யார் அனுப்பிய மணியார்டர்

திருவாரூரில் வசித்து வந்தவர் செல்லம்மா பாட்டி. மகா பெரியவாளின் அத்யந்த பக்தை. சொந்த பந்தம் என்று சொல்லிக் கொள்ள பெரிதாக பாட்டிக்கு யாருமே இல்லை.

தங்கையின் மகன் ஒருவன் பாட்டியின் வீட்டுக்குப் பக்கத்திலேயே வசித்து வந்தான். ஏதேனும் ஒரு உதவி, அவசரம் என்றால், அவன்தான் செல்லம்மா பாட்டிக்கு எல்லாமே!

அப்போது திருவாரூருக்கு மகா பெரியவா «க்ஷத்ராடனம் வருவதாக செய்தி வந்தது. நடமாடும் தெய்வம் தியாகேசப் பெருமான் ஆட்சி செலுத்தும் திருவாரூர் நகருக்கு வரப் போகிறார் என்ற தகவல் அறிந்ததும் ஊரே கோலாகலம் பூண்டது. மகா பெரியவாளை எப்படி வரவேற்பது என்று ஊர் முக்கியஸ்தர்கள் கூடி ஆலோசித்தனர். பிரமாண்டமான வரவேற்பு தருவது என்று முடிவு செய்யப்பட்டது.

மாவிலைகளும், தோரணங்களும் வாழைமரங்களும் ஊர் முழுக்க அலங்கரித்தன. தங்கள் ஊருக்கு எழுந்தருளப் போகும் மகா பெரியவாளுக்கு அனுஷ்டானங்கள் உட்பட எந்த ஒரு விஷயத்திலும் குறை இருக்கக் கூடாதுஅனைத்து வசதிகளும் அவருக்கு முறையாகச் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானித்து, விமரிசையாக ஏற்பாடு செய்தார்கள் முக்கிய பிரமுகர்கள்.

ஊரில் உள்ள பிரபல குடும்பத்தினர்கள் மகா பெரியவாளின் பாதுகைகளுக்கு பாத பூஜை செய்ய பேராவல் கொண்டு ஸ்ரீமடத்து அதிகாரிகளிடம் தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டனர். பாத பூஜை செய்வதற்கு அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு காணிக்கை செலுத்தினர்.

எல்லோருக்கும் இருக்கும் பாத பூஜை ஆசை செல்லம்மா பாட்டிக்கும் இருக்காதா, என்ன?!

பாட்டிக்கும் பாத பூஜை செய்ய கொள்ளை ஆசைதான். ஆனால், பாத பூஜைக்கான காணிக்கையாக இருநூறு ரூபாயை செலுத்த வேண்டுமே! பொருளாதார வசதி இல்லாத செல்லம்மா பாட்டி என்ன செய்வார்? சுளையாக இருநூறு ரூபாய்க்கு எங்கே போவார்?

இருக்கவே இருக்கிறானே தங்கை மகன்என்று அவனிடம் பணம் கேட்டுப் பார்த்தார். இருநூறு ரூபாய் என்று கேட்ட மாத்திரமே வாயைப் பிளந்து தன் இயலாமையைத் தெரிவித்தான் அவன். பாட்டி சோகமானார்.

ஆனாலும், மகா பெரியவாளுக்கு எப்படியேனும் பாத பூஜை செய்வது என்று மனதுக்குள் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொண்டார். தினமும் தான் வணங்கும் ஆரூர் ஸ்ரீதியாகராஜரிடம் தனது கோரிக்கையை வைத்தார். அதோடு, வீட்டு பூஜையறையில் இருக்கும் மகா பெரியவா படத்தின் முன் நின்று, அவரிடமும் கண்கள் கலங்க கோரிக்கை வைத்தார்.

அன்றைய தினம் மதிய வேளையில் சாப்பிட்டு விட்டு, அசதியாக இருக்கிறதே என்று தரையில் ஒரு விரிப்பை விரித்துப் படுத்தார் செல்லம்மா பாட்டி.

அப்போது பாட்டிக்கு ஒரு கனவு வந்தது.

அந்தக் கனவில் காவி வேஷ்டி, காவி மேல்துண்டு அணிந்து கொண்டு குள்ளமாக ஒரு பெரியவர் செல்லம்மா பாட்டியிடம் வருகிறார். அவரை வித்தியாசமாக யார், என்ன என்று பார்க்கிறார் பாட்டி. ‘என்ன, ஒனக்கு இருநூறு ரூபாய்தானே வேணும்..? நான் தருகிறேன். கவலைப்படாதேஎன்று சொல்லி விட்டு, அடுத்த கணம் பொசுக்கென மறைந்து விடுகிறார் அந்தப் பெரியவர்.

அட, பாத பூஜை செய்வதற்கு யாரோ வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறாரேவந்தவரைப் பார்த்தால், சாட்சாத் மகா பெரியவா போல் இருக்கேஎன்று பகல் கனவு பொசுக்கென கலைந்து அடித்துப் பிடித்து எழுந்தார் பாட்டி. ஒருவேளை நிஜத்தில் யாரேனும் வந்து இப்படி ஒரு தகவலைச் சொல்லி இருப்பாரோ என்று சந்தேகப்பட்டு, வீட்டு வாசலுக்கு வந்தார் பாட்டி.

தெருவின் இந்தக் கோடியையும், அந்தக் கோடியையும் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார். ஒருவேளை, கனவில் வந்த கோலத்தில் யாரேனும் நடந்து செல்கிறார்களா என்று. ஆனால், தெருவின் இந்த முனையிலும் சரிஎதிர் முனையிலும் சரிபடபடக்கிற வெயில் நேரத்தில் யாரும் கண்ணில் படவில்லை. தெருவே காலியாக இருந்தது.

சரி, நமக்கு எப்படியும் பணம் கிடைத்து விடும். பெரியவாளே அருளி விட்டார்என்று மகிழ்ந்து, பூஜையறையில் இருக்கும் மகா பெரியவாளின் திருவுருவத்தின் முன்னால் போய் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார் பாட்டி.

சுமார் பதினைந்து நிமிடம் கடந்திருக்கும். தங்கையின் மகன் வீட்டு வாசலில் இருந்து, “பெரீம்மாஉனக்கு மணி ஆர்டர் வந்திருக்கு. சீக்கிரமா வாஎன்று உரக்கக் குரல் கொடுத்தான்.

பாட்டிக்குத் திகைப்பு. ‘மணி ஆர்டராஎனக்காஎனக்கு யார் அனுப்புவார்?’ என்ற யோசனையுடன் பூஜையறையில் இருந்து வெளியே வந்தார் பாட்டி. அங்கே தபால்காரர், “பாட்டிஉனக்கு மணி ஆர்டர் வந்திருக்கு. இதுல கையெழுத்து போடுஎன்று ஒரு படிவத்தை நீட்டினார்.

அதை வாங்கித் திண்ணையில் வைத்துக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, தபால்காரர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார். பிறகு, எண்ணிப் பார்த்தார்.

சுளையாக இருநூறு ரூபாய்!

பாட்டிக்குப் பேச்சு மூச்சே வரவில்லை. பகல் கனவு பலிக்காது என்று சொல்வார்களேஆனால், எனக்குக் கனவில் சொன்னபடி இருநூறு ரூபாய் வந்திருக்கிறதே?’ என்று ஆச்சரியப்பட்டு மகா பெரியவாளை மனதுக்குள் தியானித்தபடி கண்ணீர் விட்டு விசும்பினார்.

தன்னிடம் கொடுக்கப்பட்ட படிவத்தில், அனுப்பியவரது முகவரி இருக்குமே என்று ஆர்வத்துடன் புரட்டிப் புரட்டிப் பார்த்துத் தேடினார்.

ஆச்சரியம் பாருங்கள்அனுப்பியவரது முகவரியே படிவத்தில் இல்லை. அனுப்புபவரது முகவரி எழுதப்பட வேண்டிய அந்த இடம் காலியாகவே இருந்தது.

கண்கள் கலங்க அந்தத் தொகையை உடனே எடுத்துக் கொண்டு ஸ்ரீமடத்து அதிகாரிகளை சந்தித்து பாத பூஜைக்கான பணம் என்று கட்டி, அன்றைய தினமே பாத பூஜை செய்து மகா பெரியவாளின் அனுக்ரஹம் பெற்றாள் பாட்டி.

அந்தப் பரப்பிரம்மம் ஒரு புன்னகையுடன் செல்லம்மா பாட்டியை ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்து அனுப்பியது.

கொடுத்து அனுப்பிய தெய்வத்துக்குத் தெரியாதா, பாட்டிக்கு எப்படிப் பணம் வந்தது என்று!