சென்னை மடிப்பாக்கத்தில் தற்போது வசித்து வருபவர் ஆர். சுப்பிரமணியன். டெபுடி கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். 1966-ஆம் ஆண்டு வாக்கில் இவர் காஞ்சிபுரத்தில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்தார். அப்போது முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி ஒவ்வொரு தாலூகாவிலும் இருக்கின்ற ஆதரவற்ற முதியோர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அரசு சார்பாக மாதா மாதம் உதவித் தொகை (இருபது ரூபாய்) வழங்கும் பொறுப்பு சுப்பிரமணியன் போன்ற அதிகாரிகளிடம் அரசு ஒப்படைத்திருந்தது.
இத்தகைய முதியோர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அரசே தன் செய்திக் குறிப்பில் சொல்லி இருந்தது. வயதான – நிராதரவான – காப்பாற்றுவதற்கு யாரும் இல்லாமல் இருக்கின்றவர் களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை போய்ச் சேர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். எனவே, தகுதி இல்லாத எவருக்கும் இந்த உதவித் தொகை போய்விடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. ஏனென்றால், யாரோ ஒரு முதியோர் தகுதியே இல்லாமல் உதவித் தொகை வாங்க ஆரம்பித்தால், உண்மையிலேயே கஷ்டப்படும் ஒரு முதியோர் பெறும் உதவித் தொகை இதனால் பாதிக்கப்பட்டு விடுமே! எனவே, இந்தப் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு வரும் தகவல்களைக் கொண்டு, நேரடியாக விசிட் செய்து, ‘இந்த உதவித் தொகைக்கு இவர் தகுதியானவர்தானா?‘ என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாகப் பல கிராமங்களுக்கும் விசிட் செய்த சுப்பிரமணியன் அன்று காஞ்சிபுரத்தில் பணியில் இருந்தார்.
சுப்பிரமணியன் – மகா ஸ்வாமிகளின் அத்யந்த பக்தர். பெரியவாளின் கருணையினாலேயே ஸ்ரீமடம் அமைந்துள்ள காஞ்சிபுரத்தில் தனக்கு போஸ்ட்டிங் கிடைத்தது என்பதாகப் பெரிதும் மகிழ்ந்திருந்தார்.
அன்றைய தினம் சிறிது ஓய்வு நேரம் கிடைத்ததால், ஸ்ரீமடத்துக்குப் பெரியவா தரிசனத்துக்காகச் சென்றார்.
உள்ளூரிலேயே ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணி புரிபவர் என்பதால், ஸ்ரீமடத்தில் பலருக்கும் இவரை நன்றாகத் தெரியும். அந்த வகையில் இவரை அறிந்தவர்கள் பரஸ்பரம் ஒரு புன்னகையைப் பகிர்ந்து கொண்டார்கள். பெரியவாளின் திருச்சந்நிதி அருகே சென்று அந்தப் பரப்பிரம்மத்தை உளபூர்வமாகக் கைகூப்பி வணங்கி, நமஸ்காரம் செய்தார்.
தன் வழக்கமான விசாரிப்புகளுடன் சுப்பிரமணியனை பெரியவா ஆசிர்வதித்தார். பிரசாதம் தந்தார். அப்போது ஸ்ரீமடத்திலேயே நிரந்தரமாகத் தங்கி, அங்கே தொண்டு செய்து வந்த ஒரு மூதாட்டி, ரெவின்யூ இன்ஸ்பெக்டரான சுப்பிரமணியன் இங்கே வந்திருப்பதை அறிந்து, விடுவிடுவென்று பெரியவா அருகே வந்து நின்றார்.
சட்டென்று அந்த மூதாட்டியின் பக்கம் திரும்பினார் பெரியவா. ‘என்ன?‘ என்பது போல் மூதாட்டியைப் பார்த்தார்.
விகல்பமே இல்லாமல் அப்பாவியாகக் காணப்பட்ட அந்த மூதாட்டி, “பெரியவா… கவர்ன்மெண்ட்லேர்ந்து முதியோர்களுக்கு மாசா மாசம் இருவது ரூவா உதவித்தொகை கொடுக்கறாளாம். இந்த ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லிட்டு, எனக்கும் அந்தத் தொகை கிடைக்கறதுக்குக் கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்கோ“ என்று தடாலடியாக ஒரு வேண்டுகோள் வைத்தார்.
மூதாட்டியின் பேச்சுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை சுப்பிரமணியன்.
பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அவரும் அங்கு கூடி இருந்தவர்களும் காத்திருந்தனர். ‘எல்லாருக்கும் கொடுக்கறாளே… எனக்கும் கொடுத்தா என்னன்னு கேக்கறியா?“ என்று அந்த
மூதாட்டியைப் பார்த்துப் பெரியவா நிதானமாகக் கேட்டார்.
“ஆமா பெரியவா. நானும் வயசானவதானே… கவர்ன்மெண்ட் சொல்ற ரூல்ஸ் எனக்கும் பொருந்தும்“ என்று சொல்லிவிட்டு, பெரியவா எப்படியும் தனக்கு உதவுவார் என்கிற நம்பிக்கையுடன் அவரது திரு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பெரியவா சட்டென்று டிராக் மாறினார்.
“இல்லேன்னா ஒண்ணு பண்ணலாமா… நீ அப்ளை பண்ணும்போது எனக்கும் சேர்த்து ஒரு அப்ளிகேஷன் கொடுத்துடு… ஏன்னா, கவர்ன்மெண்ட் சொல்ற முதியவா லிஸ்ட்ல நானும் நிச்சயம் வருவேன்னு நினைக்கறேன். ரெண்டு பேரும் சேர்ந்து உதவித் தொகை வ ு ங் கி ட லாம்?“ என்று பெரியவா சொன்னபோது, அந்த மூதாட்டி விதிர்விதிர்த்துப் போனார்.
“அபசாரம் பெரியவா… என்ன வார்த்தை சொன்னேள்…“ என்று அழாத குறையாக குரல் கரகரத்தார் மூதாட்டி. அப்போது பெரியவா திருவாய் மலர்ந்தார்:
“ஒனக்கு வேண்டிய துணிமணிகளை மடத்துல கொடுத்துடறா… வேளா வேளைக்குச் சாப்பாடும் கொடுத்துடறா… தவிர, வேற என்னென்ன தேவையோ – வைத்தியத்துல ஆரம்பிச்சு, எல்லாத்துக்கும் மடத்துலயே ‘கேர்‘ எடுத்துக்கறா, இல்லியா?“
“ஆமா பெரியவா… எல்லாம் இங்கே கிடைச்சுடுது.“
“அப்புறம் ஏன் உனக்கு இப்படித் தோணித்து?“ என்று பெரியவா அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார்.
“இப்பதான் எனக்குப் புரியறது பெரியவா. நான் கேட்டது எவ்ளோ தப்புன்னு உணர்றேன். என்னை மன்னிச்சிடுங்கோ“ என்று கண்ணீர் விட ஆரம்பித்தார் மூதாட்டி.
சுப்பிரமணியனைப் பார்த்தார் மகா பெரியவா.
“அவா ஏதோ தெரியாம கேட்டுட்டா… இதை மனசுல வெச்சுக்காதீங்கோ“ என்று சொல்லி விட்டுப் பொத்தாம் பொதுவாகப் பெரியவா சொன்னார்.
“அரசாங்கம் சில உதவிகளை சில பேருக்குக் கொடுக்கறதுன்னா, அது அவாளோட குடும்ப சூழ்நிலையை மனசுல வெச்சுண்டு செயல்படுத்தறா… இந்த லோகத்துல இருக்கிற எல்லாருமா வசதி வாய்ப்போட இருக்கா? எல்லா குழந்தைகளுமா கான்வென்ட்ல படிக்கறதுகள்?
எத்தனை குழந்தைகள் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல கஷ்டப்பட்டு படிக்கறதுகள்… அத்தகைய குழந்தைகளுக்கு ‘நாமல்லாம் கான்வென்ட்ல படிக்க முடியாம இருக்கோமே‘ங்கிற ஏக்கம் வந்துடக் கூடாதுங்கறதுக்காகத் தான் சில வசதிகளை அந்தக் குழந்தைகளுக்குப் பண்ணித் தர்றா. ‘ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுக்கிற வசதிகள் எங்களுக்கும் வேணும்‘னு கான்வென்ட் குழந்தைகள் கேட்டா எப்படி இருக்கும்? அது மாதிரிதான் இதுவும்.
உண்மையிலேயே கஷ்டப்படற முதியோர்களுக்குத்தான் இது மாதிரி அரசாங்க உதவிகள் போய்ச் சேரணும். அதை முறையா கண்காணிச்சு, செயல்படுத்தறதுக்குதான் இவரை மாதிரியான அரசு உத்தியோகஸ்தர்கள் இருக்கா. அவாகிட்ட நாம ரெகமண்ட் ஏதும் பண்ணக் கூடாது. யார் யாருக்கு என்னென்ன கிடைக்கணுமோ, அது முறையா கிடைக்கறதுக்கு பகவான் அருள் பண்ணுவான்“ என்று நீண்ட உரையை முடித்த பிறகு, சுப்பிரமணியன் உட்பட அங்கு கூடி இருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். ‘சிபாரிசு மூலம் வருவதல்ல தகுதிகள்… உண்மையான தகுதி கொண்டவருக்கு சிபாரிசு என்பது தேவை இல்லை‘ என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக – மிகவும் நாசூக்காகப் பெரியவா சொன்ன விஷயம் இது.
இதே சுப்பிரமணியனுக்கு மகா பெரியவாளுடன் ஏற்பட்ட இன்னோர் அனுபவத்தைப் பார்ப்போம்.
அப்போது காஞ்சிபுரம் தனி மாவட்டம் அல்ல. செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகக் காஞ்சிபுரம் இருந்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ‘ரிசப்ஷன் தாசில்தார்‘ என்றொரு அதிகாரி உண்டு. இந்த சம்பவம் நடந்த காலகட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘ரிசப்ஷன் தாசில்தார்‘ பதவியில் இருந்தார் சுப்பிரமணியன்.
இயல்பான பணிகளோடு காஞ்சிபுரத்துக்கு வரும் முக்கிய அரசு மேலதிகாரிகள் – ஐ.ஏ.எஸ்., டெல்லி பிரபலங்கள் என்று பலரையும் வரவேற்று, அவர்களது தேவைகளைக் கச்சிதமாகச் செய்து கொடுக்கும் பொறுப்பு இந்த ரிசப்ஷன் தாசில்தாருக்கு உண்டு.
அந்த வகையில் காஞ்சிபுரத்துக்கு வரும் அனைத்து அதிகாரிகளையும் நன்றாக உபசரித்து, அவர்கள் செல்ல விருப்பப்படும் க்ஷேத்திரங்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பது உட்பட பல பணிகளும் ரிசப்ஷன் தாசில்தாருக்கு உண்டு.
அது தேர்தல் நேரம். காஞ்சியில் நடக்கும் தேர்தலைப் பார்வையிடுவதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தார். பிரபலமான ஆன்மிக க்ஷேத்திரம் என்பதால், வேலை நேரம் போக எஞ்சிய நேரத்தில் இங்குள்ள திருக்கோயில்களைத் தரிசிக்கலாம் என்கிற எண்ணத்துடன் தன் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தார்.
தேர்தல் தொடர்பான ஓரிரு கூட்டத்துக்குப் பிறகு, சுப்பிரமணியனை அழைத்து, “இங்கே காஞ்சி ஸ்ரீமடத்தில் மகா பெரியவா இருக்கிறாராமே… அவரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை நான் உடனே தரிசனம் செய்ய வேண்டும்“ என்றார்.
சுப்பிரமணியனுக்கு இது ஒன்றும் சிரமமான வேலை இல்லையே! ஐ.ஏ.எஸ். அதிகாரி புண்ணியத்தில் மகா பெரியவாளை தரிசிக்க அவருக்கும் இது ஒரு வாய்ப்புதானே! உற்சாகத்துடன் சம்மதித்து, ஸ்ரீமடத்தில் மகா பெரியவா இருக்கிறாரா என்பதையும் விசாரித்து அறிந்து அடுத்த நாள் அந்த கர்நாடக அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை ஸ்ரீமடத்துக்குக் கூட்டிச் சென்றார்.
அன்று ஸ்ரீமடத்தில் திரளான பக்தர்கள் கூட்டம். என்றாலும், இவர்களது வருகை முன்கூட்டியே சொல்லப்பட்டதால், ஒரு சில முக்கியஸ்தர்கள், கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியை வாசலில் வரவேற்று ஸ்ரீமடத்தினுள் கூட்டிச் சென்றனர்.
அப்போது மகா பெரியவா ஜபத்தில் இருந்தார். அவரது திருச்சந்நிதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, அவரது குடும்பத்தினர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் நின்று கொண்டே இருந்தனர். இதைப் பார்த்த மடத்து ஊழியர் ஒருவர், ‘முக்கியஸ்தர் ஆயிற்றே… இவர் அமர்வதற்கு உதவி செய்யலாம்‘ என்று எங்கோ உள்ளே போய் ஒரு புது ஜமுக்காளத்தைக் கொண்டு வந்து விரித்துப் போட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை அமரச் சொன்னார். ஒரு புன்னகையுடன் அனைவரும் அந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தனர்.
ஒரு சில நிமிடத்திலேயே மகா பெரியவாளிடம் இருந்து இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அழைப்பு வந்தது. அனைவரையும் பெரியவாளிடம் கூட்டிச் சென்றார் சுப்பிரமணியன்.
அந்த நிகழ்வு அப்படியே இருக்கட்டும்…
இதே வேளையில் மகா பெரியவாளின் சந்நிதானத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம்.
கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் அமர்வதற்கு அன்பர் ஒருவர் புது ஜமுக்காளத்தை விரித்துப் போட்டார் என்று பார்த்தோமே… அந்த ஜமுக்காளத்தை மையப்படுத்தி நடந்த சம்பவம் இது. அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் பெரியவா தரிசனத்துக்காக எழுந்து நகர ஆரம்பித்ததும், ஸ்ரீமடத்துக் கைங்கர்யத்தில் இருந்த அன்பர் ஒருவர் வந்தார். புது ஜமுக்காளம் அங்கே விரிக்கப்பட்டிருப்பது கண்டு பேரதிர்ச்சி அடைந்தார். காரணம் – அந்த ஜமுக்காளம் அவருக்குச் சொந்தமானதாம். அவ்வளவுதான்!
இதைப் பார்த்ததும் காச்சுமூச்சென்று கத்த ஆரம்பித்தார். “யாரது என் ஜமுக்காளத்தை இங்கே கொண்டு வந்து போட்டது?“ என்று ஆரம்பித்து ஏகத்துக்கும் திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டார்.
இத்தனைக்கும் இவர் கத்திக் கொண்டு நின்ற இடம், பெரியவா சந்நிதியில் இருந்து அதிகபட்சம் பத்தடி தூர இடைவெளிக்குள்தான் இருக்கும். இவர் கத்தியது பெரியவா உட்பட அங்கே நின்று கொண்டிருந்த அனைவருக்கும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஏன், அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சுப்பிரமணியனும்கூட அவ்வப்போது பெரியவா அருகில் நின்றபடி திரும்பிப் பார்த்தபடிதான் இருந்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குத் தமிழ் தெரியாது என்பதால், அந்த அன்பர் யாரைத் திட்டுகிறார் என்பது அவருக்குப் புரியவில்லை. ஆனால், சுப்பிரமணியனுக்கு, இந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தவர்களைக் குறி வைத்துதான் இவர் திட்டுகிறார் என்பது நன்றாகவே புரிந்தது.
ஆனால், கத்திக் கொண்டிருந்தவருக்கு எவரும் பதில் சொல்லவில்லை. இவரது நடவடிக்கையைப் பார்த்து ஒரு சிலர் முகம் சுளிக்கவும் செய்தனர். இன்னும் ஒரு சிலர், அதற்கு மேலும் அவர் எதுவும் கத்தாதவாறு சமாதானப்படுத்தி அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.
வாருங்கள், பெரியவா திருச்சந்நிதிக்கு வருவோம். தன் ஜபத்தை முடித்த பெரியவா, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் குடும்பம் பற்றியும் அவரது உத்தியோகம் பற்றியும் விசாரித்து அறிந்தார். பிறகு, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரசாதம் வழங்கி, ஜப மாலை ஒன்றையும் கொடுத்தார். ஸ்ரீமடத்து மரியாதைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட அந்த அதிகாரி, மகா பெரியவாளின் உபசரிப்பில் ரொம்பவும் நெகிழ்ந்துதான் போனார். விடை பெறுவதற்குப் பெரியவா உத்தரவு கொடுத்ததும், அனைவரும் வெளியே வந்தனர்.
அப்போது இப்படி அருமையான ஒரு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்த சுப்பிரமணியனுக்கு நன்றி சொன்ன ஐ.ஏ.எஸ். அதிகாரி மெள்ளக் கேட்டார்:
“யார் அவர்? பெரியவாளுக்கு முன்னாலேயே இப்படிக் கத்திக் கொண்டிருந்தார்? யார் மேல் அவருக்கு அப்படி ஒரு கோபம்? தெய்வ சந்நிதானத்தில் இப்படிக் கூச்சல் போடுவது பெரிய அபசாரம் என்பது தெரியாத அவர், எப்படிப் பெரியவாளின் கைங்கர்யத்தில் இருக்கிறார்?“
சுப்பிரமணியனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நடந்த உண்மை நிகழ்வை அவரிடம் அப்படியே சொன்னால், அது பெருத்த அவமானம் அல்லவா? பக்திபூர்வமாக தரிசனத்துக்கு வந்த அவர் மிகவும் மனம் நொந்து போய் விட மாட்டாரா? இதை எல்லாம் யோசித்து, ஒரு பொய்யைத் துணிந்து சொன்னார். “இன்னிக்கு அமாவாசை அல்லவா? அமாவாசை அன்று சிலருக்கு அதிகமாகக் கோபம் வரும். அந்த வகையில் ஏதோ பாதிக்கப்பட்டிருக்கிறார். அதுதான் அப்படிச் சத்தம் போட்டிருக்கிறார்“ என்று சொன்னார்.
ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி, “பாவம்… பெரியவாளுக்குக் கைங்கர்யத்தில் இருக்கும் இவருக்கு இப்படி ஒரு பிரச்னையா? அவர் நல்லபடியாக வாழ்வதற்கு நானும் மகா பெரியவாளையே பிரார்த்தனை செய்து கொள்கிறேன்“ என்று நெகிழ்வுடன் சொல்ல… சுப்பிரமணியன் பிரமிப்பாகி விட்டார்.
மறுநாள் சுப்பிரமணியன் கேள்விப்பட்ட ஒரு தகவல் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐ.ஏ.எஸ். அதிகாரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடமே, கூச்சல் போட்ட அன்பரை மகா பெரியவா அழைத்து, ‘இன்றைய தினத்தில் இருந்து மூன்று நாட்கள் வரை எனக்குக் கைங்கர்யம் பண்ணக் கூடாது‘ என்று உத்தரவு போட்டு விட்டதாக ஒரு தகவல் ஸ்ரீமடத்தில் இருந்தே வந்தது.
சுப்பிரமணியன் நம்மிடம், “பெரியவா கொடுக்கும் தண்டனை என்பது இப்படித்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ‘எனக்கு மூன்று நாட்கள் கைங்கர்யம் செய்யாதே‘ என்று உத்தரவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு எப்படி இருக்கும்? சம்பந்தப்பட்ட அந்த கோபக்கார அன்பர் மன்னிப்பு எல்லாம் கேட்டும், பெரியவா தன் வாக்கில் உறுதியாக இருந்து விட்டார். நடமாடும் ஒரு தெய்வத்துக்குச் செய்யும் பணி, ஒருவருக்குத் திடீரென்று தடைபெறுவதை விட பெரிய தண்டனை வேறு ஏதும் இல்லை என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார். பெரியவாளுடன் நான் இருந்த நாட்களை இப்போது நினைத்தாலும், என் நெஞ்சம் நெகிழ்கிறது. அதைப் போன்ற பாக்கியம் எனக்குக் கிடைத்ததும் அவரது அருள்தான்“ என்றார் கண்கள் பனிக்க.
மகா பெரியவா நடமாடும் தெய்வமாக இருந்தார். இன்றைக்கும் அவர் தன் சந்நிதி வந்து பிரார்த்திக்கும் அத்யந்த பக்தர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அன்போடு அரவணைத்துக் காத்து வருகிறார் என்பதே சத்தியம்!
அந்த பெறற்கரிய மகானின் புகழைப் போற்றுவோம். அவரது ஆசிகளைப் பெறுவோம்!
ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர!