தர்கள். கிரிஜாவும், அவரது மகன்களும் நமஸ்கரித்தனர்.
கிரிஜாவுக்கு லேசாகத் தலை சுற்றுவது போல் இருந்தது. பின்னே, இருக்காதா?! கணவர் சீனிவாச ஐயருக்குப் பார்வை பறிபோய் முழுசாக ஏழு வருடங்கள் ஆகி விட்டன. மெட்ராஸில் விரல் விட்டு எண்ணக்கூடிய பிரபல மருத்துவமனைகளில் எல்லாம், ‘இவருக்கு மீண்டும் பார்வை வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, பணத்தையும் நேரத்தையும் வேஸ்ட் செய்ய வேண்டாம்‘ என்று எப்போதோ சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்கள். அதன் பிறகு வீடுதான் கதி என்று சீனிவாச ஐயர் அமர்ந்திருக்கிறார். இந்த ஏழு வருடங்களில் உதவியாளர் இல்லாமல், சீனிவாச ஐயரால் தனியாக எதுவுமே செய்ய முடியவில்லை.
ஆனால், இன்று? ‘இவருக்குக் கண் ஆபரேஷன் பண்ணிடலாம்‘ என்று பெரியவா சொல்கிறாரே! இவரோட மெடிக்கல் ஹிஸ்டரி அதுக்கு சாதகமா இல்லியே… பெரியவா திருவாக்கு வேற மாதிரியாக அல்லவா இருக்கு என்று குழம்பினார் கிரிஜா.
‘ஸ்ரீமடத்துலேயே தங்கப் போகிறோம். பெரியவா உத்தரவு‘ என்கிற தகவலை எதற்கும் வீட்டில் சொல்லி விடலாம் என்று தன் மகன் கோபியிடம் முழு விவரத்தையும் சொல்லி, பஸ்ஸுக்குக் காசு கொடுத்து அவனை அனுப்பி வைத்தார் தாயார் கிரிஜா. இதன் நடுவே கோயில்களை எல்லாம் தரிசனம் செய்து விட்டு கோபி கிளம்பிப் போன பின் வந்த, ஹைதராபாத் மூர்த்திக்கு விஷயத்தைச் சொல்லி அவருக்கு விடை கொடுத்து அனுப்பியாயிற்று.
ஸ்ரீமடத்துச் சிப்பந்தி ஒருவர் கிரிஜாவிடம் வந்து, ‘ஆகாரம் பண்ணலாம், வாங்கோ‘ என்று அழைக்க… அனைவரும் பின் தொடர்ந்தனர்.
அன்று இரவு சுமார் பத்தரை மணிவாக்கில் தன் பணி முடித்து (சென்னையில்) வீட்டுக்கு வந்த சீனிவாச ஐயரின் மூத்த மகன் சுந்தர்ராமனுக்கு அதிர்ச்சி (தற்போது இவருக்கு வயது 71).
சென்னையில் இருந்து காலையில் காஞ்சிபுரம் புறப்பட்டுப் போன பெற்றோர் மற்றும் தம்பிகள் எவரும் இன்னும் வீடு திரும்பவில்லையே… என்ன காரணமாக இருக்கும் என்று சுந்தர்ராமன் குழம்பிக் கொண்டிருந்தபோது அவரது தம்பி கோபி சரியாக வீட்டுக்குள் நுழைந்தான். வந்தவன் எல்லா விவரத்தையும் ஒரே மூச்சில் சொன்னான்.
இதைக் கேட்ட சுந்தர்ராமனுக்குத் தன் தந்தையாருக்குப் பார்வை கிடைப்பதில் பெரியவா காட்டும் அக்கறையை நினைத்து சந்தோஷப்பட்டாலும், இது சாத்தியமா என்கிற கேள்வி திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. காரணம் – தந்தையுடன் பல கண் மருத்துவமனைகளுக்குச் சென்று வந்த அனுபவம் சுந்தர்ராமனுக்கு உண்டு. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த நெகட்டிவ் பதிலை எப்படி எல்லாம் அவர்கள் விளக்கிச் சொன்னார்கள் என்பதில் இருந்து மருத்துவமனை கொடுத்த ரிப்போர்ட் அனைத்துமே அத்துப்படி.
பெரியவா மேல் அபார நம்பிக்கை திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்துக்கு உண்டாயிற்றே! எனவே, ‘பெரியவா சொன்னால், அதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது‘ என்று தீர்மானமாக நம்பிய சுந்தர்ராமன், ‘சரி… நாளை விடிகாலையில் நான் காஞ்சிபுரம் பொறப்பட்டுப் போறேன்‘ என்று தம்பியிடம் சொன்னார்.
அதன்படி மறுநாள் அதிகாலை சீக்கிரம் விழித்தெழுந்தார். குளித்து முடித்து தன் தந்தையார் கண் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனை ரிப்போர்ட்டுகளையும் – ஒரு சின்ன பேப்பர்கூட விடாமல் – ஒரு ஃபைலில் போட்டு எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் புறப்பட்டார் சுந்தர்ராமன்.
காலை சுமார் ஒன்பது மணி இருக்கும். அன்றைக்கு ஸ்ரீமடத்தில் ஓரளவு பக்தர்கள் கூட்டம் தென்பட்டது. ‘ஜய ஜய சங்கர‘ கோஷத்துடன் பக்தி மணம் கமழ்ந்தது. மிகவும் காஷுவலான ஒரு பொஸிஷனில் பெரியவா அமர்ந்து அருகில் இருந்த ஒரு பக்தருடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
சீனிவாச ஐயர், கிரிஜா ஆகியோர் பெரியவாளுக்கு முன்பாக அமர்ந்திருந்தனர். அப்போது சுந்தர்ராமனைப் பார்த்து, “வா, திருவள்ளூர் ராமசந்திர ஐயரின் கொள்ளுப் பேரனா நீ?“ என்று ஆச்சரியம் விலகாமல் கேட்டார் மகா பெரியவா.
தலை அசைத்த சுந்தர்ராமன், உடனே பெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தரையில் இருந்து எழுந்தவர், ‘அப்பாவுக்குக் கண் ஆபரேஷன் பண்ணலாம்னு பெரியவா அபிப்பிராயப்பட்டேளாம். இதெல்லாம் மெட்ராஸ்ல இருக்கிற டாக்டர்ஸ் அப்பவாவை செக் பண்ணி, ‘இனிமே பார்வை வர்றதுக்கு வாய்ப்பே இல்லை‘னு சொல்லிக் கொடுத்த ரெக்கார்ட்ஸ்‘ என்று சொல்லி விட்டு அந்த ஃபைலை பெரியவாளின் பார்வைக்காக அவருக்கு முன்னே வைத்தார் சுந்தர்ராமன்.
அந்த ஃபைலைப் பெரியவா பார்க்க வேண்டும் என்பதற்காக அதன் மேல் போடப்பட்டிருந்த முடிச்சைப் பிரித்து, எடுத்துப் படிப்பதற்கு வசதியாக வைத்தார் சுந்தர்ராமன்.
தன் வலக் கையால் ‘வேண்டாம்‘ என்பதாக சுந்தர்ராமனுக்கு ஜாடை காண்பித்தார் பெரியவா. அதாவது, இந்த ஃபைல், பேப்பர் கட்டு – இதெல்லாம் வெச்சுண்டு ஒண்ணும் பண்ண வேண்டாம் என்பது அதன் பொருள். பிறகு, தன் இடக் கையால் அந்த ஃபைலை ஓரிரு இன்ச் தொலைவுக்குத் தூரத் தள்ளினார். அந்த ஃபைலின் மீது பெரியவா பார்வை பதியவே இல்லை.
பெரியவா சந்நிதானத்தில் கூடி இருந்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் இதை வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தது.
அத்தனை டாக்டர்கள் கொடுத்த ஒட்டுமொத்த மருத்துவ ரிப்போர்ட்டுகளைப் பெரியவா சீண்டக்கூட இல்லை. கூட்டத்தினரிடையே நிமிர்ந்து பார்த்தார். பார்வையை இங்கும் அங்கும் ஓட்டினார். பிறகு, அங்கு நின்றிருந்த ஒரு அன்பரைத் தன் இடக்கை விரல் ஒன்றை நீட்டித் தன் அருகே வருமாறு சைகை செய்தார். அழைப்புக்கு உள்ளான நபர் மிகுந்த பவ்யமாக பெரியவா முன்னால் வந்து நின்றார்.
தன் முன்னால் வந்து நின்றவரை தீர்க்கமாகப் பார்த்தார் பெரியவா. பிறகு அவரிடம், ‘இவனுக்குக் கண் ஆபரேஷன் பண்ணணும். நீதான் பண்ணணும்‘ என்றார் உத்தரவாக.
வந்து நின்றவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன்னைப் பார்த்துதான் சொல்கிறாரா அல்லது தனக்குப் பின்னால் நிற்கும் வேறு எவரையாவது பார்த்துப் பெரியவா சொல்கிறாரா என்கிற சந்தேகம் அந்த அன்பருக்கு வந்தது. பின்னால் திரும்பியும் பார்க்கச் செய்தார்.
இவருடைய குழப்பத்தைக் கண்ட பெரியவா, ‘உன்னைத்தான் சொல்றேன். நீ கண் டாக்டர்தானே? நீதான் இவனுக்கு ஆபரேஷன் பண்ணணும்‘ என்றார் மீண்டும்.
பக்தர்கள் கூட்டம் இந்த நிகழ்வை மிகவும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. பெரியவா சந்நிதியில் அவ்வப்போது இது போன்ற அற்புதங்கள் நிகழும் என்பதை அறியாதவர்களா அவர்கள்!
அப்போதுதான் சுந்தர்ராமன் – கண் டாக்டர் என்று பெரியவாளால் அடையாளம் காண்பிக்கப்பட்ட அந்த பக்தரை உற்றுப் பார்க்கிறார். அந்தக் கண் டாக்டரின் பெயர் – பாலசுப்ரமணியன்.
டாக்டர் பாலசுப்ரமணியனுக்கு ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. ‘ஏதோ ஹை லெவல்லல – பெரிய பெரிய ஆஸ்பத்திரி போயும் இந்த கண் பிராப்ளம் முடியல போலிருக்கு. அதான் பெரியவாகிட்ட வந்திருக்கு.‘
ஒரு கட்டத்தில் சுந்தர்ராமனுக்கு பயமாகக்கூட இருந்தது. ஆனால், இதை எப்படிப் பெரியவாளிடம் வெளிப்படுத்துவது? பரப்பிரம்மத்தின் ஆணைக்கு நாம் பதில் பேச முடியுமா?
என்றாலும், ஓரிரண்டு அடி முன்னால் வைத்து நடந்து டாக்டர் பாலசுப்ரமணியனை நெருங்கினார் சுந்தர்ராமன். மெள்ள அவரிடம், “ஃபைலைப் பார்த்தேளா? மெட்ராஸ்ல எத்தனை டாக்டர்ஸ் தெரியுமா? எல்லாருமே சொல்லி வைச்சாப்போல ‘உங்க அப்பாவோட கண்ல ஒளி வர்றதுக்கு வாய்ப்பே இல்லை‘னு எழுதிக் கொடுத்திருக்கா. காலம் முழுக்க அவர் இப்படியேதான் இருக்கணும்னு அந்த ரிப்போர்ட் சொல்றது. எங்க அப்பாவோட விதி“ என்றார் சன்னமாக.
டாக்டர் பாலசுப்ரமணியனுக்குத் தயக்கமும் குழப்பமுமாகத் தவித்தார். பெரியவா உத்தரவிடுகிறார். ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டியவரின் பையனோ, சவால் விடுவது போல் பேசுகிறார்.
கண் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டிய சீனிவாச ஐயர், எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். பெரியவாளின் திருநாமத்தை, காயத்ரி மந்திரம் போல் மனதுக்குள்ளே உச்சரித்துக் கொண்டிருக்கிறார். பெரியவாளின் திருவிளையாடல் மகனுக்குப் புரியவில்லை என்றாலும், தந்தைக்குப் புரியாதா?
சீனிவாச ஐயரின் மனைவியான கிரிஜா, பெரியவா திருவருளால் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறார். சுந்தர்ராமன் ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறார்.
சுவாரஸ்யமான ஒரு சினிமா காட்சியை நேரில் பார்ப்பது போல் அங்கு கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன ஆகுமோ என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
சற்று நேரத்துக்கு எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த ருத்திராட்சத்தைச் சரசரவென்று உருட்டிக் கொண்டிருந்தார் பெரியவா. பேரமைதி நிலவியது அங்கே.
அந்த சூழ்நிலையின் அமைதியைப் பெரியவாதான் ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு உடைத்தார்.
டாக்டர் பாலசுப்ரமணியனை தீர்க்கமாகப் பார்த்தார். ‘நான் சொல்றேன். நீ பண்ணு.‘
அவ்வளவுதான். டாக்டர் பாலசுப்ரமணியன் முகத்தில் ஒரு திடீர் பிரகாசம். அது மகானின் அருள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
சுந்தர்ராமன் உட்பட அங்கே கூடி இருந்த அனைவரும் இந்த வித்தியாசமான காட்சியைக் கண்டனர்.
டாக்டர் பாலசுப்ரமணியன், பெரியவாளின் அருகே வந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். பெரியவா பிரசாதம் கொடுத்தார்.
பிறகு சுந்தர்ராமனைப் பார்த்து, ‘வாங்க, உங்க அப்பாவைக் கூட்டிக்கிட்டு… என் கிளினிக் போகலாம்‘ என்று கன கம்பீரமாகச் சொன்னவர், வேக வேகமாக வெளியே நடந்தார்.
டாக்டரைத் தொடர்ந்து வெளியே நடந்தது சீனிவாச ஐயரின் குடும்பம்.
இவர்கள் நடந்து செல்வதை ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
இது நடந்தது 1969-ஆம் வருடம் நவம்பர் மாதம். சாலையில் இறங்கி நடக்கும்போது டாக்டரிடம் ஒரு புது வேகமும் தெம்பும் காணப்பட்டது.
இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி இருந்த தன் கிளினிக்கை அடைந்தார் டாக்டர் பாலசுப்ரமணியன். வெகு சாதாரணமாகத் தோற்றம் அளித்தது அந்த கிளினிக். கீழே தரைத் தளத்தில் கன்ஸல்டேஷன் மற்றும் ஒரு சில படுக்கைகள். மாடியில் சுமாரான வசதியுடன் பெயர் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு ஆபரேஷன் தியேட்டர்.
தனது கிளினிக்குக்குள் நுழைந்த டாக்டர் பாலசுப்ரமணியன் கன்ஸல்டேஷன் அறைக்குள் சீனிவாச ஐயரை அமர வைத்தார். அவருடைய மனைவியையும் மற்றவர்களையும் வெளியே காத்திருக்கச் சொன்னார். ஒரு சில பரிசோதனைகளைச் செய்து முடித்து விட்டுத் தன் பணியாளர் ஒருவரை அழைத்தார். தரை தளத்தில் உள்ள ஓர் அறைக்குள் சீனிவாச ஐயரை அனுமதிக்குமாறு சொன்னார். அதன்படி சீனிவாச ஐயரை அழைத்துச் சென்றனர். ‘நாளையே சீனிவாச ஐயரின் வலக் கண்ணில் ஆபரேஷன் செய்து விடலாம்‘ என்று கிரிஜா மற்றும் சுந்தர்ராமனிடம் சொல்லி விட்டுப் போனார் டாக்டர்.
வீட்டை அப்படியே போட்டு விட்டுக் குடும்பப் பெண்களால் இன்னொரு இடத்தில் இருக்க முடியுமா? எனவே, மனைவி கிரிஜாவும் அவருக்குத் துணையாக மகன் ஜெயராஜும் சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்தனர். சுந்தர்ராமனுக்கும் லீவு கிடைக்காததால், சென்னை திரும்ப வேண்டி இருந்தது. நல்லவேளையாக கோபி வந்திருந்தான். எனவே, சீனிவாச ஐயரின் துணைக்கு மகன் கோபியை இருக்க வைத்து விட்டு அனைவரும் சென்னை திரும்ப முடிவெடுத்தனர். இரவு உணவு மற்றும் சில அயிட்டங்களை வாங்கிக் கொடுத்து விட்டு அனைவரும் சென்னை புறப்பட்டனர்.
டாக்டர் பாலசுப்ரமணியன் சொல்லி இருந்தபடி வலக் கண்ணுக்கு முதலில் ஆபரேஷன் நடந்தது. சுமார் மூன்று மணி நேரம் இது நடந்தது. துணைக்கு இருந்த கோபி, ‘நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து அப்பாவுக்குக் கண்பார்வை திரும்ப வேண்டும்‘ என்று மகா பெரியவாளை மானசீகமாக வேண்டிக் கொண்டார்.
ஆபரேஷன் முடிந்ததும் வெளியே வந்த டாக்டர், இருவரையும் பார்த்து, ‘கவலை வேண்டாம். பெரியவா ஆசியுடன் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சு. மூன்று நாட்கள் அவரோட கண் கட்டைப் பிரிக்கக் கூடாது. அதற்கப்புறம் பிரிச்சா, அவர் இந்த உலகத்தை ரசிக்க முடியும். இன்னும் மூன்று நாட்களும் அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு‘ என்று சொல்லி விட்டுப் போனார்.
தகவல் கேள்விப்பட்ட சீனிவாச ஐயரின் உறவினர்கள் வந்து பார்த்து விட்டுப் போனார்கள்.
சீனிவாச ஐயரின் கண் கட்டைப் பிரிக்க வேண்டிய மூன்றாவது நாள் வந்தது. பகல் வேளையில் டாக்டர் பாலசுப்ரமணியனே வந்து கட்டைப் பிரிப்பதாகச் சொல்லி இருந்தார். டாக்டர் கட்டைப் பிரிக்கப் போகிற நேரம் பார்த்து திடீரென வாத்திய சத்தமும் ‘ஜய ஜய சங்கர‘ கோஷமும் தெருவில் எங்கோ ஒரு மூலையில் இருந்து சன்னமாகக் கேட்டது. ‘என்னது… இந்த வேளையில் பெரியவா இங்கே வந்து கொண்டிருக்கிறாரா? அவர் வருகிற வேளையில்தானே இப்படி இருக்கும்?‘ என்று ஆர்வமுடன் கோபி வெளியே வந்து பார்த்தார்.
ஆம்! உலகமே கொண்டாடும் அந்த தெய்வம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தது. கலவைக்குச் சென்றிருந்த பெரியவா, அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்துக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அப்படியே வேக வேகமாகத் தன் தந்தையார் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்து அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார் கோபி.
சீனிவாச ஐயருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ‘கோபி… டாக்டர் வந்துட்டாரா?‘ என்று கேட்டார் படபடப்பாக. ‘வந்துட்டார்ப்பா… இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க கட்டைப் பிரிச்சுடுவார்‘ என்று சொன்னார் கோபி. ‘டேய் கோபி… ஒண்ணு பண்ணுடா… எப்படியும் கட்டை இன்னிக்குத்தான் பிரிக்கப் போறார். கட்டைப் பிரிச்ச உடனே நான் முதல்ல என் தெய்வத்தைப் பாக்கணும்னு பிரியப்படறேன். டாக்டர்கிட்ட இதைச் சொல்லி அனுமதி வாங்கறியா? போ, உடனே‘ என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் உத்தரவு போட்டார்.
வாஸ்தவம்தானே! இன்னும் சிறிது நேரத்தில் சீனிவாச ஐயருக்கு மகா பெரியவாளின் பரிபூரண அருளால் ஒரு கண் பார்வை வரப் போகிறது. எத்தனை வருடங்களாகப் பார்வை இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று பல வருடங்கள் கழித்து ஒரு கண்ணுக்குப் புத்துயிர் கிடைக்கிறதென்றால், அதுவும் இந்த மகானின் ஆசியுடன் கிடைக்கிறதென்றால், அது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இந்த கட்டைப் பிரித்ததும், முதன் முதலாக மகா பெரியவாளையே தரிசிப்பது என்பது எத்தனை சுகம். எனவேதான், மனதளவில் இதை நினைத்ததுமே சீனிவாச ஐயர் குதூகலமானார்.
மகன் கோபி, தந்தையின் ஆசையைக் கேட்டு நெகிழ்ந்து போனார். ‘சரிப்பா… இதோ, டாக்டர்கிட்டயே கேட்டுட்டு வர்றேன்‘ என்று புறப்பட்டு, டாக்டர் பாலசுப்ரமணியனின் அறைக்குள் நுழையப் போனதுதான் தாமதம்.
பெரியவா யாத்திரை கிளினிக்கின் அருகே நெருங்கி விட்டதை, வாத்திய கோஷங்கள் உணர்த்தின. வேத கோஷம் கணீரென்று கேட்டது. ‘சங்கர‘ கோஷம் தெருவையே அதிர வைத்தது.
தன் வேகமான நடையால் விறுவிறுவென்று நடந்த பெரியவா, அந்த கிளினிக்கைக் கடக்கப் போகும் முன் ஒரு கணம் பொசுக்கென்று நின்றார். கிளினிக்கைத் திரும்பிப் பார்த்தார். ஒரு சிஷ்யனை அழைத்தார். ‘ஏண்டா, திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயருக்கு இங்கே கண் ஆபரேஷன் நடந்ததே… எப்படி இருக்கான் அவன்?‘ என்று கேட்டுக் கொண்டிருந்தபோதே, கிளினிக்கில் இருந்து டாக்டர் பாலசுப்ரமணியன் மகா பெரியவாளை நோக்கி வேகமாக நடந்து வந்தார். அவரை நெருங்கி, அந்த ஜகத்குருவுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார்.
இதற்குள் கோபியும், கிளினிக் ஊழியர் ஒருவருமாகச் சேர்ந்து சீனிவாச ஐயரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வந்தனர். பெரியவாளின் அருகே வந்ததும், அவர்கள் அப்படியே நின்றனர். ‘என்ன, திருவள்ளூர் ராமசந்திர ஐயர் ஆத்து மாப்பிள்ளை… எப்படி இருக்கேள்?‘ என்று மகா பெரியவா கணீரென்று திருவாய் மலர்ந்து கேட்டதும்தான் தாமதம். தன் இரு கைகளையும் உயரே குவித்து, அந்த மகானை ஆத்மார்த்தமாக வணங்–கினார் சீனிவாச ஐயர். ‘என்ன டாக்டர்வாள்.. எப்படி இருக்கார்? பார்வை வந்துடுத்தோ?‘ என்று பெரியவா அவரைப் பார்த்துக் கேட்க, ‘அதான் பெரியவா… உங்களுக்கு முன்னாடிதான் கண் கட்டை அவிழ்க்கணும்னு பிடிவாதமா இருக்கார். அவரோட கண் கட்டை அவிழ்த்த உடனே உங்களைத்தான் முதல்ல பாக்கணுமாம்‘ என்று டாக்டர் சொல்ல… சீனிவாச ஐயர் அதை தலையாட்டி ஆமோதித்தார். பெரியவாளும் புன்னகையுடன் தலை அசைக்க… அவரது கட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் டாக்டர்.
தன் கண் கட்டில் டாக்டர் கைவைத்ததும், சீனிவாச ஐயருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. வேத கோஷம் அவரது செவிகளை நிறைத்த வண்ணம் இருந்தது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அந்த தெய்வத்தைத் தன் ஒரு கண்ணால் தரிசிக்கப் போகிறார். சீனிவாச ஐயரின் இந்த பக்தியை நினைத்து வியந்த அந்த பக்தர்கள் கூட்டமும் அவர் கண் கட்டு பிரிக்கப்படுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தது. வலக் கண்ணில் கட்டப்பட்டிருந்த கட்டு முழுதும் பிரிக்கப்பட்ட பிறகு சீனிவாச ஐயரைப் பார்த்து டாக்டர், ‘கண்ணை ரொம்பவும் ஸ்டெய்ரென் பண்ணாம நேரா பாருங்க. எந்த தரிசனம் வேணும்னு தவிச்சீங்களோ, அந்த தரிசனம் உங்களுக்காக – எதிர்ல – காத்துக் கொண்டிருக்கு‘ என்று சன்னமாகச் சொன்னார்.
கண்ணுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், மிகவும் இயல்பாக வலக் கண்ணால் சீனிவாச ஐயர் நேர் பார்வை பார்க்கவும் அங்கே புன்னகையோடு அந்தப் பரப்பிரம்மம் நின்று கொண்டிருந்தது. சீனிவாச ஐயரின் கட்டு பிரிக்கப்பட்டவுடன் அவருக்கு முதல் தரிசனம் தர வேண்டும் என்பதற்காகவோ என்னவோ… கலவையில் இருந்து இன்று புறப்பட்டு வந்திருக்கிறது போலும்!
தன்னைத் தேடி வந்து இத்தகைய தரிசனம் தரும் மகா பெரியவாளைக் கண்ணாரக் கண்ட மாத்திரத்தில் நெக்குருகிப் போனார் சீனிவாச ஐயர். ‘குருதேவா… குருதேவா…‘ என்று குரல் தழுதழுத்தார். இரண்டு கைகளையும் விரித்துக் காட்டிக் கதறுகிறார். கைகள் நடுங்குகின்றன.
புன்னகைக்கிறார் பெரியவா.
பிறகு டாக்டர் பாலசுப்ரமணியனைப் பார்த்து, ‘அடுத்த கண்ணுக்கும் ஆபரேஷனை உடனே ஆரம்பிச்சிடு‘ என்று சொல்லி விட்டு, வேகமாக நடக்க ஆரம்பித்தார் பெரியவா. கோஷத்துடன் அந்த கிளினிக்கையும் தெருவையும் கடந்து ஸ்ரீமடத்தை நோக்கிப் போனது பக்தர்கள் கூட்டம்.
அதன்படி அடுத்து வந்த ஒரு சில வாரங்களில் சீனிவாச ஐயரது இடக் கண்ணுக்கும் ஆபரேஷன் செய்யப்பட்டது. சுமார் ஆறு மாதங்கள் சீனிவாச ஐயர் காஞ்சியிலேயே இருந்து இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டார். இவருக்கு உதவியாக இவரது மகன்கள் தவிர சீனிவாச ஐயங்கார் என்ற பால்ய காலத்து நண்பரும் உடன் இருந்து சீனிவாச ஐயரைக் கவனித்துக் கொண்டார்.
மகா பெரியவாளின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும் அந்த டாக்டர் செய்தது மிகப் பெரிய சாதனை. சீனிவாச ஐயரது இரு கண்களிலும் ஆபரேஷன் ஆன பின், தங்கள் கண்ணீரால் அந்த டாக்டருக்கு நன்றி சொன்னார்கள். இந்த ஆபரேஷனுக்கும் சிகிச்சைக்கும் ஒரு நயா பைசாகூட சீனிவாச ஐயரது குடும்பத்தினரிடம் இருந்து டாக்டர் வாங்கவில்லை என்பதையும் இங்கே பெருமிதத்துடன் சொல்ல வேண்டும். மகா ஸ்வாமிகள் தானே பார்த்து அனுப்பி வைத்த பேஷண்ட் ஆயிற்றே!
காஞ்சியில் சீனிவாச ஐயரின் குடும்பம் வைத்தியத்துக்காகத் தங்கி இருந்த நாட்களில் தினமும் ஸ்ரீமடத்துச் சாப்பாடுதான் வந்து சேர்ந்தது.
சீனிவாச ஐயரையும் சீனிவாச ஐயங்காரையும் சேர்த்துப் பார்க்கும்போது, ‘ஹரியும் சிவனும் சேர்ந்து வந்துட்டாப்ல இருக்கே‘ என்று நகைச்சுவை யாகப் பேசுவாராம் பெரியவா.
இரண்டாவது கண் ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்தது. ஒரு நாள் பெரியவா ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இருக்கும் பழைய வீடு ஒன்றில் தங்கி இருந்தார். அப்போது அங்கே மின்சார வசதி எல்லாம் கிடையாது.
மாலை வேளை கடந்ததும், ஒரு ஹரிக்கேன் விளக்கு மட்டும் பிரகாசமாக இருக்கும். அன்றைய தினம் பெரியவா தரிசனத்துக்காக சீனிவாச ஐயர் வந்திருந்தார். அவரை அருகே அழைத்து, ஒரு சின்ன புத்தகத்தைக் கையில் கொடுத்தார் பெரியவா.
‘எதுக்கு விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தை என்கிட்டே கொடுத்திருக்கேள் பெரியவா?‘ என்று அந்த புத்தகத்தின் முகப்பைப் பார்த்து விட்டு பவ்யமாகக் கேட்டார் சீனிவாச ஐயர்.
‘இந்த சந்நிதில இதைப் படியேன். கேக்கறேன்‘ என்றார் பெரியவா.
சீனிவாச ஐயருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்றதே பாக்கியம். அதுவும் பெரியவா கேட்டு நான் சொல்லணும்னா அது எப்பேர்ப்பட்ட பாக்கியம்‘ என்று புளகாங்கிதம் அடைந்தவர் அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்துப் படித்தார்.
ஏற்ற இறக்கத்துடன் அழகாக சீனிவாச ஐயர் சொல்வதை – பெரியவா உட்பட ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமே கேட்டுப் பரவசம் அடைந்தது.
சீனிவாச ஐயரின் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் வெகு சிரத்தையாக முடிந்ததும், தன்னை நமஸ்கரித்த அவருக்குப் பிரசாதம் தந்து ஆசிர்வதித்தார். பிறகு, ஸ்ரீமடத்தின் பிரதான சிப்பந்தி ஒருவரைக் கூப்பிட்டு, ‘இப்ப எதுக்கு அவனை விஷ்ணு சஹஸ்ரநாமம் இங்கே படிக்கச் சொன்னேன்னு ஒனக்குத் தெரியுமோ?‘ என்று கேட்டார் பெரியவா. அதற்கு அந்த சிப்பந்தி தன் விரல்களால் வாயைப் பொத்திக் கொண்டு, ‘பெரியவா விஷயம்லாம் எனக்கு அவ்வளவா புரியாது‘ என்றார் மெதுவாக.
‘சீனிவாச ஐயரோட ரெண்டு கண்ணும் பூரணமா குணமாயிட்டதானு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குத்தான் பொடிசா எழுத்து இருக்கிற விஷ்ணு சஹஸ்ரநாம பொஸ்தகத்தை அவன் கையில் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்டேன். ஜமாய்ச்சுட்டான்‘ என்று சொல்லி, இடி இடியெனச் சிரித்தாராம் மகா பெரியவா.
சீனிவாச ஐயருக்கு ஆபரேஷன் நடந்தது 1969-ஆம் வருடம். அதன் பின் பரிபூரண நலத்துடன் இருந்து கடந்த 2007-ல் காலமானார்.
திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பமே பெரியவாளுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறது. எப்படி அது போன்ற ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது பகவானின் சங்கல்பம்.
எப்படி மொட்டைமாடியில் இருந்து தவறி விழுந்த விசாகனை – எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் பெரியவா காப்பாற்றினாரோ, அதுபோல் அவரது சகோதரர் கோபியையும் ஒரு முறை காப்பாற்றி இருக்கிறார் பெரியவா.
தனது இரண்டு கண்ணும் குணமான பின் சில மாதங்களுக்குக் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்திலேயே தங்கி இருந்தார் சீனிவாச ஐயர். அப்போது ஒரு முறை பெரியவாளைத் தரிசிக்க மகன் கோபியுடன் சென்றிருந்தார். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு பெரியவாளிடம் இருந்து எழுந்து புறப்பட யத்தனித்தார் சீனிவாச ஐயர். கோபியும் தந்தையின் கைப்பிடித்து எழுந்தான். அப்போது இந்த இருவரையும் பார்த்து, கையசைத்து அமரச் சொன்னார் பெரியவா.
புறப்பட இருந்த இருவரும் அமர்ந்தார்கள். புறப்படுவதற்கு பெரியவா உத்தரவு கொடுப்பார் என்று காத்திருந்தார்கள். ஆனால், பெரியவாளிடம் இருந்து உத்தரவு வரவில்லை. இத்தனைக்கு அங்கே பெரிய அளவு பக்தர்கள் கூட்டமும் இல்லை. அவ்வப்போது இவர்களையும் பார்த்துக் கொண்டேதான் இருந்தார் பெரியவா. ஆனால், உத்தரவு ஆகவில்லை. சரியாக ஒரு மணி நேரம் கழித்து இருவரையும் பார்த்து சைகையால் உத்தரவு கொடுத்தார் பெரியவா. பிரசாதம் பெற்றுக் கொண்டு இருவரும் கிளம்பினர்.
அதன் பிறகு, தன் மகன் கோபிக்கு ஓர் ஆபத்து நேர இருக்கிறது என்பதை சீனிவாச ஐயர் எப்படி அறிவார்?
பெரியவா உத்தரவு கொடுத்ததும் அங்கிருந்து எழுந்தனர் சீனிவாச ஐயரும் அவரது மகன் கோபியும். கண்களில் பிரகாசம் ததும்ப பெரியவாளை இரு கரம் கூப்பி வணங்கி, அவருக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு மகன் கோபியின் கைப்பிடித்து ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயம் நோக்கி வேகமாக நடந்தார் சீனிவாச ஐயர்.
தன்னை ஏன் ஒரு மணி நேரம் இங்கே அமர வைத்தார் என்று சீனிவாச ஐயர் அதன் பிறகு யோசிக்கவே இல்லை. மகா பெரியவா என்ன சொன்னாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் அல்லவா? மகான்களின் திருவாக்கை மீறலாமா? எனவேதான், எதுவும் பேசாமல் அந்த ஒரு மணி நேரமும் அங்கேயே அமர்ந்து ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ நாமத்தை உச்சரித்த வண்ணம் இருந்தார் சீனிவாச ஐயர். ஏன் ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார் என்பதற்கான காரணம் சற்று நேரத்தில் அவருக்குப் புரிய வந்தது.
மகன் கோபியின் கையைப் பிடித்துக் கொண்டு சர்வ தீர்த்தம் என்னும் திருக்குளத்தின் படிக்கட்டுகளில் நடந்து ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்துக்குச் சென்று கொண்டிருந்தார் சீனிவாச ஐயர். வேகமாக நடந்து செல்லும்போது இவரது நடைக்கு ஈடு கொடுக்க முடியாத கோபி ஒரு கட்டத்தில் தந்தையின் கைப்பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். காமாட்சியைத் தரிசிக்கச் செல்லும் மும்முரத்தில் இதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை சீனிவாச ஐயர். மகன் கோபி தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்ற நினைப்பிலேயே வேகமாக நடையைப் போட்டார்.
தனித்து விடப்பட்ட கோபி, சர்வ தீர்த்தக் குளத்தின் படிக்கட்டுகளில் சலனமே இல்லாமல் இருக்கும் அந்தத் தெள்ளிய நீரைப் பார்த்தவாறு நின்றிருந்தான். தனக்கு அங்கே ஓர் ஆபத்து காத்திருக்கிறது என்பதை அவன் அறியவில்லை. ஸ்ரீகாமாட்சி அம்மனைத் தரிசிப்பதற்கு முன் தன் கால்களை நனைத்துச் செல்லலாம் என்று ஆசைப்பட்டான் கோபி. அதனால்தான், தந்தையிடம் இருந்து தன் பிடியை விடுவித்துக் கொண்டானோ என்னவோ… ‘மகன் பின்னால் மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறான்‘ என்கிற நினைப்பில் ‘அவன் வரட்டுமே‘ என்று குளக்கரையின் ஓர் ஓரமாக நின்ற வாக்கிலேயே காத்திருக்கத் தொடங்கினார் சீனிவாச ஐயர். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ திருநாமத்தை அவரது நா உச்சரித்தபடியே இருந்தது.
குளத்து நீரில் தன் கால்களை நனைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறுவர்களுக்கே உரித்தான ஓர் ஆர்வத்துடன் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தான் கோபி. ஒரு படி… அடுத்த படி என்று கோபி இறங்கிக் கொண்டிருந்தபோது லேசாகப் பாசி பிடித்தாற் போல் இருந்த ஒரு படி கோபியின் கால்களை சட்டென்று வாரி விட்டது. அவ்வளவுதான். நிலை தடுமாறி பொசுக்கென்று உருண்டு தண்ணீருக்குள் விழுந்தான் கோபி.
சிறுவனான அவன் சுதாரித்துக் கொள்வதற்குச் சற்றும் அவகாசம் இல்லாமல் ஒவ்வொரு படியாக வழுக்கி, நீரின் ஆழத்துக்குப் போய்க் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் சர்வ தீர்த்தத்தில் எவருமே தென்படவிலை. எவராவது இருந்தால்தானே கோபியைக் காப்பாற்ற முன்வர முடியும்? கோபி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து அவனது தந்தை சீனிவாச ஐயர் கண்களுக்குப் பட்டாலும், இவனால் குரல் கொடுக்க முடியவில்லை. தவிர, தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் அவன் அவ்வப்போது நீரின் வேகத்தால் மேலே உந்தப்பட்டான். அப்படி மேலே எழும்போது தன் இரு கைகளையும் நீர்மட்டத்துக்கு மேலே உயர்த்த முடிந்ததே
தவிர, தண்ணீரை விட்டு மீண்டு வெளியே வர முடியவில்லை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. எப்படியாவது தான் காப்பாற்றப்படுவோம் என்கிற நினைப்பு, கோபியை விட்டுப் போயே போய் விட்டது.
அப்போது சர்வ தீர்த்தத்தின் வழியே யதேச்சையாக இரு பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களும் ஸ்ரீகாமாட்சி அம்மன் தரிசனத்துக்குப் போய் கொண்டிருப்பவர்கள்தான் போலிருக்கிறது. ஆள் அரவமே இல்லாமல் காணப்படும் குளத்தில் வித்தியாசமாக இரு கைகள் மட்டும் மேலே உயர்ந்து நீருக்குள் யாரோ மூழ்கிக் கொண்டிருப்பது கண்டு கலவரம் ஆனார்கள் அந்த பக்தர்கள். யாரோ ஒரு சிறுவன் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தார்கள். வேக வேகமாக தீர்த்தத்தை நோக்கி ஓடி வந்தனர்.
இந்த இடைப்பட்ட நேரத்துக்குள் கோபிக்கு அப்படி ஒரு பலம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை… தண்ணீர் மட்டத்துக்குள் இவனை மேலும் மேலும் வழுக்கி உள்ளே தள்ளிய பாசி பிடித்த படிக்கட்டை இறுகப் பிடித்துக் கொண்டு தண்ணீருக்குள் இருந்து எழ முயற்சித்துக் கொண்டிருந்தான். எந்தப் படிக்கட்டு அவனை வழுக்கி விட்டதோ, அந்தப் படிக்கட்டையே தன் கைகள் உறுதியுடன் பிடிக்க முடிந்ததை உணர்ந்தான். திடீரெனத் தனக்குக் கிடைத்த இந்த சக்தியைக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறி, துவண்ட கொடியாக கரைக்கு மேலே வந்து பொத்தென்று விழுந்தான்.
அதற்குள் இந்த இருவரும் அவனை நெருங்கி, அப்படியே அள்ளித் தங்கள் மடியில் போட்டுக் கொண்டனர். கோபியை ஆசுவாசப்படுத்தினர். சர்வ தீர்த்தத்தின் ஒரு மூலையில் நின்றபடி இந்தக் காட்சியைக் காண நேரிட்ட சீனிவாச ஐயர், நிலைமையை ஒருவாறு உணர்ந்து பதறிப் போய் ஓடி வந்தார். தன் மகன் இருந்த கோலத்தைப் பார்த்துக் கதற ஆரம்பித்து விட்டார். பிறகு, காஞ்சி மகான் இருந்த திசை நோக்கி, ‘கருணை தெய்வமே… என் மகன் உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு மணி நேரத்துக்கு எங்களை உன் சந்நிதியில் காத்திருக்க வைத்தாயா? எங்கள் குடும்பத்தைக் காத்து வரும் கண் கண்ட தெய்வமே…. உனக்கு எப்படி என் நன்றியைத் தெரிவிப்பேன்?‘ என்று பெருங்குரல் எடுத்து விசும்ப ஆரம்பித்து விட்டார்.
கோபியையும் சீனிவாச ஐயரையும் தேற்றி அவர்களுக்கு ஆறுதல் சொன்ன பின் அங்கிருந்து அகன்றனர் அந்த இரு பக்தர்களும். சற்று நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்த கோபியை அழைத்துக் கொண்டு ஸ்ரீகாமாட்சியைத் தரிசனம் செய்யச் சென்றார் சீனிவாச ஐயர்.
மகனை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டு காமாட்சி சந்நிதியில் கண்ணீருடன் நின்றார் சீனிவாச ஐயர். ஒரு மணி நேரம் மகா பெரியவா சந்நிதியிலேயே அமர்ந்திருந்ததாலோ என்னவோ… அவரது ஆசியுடன் கோபி காப்பாற்றப்பட்டு விட்டான். யாரை எந்த வேளையில் தன் சந்நிதியில் இருந்து அனுப்ப வேண்டும் என்பது மகா பெரியவாளுக்குத் தெரியாதா, என்ன?!
அடுத்த முறை பெரியவாளைத் தரிசிக்க கோபி சிறிது காலத்துக்குப் பின் சென்றார். காமாட்சி அம்மன் கோயில் செல்லும்போது சர்வ தீர்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட நிகழ்வை விவரித்துக் கூறினார். புன்னகைத்த பெரியவா, ‘என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு‘ என்றார். தற்போது சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்து வருகிறார் கோபி.
மகா பெரியவாளின் ஒவ்வொரு செயலுக்கும் திருவாக்குக்கும் ஓர் அர்த்தம் உண்டு. அதை உணர்ந்து செயல்பட்டவர்கள், தங்கள் வாழ்வில் பெறற்கரிய இன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் சீனிவாச ஐயரும் ஒருவர்.
ஒரு நாள் சீனிவாச ஐயரும் அவரது நண்பருமன சீனிவாச ஐயங்காரும் மகா பெரியவாளுடன் ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலய வெளிப் பிராகாரத்தில் இருந்தனர். அப்போது மகா பெரியவா, “சீனிவாச ஐயர்வாள்… இங்கே வாரும்“ என்று அவரை மிகுந்த உற்சாகமாக அழைத்து பிராகாரச் சுவரில் இருந்த ஒரு சிற்பத்தைக் காண்பித்தார். “நன்றாகப் பார்த்துக் கொள், இந்தப் பிள்ளையார் சிற்பத்தை. இவர் பெயர் அன்னப்பட்டை பிள்ளையார். கையில் பாத்தியோன்னோ…. கவளம் சாதத்தை உருட்டி வெச்சிண்டிருக்கார்“ என்று பெரியவா சொல்ல… அந்தத் திருக்காட்சியைக் கண் குளிரத் தரிசித்தார் சீனிவாச ஐயர். கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
அதன் பின் அடிக்கடி தன் குடும்பத்தினரிடம் சொல்வாராம் சீனிவாச ஐயர் – ‘அன்னப்பட்டை விநாயகரைப் பெரியவா எனக்குக் காண்பித்த பின்னாடி சாப்பாட்டுக்கு எந்த ஒரு காலத்திலும் நான் கஷ்டப்பட்டதே இல்லை. எல்லாம் பெரியவா அருள்‘ என்று.
அதன்பின் பூரண நலத்துடன் இருந்து 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று இரவு மகன்கள் அனைவரோடும் அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் முடித்து, ‘எல்லோரும் சாப்பிடப் போங்கள்‘ என்று கூறி விட்டு, மகன் சிவகுமார் மீது லேசாகச் சாய்ந்தார் சீனிவாச ஐயர். கண்களை மூடினார். அதுதான் அவரது நிரந்தரமான பிரிவு.
சீனிவாச ஐயருக்கு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமே மகா பெரியவா அருளால் வந்தது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். சீனிவாச ஐயருக்குக் கண் ஆபரேஷன் ஆன பிறகு அவரால் எழுத்துக்களைப் படிக்க முடிகிறதா என்று பார்ப்பதற்காகத் தன் திருச்சந்நிதியில் விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். இவரும் தெளிவாகப் படித்து முடித்தார். பல வருடங்களுக்குப் பிறகு – சீனிவாச ஐயரின் உயிர் பிரியும் நேரத்திலும் இதே விஷ்ணு சஹஸ்ரநாமமே அவருக்குப் பெரும் கவசமாய் – ஆதரவாய் இருந்திருக்கிறது.