“முத்திரை எல்லாம் போட முடியறதா?”

சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை சென்னைக்கு யாத்திரை வந்திருந்தார். சென்னை பாரிமுனையில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள சங்கர மடத்தில் முகாம்.

பாரிமுனையில் தங்கி இருந்த காலத்தில் தினமும் அரண்மனைக்காரத் தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் ஆலயத்தில் பிரவசனம் (சொற்பொழிவு) நடத்துவார். இதற்காக தம்புச் செட்டித் தெருவில் இருந்து அரண்மனைக்காரத் தெருவுக்கு நடந்து சென்று திரும்புவார்.

ஒரு நாள் அந்தி சாயும் வேளையில் தன் பிரவசனம் முடித்து விட்டு தம்புச் செட்டித் தெருவுக்கு மகா பெரியவா திரும்பும்போது, அருள்மிகு காளிகாம்பாள் ஆலயம் வழியாக வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து திரளான பக்தர்கள், பண்டிதர்கள், இசைக் கலைஞர்கள், மடத்துச் சிப்பந்திகள் என்று மிகப் பெரிய கூட்டம்.

மகா பெரியவா தங்கள் ஆலயம் வழியாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த காளிகாம்பாள் ஆலய அர்ச்சகர் சண்முக குருக்களும் அவரது மகனும், சிறுவனுமான சாம்பமூர்த்தியும் (பின்னாளில் சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் என்றும், சிவாச்சார்யர் என்றும் அறியப்பட்டவர்) தரிசனத்துக்காக வாசலில் கைகூப்பியபடி நின்றிருந்தனர்.

காளிகாம்பாள் ஆலயத்தைக் கடந்து செல்லும்போது அந்த மகானுக்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லைஆலயப் பகுதியை அண்ணாந்து பார்த்தார். திடீரென ஆலயத்துக்குள் புகுந்து விட்டார்.

அன்னை காளிகாம்பாள் அன்றைய தினம் நிச்சயம் அகம் மகிழ்ந்திருப்பாள். தாயைத் தேடி தனயன் வருகின்றானே!

வாசல் வழியாகக் கடந்து செல்கின்ற மகானைப் பார்த்து வணங்குவதற்காகக் கைகூப்பி நின்றிருந்த தந்தையும் மகனும் பிரமித்துப் போய், ஒன்றும் பேசத் தோன்றாமல்வாங்கோ வாங்கோஎன்று பூர்ணகும்பம் வைக்காத குறையாக மகா பெரியவாளை வரவேற்றனர்.

ஒரு புன்னகையுடன் ஆலயத்துக்குள் பிரவேசித்த மகா பெரியவா விறுவிறுவென்று காளிகாம்பாள் சந்நிதி நோக்கி நடக்கஅவரது நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரைப் பின்தொடர்ந்து ஆலயத்தினுள் ஓடினர்.

மகா பெரியவாளுடன் சங்கர மடத்துக்குச் சென்று கொண்டிருந்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் ஆலயத்துள் புகுந்தது.

சண்முக குருக்கள் செய்வதறியாமல் தவித்தார். ‘தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு மகா பெரியவா வந்து தனது திருப்பாதங்களைப் பதிக்க மாட்டாரா என்று பல சமஸ்தானங்களும் ஜமீன்களும் ஏங்கிக் கொண்டிருக்கும்போது எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடுமென இந்த ஆலயத்துக்குள் நுழைந்து விட்டாரேஇந்த மகான் வரப் போவது முன்கூட்டியே நமக்குத் தெரிந்திருந்தால் பூர்ணகும்பத்தோடு, நாகஸ்வரமேளம் முழங்க வரவேற்பு கொடுத்திருக்கலாமேஎன்று சண்முக குருக்களுக்கு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. மகானைப் பார்த்து ஏதும் பேச அவரது நா எழவில்லை.

அன்னை காளிகாம்பாளுக்கு தினமும் தான் செய்கின்ற பூஜையும், வழிபாடும் இன்றைக்குப் பலன் கொடுத்திருக்கிறதே என்று மகிழ்ந்து, மகா பெரியவாளைப் பார்த்து மீண்டும் மீண்டும் வணங்கியபடி தேவியின் சந்நிதிக்குள் சென்றார்.

காளிகாம்பாளின் திருச்சந்நிதி முன் நின்று அன்னையைத் தொழுதார் மகா பெரியவா. காஞ்சி ஸ்ரீமடத்தின் சார்பாக மிக உயர்ந்த புஷ்ப மாலையையும், சில திரவியங்களையும் அம்பாளுக்கு சமர்ப்பித்தார் மகா பெரியவா.

வேத மந்திரங்கள் சொல்லி, புஷ்பங்களை அர்ச்சித்து, ஆரத்தி காண்பித்து பெரியவாளுக்குப் பிரசாதம் தந்தார் சண்முக குருக்கள்.

ஒரு ஓட்டலுக்கு வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் என்றால், சாப்பாட்டில் ருசி இருக்க வேண்டும்.

ஒரு கோயிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் என்றால், அந்த ஆலயத்தில் இறை சாந்நித்தியம் இருக்க வேண்டும்.

அந்த நாளில் காளிகாம்பாள் ஆலயத்துக்கு பக்தர்கள் அதிகம் வருகிறார்களோ இல்லையோஆனால், இறை சாந்நித்தியத்துக்குக் கொஞ்சமும் பஞ்சம் இல்லை. ஆத்மார்த்தமான பக்தர்களுடன் பேசுவாள் இந்த காளிகாம்பாள் (இன்றைக்கும் பேசி பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறாள்).

இந்த சாந்நித்தியத்துக்குக் காரணம்சண்முக குருக்கள் ஆலயத்தில் தினமும் நிகழ்த்தி வருகிற பூஜைகளும், ஜபமும்தான் என்று அப்போதிருந்த பக்தர்கள் சொல்வார்கள். தினமும் அம்பாள் சந்நிதியில் அமர்ந்து சுமார் மூன்று மணி நேரம் ஜபம் செய்வாராம் சண்முக குருக்கள்.

காளிகாம்பாள் ஆலயத்தைக் கடந்து செல்கின்ற மாத்திரத்திலேயே இங்கு நிலவும் அபரிமிதமான சாந்நித்தியத்தை உணர்ந்த மகா பெரியவா, எந்த வித அழைப்பும் இல்லாமல் தானே உள்ளே நுழைந்து தன் தாயைத் தரிசித்தார்.

தரிசித்தது மட்டுமல்லசந்நிதியையும், ஆலய சுற்றுப்புறத்தையும் பார்த்து சண்முக குருக்களை மனம் திறந்து பாராட்டினார் மகா பெரியவா.

அதன் பின் சிறுவன் சாம்பமூர்த்தியைப் பார்த்து, ”ஒம் பேர் என்ன?” என்று பெரியவா கேட்டார்.

சாம்பமூர்த்தி…” – சிறுவன் தைரியமாக பதில் சொன்னான்.

சாம்பமூர்த்தியைப் பார்த்து மகா பெரியவா, ”இந்தக் காளிகாம்பாள் சிறந்த வரப்ரசாதி. சாந்நித்தியம் ரொம்ப உண்டு. அப்பாக்கு அடுத்து உன்னோட பக்தி சிரத்தையால இந்த ஆலயம் மேலும் மேலும் வளரணும். கோயிலை நீ இன்னும் மேல கொண்டு வாஎன்று பரிபூரணமாக ஆசிர்வதித்து விட்டு, விறுவிறுவென வெளியே நடந்தார் மகா பெரியவா.

தனக்கு அடுத்து இந்த காளிகாம்பாள் பூஜைகளையும் வழிபாட்டையும் மகன் சாம்பமூர்த்தி நன்றாக நடத்திச் செல்ல வேண்டுமேஎன்ற எண்ணத்தில் அதுவரை இருந்து வந்த தந்தை சண்முக குருக்களுக்கு மகா பெரியவாளின் ஆசியும் அறிவுரையும் மிகப் பெரியடானிக்காக அமைந்தது.

சர்வேஸ்வர சொரூபமான மகா பெரியவாளின் மோதிரக் கையால் சிறு வயதிலேயே குட்டுப்பட்ட சாம்பமூர்த்தியின் எதிர்காலம் அமோகமாக பிரகாசிக்காமலா போகும்! தந்தையின் காலத்துக்கு அடுத்து சாம்பமூர்த்தியே இங்கே தலைமை அர்ச்சகர் ஆனார்.

அப்போதெல்லாம் அக்ரஹாரத்தில் வசிக்கின்ற நாலைந்து குடும்பத்தில் இருந்து மட்டும் பக்தர்கள் ஆலயம் வருவார்கள். ஆனால், இன்றைக்கு ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயத்தில் நுழைவது என்றால், அவ்வளவு சாதாரணம் அல்ல. எந்த நேரமும் பக்தர்கள் கூட்டம் சொல்லி மாளாது.வருடங்கள் ஓடின.