தம்பதியை இணைக்க நடத்திய நாடகம்

ன்னை முழுமையாக நம்பி, சரண் புகுந்த குடும்பத்தை எந்த தெய்வமும் கைவிட்டு விடாது. அப்படிப்பட்ட பக்திசிரத்தையான குடும்பங்களைக் காத்து ரட்சிப்பதில் காஞ்சி பெரியவாளுக்கு ஈடு இணை இல்லை. தன் பக்தர்களின் குடும்பங்களில் எந்த ஒரு இன்னல் வந்தாலும், எப்படியாவது அதைக் களைந்து அந்தக் குடும்பத்தில் நிரந்தரமான ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுவார் மகா பெரியவா.

அப்படிப் பெரியவாளின் பரிபூரண ஆசிக்குப் பாத்திரமானதனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைப் பற்றி நமக்கு விவரம் அனுப்பி இருந்தார் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த பி. ராஜலெக்ஷ்மி.

அந்த சம்பவத்தைப் பார்ப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இதுகும்பகோணத்துக்கு அருகே ஒரு கிராமத்தில் பட்டாபி சாஸ்திரிகள் என்பவரும் சரஸ்வதி என்பவரும் கருத்தொருமித்த தம்பதியராக இல்லறம் நடத்தி வந்தனர். தெய்வ பக்தியிலும், சாஸ்திர நெறிமுறைகளிலும் பெரும் நம்பிக்கை கொண்டு நேர்மை தவறாமல்நீதி வழுவாமல் வாழ்ந்து வந்தனர்.

எல்லாவற்றையும் மீறி காஞ்சி பெரியவாளிடம் அபரிமிதமான பக்தியும் ப்ரீதியும் இந்தத் தம்பதிக்கு உண்டு. அடிக்கடி காஞ்சி ஸ்ரீமடம் சென்று பெரியவா அங்கே தங்கி இருக்கும் நாட்களில் தரிசித்துத் திரும்புவர். தங்களால் இயன்ற கைங்கர்யங்களை செய்து உதவுவார்கள்.

பட்டாபி சாஸ்திரிகள்சரஸ்வதி தம்பதியருக்கு ஒரே ஒரு குறை மட்டும்தான் இருந்து வந்தது. அதாவது, இவர்கள் வீட்டில் கொஞ்சி விளையாட ஒரு குழந்தைச் செல்வம் இல்லை. ஆம்! புத்திர பாக்கியம் ஏனோ அதுவரை அவர்களுக்கு வாய்க்காமல் இருந்தது. ஒரு முறை காஞ்சிபுரம் சென்றபோது மகா பெரியவாளின் சந்நிதியில் தன் மனக் குறையை வைத்து விட்டுத் திரும்பினார். புன்னகை ததும்ப இவர்களுக்கு பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினார் மகா பெரியவா. மகானின் ஆசிர்வாதத்துக்குப் பலன் இல்லாமல் போகுமா?

காஞ்சிக்குச் சென்று பெரியவாளை தரிசித்துத் திரும்பிய ஒரு சில நாட்கள் கழித்து சரஸ்வதி தாய்மைப் பேற்றை அடைந்தாள். கணவரும் மனைவியும் பூரித்துப் போயினர். ‘நம் பிரார்த்தனைக்கு இரங்கி மகா பெரியவா நம்மை ஆசிர்வதித்திருக்கிறார் என்று பெருமைப்பட்டனர்அனுதினமும் பெரியவா திருநாமங்களைச் சொல்லி வழிபட்டனர்.

நீண்ட நாட்கள் கழித்துக் கருவுற்றிருந்த தன் துணைவியார் சரஸ்வதியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார் பட்டாபி சாஸ்திரிகள். உரிய காலத்தில் சரஸ்வதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. மூக்கும் முழியுமாக லட்சணமாக இருந்த அந்தக் குழந்தையை அனைவரும் கொஞ்சி மகிழ்ந்தனர். மகா பெரியவா கருணையுடன் தங்களுக்கு இட்ட பிச்சைதான் இந்தப் பெண் குழந்தை என்று அனைவரிடமும் சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டனர்.

காஞ்சியில் கோலோச்சும் அந்தக் கருணை நாயகியின் திருநாமத்தையே தங்கள் பெண் குழந்தைக்கு சூட்டினர். ஆம்! தங்கள் குழந்தைக்குகாமாட்சி என்று பெயர் வைத்தனர்சாஸ்திர முறைகளையும், தர்ம நெறிகளையும் அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே போதித்து வளர்த்து வந்தனர். காமாட்சி வளர்ந்து வந்தாள்.

அந்தக் காலத்தில் இருந்து வந்த முறைப்படி மாயவரத்துக்கு (மயிலாடுதுறை) அருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒருவர் குடும்பத்துக்குத் தங்கள் மகள் காமாட்சியை கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள் பட்டாபி சாஸ்திரிகளும் சரஸ்வதியும். அதாவது பெண் குழந்தை ருது (பருவ வயதை அடைதல்) ஆவதற்கு முன்னரே அவளை ஒரு வரனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. கன்னிகாதானம் செய்து கொடுத்தாலும், சம்பந்தப்பட்ட பெண் ருது ஆகும்வரை தன் பெற்றோர் வீட்டில்தான் வளர்வாள். ருது ஆன பின் உரிய சாஸ்திர முறைகளையும் சடங்குகளையும் வீட்டில் அனுஷ்டித்து விட்டு, அவளை ஏற்கெனவே கன்னிகாதானம் செய்து கொடுத்த வீட்டில் கொண்டு விட வேண்டும். இதுதான் நடைமுறை.

அதன்படி காமாட்சி ருது ஆன பின், மாயவரம் அருகே கிராமத்தில் வசிக்கும் மாப்பிள்ளையின் வீட்டில் இவளை சகல மரியாதைகளுடன் கொண்டு விட வேண்டும் என்று தீர்மானித்தனர். உரிய சீர் வரிசைகளுடன் ஒரு மாட்டு வண்டியில் காமாட்சியுடன் பயணித்தனர் பட்டாபி சாஸ்திரிகளும் சரஸ்வதியும்.

கிராமத்தில் மாப்பிள்ளையின் வீட்டில் காமாட்சியை சேர்த்த பிறகு, தங்களுக்கு உண்டான இல்லறக் கடமைகள் இனிதே முடிந்து விட்டதாக மன நிறைவும் திருப்தியும் கொண்டனர் இருவரும். கும்பகோணத்துக்கு அருகே தங்களது சொந்த கிராமத்துக்குத் திரும்பிய பிறகு இருவரும் ஆன்மிக காரியங்களில் இன்னும் முனைப்போடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பெரியவா தரிசனத்தையும் விட்டு வைக்கவில்லை. அவ்வப்போது காஞ்சி ஸ்ரீமடத்துக்குச் சென்றோ, அல்லது அவர் முகாமிட்டிருக்கும் ஊர்களுக்குச் சென்றோ அந்த மகானை மனம் குளிர தரிசித்து உளம் பூரித்தனர்.

மாதங்கள் ஓடின. பட்டாபி சாஸ்திரிகளும் சரஸ்வதியும் அன்றைய தினம் தங்களது பூஜை புனஸ்காரங்களை முடித்து விட்டு வீட்டில் அமர்ந்திருந்த போது வாசல் கதவு மெள்ளத் திறக்கப் படும் சத்தம் கேட்டது. யாரோ அக்கம்பக்கத்து வீட்டில் இருந்து ஏதோ தேவைக்காக வருகிறார்கள் போலிருக்கிறது என்று எண்ணி, ஊஞ்சலில் இருந்து எழுந்தார் பட்டாபி சாஸ்திரிகள். கையில் முறத்தை வைத்துக் கொண்டு எதையோ புடைத்துக் கொண்டிருந்த சரஸ்வதியும்யார் வருகிறார்கள்? என்று வாசலையே அண்ணாந்து கவனித்தார்.

வாசலில்காமாட்சி! இவள் மட்டும் தனியே நின்றிருந்தாள்.

இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று வந்திருக்கிறாளேகணவன் இல்லாமல் இவள் மட்டும் வந்திருக்கிறாளே? என்கிற சந்தேகத்துடன் பட்டாபி சாஸ்திரிகள் வெளியே வந்து வாசல் பக்கம் பார்க்க… “இல்லைப்பாநான் மட்டும்தான் வந்திருக்கேன் என்றாள் காமாட்சி, குரலில் சுரத்து இல்லாமல்.

கையில் ஒரு துணிப்பையை சுமந்து, வாசல் நிலைப்படி அருகிலேயே தவிப்புடன் நின்று கொண்டிருந்தாள் காமாட்சி. அவளது முகம் இருந்த இருப்பே சரியில்லை. அவள் முகத்தில் எப்போதும் தவழும் ஒரு புன்னகையைக் காணோம். கண்களில் இருக்கும் துறுதுறுப்பைக் காணோம். சாதாரணமாக மகள் காமாட்சி குழந்தையாக வீட்டில் இருக்கின்ற நாட்களில்கூட அவளை இப்படி ஒரு நிலையில் எவரும் பார்த்தது இல்லை. எந்நேரமும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே சரஸ்வதியிடம் சொல்லிச் சொல்லி வளர்ப்பார் பட்டாபி சாஸ்திரிகள்.

ஒரு சில மணி நேரத்துக்கு முன்னால் அழுதிருக்க வேண்டும் என்பதையே அவள் முகம் உணர்த்தியது. தலைமுடி சரியாக வாரப்படாமல் ஏனோதானோ என்று இருந்தது.

காமாட்சியின் இந்த நிலையைப் பார்த்ததும், சரஸ்வதியால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. ஓடிப் போய் மகளைக் கட்டிக் கொண்டார். “என்னடீதகவல் எதுவும் சொல்லாம திடுதிப்புன்னு புறப்பட்டுட்டு வந்துட்டேஎங்கே அவரைக் காணோம்? ஏதாவது பிரச்னையா? என்றாள்.

கையில் இருந்த பையை வீட்டின் ஒரு மூலையில் வைத்தாள் காமாட்சி. தாயாரின் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை.

இது மேலும் உலுக்கியது சரஸ்வதியை. பட்டாபி சாஸ்திரிகளும் மகளின் அருகே வந்தார். காமாட்சியின் தலைமுடியைக் கோதிவிட்டு, “ஏம்மாநீ மட்டும் தனியா வந்திருக்கியே? அவர் வரலியா? சொல்லும்மா. என்னாச்சு? என்று ஆதரவாகக் கேட்கமடை திறந்த வெள்ளம் போல் உடைந்து போனாள் காமாட்சி. ஒரு பாட்டம் அழுது முடித்தாள். பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு, “அம்மாஅவருக்கு என்னைப் புடிக்கலையாம். நீ உன் பிறந்த வீட்டிலேயே போய் இருன்னு கண்டிஷனா சொல்லி என்னை இங்கே அனுச்சுட்டார் என்று அழ ஆரம்பித்தாள் காமாட்சி.

பட்டாபி சாஸ்திரிகளுக்கும் சரஸ்வதிக்கும் இடி இறங்கியது போல் இருந்தது. ஒரு சில நிமிடங்களுக்கு மௌனமாக இருந்தார்கள். ‘நல்லபடியாக வாழ்வாள். சந்தோஷமாக இருப்பாள் என்று எண்ணித்தான் இந்த வரனுக்கு காமாட்சியை மணம் முடித்து வைத்தார்இப்படி அழுது கொண்டு இவள் வீட்டுக்கு வந்து விட்டால், பட்டாபி சாஸ்திரிகள் என்னதான் பண்ணுவார்?

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எதுவுமே தோன்றவில்லை இருவருக்கும். வீட்டு பூஜை அறைக்குள் வேகமாகச் சென்றார் பட்டாபி சாஸ்திரிகள். அங்கே சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மகா பெரியவாளின் திருவுருவப் படத்துக்கு முன்னால் போய் நின்று பட்டாபி சாஸ்திரிகள் தேம்ப ஆரம்பித்தார்.

உள்ளே வந்த சரஸ்வதி, “ஏண்ணாஎதுக்கும் நீங்க ஒரு தடவை மாயவரம் போயிட்டு மாப்பிள்ளைகிட்ட பேசிப் பாருங்கோளேன். ஒருவேளை அவர் சமாதானம் ஆனாலும் ஆகலாம் இல்லையா? என்றாள். அதன்படி சற்றும் தாமதிக்காமல் அன்று மதியமே மாயவரம் புறப்பட்டுச் சென்றார். மாப்பிள்ளையுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மகளை வைத்துக் குடித்தனம் நடத்துவதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் பட்டாபி சாஸ்திரிகள்.

தாங்கள் பரிபூரணமாக வணங்கும் காஞ்சி மகா பெரியவாளை தரிசித்தால், எல்லா பிரச்னைகளும் பனி போல விலகி விடும் என்று தீர்மானித்து பட்டாபி சாஸ்திரிகள் ஒரு நாள் காஞ்சிபுரம் பயணித்துச் சென்றார். உடன் மனைவி சரஸ்வதியையும், மகள் காமாட்சியையும் கூட்டிக் கொண்டு சென்றார்.

எத்தனையோ சோகங்களுக்கும் பிரச்னைகளுக்கும் அங்கே தீர்வைப் பெற்றவர்கள்தானே அதிகம். மகானிடம் தங்களது பாரத்தை இறக்கி வைத்தால், சுமுகமான தீர்வு ஏற்படும் என்று பட்டாபி சாஸ்திரிகளும் சரஸ்வதியும் பரிபூர்ணமாக நம்பினர்.

கண் கண்ட தெய்வமான பெரியவாளின் தரிசனம் கிடைத்தது. தன் தரிசன முறை வந்தபோது பெரியவாளின் திருச்சந்நிதியில் விழுந்து பணிந்து, தன் மனக்குமுறலைக் கொட்ட முயன்றார். ஆனால், ‘எதுவும் பேசவேண்டாம் என்பதாக பெரியவா சைகை காண்பித்து விட்டதால், பட்டாபி சாஸ்திரிகளோ, சரஸ்வதியோ எதுவும் சொல்லவில்லை. மகள் காமாட்சியுடன் அவரை ஆத்மார்த்தமாக வணங்கிவிட்டு, பிரசாதம் பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினர்.

நாட்கள் ஓடின. மாயவரம் மாப்பிள்ளை மனம் திருந்தி வந்து காமாட்சியைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியாகக் காணோம். இருவரும் இணைந்து வாழ்வதற்கு உண்டான எந்த ஒரு அடையாளமுமே இல்லை. கிணற்றில் போட்ட கல்லாக அவர் மாயவரம் அருகே இருக்கிறார். காமாட்சியோ கும்பகோணம் அருகே இருக்கிறார்.

திருமணம் ஆகி, இன்னொருவர் வீட்டுக்கு அனுப்பிய மகள், திடீரெனத் திரும்பி வந்து விட்டால் எத்தனை நாட்களுக்குத்தான் பெற்றோர் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள்? அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கேள்வியைக் கேட்பார்களே என்றெல்லாம் பயந்து பயந்து காலம் தள்ளினார் பட்டாபி சாஸ்திரிகளும் சரஸ்வதியும்.

பூஜையறையில் இருக்கும் மகா பெரியவா திருவுருவப் படத்தின் முன் நின்று கண்ணீர் சிந்தியவாறு நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் பெரும் இடி போல் அந்தச் செய்தி வந்து இறங்கியது. ‘காமாட்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த மாயவரம் மாப்பிள்ளை வேறு ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு விட்டார் என்பதே அந்த அதிர்ச்சி செய்திமகள் காமாட்சிக்கு இந்தச் செய்தியைத் தெரியப்படுத்த வேண்டாம் என்று எவ்வளவோ அமைதி காத்தனர் இருவரும்ஆனாலும், ஒரு கட்டத்தில் தங்கள் மனதில் உள்ள சோகத்தை மகளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. காமாட்சியை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டு விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்கள். ஆனாலும், காமாட்சியின் சோகத்தை இவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தடுத்து வந்த நாட்கள் மிகவும் பாரமாகவே கழிந்தன.

இந்த நேரத்தில் காஞ்சி மகா பெரியவா மாயவரத்துக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருக்கும் செய்தி பட்டாபி சாஸ்திரிகளை எட்டியது. மயக்கத்தில் துவண்டு கிடந்தவருக்கு ஏதோ குளூக்கோஸ் கிடைத்தது மாதிரி ஆனார் பட்டாபி.

மனைவியிடமும் மகளிடமும் விவரத்தைச் சொல்லி அன்று பகல் வேளையிலேயே பெரியவா முகாமிட்டிருக்கும் கிராமத்துக்குப் புறப்பட்டார். கும்பகோணத்தில் இருந்து மாயவரத்துக்கு பஸ்ஸில் பயணித்து அதன் பின் அந்தக் கிராமத்துக்கு ஒரு மாட்டு வண்டியில் சென்றார்.

மகா பெரியவா முகாமிட்டிருந்த அந்தக் கிராமமே வெகு கோலாகலமாக இருந்தது. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து பெரும் திரளாக பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர். ஒரு மாதிரி கூட்டத்தில் மெள்ள நகர்ந்து மகா பெரியவாளை தரிசனம் செய்தார்கள் பட்டாபி சாஸ்திரிகளின் குடும்பத்தினர். கண்களில் நீர் ததும்ப இவர்கள் தரிசனம் செய்தபோது, வேறு எந்தப் பேச்சும் பேசாமல் பிரசாதம் தந்து, தன் வலக் கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்து அனுப்பினார் அந்த மகான்.

வெளியே வந்தபோது சரஸ்வதி, “ஏண்ணாபெரியவாகிட்ட நம்ம காமாட்சிபத்தி நீங்க விண்ணப்பிப்பேள்னு நினைச்சேன். எதுவும் பேசாம வந்துட்டேளே? என்று கவலையுடனும் ஏக்கத்துடனும் கேட்டார். அதற்கு பட்டாபி சாஸ்திரிகள், “எங்கேடீசாந்த சொரூபமான அந்த முகத்தைப் பார்த்தவுடனே எனக்கு எதுவுமே கேக்கத் தோணலைடீ என்று குரல் தழுதழுத்தார்இந்த பதிலைக் கேட்ட சரஸ்வதியும் காமாட்சியும் அமைதி ஆனார்கள்இதை அடுத்து வெளியே வந்த மூவரும் அங்கிருந்து கும்பகோணத்துக்குப் புறப்பட்டார்கள்.

பட்டாபி சாஸ்திரிகளின் மனதில் என்ன கவலை புதைந்துள்ளது என்பதை அறியாதவரா மகா ஸ்வாமிகள்?

உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லியா அந்த தெய்வம் அறிய வேண்டும்?

இதற்கான தீர்வையும் மகா பெரியவா அந்த க்ஷணத்திலேயே அருளி விட்டார். பட்டாபி சாஸ்திரிகளின் பிரச்னையையும் தீர்த்து விட்டார்.

எப்படி?

இங்கே மகா ஸ்வாமிகள் சந்நிதியின் முன் பட்டாபி சாஸ்திரிகள் குடும்பத்தினர் நின்று கொண்டிருந்த அதே வேளையில் மாயவரத்துக்கு அருகே கிராமத்தில் வசித்து வந்த காமாட்சியின் கணவர் வீட்டில் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

தன் மதிய உணவை முடித்து விட்டு, கூடத்தில் உள்ள ஊஞ்சலில் ஹாய்யாகப் படுத்திருந்தார் காமாட்சியின் கணவர். தூக்கம் வரவில்லை. எனவே, கண்களைத் திறந்தபடியே ஏதோ சிந்தனையில் இருந்தார். அந்த நேரம் பார்த்து விலுக்கென்று அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. யாரோ ஒருவர் தன் வீட்டுக்குள் நுழைவதை உணர்ந்தார். உருவம் தெரியவில்லை. ஆனால், நிழல் ஒன்று அசைந்து வருவது போல் தெரிந்தது. ‘வாசல் கதவுதான் தாளிடப்பட்டிருக்கிறதேயார் உள்ளே வர முடியும்? என்று ஊஞ்சலில் இருந்து அவசரம் அவசரமாக எழுந்தார். எழுந்து பார்த்தவர் திடுக்கிட்டார். பரபரவென்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு கையெடுத்துக் கும்பிட்டார்.

காஞ்சி மகா பெரியவா இவரது வீட்டு நடு முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார். அசையாமல் ஆடாமல் அப்படியே அங்கேயே நின்று கொண்டிருக்கிறது அந்தப் பரப்பிரம்மம். காமாட்சியின் கணவருக்கு ஏகத்துக்கும் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. உடல் நடுங்கியது. என்ன செய்வதென்று தெரியாமல் அந்த தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்காரம் செய்தார்.

பெரியவாளின் அதரத்தில் இருந்து, ‘பட்டாபி சாஸ்திரிகள் பெண்ணுக்கு நீ வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதை தேவ வாக்கு போல் சொல்லி விட்டு, அந்த விநாடியே அங்கிருந்து மறைந்து போனார்.

காமாட்சியின் கணவர் தன்னிலை திரும்புவதற்கு நெடு நேரம் பிடித்தது. தெய்வத்தின் வாக்கை மீற முடியுமா? அடுத்த நாளே அதிகாலை வேளையில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டாபி சாஸ்திரிகளின் வீட்டுக்குப் பயணித்தார் காமாட்சியின் கணவர். அவர்களது வீட்டுக்குள் நுழைந்ததும் விடுவிடுவென்று சென்று பட்டாபி சாஸ்திரிகளையும் சரஸ்வதியையும் அழைத்து முதல் வேலையாக அவர்களது கால்களில் விழுந்து, ‘என்னை மன்னிச்சிடுங்கோ மாமா என்றார்குரல் கமறி அழ ஆரம்பித்து விட்டார்தன் கணவரின் குரலாக இருக்கிறதே என்று உள்ளிருந்து வந்த காமாட்சியும் பதறித்தான் போனாள்.

என்ன ஏதென்று இவர்கள் கேட்பதற்கு முன்னரே, ‘ஏதோ ஒரு அவசர முடிவில் காமாட்சியை உங்கள் வீட்டுக்கு அனுப்பி விட் டேன். அவசரப்பட்டு இன்னொரு கல்யாணமும் செய்து கொண்டு விட்டேன். நான் செய்த இரண்டுமே தவறு என்பதை காஞ்சி மகா ஸ்வாமிகள் எனக்கு உணர்த்தி விட்டார். இனி, காமாட்சியைக் கண் கலங்காமல் நான் பார்த்துக் கொள்வேன். இது சத்தியம்.

நீங்கள் எந்தக் கவலையும் பட வேண்டாம் என்று சொல்லி விட்டு காமாட்சியைப் பார்த்து, ‘என்னை மன்னிச்சிடும்மா. நீ உன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு உடனே பொறப்படு. மதியச் சாப்பாடு நம் வீட்டில்தான் என்று அவசரப்படுத்தினார்காமாட்சி நெகிழ்ந்து போனாள்இதையடுத்து மளமளவென்று அவளும் தயாரானாள்இருவரும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.

வாசல் வரை வந்து இவர்களை வழியனுப்பி விட்டு, வீட்டுக்குள் வந்த பட்டாபி சாஸ்திரிகள் சரஸ்வதியைப் பார்த்து, ‘பார்த்தியாடீ பெரியவா கருணையைநாம சொல்லாட்டி என்னஅவருக்குப் புரியாதா? அதான் மாப்பிள்ளை மனசுல புகுந்து ஒரு உலுக்கு உலுக்கி இருக்கார் என்று சொல்லி நெகிழ்ந்து போனார்.

அதன் பின் காமாட்சி நன்றாக வாழ்ந்தாள். இருவரும் இணைந்து ஒரு தினத்தில் காஞ்சிபுரம் போய் மகா பெரியவாளை தரிசித்தனர். இவர்கள் குழந்தை குட்டிகளுடன் இனிமையாக வாழ்ந்தார்கள்.