‘பூகொண்டு வா… ஆபரணம் வேண்டாம்!’
அன்றைய தினம் ஸ்ரீமடத்தில் சர்வேஸ்வரனாக எழுந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
எண்ணற்ற பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கருணை மகானின் திருவடிகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து தங்களது குறைகளைச் சொல்லி, அவரது திருக்கரத்தால் பிரசாதம் பெற்று நகர்ந்து கொண்டிருந்தனர்.
பக்தர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பழங்கள், திராட்சை, முந்திரி போன்றவற்றை பெரியவாளுக்குச் சமர்ப்பித்து, கண்களில் நீர் கசிய தரிசனம் செய்து ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்தனர்.
அப்போது பக்தர் ஒருவர், பெரிய மூங்கில் கூடை நிறைய கொன்றைப்பூக்களைக் கொண்டு வந்து பெரியவா பார்வை படும்படியான இடத்தில் – அவருக்கு முன்னால் வைத்தார்.
கொன்றைப்பூக்கள் எப்படி மலர்ந்து காணப்பட்டதோ, பெரியவாளின் முகமும் அதுபோலவே ஏகத்துக்கும் மலர்ந்தது. காரணம் கயிலைவாசனான சிவபெருமான் மிகவும் விரும்பி அணியும் மலர் இது.
மழைக் காலத்தில் மலர்கின்ற மஞ்சள் நிறமுள்ள கொன்றைப்பூ, மணம் மிக்கது. தேன் நிறைந்தது. இதைத் தன் சிரசில் அணிந்து கொள்வதென்றால், அவ்வளவு விருப்பம் ஈசனுக்கு என்று புராணங்களும் சங்க நூல்களும் சொல்கின்றன.
எனவே, ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு அணிவிக்கலாம் என்று எண்ணி, பக்தர் கொண்டு வந்த ஒரு கூடைப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
அந்த இடம் முழுக்கவே மணம் வீசிக் கொண்டிருந்தன கொன்றைப்பூக்கள். கூடையின் விளிம்பையும் மீறி வெளியே பிதுங்கி வழிந்து கொண்டிருந்தன பூக்கள்.
அந்தப் பக்தரைப் பார்த்துப் பெரியவா கேட்டார்: “கூடையிலே வேற என்ன கொண்டு வந்திருக்கே?”
அந்த பக்தர் இடக் கையை மார்பில் கட்டிக் கொண்டு, வலக்கையால் வாயைப் பொத்தியபடி, “கொன்றைப்பூ மட்டும்தான் பெரியவா” என்றார் பவ்யமாக.
“பார்த்தா அப்படித் தெரியலியே…” – பெரியவா பதிலில் ஒரு பொடி இருந்தது.
பெரியவா இப்படிச் சொன்னதும் அந்த பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வதென்று விழித்தார். காரணம் – அவரைப் பொறுத்தவரை கொன்றைப்பூக்கள் மட்டும்தான் இருந்தன.
பெரியவாளே இப்படிச் சந்தேகத்துடன் கேட்கிறார் என்றால், அப்படிக் கூடைக்குள் வேறு என்னதான் இருக்கிறது?
அங்கு கூடி இருந்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் அடுத்து பெரியவா சொல்லப் போகும் பதிலைத் தெரிந்து கொள்வதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தது.
பெரியவா புன்னகையுடன் அந்த பக்தரைப் பார்த்துத் திருவாய் மலர்ந்தார்: “ஈஸ்வரனுக்கு ப்ரியமான புஷ்பங்களை மட்டும் நீ கொண்டு வரலே. அந்த சர்வேஸ்வரனுக்கு ஆபரணமும் கொண்டு வந்திருக்கியே…”
கொன்றைப்பூக்களைக் கொண்டு வந்த பக்தருக்கும் சரி… அங்கே கூடி இருந்த மடத்துச் சிப்பந்திகள் மற்றும் பக்தர்களுக்கும் சரி… எவருக்குமே பெரியவா என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை.
பக்தர் பதில் ஏதும் பேசாமல் பெரியவாளின் திருமுகத்தையே ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
காலியாக இருக்கும் இரண்டு மூங்கில் தட்டுகளை அங்கிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார் பெரியவா. பிறகு, “கூடையில் நீ கொண்டு வந்திருக்கிற பூக்களை இந்தத் தட்டுகள்ல கொட்டு. கொஞ்சம் தள்ளி ஓரமா எடுத்துண்டு போய் கொட்டு… ஜாக்கிரதை” என்றார்.
பெரியவா எது சொன்னாலும் அதில் ஓர் அர்த்தம் இருக்கும் என்பதை உணர்ந்தவர் ஆயிற்றே அந்த பக்தர்! எனவே, பெரியவா எடுத்துக் கொள்ளச் சொன்ன இரண்டு மூங்கில் தட்டுகளை எடுத்துக் கொண்டு கொன்றைப்பூக்கள் அடங்கிய மூங்கில் கூடையுடன் ஓர் ஓரமாகச் சென்றார். கூடையின் மேல் சுற்றிக் கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து அதில் இருக்கும் பூக்களை முதல் தட்டில் வெகு கவனமாகக் கொட்டினார்.
அவ்வளவுதான்… தட்டில் கொட்டியவுடன் அடுத்த விநாடி ‘புஸ்‘ஸென்று ஒரு சர்ப்பம் சீறிக் கொண்டு மூங்கில் தட்டில் இருந்து எகிறிக் குதித்து வெளியேறியது. பக்தர் உட்பட ஒரு சில பக்தர்கள் மட்டுமே அந்த சர்ப்பத்தைக் கவனித்தனர். கண நேரத்தில் அனைவரது பார்வையில் இருந்தும் மறைந்து, வந்த சுவடே தெரியாமல் அந்த சர்ப்பம் போயே போயிற்று.
கொன்றைப் பூக்கள் கொண்டு வந்த பக்தருக்கும் சரி… கூடி இருந்தவர்களுக்கும் சரி… படபடப்பு அடங்க வெகு நேரம் ஆனது.
அதன் பின் பக்தரைப் பார்த்து, “சந்த்ரமௌலீஸ்வரருக்கு எத்தனை கூடை பூ வேணாலும் கொண்டு வா… ஆபரணம் எல்லாம் வேண்டாம். நாகாபரணம் ஸ்ரீமடத்துலயே இருக்கு” என்று பெரியவா புன்னகையுடன் சொன்னார்.