கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பனந்தாள். இதற்கு அருகில் இருக்கிற கிராமம் கொண்டசமுத்திரம். தற்போது நாம் காணப் போகிற சம்பவம் 1950-களில் நடந்தது.
கொண்டசமுத்திரத்தில் அப்போது வசித்து வந்தவர் ராமமூர்த்தி ஐயர். இவர் இதே ஊர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி – ஜெயலட்சுமி அம்மாள். இந்தத் தம்பதியருக்கு ஆறு குழந்தைகள். நான்கு பெண்கள். இரு ஆண்கள்.
நான்காவதாகப் பிறந்த குழந்தையான குருமூர்த்திக்கு, பிறந்ததில் இருந்தே பெரிய சோகம். இரு கால்களிலும் அசைவு, உணர்ச்சி கொஞ்சமும் கிடையாது. இதனால், கால்களைத் தரையில் பதித்து குருமூர்த்தியால் நடக்க முடியாது.
ராமமூர்த்தி ஐயரும், ஜெயலட்சுமி அம்மாளும் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை. ஆனால், குருமூர்த்தி குணமாவதற்கு எந்த ஒரு வழியும் தென்படவில்லை.
இந்த வேளையில்தான் நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவா திருப்பனந்தாளுக்கு முகாம் வந்தார். அங்குள்ள சங்கர மடத்தில் தங்கி இருந்து தினமும் சந்திரமௌளீஸ்வரர் பூஜை நடத்தினார். வருகின்ற பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினார்.
தினமும் அருகில் இருக்கின்ற கிராமங்களுக்கு மேனாவில் பயணித்து, அங்கு வசிக்கும் கிராமவாசிகளுக்குத் தன் ஆசிகளையும் வழங்கினார்.
அந்த வகையில் அன்றைய தினம் மதியம் கொண்டசமுத்திரம் கிராமத்துக்குத் திரளான பக்தகோடிகள் சூழ மேனாவில் சென்று கொண்டிருந்தார். கொண்டசமுத்திரம் ஊர் எல்லையில் மகா பெரியவாளுக்கும் பிரமாண்டமான இந்தப் பரிவாரங்களுக்கும் விமரிசையான வரவேற்பு தரப்பட்டது.
கொண்டசமுத்திரத்தில் அப்போது பெரிய தனவந்தராக இருந்தவர் கே.ஜி. ராமமூர்த்தி என்ற பக்தர். மகா பெரியவா பக்தியில் இவரது குடும்பமே திளைத்து இன்புற்ற காலம் அது. மகா பெரியவா எப்போது திருப்பனந்தாள் பக்கம் வந்தாலும், கே.ஜி. ராமமூர்த்தியின் கிரஹத்தில் சிறப்பு பாத பூஜை நடக்கும்.
கே.ஜி. ராமமூர்த்தியின் இல்லத்துக்குப் பக்கத்து வீடு ஹரேபுரம் ராமமூர்த்தி என்பவருக்குச் சொந்தமானது (இந்தக் கட்டுரையில் மூன்று ராமமூர்த்திகள் வருகின்றனர். கவனமாகப் படிக்கவும்). ஹரேபுரம் ராமமூர்த்தி மாயவரத்தில் வசித்து வந்ததால், இந்த வீட்டில் ஆசிரியரான ராமமூர்த்தி தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பக்கத்து வீடான கே.ஜி. ராமமூர்த்தியின் இல்லத்துக்கு மகா பெரியவா எழுந்தருளி இருக்கிறார் என்பது தெரிந்தவுடன், மனைவியுடன் அங்கே சென்று மகா பெரியவாளை நமஸ்கரித்தார் ஆசிரியரான ராமமூர்த்தி.
ஆசிர்வதித்த பெரியவா இவரை அண்ணாந்து பார்க்க, ”பெரியவா திருப்பாதம் பக்கத்துல இருக்கற எங்க கிரஹத்துலயும் படணும்” என்று குழந்தை குருமூர்த்தியை மனதில் கொண்டு சொல்லி முடிக்கும் முன்பாகவே ஆசிரியர் ராமமூர்த்தியின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
‘வருகிறேன்‘ என்பதாக சைகை காண்பித்து ஆசிரியர் ராமமூர்த்தியை அனுப்பி வைத்தார் மகா பெரியவா.
கே.ஜி. ராமமூர்த்தியின் இல்லத்தில் பாத பூஜைகள் பூர்த்தி ஆனதும், சிதம்பரநாதபுரம் செல்வதற்கு முன்பாக ஆசிரியர் ராமமூர்த்தியின் இல்லத்தை நோக்கி நடந்தார் பெரியவா.
பூர்ணகும்ப வரவேற்போடு மகானை உள்ளே அழைத்துச் சென்றார் ஆசிரியர் ராமமூர்த்தி.
பிரமாண்டமான வீட்டில் கூடத்தில் ஸ்வாமி படங்கள் வைக்கப்பட்டிருந்த மையப் பகுதிக்கு வந்து அமர்ந்தார் மகா பெரியவா. ஸ்ரீமடத்துப் பரிவாரங்கள் அனைத்தும் அவரைச் சூழ்ந்து கொண்டன.
ஆசிரியர் ராமமூர்த்தியின் பெண் விசாலாட்சி (இவள் இரண்டாவதாகப் பிறந்தவள்) தன் தம்பியான குருமூர்த்தியைத் தோள்களில் தூக்கி வந்து, மகா பெரியவாளின் திருவடிகளுக்குக் கீழே போட்டாள். ஒரு நமஸ்காரமும் செய்தாள்.
”இவன் என்னோட நாலாவது கொழந்தை பெரியவா. நாலு வயசு ஆறது. ஆனா, தரைல கால் பாவிச்சு குழந்தை நடக்க மாட்டேங்கிறான். போகாத கோயில் இல்லை. ஜகத்குருவா இருக்கிற பெரியவா, இந்த குருமூர்த்திக்கு அனுக்ரஹம் பண்ணணும்” என்று ஆசிரியர் ராமமூர்த்தி, மகா பெரியவாளிடம் சொல்லி விட்டுத் தேம்ப ஆரம்பித்தார்.
எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்தார் மகா பெரியவா. பிறகு, கொஞ்சம் விபூதியை எடுத்து, ராமமூர்த்தியிடம் கொடுத்து, குருமூர்த்தியின் கால்களில் பூசுமாறு ஜாடை காண்பித்தார்.
தனக்கு முன்னே வைக்கப்பட்டிருந்த பழங்கள் அடங்கிய மூங்கில் தட்டில் இருந்து ஒரே ஒரு வாழைப்பழத்தை எடுத்து ராமமூர்த்தியிடம் கொடுத்தார். பழத்தை உரித்துக் குழந்தைக்கு ஊட்டச் சொன்னார்.
குருமூர்த்தி முழு வாழைப்பழத்தையும் சாப்பிட்டு முடிக்கும்வரை மகா பெரியவா பார்வை, குழந்தையிடம் இருந்து வேறு எங்கும் செல்லவில்லை.
குருமூர்த்தி வாழைப்பழத்தைச் சாப்பிட்டு முடித்து விட்டான். ஆசிரியர் ராமமூர்த்தியின் குடும்பத்தினர் அனைவரும் மகா பெரியவாளை நோக்கி கூப்பிய கரங்களை விலக்கவே இல்லை.
மகா பெரியவா எழுந்தார். வெளியே வந்தார். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் கொண்டசமுத்திரம் தெருக்களை நிறைத்தது. யாத்திரை துவங்கியது.
சிப்பந்திகளும், பக்தர்களும் மகா பெரியவாளைப் பின்தொடர்ந்தனர்.
சிதம்பரநாதபுரம் நோக்கி அடுத்த பயணம் ஆரம்பமானது.
வீடு தேடி வந்து மகா பெரியவா ஆசிர்வதித்து, விபூதியும் வாழைப்பழமும் கொடுத்து விட்டுச் சென்ற அடுத்த ஒரு சில நாட்களிலேயே நடக்க ஆரம்பித்து விட்டான் குருமூர்த்தி
கருணை தெய்வம் மகா பெரியவாளுக்குக் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்தது ஆசிரியர் ராமமூர்த்தியின் குடும்பம்.
தற்போது கிழக்குத் தாம்பரத்தில் அறுபது வயதுகளைக் கடந்த குருமூர்த்தி, தினமும் வாக்கிங் செல்கிறார். அக்கம்பக்க பயணத்துக்கு ‘புல்லட்‘ வாகனம்தான்!