இந்தியாவில் கிடைக்கும் மனச்சாந்தி வேறு எங்கும் கிடைக்காது

பெருமை கொண்ட பாரத பூமி

கொஞ்சம் நீண்ட தெருசிவப்பு கலர் ஓடு வேய்ந்த வீடுகள் வரிசையாகத் தென்பட்டன. பார்ப்பதற்கே அழகாக இருந்தது. தெரு ஓரங்களில் ஆங்காங்கே பக்தர்களின் கூட்டம் அமர்ந்திருந்தது. வேங்கடரமணிதான் (சென்னையில் அப்போது வசித்த பிரபல ஆங்கில எழுத்தாளர்) என்னை சென்னையில் இருந்து அழைத்துச் சென்றார்.

மெள்ள நடந்து வந்து தெருவின் மையப் பகுதியை அடைந்தோம். திருவிழா போல் களை கட்டி இருந்த ஒரு வீட்டின் வாசலில் சட்டென்று நின்றார் வேங்கடரமணி. எண்ணற்ற பக்தர்கள் இந்த வீட்டின் உள்ளேயும் வெளியேயும் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரின் முகத்தில் பரபரப்பு இருந்தாலும், சந்தோஷமும் தென்பட்டதைக் கண்டேன்.

அந்த வீட்டினுள் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை என்னை அழைத்துச் சென்ற பின் திண்ணை போல் இருந்த ஒரு இடத்தில் அமர வைத்தார் வேங்கடரமணி.

ஸ்ரீமடத்தின் சிப்பந்திகள் தங்களுக்கு உண்டான பணிகளில் மும்முரமாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையை மையமாக வைத்து வேக வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு சிப்பந்தியை மிகுந்த மரியாதையுடன் அழைத்த வேங்கடரமணி, எனது வருகை குறித்து ஸ்வாமிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு சொன்னார். சிரத்தையாகச் செவி மடுத்துக் கேட்ட அந்த சிப்பந்தியும், ஸ்வாமிகள் இருந்ததாகச் சொல்லப்படும் அறையை நோக்கிச் சென்றார்.

பொழுது போகவில்லை என்பதற்காக அங்கேயே எழுந்து நடந்து கொண்டிருந்தேன். என் நாட்டில் பார்க்க முடியாத கிராமத்து அதிசயங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லலாம்.

அரை மணி நேரம் கழித்து வேங்கடரமணி அனுப்பிய சிப்பந்தி திரும்பி வந்தார். எனக்கும் வேங்கடரமணிக்கும் பரபரப்புஸ்வாமிகளிடம் இருந்து சந்திப்புக்கான உத்தரவு கிடைத்திருக்கும் என்று. ஆனால், எங்களை நெருங்கிய சிப்பந்தியின் முகம் இயல்பாக இல்லை. அவர் கொண்டு வரும் பதில் எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டோம்.

வேங்கடரமணியைப் பார்த்து அந்த சிப்பந்தி, ‘இருநூறு பேருக்கும் மேல் பெரியவாளைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நேற்றைய தினம் இரவில் இருந்தே இங்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தாங்களும் தாங்கள் அழைத்துக் கொண்டு வந்த விருந்தினரும் இன்றைக்கு எப்படியும் சந்திக்க இயலாது. எனவே நாளை வாருங்கள்என்று சொன்னார்.

சூழ்நிலையின் தாக்கம் புரிந்தாலும், சென்னையில் இருந்து ஒரு ஐரோப்பியரைஅதுவும் பெரியவா சந்திப்புக்காகப் பிரத்தியேகமாகக் கூட்டிக் கொண்டு வந்த வேங்கடரமணிக்கு சிப்பந்தியின் இந்த பதில் இதம் தரவில்லை.

தானே இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். எவரையும் எதிர்பாராமல் விறுவிறுவென்று உள்ளே நடந்தார். தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவர்களை இடித்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும் விடாப்பிடியாக முன்னேறியபடியும் போனார்.

ஒரு சிலர் இவரது நடவடிக்கை கண்டு நேரடியாகத் திட்டவும் செய்தனர். இன்னும் சிலர் வேங்கடரமணியின் தோற்றம் கண்டு அதற்கு ஒரு மரியாதை கொடுத்து, அவர் தங்களைக் கடந்து சென்ற பின் முணுமுணுக்கச் செய்தனர். ஆனால், அவர்களுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. கவலைப்படவும் இல்லை. காரியத்திலேயே கண்ணாக முன்னேறிக் கொண்டிருந்தார்.

ஒரு சில நிமிடங்களிலேயே வேங்கடரமணி திரும்பினார். அவரது முகத்தில் சந்தோஷம். உதட்டில் புன்னகை. எதையோ சாதித்துக் காட்டிய பெருமிதம் அவரிடம் இருந்தது.

என்னை நெருங்கியவர், ‘இன்னும் ஒரு மணி நேரத்தில் மகா பெரியவாளை நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள். அவரிடம் அனுமதி வாங்கி விட்டேன்என்றார் பெருமிதமாக.

எனது ஆசை பூர்த்தி ஆகப் போகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் சந்திக்க விரும்பியஆசைப்பட்டசந்நியாசியைக் காண இருக்கிறேன். என்னுள் ஒரு பரவசம் கிளம்பியது.

ஒரு மணி நேரம் போக வேண்டுமே என்பதற்காக அங்கும் இங்கும் உலாத்தினேன். தெருவுக்கு வந்தேன். ஸ்வாமிகளுடன் யாத்திரையாக வந்த யானைகள் மற்றும் ஒட்டகங்களுக்குப் பணியாட்கள் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தனர். ஸ்வாமிகளை அவ்வப்போது சுமந்து செல்லும் யானை இதுதான் என்று ஒரு குறிப்பிட்ட யானையை பலரும் அடையாளம் காட்டி அதற்குப் பழங்களும் தேங்காய்களும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் எனக்கு நினைவு வந்ததுசமயம் சார்ந்த பெரியவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பூ, பழம், கல்கண்டு போன்ற மங்கலப் பொருட்களை வாங்கி அவர்களுக்குக் காணிக்கையாகச் செலுத்துவது தமிழ் மரபு என்று. அவசரம் அவசரமாக அருகில் உள்ள கடைக்குச் சென்றேன். என்னால் சுமக்கக் கூடிய அளவுக்கு தரமான சாத்துக்குடி பழங்களையும் பூச்சரத்தையும் தாராளமாகவே வாங்கிக் கொண்டேன்.

ஒரு மணி நேரம் ஓடியது. அழைப்பு வந்தது. வேங்கடரமணியுடன் ஸ்வாமிகளை சந்திப்பதற்காகப் போனேன்.

அந்த வீட்டின் பல அறைகளைக் கடந்து நடந்தேன். சிறிய கதவு வழியே குறுகலான ஓர் அறைக்குள் நுழைந்தேன்.

மேஜைநாற்காலி எதுவும் இல்லாத இருட்டறை. மங்கலான எண்ணெய் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் கெச்சலான சிறிய உருவம். நான் தேடி வந்த ஸ்வாமிகள் இத்தனை எளிமையான அன்பரா? எனக்குள் ஒரு சிலிர்ப்பு. வாங்கி வந்திருந்த காணிக்கைகளை அவர்களுக்கு சமர்ப்பித்து விட்டு இந்த ஊர் கலாசாரப்படி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். என் கண்களில் ஒரு பரவசம் தோன்றுவதை உணர முடிந்தது.

ஸ்வாமியின் முகம் பார்த்தேன். தலையில் தென்பட்ட நரையைப் பார்த்து வியந்தேன். காவி வஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு ஒரு தூணில் ஏகாந்தமாக சாய்ந்து அமர்ந்திருந்தார்.

கோதுமை நிறத்தில் அவரது உயரிய முகம் எனது நினைவில் அப்படியே ஒரு படம் போல் பதிவாகி விட்டது. ‘தெய்வீகக் களைஎன்று பிரெஞ்சு மக்கள் கூறுவார்கள்அது அப்படியே அவர் முகத்தில் குடி கொண்டிருந்ததைக் கண்டேன். அவருடைய தோற்றத்தில் ஒரு அடக்கமும் அந்த கரிய விழிகளில் அழகும் சாந்தமும் நிறைந்திருந்தது. அந்த முகம் பழைய காலத்து கிறிஸ்தவ குருமார்களை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. ஆனால், இந்த முகத்தில் கூடுதலாக அறிவுக் கூர்மையும் தென்பட்டது. இந்த தரிசனத்தில் என்னையே நான் இழப்பது போல் இருந்தது…”

ஐரோப்பியரான பால் பிரண்ட்டன்மகா பெரியவாளை சந்தித்த முதல் நிகழ்வைஅவரது அனுபவம் வாயிலாகவே மேலே விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சந்திப்பு நிகழ்ந்தது கி.பி. 1931 ஜனவரி மாதத்தின் துவக்கத்தில்.

உண்மையான துறவிகளைச் சந்திக்க வேண்டும்இந்திய தேசத்து அற்புதங்களை அள்ளிப் பருக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு வந்த பால் பிரண்ட்டன்காஞ்சி மகா பெரியவா, ஸ்ரீரமண மகரிஷி, மெஹர் பாபா போன்ற மகான்களைச் சந்தித்துத் தன் ஆன்மிக தாகத்தைத் தணித்திருக்கிறார்.

மகா பெரியவாளின் எளிமை, பற்றற்ற தன்மை, கருணை போன்ற பல நற்குணங்கள் பால் பிரண்ட்டனை வெகுவாகக் கவர்ந்து விட்டது. இவற்றை எல்லாம் தனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.

வெளிநாட்டினர் ஏன் இந்தியாவுக்கு வருகின்றனர்அவர்களது யாத்திரையில் எது முதன்மை பெறுகிறது என்று மகா பெரியவா தீர்க்க தரிசனமாகச் சொல்லி இருக்கிறார்.

ஸ்ரீராமபிரான், கிருஷ்ண பரமாத்மா, நாயன்மார்கள், ஆழ்வார்கள், தவசீலர்கள் உள்ளிட்டோர் அவதரித்த பெருமைக்குரிய பூமி இந்த பாரத பூமி. இந்த பூமியில் தூய மனது உடையவர்கள், தாங்கள் நினைத்தது நடத்தப் பெறுவார்கள்.

புனிதத் தன்மை பெறுவதற்கு உலகிலேயே இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாட்டையும் உதாரணமாகக் கூற மாட்டார்கள். கூறவும் முடியாது.

வெளிநாடுகளுக்கு யாத்திரை செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அங்கே இயற்கைக் காட்சிகளைக் காண முடியும். தொழில் நுட்பங்களையும், தொழில் வளர்ச்சியையும் காண முடியும். கோட்டைக் கொத்தளங்களைக் காண முடியும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியைக் கண்டு வியந்து நிற்க முடியும்.

ஆனால், நம்முடைய நாட்டுக்கு யாத்திரை வருபவர்கள் புனிதமான தலங்களைத் தரிசித்து இன்புற வருகிறார்கள். கோயில்களின் சிறப்பும், கோபுரத்தின் அழகும் நம் நாட்டைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

மற்ற நாடுகளில் யாத்திரை செய்தால் மனதுக்கு எந்த வித சுகமும் கிடைக்காது. அதனால்தான் வெளிநாட்டினர்கூட இந்தியாவுக்குச் சென்றால் மன சாந்தி கிடைக்கும் என்று வருகிறார்கள். இந்தியாவில் கிடைக்கின்ற மன சாந்தி வேறு எங்கு கிடைக்காதுஎன்கிறார் மகா பெரியவா.

மகா பெரியவாளின் ஞானம் பலரும் வியந்த ஒன்று. குருமார்களுக்கே அவர் ஒரு குருமாராகத் திகழ்ந்தார்.