மகா பெரியவா என்கிற தெய்வத்தின் பார்வை நம் மேல் பட்டாலே போதும். கஷ்டங்கள், குழப்பங்கள், சிரமங்கள், தீய எண்ணங்கள் – இப்படி எல்லாமே பனி போல் விலகி விடும்.
இதையே வேறு மாதிரியும் சொல்லலாம். எப்போதும் ‘மகா பெரியவா… மகா பெரியவா…‘ என்ற சிந்தனையுடன் நாம் வாழ ஆரம்பித்தாலே போதும்… அந்த மகான் நம்மைப் பரிபூரணமாக ஆட்கொண்டு ஒவ்வொரு விநாடியும் நம்முடன் இருப்பார். நம்மை வழிநடத்தியும் செல்வார்.
மகா பெரியவாளின் திருவடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வழிபாட்டு நிலையங்களுக்குச் சென்று, கருவறையில் அவரது திருமுகத்தை உணர்வுபூர்வமாகப் பார்த்து உங்கள் மனதில் இருக்கும் நியாயமான கோரிக்கைகளை – ஏக்கங்களைச் சொல்லுங்கள்.
பெற்ற தாயின் கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு குழந்தை தன் ஆசை நிறைவேறுவதற்கு எப்படிக் கெஞ்சிகிறதோ, அதுபோல் உருக்கமாகச் சொல்லுங்கள்.
தாயும் அங்கே இரங்குவாள்.
தாயுமானவனான மகா பெரியவாளும் இங்கே இரங்குவார்.
வழிபாட்டு நிலையங்களுக்கு உங்களால் உடனடியாகச் செல்ல முடியவில்லையா..? அந்த மகானின் திருச்சந்நிதி கொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் செல்ல முடியவில்லையா? ‘தொலைவு அதிகம்; செலவு அதிகம்; நேரம் அதிகம்‘ என்று அப்போதைய மன நிலை உங்களுக்கு மாற்றுக் கருத்துகளை எடுத்துச் சொல்கிறதா?
ஒன்றும் கவலை வேண்டாம். அந்த மகானின் ஒரே ஒரு பாக்கெட் சைஸ் படத்தைப் பத்திரமாக வைத்துக் கொண்டு எப்போதெல்லாம் மனம் நிம்மதி இழந்து தவிக்கிறதோ, எப்போதெல்லாம் மனம் ஆறுதலை எதிர்ப்பார்க்கிறதோ, அப்போதெல்லாம் கருணை ததும்பும் அந்த முகத்தைப் பாருங்கள். கண்ணீர் மல்கப் பிரார்த்தியுங்கள்.
கஷ்டம் வரும்போது அவரது திருவடிவத்தைக் கருவறையில் பார்த்தாலும் பரவாயில்லை. அவரது புகைப்படத்தை உள்ளங்கையில் வைத்துப் பார்த்தாலும் பரவாயில்லை.
கருணையும் அன்பும் கலந்த மகானின் அந்த தீட்சண்யப் பார்வையே நம்முள் பல நல்ல மாற்றங்களை உடனுக்குடன் கொண்டு வந்து விடும்.
இதை நிதர்சனமாக உணர்ந்தவர்கள், அனுபவித்து வியந்தவர்கள் அந்த தெய்வத்தின் அத்யந்த பக்தர்கள் ஆனார்கள். பேச்சுக்கும் மூச்சுக்கும் ‘மகா பெரியவா… மகா பெரியவா…‘ என்று இடைவிடாமல் ஜபித்துக் கொண்டே இருந்தார்கள்.
”பெரியவாகிட்ட, ‘எனக்கு இதைக் கொடுங்கோ… அதைக் கொடுங்கோ…‘ என்று நான் கேட்டதில்லை. ஆனா, ஒண்ணே ஒண்ணைத்தான் அவர்ட்ட கேட்டுண்டு இருக்கேன் – ‘உடம்புல சக்தி இருக்கிற வரைக்கும் உங்களோட திருநாமத்தைச் சொல்லிண்டே இருக்கணும். உங்களைப் பத்தின நினைப்பு எனக்குள்ள இருந்துண்டே இருக்கணும். இந்த ஒரு வரத்தை மட்டும் எனக்குக் குடுங்கோ பெரியவா‘னு இதைத்தான் நித்தமும் அவர் படத்துக்கு முன்னால நின்னு கேட்டுண்டு இருக்கேன்” என்று உருகும் மகா பெரியவா பக்தர்கள் இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கில் உண்டு.
இந்தக் கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக நம்மிடையே நடமாடி வருகிறார்.
வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல… நாம் வாழ்ந்து வருகின்ற காலத்திலும் – இனி வரப் போகும் காலத்திலும் மகா பெரியவா அற்புதங்களை நிகழ்த்துவார். கேட்டதைக் கொடுத்து வருவார்.
எப்படியெல்லாம் தனது இன்னருளைத் தந்து ஆத்மார்த்த பக்தர்களின் குடும்பத்தை மகா பெரியவா காப்பாற்றி இருக்கிறார் என்பதை அனுபவித்து அனுபவித்துப் படிக்க நேர்ந்தால், அந்தப் பக்தியின் வீர்யம் புரியும். ‘கலியுக தெய்வமே… காஞ்சிக் கடலே… கண் கண்ட தெய்வமே‘ என்று அவரது திருவடிகளை சரண் புக வைக்கும்.
காஞ்சி மகா பெரியவா ஸித்தி (மறைவு) ஆவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவத்தைப் படித்தால், கண்கள் பனிக்க ஆரம்பிக்கும்.
அப்போது முதுமையின் காரணமாக காஞ்சி ஸ்ரீமடத்தை விட்டு மகா பெரியவா எங்கும் சென்றதில்லை.
நடமாட முடியாததால் ஒரு பெரிய ஆசனத்திலேயே வீற்றிருந்து வருகின்ற பக்தர்களுக்குத் திருக்காட்சி தந்து கொண்டிருந்தார்.
இந்த தெய்வத்தைக் கண்டு தரிசிப்பதற்கு தேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நித்தமும் காஞ்சியில் குவிய ஆரம்பித்தார்கள். கலியுக தெய்வம் அமர்ந்திருக்கிற இடத்தில் இருந்து சுமார் பத்தடி தொலைவில் நின்றபடியே வரிசையில் வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.
வெங்கட்ராமன் என்கிற பக்தர் மகானைத் தரிசிப்பதற்காகக் கும்பகோணத்தில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்தார். அங்கே முனிசிபல் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார் இவர்.
குறைகள் இல்லாத மனிதன் தேடினாலும் கிடைக்க மாட்டான். ஒருவேளை அப்படி ஒருவன் கிடைத்து விட்டால், அவன் மனிதன் அல்ல. மகான். விழுந்து விழுந்து வணங்கலாம்.
அதுபோலத்தான் இந்த வெங்கட்ராமனும். மனதில் ஒரு பெரிய குறையோடு மகா பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்தார். தனது மூன்று மகள்களையும் அழைத்து வந்திருந்தார்.
மூத்த மகள் கிருத்திகாவுக்கு ஒரு சோகம். அப்போது அவளுக்கு வயது சுமார் பதினைந்து.
சோகமென்றால், கொஞ்ச நஞ்சம் இல்லை. எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படி வரவே கூடாது என்றுதான் கிருத்திகாவைப் பார்க்கிற நேரத்தில் எவரும் கடவுளைப் பிரார்த்திப்பார்கள்.
எலும்பும் தோலுமாக – பார்ப்பதற்கே சற்று அருவருப்பாகக் காணப்படுவாள் (இதை சொல்லும்போது ஒரு பெண்ணை இப்படிக் குறிப்பிட்டு எழுதுகிறோமே என்று என் மனம் வேதனைப்பட்டாலும், அப்போதைய கிருத்திகாவை இந்தக் கட்டுரை படிப்பவர்களின் மனக் கண் முன்னால் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதற்காக உள்ளது உள்ளபடி எழுதுகிறேன்.) ஒரு முறை கிருத்திகாவைப் பார்க்கின்ற எவரும், ‘அடடே… இந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு சோகமா?‘ என்று படைத்தவனுக்கே சாபம் கொடுத்து விடுவார்கள்.
நடக்க முடியாது. எங்கு போனாலும் கிருத்திகாவைத் தூக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். பெற்ற தாயும் தகப்பனும் ஒரு சிறு குழந்தைக்கு சேவை செய்வது போல் இந்தப் பதினைந்து வயது குழந்தைக்கும் சேவை செய்தார்கள்.
திட ஆகாரம் எதுவும் கிடையாது. எல்லாமே திரவ ஆகாரம்தான்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா?
எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், நம் பிள்ளை நம் பிள்ளைதான்.
அடுத்தவர்கள் பார்வைக்கு வேண்டுமானால் – அருவருப்பாக, அவமானமாக, வேதனையாக இருந்தாலும் வெங்கட்ராமனுக்கும் அவரது மனைவிக்கும் இவள் மூத்த மகள்.
”எந்தப் பிறவியில் என்ன சோகமோ? யாருக்கு என்ன அநீதி இழைத்தோமோ… இந்தப் பிறவி இப்படி அமைந்து விட்டது. அதற்காக, கிருத்திகா எங்கள் பெண் இல்லை என்று சொல்ல முடியுமா? அவள் எங்களது செல்ல மகள். தெய்வம்தான் இவளை எங்களுக்கு மகளாகக் கொடுத்திருக்கிறது. அந்த தெய்வம் நினைத்தால் இவள் குணமாகி விடுவாள்” என்று வெங்கட்ராமன் தன்னுடன் பணி புரிபவர்களிடமும், தன் அக்கம்பக்கத்து வீட்டு அன்பர்களிடமும் கண்ணீருடன் சொல்வார்.
ஆங்காங்கே மருத்துவமனைகளில் எல்லாம் காட்டியாயிற்று. என்னென்னவோ பரிசோதனை எடுத்தார்கள். ஒரு வாரம் கழித்து ரிசல்ட்டைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார்கள் டாக்டர்கள்.
வெங்கட்ராமன் தம்பதியர் சோகத்துடன் வீட்டுக்குத் திரும்புவார்கள். இது ஒரு தொடர்கதையானது.
ஒரு முறை சென்னை நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துக் கொண்டு போய் காண்பித்தார் வெங்கட்ராமன்.
அங்கே இருந்த பெரிய டாக்டர் ஒருவர் தன் பங்குக்கு ஒரு சில பரிசோதனைகளை செய்து பார்த்தார்.
முடிவில், ”கல்லீரல் வேலை செய்யலை. ஆபரேஷன் செய்யறதுக்கு உங்க பொண்ணோட ஒடம்பு ஒத்துழைக்காது. தவிர, என்ன ப்ராப்ளம்னு சரியா கண்டுபிடிக்க முடியலை. ரொம்ப நாள் ஒங்க பொண்ணு இருப்பாள்னு சொல்ல முடியாது. கிரிட்டிக்கல் ஸ்டேஜ்.
அந்த ட்ரீட்மென்ட், இந்த ட்ரீட்மென்ட்னு எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம். மாத்திரை, மருந்து எழுதித் தர்றேன். அதை கிருத்திகாவுக்கு டெய்லி குடுங்க. அதை சாப்பிட்டு வீட்டுலயே இருக்கட்டும். எத்தனை நாள்னு கடவுள் எழுதி இருக்கான்னு தெரியலை” என்றார் டாக்டர்.
டாக்டர் எழுதிக் கொடுத்த பேப்பரை வாங்கிக் கொண்டு கண்ணீரோடு வீடு வந்து சேர்ந்தார் வெங்கட்ராமன்.
அப்போது கும்பகோணத்தில் ஒரு சில உறவினர்கள், ”ஏண்டா வெங்கட்ராமா… பெரிய பொண்ணை வெச்சுண்டு இந்த அளவுக்குத் தவிக்கிறியே… விதியோட விளையாட்டுன்னு எழுதியாச்சுன்னா மருந்து மாத்திரைல்லாம் வேலை செய்யாதுடா… அதுக்கு இருக்கிற ஒரே மந்திரம் – மகா பெரியவா. காஞ்சியில நம்மோட குலகுரு மகா பெரியவா இருக்காரே… அவர்ட்ட கிருத்திகாவைக் கூட்டிண்டு போனியோ?” என்று கேட்டார்கள்.
அப்போதுதான் வெங்கட்ராமனுக்கு மகா பெரியவா நினைவு வந்தது.
காஞ்சிக்குச் செல்லலாமே? அந்த காருண்யமூர்த்தியைத் தரிசிக்கலாமே?‘ என்றெல்லாம் மனதில் தோன்ற… வீட்டில் பேச… எல்லோரும் தயாரானார்கள்.
காஞ்சிக்குச் செல்கிற நாளும் வந்தது.
அன்றைய தினம் கும்பகோணத்தில் இருந்து பயணித்து காஞ்சியை அடைந்தார்கள்.
வெங்கட்ராமனுக்குத் தற்போது இருக்கக் கூடிய ஒரே நம்பிக்கை – மகா பெரியவா! அவரது அனுக்ரஹம் மட்டும் கிடைத்து விட்டால், கிருத்திகா ஓரளவு நல்ல நிலையை எட்டி விடுவாள்.
காஞ்சி ஸ்ரீமடத்தினுள் குடும்பத்துடன் நுழைந்தார் வெங்கட்ராமன். மூத்த மகள் கிருத்திகாவை இடுப்பில் தூக்கிக் கொண்டு மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வந்தார்.
கூட்டமான கூட்டம். வரிசை மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது.
எங்கெங்கிருந்தோ பக்தர்கள்.
அவர்கள் மனதில் என்னென்னவோ பிரார்த்தனைகள்.
மகானுக்கு அருகே சென்றதும், அந்த தெய்வத்தின் பார்வை ஒரு கணம் நம் மீது திரும்பாதா என்கிற ஏக்கத்துடன் அனைவரும் இருந்தனர்.
வரிசையில் சென்று கொண்டிருக்கும்போது தங்கள் முறை வந்தால் – காணிக்கையாகக் கொண்டு சென்ற பழங்கள், புஷ்பங்கள், ஏனைய திரவியங்களை மகா பெரியவாளுக்கு முன்னால் வைத்து விட்டு, நமஸ்காரம் செய்தார்கள்.
ஒரு சிலரிடம் ஜாடையாகப் பேச்சு.
ஒரு சிலருக்கும் கையை உயர்த்தி ஆசி.
ஒரு சிலரை உற்றுப் பார்த்து அனுக்ரஹம்.
வரிசை நகர்ந்து கொண்டே இருந்தாலும், கூட்டம் குறையவில்லை. இருபது பேர் தரிசனம் முடித்துச் செல்கின்றார்கள் என்றால், நாற்பது பேர் புதிதாக உள்ளே நுழைகின்றனர்.
மகளை சுமந்திருக்கும்போது பாசத்தால் வலி தெரியவில்லை வெங்கட்ராமனுக்கு!
மகானது ஆசி பெற்று பரிபூரண சந்தோஷத்துடன் நகர்கின்ற பக்தர்களை விரைந்து அனுப்பி, அடுத்தடுத்து வருகின்ற பக்தர்களுக்கு உரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருந்தனர் சிஷ்யகோடிகள். எந்த விதமான சிரமமும் இல்லாமல் இந்த வரிசை மிக ஒழுங்காக நகர்ந்து கொண்டிருந்தது.
இதோ, மகா பெரியவா அருகே நெருங்கப் போகிறார்.
அந்த மகானுக்கு முன்னால் மகளைக் காட்டப் போகிறார்.
மருத்துவத்தால் முடியாத சாதனையை இந்த மகான் எப்படியும் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை வெங்கட்ராமனுக்கு வந்து விட்டது.
இதோ, தற்போது மகா பெரியவாளுக்கு முன்னால் வெங்கட்ராமன்! அவரது இடுப்பில் மூத்த மகளான கிருத்திகா.
மற்ற இரு மகள்களும் தாயின் அரவணைப்பில் வந்து கொண்டிருந்தனர்.
பதினைந்து வயது மகளை இடுப்பில் சுமந்து கொண்டு மகா பெரியவாளுக்கு முன்னால் நிற்கும்போது வெங்கட்ராமன் விழிகளில் குளம் கட்ட ஆரம்பித்தது கண்ணீர்.
இடுப்பில் இருந்த மகளை ஒருவாறு அணைத்தபடியே மகா பெரியவாளைப் பார்த்து, ”சர்வேஸ்வரா….” என்று கும்பிட்டார்.
மகா பெரியவா பார்வை இவர்கள் மீது திரும்பியது.
‘எதுவும் பேச வேண்டாம். பிரார்த்தனை பண்ணிக்குங்கோ‘ என்பது மாதிரி சிஷ்யகோடிகள் அறிவுறுத்த… எதுவும் பேசாமல் பெரியவாளைப் பார்த்தார் வெங்கட்ராமன்.
‘எத்தனையோ கோயில் போயிட்டு வந்துட்டேன். என்னென்னமோ பரிகாரம் பண்ணிப் பாத்துட்டேன். போதாக்குறைக்கு ஆஸ்பத்திரி வாசலும் மிதிச்சுப் பாத்துட்டேன்… ஒண்ணும் பலன் இல்லே சர்வேஸா… சங்கரா… ஒன்னைத் தேடி ஒன் சந்நிதிக்கே வந்துட்டேன்‘ என்று வாய் விட்டுச் சொல்ல முடியாமல், மனசுக்குள் மருகியபடியே மகா பெரியவாளிடம் பிரார்த்தித்தார்.
அடுத்த விநாடி மகா பெரியவாளின் கருணைப் பார்வை கிருத்திகாவின் மேல் நிலை குத்தி நின்றது.
அதுவரை வரிசையில் வந்து கொண்டிருந்த பக்தர்கள், மகா பெரியவாளைத் தரிசித்ததும், பிரசாதம் பெற்றுக் கொண்டு தங்கு தடை இல்லாமல் நகர்ந்தபடியே இருந்தார்கள். ஆனால், இந்த வேகத்துக்கு ஒரு பிரேக் போட்டது போல் வெங்கட்ராமன் அப்படியே நின்று விட்டார்.
காரணம் – நகரச் சொல்லி மகா பெரியவாளிடம் இருந்து உத்தரவு வரவில்லை. எனவே, சீடர்களும் மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று வெங்கட்ராமனைப் பார்த்து ‘ஒம் பொண்ணோட இங்கே வந்து ஒக்காந்துக்கோ‘ என்று தனக்கு முன்னால் தரையில் ஓரிடத்தை வலக் கையால் அடையாளம் காண்பித்தார் மகா பெரியவா.
இதுவே வெங்கட்ராமனுக்குப் பெரிய டானிக் போல் இருந்தது. கஷ்டப்பட்டு மகள் கிருத்திகாவை தரையில் தனக்குப் பக்கத்தில் வசதியாக அமர்த்தி வைத்துக் கொண்டார். அவளது இரு கரங்களையும் மகா பெரியவாளைப் பார்த்து கூப்பிய நிலையில் வைத்திருக்குமாறு சொன்னார்.
வரிசையில் வந்து கொண்டிருக்கிற பக்தர்களைத் தவிர, மற்ற பக்தர்கள் அப்படியே அமர்த்தி வைக்கப்பட்டார்கள். எல்லோரும் ”சங்கரா… சங்கரா…” என்று கயிலைவாசனைத் தரிசிப்பது போல் மாறி மாறி கன்னங்களில் போட்டுக் கொண்டு மகானைப் பார்த்துப் பரவசப்பட்டனர்.
ஒரு சில நிமிடங்களுக்குத் தன் பார்வையால் கிருத்திகாவுக்கு அருளிக் கொண்டிருந்த நடமாடும் தெய்வம், தற்போது பார்வையைத் திருப்பியது. அருகில் இருந்த சிஷ்யரை ஜாடை காட்டி அழைத்தார்.
இரண்டடி முன்னால் நகர்ந்து பெரியவா அருகே வந்து அவரது உத்தரவுக்காகக் காத்திருந்தார் சிஷ்யர்.
ஜாடையாலும், வார்த்தைகளாலும் ஒரு பெரிய மாம்பழத்தைக் கொண்டு வரச் சொன்னார் மகா பெரியவா.
உள்ளே ஓடினார் சிஷ்யர். ஒரு சில விநாடிகளுக்குள் மஞ்சள் மசேல் என்றிருந்த பெரிய மாம்பழம் ஒன்றோடு திரும்பினார். அதை மகா பெரியவாளுக்கு முன்னால் வைத்து விட்டு, அப்படியே பின்னால் நகர்ந்து கொண்டார்.
அந்த மாம்பழத்தைத் தன் திருக்கரத்தில் எடுத்தார். சுமார் ஐந்து நிமிடம் தன் வயிற்றில் வைத்து இப்படியும் அப்படியும் உருட்டி கிருத்திகாவையே பார்த்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
பிறகு, தன் சிஷ்யன் மூலமாக அந்த மாம்பழத்தை கிருத்திகாவிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார் மகா பெரியவா.
அதன்படி சிஷ்யனும் மாம்பழத்தைக் கிருத்திகாவிடம் கொடுக்க… ஏதும் அறியா அவள் பெரியவாளை ஒரு புன்னகையுடன் பார்த்து விட்டு, மாம்பழத்தை வாங்கிக் கொண்டாள். மாம்பழத்தைக் கிருத்திகாவைச் சாப்பிடச் சொல்லுமாறு வெங்கட்ராமனிடம் சொன்னார் சிஷ்யர்.
நன்றாகக் கவனிக்க வேண்டும்… அதுவரை எந்த விதமான திட ஆகாரத்தையும் எடுத்துக் கொள்ளாத கிருத்திகா – திரவ ஆகாரத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த கிருத்திகா – மகா பெரியவா திருச்சந்நிதியில் முதல் முறையாக திட ஆகாரம் தரப்படுகிறது – அவரது பரிபூரண ஆசியுடன்.
இந்தக் காட்சிகளை வெங்கட்ராமனும் அவரது மனைவியும் கண்களில் நீர் வழிய… பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எந்த விதமான சிரமமும் சிணுங்கலும் இல்லாமல் வெகு சீக்கிரமாக மாம்பழத்தைச் சாப்பிட்டு முடித்தாள் கிருத்திகா.
அடுத்த நிமிடம் மகா பெரியவா தன் சிஷ்யனை அருகே அழைத்து, ‘அவர்களைப் பத்திரமா ஊருக்குப் பொறப்படச் சொல்லு‘ என்று சைகையால் உத்தரவு கொடுத்தார்.
எந்தப் பரப்பிரம்மத்தின் கருணைப் பார்வை தன் மகள் மேல் திரும்ப வேண்டும் என்று எதிர்பார்த்து வெங்கட்ராமன் காஞ்சிபுரம் வந்தாரோ, அது பூரணமாக நிறைவேறி விட்டது.
சந்தோஷத்துடன் பெரியவாளை நமஸ்கரித்து விட்டுக் குடும்பத்துடன் வெளியே வந்தார் வெங்கட்ராமன். கிருத்திகாவைத் தூக்கிக் கொண்டு நடக்கும்போது ஏதோ பெரிய பாரம் மனதில் இருந்து இறங்கியது போல் இருந்தது.
சென்னை செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தார்கள். நங்கநல்லூரில் முன்பு பரிசோதித்த மருத்துவமனையில் மீண்டும் ஒரு பரிசோதனை இருப்பதால், அதையும் முடித்து விடலாம் என்று தீர்மானித்திருந்தார்.
சென்னைக்கு வந்து இரவு படுத்தார்கள்.
அடுத்த நாள் காலை எழுந்ததும், ஆனந்த அதிர்ச்சிகள் துவங்கின.
கிருத்திகா படுக்கையில் இருந்து எழுந்ததும், அவளது உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள். அதுவரை எலும்பும் தோலுமாக – பார்ப்பதற்கே விகாரமான நிலையில் இருந்தவள் – சற்றுப் பொலிவுடன் மாறி இருந்தாள்.
வெங்கட்ராமனுக்கும் அவரது மனைவிக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மகளைத் தொட்டுப் பார்த்து – தடவிப் பார்த்து வியந்தனர். ”மகா பெரியவா… மகா பெரியவா…” என்று அந்த மகான் குடி கொண்டிருக்கும் காஞ்சிபுரம் திசையை நோக்கி வணங்கினர்.
அதோடு நிற்கவில்லை. ”அம்மா… எனக்குப் பசிக்குது… சாப்பாடு கொடு” என்று பிசிறின குரலில் கேட்டாள் கிருத்திகா.
வெங்கட்ராமன் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டே, ”என்னம்மா கிருத்திகா… பசிக்கிறதாம்மா… கொஞ்சம் இருடா கண்ணு… அப்பா உள்ளே போய் ஒனக்கு சாப்பாடு எடுத்துண்டு வரேன்” என்று சொல்லி விட்டு, கிச்சன் போய் ஒரு தட்டில், என்ன திட ஆகாரம் தயாராக இருக்கிறதோ, அதைக் கொண்டு வந்து கிருத்திகாவுக்கு ஊட்டினார்.
அந்த உணவை ரசித்து ரசித்துச் சாப்பிட்டாள் கிருத்திகா. குடும்பத்தில் எவரும் நம்ப முடியாமல் இந்த அதிசயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் மாலையே முழு தேகமும் ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டது போல் மாற ஆரம்பித்து விட்டது. மாய மந்திரம் போட்டால் எப்படி இருக்கும்… அதுபோன்ற ஒரு நிலையை மகா பெரியவா பிரசாதமான மாம்பழம் ஏற்படுத்தி விட்டது.
அன்றைய இரவும் நன்றாகச் சாப்பிட்டாள். இயல்பாகப் படுத்து உறங்கினாள்.
அடுத்த நாள் நங்கநல்லூர் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டிய நாள்… எனவே, கிருத்திகாவைத் தூக்கிக் கொண்டு சென்றார் வெங்கட்ராமன்.
மருத்துவமனைக்குள் இவர்கள் நுழைந்ததுமே, இவளை ஏற்கெனவே சோதித்த மருத்துவர்கள் பார்த்து வியந்தனர். ”கிருத்திகாவா இவள்? எலும்பும் தோலுமாக இருந்த இவள் இப்படிப் பார்க்க லட்சணமாக மாறி இருக்காளே… எப்படி?” என வியந்தார்கள்.
மருத்துவர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள் நடந்து முடிந்தன.
ஒரு சில மணி நேரத்தில் சகல பரிசோதனைகளையும் முடித்த மருத்துவர்கள் குழு, அதற்கான முடிவுகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டது.
காரணம் – கல்லீரல் தொடர்பான பல குறைபாடுகள் இருப்பதாகச் சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது அல்லவா? தற்போது அப்படி ஒரு குறைபாடு இருந்ததற்கான சுவடுகளே கிருத்திகாவின் உடலில் தெரியவில்லை.
மகா பெரியவா திருச்சந்நிதிக்கு கிருத்திகா சென்று வந்ததை அறிந்த ஒரு டாக்டர், ”நாங்களெல்லாம் சாதாரண மருத்துவர்கள்… ஆனால், நீங்கள் மகா பெரியவா என்கிற தெய்வத்தின் சந்நிதிக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். எங்களால் தீர்க்க முடியாத ஒரு குறைபாட்டை அந்த மகான் தனது அருட் சக்தியால் களைந்திருக்கிறார். உங்களது மகள் மிகவும் கொடுத்து வைத்தவள். விதியையே அந்த மகானின் அருளால் வென்று விட்டாள். இவற்றை எல்லாம் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் பரவசப்பட்டு.
இல்லையா, பின்னே! எப்படி இருந்த கிருத்திகாவை பலரும் வியக்கும்படி மாற்றி இருக்கிறார் மகா பெரியவா!
அதன் பின் கிருத்திகா எந்த விதமான பெரிய பிரச்னைகளையும் சந்திக்காதது, மகா பெரியவாளின் அருளே! கிருத்திகாவின் குடும்பம் தற்போது காரைக்குடியில் வசித்து வருகிறது. உடன்பிறந்த சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. கிருத்திகா தன் பெற்றோரின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.
கிருத்திகாவின் உடலில் தற்போது பல முன்னேற்றங்களைப் பார்க்க முடிவதாகப் பெற்றோர் சந்தோஷப்படுகின்றனர்.
மகா பெரியவா என்கிற தெய்வத்தின் பரிபூரண கருணையால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம் என்பது அனுபவப்பட்ட வெங்கட்ராமன் போன்ற அன்பர்களுக்கு மட்டுமே புரியும்!