சீனிவாச ஐயரின் மூத்த மகன் சுந்தர்ராமன் (தற்போது சென்னை பெரம்பூர் வாசம்) சம்பந்தபட்ட இன்னொரு அனுபவம்… சுந்தர்ராமனின் தாயாரான ஸ்ரீமதி கிரிஜா சீனிவாசன் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் கைப்பட எடுத்துத் தந்த ஒரு பொக்கிஷத்தை இன்றளவும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார் சுந்தர்ராமன்.
அப்படி என்ன பொக்கிஷம் என்கிறீர்களா? அது ஒரு புத்தகம். தெய்வீக ஆற்றல் நிரம்பியது.
ஸ்ரீதாயுமானவரின் பாடல்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தை திருவள்ளூர் ராமசந்திர ஐயர் தான் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறார்.
சாட்சாத் சிவபெருமானின் ரூப ரகசியத்தைப் போற்றித் துதிக்கப்படும் பாடல் தொகுப்பு இது. முப்பத்துமூன்று பாடல்கள் அடங்கியது. திருவள்ளூர் ராமசந்திர ஐயர், ‘இந்தப் பாடலை எல்லோரும் பாராயணம் செய்ய வேண்டும். இந்தப் பாடல் வரிகளுக்கு சாட்சியாக இன்று சாட்சாத் பரமாச்சார்யர் நம் கண் முன்னே இருக்கிறார். பரமாச்சார்யர்தான் பரமேஸ்வரன்‘ என்பாராம் கண்களில் நீர் ததும்ப.
எனவே, திருவள்ளூர் ராமசந்திர ஐயரது மகன்கள் சுப்ரமண்ய ஐயரும், அவரது சகோதரர் வெங்கட்ராம ஐயரில் ஆரம்பித்து அவர்களது வீட்டுக் குழந்தைகள் வரை அனைவரும் இந்தப் பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்குக் கடும் போட்டியே நிலவுமாம். இந்தத் தகவலை தனது தாயார் ஒரு சந்தப்பத்தில் கூறியவுடன் சுந்தர்ராமனும் மிகுந்த ஆர்வமாக அந்தப் பாடல்களை மனப்பாடம் செய்தாராம்.
சாட்சாத் சிவபெருமானைக் குறித்து துதிக்கப்படும் இந்தப் பாடலின் வரிகள் அனைத்தும் மகா பெரியவாளுக்கும் பொருந்தி வருமாம். அத்தனை அற்புதமான பாடல் அது.
தன் திருச்சந்நிதியில் பெரியவா கன கம்பீரமாக வீற்றிருக்கும்போது அவருக்கு முன்னால் அமர்ந்து ‘ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் (தாயுமானவர் ஸ்வாமிகள் எழுதிய பாடல்களில் மொத்த 33 பாடல் அடங்கிய தொகுப்பு இது) பாடல்களை ராகத்துடன் பாடிப் பரவசப்படுவாராம் ராமசந்திர ஐயர். தாயுமானவர் ஸ்வாமிகளின் இந்தப் பாடல் வரிகளை மிகவும் ஆனந்தத்துடன் கேட்டு ரசிப்பாராம் பெரியவா. எனவே, இந்தப் பாடல்களைத் தன் குடும்பத்தினர் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்திருந்தார் ராமசந்திர ஐயர். அதன்படி சீனிவாச ஐயரின் மூத்த மகன் சுந்தர்ராமனுக்கும் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே இது அத்துப்படி. ராமசந்திர ஐயரது காலத்துக்குப் பிறகு இந்தப் பாடல்கள் அடங்கிய புத்தகம் இருக்கும் இடம் தெரியாமல் எங்கோ மறைந்து கொண்டு விட்டது. 1983-ஆம் ஆண்டில் வீட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது அந்தப் புத்தகம் சீனிவாச ஐயரின் துணைவியாரான கிரிஜாவுக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் பார்த்ததுமே பரவசப்பட்டுப் பழைய நினைவுகளுடன் புரட்டினார் கிரிஜா. அதில் ‘ஆகார புவனம் – சிதம்பர ரகசியம்‘ எனும் தலைப்பின் கீழ் வரும் 33 பாடல்களும் இருந்தது. தன் மூத்த மகன் சுந்தர்ராமனை பரபரப்புடன் அழைத்து, அவரிடம் இதைக் கொடுத்து மெய் சிலிர்ப்பான பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்திருக்கிறார். அப்போதுதான் சிறு வயதில் தான் இதை மனப்பாடம் செய்த நாட்கள் சுந்தர்ராமனின் நினைவுக்கு வந்தன.
‘இந்தப் பாடல் வரிகள் பாடப்படும் இடத்தில் மகா பெரியவா எனும் கருணை தெய்வம் பிரத்யட்சமாய் இருப்பார் என்பாரே நம் கொள்ளுத் தாத்தா… அது உண்மைதானா… நம் கொள்ளுத் தாத்தா பிரியப்பட்டுப் பாடும் இந்தப் பாடலை மகா பெரியவா இன்றைக்கும் நினைவு வைத்திருக்கிறாரா? இந்தப் பாடல்கள் பாடினால் அதைக் கேட்டு ஆனந்தப்படுவாரா? இதை என்றாவது ஒரு நாள் பரீட்சித்துப் பார்க்க வேண்டும்‘ என்கிற ஆவல் சுந்தர்ராமனுக்கு வந்தது. ‘பெரியவாளையே பரீட்சித்துப் பார்க்கப் போவது தேவைதானா?‘ என்று ஒரு மனம் சுந்தர்ராமனைத் தடுத்தாலும், இதைக் கேட்ட பின் பெரியவாளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல்தான் சுந்தரராமனுக்கு மேலோங்கி இருந்தது.
எனவே, கர்ம சிரத்தையுடன் அமர்ந்து, தன் நினைவில் இன்றைக்கும் நிழலாக இருக்கும் அந்த 33 பாடல்களையும் மீண்டும் மனப்பாடம் செய்யலானார் சுந்தர்ராமன். ஒரே வாரத்தில் இது மனப்பாடம் ஆயிற்று. இந்தப் பாடல்களைக் குறிப்பிட்ட ஒரு ராகத்தில்தான் பாடுவது வழக்கம். எனவே, அதே ராகத்தில் பாடிப் பாடிப் பழக்கப்பட்டார்.
அது 1984-ஆம் ஆண்டு. ஜனவரி மாதம். தைப்பொங்கல் தினம். ‘ஆகார புவனம் – சிதம்பர ரகசியம்‘ எனும் பாடல் தொகுப்பை மகா பெரியவாளுக்கு முன்னால் பாடிக் காண்பித்து அவரது ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்பதை அறிய வேண்டும் என்பதற்காக சென்னை மேற்கு சி.ஐ.டி.நகரில் தான் இருந்த வீட்டை விட்டுத் தன்னந் தனி ஆளாகப் புறப்பட்டார் சுந்தர்ராமன். அன்றைய தினம் சித்தூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் – காராம்பள்ளியில் (இந்த சம்பவம் நடந்தது காராம்பள்ளிதானா என்பதை சுந்தர்ராமனால் உறுதிப்படுத்த முடியவில்லை) மகா பெரியவா முகாமிட்டிருந்தார்.
திருப்பதி சென்று ஸ்ரீவேங்கடாசலபதியை தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து மகா பெரியவா தரிசனத்துக்காகக் கிளம்பினார் சுந்தர்ராமன். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்குக் காராம்பள்ளியை அடைந்தார். அங்கேயே ஓர் இடத்தில் குளித்து, அனுஷ்டானங்களை முடித்து விட்டு, பெரியவா தரிசனத்துக்காக வந்தார்.
திரளான ஜனம். பெரியவா தரிசனத்துக்காகப் பெரும் கூட்டம் அங்கே கூடி இருந்தது. சாதாரணமாகவே ஆந்திர தேசத்து அன்பர்களுக்கு மகா பெரியவா மீது அபரிமிதமான பக்தி உண்டு. தவிர சென்னை, திருச்சி, கும்பகோணம் போன்ற தமிழக நகரங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் பெரியவா தரிசனத்துக்காக இங்கே வந்து குவிந்திருந்தனர்.
மனப்பாடம் செய்து வைத்திருந்த தாயுமானவர் ஸ்வாமிகளின் பாடல்களை மகா பெரியவாளுக்கு முன்னால் அமர்ந்து பாடலாம் என்கிற ஆர்வத்துடன் அவர் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் இடத்துக்குச் சென்ற சுந்தர்ராமனுக்குப் பெரிய ஏமாற்றம். பெரியவா இருந்த அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது. பெரியவாளின் ஒரு சில சிஷ்யர்கள் பழுத்த பழமாக வெளியே நின்றிருந்தனர்.
ஆனாலும், பக்தர்கள் கூட்டம் அங்கிருந்து நகரவே இல்லை. இரண்டு கைகளையும் மாறி மாறி கன்னத்தில் அறைந்து கொண்டு, சாத்தப்பட்டிருந்த அந்தத் திருக்கதவத்தையே பார்த்தபடி, ‘கதவு திறக்காதா? மகானின் தரிசனம் கிடைக்காதா?‘ என்கிற ஏக்கத்தில் நின்றவாறு இருந்தனர். ‘ஜய ஜய சங்கர‘ கோஷத்தை முழங்கிக் கொண்டிருந்தனர். இந்தப் பக்தர்கள் கூட்டத்தோடு கூட்டமாக சுந்தர்ராமனும் நின்றிருந்தார். அவ்வப்போது திருக்கதவத்தையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
நிமிடங்கள் கரைந்தவாறு இருந்தாலும், இங்கு நின்று கொண்டிருக்கும் கூட்டம் நகர மறுக்கிறதே என்ற சிந்தனையுடன் மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த இரு சிஷ்யர்கள் இந்தக் கூட்டத்தின் முன் வந்து நின்றனர். ‘பெரியவா இப்ப மௌனத்துல இருக்கா. ஒரு வாரமாவே மௌனம் அனுஷ்டிக்கிறா. தவிர, தியானத்துல இருக்கா. எனவே, பெரியவாளை உடனடியா தரிசிக்க முடியாது. அடுத்த சங்கராச்சார்யரும் இளையவருமான ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இங்கே வந்திருக்கார். அவர் அதோ, அங்கே இருக்கார். இப்ப எல்லாரும் அங்கே போய் அவரை தரிசனம் பண்ணுங்கோ. பெரியவாளை அப்புறமா தரிசனம் பண்ணிக்கலாம்‘ என்றபடி உரத்த குரலில் சொன்னார்கள்.
அவ்வளவுதான். பொசுக்கென அந்தக் கூட்டத்தில் இருந்த முக்கால்வாசிப் பேர் ஓட்டமும் நடையுமாக ஸ்ரீஜயேந்திரர் வீற்றிருக்கும் இடம் நோக்கி நகர்ந்தனர். ‘சற்று நேரம் இங்கே இருந்தால், இவரை முதலில் தரிசித்து விடலாம்‘ என்கிற ஆவலுடன் ஒரு சிலர் மட்டும் நகர்வதற்கு மனம் இல்லாமல் அங்கேயே நின்றிருந்தனர். அவர்களையும் பார்த்து அந்த சிஷ்யர்கள், ‘முதல்ல அவரை தரிசனம் பண்ணிட்டு வாங்கோ. கொஞ்ச நேரம் ஆகும். எல்லாரும் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுத்தான் இங்கிருந்து கௌம்பப் போறேள். பெரியவா தரிசனம் கட்டாயம் உண்டு‘ என்று சொல்ல… எஞ்சி இருந்தவர்களும் ஒருவாறு சமாதானம் ஆகி, மெள்ள நகர்ந்து போனார்கள் – ஒருவரைத் தவிர! அவர்தான் – சுந்தர்ராமன்.
‘எஞ்சி இருக்கின்ற இந்த ஒருவரும் எப்படியும் அடுத்த ஓரிரு விநாடிகளில் நகர்ந்து போய் விடுவார்‘ என்பதாகத் தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டு அந்த இரு சிஷ்யர்களும் பெரியவா இருந்த அறையின் திருக்கதவத்தை வெகு ஜாக்கிரதையாக மெள்ளத் திறந்து கொண்டு உள்ளே போனார்கள். கதவை முன்பு போலவே சாத்திக் கொண்டார்கள்.
இப்போது அந்தத் திருச்சந்நிதி முன் வேறு எந்த ஒரு பக்தரும் இல்லை – சுந்தர்ராமனைத் தவிர. இது போதாதா? நெற்றியில் பளீரெனத் துலங்கும் திருநீற்றுடன் தரையில் அமர்ந்தார். பெரியவா அமர்ந்திருந்த அறைக்குச் சுமார் பதினைந்தடி முன்னதாக – அறைக் கதவம் பொசுக்கெனத் திறந்தால், பெரியவா பார்வை தன் மீது படும் இடத்தில் அமர்ந்தார்.
ஒரு சில விநாடிகளுக்குக் கண்களை மூடிக் கொண்டு மனசுக்குள் பெரியவாளை தியானித்தார். பிறகு, கண்களைத் திறந்தார். மூடப்பட்டிருந்த திருக்கதவத்தைப் பார்த்து, தாயுமானவர் ஸ்வாமிகளின் ‘ஆகார புவனம் – சிதம்பர ரகசியம்‘ பாடல் தொகுப்பின் முதல் பாடலை கணீரென்ற ராகத்துடன் சுருதி பிறழாமல் பாட ஆரம்பித்தார்.
ஆகார புவனமின் பாகார மாக
அங்ஙனே யருமொழியால் அகண்டா கார
யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக்
குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே
வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன
மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல்
தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே
திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே!
(இதுதான் முதல் பாடல். தமிழார்வம் இருந்து பொருள் பிரித்துப் படித்தால் சுவை கூடும். கம்ப்யூட்டரில் கூகுளில் நுழைந்து தமிழ் மொழிக்குள் புகுந்து ‘தாயுமானவர் பாடல்கள்‘ என்று டைப் செய்தால், ‘தாயுமானவரின் அனைத்து பாடல்களும் இதில் இருக்கின்றன‘ என்று துவக்கத்திலேயே ஒரு செய்தி இருக்கிறது. அதை ஒப்பன் செய்தால் இந்த ஆகார புவனம் – சிதம்பர ரகசியம் வருகிறது. இந்தப் பாடல் தொகுப்பின் இறுதியில் ஒரு வரி காணப்படுகிறது. ‘சர்வீஸுக்காக இதைத் தயாரித்து அளித்தவர் சிவ. சீதாலட்சுமி, பெங்களூரு‘ என்று. நவீன யுகத்திலும் இது போன்ற பழமையான பாடல்களைப் பலரும் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் இதை அளித்திருக்கும் இவர் போன்ற நல்ல உள்ளங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.)
அந்த வழியாகக் கடந்து போகிற ஒரு சில பக்தர்கள், ‘என்னடாது… மகா ஸ்வாமிகள் இருக்கின்ற அறைக் கதவு சாத்தப்பட்டிருக்கு. இவர் தனியாக இங்கே அமர்ந்து உருக்கமாகப் பாடிக் கொண்டிருக்கிறாரே‘ என்று அலட்சியமாக சுந்தர்ராமனைப் பார்த்து விட்டு நகர்ந்து சென்றனர். இன்னும் சிலரோ, இந்தப் பாடல் பாடப்படுவதன் காரணம் புரியாமல், ‘ம்ம்ம்… பாவம், அவருக்கு என்ன கஷ்டமோ‘ என்றபடி கிண்டலடித்து விட்டும் சென்றனர்.
அப்போது முகாமின் இன்னொரு புறத்தில் ஸ்ரீஜயேந்திரர், சிவ பூஜை நடத்திக் கொண்டிருந்தார். அதனால், அனைத்துப் பக்தர்களும் அந்த தரிசனக் காட்சிகளில் திளைத்திருந்தனர். இந்த இடத்தில் சுந்தர்ராமனைத் தவிர ஒரு ஈ, காக்கா இல்லை.
ஆனாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் எடுத்துக் கொண்ட சங்கல்பத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பாடல்களைக் கண்களை மூடியபடி மிக உருக்கமாகப் பாடிக் கொண்டே இருந்தார் சுந்தர்ராமன். இரண்டாவது பாடல், மூன்றாவது பாடல் என்று பாடி முடித்து இருபத்துநான்காவது பாடலைப் பாடத் துவங்கினார்.
பாராதி விண்ணனைத்தும் நீயாய் சிந்தை
பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து
வாராயோ என்ப்ராண நாதா என்பேன்
வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு
பூராய மாமேலொன் றறியா வண்ணம்
புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே
நீராள மாயுருகிக் கண்ணீர் சோர
நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன்.
‘வாராயோ என் பிராணநாதா என்பேன்‘ – அதாவது என் பக்திக்கு இரங்கி நீ எனக்குக் காட்சி தர மாட்டாயா என்பது இதன் பொருள். கண்கள் கலங்க… உதடுகள் துடிக்க உணர்ச்சிபூர்வமாக சுந்தர்ராமன் இந்த வரிகளைப் பாடி முடித்தபோது – அமைதியான அந்த சூழ்நிலையில் – ‘வாராயோ என் பிராண நாதா‘ என்றவுடன், தன்னையும் அறியாமல் சுந்தர்ராமனின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது.
ஆஹா! உண்மையான பக்தன் ஒருவன், மனமுருகித் தன்னை அழைக்கின்றான் என்றால், எந்த தெய்வமும் இரங்கி வரத்தானே செய்யும்!
அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது. அங்கே அதுவரை நிலவிய அமைதியக் குலைக்கும் வகையில் ‘கிறீச்‘சென்ற சத்தம் தெளிவாகக் கேட்டது. சுந்தர்ராமன் சட்டென்று தலை நிமிர்ந்து பார்த்தார்.
பெரியவா இருந்த அறையின் மரக் கதவு மெள்ளத் திறப்பது போல் தெரிந்தது. அங்கிருந்துதான் ‘கிறீச்‘ சத்தம் வந்தது.
பரவசமாகிப் போன சுந்தர்ராமன், கண்களை அகல விரித்து அந்தத் திருக்கதவம் திறக்கப்படுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
உள்ளே –
ஆஹா! என்னே ஆச்சரியம்! பரப்பிரம்மமான மகா ஸ்வாமி களின் திவ்ய தரிசனம். அவர் திருக்காட்சி தரும் கோலம்தான் என்னே அழகு! விஸ்வரூபமாக நின்ற திருக்கோலத்தில், கண்களில் சாந்தம் தவழ… ‘வாசலின் நிலை இடித்து விடுமோ‘ என்று சற்றே தலை குனிந்தவாறு சுந்தர்ராமனைத் தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்தார். வேறு எந்த ஒரு பக்தரும் அந்த நேரத்தில் அங்கு இல்லை. இது பிரத்தியேகக் கிடைக்கின்ற தரிசனம்!
அவ்வளவுதான்! உற்சாகத்தோடு சட்டென்று எழுந்தார் சுந்தர்ராமன். அவிழ்ந்து விழும் மேல்துண்டை அவசரம் அவசரமாக இடுப்பில் சுற்றிக் கொண்டார். ‘சர்வேஸ்வரா… பிராணநாதா‘ என்று இரண்டு கன்னத்திலும் கைவிரல்களால் மாறி மாறி அறைந்து கொண்டு, கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வடிய அந்தப் பரப்பிரம்மத்தைத் தரிசித்தார்.
அடுத்த கணம் – எப்படித் திடீரென்று அந்த மரக்கதவம் திறந்ததோ, அதுபோல் பொசுக்கென்று மூடிக் கொண்டது. ஏகாந்தமான ஒரு தரிசனம் தந்து விட்டுத் தன்னை மறைத்துக் கொண்டு விட்டது அந்தப் பரப்பிரம்மம். சுந்தர்ராமனின் கண்ணீர்க் கதறலும், பெரியவாளின் கண் கண்ட தரிசனமும் – எல்லாமே ஒரு சில விநாடிகளுக்குள் வந்த சுவடு தெரியாமல் முடிந்து போயிற்று.
இதுதானே தெய்வ தரிசனம்! நாம் எதை எதிர்பார்த்து வந்திருக்கின்றோமோ, அதைத் தந்து அருள்வதுதானே தெய்வத்தின் பணி!
அடுத்த நிமிடம் அங்கு நடந்த சம்பவம்தான் கவனிக்கத் தக்கது. பெரியவா இருந்த அறையின் திருக்கதவம் ஒரு சில விநாடிகளுக்குத் திறந்து, பின் மூடப்பட்ட விவரத்தை யதேச்சையாக இந்த இடத்தைக் கடந்து சென்ற ஒரு கும்பகோணத்து பிராமணர் கவனித்து விட்டார். போதாதா இது? ‘யாம் பெற்ற இன்பத்தை இந்த வையகம் அனுபவிக்க வேண்டாமா?‘ என்கிற சிலிர்ப்புடன் அந்த பக்தர், மெஸேஜை அடுத்தடுத்து ‘பாஸ்‘ செய்தார்.
அவ்வளவுதான்! அதுவரை அமைதியாக இருந்த அந்த இடத்தின் முன்னால் எங்கிருந்துதான் வந்து திரண்டார்களோ அத்தனை பக்தர்கள்! நூறு, இருநூறு என்று பக்தர்கள் கூட்டம் புற்றீசல் போல் மளமளவென்று கூடிக் கொண்டே போனது.
புதிதாக வந்து சேர்ந்த ஒவ்வொரு பக்தரும் தனக்கு முன்னால் நின்றிருந்தவரைப் பார்த்து, ‘எங்கேங்காணும் பெரியவா?‘, ‘எங்கே அந்தப் பரப்பிரம்மம்?‘ ‘எங்கே அந்த சர்வேஸ்வரன்?‘ என்கிற கேள்விகளால் ஆளாளுக்குத் துளைக்க ஆரம்பித்தனர். ஆனால், யாராலும் எந்த ஒரு உறுதியான பதிலையும் தர முடியவில்லை. புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்கு என்ன பதில் தெரியும்? அவர்களில் ஒருவரா இந்தப் பரப்பிரம்மத்தைக் கடந்து செல்லும்போது தரிசித்தது? அப்படி தரிசித்த அந்தக் கும்பகோணத்து பிராமணர், திருக்கதவம் மூடி விட்ட செய்தி அறிந்து எங்கோ ஒரு மூலையில் பதுங்கி நின்றிருந்தார். திறக்கப்பட்டு விட்டதாக எல்லோருக்கும் தகவல் சொல்லப்பட்ட திருக்கதவம் தற்போது மூடப்பட்ட நிலையில் காட்சி அளித்தால், தகவல் தந்தவரைத்தானே மற்ற பக்தர்கள் சந்தேகிப்பார்கள்?
கும்பகோணத்து பிராமணருக்கு ஏதோ ஒரு பாக்கியம் – இந்த இடத்தைக் கடந்து செல்லும்போது காணக் கிடைக்காத அற்புதமான தரிசனம் அவருக்கும் கிடைத்தது. இப்போது மகா பெரியவா இருக்கும் அறையின் கதவு சார்த்தப்பட்டு விட்டதே! ‘நான்தான் எல்லோருக்கும் தகவலை ‘பாஸ்‘ செய்து இங்கு வரவழைத்தேன்‘ என்று இப்போது தைரியமாக அவரால் சொல்ல முடியுமா?
ஆனால், அந்தப் பக்தர்கள் கூட்டத்தில் இருந்த சுந்தர்ராமனை மட்டும் ஒரு சிலர் அடையாளம் கண்டுகொண்டார்கள். அதாவது, சற்று நேரத்துக்கு முன் ‘மகா பெரியவா தரிசனம் இப்போது இல்லை. எல்லோரும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை தரிசித்து விட்டுப் பிறகு இங்கே வாருங்கள் என்று சிஷ்யர்களால் விரட்டாத குறையாக அனுப்பப்பட்டபோது, விடாப்பிடியாக இவர் மட்டும் அமர்ந்திருந்தாரே? இங்கே அமர்ந்து என்ன செய்து கொண்டிருந்தார்? ஏன் இவர் கண்கள் இப்படிக் கலங்கி இருக்கிறது? கண்ணீர் ஏன் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டே இருக்கிறது?‘ என்றெல்லாம் புதிதாகக் கூடிய பக்தர்கள் பதட்டப்பட்டனர்.
இந்த பக்தர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவரே தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு சிலரை விலக்கி விட்டு, சுந்தர்ராமனின் முன்னால் வந்து நின்றார். ‘என்னாச்சு உங்களுக்கு? ஏன் உங்கள் கண்கள் இப்படிக் கலங்கி இருக்கின்றன? பெரியவா தரிசனம் உங்களுக்கு ஆச்சா?‘ என்று ஆதுரத்தோடு கேட்டார்.
எதைச் சொல்வார் சுந்தர்ராமன்?! திருவள்ளூர் ராமசந்திர ஐயரில் இருந்தல்லவா கதையை ஆரம்பிக்க வேண்டும்! கதை சொல்லும் நிலையிலா அவர் இருக்கின்றார்? அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
பெரியவா திருச்சந்நிதியில் ஆரம்பித்த ‘ஆகார புவனம் – சிதம்பர ரகசியம்‘ பாடல்கள் இன்னும் பூர்த்தி ஆகவில்லையே! இருபத்துநான்காவது பாடலைப் பாடிக் கொண்டிருந்தபோது திருக்கதவம் திறந்து, ‘இந்தப் பாடல்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்‘ என்பது போல் புன்னகை முகத்துடன் ஓர் அங்கீகாரம் தந்திருக்கிறாரே! அந்த மகானின் உள்ளம் மேலும் குளிருமாறு மொத்தமுள்ள முப்பத்துமூன்று பாடல்களையும் பாடி முடிக்க வேண்டாமா? இன்னும் ஒன்பது பாடல்கள் இருக்கின்றனவே!
எவரது எந்த ஒரு கேள்விக்கும் சுந்தர்ராமனால் பதில் கூற முடியவில்லை. கண்ணீர் பெருகிப் பெருகி, அவரது கண்கள் சிவந்த நிலையில் காணப்பட்டன. பெரியவா வீற்றிருந்த – சார்த்தப்பட்ட அறையிலேயே அவரது கவனம் நிலைகுத்தி இருந்தது. மின்னல் போல் வந்த தரிசனம் மீண்டும் ஒருமுறை வாய்க்காதா என்று மனம் ஏங்கியது.
பாடலின் மீதி வரிகளை அந்தத் திருச்சந்நிதியில் உடனே பாடி முடித்து விட வேண்டும் என்று அவரது உள்ளம் பதைபதைத்தது. ‘இந்தப் பாடல்களுக்கு சாட்சியாக மகா பெரியவா என்றென்றும் விளங்குகின்றார்‘ என்று தனது கொள்ளுத் தாத்தா திருவள்ளூர் ராமசந்திர ஐயர் சொல்லிக் கொண்டே இருந்ததை உறுதி செய்வது போல், தான் இருந்த அறையின் திருக்கதவத்தை ஓரிரு விநாடிகள் மட்டும் திறந்து திருக்காட்சி கொடுத்து விட்டார் அந்தப் பரப்பிரம்மம். நடமாடும் தெய்வத்தின் கருணையை நினைத்து வியந்தபடியே, கண்ணீர் மல்க, மீதி பாடல்களைப் பாடுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார் சுந்தர்ராமன்.
இங்கு நடந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்வின் பின்னணி புரியாத பல பக்தர்கள், ‘இது நமக்கு சம்பந்தம் இல்லை. பெரியவா தரிசனம் இப்ப இல்லை‘ என்பதுபோல் தீர்மானித்து, அடுத்த இடம் நோக்கி மெள்ள நகர ஆரம்பித்தனர். அதே நேரம், ‘இங்கேயே இன்னும் சிறிது நேரம் அமர்ந்திருந்தால் பெரியவாளின் தரிசனம் எப்படியும் கிடைக்கும்‘ என்று சில பக்தர்கள் உறுதியாக நம்பி, தோதான இடம் பார்த்து அமர்ந்தனர். சுந்தர்ராமன் பாடப் போகும் பாடலுக்குத் தாங்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்த அத்தகைய பக்தர்கள், அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்றே தள்ளி ஓர் ஓரமாக அமர்ந்தனர்.
கண்களை மூடிக் கொண்டு மனதுக்குள் மகா பெரியவாளை தியானித்தார் சுந்தர்ராமன். இருபத்தைந்தாவது பாடலில் இருந்து துவங்கினார். அட்சரம் பிசகாமல் – சுருதி பிறழாமல் ராகத்தோடு பாட ஆரம்பித்தார். அமர்ந்திருந்த பக்தர்கள் கூட்டமும் வாஞ்சையுடன் இவர் பாடியதைக் கண்களை மூடி ரசித்தது.
பெரியவா இருந்த அறையின் திருக்கதவம் சார்த்தப்பட்ட நிலையிலேயே இருந்தது. எந்த ஒரு சிஷ்யரையும் வெளியே காணவில்லை. எல்லோரும் பெரியவா கைங்கர்யத்துக்காக உள்ளேயே இருக்கிறார்கள் போலிருக்கிறது. இருபத்துநான்காவது பாடலைப் பாடி முடித்தபோது கதவைத் திறந்து தரிசனம் காட்டிய அந்தப் பரப்பிரம்மம் அதன் பின்னும் கருணை காட்டுமா? பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த சுந்தர்ராமனின் மனம் ஏக்கப்படவும் செய்தது.
ஒவ்வொரு பாடலாகப் பாடிக் கொண்டே வந்தார்.
காலமொடு தேசவர்த்த மான மாதி
கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி
மாலறவுஞ் சைவமுதல் மதங்க ளாகி
மதாதீத மானஅருள் மரபு வாழி
சாலமிகும் எளியேனிவ் வழக்குப் பேசத்
தயவுவைத்து வளர்த்தஅருள் தன்மைவாழி
ஆலடியிற் பரமகுரு வாழி வாழி
அகண்டிதா காரஅரு ளடியார் வாழி
– இதுவே முப்பத்துமூன்றாவது பாடல்.
இந்தப் பாடலைப் பாடி முடித்து, கண்களை மூடிய வண்ணம் தன் இரு கைகளையும் இணைத்து உயரே தூக்கி, பரப்பிரம்மம் இருந்த அந்தத் திருச்சந்நிதியை நோக்கித் தன் நமஸ்காரத்தைத் தெரிவித்தபோது, அங்கே பெரும் ஆரவாரம் எழுந்தது. ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் திடுமென உச்சஸ்தாயியில் எழுந்து அந்த சூழ்நிலையையே கிடுகிடுக்க வைத்தது. ‘மகா பெரியவா… மகா பெரியவா‘ என்று பக்தர்களின் உதடுகள் பக்திரசத்துடன் துடித்தன.
பொசுக்கென்று தன் விழிகளைத் திறந்த சுந்தர்ராமன் பிரமிப்பின் உச்சத்துக்கே போனார்.
மகா பெரியவா இருந்த திருச்சந்நிதியின் கதவு முழுவதுமாகத் திறந்திருந்தது. அங்கே – ஒற்றைக் காலை மடித்து வைத்துக் கொண்டு – ஏதோ ஒரு குழந்தை தவழ்கின்ற திருக்கோலத்தில் – மந்தகாசப் புன்னகையோடு அந்தப் பரப்பிரம்மம் வீற்றிருந்தது. வயது முதிர்ந்தவர்களுக்கு சந்தோஷம் ஏற்படுகின்றபோது, கன்னத்தில் சின்னச் சின்ன சுருக்கங்கள் விழுமே… அதுபோல் மகா பெரியவாளின் முகம் அதீத சந்தோஷத்துடன் காணப்பட்டது.
தாயுமானவர் ஸ்வாமிகளின் இந்தப் பாடல்கள் முழுவதையும் தான் ஏற்றுக் கொண்டு விட்டேன் என்பதற்கு சாட்சியாக அந்தப் பரப்பிரம்மம், தான் இருந்த இடத்தில் இருந்தே சுந்தர்ராமனைப் பார்த்துக் கை உயர்த்தித் தன் ஆசிர்வாதத்தைத் தெரிவித்தது.
இது போதாதா சுந்தர்ராமனுக்கு! உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாக அவரது கண்கள் மீண்டும் சிவந்து, பொலபொலவென்று கண்ணீர் பெருகியது. சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். அவரது முகத்தில் இதுவரை இல்லாத ஓர் ஆனந்தம் தாண்டவமாடத் தொடங்கியது. ‘பெரியவா தரிசனம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்‘ என்கிற தகவல் பரவி, தேனடையை மொய்க்கும் தேனீக்கள் போல் பக்தர்கள் பெருமளவில் கூட ஆரம்பித்து விட்டனர்.
கைஜாடை காண்பித்து சற்று அருகில் வரச் சொன்னார் பெரியவா. கைகளைக் கூப்பியபடியே ஒரு சில அடி முன்னால் எடுத்து வைத்தார் சுந்தர்ராமன். ‘இதுதான் சாக்கு‘ என்று அவரைத் தொடர்ந்து மெள்ள அடி எடுத்து வைத்து முன்னேறிய பக்தர்கள் கூட்டத்தை மகா ஸ்வாமிகளின் அத்யந்த சிஷ்யர்கள் கட்டுக்கோப்பாகத் தடுத்து விட்டனர்.
மகா ஸ்வாமிகளுக்கு முன்னால் தன் இரு கைகளையும் கூப்பிய வண்ணம் சிவந்த கண்களுடன் நின்றார் சுந்தர்ராமன். அவருக்குப் பேச நா எழவில்லை.
புன்னகையுடன் சுந்தர்ராமனையே பார்த்துக் கொண்டிருந்தது அந்தப் பரப்பிரம்மம். ஏதோ சொல்வதற்காகத் திருவாய் மலரத் துவங்கினார் மகா ஸ்வாமிகள்.
என்ன சொல்லப் போகிறார் என்று சுந்தர்ராமனோடு மொத்த கூட்டமும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது.
‘திருவள்ளூர் ராமசந்திர ஐயரின்…‘ என்று ஆரம்பித்து சம்ஸ்க்ருதத்தில் ஏதோ சில வார்த்தைகளைச் சொல்லி விட்டு ‘புத்திரனோ?‘ என்று முடித்தார் பெரியவா.
திருவள்ளூர் ராமசந்திர ஐயருக்குத் தான் என்ன உறவு என்பது புரியாமல் பெரியவா கேட்கிறார் போலிருக்கிறது என்று தீர்மானித்து, “திருவள்ளூர் ராமசந்திர ஐயரின் புத்திரன் இல்லை. கொள்ளுப் பேரன்… கொள்ளுப் பேரன்“ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அவ்வளவுதான். அங்கிருந்த கூட்டம் மொத்தமும் ‘கொல்‘லென்று சிரித்தது. சுந்தர்ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘புத்திரனோ என்று பெரியவா கேட்டார். அதற்கு நான் கொள்ளுப் பேரன் என்றேன்… ஏன் இதற்கு இவ்வளவு பேரும் சிரிக்கிறார்கள்? நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா…‘ என்று சுந்தர்ராமன் குழம்பி சுற்றும்முற்றும் பார்த்தபோது, அவர் அருகில் இருந்த ஒரு பண்டிதர், “அதைத்தானப்பா பெரியவாளும் சொல்றார்… வாரிசு முறைகளின் பெயர்களை வரிசையாகச் சொல்லி விட்டு, இன்னார் புத்திரனா என்று உங்க அப்பா பெயரைச் சொல்லி விசாரிக்கிறார்“ எனத் தெளிவுபடுத்த… குழப்பத்துக்கு விடை கிடைத்தது சுந்தர்ராமனுக்கு.
அப்போது கூடி இருந்தவர்களைப் பார்த்து மகா பெரியவா திருவாய் மலர்ந்தார். “பாவம்… அவனை யாரும் பரிகாசம் செய்யாதீங்கோ. அவனுக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. திருவள்ளூர்ல ராமசந்திர ஐயர்னு நீதி தவறாத வக்கீல் ஒருத்தர் இருந்தார். அவருக்கு சுப்ரமணி, வெங்கட்ராமன் என்று இரண்டு மகன்கள்…“ என்று மகா பெரியவா ஆரம்பித்து, சுந்தர்ராமன் வரை கச்சிதமாக உறவு முறையை விளக்கிச் சொல்ல… பெரியவாளின் ஞாபக சக்தியை நினைத்து, சுந்தர்ராமனோடு கூட்டத்தினர் மொத்தமும் அதிசயித்துப் பார்த்தனர்.
நெக்குருகிப் போய் விட்டார் சுந்தர்ராமன். மகா பெரியவாளின் திருச்சந்நிதியில் அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். இரு திருக்கரங்களை உயர்த்தி, பரிபூரணமாக ஆசி புரிந்து, “போயிட்டு வாப்பா“ என்று சுந்தர்ராமனை அனுப்பி வைத்தார்.
மகா பெரியவாளிடம் திருவள்ளூர் ராமசந்திர ஐயர் கொண்டிருந்த அதீத பக்தியையும், அவரது வழியில் வந்த குடும்பத்தினர்கள் பெரியவா பக்தியை இன்றளவும் போற்றி வருகிறார்கள் என்பதை நினைத்தும், பக்தர்கள் கூட்டம் வியந்தது.