அது ஒரு தீபாவளி காலம்…
தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன.
மகா பெரியவா அப்போது காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார்.
அன்றைய தினம் காலை காஞ்சிபுரத்தில் இருக்கும் தறி நெசவாளர்கள் பலர், மகா பெரியவாளை தரிசிப்பதற்காக பெருமளவில் திரண்டு தேனம்பாக்கம் வந்தனர்.
புன்னகையுடன் அவர்களை வரவேற்று, ”என்ன, எல்லாரும் ஒண்ணா சேந்து வந்திருக்கேள்?” என்றார்.
”ஆமா சாமி… நாங்க எல்லாரும் சந்தோஷமான ஒரு செய்தியை உங்ககிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்” என்றனர் கோரஸாக.
அவர்கள் அனைவரையும் இடமும் வலமுமாகப் பார்வையைத் திருப்பிப் பார்த்தார் மகா பெரியவா.
தறி நெசவாளர்களில் முன்வரிசையில் நின்றிருந்த ஒருவர், ”சாமீ… விஷயத்தை நான் சொல்றேங்க… இந்த வருஷம் நாங்க தயார் பண்ண வேஷ்டிங்க, பொடவைங்க எல்லாம் நல்ல விலைக்குப் போயிருக்கு. இங்கே இருக்கிற வியாபாரிங்களும், மெட்ராஸ்ல இருக்கிற வியாபாரிகளும் நிறைய கொள்முதல் பண்ணி இருக்காங்க. நிறைய தயார் பண்ணிக் கொடுத்திருக்கோம். எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு நல்லாவே லாபம் வந்திருக்கு சாமீ” என்றார்.
மகா பெரியவா முகம் கொள்ளா சந்தோஷத்தோடு தன் இரு கரங்களையும் உயர்த்தி அவர்களை ஆசிர்வதித்தார்.
‘எங்களுக்கு நல்ல லாபம் கிடைச்சிருக்கு‘ என்று உற்சாகமாகச் சொல்லக் கூடிய மன நிலை அவ்வளவு எளிதில் இந்தக் காலத்தில் யாருக்கு வரும்?!
முதலில் பேசியவரே தொடர்ந்தார்: ”சாமீ… எங்களுக்கு நல்ல லாபம் கிடைச்சிருக்கறதால, நாங்க எல்லாரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். சாமீ (மகா பெரியவா) நம்மகூட இருக்கறதாலதான் நமக்கு இவ்ளோ லாபம் கெடைச்சிருக்கு. எனவே, சாமிக்கு நம்மால் ஆன நன்றியைப் பண்ணணும்‘னு முடிவெடுத்திருக்கோம். இதை நீங்க ஏத்துக்கணும்” என்று மகா பெரியவாளை நமஸ்கரித்தார்.
உடன் வந்த தறி நெசவாளர்கள் அனைவரும் மகா பெரியவாளை விழுந்து நமஸ்கரித்தனர்.
”சாமீ… நாங்க தயார் பண்ண வேஷ்டி – பொடவை மற்றும் வஸ்திரங்களை நாளைக்குக் காலைல ஒரு லாரில இங்க அனுப்பறோம் சாமீ… இந்த தீவாளிக்கு ஒங்க கையால மடத்துச் சிப்பந்திகளுக்கும் அவர்களோட குடும்பத்துக்கும் நீங்க குடுக்கணும் சாமீ… அதைத் தவிர, ஒங்களைத் தேடி வர்ற கஷ்டப்படறவங்களுக்கும் தீவாளிப் பரிசா குடுக்கணும்” என்றார், உணர்ச்சிமயமாக.
மகா பெரியவா புன்னகையுடன் தலையாட்டி அவர்களை ஆசிர்வதித்து, பிரசாதம் தந்து அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் காலை சொல்லி வைத்தது மாதிரி, ஒரு லாரி வந்து தேனம்பாக்கம் முகாம் வாசலில் நின்றது. அதில் வந்த தறி நெசவாளர் ஒருவர், மடத்து மேனேஜரிடம் வந்தார். விவரம் அனைத்தையும் சொல்லி, ”ஒன்பது பேல் (பெரிய பார்சல்) கொண்டு வந்திருக்கோம். இதுல வேஷ்டி – துண்டு, புடவை – ரவிக்கைத் துணி போன்றவை இருக்கு. எங்கே இறக்கி வைக்கணும்னு சொல்லுங்க சாமீ. நாங்க எறக்கி வெச்சுடறோம்” என்றார்.
அதன்படி மேனேஜர் ஒரு இடத்தைக் காட்டினார்.
அங்கே ஒன்பது பேல்கள் இறக்கி வைக்கப்பட்டன. அவற்றைச் சரி பார்க்கச் சொல்லி விட்டு, ஒப்புதலுக்கு மேனேஜரிடம் ஒரு கையொப்பம் வாங்கிக் கொண்டு லாரி புறப்பட்டு விட்டது.
லாரி புறப்பட்டுப் போன பின் மேனேஜர், மகா பெரியவாளிடம் போய் விவரத்தைச் சொன்னார்.
”ஒன்பது பேலையும் எங்க வெச்சிருக்கே?” என்று கேட்டார் மகா பெரியவா.
பதில் சொன்னார்.
”ரெண்டு நாள் போகட்டும். அதைப் பிரிச்சு விநியோகம் பண்ணிடலாம்” என்றார் மகா பெரியவா.
போகும்போதும் வரும்போதும் அந்த பார்சல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை மேனேஜர் கவனிக்கத் தவறவில்லை.
விநியோகம் பண்ண வேண்டிய நாளும் வந்தது.
அன்றைய தினம் காலையே மேனேஜரை அழைத்த மகா பெரியவா, ”இன்னிக்கு சந்திரமௌளீஸ்வர பூஜை முடிஞ்சவுடனே பார்சல்களைக் கொண்டு வந்துடு. விநியோகம் பண்ணிடலாம்” என்று சொல்லி இருந்தார்.
‘பார்சல்கள் இருக்கிற பக்கம் போய் இரண்டு நாள் ஆகிறதே… போய் ஒருமுறை பார்த்து விட்டு வருவோம்‘ என்று பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குப் போனார் மேனேஜர்.
ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பேல்களைப் பார்த்தார். மொத்தம் ‘ஒன்பது பேல்கள்‘ இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளும் விதமாக ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் கொண்டே போனவர் அதிர்ச்சியானார். அப்படியே நிறுத்தினார்.
மீண்டும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண… அதே அதிர்ச்சி!
பின்னே… அதிர்ச்சி இருக்காதா?
ஒன்பது பேல்கள் இருக்க வேண்டிய இடத்தில் எட்டு பேல்கள் மட்டுமே இருக்கின்றனவே?
எங்கே போயிற்று அந்த ஒன்று?
வியாபாரிகளிடம் இருந்து வந்தவை ஒன்பது பார்சல்கள் என்பது மகா பெரியவாளுக்குத் தெரியும். அவருக்கு ஏற்கெனவே இதுகுறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு சந்திரமௌளீஸ்வர பூஜை முடிந்த பிறகு இந்த ஒன்பது பார்சல்களையும் பிரித்து ஸ்ரீமடத்தில் ஊழியம் புரியம் சிப்பந்திகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கொடுக்கலாம் என்று மகா பெரியவா சொல்லி இருக்கிறாரே… அதன்படி இங்கே பல குடும்பங்களும் காலையில் இருந்தே வந்து சேரத் துவங்கி விட்டதே… பூஜை முடித்த பின் மகா பெரியவா ஒன்பது பார்சல்களையும் கொண்டு வரச் சொன்னால், எஞ்சிய ஒன்று எங்கே போனது என்று அவரிடம் சொல்ல முடியும்‘ என்று மேனேஜர் குழம்பினார்.
தேனம்பாக்கம் முகாமின் பிரதான வாசல் அருகே பாரா (காவல்) இருக்கும் ஆசாமிகளிடம் கேட்டார்: ”ஏம்ப்பா… இங்கே வெச்சிருந்த ஒன்பது பார்சல்கள்ல ஒண்ணு குறையுது… நீங்கள்லாம்தானே இங்க காவல் இருக்கீங்க… உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?”
பாராக்கள் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டார்கள். ”சாமீ, நாங்க காவல் இருக்கிற இந்த இடத்துல இதுபோல நடக்க சான்ஸே இல்லை. இங்கதான் எங்கியாச்சும் யாராவது எடம் மாத்தி எடுத்து வெச்சிருக்கப் போறாங்க” என்று புதிதாக ஐடியா கொடுத்தார்கள்.
”இல்லப்பா… எல்லா இடத்திலும் தேடியாச்சு. அந்த ஒரு பார்சல் போன இடம் தெரியல. அந்த பார்சலை அவ்வளவு சுலபமா யாரும் தூக்கிட முடியாது. ஒருவேளை ஒத்த ஆசாமியா ஒருத்தன் தூக்கிட்டுப் போயிருக்கான்னா அவன் நல்ல கட்டுமஸ்தான உடம்போடதான் இருக்கணும்…” என்று சொல்லியபடி மெள்ள நடந்த மேனேஜர், ‘அப்படிப்பட்ட தேகக் கட்டோட மடத்து முகாம்ல யார் யாரெல்லாம் இருக்கா?‘ என்று தனக்குள் யோசித்தபடி, மடத்தில் இருக்கும் ‘குண்டான‘ ஆசாமிகளை ஒவ்வொருவராகத் தன் மனக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்.
ஒவ்வொருவராக மனக் கண் முன்னால் நிற்க… ‘சேச்சே… அவன் இப்படிச் செய்ய மாட்டான்…. அட, அவனா… ரொம்ப நல்லவன் ஆச்சே‘ என்று குண்டாக உள்ள எல்லோருக்கும் நல்ல சர்டிபிகேட் கொடுத்து, பார்சல் திருட்டு விஷயத்தில் அவர்களை ‘ரிஜக்ட்‘ செய்து கொண்டே வந்தார் மேனேஜர்.
அப்படி என்றால் பார்சல் எங்கே போனது?
முகாமில் எப்போதும் குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருக்கும் பாடசாலை பசங்களைத் தன் அருகே அழைத்தார். வந்து நின்ற அவர்களிடம், காணாமல் போன ஒரு பார்சல் குறித்துத் தகவல் சொல்லி விட்டு, இது குறித்த விவரம் அவர்களுக்குத் தெரியுமா என்று விசாரித்தார்.
வேதம் படிக்கிற பசங்கள், ‘இதைப் போய் எங்ககிட்ட கேக்கறேளே மாமா…‘ என்று வித்தியாசமாகப் பார்த்து விட்டு, உதட்டைப் பிதுக்கினார்கள்.
மேனேஜர் தவித்தார். சந்திரமௌளீஸ்வர பூஜையை மகா பெரியவா துவக்கி விட்டார். இது முடிந்தவுடன் நம்மை அழைப்பார். பார்சல்களைக் கொண்டு வரச் சொல்வார். என்ன பதில் சொல்வது?
ஓய்வாக ஒரு மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார் மேனேஜர்.
மகா பெரியவா நடத்தும் பூஜையை தரிசிக்க திரளான கூட்டம் கூடி இருந்தது. பூஜை முடிந்த பிறகு, தீர்த்த பிரசாத விநியோகம் நடக்கும். இதன் பிறகு ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ‘வஸ்திர விநியோகம்‘ நடக்கும்.
நேரம் ஓடியது. எப்படிப் போனது என்றே தெரியவில்லை.
மேனேஜரின் அருகே வந்து குழுவாக நின்ற பாடசாலை பசங்கள், ”மாமா… மாமா… பெரியவா ஒங்களை ஒடனே கூப்பிடறார்?” என்று குரல் உயர்த்தி அழைத்தபோதுதான், இந்தக் கவலையிலும் அசதியிலும் மரத்தடியில் தான் லேசாகக் கண்ணயர்ந்து விட்டோம் என்பது மேனேஜருக்குப் புரிந்தது.
விருட்டென்று எழுந்தார். அருகே ஒரு குடத்தில் இருந்த ஜலத்தால் முகத்தை அவசரம் அவசரமாகத் துடைத்துக் கொண்டார். ‘மகா பெரியவா சரணம்… மகா பெரியவா சரணம்‘ என்றபடி பெரியவா இருக்கும் இடம் அருகே ஓடினார்.
மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றார். பெரியவா தரப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தார்.
‘பார்சல் காணாமல் போன விஷயத்தை மிகவும் நைச்சியமாக பெரியவாளிடம் சொல்ல வேண்டும்‘ என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார் மேனேஜர்.
மேனேஜர் பக்கம் திரும்பிய மகா பெரியவா, ”ஒரு காரியம் பண்ணு” என்று ஆரம்பித்தார்.
”பெரியவா, நான் ஒரு விஷயத்தை ஒங்ககிட்ட சொல்லணும்னு…” என்று மேனேஜர் இழுத்தபோது,
”அது இருக்கட்டும். அப்பொறம் பாத்துக்கலாம். இப்ப நான் சொல்றதைக் கவனமா கேளு” என்றார் மகா பெரியவா.
‘சரி, முகாமில் இருந்து பார்சல் காணாமல் போன விஷயத்தை இப்ப சொல்ல வேண்டாம்‘ என்று தீர்மானித்து விட்டு, ”சொல்லுங்கோ பெரியவா” என்று வாய் பொத்தி பவ்யமாக நின்று கொண்டிருந்தார் மேனேஜர்.
”ரெண்டு படி நல்லெண்ணெய் வாங்கிக்கோ. நல்ல செக்கெண்ணெயா பாத்து வாங்கு. ரெண்டு ரூபாய்க்கு சீயக்காய்த் தூள் வாங்கிக்கோ. காஞ்சிபுரத்துல நல்ல ஸ்வீட் கடையா பாத்து ரெண்டு கிலோ லட்டு வாங்கிக்கோ” என்று மகா பெரியவா சொல்லி விட்டு ஒரு சிறு இடைவெளி விட்டார்.
மேனேஜர் தன் வலக் கையால் வாயைப் பொத்தியபடி எல்லாவற்றும் ‘ம்ம்‘ என்று சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர, ‘இவற்றை எல்லாம் எங்கே கொண்டு போய் கொடுக்க வேண்டும்… யாருக்கு இவற்றை எல்லாம் தரச் சொல்கிறார்? விஷயம் என்னவாக இருக்கும்?‘ என்று எதுவும் யோசிக்கவில்லை.
மகா பெரியவா மீண்டும் தொடர்ந்தார். ”இதை எல்லாம் வாங்கிண்டு இதே தேனம்பாக்கத்துல இன்ன தெருவுல (மகா பெரியவா அந்தத் தெருவின் பெயரைச் சொல்கிறார்) இன்ன பேர் கொண்ட (பெயரையும் சொல்கிறார்) ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட எல்லாத்தையும் பத்திரமா எடுத்துண்டு போய்ச் சேர்த்துட்டு, ‘ஸ்ரீமடத்துலேர்ந்து பெரியவா ஒங்ககிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னா. எல்லாம் தீபாவளிக்கு ஒங்களுக்காகக் கொண்டு வந்தது. ஒரே கண்டிஷன் – ரெண்டு படி நல்லெண்ணெயையும் நீங்க ஒருத்தரே தலைக்குத் தேய்ச்சுக்கணுமாம். ரெண்டு ரூபாய் சீயக்காய்த் தூள் முழுவதையும் நீங்களே தேய்ச்சுக்கணுமாம். ரெண்டு கிலோ லட்டு முழுவதையும் நீங்களே சாப்பிடணுமாம். இதை எல்லாம் பெரியவா சொல்லி அனுப்பினார்னு சொல்லிக் கொடுத்துட்டு வந்துடு” என்று முடித்தார்.
மடத்தில் ஒரு சம்பிரதாயம். மகா பெரியவா என்ன உத்தரவிட்டாலும், அதை ‘ஏன்? எதற்கு?‘ என்றெல்லாம் கேட்கிற வழக்கம் அன்றைக்கு எவருக்குமே இருந்ததில்லை.
மேனேஜரும் அந்த ரகம்தான்!
‘ரெண்டு படி நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தால், ஒரு குடும்பம் முழுக்க தீபாவளி அன்று விடிகாலை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமே! அதைத் தவிர, ஒரு மாத உபயோகத்துக்கும் அந்த இரண்டு படியில் இருந்து எண்ணெய் மிஞ்சுமே!
ரெண்டு ரூபாய்க்கு சீயக்காய்த் தூள் நிறைய இருக்குமே… ஒருவரே எப்படி இத்தனை சீயக்காய்த் தூளைத் தேய்த்துக் கொள்ள முடியும்?
போகட்டும்… ரெண்டு கிலோ லட்டு முழுவதையும் ஒரே ஆள் எப்படிச் சாப்பிட முடியும்?‘ என்றெல்லாம் மனதுக்குள் விநோதமாகக் கேள்விகள் தோன்றினாலும், அவற்றைப் புறம் தள்ளினார் மேனேஜர்.
நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா சொன்னால், அதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என்று தெளிந்தவர், அங்கிருந்து வெளியே நகர்ந்தார்.
மேனேஜருக்கு ஒரு வகையில் சந்தோஷம். ‘நல்லவேளை… அந்த ஒன்பது பார்சல் பற்றி இப்போது பெரியவா எதுவும் ஆரம்பிக்கவில்லை. நாம் போயிட்டு வந்த பிறகுதான் அந்த விசாரணை… கொஞ்ச நேரத்துக்குத் தப்பித்து விட்டோம்‘ என்று வெளியே வந்தார்.
பெரியவா சொன்ன அயிட்டங்களை வாங்குவதற்கும், அவற்றை தேனம்பாக்கத்தில் பெரியவா சொன்ன அன்பரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும் தேனம்பாக்கம் முகாமில் இருந்து புறப்பட்டார் மேனேஜர்.
காஞ்சிபுரம் வந்து மகா பெரியவா சொன்னது மாதிரி எல்லாவற்றையும் வாங்கிச் சேகரித்தாகி விட்டது.
அனைத்தையும் ஒரு பெரிய பையில் போட்டு எடுத்துக் கொண்டு தேனம்பாக்கத்தில் பெரியவா சொன்ன முகவரிக்குச் சென்றார்.
குறிப்பிட்ட அந்த வீட்டுக் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
வீட்டு வாசலில் நின்றபடி அந்த அன்பரின் பெயர் சொல்லி, உரக்கக் குரல் கொடுத்தார் மேனேஜர்.
அந்த அன்பரே வந்து கதவைத் திறந்தார்.
மேனேஜரைப் பார்த்தார். வியப்புடன் நின்றார்.
”வாங்கோ வாங்கோ… இந்த நேரத்துல இங்க வந்துருக்கேளே… என்ன விசேஷம்? உக்காருங்கோ” என்று வாசல் திண்ணையைக் காண்பித்தார்.
தான் கொண்டு வந்த பொருட்கள் அடங்கிய பெரிய பையைத் திண்ணையில் வைத்து விட்டு, வசதியாக அமர்ந்து கொண்டார் மேனேஜர்.
”சும்மாதான்… பெரியவா உத்தரவு… ஒங்களைப் பாக்க வந்திருக்கேன்.”
”பெரியவா உத்தரவா?” என்று அதிர்ந்த அந்த அன்பர், ”என்ன விஷயமா அனுச்சிருக்கார்?” என்று கலவரத்துடன் கேட்டார்.
”ஒண்ணும் பயப்படாதீங்கோ… எல்லாம் நல்ல விஷயம்தான். தீபாவளி வருதோல்லியோ… பெரியவா ஒங்களுக்கு சீர் மாதிரி பொருட்களைக் கொடுக்கச் சொல்லி இருக்கார்” என்றார் மேனேஜர்.
ஒன்றும் புரியாமல் மலங்க மலங்கப் பார்த்தார் அந்த அன்பர். ”சீர் மாதிரியா? நீங்க சொல்றது ஒண்ணும் புரியலியே?”
தான் கொண்டு வந்த பையில் இருந்ததை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தார் மேனேஜர்.
”தோ பாருங்கோ… ரெண்டு படி நல்லெண்ணெய்… ரெண்டு ரூபாய்க்கு சீயக்காய்த் தூள்… ரெண்டு கிலோ லட்டு… இவை எல்லாத்தையும் ஒங்ககிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னார்” என்று மேனேஜர் சொன்னார்.
எதிர்த் திண்ணையில் அமர்ந்திருந்த அந்த வீட்டு உரிமையாள அன்பரின் முகத்தில் இனம் தெரியாத ஒரு குழப்பம்.
மேனேஜர் கொடுத்த எல்லா பொருட்களும் திண்ணையில் வைக்கப்பட்டிருந்தன.
திடீரென்று மேனேஜர், ”ஆங்… சொல்ல மறந்துட்டேனே… ஒரு முக்கியமான விஷயத்தையும் ஒங்ககிட்ட பெரியவா சொல்லச் சொன்னார். இந்த ரெண்டு படி நல்லெண்ணெயையும் நீங்க ஒருத்தரே தீபாவளி அன்னிக்குத் தேய்ச்சுக்கணுமாம். ரெண்டு ரூபாய் சீயக்காய்த் தூள் மொத்தத்தையும் நீங்களே போட்டுண்டு குளிக்கணுமாம். ரெண்டு கிலோ லட்டையும் நீங்க ஒருத்தரே சாப்பிடணுமாம்” என்று சொல்லி முடித்து, ‘இதை எதற்காக இவரிடம் சொல்லச் சொன்னார்… ஒரே ஆசாமி ரெண்டு படி எண்ணெயைத் தேய்ச்சுக்க முடியுமா? ரெண்டு கிலோ லட்டைத் திங்க முடியுமா?‘ என்று மேனேஜர் தனக்குள்ளே கேள்விகள் கேட்டுக் கொண்டபோதுதான் அந்த வித்தியாசமான ஓசையைக் கேட்டார்.
ஆம்!
அங்கே மிகப் பெரிய அழுகை சத்தம் அந்த அன்பரிடம் இருந்து விசும்பலாகக் கேட்கத் துவங்கியது.
மேனேஜர் விதிர்விதிர்த்துப் போனார். ‘என்னடாது… இத்தனை நேரமும் நல்லாத்தானே இருந்தார்… நான் தவறாக ஏதாவது சொல்லி விட்டேனா? பெரியவா சொன்னதைத்தானே சொன்னேன்?‘ என்று குழம்பியபடி அவரைப் பார்த்தார்.
அவரது அழுகை நிற்கவில்லை.
இதற்கு மேல் மேனேஜரால் அமைதியாக இருக்க முடியவில்லை. ”என்னங்க… ஒங்ககிட்ட சீர் வரிசை மாதிரி இத்தனை பொருட்களை பெரியவா கொடுக்கச் சொன்னார். நானும் சந்தோஷமா கொண்டு வந்து கொடுத்துட்டேன்.
ஆனா, கடைசீல எல்லாத்தையும் நீங்க ஒருத்தரே பயன்படுத்திக்கச் சொன்னார்னு மகா பெரியவா சொன்னதைச் சொன்னவுடனே, நீங்க பெரும்குரல் எடுத்து அழ ஆரம்பிச்சிட்டீங்களே… என்ன விஷயம்? எனக்கு ஒண்ணும் புரியல. நீங்க சொன்னாதானே எனக்குப் புரியும்?! நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க” என்று மேனேஜர் தன் இரு கைகளையும் இணைத்துக் கூப்பியபோது, அந்த அன்பர் ஓரடி மேனேஜரை நோக்கி நெருங்கி வந்தார். மேனேஜரது இரு கைகளையும் இறுகப் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்டார்.
மேனேஜருக்கு ஒன்றும் புரியவில்லை.
பிறகு அந்த அன்பர், ”சாமீ… என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க… என்னை மன்னிச்சிட்டேன்னு மொதல்ல சொல்லுங்க…” என்று தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
விஷயம் என்ன ஏதென்று புரியாத மேனேஜர், ”சரி… பரவால்லை. மன்னிச்சிட்டேன். மொதல்ல அழறதை நிறுத்துங்க.”
அழுகையைக் கொஞ்சம் நிறுத்திய அந்த அன்பர், ”ஒன்பது பார்சல்ல ஒரு பார்சலை மடத்து முகாம்லேர்ந்து எடுத்திட்டு – மன்னிக்கணும்ங்க – திருடிட்டு வந்தது நாந்தாங்க. நான் மிகப் பெரிய பாவி” என்று குமுறிக் குமுறி மீண்டும் அழ ஆரம்பித்தார்.
மேனேஜர் அதிர்ச்சியில் சிலையாகி நின்றார். ”என்ன சொல்றீங்க நீங்க..?”
”ஆமாய்யா… மடத்து ஆளுங்களுக்குக் கொடுக்கறதுக்காக காஞ்சிபுரத்துல இருக்கிற தறி வியாபாரிங்க நல்ல மனசோட ஒம்போது பார்சல்களை தேனம்பாக்கத்துல பெரியவா இருக்கிற எடத்துல கொண்டு வெச்சாங்க இல்லியா… அதுலேர்ந்து ஒரு பார்சலை நான்தான்யா என் வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தேன்.
சில நாட்களுக்கு முன்னால ஒரு நாள் ராத்திரி மடத்துல பெரியவாளைக் கும்பிடணும்னு வந்தேன். அவரைக் கும்பிட்டு வர்றப்ப இந்த மனசு ஏன்தான் அந்த நேரத்துல அப்படி யோசிச்சுதுன்னு எனக்கு இன்னமும் புரியல. என்னமோ பேராசை. அன்னிக்கு ராத்திரி யாரும் இல்லாத நேரத்துல – பாராக்காரங்க கொஞ்சம் அசந்திருக்கிற நேரத்துல ஒன்போதுல ஒரு பார்சலை யாருக்கும் தெரியாம என் வீட்டுக்குத் தூக்கிட்டு வந்துட்டேன்.
வீட்டுக்கு வந்ததும், தப்பு பண்ணிட்டேனோன்னு தோணிச்சு. பார்சலைப் பிரிக்க மனசு வரலை. இருந்தாலும், ஒரு விதமான தவிப்போட பிரிச்சுப் பார்த்தேன். உள்ளே முழுக்க வேஷ்டிங்க இருந்திச்சு.
அடுத்த வேளைக்கு மாற்று வேஷ்டி இல்லாம கஷ்டப்படற எத்தனையோ மடத்து பக்தர்களுக்கு, ஊழியர்களுக்குப் போக வேண்டிய வேஷ்டிங்களை நான் ஒருத்தன் இப்படி அபகரிச்சிட்டு வந்துட்டேனேன்னு எனக்கு தினோமும் தூக்கமே வரல.
பெரியவாதான் தெய்வமாச்சே. அவருக்குத் தெரிஞ்சிருக்கு. ஒம்போதுல ஒரு பார்சலை நான்தான் எடுத்திட்டுப் போயிட்டேன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு. அவருக்குத் தெரியாம நாம ஏதாவது பண்ண முடியுமானு இந்த மரமண்டைக்கு ஏனோ அப்ப எட்டலை சாமீ.
‘ஏண்டா… இவ்ளோ வேஷ்டிங்களை நீ ஒருத்தனே எடுத்திட்டுப் போனியே… எல்லா வேஷ்டியையும் தீபாவளி அன்னிக்கு ஒண்ணு மேல ஒண்ணா நீ கட்டிப்பியா? அப்படின்னா இத்தனை வேஷ்டிங்களையும் சேர்த்துக் கட்டிக்கிற ஒனக்கு அதுக்கு ஏத்தது மாதிரி மத்த எல்லாத்தையும் மடத்துலேர்ந்து நானே தர்றேன்டா சொல்றது மாதிரி, இப்ப எல்லாத்தையும் நீங்க கொண்டு வந்திருக்கீங்க.
ரெண்டு படி நல்லெண்ணெய், இவ்ளோ சீயக்காய், ஒருத்தன் சாப்பிடறதுக்கு ரெண்டு கிலோ லட்டுன்னு ஒங்க மூலமா குடுத்து விட்டு என் புத்தியைத் தெளிய வெச்சிருக்காங்க.
தப்பு செஞ்ச ஒருத்தன் யோசிச்சு அவனே திருந்தணும்னு அவரு இப்படிப் பண்ணி இருக்காங்க. இந்தத் தப்புலேர்ந்து நான் எப்படி மீளப் போறேன்னு தெரியாம தவிச்சிட்டிருந்தேன். எந்த வேலையும் எனக்கு ஓடலை. வெளி வேலைக்கும் போகலை. நான் திருந்தறதுக்கு அந்த மகா பெரியவா சாமீயே ஒரு வாய்ப்பு குடுத்திருக்கு…” என்று சொல்லி முடித்து பெரும்குரல் எடுத்துத் தேம்ப ஆரம்பித்தார்.
மேனேஜருக்கு இப்போதுதான் புரிந்தது.
‘ஒன்பது பார்சலில் ஒன்று காணோமே என்று தவித்துக் கொண்டிருந்தோமே… எனது தவிப்பை மகா பெரியவா புரிந்து கொண்டு, இதற்கான விளக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார் போலிருக்கிறது‘ என்று தெளிந்தவர், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார்.
ஆனால், அதற்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காமல் அந்த அன்பர், ”சாமீ… நா குத்தம் பண்ணிட்டேன். பார்சல் என்னண்ட இதோ வூட்டுக்குள்ள இருக்கு (எங்கே என்று காட்டுகிறார் மேனேஜருக்கு). நா இப்ப என்ன பண்ணினா, இந்தக் குத்தத்துலேர்ந்து – பெரிய தோஷத்துலேர்ந்து – வெளீல வருவேன்னு அந்த மகா பெரியவா சாமிகிட்டயே கேட்டுட்டுச் சொல்றீங்களா? தெய்வத்துக்கே துரோகம் இழைச்சுட்டேன் சாமீ” என்று மேனேஜரின் கைகளைப் பிடித்துக் கொண்டு மீண்டும் தேம்பினார்.
அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியே வந்தார் மேனேஜர்.
‘பெரியவாளுக்கு எப்பேர்ப்பட்ட ஞான திருஷ்டி… உக்காந்த எடத்துலேர்ந்து இந்த பார்சலை யார் கொண்டு போயிருக்கானு சட்டுன்னு அடையாளம் காட்டிட்டாரே…‘ என்று வியந்தபடி தேனம்பாக்கம் முகாமை நோக்கி நடந்தார் மேனேஜர்.
முகாமுக்குள் நுழைந்தவுடன் நேராக மகா பெரியவா இருக்கும் இடத்தை நோக்கிப் போனார்.
பெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றார். மேனேஜர் பேசத் துவங்கும்போது அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கின.
”பெரியவா உத்தரவுப்படி நல்லெண்ணெய், சீயக்காய், லட்டு எல்லாவற்றையும் கொண்டு போய் கொடுத்துட்டு வந்துட்டேன் பெரியவா. ஆனா, அந்த ஆசாமி சொன்ன உண்மையைக் கேட்டு அப்படியே ஆடிப் போயிட்டேன் பெரியவா. மடத்துல வெச்சிருந்த ஒம்போது பார்சல்ல எப்படி ஒரு பார்சல் காணா போச்சு… என்னோட கவனக் குறைவு காரணமா?‘னு நான் குழம்பி, இதை ஒங்ககிட்ட எப்படிச் சொல்றதுனு தவிச்சிண்டு இருந்தேன். ஆனா, ஒரே நேரத்துல என்னோட தவிப்பையும் எடுத்துட்டு, தப்பு பண்ணவனுக்கும் இதை உணர்த்திட்டேள் பெரியவா” என்று தழுதழுப்பான குரலில் பேச ஆரம்பித்தார் மேனேஜர்.
ஒரு புன்னகை மட்டும் இதற்கு பதிலாக வந்தது மகா பெரியவாளிடம் இருந்து. ஓரிரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவா பேச ஆரம்பித்தார்.
”பாவம்டா… அவன் என்ன பண்ணுவான். ரொம்ப நல்லவன்தான். இங்க வந்துட்டுப் போறப்ப ஏனோ, அவனோட மனசு இப்படி யோசிச்சு தூக்க முடியாம இந்த பார்சலைத் தூக்கிண்டு போயிட்டான்” என்று அந்த நபருக்கும் கருணை காட்டியது கருணா சமுத்திரம்.
”பெரியவா… தன்னோட தப்பை உணர்ந்திட்டதா சொல்றார். என்ன பண்ணினா, இந்தத் தப்புலேர்ந்து பிராயச்சித்தம் கெடைக்கும்னு பெரியவாகிட்ட கேட்டுச் சொல்லச் சொல்றார். எந்த தண்டனையானாலும் ஏத்துக்கத் தயாரா இருக்கேன்னு சொல்றார் பெரியவா” – மேனேஜர் சொல்லி விட்டுப் பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
”அவன் எப்படி இந்த பார்சலை இங்கேர்ந்து தூக்கிண்டு போனானோ, அதே போல அவனை இங்கே கொண்டு வந்து வெச்சிடச் சொல்லு. இங்கேர்ந்து தூக்கிண்டு போறப்ப ராத்திரி வேளைல எடுத்துண்டு போனான். இப்ப பகல் வேளைல தலைல வெச்சிண்டு வரச் சொல்லு. இதுவே அவனுக்குப் போதும். இதை வேற யாருக்கும் விஸ்தாரமாக நீ வெளில சொல்லிண்டு இருக்காதே” என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு உள்ளே போனார் மகான்.
விஷயம் அந்த அன்பருக்குத் தெரிவிக்கப்பட… அதே நாள் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் பார்சலைத் தன் தலையில் சுமந்து வந்து, தேனம்பாக்கம் முகாமில் சேர்த்தார் அந்த அன்பர்.
மகா பெரியவா பாதங்களில் விழுந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தவர், மன்னிப்பும் கோரினார்.
அவருக்குப் பிரசாதம் தந்து ஆசிர்வதித்து அனுப்பியது கலியுக தெய்வம்.