காத்திருந்த மூதாட்டிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

னிதன் – மகான்…

இந்த இருவருமே இறைவனின் படைப்புதான்.

ஒரு தாயின் வயிற்றில் ஜனித்தவர்கள்தான்.

குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகிறவரை அந்தக் குழந்தை என்னவாக ஆகப் போகிறது என்பதை அவ்வளவு சுலபமாக கணித்து விட முடியாது. சிற்சில நேரங்களில் குழந்தையின் ஜாதக அம்சம், உடல் அமைப்பு போன்ற சிலவற்றை வைத்து, ‘இந்தக் குழந்தை உலகாளும்‘, ‘இது குடும்பத்தையே காக்கும்‘, ‘இது குடும்பத்தில் தங்கவே தங்காதுஎன்றெல்லாம் அனுபவம் வாய்ந்த சில ஜோதிடர்களால் சொல்ல முடியும்.

வளர்ந்த பின் ஒவ்வொரு மனிதனின் மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறுமா என்பதை எல்லாம் தீர்மானிப்பது அவரவர் கர்ம வினைகள்தான். அதாவது, முன் ஜென்மத்தில் அவரவர் செய்த நல்வினை, தீவினைகளின்படிதான் நற்பலன்களோ, தீய பலன்களோ அமைகின்றன.

இதைத்தான் சொல்கிறோம் – ‘தினை வினைத்தவன் தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.’

மனிதர்களாகப் பிறப்பதற்கே நாமெல்லாம் மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும் என்று நூல்கள் சொல்கின்றன.

அப்படி என்றால், மகான்களாக அவதரிப்பதற்கு எத்தனை எத்தனை புண்ணியத்தை முந்தைய ஜன்மத்தில் செய்திருக்க வேண்டும்.

காஞ்சி மகா பெரியவா ஒரு கருணைக் கடல்.

ஏழைகளின் துயரைத் தீர்க்க வந்த இறை அவதாரம்.

எப்படி ஒரு பக்தன் தெய்வத்தைத் தேடி கோயிலுக்கு செல்கின்றானோ, அதுபோல் தெய்வமும் உண்மையான தன் பக்தனைத் தேடி அவன் இருக்கின்ற இடத்துக்கு வரும்.

தன் உண்மையான ஒரு பக்தைக்கு அருள் புரிவதற்காக மகா பெரியவா தேடி வந்த கதையைப் பார்ப்போமா?

அதுவும் இரவு பத்தரை மணிக்கு மேல்!

பிரபல கண் மருத்துவர் ஒருவர் காஞ்சி மகா பெரியவாளைத் தரிசிக்க ஸ்ரீமடத்துக்குள் பரபரப்புடன் நுழைந்தார்.

அவர் ஸ்ரீமடத்துள் காலடி எடுத்து வைத்தபோது மணி என்ன தெரியுமா?

இரவு பத்தரை.

ஒரு பெரிய மூங்கில்தட்டில் விதம் விதமான பழங்கள், தொடுத்த மல்லிகைச் சரங்கள்இத்தனை வஸ்துக்கள் நிரம்பிய அந்தத் தட்டை அவர் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையும்போதே ஒரு பதட்டம் அவர் முகத்தில் தெரிந்தது.

தனக்கு அறிமுகமான ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் எவரேனும் கண்ணுக்குப் பட மாட்டார்களா என்று தேடினார்.

ஸ்ரீமடத்தில் மகா பெரியவா தரிசனம் முடிந்து பக்தர்கள் அனைவரும் புறப்பட்டுப் போயிருந்தனர்.

ஸ்ரீமடத்திலேயே ஒரு சில நாட்கள் தங்கி, மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனம், சந்திரமௌளீஸ்வரர் பூஜை போன்றவற்றை நிதானமாகக் காண வேண்டும் என்று வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், ஆகாரமும் முடிந்து தங்களது ஓய்வறைக்குப் போய் விட்டார்கள்.

இங்குமங்கும் கண் டாக்டர் தேடியபோது, ஒரு பழக் கூடையைத் தூக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சிப்பந்தி கண்ணில் பட்டார். சிப்பந்தியின் பெயர் சொல்லிக் கூப்பிடுவதற்காக அவரது பெயரை நினைவுக்குக் கொண்டு வரும் விதத்தில் கண் டாக்டர் யோசித்துக் கொண்டிருக்கும்போது சிப்பந்தியே ரொம்பவும் அந்நியோன்னியத்துடன் அருகில் வந்தார். ”என்ன சார்பெரியவாளைத் தரிசனம் பண்ண வந்திருக்கேளா?” என்று கேட்டார்.

ஆமா ஆமாஎன்று அவசரமாக இரண்டுஆமாம்போட்டதில் இருந்தே எப்படியும் பெரியவாளைத் தரிசித்து விட்டு உடனே மெட்ராஸுக்குப் புறப்பட வேண்டும் என்கிற அவசரம் அவரது பேச்சில் தென்பட்டது.

மணி பத்தரையைத் தாண்டிடுத்தேபக்தாள்லாம் இன்னிக்கு அதிகமா இல்லேங்கிறதால சில கணக்கு வழக்குகளையும் ரொம்ப நிதானமா பாத்துட்டுப் பெரியவா சயனத்துக்குப் போய் பதினஞ்சு நிமிஷம்தான் ஆறதுஎன்றவர், ”வேணா இன்னிக்கு ராத்திரி ஒங்களுக்குத் தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணித் தர்றேன். தங்கி சிரமப்பரிகாரம் பண்ணிண்டு கார்த்தால விஸ்வரூப தரிசனம் பாத்துட்டுப் போலாமா? சவுகரியப்படுமா?” என்று இழுத்தார் சிப்பந்தி.

கார்த்தால ஒரு சர்ஜரி இருக்கு மெட்ராஸ்ல. வெளியூர்க்குப் போயிட்டு இப்பதான் ரிடர்ன் ஆயிண்டுருக்கேன். போற வழிதானேபெரியவாளையும் அப்படியே ஒரு எட்டு பாத்துட்டுப் போனா, மனசுக்கு சந்தோஷமா இருக்கும்கிற ஆசைல வந்துட்டேன். லேட்டுதான். தப்பு என்கிட்டதான் இருக்குஎன்ற கண் டாக்டர், சற்றுக் குரலைத் தாழ்த்தி, ”ஒரு எட்டு பெரியவாட்ட சொல்லிப் பார்க்கறேளாநான் வந்திருக்கேன்னு…” என்றார் சிப்பந்தியிடம்.

சிப்பந்தி சற்று தயக்கத்துடன், ”கொஞ்சம் இருங்கோ…” என்று சுரத்தில்லாமல் சொல்லி விட்டு, பெரியவா இருக்கிற அறை பக்கமாக நகர்ந்தார்.

கண் கண்ட தெய்வத்தின் தரிசனம் இன்றைக்குக் கிடைக்குமா?’ என்கிற கவலையுடன் இருந்தார் கண் டாக்டர்.

தெய்வத்தின் சந்நிதியில் திரையிட்டு விட்ட பின், உள்ளே இருக்கிற குருக்களைக் கூப்பிட்டு, ‘கொஞ்சமா திரையைத் திறங்கோளேன்நான் பாத்துட்டு ஓடிடறேன்என்று சொல்வது எந்த அளவுக்கு பாவமோ, அபத்தமோஅந்த அளவுக்குத் தான் செய்கிற காரியம் இருக்கிறது என்பதை அந்த டாக்டர் உணர்ந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை.

தான் இருந்த பகுதியைச் சுற்றும்முற்றும் திரும்பிப் பார்த்தார். எந்த ஒரு மனித வாடையுமே கண்ணுக்குப் படவில்லை.

போன சிப்பந்தியும் வரவில்லை.

ஐந்து நிமிடம் போயிருக்கும்.

ஒருவர் டார்ச் விளக்கை அடித்துக் கொண்டு முன்னால் வரவெளிச்சம் வந்த பாதையைப் பார்த்தவாறு கலியுக தெய்வம் தண்டம் ஏந்தி, வந்து கொண்டிருந்தது.

மகா பெரியவாளுக்குப் பக்கத்தில்கொஞ்சம் இடைவெளி விட்டு அந்த சிப்பந்தியும் வந்து கொண்டிருந்தார்.

டாக்டருக்கு அருகில் பெரியவா வந்ததும், தான் எடுத்து வந்த மூங்கில் தட்டைப் பெரியவாளின் பாதம் அருகே வைத்து விட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

எழுந்து நின்று வாயைப் பொத்திக் கொண்டு பெரியவாளைப் பார்த்தார். ”மன்னிக்கணும்…. நேரம் கெட்ட நேரத்துல வந்து பெரியவாளுக்குத் தொந்தரவு கொடுத்துட்டேன்…”

பெரியவா ஏதும் பேசவில்லை.

எங்கோ சில அடிகள் தள்ளி எரிந்து கொண்டிருந்த ஒரு டியூப் லைட்டின் வெளிச்சம் லேசாக இங்கும் விழுந்து கொண்டிருந்ததே தவிர, அரைகுறை வெளிச்சம்தான் இருந்தது.

அந்த அரைகுறை வெளிச்சத்தில் பெரியவா பார்வை தன் மேல் விழுந்து கொண்டிருப்பதாகதன்னை ஆசிர்வதிப்பதாக டாக்டர் தவறாக அர்த்தம் கொண்டிருந்தார்.

உண்மையில் மகா பெரியவா பார்வை டாக்டரிடத்தில் இல்லை. பெரியவா பார்வை இந்த இடத்தில் கடைக்கோடியில் நிலை குத்தி இருந்தது.

பின், பெரியவா சிப்பந்தியைப் பார்த்துச் சொன்னார்: ”தோ, கடைசீலசுவர் ஓரமா ஒரு பாட்டி நின்னுண்டு இருக்கா பாரு, ஒடனே கூட்டிண்டு வா. பாவம், கார்த்தாலலேர்ந்து என்னைப் பாக்கணும்னு நின்னுண்டு இருக்கா.”

கண் டாக்டர், பெரியவாளுக்கு டார்ச் அடித்துக் கூட்டி வந்தவர், சிப்பந்தி ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் பெரியவா சொன்ன திசையை ஆர்வத்துடன் கவனித்தார்கள்.

ஆம்! மகா பெரியவா நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் இருநூறு அடிகள் தள்ளி ஒரு பாட்டி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

அந்தப் பாட்டி சட்டென்று இவர்களது கண்களுக்குப் படவில்லை. கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால்தான் தெரிகிறது.

அவ்வளவுதான்பெரியவா உத்தரவை நிறைவேற்றுவதற்காக அந்தச் சிப்பந்தி, பாட்டி நின்றிருந்த இடத்தை நோக்கி குடுகுடுவென்று ஓட ஆரம்பித்தார்.

ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்திலேயே பாட்டியைத் தன்னுடன் கூட்டி வந்து விட்டார்.

பாட்டிக்கு சுமார் 70 வயது இருக்கலாம். மகா பெரியவா அருகே வந்ததும், தன்னையும் அறியாமல் பாட்டியின் கண்கள் கலங்கின.

மகா ப்ரபோ…. சர்வேஸ்வரா…” என்று இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டு, ஏதோ சொல்வதற்காக வாயைத் திறந்தார்.

எதுவும் பேச வேண்டாம்என்பது போல் மகா பெரியவா அந்தப் பாட்டிக்கு ஒரு ஜாடை காட்டி விட்டு, டாக்டரைப் பார்த்தார்.

டாக்டருக்கு மனக் குறை. ‘என்னடா, தான் பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கிறோம்நாம் வந்த தகவல் சிப்பந்தி மூலமாக உள்ளே போய், பெரியவாளே வந்திருக்கிறார்ஆனால், நம்மிடம் ஆசி வழங்குவது போல் ஓரிரு வார்த்தைகள் பேசவில்லையேநம்மை விட்டு விட்டு எங்கோ ஒரு மூலையில் எதற்கோ நின்று கொண்டிருக்கிற ஒரு சாதாரண ஏழைப் பாட்டியை அருகே வரவழைத்திருக்கிறாரேஎன்று திக்பிரமை விலகாமல் பெரியவாளையும் பாட்டியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாட்டியைப் பார்த்தாலே ஒரு பரிதாபம் எவருக்கும் தானாகவே வந்து விடும். தோற்றத்தில் ஏழ்மை. பார்வையில் பணிவு.

திடீரென டாக்டரைப் பார்த்தார் மகா பெரியவா. ”நீ கண் டாக்டர்தானே?”

ஆமா பெரியவா.”

தோ நின்னுண்டு இருக்காளேஇந்தப் பாட்டியோட மூக்குக் கண்ணாடி கொஞ்ச நாளுக்கு முன்னால சேதமாயிடுத்து. அதை மாத்தறதுக்கு இவகிட்ட வசதி இல்லே. என்கிட்ட சொல்றதுக்கும் அவளுக்குத் தோதுப்படலை.

சேதமான மூக்குக் கண்ணாடியை இடுப்புல ஒரு பொட்டலமா முடிஞ்சு வெச்சுண்டிருக்கா. இவா பார்வையையும் செக் பண்ணிட்டு, கண்ணாடியை ஒடனே மாத்திக் குடுத்துடுஎன்று டாக்டரைப் பார்த்துச் சொல்லி விட்டு, பாட்டியைப் பார்த்துக் கையைத் தூக்கி ஆசிர்வாதம் பண்ணிவிட்டு அந்த சர்வேஸ்வர சொரூபம் தன் இருப்பை நோக்கி வேகமாக நகர்ந்தது.

டார்ச் அடித்து வெளிச்சம் காட்டியபடி மகா பெரியவாளுக்கு முன்னால் வந்தவர் வழக்கம்போல் டார்ச் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியபடி பெரியவாளுக்கு முன்னால் ஓட ஆரம்பித்தார்.

மகா பெரியவா சென்ற திசையைப் பார்த்து பாட்டி தரையில் விழுந்து நமஸ்கரித்தார்.

கண் டாக்டரும் நமஸ்கரித்தார்.

உள்ளே பெரியவா சயனத்துக்குப் போன பின் கைங்கர்யம் செய்த சிப்பந்தியும், டார்ச் அடித்து வந்தவரும் தோழமையுடன் பேசியபடி தங்கள் இடத்துக்குப் படுக்கப் போய்க் கொண்டிருந்தார்கள்.

சிப்பந்தி சொன்னார். ”டாக்டர் வந்திருக்கார்னு நான் உள்ளே வந்து சொன்னவுடனே பெரியவாநாளைக்கு வரச் சொல்லு…’ இல்லேன்னா, ‘அப்புறம் பார்க்கலாம்‘ – அப்படின்னு எந்த மறுப்பும் சொல்லாம உடனே வந்துட்டார், பார்த்தியா. எவ்ளோ பெரிய டாக்டர் அவர்என்று டாக்டரின் பிரதாபம் பற்றிப் பேச

அதற்குடார்ச்சொன்னார்: ”மண்டுஅது அப்படி இல்லேடாகண் டாக்டரைப் பாக்க அந்த இருள் வேளைல வர்றதா ஒரு காரணத்தை ஏற்படுத்திண்டு, பாவம் அந்தப் பாட்டிக்கு கிருபை பண்றதுக்காக தெய்வம் வெளியே வந்திருக்கு. பகவானுக்குப் பணக்காரன் வேண்டாம். உண்மையான பக்தன்தான் வேண்டும்.”

சிப்பந்தி உடல் சிலிர்த்துப் போனார்.

மகா பெரியவா சாட்சாத் நடமாடும் தெய்வம்.

எந்த மூலையில் ஒரு பக்தன் தன்னை இடைவிடாமல் தோத்திரம் செய்து கொண்டிருக்கிறானோ, அவன் இருக்கின்ற இடம் தேடி வந்து அவனுக்கு தரிசனம் தந்து அருள் புரிய தெய்வங்களும் மகான்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடமாடும் தெய்வமான மகா பெரியவாளும் பாட்டிக்கு அருள் புரிய கண் டாக்டரை அங்கே அந்த வேளையில் வரவழைத்திருக்கிறார்.