மனித வாழ்க்கையில் எத்தனையோ விசேஷங்கள் நடந்தாலும், அவற்றுள் மிக முக்கியமான சடங்குகள் இரண்டு.
ஒன்று – கல்யாணம்.
இரண்டு – இறப்பு.
இதைக் கருத்தில் கொண்ட மகா பெரியவா, ‘ஒவ்வொரு ஊரிலும் குறைந்த வாடகையில் பரம ஏழைகளும் பலன் பெறுமாறு ஒரு கல்யாண மண்டபம் ஏற்படுத்த வேண்டும். அதுபோல், அபர காரிய ஸ்தலமும் (இறந்தவர்களுக்கு உண்டான கர்மாக்களை செய்யும் இடம்) ஏற்படுத்த வேண்டும்‘ என்பது சொல்லி இருக்கிறார்.
நீத்தார் கடன்களைச் செய்யக் கூடிய இடத்தை ‘ஞானவாபி‘ என்று சொல்வார்கள். மகா பெரியவா அருளியபடி எல்லா ஊரிலும் ஏழைகளுக்கு உதவும் வகையில் கல்யாண மண்டபம் இருக்கிறதோ, இல்லையோ… நீத்தார் கடன்களைச் செய்யக் கூடிய ‘ஞானவாபி‘ என்கிற காரிய மண்டபம் பெரும்பாலும் அமைந்திருக்கும்.
இந்த பூலோகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பூலோக பந்தத்தைத் துறந்தே ஆக வேண்டும். பூலோக பந்தத்தில் இருந்து விடுபட்ட பிறகு – அதாவது சம்பந்தப்பட்டவர் இறந்த பிறகு என்னென்ன கர்மாக்கள் செய்து அவரைக் கரையேற்ற வேண்டுமோ, அவற்றை எல்லாம் இறந்தவரது வாரிசுகள் கர்ம சிரத்தையுடன் செய்து கரையேற்றுவார்கள்.
இறந்தவரது உடலுக்குச் செய்யக் கூடிய தகன காரியங்களை சம்பந்தப்பட்டவரது வாரிசுகள் முறைப்படி செய்ய வேண்டும். அப்படி உள்ளார்ந்த அன்போடு செய்தால்தான் அந்த ஆன்மா அமைதியுறும். நற்கதியை அடையும்.
நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவாளின் முன்முயற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படிப்பட்ட ஈமக் கிரியை மண்டபங்கள் அமைந்துள்ளன. பொருள் வசதி இல்லாத குடும்பத்தினர்களும் இறந்த தங்கள் முன்னோரை நல்ல விதமாகக் கரையேற்ற வேண்டும் என்பதற்காக இவர்களிடம் அதிக தொகை வசூலிக்காமல் செயல்பட்டு வருகிற ஞானவாபிகளும் இருக்கின்றன.
திருமணத்தைக்கூட சிம்பிளாகச் செய்து விடலாம். ஆனால், இறந்த பின் செய்யக்கூடிய கர்மாக்களை முறைப்படி – எந்தக் குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக மகா பெரியவா எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்கிற குடும்பங்கள் மகா பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நன்றி சொல்ல வேண்டும்.
இதுபோன்ற ஒரு மண்டபத்தை சென்னை பெசன்ட் நகரில் கட்டுவதற்கு மகா பெரியவாளின் ஆணைப்படி அவரது பக்தர்கள் வெகு முனைப்புடன் செயல்பட்டார்கள்.
‘சத்யநாராயண தீர்த்தம்‘ என்று பெயரிடப்பட்ட இந்த ஈமக் கிரியை மண்டபத்தின் பணிகள் 1980-களின் இறுதியில் அருள் மனமும் பொருள் வசதியும் நிறைந்த அன்பர்கள் மனமுவந்து வழங்கிய நன்கொடைகளுடன் துவங்கின.
பொது நலன் சார்ந்த எந்த ஒரு கட்டுமானப் பணியும் துவங்கும்போது உற்சாகம், ஆதரவு எல்லாமே ஓகோவென்று இருக்கும். எங்கேயாவது பண வரத்து சற்றுத் தொய்வடைந்து விட்டால், அந்த கமிட்டியில் உள்ள சிலருக்கு சுரத்து குறைந்து விடும். ஆனாலும், எஞ்சிய சில கமிட்டி அன்பர்களோ, ‘எப்படியும் இது பூர்த்தி ஆகி விடும். இந்தக் காரியத்தை எப்படி முடிப்பது என்று துவக்கி வைத்தவனுக்குத் தெரியும்‘ என்று நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
மகா பெரியவா ஆசிர்வாதத்தோடு துவங்கிய பெசன்ட் நகர் ‘சத்யநாராயண தீர்த்தம்‘ திருப்பணி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் உற்சாகத்துக்கும் அமோக ஆதரவுக்கும் கேட்கவே வேண்டாம். கமிட்டியில் முக்கியப் பொறுப்பில் இருந்த உறுப்பினர்கள் அனைவருமே அயராது பாடுபட்டு இதை நிறைவேற்றுகிற வேகத்தில் இருந்தனர்.
மகா பெரியவாளின் அறிவுரைப்படி இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கமிட்டியினர் பல இடங்களிலும் நன்கொடைகள் பெற்று காரியங்கள் மளமளவென்று நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்படிப்பட்ட ஒரு திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல இடங்களுக்கும் சென்று இதற்காகப் பெருமளவு தொகையை வசூல் பண்ணிக் கொடுத்தவர் கல்யாணசுந்தரம் என்கிற அன்பர்.
எங்கே ஒரு பொதுக் கார்யம் என்றாலும், ஓடிப் போய்த் தன்னால் என்ன முடியுமோ, அதைச் செய்து தரக் கூடியவர் இவர். சென்னை தேனாம்பேட்டையில் ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் ஆபீஸராக இருந்தவர். இந்த சம்பவம் நடந்தபோது அவருக்கு வயது சுமார் 55 இருக்கும்.
‘சத்யநாராயண தீர்த்தம்‘ நல்ல விதத்தில் பூர்த்தி ஆக வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருந்தவர்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு பிரதிபலன் பாராது செயல்பட்டார். சென்னை நகரத்தின் பல பகுதிகளிலும் வசிக்கும் மகா பெரியவா பக்தகோடிகளின் இல்லம் சென்று நன்கொடை வசூலித்து வந்தார்.
அந்த வகையில் அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் திருவான்மியூர் வால்மீகி நகர் அருகே அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கின்றவர்களிடம் நன்கொடைக்காகச் சென்றார். இங்கே வசிப்பவர்கள் மகா பெரியவாளின் அனுஷ நட்சத்திர தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். தவிர, ஆதி சங்கரர் ஜயந்தி உத்ஸவத்தையும் அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள்.
மூன்றாவது மாடியில் வசிக்கும் குறிப்பிட்ட அன்பரது இல்லத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக லிஃப்ட்டின் அருகே வந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டிருந்தது. எனவே படியேறிச் சென்றார்.
மூன்றாவது மாடியில் வசிக்கும் மகா பெரியவாளின் பக்தர் இல்லத்துக்குச் சென்று அவரிடம் இருந்து ஒரு தொகையை நன்கொடையாகப் பெற்று வெளியே வந்தார்.
லிஃப்ட் வேலை செய்யாததால் படிகள் இறங்கித்தான் திரும்ப வேண்டும் என்பதற்காக நடக்கின்ற பகுதியின் ஓரம் இருக்கும் கைப்பிடிச் சுவரை ஒரு சப்போர்ட்டுக்காகப் பிடித்தபடி மாடிப்படிகள் இருக்கிற இடம் நோக்கி நகர்ந்தார்.
கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி கீழே பார்த்தார். இவர் இருப்பது மூன்றாவது மாடி. எத்தனை படிகள் இறங்கிச் செல்ல வேண்டும் என்று மெள்ள எட்டிப் பார்த்தபோது அந்த மாலை வேளையில் கல்யாணசுந்தரத்துக்கு மலைப்பாக இருந்தது.
கைப்பிடிச் சுவரை மெள்ளப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தவருக்கு அடுத்த விநாடி மிகப் பெரிய பேரதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை உணரவில்லை.
கல்யாணசுந்தரம் கைப்பிடித்து நடந்து சென்று கொண்டிருந்த அந்த பால்கனிக் கைப்பிடிச் சுவர் அடுத்த விநாடி அப்பளம் நொறுங்குவது போல் செங்கல்லும் மண்ணுமாக நொறுங்கி அப்படியே கீழ் நோக்கித் தரைப் பக்கம் பொலபொலவென்று சரிய… கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி அதன் ஓரமாக நடந்து கொண்டிருந்த கல்யாணசுந்தரமும் எதிர்பாராமல் தரையை நோக்கி விழ… எல்லாமே விநாடி நேரத்தில் நடந்த சோகம்.
‘இப்படி எல்லாம் நடக்கும்‘ என்று சிலவற்றை நாம் எதிர்பார்த்திருந்தால், உஷாராக இருப்போம். எதிர்பார்க்காத ஒன்று திடீரென்று நடக்கும்போது நாம் என்ன செய்யத்தான் செய்ய முடியும்?
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுகின்ற கல்யாணசுந்தரம் பதைபதைத்து ‘என்ன செய்வது? ஏது செய்வது?‘ என்று சிந்திக்கக்கூட அவருக்கு அவகாசமில்லை. ஆனாலும், தன்னை அறியாமல் ‘மகா பெரியவா… மகா பெரியவா…‘ என்று பெருங்குரல் எடுத்துக் கத்திக் கொண்டே விழுந்தார்.
தரையில் விழுந்தாரா? அவருக்கு ஏதேனும் ஆபத்தா?
மகா பெரியவா கருணையால் அப்படி ஆகவில்லை.
கல்யாணசுந்தரம் கீழே விழப் போய்க் கொண்டிருந்த இடத்தில் தரையில் நின்று கொண்டிருந்த சுமார் ஏழெட்டுப் பேர் விநாடி நேரத்தில் நடந்த இந்த விபத்தைப் பார்த்து விட்டனர். அடுத்த கணம் பதைபதைப்போடு, ‘மகா பெரியவா… மகா பெரியவா‘ என்று பெருங்குரல் எடுத்துக் கூச்சல் போட்டபடி தங்கள் இரு கைகளையும் முன்னால் நீட்டி, தரையில் விழப் போகும் முன் கல்யாணசுந்தரத்தை அலேக்காகப் பிடித்து விட்டார்கள்.
மாடியில் இருந்து ஒரு பொருளைத் தரைத் தளத்தை நோக்கி வீசி எறிந்தால், கீழே தரையில் நின்றபடி அதைப் பிடிக்கப் போகிறவர், பொருள் வீசி எறிவதற்கு முன்னால் இருந்தே உஷாராக இருக்க வேண்டும். சரிதானே?
ஆனால், மகா பெரியவா பக்தரான கல்யாணசுந்தரம், அந்த மகான் ஆசிர்வதித்துத் துவக்கி வைத்த ஒரு பணியில் ஈடுபட்டிருக்கும்போது – அவருக்கு எந்த ஒரு காயமோ, சிராய்ப்போ, அடியோ படாதபடி ஏழெட்டுப் பேர் ஒரு குழந்தையைப் பிடிப்பது போல் பிடித்து விட்டார்கள்.
இவர்களது உள்ளங்கைகளில் பொத்தென்று கீழே விழுந்த கல்யாணசுந்தரத்துக்கு அதிர்ச்சியின் காரணமாக சுமார் பத்து நிமிடங்களுக்குப் பேச்சு வரவில்லை. சுய நினைவும் இல்லை.
சாதாரண அதிர்ச்சியா இது? பேரதிர்ச்சி ஆயிற்றே!
மேலிருந்து விழுகிற கல்யாணசுந்தரத்தை எப்படி அந்த வேளையில் ஏழெட்டுப் பேர் கூடி பிடித்திருக்கிறார்கள்? திட்டமிட்டு ஒருவர் விழுந்தால்கூட இப்படிப் பிடிப்பதற்கு மிகவும் ஒத்திகை வேண்டுமே!
இதுதான் மகா பெரியவா கருணை.
மதியம் தாண்டிய அந்த 4 மணிப் பொழுதில் இந்தக் குடியிருப்பின் தரைப் பகுதியில் மனித நடமாட்டம் என்பதே பொதுவாக இருக்காது.
காய்கறி விற்கக்கூடிய வயதான ஒரு பெண்மணி தினமும் மாலை 4.30 மணிக்கு வருவது வாடிக்கையாம். நாலரை மணிக்குக் குறைந்து அந்தப் பெண்மணி வந்ததே இல்லையாம். ஆனால், அன்றைக்கென்று பார்த்து அரை மணி நேரம் முன்னதாக – குடியிருப்புக்குள் வந்து ‘காய்கறி… காய்கறி…‘ என்று குரல் கொடுத்திருக்கிறார். இதைக் கேட்டவர்கள் வாங்குவதற்கு வெளியே வந்தபோதுதான் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது!
பத்து நிமிடங்களில் கண்விழித்த கல்யாணசுந்தரத்துக்கு தன் முன் கூடி இருக்கிற பெரும் கூட்டத்தைப் பார்த்தபோது எல்லாமே ஆச்சரியமாக இருந்தது.
தான் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டதை உணர்ந்து அங்கிருந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டார்.
ஒரு சில மாதங்களுக்குப் பின் மகா பெரியவாளை காஞ்சிபுரத்தில் தரிசிக்கச் சென்ற கல்யாணசுந்தரம் தான் உயிர் பிழைத்த விஷயத்தை மிக உருக்கமாகவும், பெரியவா கிருபையால் தப்பியதாகவும் கண்கள் கலங்கச் சொல்லி இருக்கிறார்.
அன்றைக்கு ஏராளமான பக்தகோடிகள் பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள். உணர்ச்சிப்பெருக்குடன் கல்யாணசுந்தரம் சொன்ன ஃபிளாஷ்பேக்கைக் கேட்ட அவர்கள் திறந்த வாய் மூடாமல் கல்யாணசுந்தரத்தையே கைகளைக் கூப்பிய வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று பெரிதாகப் புன்னகைத்த மகா பெரியவா, கல்யாணசுந்தரத்தைப் பார்த்து, ”எல்லாம் காமாட்சியோட அனுக்ரஹம்டா… நான் என்ன பண்ணினேன்?!” என்று சொல்லி, அவருக்குப் பிரசாதம் தந்து, ஆசிர்வதித்து அனுப்பி இருக்கிறார்.
மகா பெரியவாளால் உயிர்ப் பிச்சை பெற்ற கல்யாணசுந்தரம், தற்போது வசிப்பது சென்னை மயிலாப்பூரில்!