விழுப்புரத்தில் வசித்து வந்தவர் ரவி பாகவதர் என்கிற சூரியநாராயணன். இவருடைய தாத்தாவான எஸ். சிதம்பர ஐயர், சுதந்திரப் போராட்ட தியாகி. மகா பெரியவாளின் பால்ய காலத்தில் அவரோடு ஒன்றாக விளையாடியவர் என்றால் அவருக்கு எப்பேர்ப்பட்ட பேறு பாருங்கள்! ரவி பாகவதரின் குடும்பமே காஞ்சி மகா ஸ்வாமிகளின் அத்யந்த பக்தர்கள்.
இவரது தந்தையான வக்கீல் வீரராகவ ஐயர், மகா ஸ்வாமிகளின் பரம பக்தர். 1983 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 –ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ரவியின் தந்தை வக்கீல் வீரராகவ ஐயர் இறைவனடி சேர்ந்தார். ‘ஏகாதசி மரணம், துவாதசி தகனம்‘ என்பது பலருக்கும் கிடைக்காத பேறு. இது வீரராகவ ஐயருக்கு வாய்த்தது. இவருக்குச் செய்து முடிக்க வேண்டிய கர்ம காரியங்கள் அனைத்தும் முடிந்தன. அது மட்டும் அல்லாமல் இறந்து போன ஒருவருக்கு ஒரு வருடம் செய்ய வேண்டிய அனைத்து கார்யங்களும் திருப்திகரமாக நடந்து முடிந்தன.
வீரராகவ ஐயருக்குத் தலை திவசம் முடிந்த சூட்டோடு அவரது மனைவியான ருக்மணி அம்மையார் ஒரு கடிதத்தைத் தன் மகன் ரவியிடம் கொடுத்து, “ரொம்ப பத்திரம். இதை எங்கேயும் நீ பிரிச்சுப் படிச்சுடாத. காஞ்சி பெரியவாகிட்ட இதைக் கொண்டு போய்க் கொடு. பெரியவா இதைப் படிச்சுட்டு என்ன பதில் சொல்றானு கேட்டு எங்கிட்ட வந்து சொல்லு” என்றார்.
கடிதத்தை வாங்கிக் கொண்டார் ரவி. பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு ஒரு வழக்கம் உண்டு. ‘கூடாது‘ என்று ஒருவர் சொன்னால், அதை உடனே செய்து பார்த்து விடுவார்கள். அதைப் போல் ‘பிரிச்சுப் படிச்சுடாத‘ என்று தாயார் சொன்னதைக் கேட்ட ரவிக்கும் ‘இதைப் பிரிச்சுப் பார்த்துட வேண்டும்… அப்படி என்னதான் அம்மா எழுதி இருப்பார்?’ என்கிற ஈர்ப்பு வந்தது.
தாயார் கொடுத்த கடிதத்துடன் விழுப்புரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்குப் பேருந்தில் புறப்பட்டார். பயணத்தின்போது அம்மா கொடுத்த கடிதத்தை மிகவும் லாகவமாகப் பிரித்தார். படிக்க ஆரம்பித்தார்.
டித்து முடித்தபோது தன் தாயார் அதில் எழுதி இருந்த வாசகங்களைக் கண்டு வருந்தினார் ரவி. முதல் காரியமாக அந்தக் கடிதத்தைப் பழையபடியே ஒட்டி – முன்பு இருந்ததுபோல் பத்திரப்படுத்திக் கொண்டார்.
ரவி வருத்தப்படும் அளவுக்கு அந்தக் கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் அவரது தாயாரான ருக்மணி?
கடிதத்தின் சாரம் இதுதான்: ‘தன் கணவர் (வீரராகவ ஐயர்) இறந்த பிறகு தான் உயிர் வாழ்வது தேவை இல்லை. எனவே, தனக்குக் கூடிய விரைவிலேயே முக்தி தர பெரியவா அருள வேண்டும். மேலும், தனக்கு முக்தி கிடைக்கக் கூடிய காலம் வரை, தான் எப்படி நாட்களைக் கழிக்க வேண்டும்? அதற்கு உண்டான வழி வகைகளையும் பெரியவா அருள வேண்டும்‘ என்று மகா ஸ்வாமிகளுக்கு விண்ணப்பம் வைத்திருந்தார்.
கடிதத்தைப் படித்து முடித்ததும் ரவியின் மனம் ரொம்பவும் வேதனைப்பட்டது. ‘கணவன் இறந்த பின் மனைவி உயிர் வாழ்வது இல்லையா? இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு அம்மா ஏன் கவலைப்பட வேண்டும்? அப்பாவுக்குப் பிறகு அம்மாவைக் கவனித்துக் கொள்ள வீட்டில் ஆட்களே இல்லையா? நானெல்லாம் எதற்கு இருக்கிறேன்‘ என்றெல்லாம் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். கண்களில் நீர்த் துளிகள் பனித்தன. பிறகு, தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டார்.
பிற்பகல் வேளையில் அந்தப் பேருந்து காஞ்சிபுரத்தை அடைந்தது. பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சி ஸ்ரீமடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் ரவி. மடத்துக்குள் நுழைவதற்கு முன் வெளியே இருந்த ஒரு கடையில் மகா ஸ்வாமிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டி தேங்காய், கட்டிக் கல்கண்டு, துளசி மாலை போன்றவற்றை வாங்கி ஒரு மூங்கில் தட்டில் வைத்துக் கொண்டார். துளசி மாலையின் அடியில் வேறு எவருக்கும் தெரியாத வண்ணம் அம்மா தந்த கடிதத்தை வைத்துக் கொண்டார்.
ஏன் அந்தக் கடிதம் எவர் கண்ணிலும் படாதவாறு துளசி மாலைக்குள் வைத்தார்? காரணம் – இந்தக் கடிதத்தின் சாராம்சம் என்ன என்று இப்போது ரவிக்குத் தெரிந்து விட்டது (தெரியாவிட்டால்தான் பிரச்னை).
தங்கள் இல்லத்தில் நிகழ இருக்கிற பல சுப காரியங்களுக்கு ஆசி வேண்டியும், முதல் திருமணப் பத்திரிகையை மகா ஸ்வாமிகளிடம் திருச்சந்நிதியில் வைத்து அவரது அனுக்ரஹம் வேண்டியும் திரளான பக்தர்கள் வருவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘எனக்கு எப்போது முக்தி கிடைக்கும்?’ என்கிற தன் தாயாரின் கடிதம், பலரது முன்னிலையில் கொடுத்துப் படிக்கப்பட்டால் அது ஒருவேளை தர்மசங்கடத்தைத் தந்து விடும் என்பதால், அந்தக் கடிதம் வெளியே தெரியாத மாதிரி மூங்கில் தட்டிலேயே வைத்துக் கொண்டார்.
மகா பெரியவா தனிமையில் இருக்கின்ற வேளை பார்த்து தாயாரின் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவரது பதிலைப் பெற்றுச் செல்லலாம் என்பது ரவியின் எண்ணம்.
அன்றைய தினம் மகா பெரியவா ஸ்ரீமடத்தின் பின்புறமுள்ள ஒரு மரத்தடியில் ஏகாந்தமாக – சிவ சொரூபமாக அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் கூட்டமும் ஓரளவுக்கு இருந்தது.
ரவி நினைத்தது போல், மங்களகரமான விஷயங்களுக்குப் பெரியவாளின் ஆசி வேண்டி, குடும்பத்துடன் பலரும் அங்கே நின்றிருந்தார்கள். புதிதாகக் கல்யாணம் ஆன ஐயங்கார் இளம் தம்பதியினர் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஆசிக்காக நின்றிருந்தனர். அந்தக் குடும்பத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் நெற்றியில் நீண்ட நாமத்தைப் போட்டுக் கொண்டு பெரியவாளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் அந்த திவ்ய சொரூப தரிசனத்தில் திளைத்துக் கொண்டிருந்தனர்.
அதுபோல் இன்னும் சிலர் கல்யாணப் பத்திரிகையைப் பெரியவா திருச்சந்நிதியில் வைத்து அவரது ஆசிர்வாதம் பெறுவதற்காகக் கூட்டமாக நின்றிருந்தனர்.
இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் ரவி பாகவதர், சுமார் இருபதடி தள்ளி நின்றிருந்தார். கூடிய மட்டிலும் பெரியவா பார்வையில் படுவதைத் தவிர்க்கும் வகையிலும், அதே சமயம் பெரியவாளைத் தான் தொடர்ந்து தரிசனம் செய்து கொண்டிருக்கும் வகையிலும் தோதாக ஓர் இடம் பார்த்து கூட்டத்தோடு கூட்டமாக இருந்தார். அந்த மகானின் தரிசனத்தில் தன்னை மறந்திருந்தார்.
ஆனால், பெரியவாளின் தீட்சண்யமான பார்வையில் இருந்து தப்ப முடியுமா?
“விழுப்புரம் சிதம்பரம் ஐயர் பேரன் வந்திருக்கான் போலிருக்கே?” என்றார் உரக்க.
அப்போது ஸ்ரீமடத்தின் கைங்கர்யத்தில் இருந்த ஊழியர் பாலு, “ஆமா பெரியவா. விழுப்புரத்திலேர்ந்து ரவி வந்திருக்கார்” என்றார், அவரை அடையாளம் கண்டுகொண்டு.
மகா பெரியவா அதோடு விடவில்லை. “என்ன விஷயமா என்னைப் பாக்க வந்திருக்கான்னு கேள்” என்று ஊழியரிடம் சொன்னார் பெரியவா.
ரவியின் அருகே சென்ற பாலு அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு, “வழக்கம்போல் பெரியவா ஆசிர்வாதம் வேணும்னு விழுப்புரத்துலேர்ந்து வந்திருக்கார்” என்றார். தவறியும் தன் தாயிடம் இருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று ரவி ஸ்ரீமடத்தின் ஊழியர் பாலுவிடம் சொல்லவில்லை.
பெரியவா சாதாரணப்பட்டவரா? “அதில்லே பாலு… அவனோட அம்மா ருக்மணி என்கிட்ட கொடுக்கச் சொல்லி ஒரு லெட்டரை அவன்கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கா. அந்த லெட்டரை தேங்காய்த் தட்டுல துளசி மாலைக்கு அடில மறைச்சு வெச்சிருக்கான். அதை எடுத்து அவனையே வாசிக்கச் சொல்லு” என்று சொல்ல… ரவி விதிர்விதிர்த்துப் போனார். அவருடைய கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது.
‘பெரியவா எத்தனை சத்தியமான தெய்வம்… பெரியவாளுக்குத் தெரிய வேண்டாம் என்று மறைத்து வைத்த கடிதத்தை அவரே எப்படி வெளியே கொண்டு வருகிறார். அதுவும் இந்தக் கடிதத்தை இப்படிப் பலரும் இருக்கும்போது அனைவரின் முன்னிலையிலும் வாசித்துக் காட்டச் சொல்கிறாரே‘ என்று சங்கடப்பட்டுக் கலங்கினார் ரவி.
மங்களகரமான விஷயங்களுக்காகப் பலரும் இங்கே தம்பதி சமேதராக – புன்னகை முகத்துடன் கூடி இருக்கும்போது, தன் தாயார் எழுதிய கடிதத்தைப் பலர் முன்னிலையில் அப்படியே படிப்பதற்கு ரவியின் மனம் ஒப்பவில்லை. எனவே, ‘பெரியவாளுக்கு என்ன பதில் சொல்வது… இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது‘ என்கிற தவிப்பில் இருந்தார்.
இருந்தாலும், கடிதத்தை வாசி என்று மகா பெரியவா சொல்லி விட்டாரே… அந்தக் கடிதம் அங்கே படிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். எனவே, பாலுவை அருகே அழைத்த ரவி, கடிதத்தில் தன் தாயார் எழுதி இருக்கும் விஷயத்தை ரத்தினச்சுருக்கமாக அவரது காதில் கிசுகிசுத்து விட்டு, “படிக்கறப்ப இதை அப்படியே கூட்டத்துல சொல்லாதீங்கோ… எல்லாருக்கும் தர்ம சங்கடம் ஆகிடும். விஷயத்தை பாலீஷா எப்படிச் சொல்லணுமோ அப்படி சொல்லிடுங்கோ” என்றார்.
கடிதத்தை வாங்கிக் கொண்டு தலையசைத்த பாலு, அதைப் பிரித்துப் பார்த்து, “ரவியோட அம்மா, பெரியவாளோட அனுக்ரஹம் வேண்டியும், தான் எப்படி இருக்கணும்னும் கேட்டு லெட்டர் எழுதி இருக்கா” என்று சிம்பிளாகச் சொன்னார்.
இதைக் கேட்ட பெரியவா பெரிதாகச் சிரித்தார். மகா பெரியவா ஏன் சிரிக்கிறார் என்பது அங்கு உள்ளவர்களுக்குப் புரியவில்லை. பிறகு மகா பெரியவா, “ஏண்டா… அவ்வளவு சின்ன விஷயத்தை ஏன் ஒண்ணரை பக்கத்துக்கு நீட்டி முழக்கி எழுதி இருக்கா ருக்மணி? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுட்டியா… அந்த லெட்டர்ல என்ன இருக்குன்னு தெரியும். அதை இங்கே இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கணும். அந்த லெட்டர்ல என்ன இருக்கோ, அதை அப்படியே சத்தம் போட்டுப் படி” என்றார் மகா பெரியவா.
இதற்கு மேல் மகா ஸ்வாமிகளிடம் என்ன விளக்கம் சொன்னாலும் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்ட பாலு கடிதத்தில் உள்ள வாசகங்களை அப்படியே படித்தார்.
எந்த ஒரு சத்தமும் இல்லை. எல்லோரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் பரிதாபப்பட்டனர். ‘உச்‘ கொட்டினர். இதற்கு பெரியவா ஏதேனும் பதில் சொல்வார் என்று அனைவரும் அந்த தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ஒரு புன்னகையுடன் பெரியவா திருவாய் மலர்ந்தார். மகா பெரியவா சொன்ன பதில் ருக்மணிக்காக மட்டுமில்லை. நம் அனைவருக்கும்தான்! வாழ்க்கையின் யதார்த்தம் என்ன என்று ஒரு நிமிடத்தில் அங்கே அனைவருக்கும் உணர்த்தி விட்டார்.
பெரியவா, “ருக்மணி ஏன் இப்படிப் பைத்தியமா இருக்கா. இந்த லோகத்துல இருக்கிறவா எல்லாரும் அடுத்தடுத்து என்ன பண்ணலாம்னு புதுசு புதுசா பிளான் போட்டுண்டு இருக்கறப்ப, இவ மட்டும் போய்ச் சேர்றதுக்கு என்ன வழின்னு கேட்டு எழுதி இருக்காளே… ஏய், சிதம்பர ஐயர் பேரனே… போய் உங்க அம்மாகிட்ட சொல்லு… போய்ச் சேர்றதுக்கான வழி எனக்குத் தெரிஞ்சா இப்படிக் கண்ணும் காதும் சரி இல்லாம நான் ஏன் வாழ்ந்துண்டு இருக்கணும்? ருக்மணியையும் என்னைப் போல ஒரு மூலையில உக்காந்துண்டு ராம ஜபம் பண்ணிண்டு இருக்கச் சொல்லு. எல்லாத்தையும் அவன் பாத்துப்பான்” என்று மேலே கை காட்டி விட்டு முடித்துக் கொண்டார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் மகா பெரியவாளைப் பார்த்து, ‘சிவ சிவா‘ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
ரவியின் கண்கள் கலங்கி விட்டன. தன் அம்மாவுக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்தப் பரப்பிரம்மம் தன்னையே தாழ்த்திக் கொண்டு அல்லவா பதில் சொல்கிறது!
நடமாடும் இந்த தெய்வத்துக்கா எதுவும் தெரியாது?!
இந்த கருணை வள்ளலுக்கா எதுவும் புரியாது?!
தன் விழிகளில் இருந்து பொங்கி வந்த கண்ணீரை ரவியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
மகா ஸ்வாமிகள் பிரத்தியட்சமான ஒரு தெய்வம் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்?
– ருக்மணி கடிதம் கொடுத்து அனுப்பியது எப்படித் தெரியும்?
– அது ஒண்ணரை பக்கத்துக்கு எழுதப்பட்டிருக்கிறது என்பது எப்படித் தெரியும்?
– அதை மூங்கில் தட்டில் ரவி மறைத்து வைத்திருக்கிறார் என்பது எப்படித் தெரியும்?
– கடிதத்தில் இந்த விஷயம்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பது மகா ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்?
அதுதான் சர்வ லோக நாயகனின் அருட் கடாட்சம்! உலகத்தையே வாழ்விக்க வந்த மகான் ஆயிற்றே!