தலைவலிக்கு மருந்தூ சொன்ன பெரியவா

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் அன்று மகா பெரியவா ஒரு ஞான சூரியனாய் வீற்றிருந்தார். ஏகாந்தமாகசங்கர சொரூபமாக அமர்ந்திருக்கும் மகா பெரியவாளை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்துச் சென்ற வண்ணம் இருந்தனர். தங்களது பிரார்த்தனைகளை மகா ஸ்வாமிகளிடம் சொல்லி, ஆசி பெற்று மெள்ள நகர்ந்து கொண்டிருந்தனர். மகா ஸ்வாமிகளின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்த சிஷ்யகோடிகள் பிரசாதம் பெற்றவர்களை விறுவிறுவென்று அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

மகானின் சந்நிதியில் எத்தனை மணி நேரம் இருந்தாலும், ஆனந்தம்தானே! சர்வேஸ்வரன் சந்நிதியில் நின்று உடலும் உள்ளமும் உருக அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்து நகர்வதற்கு எவருக்குத்தான் மனம் வரும்?! இருந்தாலும், அடுத்தடுத்து வருகின்ற பக்தர்களின் நலன் கருதி, பிரசாதம் வாங்கியவர்கள் அந்த இடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து மகா ஸ்வாமிகளின் அருள் வெள்ளத்தைப் பருகி பரவசப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த வரிசையில் சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு மாணவன் நின்றிருந்தான். அவன் முகத்தில் அதீதமான பிரகாசம் தெரிந்தது. மாணவனைப் பார்த்த மாத்திரத்திலேயே நன்றாகப் படிக்கிறவன் என்பது எவரும் சொல்லாமலேயே புரியும் வண்ணம் இருந்தது.

ஆனால், அந்த மாணவனுக்கும் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பதை எவர் அறிவார்மகா ஸ்வாமிகளைத் தவிர. வரிசை மெள்ள மெள்ள நகர்ந்து செல்லும்போது தன் முறை வந்து, எப்போது தன் மனக் குறையை மகா பெரியவாளிடம் கொட்டுவோம் என்பது அவனது ஆதங்கம்!

மாணவனின் முறையும் வந்தது. அருள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்ற மகா பெரியவாளின் திருமுகத்தைப் பார்த்தவுடன் அவனது கண்கள் பனித்தன. மகானின் திருச்சந்நிதிக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

தன் கையை உயர்த்தி அவனுக்கு ஆசி புரிந்தது அந்தப் பரப்பிரம்மம். அதன் பின், “பெரியவாளுக்கு ஒரே ஒரு கோரிக்கை வைக்கணும்னு இங்கே வந்திருக்கேன்…” என்று மிகவும் விநயமாகச் சொன்னான்.

என்ன?’ என்பது போல் பார்த்தார் மகா பெரியவா. அவருக்குத் தெரியாதா?

எனக்குக் கொஞ்ச நாளா தலைவலி இருக்கு பெரியவா. இதுக்கு என்ன காரணம்னு புரியலை. நானும் எவ்வளவோ வைத்தியம் பாத்துட்டேன். மாத்திரை மருந்து சாப்பிட்டுட்டேன். ஆனா, தலைவலி குறைஞ்சபாடில்லை. தெனமும் வலி அதிகமாயிண்டே இருக்கு. எந்த ஒரு காரியத்தையும் பூர்ணமா பண்ண முடியலை. குறிப்பா, படிப்புல கவனம் செலுத்த முடியலை…” என்று சொல்லிக் கொண்டே இருந்தவன் திடீரென்று விசும்ப ஆரம்பித்து விட்டான்.

பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவர், “பெரியவா சந்நிதிக்கு வந்துட்டா அழக் கூடாது. உங் குறையைச் சொல்லுஅவர் எல்லாத்தையும் பாத்துப்பார்என்று நிதானமாகவும் அதே சமயம் கறாராகவும் சொன்னார்.

மகா பெரியவா ஏதும் பேசாமல் அந்த மாணவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்களைத் துடைத்துக் கொண்டு மாணவன் பேச ஆரம்பித்தான். “மெள்ள ஆரம்பிச்ச இந்த தலைவலி இப்ப என்னோட ஞாபக சக்தியையும் முழுங்க ஆரம்பிச்சிருக்கு. என்னோட ஞாபக சக்தி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுண்டு போறதா நானே உணர்றேன் பெரியவா. படிக்கற பாடம் எல்லாம் என் மனசுல இருந்து போயிடறது. இது இப்படியே நீடிச்சுதுன்னா என்னோட எதிர்காலம் கேள்விக்குறி ஆயிடுமோனு பயமா இருக்கு. அதான் ஒங்க சந்நிதிக்கு வந்துட்டேன்என்று கேவலுடன் முடித்து, மகானின் திருமுகத்தையே பார்த்தான்.

நான் யாருன்னு உனக்கு நினைவு இருக்கும்போதே என்னைத் தேடிண்டு வந்துட்டியாக்கும்என்று சொல்லி மகா பெரியவா அவனை ஒரு புன்னகையுடன்

பார்த்தார். பிறகு, “நான் வைத்திய சாஸ்திரம் படிக்கலியேவேதாந்த சாஸ்திரம்தான் படிச்சிருக்கேன். எந்த தைரியத்துல என்னைத் தேடி வந்திருக்கே?” என்று அர்த்தபுஷ்டியுடன் அவனைப் பார்த்துக் கேட்டார்.

மகா ஸ்வாமிகள் படிக்காத சாஸ்திரமா? மகா ஸ்வாமிகளுக்குத் தெரியாத வைத்தியமா? சீண்டிப் பார்க்கிறது அந்த சிறுவனை!

ஆனால், அந்த மாணவன் அசைவதாக இல்லை. ஒரு தீர்க்கமான முடிவுடன்தான் இங்கே வந்திருக்கிறான் போலிருக்கிறது. “எனக்கான மருந்தை நீங்கதான் தரணும் பெரியவா. உங்களைத்தான் நம்பி இங்கே வந்துருக்கேன். என்னைக் கைவிட்டுடாதீங்கோஎன்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தான்.

இதற்கு மேலும் இந்த மாணவனை சோதிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, “குழந்தேநான் எது சொன்னாலும் செய்வியாகொஞ்சம் கஷ்டமா இருக்குமேஉன்னால தொடர்ந்து இதை செய்ய முடியாதேஅப்பொறம் ஏண்டா பெரியவாகிட்ட போனோம்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவே…” என்று ஆழம் பார்த்தது மாணவனை.

பெரியவா மெள்ள இரங்கி வருகிறார் என்பதே மாணவனுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. “நீங்க என்ன சொன்னாலும் அதன்படி நடக்கறேன் பெரியவா. கொஞ்சமும் பிசக மாட்டேன்என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொன்னான்.

கலியுகத்தின் மாமருத்துவரான மகா பெரியவா சொல்லப்போகிற சிகிச்சை முறையின் மீது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை! அவரது திருவாய் மலர்வதற்காக ஆர்வத்துடன் காத்திருக்க ஆரம்பித்தான்.

அந்த மாணவனைப் பார்த்து மகா ஸ்வாமிகள் ஆரம்பித்தார். “சபரிமலைக்கு இருமுடி எடுத்துண்டு போவாளேஅதை நீ பாத்திருக்கியோ?”

பாத்திருக்கேன் பெரியவா. தலைல ரெண்டு பக்கமும் தொங்கற மாதிரி திரவியங்களை ஒரு துணில முடிஞ்சு வெச்சு யாத்திரை போவாஎன்று உற்சாகமாகச் சொன்னான் மாணவன்.

அதேதான். நீ கரெக்டா புரிஞ்சுண்டுட்டேநான் சொல்லப் போற ட்ரீட்மெண்ட் அதே மாதிரிதான். ஆனா, இது வேற தினுசா இருக்கும். கேட்டுக்கோ. ஆத்துல அரிசியை அளந்து போடறதுக்குப் படி வெச்சிருப்பா, பாத்திருக்கோல்லியோஅந்தப் படியால மூணு படி அரிசியோ, கோதுமையோ அல்லது இது மாதிரி சாப்பிடக் கூடிய ஒரு தான்யத்தையோ அளந்து ஒரு பையில போட்டுக் கட்டிக்கோ. தலைல இருமுடி சுமக்கற மாதிரி இந்த தான்யம் உன் தலைல இரு பக்கத்துலயும் தொங்கற மாதிரி வெச்சுண்டு, தினமும் ஒரு மைல் தூரம் நடக்கணும்புரியறதா?”

மாணவன் தலையாட்டி விட்டு, “கட்டாயம் பெரியவா. நீங்க சொல்றபடி செய்யறேன்என்றான்.

இரு இருஇன்னும் நான் சொல்லி முடிக்கலேஇன்னும் இதுல வேலை இருக்கு. ஒரு மைல் தூரம் நடக்கச் சொன்னேனேஅப்படி நடக்கறப்பஇந்த வலி சரியா போயிடுமா போகாதாங்கற சிந்தனை எல்லாம் மனசுல ஓடாம இருக்கறதுக்காகராம ராமா‘, ‘சிவ சிவா‘ – இப்படி எந்த நாமம் ஒனக்குத் தோதுப்படறதோ, அந்த நாமாவை சொல்லிண்டே இருக்கணும்.

ஒரு மைல் தூரம் நடந்து முடிஞ்ச உடனே இந்த தான்யத்தை ஏதாவது சிவன் கோயிலுக்கோ, பெருமாள் கோயிலுக்கோ அல்லது கிராம தேவதை கோயிலுக்கோ தானமா கொடுத்துடணும். இல்லேன்னா, கஷ்டப்படற ஒரு ஏழைக்குக் கொடுக்கலாம். இது மாதிரி பதினோரு நாள் தொடர்ந்து பண்ணணும். செய்வியா?” என்று கேட்டார் மகா பெரியவா.

மாணவன் உற்சாகத்துடன், “கட்டாயம் பெரியவாஎன் அவஸ்தை என்னை விட்டுப் போகணும். அதுக்காக பெரியவா சொல்ற எதையும் செய்ய நான் தயாரா இருக்கேன்

என்று சொல்லி, அவருக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்தான். அந்த நடமாடும் தெய்வம் தன் திருக்கரங்களை உயர்த்தி, அவனுக்கு ஆசி புரிந்து அனுப்பியது.

வீட்டுக்குப் போனான். மகா பெரியவா சொன்ன வைத்திய முறைகளை அப்படியே மேற்கொண்டான். சுமார் ஒரு மைல் தூரம் சுமையைத் தலையில் எடுத்துப் போய் வந்தான். முடிந்த பின் அந்த தான்யத்தை கோயிலுக்கோ, ஏழைக்கோதன் மனதில் என்ன உத்தரவாகிறதோ அதன்படி தானம் செய்தான்.

ஒரு வாரம் ஓடிப் போனது.

மாணவனிடம் ஒரு நல்ல மாற்றம் தெரிந்தது. தலைவலி இப்போது அவனுக்கு இல்லை. சுத்தமாகவே இல்லை.

ஆச்சரியம் அடைந்தான். மகா பெரியவா தந்த சிகிச்சை முறை நன்றாகவே வேலை செய்வது அறிந்து நெகிழ்ந்தான். ஞாபக சக்தியும் தனக்கு வழக்கம்போல் இருப்பதாக உணர்ந்தான். பள்ளியில் அப்போது நடைபெற்ற தேர்வில் திருப்தியாக எழுதி இருப்பதாக உணர்ந்தான்.

மகா பெரியவா சொன்னது இன்னும் பூர்த்தி ஆகவில்லை. தொடர்ந்து பதினோரு நாட்கள் இதைச் செய்யுமாறு சொல்லி இருந்தார் அல்லவா?! ஆனால், ஏழு நாட்களிலேயே குணம் தெரிந்து விட்டது. இந்த வேளையில் காஞ்சிபுரம் போய் மகா ஸ்வாமிகளை தரிசித்து, தான் குணம் ஆகி இருப்பதைச் சொல்லி விட்டு வர வேண்டும் என்று தோன்றியது.

காஞ்சிபுரத்தில் மகா பெரியவா சந்நிதியின் முன் சந்தோஷத்துடன் இருந்தான் மாணவன்.

சிரித்த முகத்துடன் பெரியவா அவனை ஆசிர்வதித்தார். “இன்னும் பதினோரு நாள் முடியல போலிருக்கே…?”

ஆமா பெரியவாஅதுக்குள்ள எனக்குக் குணம் தெரிய ஆரம்பிச்சுடுத்து. பக்கத்துல ஒரு டாக்டர்கிட்ட போய்க் காட்டினேன். ‘தலைல ஏதாவது நரம்பு பிசகி இருக்கும். பெரியவா சூப்பரான சிகிச்சை கொடுத்திருக்கார். தலைல தான்யம் ஏறின உடனே பிசகின நரம்பு சரி ஆகி இருக்கும். எல்லாருக்கும் இப்படிக் குணமாயிடாது. மகா ஸ்வாமிகளோட அனுக்ரஹமும் உனக்குச் சேர்ந்ததால, இது உடனே குணமாகி இருக்குனு சிலிர்ப்போட சொன்னார். அதான் ஒங்களுக்கு நன்றி சொல்லிட்டு நமஸ்காரம் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன்என்றான் ஆனந்தக் கண்ணீருடன்.

பதில் ஏதும் சொல்லாமல், புன்னகைத்தார் மகா பெரியவா.

மாணவன் நமஸ்காரம் செய்தான். ஆசிர்வதித்த பெரியவா சொன்னார்: “சரியா ஆயிடுத்துன்னு அப்படியே விட்டுடாதபதினோரு நாள் தொடர்ந்து பண்ணு.”

நிச்சயம் பெரியவா…” என்றவன் மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு ஸ்ரீமடத்தில் இருந்து புறப்பட்டான்.

ஒரு மாணவனின் தலையெழுத்தையே மாற்ற இருந்த வியாதியில் இருந்து அவனுக்கு விமோசனம் கொடுத்துக் காப்பாற்றி இருக்கிறார் மகா பெரியவா.

கண் கண்ட தெய்வம் விட்டு விடுமா, என்ன!