பெரியாளின் ஆசி பெற்ற ஸ்தபதி

ஒரே பெயரில் இரண்டு பிரபலங்கள் இருப்பது ஒன்றும் அபூர்வம் இல்லை. ஆனால், ஒரே பெயர் கொண்ட அந்த இருவரும் ஒரே துறையில் கோலோச்சுவது கொஞ்சம் அபூர்வம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆலயத்துக்கு வேண்டிய தெய்வ விக்கிரகங்களையும், ஆலயம் தொடர்பான இன்ன பிற சிற்ப வேலைகளையும் வடிப்பவர்களை ஸ்தபதி என்கிறோம். சிற்ப சாஸ்திரம், சம்ஸ்க்ருதம், ஆகம சாஸ்திரம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்தான் முழுமையான ஸ்தபதி ஆவார்.

இப்படிப்பட்ட உயர்ந்த தகுதிகளுடன் இந்தத் துறையில் கணபதி ஸ்தபதி என்கிற பெயரில் இருவர் பிரபலமாக விளங்கி வந்தனர். அவர்களில் ஒருவர் பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி. இவரது தந்தையார் பெயர் வைத்தியநாத ஸ்தபதி. முக்கடல் சங்கமிக்கும் கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் திருவள்ளுவர் பெருமானுக்கு 133 அடி உயரத்தில் சிலையை வடித்தவர் இவர்தான் என்றால், அனைவரும் எளிதில் இவரைப் புரிந்து கொள்வார்கள்.

வை. கணபதி ஸ்தபதியை சென்னைவாசிகள் சட்டென்று புரிந்து கொள்ளும் வகையில் இன்னொன்று சொல்லலாம். நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டத்தையும் இவர்தான் வடிவமைத்தார். கலைத்துறைக்கு எண்ணற்ற தொண்டு புரிந்த இவர், தனது 84 –வது வயதில் சமீபத்தில் அமரர் ஆகி விட்டார்.

மற்றொருவர் பத்மஸ்ரீ எஸ்.எம். கணபதி ஸ்தபதி. ஸ்ரீகாமாட்சியின் அருளோடும், காஞ்சி மகா ஸ்வாமிகளின் பரிபூரண ஆசியோடும் தன் துணைவியாரோடு தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார் இவர்.

பண்டைய மன்னர்கள் காலத்தில் முழுக்க முழுக்கக் கருங்கற்களை மட்டுமே பயன்படுத்தி ஆலயங்கள் கட்டுவது வழக்கம். ஆனால், இந்த நாளில் இதெல்லாம் இப்படிக் கட்டுவது சாத்தியமில்லை. என்றாலும், பழங்கால கற்கோயிலை நினைவுபடுத்தும் விதமாக காஞ்சிபுரத்துக்கு அருகே ஓரிருக்கை என்னும் கிராமத்தில் காஞ்சி மகா ஸ்வாமிகள் மணி மண்டபத்தை அனைவரும் வியக்கும் விதத்தில் வடிவமைத்தவர் இந்த எஸ்.எம். கணபதி ஸ்தபதி.

தவிர, 51 அட்சர தேவதைகளுக்கு குஜராத் அம்பாஜியில் ஆலயம் மற்றும் ஹைதராபாத்தில் உசைன் சாகர் ஏரியில் அமைந்துள்ள பிரமாண்ட புத்தர், பத்ராசலம் ராமர் கோயில் என்று ஆந்திராவிலும் இவரது பெயர் இன்றைக்கும் கொடி கட்டிப் பறக்கிறது என்றால், இவருக்கு வாய்த்த கலையே காரணம்.

எஸ்.எம். கணபதி ஸ்தபதியின் வழிகாட்டுதலின்பேரிலும், அவரது மூத்த திருக்குமாரர் சங்கரன் ஸ்தபதி அவர்களின் ஒத்துழைப்புடனும்என் வாழ்க்கைப் பயணம்என்ற எஸ்.எம். கணபதி ஸ்தபதியின் சுய சரித நூலை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இது ஏற்கெனவே வந்த நூல் என்றாலும், அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் தற்போது தயாராகி வருகிறது. விரைவில் இந்த இரு நூல்களும் வெளியாக இருக்கிறது.

விஷயத்துக்கு வருவோம்இந்த இரு கணபதி ஸ்தபதிகளுமே மகா பெரியவாளின் அன்புக்கும் ஆசிக்கும் பாத்திரம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆலயப் பணிகள் விஷயமாகவும், பழைமையான ஆலயங்களுக்குப் புத்துரு தந்ததன் மூலமாகவும், சிற்ப சாஸ்திரத்துக்கு உட்பட்ட விக்கிரக வடிவமைப்பு தொடர்பாகவும் மகா ஸ்வாமிகளை அடிக்கடி தரிசித்துஅவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றவர்கள் இந்த இரு கணபதி ஸ்தபதிகள்.

அப்படிப்பட்ட பெரும் பாக்கியத்துக்கு உண்டான (முதலில் சொன்ன) அமரர் வை. கணபதி ஸ்தபதிக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை இங்கே பார்ப்போம்.

அது 1957 –ஆம் வருடம். கணபதி ஸ்தபதியின் தந்தையாரான வைத்தியநாத ஸ்தபதி சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோயின் பாதிப்புக்கு உள்ளானார் அவர். மகன் கணபதி ஸ்தபதி உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் இது குறித்துப் பெரிதும் கவலைப்பட்டனர். வைத்தியநாத ஸ்தபதிக்கு உரிய சிகிச்சை முறைகளையும் உடனடியாக மேற்கொண்டனர். ஆனால், எந்த ஒரு சிகிச்சையும் பலன் தரவில்லை. தெய்வங்களிடமும் எத்தனையோ பிரார்த்தனைகளை வைத்தனர் குடும்பத்தினர்.

தனது தந்தையின் இந்த நிலை குறித்து கம்பனடிப்பொடி சா. கணேசனிடம் கணபதி ஸ்தபதி வருத்தப்பட்டுச் சொல்லி இருக்கிறார். ஆறுதல் சொல்லிய அவர், “காஞ்சி மகா பெரியவரை நேர்ல பார்த்து சொல்லிப் பாருஎன்று காஞ்சி ஸ்ரீமடத்தின் பக்கம் கணபதி ஸ்தபதியைத் திருப்பினார்.

அதன்படி காஞ்சி மகா ஸ்வாமிகளை நேரில் தரிசித்து, தன் தந்தையாருக்கு ஏற்பட்ட வியாதி குறித்துச் சொல்லி ஆலோசனை கேட்கலாம் என்று வை. கணபதி ஸ்தபதி தீர்மானித்தார். அந்த வேளையில் காஞ்சி மகா ஸ்வாமிகள் எங்கே இருக்கிறார் என்று விசாரித்தபோது காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இளையாற்றங்குடியில் முகாமிட்டிருப்பதாகக் கிடைத்த தகவல் கணபதி ஸ்தபதியை சந்தோஷப்படுத்தியது. காரணம்அவரது சொந்த ஊருக்கு அருகில் உள்ள கிராமம்தான் இளையாற்றங்குடி.

இளையாற்றங்குடி சிறப்பு பற்றி இதே புத்தகத்தில்ஒரே தாரில் 1,008 பழம்அத்தியாயத்தில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 65 –வது பீடாதிபதியாக விளங்கிய மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (பீடாதிபதி காலம் கி.பி. 1851 – 1890) இந்த சிற்றூரில்தான் அதிஷ்டானம் கொண்டுள்ளார்.

காஞ்சி மகா பெரியவாளுக்கு இளையாற்றங்குடியில் முகாம் இடுவதென்றால், அத்தனை குதூகலம். புதுக்கோட்டைப் பக்கம் க்ஷேத்ராடனம் வரும்போதெல்லாம், இளையாற்றங்குடிக்கும் வருகை வந்து 65 –வது ஆச்சார்யரின் அதிஷ்டானத்தில் தங்கி, தியானத்தில் ஏகாந்தமாக ஈடுபடுவார்.

மகா ஸ்வாமிகளை தரிசிப்பதற்காகத் தன் ஊரில் இருந்து புறப்பட்டுச் சென்ற கணபதி ஸ்தபதி இளையாற்றங்குடியை அடையும்போது இரவு மணி ஒன்பதாகி விட்டது.

கணபதி ஸ்தபதியின் தந்தையான வைத்தியநாத ஸ்தபதியை அப்போது பலரும் அறிவார்கள். எனவே, தனது தந்தையாரின் பெயரைச் சொல்லி, அவரது மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்று மடத்தின் மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தார். விஷயம் மகா ஸ்வாமிகளின் கவனத்துக்குப் போனதும் உடனே அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு சீடன் வந்து கணபதி ஸ்தபதியை அழைத்துக் கொண்டு நடந்தான்.

நகரத்தார் மக்கள் உட்பட பலரும் மகா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக அங்கே திரளாகக் குழுமி இருந்தார்கள். அந்தக் கூட்டத்துக்குள் ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டு கணபதி ஸ்தபதியை மகா பெரியவாளின் அருகே அழைத்துச் சென்றான் சீடன்.

மகா பெரியவாளே கூப்பிட்டு அனுப்பி வரவழைக்கும் இவர் யாராக இருக்கும்?’ என்று அங்கு கூடி இருந்த பக்தர்கள் பலரும் கணபதி ஸ்தபதியை நிமிர்ந்து பார்த்தார்கள்.

மகா ஸ்வாமிகளின் சந்நிதி முன்னால் சென்றதும் ஒரு நமஸ்காரம் செய்த கணபதி ஸ்தபதி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். புன்னகைத்தபடி ஆசிர்வாதம் செய்தார் பெரியவா. பிறகு தன் கண்களில் நீர் மல்க, “என் தந்தையார் தன் காலத்தில் எத்தனையோ கோயில்களைக் கட்டியவர். அவரது திருப்பணியால் பல ஆலயங்கள் புதுப் பொலிவு பெற்றுள்ளன. இறைவனுக்கு எப்போதும் சேவையே செய்து வரும் அவருக்கு ஏன் இப்படி ஒரு நோய் வந்திருக்கிறது? இந்த நோயில் இருந்து இவர் குணம் பெற்று சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் என் குடும்பத்தில் உள்ள அனைவரது பிரார்த்தனையும். அதற்குப் பெரியவாதான் அருள் புரிய வேண்டும். ஒரு நல்ல பதிலைச் சொல்லி எங்களின் மனதில் சந்தோஷத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்என்று வேண்டி நின்றார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பெரியவா அமைதியாக இருந்தார். வைத்தியநாத ஸ்தபதியின் உடல் நிலை முன்னேற்றம் அடையுமா என்பது குறித்து காஞ்சி மகா ஸ்வாமிகள் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. அதற்கு பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டார் போலும்.

பிறகு கணபதி ஸ்தபதியைப் பற்றியும், அவர் என்ன படித்திருக்கிறார், சிற்ப சாஸ்திரத்தில் என்னென்ன கலைகளில் தேறி இருக்கிறார், தற்போது பார்த்து வரும் உத்தியோகம், எதிர்காலத் திட்டம் என்ன என்பன போன்ற பல கேள்விகளை அவரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார் மகா பெரியவா.

மகா பெரியவா கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் கணபதி ஸ்தபதி கர்ம சிரத்தையாக பதில் சொன்னாலும், எதற்காகத் தான் இங்கே வந்தோமோ, அது குறித்து எந்த ஒரு பதிலும் மகா ஸ்வாமிகளிடம் இருந்து கிடைக்கவில்லையே என்கிற கவலையில் ஆழ்ந்திருந்தார். தன் தந்தையாரின் உடல்நிலை குறித்து ஏதேனும் நல்ல பதில் சொல்வார் என்று எதிர்பார்த்து வந்தவருக்கு ஏமாற்றம் ஆகி விட்டது. இதனால் தன் தந்தையாரின் உயிருக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்து விட்டார். இந்தக் கவலைகள் அனைத்தும் கணபதி ஸ்தபதியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தன. இவற்றை எல்லாம் அறியாதவரா மகா ஸ்வாமிகள்?

மணி இரவு பத்தரையையும் தாண்டி விட்டது. பெரியவாளின் தரிசனத்துக்காகத் திரளான கூட்டம் அந்த இரவு வேளையிலும் கலையாமல் அங்கே இருந்தது. பிரசாதம் வாங்கிக் கொண்டுதான் இங்கிருந்து நகர வேண்டும் என்கிற சங்கல்பத்துடன் பசை போட்டு ஒட்டி வைத்தது மாதிரி ஏராளமான உள்ளூர் மக்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள்.

ஒரு சில நிமிடங்கள் ஓடிற்று. மகா ஸ்வாமிகளோ திடீரென்று தன் ஆசனத்தில் இருந்து எழுந்தார். கணபதி ஸ்தபதியைப் பார்த்து, “என் பின்னால் வாஎன்று சொல்லி விட்டு, விறுவிறுவென நடக்கத் தொடங்கினார். சற்று தூரம் நடந்து காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 65 –வது பீடாதிபதியான மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர் சற்று நின்றார். பிறகு கணபதி ஸ்தபதியைப் பார்த்து, “நீ இங்கேயே இரு. கொஞ்ச நேரத்தில் வருகிறேன்என்று சொல்லி விட்டு கருவறைக்குள் நுழைந்தார்.

கணபதி ஸ்தபதி மட்டும் வெளியே அமர்ந்தபடி வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தார். சற்று விலகி ஓரிரு சீடர்கள் நின்று கொண்டிருந்தனர்.

நேரமோ ஓடிக் கொண்டே இருந்தது. காத்திருந்த பக்தர்கள் அனைவரும் மெள்ள இங்கே வர ஆரம்பித்தனர். அதிஷ்டானத்தின் கருவறைக்குள் அமர்ந்து தியானத்தில் இருக்கின்ற மகா ஸ்வாமிகளை தரிசித்து விட்டு, சந்நிதியில் தரப்படும் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு மன நிறைவோடு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவு மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. இப்போது ஒட்டுமொத்த கூட்டமும் கலைந்து விட்டிருந்தது. ஸ்ரீமடத்து ஊழியர்களும் கைங்கர்யதாரர்களும் மட்டுமே அங்கே இருந்தனர். ‘இங்கேயே இருஎன்று சொல்லி விட்டு பெரியவா சென்றிருக்கிறாரே என்று அவரது வருகைக்காக இன்னமும் காத்துக் கொண்டிருந்தார் கணபதி ஸ்தபதி.

ஒரு சில நிமிடங்கள் கடந்த பின் அங்கே திடீரென பரபரப்பு குடி கொண்டது. அதுவரை அதிஷ்டானத்தில் தியானத்தில் இருந்த மகா பெரியவா சர்வேஸ்வர சொரூபமாக எழுந்தார். அவரது திருமுகத்தில் கோடி சூரியப் பிரகாசம். எழுந்தவர் ஒரு சர்ப்பமாக வெளியே வந்தார். ‘எங்கே கணபதி ஸ்தபதி?’ என்பதாக அவரது கண்கள் அங்கும் இங்கும் தேடின. பெரியவா யாரைத் தேடுகிறார் என்று ஸ்ரீமடத்தின் ஊழியர்கள் புரிந்து கொள்வதற்கு முன்னதாக, “இதோ, நான் இங்கு இருக்கிறேன் ஸ்வாமிஎன்று அவருக்கு முன்னால் வந்து நின்று, பவ்யமாகக் கைகளைக் கட்டிக் கொண்டார் கணபதி ஸ்தபதி.

மகா பெரியவாளின் திருக்கரங்களில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. உலகமே போற்றி வியக்கும் அந்த மகானை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் கணபதி ஸ்தபதி. ‘வா என் பின்னால்என்று சொல்லாமல் சொன்ன மாதிரி பிராகாரப் பகுதியில் மெள்ள நடந்தார் பெரியவா. அவரைப் பின்தொடர்ந்து சென்றார் கணபதி ஸ்தபதி.

தண்டத்தைத் தன் தோளில் இருத்தி, பிரசாதமான அந்த இரு தேங்காய் மூடிகளையும் கணபதியிடம் கொடுத்த மகா பெரியவா கையை உயர்த்தி அவருக்குத் தன் ஆசியைத் தெரிவித்தார்.

சாட்சாத் சர்வேஸ்வரனே நேரில் வந்து தனக்குப் பிரசாதம் தந்தது போல் மனம் நெகிழ்ந்து, அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு, விழிகளில் நீர்த் துளிகள் எட்டிப் பார்க்கஅந்த நடமாடும் தெய்வத்திடம் இருந்து வேறு எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் மகா ஸ்வாமிகளின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் கணபதி ஸ்தபதி.

கணபதி ஸ்தபதியின் கண்களில் இருந்து நீர் தளும்புவதையும், பிரசாதம் தவிர்த்து வேறு ஏதேனும் பதில் தன்னிடம் இருந்து வருமா என்று அவர் ஏங்கிக் கொண்டிருப்பதையும் மகா ஸ்வாமிகள் புரிந்து கொண்டார்.

உண்மைதானே! வாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தந்தை வைத்தியநாத ஸ்தபதி பூரண நலம் பெறுவாராமீண்டு வருவாரா என்கிற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளும் விதமாகத்தானே இந்த அர்த்த ராத்திரியில் இளையாற்றங்குடிக்கு வந்திருக்கிறார் கணபதி ஸ்தபதி?! அதற்குண்டான பதிலை மகா பெரியவாளிடம் இருந்து பெறுவதுதானே அவரது முதல் முயற்சியாக இருக்கும்!

ஆனால், வந்ததில் இருந்து எதைத் தேடி வந்தாரோ, அதற்கான பதில் காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் இருந்து கிடைக்கவே இல்லை. இந்த நிலையில்தான் கணபதி ஸ்தபதியின் மனதில் முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கும் கேள்விக்குப் பதில் தரும் விதமாக மகா ஸ்வாமிகளே, “உன் அப்பா இப்ப எப்படி இருக்கார்?” என்று கேட்டார் அந்த வேளையில்.

எங்கும் இருள். மணி பன்னிரண்டைத் தாண்டிய நள்ளிரவு வேளை.

நள்ளிரவில்இவர்கள் இருவரும் இருந்த அந்த இடத்தில் வேறு எவரும் இல்லை. மகா பெரியவாளின் பணிகளுக்கு உதவி செய்யும் ஸ்ரீமடத்தின் ஓரிரு சீடர்கள் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தனர்.

தன் தந்தையின் உடல் நிலை குறித்து குடும்பத்தினருக்கும், தனக்கும் இருக்கும் மன வேதனைகள் அனைத்தையும் இங்கே கொட்டி விட வேண்டும் என்று தீர்மானித்து, அவருக்கு வந்திருக்கும் நோய் பற்றிய விவரத்தையும், இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிகிச்சை முறைகள் அனைத்தையும் விரிவாகவே எடுத்துச் சொல்லி இருந்தார் கணபதி ஸ்தபதி.

தன் தந்தைக்கு ஏற்பட்ட தாங்கொணா நிலைமை குறித்து மகன் முழுக்கச் சொல்லி முடித்ததும், ஓரிரு விநாடிகள் மௌனமாக இருந்தார் மகா பெரியவா. கண்களை மூடி தியானத்தில் இருந்தார். ஒரு சில நிமிடங்கள் கரைந்தவுடன் அந்த சர்வேஸ்வர சொரூபம் தாமரை மலர்கள் போன்ற தன் விழிகளைச் சடாரெனத் திறந்தது.

அதுவரை தியானத்தில் இருக்கும் பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கணபதி ஸ்தபதி உற்சாகமானார். தன்னிடம் பெரியவா ஏதோ சொல்லப் போகிறார் என்று நெகிழ்ந்து அவர் சொல்லப் போகும் பதிலுக்காக மீண்டும் அவரது முகத்தையே ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தார்.

கணபதி ஸ்தபதியின் முகத்தைப் பார்த்து மகா பெரியவா பேசினார். விரிவாக எதுவும் பேசவில்லை. மிகவும் ரத்தினச் சுருக்கமாக அமைந்திருந்தது அவரது பதில்.

உன் அப்பாவுக்கு இப்படி ஒரு வியாதி வந்திருப்பதற்குக் காரணம் அவரோட பிராரப்த கர்மாதான். லோகத்துல பொறந்தவா யாரும் இதிலேர்ந்து தப்பிச்சுட முடியாது. இதுக்கு யாரும் ஒண்ணும் பண்ணிட முடியாது. இப்படி வர்றதைஎப்பேர்ப்பட்டவரா இருந்தாலும் அனுபவிச்சுதான் ஆகணும்என்று சொல்லி விட்டு முத்தாய்ப்பாக மகா பெரியவா சொன்னது: “நீ ரொம்பவும் அமோகமா இருப்பே!” – கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார் (இந்த ஆசிதான் கணபதி ஸ்தபதிகளை நன்றாகவே வாழ வைத்தது).

புறப்படலாம்என்பது போல் கணபதி ஸ்தபதிக்கு சைகை காண்பித்தார். எந்தப் பக்கம் செல்வது என்று கணபதி ஸ்தபதி குழம்பிப் போயிருந்த சூழ்நிலையில் மகா பெரியவாளே, “இதோ, இந்த வழியா போ. போற வழியில ஆபீஸ்ல மேனேஜர் இருப்பார். அவரைப் பாத்துட்டுப் போஎன்று சொல்லி விட்டு, அந்த சங்கர சொரூபம் அங்கிருந்து க்ஷண நேரத்தில் எழுந்து, பொசுக்கென மறைந்து விட்டது.

பெரியவாளின் கைங்கர்யத்துக்காகசற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஓரிரு சிஷ்யர்களும் பெரியவா சென்ற திசை நோக்கி சிட்டாகப் பறந்து போனார்கள். இருள் வேளையில் அவர்களுக்கு மட்டும் எப்படி வெளிச்சம் தெரிகிறதோ?

தற்போது கணபதி ஸ்தபதி மட்டும் அந்த இடத்தில் தனித்து இருந்தார். கரிய இருள் எங்குமே அப்பி இருந்தது.

மகா ஸ்வாமிகள் என்கிற தேஜோமயமான ஒளி அதுவரை அங்கே வீற்றிருந்ததால், ஒரு பிரகாசம் கன ஜோராக இருந்து வந்தது. அந்த மகான் இங்கிருந்து அகன்ற பிறகு, அந்த வெளிச்சமும் நகர்ந்து மறைந்து விட்டது போலும்.

இருட்டிலே ஏதோ கோடு போல் போட்டு வழி காண்பித்துப் போய் விட்டாரேபெரியவா காண்பித்த இந்த வழியில் எப்படிச் செல்வது, இப்படிப் போனால் இந்தப் பாதை எங்கே போகும்இந்த வேளையில் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ என்கிறாரேமேனேஜரும் நம்மைப் போல் அர்த்த ராத்திரியில் தூங்காமல் உட்கார்ந்திருப்பாரா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் உதித்து, கணபதி ஸ்தபதியை ஒரு கணம் தடுமாற வைத்த நேரத்தில்திகைக்க வைக்கிற அடுத்த காட்சி அரங்கேறியது.

கணபதி ஸ்தபதிக்கு முன்னால் திடீரென்று ஒரு சிறுவன் தோன்றினான். ஏழெட்டு வயதிருக்கும். அந்த நள்ளிரவு வேளையிலும் அவன் திருமேனியில் தென்பட்ட விபூதிக்கீற்றுகள் ஒரு நறுமணத்தையும், தெய்வீக அலைகளையும் உருவாக்கின.

செக்கச்செவேல் என்ற மேனி. பூணூல் தரித்திருந்தான். குடுமி வைத்திருந்தான். மொத்தத்தில் சொல்லப் போனால், இறை அவதாரமோ என்று தரிசிக்கத் தூண்டுகிற பிஞ்சு முகம். கண்களில் அதீத ஒளி!

இதோ, இந்த வழியா போஎன்று மகா பெரியவா சொன்ன பின்பும்எப்படிச் செல்வது?’ என்று பாதை புலப்படாமல் தவித்துக் கொண்டிருந்த கணபதி ஸ்தபதியை அண்ணாந்து பார்த்தான் அந்த தெய்வீகச் சிறுவன். பிறகு, “ஸ்தபதியாரேஇந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்என்று தேனினும் இனிய மழலைக் குரலில் சொல்லி விட்டு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான்.

கணபதி ஸ்தபதிக்கோ ஆச்சரியம் மற்றும் பயம். காரணம் அந்த நள்ளிரவு வேளையில் அங்கே திடீரெனத் தோன்றி தனக்கு வழிகாட்டியவன் ஏதேனும் பேய், பிசாசாக இருக்குமோ என்றும் பயந்தார். காரணம், இந்த இடத்துக்கு வெகு அருகில்தான் மயானம் இருந்தது.

ஆனால், அடுத்த கணமே அந்த எண்ணம் அவர் மனதில் இருந்து தவிடுபொடியானது. காரணம்மகா பெரியவா நடமாடுகின்றஅவரது சாந்நித்தியம் சத்தியமாகத் துலங்குகின்ற இடத்தில் எந்த ஒரு தீய சக்தியும் நெருங்கவே முடியாது என்பதை நன்றாகவே அறிவார்.

இருந்தாலும், ‘இந்த நள்ளிரவு வேளையில் வந்து எனக்கு வழிகாட்டுகிற இவன் யார்?’ என்று சந்தேகம் விலகாமலே தெய்வீகச் சிறுவன் பின்னால் நடக்கத் தொடங்கினார். சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும் அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ சைகை மொழியில் கூறி விட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

கணபதி ஸ்தபதிக்கு இப்போதுதான் நம்பிக்கை பிறந்தது. அங்கே பக்தர்கள் பலரும் தங்கி இருந்தனர். மேனேஜர் இவரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தார். பின்னர், கணபதி ஸ்தபதியிடம் ஒரு ரசீதைக் கொடுத்து, அதில் கையப்பமிட்டு விட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளுமாறு சொன்னார் மேனேஜர்.

ஸ்ரீமடத்தில் நான் காசு எதுவும் வாங்கக் கூடாதுஎன்று மறுத்தார் கணபதி ஸ்தபதி. ஆனால், அதற்கு மேனேஜர், “இது மகா ஸ்வாமிகளின் உத்தரவு. தாங்கள் அவசியம் வாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும்என்றார் குரலில் உறுதியுடன். அதன்பின் ஒரு ரசீதில் கையெழுத்திட்டு விட்டு, மேனேஜர் கொடுத்த ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டார்.அதன்பின், “உள்ளே போய் சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்” என்று உணவு பரிமாறப்படும் இடத்தை கணபதி ஸ்தபதிக்கு அடையாளம் காட்டினார் மேனேஜர். ஸ்தபதிக்கோ அகோர பசி. நேரமோ இரவு ஒரு மணிக்கு மேல் இருக்கும். ‘இந்த வேளையில் என்ன சாப்பாடு இருக்கப் போகிறது?’ என்று உள்ளே போய் அமர்ந்தவருக்கு சலிப்பே காட்டாத அன்பர் ஒருவர் வந்து இலை போட்டார். பிறகு, உணவைப் பரிமாறினார்