திரிபுரசுந்தரி தந்த தீபாவளி பட்சணம்

பாரத தேசத்தில் பண்டிகைகளுக்குப் பஞ்சம் இல்லை. பெரும்பாலான பண்டிகைகள் தெய்வங்களின் அவதாரத்தையும், அருள் நிகழ்வுகளையும், அசுர சம்ஹாரத்தையும் ஒட்டியே ஏற்பட்டவை.

நவராத்திரி, தீபாவளி, சங்கராந்தி, ஸ்ரீராம நவமி, ஆருத்ரா தரிசனம், கிருஷ்ண ஜயந்தி, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என்று இந்துக்களுக்கு உண்டான பண்டிகைகளைப் பட்டியல் இடத் தொடங்கினால் அதன் வரிசை நீண்டு கொண்டே போகும்.

பண்டிகைகள் என்றாலே, கோயில்களும் வீடுகளும் விழாக் கோலம் பூணும்.

பக்தர்கள் கூட்டத்தால் கோயில்கள் ததும்பும்.

விருந்தினர்கள் கூட்டத்தால் வீடுகள் நிரம்பும்.

பண்டிகை தினங்களில் எப்படிக் கோயில்களுக்குச் சென்று தெய்வங்களை வணங்குகிறோமோ, அதுபோல் அன்றைய நாட்களில் மகான்களையும் அவர்கள் இருக்கின்ற இடம் தேடிச் சென்று தரிசித்து அவரை வணங்கி, ஆசிகள் பெறுவது ஒரு வழக்கம். மிகப் பெரிய பேறாக இதைக் கருதினார்கள்.

காஞ்சி மகா பெரியவாளை தீபாவளி, தைப்பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் தரிசித்து அவரது ஆசிகளைப் பெறுவது அந்த மகானின் பக்தகோடிகளுக்குப் பேரானந்தம்!

அது போல் அது ஒரு தீபாவளி தினம். மாலை வேளை

அன்றைய தினம் மகா பெரியவாளை தரிசித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்பதற்காக உள்ளூரான காஞ்சிபுரம் மட்டும் அல்லாமல் சென்னை, கல்பாக்கம், விழுப்புரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.

அந்தக் காலத்தில் மகா பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரமோ, அல்லது வேறு ஏதேனும் ஊர்களுக்கோ செல்கிற ஆத்மார்த்தமான பக்தர்கள் அந்த மகானிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

பிரசாதமா?

உபசரிப்பான வார்த்தைகளா?

ஏதேனும் சலுகையா?

இவற்றையும் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால், இவற்றை விட இன்னொரு விஷயத்தை மிகவும் ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள்.

அதுதான்அந்த மகான் ஒரு சில விநாடிப் பொழுதாவது தங்களை நேருக்கு நேராகப் பார்க்க வேண்டும். அதாவதுநேரடிப் பார்வை.

உலகத்தையே காத்து அருளும் அந்த மகான் குறைந்தபட்சம் ஒரு சில விநாடிகளாவது தன் அருட்பார்வையைத் திருப்பி, கருணை பொங்கும் அந்த விழிகளால் நம்மையும் ரட்சிக்க மாட்டாரா! இந்த ஏக்கம்தான் அவரது ஆத்மார்த்தமான பக்தர்களுக்கு இருந்தது.

மகான்களின் பார்வை நம் மேல் பட்டாலே, நமக்கு விமோசனம்! பாவங்கள் கூண்டோடு போச்சு!

அந்த ஒரு கருணைப் பார்வைக்கென்றே மகா பெரியவா எந்த மாநிலத்தில்எந்தக் குக்கிராமத்தில் முகாமிட்டாலும், ‘பெரியவாபெரியவா…’ என்று அனைத்து சிரமங்களையும் மறந்து ஓடினார்கள் பக்தர்கள்.

அந்த நடமாடும் தெய்வத்துக்குத் தங்களால் இயன்ற காணிக்கைப் பொருட்களை சமர்ப்பித்து, ஒரு நமஸ்காரம் செய்து, கண்கள் பனிக்க அவரது திருமுகத்தையேசாட்சாத் சர்வேஸ்வரனையே தரிசிப்பது போல் நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அதிர்ஷ்டம் இருக்கின்ற பக்தர்கள் அந்த வரிசையில், மகா பெரியவா கண்ணசைவால் நிறுத்தி வைக்கப்படுவர். ஒருவேளை அதிர்ஷ்டம் இல்லை என்றால், மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்கின்ற அன்பர்கள், ”தள்ளுங்கோதள்ளுங்கோதரிசனம் ஆச்சு இல்லையாஎன்று தள்ளாத குறையாக விரட்டுவதில் முனைப்பாக இருப்பார்கள்.

புன்னகையோடு அவர் வழங்கும் ஆசி, எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை, மகிமை புரியும்.

திருக்கரம் உயர்த்தி வரிசையில் வந்து கொண்டிருக்கிற அந்த பக்தர்களிடம், ”நீ ஆனதாண்டவரம்தானேஉங்கூர் குளத்துல எப்பவும் ஜலம் இருக்குமே…”, ”திருப்புறம்பயத்துல அந்த பிரளயம் காத்த விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு தேனபிஷேகம் இப்பவும் நடந்துண்டு இருக்கா?” என்று அந்தந்த ஊர் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டால், இன்னும் ஜாக்பாட்.

நிகழ்வுக்கு வருவோம்

தீபாவளி அன்று பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்ததால், குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடையில் ஜொலித்தனர்.

மகா பெரியவா ஒரு கொட்டகையில் அமர்ந்து வருகின்ற பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். மிக நீண்ட வரிசையில் பக்தர்கள் பொறுமையாக வந்து, பெரியவாளை தரிசித்து, பிரசாதம் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிப்பதற்கென்று எடுத்து வந்த புத்தம் புது வஸ்திரங்கள் (வேட்டி, புடவை, சட்டைத் துணிகள் போன்றவை) அடங்கிய பையைத் தங்கள் கைகளில் வைத்திருந்தார்கள்.

இன்னும் சில ஆசாரமான (மிகவும் சுத்தபத்தமான) பெண்மணிகள் தங்கள் இல்லங்களில் தயாரித்த இனிப்பு மற்றும் வேறு சில பட்சணங்களையும் பாத்திரங்கள் மற்றும் பைகளில் வைத்திருந்தனர் (பெரியவா இவற்றைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீமடம் சம்பந்தப்பட்ட பலருக்கும், ஏழைகளுக்கும் விநியோகிப்பது வழக்கம்).

இன்னும் சிலர் பழங்கள், உலர்வகை பழங்கள் போன்றவற்றை வைத்திருந்தார்கள்.

மகா பெரியவாளைத் தரிசித்த பக்தர்கள் ஒவ்வொருவராக நகர்ந்து கொண்டே இருந்தார்கள்.

ஒரு வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது தனக்கு முன்னால் எத்தனை பேர் இருக்கின்றார்கள், தனக்குப் பின்னால் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்று நோட்டம் விடுவது பலருக்கும் இருக்கின்ற வழக்கம். அந்த வகையில் வரிசையில் வந்து கொண்டிருந்தவர்களை அவ்வப்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் ஓர் ஆச்சரியம்.

எல்லோரும் குறிப்பிட்ட ஒரு இடத்தையேஆச்சரியத்தோடும், வியப்போடும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்படி யார் அந்த இடத்தில்?

ஒரு சிறுமிவயது ஒன்பது அல்லது பத்து இருக்கலாம். வரிசையில் நின்று கொண்டிருந்தாள்.

பாவாடை சட்டை அணிந்து, இரட்டைப் பின்னல் போட்டு, அதில் துளி மல்லிகைப்பூவையும் வைத்து, நெற்றியில் குங்குமத்துடனும், முகம் நிறைய சந்தோஷத்துடனும் நின்று கொண்டிருந்தாள்.

அவள் மூன்று டப்பாக்களைக் கைகளில் வைத்திருந்தாள்.

வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களையும், ஸ்ரீமடத்தின் சந்நிதானத்தில் மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்திகளையும் இவள் வெகுவாகக் கவர்ந்தாள்.

இந்த சிறுமியுடன் பெரியவர்கள் யாரும் வரவில்லைதனியாகவே வந்து நின்று கொண்டிருக்கிறாள்என்பது அனைவருக்கும் தெளிவாகப் புரிந்து விட்டது.

ஒருவேளை காஞ்சிபுரத்தில் வசிக்கிறவளாக இருப்பாள். அம்மாஅப்பாவிடம் சொல்லி விட்டு இவள் மட்டும் தனியாக வந்து இங்கே வரிசையில் நின்று கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது…’ என்றே அனைவரும் தீர்மானித்து, மிகவும் சுட்டித்தனமாக இருந்த அந்த சிறுமியைப் பார்ப்பதும், அவளைப் பார்த்துப் புன்னகைப்பதுமாக இருந்தார்கள்.

அந்தச் சிறுமி யாருக்கும் எந்த விதமான ரியாக்ஷனையும் காண்பிக்கவில்லை. வரிசையில் நின்று அவ்வப்போது மகா பெரியவாளையே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் கையில் மூன்று டப்பாக்களை வைத்திருக்கின்றாளேமகா பெரியவாளுக்கு சமர்ப்பிப்பதற்காகக் கொண்டு வந்திருப்பாளோ? அந்த டப்பாக்களில் என்ன இருக்கும்?’ என்பது பக்தர்களின் சந்தேகம். சரி, எப்படியும் பெரியவா முன்னால் அவள் நிற்கின்ற வேளையில் இதற்கான விடை கிடைத்து விடும் என்று ஆர்வமாக இருந்தனர்.

வரிசை மெள்ள மெள்ள நகர்ந்து அந்த சிறுமியின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு முன்னால் ஒரு புன்னகையுடன் நின்று அவரைப் பார்த்தாள்.

பெரியவாளும் புன்னகைத்தார்.

மூன்று டப்பாக்களில்இரண்டு டப்பாக்களை ஒன்று சேர வைத்து விட்டு, இன்னொரு டப்பாவை மட்டும் சற்றுத் தள்ளி மகா பெரியவா முன்னால் வைத்தாள் சிறுமி.

இவளது செயல்களும் நடவடிக்கைகளும் அனைவராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

மகா பெரியவா புன்னகை மாறாமல், ”இந்த டப்பால்லாம் எனக்கா?” என்று கேட்டார்.

ஆமாஎன்றாள் அழுத்தம்திருத்தமாக.

என்ன இருக்கு இதுல?” – இரண்டு டப்பாக்களைக் காட்டிப் பெரியவா கேட்டார்.

தீபாவளி பட்சணம் ஒங்களுக்குக் கொடுக்கறதுக்காக வந்துருக்கேன். ஒங்களுக்குப் புடிச்ச திரட்டுப்பாலும், கோதுமை அல்வாவும் இந்த ரெண்டு டப்பால இருக்கு.”

மகா பெரியவா புன்னகைத்துக் கொண்டே, ”சரிஇந்த மூணாவது டப்பால என்ன இருக்கு?” என்று கேட்க… ”பட்சணம் சாப்பிடறதுக்கு முன்னாடி வாய்ல போட்டுக்கறதுக்கு தீபாவளி லேகியம்என்று தடை இல்லாமல் தெளிவாகச் சொன்னாள்.

அங்கிருந்த சிப்பந்திகள், பக்தர்கள் அனைவரும் ஆச்சரியம் விலகாமல் இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவள் கொண்டு வந்த டப்பாக்களில் என்ன இருக்கின்றன என்கிற முடிச்சு இப்போது அவிழ்ந்து விட்டது.

பார்த்தேளாஒரு சின்ன பொண் கொழந்தைஎந்த அளவுக்குப் பெரியவா கிட்ட வந்து தீபாவளி பட்சணம் கொடுத்துட்டு நிக்கறாகொழந்தைன்னா இப்படித்தான் இருக்கணும்அவ முகத்தைப் பாருங்கோ, என்ன ஒரு தெய்வாம்சம்என்று அந்த சிறுமியைப் பார்த்து அனைவரும் தங்களுக்குள் மிகவும் சன்னமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

மகா பெரியவாளைத் தரிசிப்பதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களும், ஆங்காங்கே ஓரமாக அமர்ந்திருந்தவர்களும் இந்த சிறுமியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் அனைவரும்திடீரென அந்த சிறுமியைத் தேடினால், காணவில்லை.

சிப்பந்திகளுக்கும் ஆச்சரியம் – ‘இத்தனை நேரம் தங்களது கண்களுக்கு முன்னால் விழிகளை உருட்டியபடி நின்று கொண்டிருந்தாளே? அதற்குள் அவள் எங்கே போயிருப்பாள்என்று கூட்டத்தில் இங்குமங்கும் தேடினர்.

பக்தர்களுக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது – ‘எங்கே அவள்? இத்தனை நேரம் கண்களுக்கு முன்னால் வளைய வளைய வந்து கொண்டிருந்தாளேஎன்று அங்குமிங்கும் பார்வையை அலை பாய விட்டனர்.

சிக்கக் கூடியவளா அவள்?!

அன்று இரவு மகா பெரியவா தன் கொட்டகையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் யாரும் உடன் இல்லை.

அப்போது அவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த இளம் வயது சிப்பந்தி, பெரியவாளை நமஸ்கரித்து விட்டு, பவ்யமாக நின்று கொண்டிருந்தான்.

நிமிர்ந்து பார்த்த பெரியவா, ”என்னடா…” என்று கேட்டார்.

பெரியவாஇன்னிக்கு சாயங்காலம் நானும் ஒங்களுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருந்தேன்.”

பரப்பிரம்மம் அண்ணாந்து பார்த்தது.

தயக்கத்துடன் மெள்ள இழுத்தான். ”ஒரு சந்தேகம் பெரியவாஇன்னிக்கு சாயங்காலம் உங்ககிட்ட வந்து தீபாவளி பட்சணம் குடுத்தாளே ஒரு குழந்தைஅவ யாரு பெரியவா?” – கேட்டு விட்டுப் பெரியவா சொல்லப் போகும் பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தக் குட்டியாஅவ சாட்சாத் திரிபுரசுந்தரிடாஅம்மா குழந்தைக்கு பட்சணம் கொடுக்கறது இல்லியாஅதுபோல எனக்கு பட்சணம் குடுக்கறதுக்காக அந்தத் தாயார் ஒரு கொழந்தை ரூபத்துல வந்திருக்கா…” என்று சொன்னதும், பிரமிப்பு மேலீட்டால் அந்த சிப்பந்தி, பெரியவாளைப் பார்த்து, ”சர்வேஸ்வரா…” என்று நமஸ்காரம் செய்தார். சிப்பந்தியின் படபடப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது.

மகா பெரியவாளுக்கு அருகே அந்த மூன்று டப்பாக்களும் இருந்தன.