‘ஜகத்குரு‘ என்கிற சொல் மகா பெரியவாளுக்கு முற்றிலுமாகப் பொருந்தும். இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் அவர் குருவாகத் திகழ்ந்தார். ஜாதி, மதம், பணக்காரன் – ஏழை, வேண்டியவன் – வேண்டாதவன்… இப்படி எதையும் மகா பெரியவா பார்த்ததே இல்லை.
தன்னை தரிசிக்க வரும் எந்த ஒரு அன்பரையும் பார்க்காமல் திருப்பி அனுப்பியதே இல்லை. எப்படிப்பட்ட தீய குணங்களை மனதுள் வைத்துக் கொண்டு மகா பெரியவாளைப் பார்க்க வந்தவருக்கும் அவரது திருச்சந்நிதியில் அனுமதி கிடைத்ததுண்டு.
பிரிட்டிஷார் நம் தேசத்தை ஆண்ட காலத்தில் நடந்த சுவையான சம்பவம் இது –
அது 1931 –ஆம் ஆண்டு… இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கும், சுதந்திரம் வேண்டிப் போராடி வந்த காங்கிரஸ் கட்சிக்கும் அவ்வப்போது கடும் மோதல் நடந்து கொண்டே இருந்து வந்தது.
ஒரு சில பகுதிகளில் சுதந்திரப் போராட்டம் வலுவாக இருந்து வந்த நேரம்… வெள்ளையரை எதிர்த்த காங்கிரஸ் சம்பந்தப்பட்ட பலர் மீதும் ஏதேனும் ஒரு பொய் வழக்குப் போட்டு அவர்களைக் கைது செய்து, தொடர்ச்சியாக சிறையில் தள்ளி சித்ரவதை செய்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். தவிர, ‘காங்கிரஸ் இயக்கத்தினரோடு பொதுமக்கள் எவரும் தொடர்பு ஏதும் வைத்துக் கொள்ளக் கூடாது… அவர்களை சந்திக்கக் கூடாது‘ என்றெல்லாம் அப்பாவிகளை ஏகத்துக்கும் மிரட்டி வைத்திருந்தது.
சரியாக இந்தக் காலகட்டத்தில் மகா பெரியவா வட ஆற்காடு மாவட்டத்தில் ஆரணியில் முகாமிட்டிருந்தார். தினமும் ஏராளமான பக்தர்களும் உள்ளூர் மக்களும் முகாமுக்கு வந்து மகா பெரியவாளை தரிசித்து, பிரசாதம் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு நாள் காலையில் மகா பெரியவாளைப் பார்ப்பதற்காக காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து சிலர் அந்த முகாமுக்கு வந்திருந்தார்கள். பெரியவாளின் அனுமதிக்காக வெளியே காத்திருந்தார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஸ்ரீமடத்துக் காரியதரிசிகள் பதறிப் போனார்கள். காரணம் இந்த காங்கிரஸ் அன்பர்கள் மகா பெரியவாளைத் தரிசித்து விட்டுப் போனால், அந்தத் தகவல் எப்படியாவது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காதுகளுக்குப் போய் விடும். இதன் மூலம் மகா பெரியவாளுக்கும், ஸ்ரீமடத்துக்கும் நாளை ஏதாவது இடைஞ்சல் வந்தால் என்ன செய்வது என்பதுதான் காரியதரிசிகளின் கவலை!
இருந்தாலும், இந்த விஷயத்தைப் பெரியவாளின் காதுகளுக்கே கொண்டு போய் விடலாம் என்று நேராக அவரிடமே போய் விஷயத்தைச் சொன்னார்கள். ஸ்ரீமடத்து மேனேஜர், ‘தங்களை சந்திப்பதற்கு காங்கிரஸ் ஆசாமிகளுக்கு இப்போது அனுமதி கொடுத்தால், நாளை அது நமக்குப் பிரச்னையாக ஆகி விடுவதற்கும் வாய்ப்பு இருக்கு பெரியவா. மடத்துக்கு பிரிட்டிஷ் அரசு தரப்பில் இருந்து ஏதேனும் சிக்கல் வரும். எனவே, வந்திருப்பவர்களுக்கு ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி அனுப்பி விடலாம் என்று தோன்றுகிறது. அப்படியே செய்து விடட்டுமா?’ என்று கேட்டு மகா பெரியவாளின் முகம் பார்த்து நின்றிருந்தார்.
பெரியவா அனைத்தையும் கேட்டு முடித்தார். சிறிது நேரத்துக்கு எதுவும் பேசவில்லை. ‘எப்படியும் காங்கிரஸ்காரர்களை சந்திப்பதற்கு பெரியவா அனுமதி மறுத்து விடுவார்‘ என்பதில் மேனேஜர் உட்பட அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.
பிறகு, குரலில் உறுதியுடன் பெரியவா பதில் அளித்தார். “அவர்கள் அனைவரையும் இங்கே வரச் சொல். தவிர, வந்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் அனைவருக்கும் ஸ்ரீமடத்திலேயே உணவு தயாரிக்கச் சொல். என்னை தரிசனம் செய்த பின் எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்” என்றார்.
மேனேஜர் உட்பட மடத்துக் காரியதரிசிகளுக்கு அதிர்ச்சி. பெரியவா இப்படி அனுமதி வழங்கி, அவர்களுக்கு உணவு உபசாரமெல்லாம் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த காங்கிரஸ்காரர்கள் அனைவரும் பெரியவாளைத் தரிசித்துப் பேசி விட்டு, உணவருந்தி விட்டு மகிழ்ச்சியாகத் திரும்பிப் போனார்கள்.
இதன் பின் ஒரு சில நாட்கள் கழித்து ஸ்ரீமடத்தின் மேனேஜர், பெரியவாளிடம் போய் “நல்லவேளை பெரியவா… காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து தங்களை தரிசித்துச் சென்றது ஒன்றும் பிரச்னை ஆகவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.
அப்போது மேனேஜரிடம் பெரியவா சொன்னார்:
“பிரச்னை ஆகும்னு நாம நினைக்கறதெல்லாம் பெரும்பாலும் பிரச்னை ஆகறதில்லை. தவிர, என்னைத் தரிசிக்க வந்தவர்களை – அது யாராக இருந்தாலும் – சந்திக்க மறுத்து வாசலோடு திருப்பி அனுப்பி விட்டால், ஜகத்குரு என்கிற பட்டம் எனக்குத் தேவை இல்லையே… இந்த பீடத்தில் அமர்வதற்கான தகுதியையும் நான் இழந்தவன் ஆகி விடுகிறேன். ஒரு பீடாதிபதிக்கு விருப்பு – வெறுப்பு கூடாது. என்னைப் பொறுத்தவரை எல்லோருமே சமம்தான்.’கண்களில் நீர் வழிய மகா பெரியவாளின் திருவடிகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த மேனேஜர், தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். ‘ஜகத்குரு’வுக்கு பெரியவா சொன்ன விளக்கத்தில் இருந்து அந்த மேனேஜர் விடுபட்டு வெளியே வர நீண்ட நேரம் ஆனது