மகா பெரியவாளின் ஆசிர்வாதமும் அந்த மகானின் அருட் கடாட்சமும் கிடைக்கப் பெற்ற பக்தர்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் படிப்பதற்கும் கேட்பதற்கும் பிரமிப்பாக இருக்கும்.
இப்படியெல்லாம் ஒரு மகான் சமீப காலத்தில் வாழ்ந்து தனது இன்னருளைப் பக்தர்களிடம் பொழிந்திருக்கிறாரா என்கிற வியப்பும் ஆச்சரியமும் கேட்பவர்களது புருவத்தை உயர வைக்கும்.
ஒருவரிடம் இருந்து அன்பைப் பெற ஆசைப்பட்டால், முதலில் நாம் அன்புடன் இருக்க வேண்டும்.
ஒருவரிடம் இருந்து மரியாதையை எதிர்பார்க்கிறோம் என்றால், நாம் மரியாதையுடன் நடக்க வேண்டும்.
அதுபோல் மகான்களின் ஆசிர்வாதத்தை நாம் பரிபூரணமாகப் பெற வேண்டும் என்று விரும்பினால், பக்தியும் பணிவும் நம்மிடம் இருக்க வேண்டும்.
அப்படி காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்தை பக்தியுடனும் பணிவுடனும் இருந்து பெற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் ஒருவர்தான் – சிதம்பரம் ஸ்ரீநிவாஸ சர்மா.
வாருங்கள், ஸ்ரீநிவாஸ சர்மாவுக்கு நேர்ந்த அற்புதமான அனுபவத்தைப் பார்ப்போம்.
பல வருடங்களுக்கு முன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர் ஸ்ரீநிவாஸ சர்மா. மிகவும் ஆச்சாரமானவர். பக்தி சிந்தனை நிரம்பப் பெற்றவர்.
பல்கலைக்கழக உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் காஞ்சி ஸ்ரீமடத்துக் கைங்கர்யமே பிரதானம் என்று தீர்மானித்து, மகா பெரியவாளிடம் சரணாகதி ஆனார்.
சர்மாவை (ஸ்ரீநிவாஸ சர்மாவை இனி சர்மா என்றே பார்ப்போம்) தனிப்பட்ட முறையில் நன்றாகவே அறிவார் மகா பெரியவா. எப்போது பார்த்தாலும், எத்தனை பக்தர்கள் கூட்டம் இருந்தாலும் சர்மாவைத் தனியாகக் கூப்பிட்டு நலம் விசாரிப்பார் பெரியவா.
1980-ஆம் வருடத் துவக்கத்தில் மகா பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்தார்.
அதே 1980 ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி சர்மாவின் சகோதரி மகனுக்கு பம்பாயில் (இன்றைய மும்பை) திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியரை ஆசிர்வதிப்பதற்காக பம்பாய் சென்றிருந்தார் சர்மா.
பம்பாயில் திருமண வீட்டில் பலருடனும் பேசிக் கொண்டிருந்தபோது மகா பெரியவா பற்றின பேச்சு அங்கே சுவாரஸ்யமாக ஆரம்பித்தது.
கலியுக தெய்வமாக விளங்கக் கூடிய அந்த மகானைப் பற்றி அங்கே இருந்த முதியவர்கள் பலரும் தங்களது அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அந்த பக்தர்களில் ஒருவர், ”காஞ்சி மகா பெரியவா தற்போது புனேவுக்கு அருகே இருக்கிற சதாராவில்தான் முகாமிடிருக்கிறார்” என்று ஒரு தகவலை சாதாரணமாகப் பேச்சுவாக்கில் சொல்லி இருக்கிறார்.
அவ்வளவுதான்! உறவினர் கல்யாணத்துக்கு வந்த இடத்துக்கு அருகிலேயே மகா பெரியவா சதாராவில் முகாமிட்டிருக்கிறார் என்று தெரிய வந்தபோது சர்மா குதூகலமானார்.
எப்படியாவது சதாரா சென்று பெரியவாளின் ஆசிர்வாதத்தைப் பெறுவது என்று தீர்மானித்தார். ஆனால், சர்மாவுக்கு பம்பாய் புதிது. இங்கிருந்து சதாரா எவ்வளவு தொலைவு… எப்படிச் செல்வது என்றெல்லாம் புரியவில்லை. இந்தத் தகவலைச் சொன்ன உறவினரிடமே, ”பம்பாயில் இருந்து சதாராவுக்கு எப்படிச் செல்வது?” என்று விசாரித்தார்.
”சர்ச் கேட்டில் இருந்து புனே வழியாக சதாராவுக்கு ரயிலில் செல்லலாம். சதாரா போக இதுதான் சவுகரியமான வழி. ஆனால், இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். நீங்கள் உட்கார்ந்து செல்வதற்கு இடம் கிடைக்குமா என்றெல்லாம் பார்க்கக் கூடாது” என்றார் அவர்.
அதற்கு சர்மா, ”அதற்கெல்லாம் நான் ஆசைப்படவில்லை. மகா பெரியவா இவ்ளோ பக்கத்துல இங்கே இருக்கார். அவரைத் தரிசிக்க வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. அவ்வளவுதான். ரயிலில் உட்கார்வதற்கு இடமெல்லாம் வேண்டாம். நின்று கொண்டு பயணம் செய்ய ஏதேனும் ஒரு மூலையில் இடம் கிடைத்தாலே போதும். அந்த நடமாடும் தெய்வத்தின் நினைவுடனும், அவரது திருநாமங்களைச் சொல்லியபடியும் சதாரா போயிடுவேன்” என்றார் உற்சாகமாக.
கல்யாணம் சுபமாக நடந்து முடிந்தது. மணமக்களை ஆசிர்வதித்தார். விருந்து சாப்பாடும் சாப்பிட்டு விட்டு மாலை 4 மணிக்கு அக்கம்பக்கத்தில் விசாரித்து விசாரித்து சர்ச் கேட் வந்தார்.
சதாரா பயணம் துவங்கியது.
கல்யாண மண்டபத்தில் உறவினர் சொன்னது போல் ரயில் முழுக்க மக்கள் வெள்ளம். இப்படி அப்படி நகரக்கூட இடமில்லை. கலியுக தெய்வத்தை மறுநாள் காலைப் பொழுதில் தரிசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே மனம் முழுக்க நிறைந்து காணப்பட்டதால், ரயிலில் ஏற்பட்ட அசவுகரியத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை சர்மா.
புனேவை ரயில் அடைந்தபோது கொஞ்சம் மூச்சு விட முடிந்தது சர்மாவால். நின்றுகொண்டே பயணித்த பலர் இறங்கினார்கள். ஆனால், உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் எவரும் இறங்குவதாகத் தெரியவில்லை.
இப்போதுதான் அருகில் இருப்பவர்களின் முகத்தை நன்றாகப் பார்த்துச் சிரிக்கவும், ஓரிரு வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளவும் முடிந்தது.
கால்கள் கடுக்க நின்று கொண்டே பயணித்து வரும் சர்மாவைப் பார்த்த சக பயணி ஒருவர், ‘பாவம், பார்ப்பதற்கு பண்டிதர் போல் இருக்கார். ரொம்ப நேரமா நின்று கொண்டே வருகிறாரே‘ என்று மனம் இரங்கினார். இதை அடுத்து சர்மா அமர்ந்து பயணிப்பதற்குத் தான் ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்று தீர்மானித்தார்.
மேலே சுமைகள் வைப்பதற்குப் பயன்படும் அகலமான ஒரு பலகையில் தான் வைத்திருந்த லக்கேஜ்கள் அனைத்தையும் கீழே இறக்கினார். அவற்றையெல்லாம் தான் அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே பத்திரமாக உள்ளே தள்ளி விட்டு, நின்று கொண்டிருக்கும் சர்மாவை அண்ணாந்து பார்த்தார். ”சார்… பாவம், ரொம்ப நேரமா நின்னுண்டே வரேள். இதுல மேலே ஏறி வசதியா உக்காந்துக்குங்கோ. ஒங்களுக்கு சவுகரியம்னா தாராளமா படுத்துக்கலாம்” என்று அந்த மேல் பலகையைத் தாராள மனதுடன் சர்மாவுக்கு ஒதுக்கினார்.
சர்மா முகத்தில் ஒரு சந்தோஷம். அந்த இரவு வேளையில் அது தேவையாகத்தான் இருந்தது. ஒரு பக்கம் தூக்கம் வேறு கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்ததால், இட ஒதுக்கீடு செய்த அந்தப் பயணிக்குப் புன்னகையுடன் நன்றி சொல்லி விட்டு, பக்கவாட்டில் பிடித்துக் கொண்டு மேலே ஏறினார். உடம்பை ஒருவாறு அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு உறங்கவும் செய்தார்.
அசதியின் காரணமாக அடுத்த சில விநாடிகளில் தூக்கம் அவரது கண்களைத் தழுவியது.
மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சதாராவை அடைந்தது அந்த ரயில்.
ஒரு சில பயணிகள் இறங்கினார்கள். சர்மாவும் தூக்கக் கலக்கம் முழுவதும் விலகாமல் இறங்கினார்.
சதாரா பற்றி யாரிடம் விசாரிக்கலாம் என்று தான் இறங்கி நின்ற பிளாட்பாரத்தில் இருந்தபடியே பார்வையைச் சுற்றுமுற்றிலும் ஓட்டினார்.
சுமார் இருபதடி தொலைவில் நின்றிருந்த ஓர் ஆசாமியைப் பார்த்ததும், சர்மாவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. ஆமாம்! தமிழ்நாட்டுக்காரர் போல் ஒருவர் தென்பட்டார். முகமும் ஆடையும் இதை உணர்த்தின.
அந்த அன்பரை மெள்ள நெருங்கியபோது, சர்மாவைப் பார்த்துப் புன்னகைத்தார் அவர்.
”என்ன, தமிழ்நாடா? வாங்கோ வாங்கோ… சூடா கும்மோணம் காபி சாப்பிடறேளா?” என்று அவர் கேட்டபோது, சர்மாவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
அந்த அன்பர் அங்கே ஒரு காபி ஸ்டால் வைத்திருந்ததை அப்போதுதான் கவனித்தார்.
விசாரித்ததில் தன் பெயர் நாராயணய்யர் என்பதை சிநேக பாவத்துடன் சொல்லி விட்டு, ”மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண வந்திருக்கேளா?” என்றார்.
”ஆமாம்” என்று தலையை அசைத்தார் சர்மா.
”இல்லேன்னா இந்த சதாராவுக்கு நம்மூர்லேர்ந்து யாரு வரப் போறா… மகா பெரியவா இங்கே வந்து முகாம் போடறதால, நம்மூர்ப் பக்கத்துலேர்ந்து நிறைய பேர் வரா. எனக்கும் ஸ்டால் வியாபாரம் ஓரளவு ஓடறது” என்றவர், ”ஒங்களுக்கு இந்த ஊர் ஏற்கெனவே பழக்கம் உண்டா?” என்றார்.
”இல்லே சார்… சதாராவுக்கு நான் வர்றது இதுதான் ஃபர்ஸ்ட் டைம்.”
”சரி, என்னோட சொந்தக்காரர் ஒருத்தரை பம்பாய் போற ரயில்ல ஏத்தி விடணும். அவா காத்திண்டுருக்கா. ரயில் வர்ற டைம் ஆயிடுத்து. அதுக்குள்ள நீங்க என்ன பண்ணுங்கோ… இந்த ஸ்டேஷன்லயே ஒங்களோட காலைக்கடன்களை முடிச்சுடுங்கோ. அப்பறமா ஒங்களை சதாராவுக்கு ஒரு ஆட்டோ ஏற்பாடு பண்ணி அனுப்பறேன்” என்றவர், சூடாக ஒரு கப் காபியை சர்மாவிடம் தந்தார்.
ஆவி பறக்கக் கிடைத்த ஃபில்டர் காபி பிளாட்பாரம் முழுக்க மணம் வீசியது.
காபி குடித்த பின், தனது காலைக்கடன்களை நிறைவேற்றுவதற்காக சர்மா நகர்ந்தார்.
ஒரு அரை மணி நேரம் கழித்து நாராயணய்யர் இருந்த இடத்துக்கு சர்மா வந்து நின்றார்.
”வாங்கோ வாங்கோ… ஒங்களுக்காக ஒரு ஆட்டோ ஏற்பாடு பண்ணி இருக்கேன். நேரா பெரியவா இருக்கிற இடத்துல கொண்டு போய் விட்டுடுவார்” என்று ஸ்டேஷனுக்கு வெளியே சர்மாவை அழைத்துச் சென்றார் நாராயணய்யர்.
ஆட்டோ புறப்பட்டது.
செல்கிற வழியில் கண்களுக்குத் தென்பட்ட ஒரு நீர்ச் சுனை அருகே வண்டியை நிறுத்தி அற்புதமான ஒரு குளியலைப் போட்டார் சர்மா. நெற்றியிலும் உடலிலும் திருநீறு பூசிக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி, சதாராவை அடைந்தபோது காலை மணி ஆறேமுக்கால்.
மகா பெரியவா இங்கேதான் தங்கி இருக்கிறார்‘ என்பதை உறுதி செய்வது போல் வெளியே தமிழ்க்கார பக்தர்கள் தென்பட்டார்கள். தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்ட ஐந்தாறு கார்கள் நின்றிருந்தன.
ஆட்டோக்காரருக்கு என்ன தொகை பேசப்பட்டதோ, அதைக் கொடுத்து அனுப்பி விட்டு அந்தப் பகுதியை நோட்டம் விட்டார் சர்மா.
அந்த இடம் கொய்யாத் தோப்பு. அதன் மையப் பகுதியில் ஒரு விநாயகர் கோயில் தென்பட்டது. இங்கேதான் மகா பெரியவா தங்கி இருப்பதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
‘மகா பெரியவா தங்கி இருக்கும் இடத்தில் எப்படியும் ஐம்பது அறுபது பக்தர்களாவது இருப்பார்கள். அவர்களது தரிசனம் முடிந்ததும் நாம் கண் குளிர இந்த மகானை தரிசனம் பண்ண வேண்டும்‘ என்று நினைத்துக் கொண்டே, பெரியவா சிந்தனையுடன் உள்ளே நடந்தார் சர்மா.
மகா பெரியவா தங்கி இருந்த இடத்துக்குள் நுழைந்தார் சர்மா.
எதிரே – ஆஹா!
எந்தப் பரப்பிரம்மத்தை தரிசிக்க வேண்டும் என்று சிரமப்பட்டுப் பயணித்து வந்தாரோ, அத்தனையும் நொடிப் பொழுதில் மறைந்தன.
அற்புதமாக தரிசனம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவா.
அதைவிட ஆச்சரியம்…
பெரியவாளுக்குப் பக்கத்தில் வேறு எவருமே தென்படவில்லை – ஒரே ஒரு சிப்பந்தியைத் தவிர!
ஸ்ரீநிவாஸ சர்மாவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இத்தனை ஏகாந்தமாக மகா பெரியவா தனித்து இருப்பதைத் தொலைவில் இருந்து பார்த்தவுடன், தனக்கு வாய்த்த இந்த அதிர்ஷ்டம் குறித்துக் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொண்டார் சர்மா.
மகா பெரியவாளை இதற்கு முன்னர் பல ஊர்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தரிசித்திருந்தாலும், இது போல் அற்புதமான வாய்ப்பு அமைந்ததில்லை என்றே அவருக்குத் தோன்றியது.
ஆர்வமும், நெகிழ்வும் அதிகரிக்க… மகா பெரியவா திருச்சந்நிதி அருகே சென்றார். விழிகள் கலங்க மகானை இரு கரம் உயர்த்தி வழிபட்டார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
மகா பெரியவா அண்ணாந்து பார்த்தார். ஸ்ரீநிவாஸ சர்மாவை அடையாளம் கண்டுகொண்டு முகத்தில் ஆச்சரியத்துடன், ”நீ எங்கே இவ்வளவு தூரம்?” என்று கேட்டார்.
பம்பாய் கல்யாணத்துக்கு வந்த விவரத்தையும், அங்கிருந்து சதாரா வந்த விவரத்தையும் நிதானமாக விவரித்தார் சர்மா.
மகா பெரியவாளுக்குக் கொஞ்சம் தள்ளி, இன்னொரு சந்நியாசி தரையில் அமர்ந்திருந்ததை அப்போதுதான் கவனித்தார் சர்மா. அவரையும் பார்த்து வணங்கினார்.
”அவரும் என்னைப் போல ஒரு சந்நியாசி… கன்னடத்தவர்” என்று சர்மாவுக்கு அவரை அறிமுகப்படுத்தி விட்டு, அந்த சந்நியாசியிடம் சர்மாவைப் பற்றின அறிமுகத்தை கன்னடத்தில் சொன்னார்.
தன்னைப் பற்றி மேலும் பல விவரங்களை மகா பெரியவா அந்த சந்நியாசியிடம் விவரிப்பதையும், மகா பெரியவா சொன்ன விஷயங்கள் அனைத்தையும் ஆச்சரியத்துடன் கேட்டு அந்த சந்நியாசி தன்னைக் கூர்ந்து கவனிப்பதையும் சர்மா உணர்ந்தார்.
கன்னட சந்நியாசியின் முகத்தில் தெரிந்த ரியாக்ஷனைப் பார்த்து விட்டு, தன்னைப் பற்றி மகா பெரியவா மிக உயர்வாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் சர்மா.
பிறகு, சர்மாவைப் பார்த்து, ”அடுத்து எங்கே போகப் போறே?” என்று கேட்டார் மகா பெரியவா.
”பெரியவா… உங்க தரிசனம் பூர்த்தி ஆனதும், இங்கேர்ந்து புனே போகப் போறேன். அங்கே டெக்கான் காலேஜில் டிக்ஷனரி டிபார்ட்மெண்ட்டில் விமரிசகரா உத்தியோகம் பண்ணிண்டு இருக்கார் ஸ்ரீசிவராமகிருஷ்ண சாஸ்திரிகள். ஆரம்பத்துல சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டில இருந்தார். அங்கே ஓய்வு பெற்ற பின் புனேவுக்கு வந்துட்டார். அவரை தரிசனம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கி நாளாச்சு.
இவர்தான் எனக்கு வியாகரண சாஸ்திர குரு. சமீபத்துலதான் இவருக்கு சதாபிஷேகமும் நடந்தது. அவருக்கு நமஸ்காரம் பண்ணி ஆசி வாங்கிக்கணும். அதன் பின் பம்பாய்க்குக்குப் போய் ஆத்துல எல்லாரையும் கூட்டிண்டு சிதம்பரம் திரும்பணும். இதுதான் பெரியவா என்னோட பிளான்.”
முகத்தில் பிரமிப்பை வெளிக்காட்டிய பெரியவா, ”ஓ… இன்னிக்கு ஒரே நாள்ல ரெண்டு குருமார்களை தரிசனம் பண்ண வந்திருக்கே போலிருக்கு. பேஷ் பேஷ்” என்று சொல்லி விட்டு, ”கல்யாணத்துக்கு வந்தமா… வடை, பாயசம் சாப்பிட்டோமா… சொந்தக்காராளோட குதூகலமா இருந்தோமானு இல்லாம, ஒரு சந்நியாச குருவை தரிசனம் பண்ண வந்துட்டே… அடுத்து ஒன்னோட வித்யாகுருவை தரிசனம் பண்ணப் போறே” என்று நகைச்சுவையுடன் பெரியவா அழகாகப் பேச… சர்மா அதை வெகுவாகவே ரசித்தார்.
”இல்லே பெரியவா… ஒங்க தரிசனம் எனக்குக் கிடைச்சு பல காலம் ஆறது. பம்பாய்க்கு வந்த இடத்துல ஒங்களை தரிசனம் பண்ண அனுக்ரஹம் கெடைச்சிருக்கு” என்று சொல்லி மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு, எழுந்து நின்றார்.
மகான்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நமஸ்காரம் செய்யலாம். அந்தக் காலத்தில் மகா பெரியவாளைத் தரிசிக்கச் செல்கின்ற பக்தர்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஸ்ரீமடத்துக்குள் நுழைந்ததில் இருந்து உத்தரவாகித் திரும்புகிற வரை அவர்கள் செய்திருந்த நமஸ்காரங்களைக் கணக்கிட்டால், சுமார் ஏழெட்டுகூட வரும்.
மகா பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் சர்மா. ஒரு மெல்லிய இடைவெளிக்குப் பின், சர்மாவின் சம்ஸ்கிருதப் பணி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது, சம்ஸ்கிருதம் கற்பதில் இப்போதைக்கு வருகின்ற மாணவர்கள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் ஆர்வமாக விசாரித்தார் மகா பெரியவா.
எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் புள்ளிவிவரத்தோடு பதில் சொன்னார் சர்மா.
சம்ஸ்கிருதம், வேதம், அனுஷ்டானம், கோசம்ரட்சணம், ஆலய கும்பாபிஷேகம் – இவற்றைப் பற்றி வருகிற பக்தர்களிடம் மகா பெரியவா பேச ஆரம்பித்தால், குறுக்குக் கேள்விகள் நிறைய போட்டுப் பேசிக் கொண்டே போவார்.
வருகின்ற பக்தர்களும் இவற்றில் கரை கண்டவர்கள் என்பதால், பெரியவா கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் துல்லியமான பதில்களைச் சொல்வார்கள்.
அதுபோல் சம்ஸ்கிருதம் பற்றிப் பெரியவா கேட்ட எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார் சர்மா.
”சரீ… அதெல்லாம் இருக்கட்டும். உங்க அவிபக்த குடும்பத்தில் (பிரிக்கப்படாத சொத்துள்ள குடும்பம் மற்றும் கூட்டுக் குடும்பம் என்று பொருள் கொள்ளலாம்) திருநெல்லாய் கிராமத்தில் (கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சியில் அடங்கிய கிராமம்) உள்ள வீடு உங்கள் வசம்தானே?” என்று கேட்டார் மகா பெரியவா.
ஆகா! என்னே ஒரு நினைவாற்றல்! சர்மாவுக்கு வியப்பு.
”ஆமா பெரியவா. அதுல எந்தக் குறைவும் இல்லை. எல்லாம் எங்ககிட்டதான் இருக்கு.”
”உனக்கு ஸ்வீகார ரீதியில் கிடைச்ச பள்ளிப்புரம் கிராமத்து வீடு (இதுவும் பாலக்காடு டவுனுக்கு உட்பட்டது)…?”
”இருக்கு பெரியவா. எங்க சித்தப்பா காலமான பின் இந்தப் பள்ளிப்புரம் வீட்டில் விச்சா (முழுப் பெயர் விஸ்வநாதன்) அப்படீங்கறவரை வாடகைக்கு வெச்சோம். அவர்தான் இப்பவும் இருக்கார்.”
மகா பெரியவா, ”எத்தனை வருஷமா அவர் குடி இருக்கார்?” என்று கேட்டார்.
”பன்னண்டு வருஷமா பெரியவா…” என்று சர்மா பதிலைச் சொல்லும்போது, பெரியவா ஏன் இதை இப்படிக் குடைந்து குடைந்து கேட்கிறார் என்பது ஓரளவுக்குப் புரிந்தது.
அதன் பின் சர்மாவே தொடர்ந்தார்:
”பெரியவா… நீங்க கேக்க வர்றது எனக்கு ஓரளவு புரியறது. இதுல ஒரு பிரச்னை இப்ப உருவாயிடுத்து பெரியவா. கேரள அரசாங்கத்தோட சட்டப்படி ஒருத்தர் ஒரே வீட்டில் தொடர்ந்து பத்து வருஷங்களுக்கு மேலாகக் குடி இருந்து விட்டால், அதுவும் ஹவுஸ் ஓனருக்கு வாடகையை ஒழுங்கா கொடுத்து விட்டால் – அந்த வீடு குடி இருப்பவருகே சொந்தமாகி விடலாம்னு ஒரு சட்டம் இருக்கு…” – சர்மாவின் குரலில் சுரத்து கொஞ்சம் குறைந்தது.
மகா பெரியவா எதுவும் பேசாமல் சர்மாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
மகா பெரியவாளின் மவுனத்துக்கான பொருள் சர்மாவுக்குப் புரிந்தது. ”என்னை மன்னிக்கணும் பெரியவா… என்கிட்டயும் தப்பு இருக்கு. என்னோட உத்தியோகத்துல நான் மும்முரமா இருந்துட்டதால கேரளத்துச் சட்டத்தை மனசுல வாங்கிக்கலை. அந்த வீடு, சட்டம் இவற்றை எல்லாம் கவனிக்கிறதுக்கு டைம் கிடைக்காமலே போயிடுத்து. இப்ப அந்த விச்சா எனக்குப் பெரிய பிரச்னையா இருக்கார்.”
”என்ன பிரச்னை?” – நடமாடும் தெய்வம் கேட்டார்.
”சமீபத்துல ஒரு தடவை பாலக்காட்டுக்குப் போயிருந்தேன். அங்கே இருக்கிற எங்களுக்குத் தெரிஞ்சவா எல்லாம் என்னைப் பாத்து ஏளனம் பண்றா. ‘வீட்டை பத்து வருஷத்துக்கு மேல வாடகைக்கு விட்டுட்டே… விச்சாவும் சரியா வாடகையை ஒன்கிட்ட குடுத்திருக்கான். இனிமே அந்த வீடு விச்சாவுக்குத்தான் சொந்தம். சட்டம் அதைத்தானே சொல்றது… தேவை இல்லாம நீ எதுக்கு இப்ப ஊருக்கு வர்றே?‘னு என்கிட்ட கேக்கறா பெரியவா.”
ஒரு சில விநாடிகளுக்கு மகா பெரியவா எதுவும் பேசவில்லை. பிறகு, ”சட்டம் சொல்றது சரி… அதுல ஏதாவது விதிவிலக்குன்னு இருக்குமே… அங்கயே யாராவது ஒரு நல்ல வக்கீலா பார்த்து விசாரிச்சு, நோட்டீஸ் அனுப்பி வைக்க வேண்டியதுதானே?” என்றவர், ”ஓ… பாலக்காட்டுல நல்ல வக்கீலுக்கு நீ ஏன் கஷ்டப்படணும்? கல்பாத்தில இருக்கற ஸ்வாமிநாதய்யர் பெரிய வக்கீல் ஆச்சே! ஸ்ரீமடத்தோட பக்தர். ரொம்ப நெருக்கமானவராச்சே… அவரப் பார்த்துப் பேசி ஏதாவது பண்ணேன்” என்றார்.
தன் மேலும், தன் குடும்பத்தின் மேலும் மகா பெரியவா எந்த அளவுக்கு அக்கறை கொண்டு இவற்றை எல்லாம் விசாரித்து வழிவகை சொல்கிறார் என்பதை நினைக்கும்போது சர்மாவின் கண்கள் அவரையும் அறியாமல் கலங்கின. மெள்ளக் கண்களைத் துடைத்துக் கொண்டு பெரியவாளைப் பார்த்தார். பிறகு, ”பெரியவா… நீங்க சொல்ற வக்கீல் ஸ்வாமிநாதய்யரிடமும் டீடெய்லா பேசியாச்சு” என்றார்.
”பலே… என்ன சொன்னார்?”
”ஒண்ணும் பிரயோஜனப்படலை பெரியவா.”
”அதுக்கில்லே… ‘சாஸ்திரம், வேதம் படிச்சவனை வீணாக்கிடாத… ஏமாத்திடாத‘னு கொஞ்சம் பவ்யமா அந்த விச்சாகிட்ட சொல்லச் சொல்லேன்” என்றார்.
”அதுவும் சொல்லிப் பார்த்தாச்சு பெரியவா. பல ரூபத்துல விச்சாகிட்ட சொல்லியாச்சு. ‘வக்கீல் நோட்டீஸ் விடறதால ஒண்ணும் பலன் இருக்காது. அப்படி அவனுக்கு வக்கீல் நோட்டீஸ் போச்சுன்னா என்ன பண்ணுவான் தெரியுமா? நீ சிதம்பரத்துல பொறுப்பான உத்தியோகத்துல இருக்கேன்னு அவனுக்குத் தெரியும். வேணும்னே ஒன்னை ரெண்டு மூணு தடவை பாலக்காடு, சிதம்பரம்னு அலைய விடுவான். ரெண்டு மூணு தடவை அப்படிப் பயணப்பட்டா, ‘போதும்டா சாமீ‘னு ஆடிப் போய் உக்காந்துடுவே‘னு வக்கீல் ஸ்வாமிநாதய்யர் சொன்னார்.
நீங்க சொல்ற பாயிண்ட்டையும் வக்கீல் கடைசியா சொன்னார்… ‘சாஸ்திரம், வேதம் படிச்சவனை வீணாக்கக் கூடாது… அலைய விடக் கூடாது‘ங்கிறது நூத்துக்கு நூறு உண்மை. இது அந்த விச்சாவுக்கு இப்ப புரியலை. அதுக்கு உண்டானதை அவன் நிச்சயம் அனுபவிக்கத்தான் போறான் அப்படீன்னும் வக்கீல் சொன்னார் பெரியவா.”
ஓரிரு நிமிடங்களுக்கு இறுக்கமான மவுனம் அங்கே நிலவியது.
தங்கள் குடும்பத்துக்கு பாத்தியதைப்பட்ட பள்ளிப்புரம் வீடு பற்றி மகா பெரியவாளிடம் சொல்வதற்காக ஸ்ரீநிவாஸ சர்மா சதாரா வரவில்லை. இந்த மகானை ஏகாந்தமாக இங்கே தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டுமே கொண்டு இங்கே வந்தார்.
ஆனால், வந்த இடத்தில் பரப்பிரம்மமான மகா பெரியவாளே இவரது குடும்பத்துக்கு உண்டான பள்ளிப்புரம் வீடு பற்றி ரொம்ப அக்கறையுடன் விசாரித்தார்.
ஒரு சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது.
கண்களை மூடிய நிலையில் மகா பெரியவா தியானத்தில் காணப்பட்டார்.
மகா பெரியவா, கன்னடத்து சந்நியாசி ஒருவர், சர்மா, ஒரு சிப்பந்தி ஆகிய நால்வரைத் தவிர இங்கே வேறு எவரும் இல்லை.
அநேகமாக இரண்டு, மூன்று நிமிடங்கள் சென்றிருக்கும். பிறகு சர்மாவைப் பார்த்து மகா பெரியவா கேட்டார்:
”சரி… இப்ப அடுத்து என்ன பண்ணப் போறே? சதாராலேர்ந்து எங்கே போகப் போறே? ஒன்னோட ப்ரொகிராம் என்ன?”
”பெரியவா… இப்ப மணி கார்த்தால ஒம்போது ஆயிடுத்து. சதாரா ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து புனே போற ரயில் பத்தரை மணிக்கு இருக்காம். அந்த வண்டியைப் புடிச்சா சாயங்காலம் புனே போயிடலாமாம். அங்கே போனதும், நான் சொன்னேன் இல்லியா பெரியவா… என்னோட வித்யாகுரு, ஸ்ரீசிவராமகிருஷ்ண சாஸ்திரிகள்… அவாளைப் பார்த்து, ஒரு நமஸ்காரம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கணும். அவர்ட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, அதன் பிறகு புனேலேர்ந்து பம்பாய் புறப்பட்டுடுவேன்” என்றார் ஸ்ரீநிவாஸ சர்மா.
”பேஷ்… பேஷ்… சரி, ஒனக்கு மதியானத்துக்கு ஆகாரம் வேண்டாமோ? சாப்பாட்டுக்கு எங்கேயானும் கஷ்டப்படப் போறே…”
”வேண்டாம் பெரியவா. இங்கே வர்றதுக்கு எனக்கு வழி காண்பிச்சு, ஆட்டோல ஏத்தி விட்டார்னு சொன்னேனே, மாயவரம் நாராயணய்யர்… அவர் சதாரா ஸ்டேஷன்லதான் காபி ஸ்டால் வெச்சிருக்கார். புனே ரயில் ஏறுறதுக்கு முன்னாடி தன்னை வந்து பாக்கச் சொல்லி இருக்கார். சுமார் பத்து மணி வாக்குல ஒரு பொட்டலம் ஆகாரம் தந்துடறேன்னு சொல்லி இருக்கார். அங்கே போய் அவர்ட்ட வாங்கிக்கிறேன் பெரியவா. அதுவே எனக்குப் போறும்” – மகா பெரியவாளைப் பார்த்து சிரத்தையுடன் சொன்னார் சர்மா.
தன் வலக் கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் பாவனையில் காண்பித்து விட்டு, ”சரி, பொறப்படு” என்றார் மகா பெரியவா புன்னகையோடு.
ஆயிற்று. உத்தரவு கிடைத்தாயிற்று.
அந்த நாளில் மகா பெரியவாளைத் தரிசிக்க வருகிற பக்தர்கள், இதுபோல் உத்தரவு கிடைத்தால் மட்டுமே அந்த சந்நிதியில் இருந்து புறப்படுவார்கள்.
சர்மா குதூகலமானார்.
நிறைவான தரிசனம்.
பரிபூரண ஆசிர்வாதம்.
ஆனந்தமான உத்தரவு.
எல்லாமே சுபமாகப் பூர்த்தி ஆயிற்று. ‘இதைத் தவிர வேறு என்ன ஆனந்தம் எனக்கு வேண்டும்‘ என்று மனம் பூரித்தபடி ‘மகா பெரியவா சரணம்… மகா பெரியவா சரணம்… மகா பெரியவா சரணம்‘ என்று மனதுக்குள் துதித்தபடி, அந்தத் திருச்சந்நிதியில் அவருக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
மகா பெரியவா மீண்டும் சர்மாவைப் பார்த்துப் புன்னகை பூத்தார்.
முகாமை விட்டு வெளியே வந்தார் சர்மா.
நடக்க ஆரம்பித்தார்.
வழியில் குறுக்கிட்ட விநாயகர் ஆலயத்தை ஒரு வலம் வந்தார். விக்னேஸ்வரனைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
கொய்யாத் தோப்புக்குள் வேகவேகமாக நடந்து, கிட்டத்தட்ட பிரதான சாலைக்கும் வந்து விட்டார். ‘சதாரா ரயில்வே ஸ்டேஷன் செல்ல ஒரு வாகனம் அமைய வேண்டும்‘ என்ற யோசிப்புடன் நடந்து சென்று கொண்டிருந்தவரை ”சர்மா மாமா… சர்மா மாமா…” என்கிற பலமான குரல் பின்னால் இருந்து ஒலித்து, தடுத்து நிறுத்தியது.
‘என்னடாது… நம்ம பேரை யாரோ துல்லியமா சொல்றாளே… யாரா இருக்கும்?‘ என்று யோசித்தபடி சர்மா திரும்பிப் பார்த்தார்.
ஆச்சரியம்.
ஸ்ரீமடத்து முகாமில் மகா பெரியவாளுக்கு அருகே நின்று கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அந்தச் சிப்பந்தி, இவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்.
அப்படியே நின்றார் சர்மா.
ஒரு சில விநாடிகளில் மூச்சிரைக்க சர்மாவின் அருகே வந்து நின்றார் சிப்பந்தி. ஒரு சில விநாடிகளுக்குத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு விட்டு, ”சர்மா மாமா… மகா பெரியவா ஒங்களை உடனே கூட்டிண்டு வரச் சொல்றார். இது பெரியவா உத்தரவு” என்றார்.
சர்மாவுக்குப் பிரமிப்பு. ‘எதற்காக மீண்டும் பெரியவா நம்மை அழைக்கின்றார்? சரி, பெரியவா கூப்பிடறார்னா ஏதேனும் விஷயம் இருக்கும்‘ என்று தெளிந்து சிப்பந்தியின் பின்னால் நடக்க ஆரம்பித்தார்.
அதே கொய்யாத் தோப்பு. பிள்ளையார் சந்நிதி.
ஒரு சில நிமிடங்களில் மகா பெரியவா சந்நிதியை அடைந்தாயிற்று.
ஏற்கெனவே அமர்ந்த நிலையில் காணப்பட்ட மகா பெரியவா தற்போது தண்டத்தைத் தோளில் சுமந்து நின்று கொண்டிருந்தார்.
கலியுக தெய்வத்தின் எதிரே மாறாத புன்னகையோடும், மனம் நிறைய குதூகலத்தோடும் வந்து நின்றார் சர்மா.
மகா பெரியவாளை எத்தனை முறை பார்த்தாலும், பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எத்தனை முறை தரிசித்தாலும், தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.
பார்த்துக்கிட்டே இருக்கத் தோணும் மனம்.
தனக்கு எதிரே வந்து நிற்கும் சர்மாவை ஒரு சில விநாடிகள் ஆழமாக ஊடுருவிப் பார்த்தார் மகா பெரியவா. பிறகு, ”இன்னும் ஒரே ஒரு தரம் என்னை நமஸ்காரம் பண்ணிட்டுப் போயிடேன்” என்றார்.
கண்கள் உடைந்து கிட்டத்தட்ட வாயில் இருந்து வார்த்தைகள் வராமல் தேம்ப ஆரம்பித்து விட்டார் சர்மா.
‘எந்த தெய்வம் கூப்பிட்டு ‘என்னை மீண்டும் ஒரு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுப் போயேன்‘ என்று சொல்லும்? வந்தாரை வாழ வைக்கும் நடமாடும் தெய்வம் அல்லவா நம் மகா பெரியவா? என்னிடம் ஒரு நமஸ்காரத்தைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதற்காக என்னை மீண்டும் இங்கே வரவழைத்திருக்கிறதே?‘ என்று உணர்ச்சிவசப்பட்டு உள்ளுக்குள் அழுதார் சர்மா.
”மகா பாக்யம் பெரியவா… மகா பாக்யம் பெரியவா… இன்னொரு முறை நமஸ்கரிக்கறதுல பரமானந்தம்” என்று சொல்லி விட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து எழுந்தார்.
சர்மா தரையில் இருந்து எழ முற்படும்போது ஒரு தாய்க்கு உண்டான வாஞ்சையுடன் அவரையே கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா. அனுக்ரஹம் வழங்குவது போல் தன் வலக் கையைத் தரைப் பக்கமாகத் திருப்பி அசைத்தார். ‘பார்த்து… மெள்ள… மெள்ள எழுந்திரு… க்ஷேமமா இருப்பே‘ என்று மகா பெரியவாளே திருவாய் மலர்ந்து சொல்வது போல் சர்மாவுக்கு அந்த விநாடியில் தோன்றியது.
வேறு எந்த வார்த்தையும் மகா பெரியவா பேசவில்லை. சர்மாவும் கேட்கவில்லை.
(இது எப்பேர்ப்பட்ட ஆசிர்வாதம் என்பது பின்னாளில்தான் சர்மாவுக்குப் புரிந்தது.)
ஒரு வாகனமும் அமைந்து, சதாரா ஸ்டேஷன் போனார் சர்மா. அங்கே நாராயணய்யரைப் பார்த்து, அவருக்கு நன்றி சொல்லி விட்டு உணவுப் பொட்டலம் வாங்கிக் கொண்டார். பத்தரை மணிக்கு வந்த ரயில் ஏறி புனே போனார்.
வித்யாகுருவை தரிசித்து ஆசி வாங்கி, பல விஷயங்களை அளவளாவி விட்டு அடுத்த நாள் அதிகாலை பம்பாய் சென்றார்.
அங்கிருந்து அன்றைய தினம் இரவே சென்னைக்கு ரயில் ஏறி, சிதம்பரமும் வந்தாயிற்று.
சதாராவில் மகா பெரியவா தரிசனம் ஆகி, சுமார் பத்து நாட்கள் கழிந்திருக்கும்.
அன்றைய தினம் பகல் பொழுதில், பாலக்காட்டில் இருக்கும் சர்மாவின் தமையனார் எழுதிய தபால் சிதம்பரத்தில் இவரது கைக்கு வந்து சேர்ந்தது.
அதில் இருந்த விஷயம் இதுதான்:
‘நம் பள்ளிப்புரம் கிரஹத்தில் குடி இருந்த விச்சா நேற்று சாயங்காலம் வீட்டு சாவியை என்னிடம் ஒப்படைத்து விட்டார். ஆச்சரியமான ஆச்சரியம். தெய்வ அனுக்ரஹம் இல்லாமல், குருமார்களின் அருள் கூடாமல் இது இவ்வளவு சீக்கிரத்தில் அமையாது.
நாங்கள் இன்று அந்தப் பள்ளிப்புரம் வீட்டுக்குப் போய் வீட்டை சுத்தம் செய்து விட்டு, நம் சுவாதீனத்துக்குக் கொண்டு வந்து விட்டோம்.
சாவியை விச்சா என்னிடம் தரும்போது ‘இதுநாள் வரை இவர்களை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டோமோ‘ என்கிற பாவனை வருத்தப்படும் விதத்தில் அவர் முகத்தில் தெரிந்தது.‘
– கடிதத்தின் சாராம்சத்தைப் படித்து முடித்ததும், சர்மாவுக்கு சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
‘நடமாடும் தெய்வமே… கருணைக் கடலே… காஞ்சி தெய்வமே… நீ அல்லாமல் இது சாத்தியமே இல்லை‘ என்று மகா பெரியவா இருக்கும் திசை நோக்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
இப்போதுதான் புரிந்தது – ‘சதாரா முகாமில் இருந்து புறப்பட்டுச் சென்றவனை அந்த மகான் மீண்டும் அழைத்து ஒரு நமஸ்காரத்தை ஏன் கேட்டு வாங்கிக் கொண்டார்‘ என்பது.
‘வேதம் படித்த குடும்பம்… தேவ பாஷையான சம்ஸ்கிருதத்தைப் பலருக்கும் சொல்லிக் கொடுக்கின்ற பரம்பரை… இவர்களை யாரும் ஏமாற்றக் கூடாது; இவர்களும் யாரிடமும் ஏமாறக் கூடாது‘ என்று அந்த மகானே தீர்மானம் செய்து, எத்தனையோ ரூபாயை வக்கீல் ஃபீஸாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாத ஒரு கேஸை, ஒரு நமஸ்காரத்தை மட்டுமே ஃபீஸாக வாங்கிக் கொண்டு, முடித்திருக்கிறார் என்றால், மகா பெரியவாளின் அருட்திறனை எப்படி விவரிப்பது?!
வக்கீலும் ‘சிரமம்‘ என்று ஒதுங்கி விட்டார்.
விச்சாவும் ‘வீடு எனக்குத்தான்‘ என்கிற மனோபாவத்தில் இருந்து விட்டார்.
இந்த வேளையில் மகா பெரியவா என்கிற சக்தி இல்லாமல் இப்படி ஒரு அதிசயம் நடந்திருக்கவே வாய்ப்பில்லை என்பதுதான் சர்மாவின் ஆணித்தரமான எண்ணம்.
உண்மைதானே!