பெரியவா ஃபைபர் சிலை ஸ்ரீமடம் வந்த கதை

பிரதான சாலையில் இருந்து காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் அடியெடுத்து வைத்தவுடன் குறுகிய வாசலைக் கடந்து நடந்து, வலப் பக்கம் திரும்பி ஸ்ரீசந்திர மௌளீஸ்வரரைத் தரிசித்து விட்டு அப்படியே சந்து போன்ற இடத்தில் கொஞ்சம் நடந்து இடப்பக்கம் திரும்பி நடந்தால், கலியுக தெய்வமான காஞ்சி மகா ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தைத் தரிசிக்கலாம். அந்த மகானின் ஆசி பெறலாம்.

தரிசனம் முடிந்து இந்த அதிஷ்டானத்தை வலம் வரும்போதுவலத்தின் முடிவில் ஒரு கண்ணாடி அறைக்குள் பிரதிஷ்டை ஆன மகா பெரியவாளின் ஃபைபர் சிலை ஒன்றை தரிசித்திருப்பீர்கள். சாட்சாத் மகா பெரியவாளே ஒரு கண்ணாடி அறைக்குள் குத்துக் கால் போட்டு அமர்ந்த நிலையில் நம்மை ஆசிர்வதிப்பது போன்ற தத்ரூபமான தோற்றத்தை இந்த சிலை ஏற்படுத்தும். பரவசம் தரும் இந்தத் திருவடிவத்தை எந்த ஒரு பக்தரும்மிஸ் செய்திருக்கமாட்டார்கள்.

பல பக்தர்கள், இந்த சிலையின் முன்னால் நின்று அந்த ஆச்சார்ய ஸ்வாமிகளுடன் நேருக்கு நேர் பேசுவது போல் தங்களது பிரார்த்தனைகளை மனதில் இருந்து இறக்கி வைக்

கிறார்கள். இன்னும் சில பக்தர்கள் மனமுருகி, கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டிருப்பதையும் இங்கே நான் பார்த்திருக்கிறேன்.

பலரையும் புருவம் உயர்த்த வைக்கும் இந்த அற்புதமான ஃபைபர் சிலையை வடிவமைத்த பாக்கியவான்மேற்கு வங்காள மாநிலம் புர்லி யாவில் வசித்து வரும் துர்பா தாஸ் என்ற கலைஞர். இந்த சிலையை வடிவமைப் பதற்கு முன் மகா பெரியவாளுக்கும் துர்பா தாஸுக்கும் ஸ்நான பிராப்திகூடக் கிடையாது. பெரியவாளின் புகைப்படங்களை மட்டும் பார்த்து மனம் ஒன்றி, அவர் வடித்த வடிவம் இது.

பெரியவா ஸித்தி ஆன பிறகும், அவரை நேரில் பார்த்து தரிசனம் செய்வது போன்ற ஆனந்தத்தை அவரது பக்தர்கள் பெற வேண்டும் என்கிற நோக்கில், இந்த சிலையை காஞ்சி ஸ்ரீமடத்துக்கு அளித்துப் புண்ணியம் பெற்றவர்மகா பெரியவாளின் பக்தரும், காஞ்சி ஸ்ரீமடத்தின் அத்யந்த தொண்டருமான பெங்களூரு வி.எஸ். ஹரி.

தனது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் துவங்கி நடைபெற்றுக் கொண்டி ருக்கும்போதுதான் நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு, ஸ்ரீசந்திர மௌளீச்வரரின் திருவடியில் கலந்தார் மகா பெரியவா.

திருவையாறுக்கு அருகில்தன் தாயார் மஹாலட்சுமி அம்மாளின் சொந்த ஊரான ஈச்சங்குடியில் அமைந்துள்ள அவரது பூர்வீக கிரஹத்தை ஒரு பாடசாலையாக மாற்றிப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மகா பெரிய வாளுக்கு இருந்து வந்தது. மகா பெரியவா ஸித்தி ஆன தினத்தன்று காலை இது குறித்துப் பேசுவதற்கும் மகா பெரியவாளைத் தரிசிப்பதற் கும் வந்திருந்தார் வி.எஸ். ஹரி.

மகா ஸ்வாமிகளின் பரி பூரண ஆசியோடும், அனுக் ரஹத்தோடும் ஈச்சங்குடி பாடசாலைத் திருப்பணி களைத் துவங்குவதற்கு அவரிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார் ஹரி. இது நடந்தது பிற்பகல் நெருங்கும் வேளையில். சரியாக ஓரிரு மணி நேரம் கழித்து மகா ஸ்வாமிகள் ஸித்தி அடைந்து விட்டார்.

வி.எஸ். ஹரி நம்மிடம், ‘அன்னிக்கு மகா பெரியவா கூட ரொம்ப நேரம் இருந்தேன். நான் அங்கிருந்து திரும்பிய சில மணித் துளிகளில், அவர் ஸித்தி ஆன தகவல் கிடைத்தது. கடைசி நேரத்தில் நாம் தரிசித்த அந்தத் திருவுருவத்தை என்றென்றும் பக்தர்கள் தரிசிக்கும்படி செய்ய வேண்டும் என்கிற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. அதன் விளைவுதான்பெறற்கரிய பொக்கிஷமான இந்த ஃபைபர் சிலையை மேற்கு வங்காள மாநிலத்தில் தயார் செய்தேன். என் வாழ்க்கையிலேயே இது ஒரு பெரும் பேறு என்று சொல்வேன்.

மகா பெரியவா ஸித்தி ஆன முதலாம் ஆண்டு தினம் அதே வருட (1994) இறுதியில் வந்தது. அந்த தினத்துக்குள் ஃபைபர் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படி நடத்தியும் விட்டேன். மேற்கு வங்க மாநிலம் புர்லியாவில் இருந்து நான் கொண்டு வந்த சிலையை ஸ்ரீஜயேந்திரரிடம் முதலில் காண்பித்தேன். பிரமித்துப் போனார். பார்த்த மாத்திரத்தில் அவருக்குப் பேச்சே எழவில்லை. ‘இவ்ளோ தத்ரூபமா பண்ணி இருக்காளே என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார்.

மகா பெரியவாளின் தாயார் திருமதி மஹாலட்சுமி அம்மாளின் சொந்த ஊர்ஈச்சங்குடி. திருவையாறுக்குக் கிழக்கே சுமார் ஆறு கி.மீ. தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.

மஹாலட்சுமி அம்மாளின் ஈச்சங்குடி இல்லத்தை ஒரு பாடசாலையாக மாற்ற வேண்டும் என்று மகா பெரியவாளுக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை இருந்து வந்தது. தான் உடல்நலம் குன்றி இருந்த காலகட்டத்தில் ஸ்ரீஜயேந்திரரிடமும் ஸ்ரீவிஜயேந்திரரிடமும் இந்தப் பாடசாலைப் பணியைத் துரிதப்படுத்துமாறு மகா பெரியவா சொல்லி இருக்கிறார். அதன்படி மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்களின் பொருளுதவியுடன் இந்தப் பாடசாலைப் பணிகள் பூர்த்தி ஆகி உள்ளன. விரைவில் இது திறக்கப்பட உள்ளது. எத்தனையோ பக்தர்கள் தங்கள் வீடு விற்றதில் இருந்து கிடைத்ததையும், சேமிப்பில் இருந்தும் கொடுத்து இந்த மகா தொண்டுக்கு உதவி இருக்கிறார்கள். மகா பெரியவாளின் ஆசிர்வாதத்தோடு விரைவில் இந்தப் பாடசாலை இயங்க இருக்கிறது என்கிறார் வி.எஸ்ஹரிஇந்தப் பாடசாலை அமைவதற்குத் தன்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி இருக்கிறார் இவர்.

மஹாலட்சுமி அம்மாள் இருந்த வீட்டையே மாற்றி, கீழ்த் தளம், மேல்தளம் என்று பாடசாலை மாணவர்கள் தங்கிக் கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில் கட்டி இருக்கிறார்கள்.

மகா பெரியவா விருப்பப்பட்ட ஆசை நிறைவேறி இருப்பது, அவரது அத்யந்த பக்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சிதான்!