கடவுள் நம்மை காப்பாற்றுவாரா?

டவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?’

மகா பெரியவா வழங்கி இருக்கும் ஒரு உபதேசத்தைப் பார்ப்போமா? எத்தகைய ஒரு கஷ்டம் வந்தாலும் ‘எனக்கே இப்படி ஒரு சோதனையா?’ என்று கடவுளையே கரித்துக் கொட்டும் ஆசாமிகள் அவசியம் இதைப் படிக்க வேண்டும். அனைவரும் இதைப் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. பின்பற்றவும் வேண்டும்.

மகா பெரியவா உபதேசத்தில் இருந்து…

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையாவது அல்லது படுத்துக் கொள்ளப் போகும்போதாவது அன்றைக்கு நாம் செய்த காரியங்களை அலசிப் பார்க்க வேண்டும். அன்றன்றைக்கு நாம் என்னென்ன தப்பு செய்திருக்கிறோம் என்பதை ஒரு டைரியில் குறித்துக் கொள்வது நல்லது. கூடவே, அந்தத் தப்பை அடுத்த நாள் முதல் செய்யாமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும்… இதற்குத் தேவையான தைரியத்தையும் புத்தியையும் கடவுள் நமக்குத் தர வேண்டும் என்று மனபூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

நாம் செய்திருக்கிற தப்புகளை நாமே நினைத்து – அலசிப் பார்க்கும்படியான சந்தர்ப்பத்தை ஒரு சக்தி நமக்குக் கொடுத்திருக்கிறதே… அந்தப் பராசக்தியிடத்தில், ‘அம்மா… நான் இனிமேல் இது போன்ற தப்புகளை செய்யாமல் இருப்பதற்குப் போதிய தைரியத்தையும் புத்தியையும் கொடு’ என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், இத்தகைய தப்பு செய்கிற பெரும்பாலானவர்கள் பொதுவாக என்ன நினைப்பார்கள் தெரியுமா? தாங்கள் செய்த தப்புகளை வசதியாக மறந்து விட்டு, ‘ஸ்வாமியைப் பிரார்த்தனை பண்ணுவதன் பயன் எனக்குக் கஷ்டம்தானா? அவர் என்னைக் கவனிக்கவே இல்லையே?’ என்று துக்கப்பட்டு ‘ஸ்வாமிக்குக் கண் இல்லை… காது இல்லை’ என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள்.

இவர்கள் தாங்கள் செய்த நல்ல காரியங்களை – தங்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமே நினைத்துப் பார்ப்பதனால் இப்படி ஸ்வாமியிடம் கோபம் அடைகிறார்கள்.

இப்படிக் கோபம் வரக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்? நாம் என்னென்ன கெட்ட காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரியும். இவ்வளவு கெட்ட காரியங்கள், பாவங்கள் செய்திருக்கிற நமக்கு ஒரு வேளைச் சாப்பாடு கிடைக்க எந்த வகையிலேனும் நியாயம் உண்டா? சௌகரியமாக நம்மை வைத்திருப்பது நியாயமா? நமக்கு உண்ண உணவு கொடுத்து, உடை கொடுத்து, தங்குவதற்கு இடம் கொடுத்து வசதியாக இருக்கும்படி ஸ்வாமி பண்ணி இருக்கிறாரே… அவர் கருணை அல்லவா பெரிது! போற்றுதலுக்குரியது.

ஆனால், ஏன் இதைச் செய்யவில்லை… அதைச் செய்யவில்லை என்று பகவானிடம் கோபித்துக் கொள்கிறோமே… இது நியாயமா? எத்தனை பாவம் செய்தாலும் அவன் நம்மை அதில் இருந்து ஓரளவு காப்பாற்றி வருகின்றானே… அதை நினைத்து சந்தோஷம் அல்லவா பட வேண்டும்?!”

மகா பெரியவா அருளியது, எத்தனை சத்தியமான வார்த்தைகள். ஓரிரு நல்லது செய்து விட்டு, நிறைய தவறுகளைச் செய்து விட்டு, ‘கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்’ என்று நம்புவது, எந்த வகையில் நியாயம்?

செய்த தவறுகளை மறைப்பதற்கு, சில நல்லதுகளை செய்தது மாதிரி அல்லவா ஆகி விடும்?