மகா பெரியவாளின் தீட்சண்யமான பார்வை ஒருவர் மேல் பட்டு விட்டால் போதும். அவர் எப்பேர்ப்பட்ட துஷ்ட குணங்களைக் கொண்ட ஆசாமியாக இருந்தாலும் சரி… நற்குணங்கள் நிரம்பப் பெற்றவராக மாறி விடுவார். அந்தப் பார்வைக்கு இருக்கக் கூடிய மகத்துவம் அது!
தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்தால் (அவ்வளவு லேசில் வர மாட்டார்கள்), அவர்களது அடி மனசில் இருக்கின்ற நாத்திக எண்ணங்களை முற்றிலும் மாற்றி, ஆத்திகத்தின் பாதைக்குத் திருப்பி விட்டு விடுவார்.
மகா பெரியவாளிடம் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்த்து நாம் செல்லக் கூடாது. அவரிடம் நாம் எதிர்பார்ப்பதும் வேண்டுவதும் – தங்களின் கடைக்கண் பார்வை மட்டும் என் மீது இருந்தால் போதும். அவ்வளவே! மகா பெரியவா திருச்சந்நிதி கொண்டிருக்கிற காஞ்சிபுரம் பிருந்தாவனத்தில் (ஜீவ சமாதி) இதைத்தான் கேட்க வேண்டும்.
கருணையும் அன்பும் கலந்த அந்த ஒரே ஒரு பார்வை ஓராயிரம் மாற்றங்களை ஒருவரது வாழ்வில் நிகழ்த்தி விட முடியும்.
மகா பெரியவாளின் சாதாரண தோற்றத்தையும், பெரும்பாலும் அவர் முகாமிட்டிருக்கும் மாட்டுக் கொட்டகையையும் பார்த்து விட்டு, அலட்சியமாக அவரை எண்ணியவர்கள் பின்னாட்களில் அதிசயித்துப் போனார்கள்.
‘காவி உடை அணிந்த பரதேசிகள் (சந்நியாசிகள்) இந்த தேசத்தில் எத்தனையோ பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தானே இவர்… இவரைத் தேடி உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏன் இவ்வளவு பேர் வருகிறார்கள்?
இவருக்குப் பன்மொழிப் புலமை உண்டா? உலக நாடுகளில் நடந்து வருகிற நாட்டு நடப்பு தெரியுமா?‘ என்றெல்லாம் துச்சமாக நினைத்து, இவரை சோதித்துப் பார்க்க நினைத்தவர்கள், சுருண்டு போனார்கள்.
தன்னை சோதிக்க வேண்டும், அலட்சியம் செய்ய வேண்டும் என்று திருச்சந்நிதி தேடி வந்தவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல் தனக்கே உரிய பாணியில் புன்னகையோடு, ஆசி புரிந்து அவர்களை வழியனுப்பி வைப்பது காஞ்சி மகா பெரியவாளுக்கே உண்டான இயல்பு.
அது 1990-களின் துவக்கம். அப்போது கும்பகோணம் வணிக வரித்துறை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தவர் ரமணி. மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்.
இந்த அலுவலகத்தில் பணி புரிகின்ற தன் நண்பர்களுடன் வருடா வருடம் ஏதேனும் ஒரு டூர் செல்வது ரமணியின் வழக்கம்.
அதுபோல் அந்த வருடம் ‘எங்கு செல்லலாம்?‘ என்று நண்பர்களுடன் ரமணி கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அனைவரும் ‘பெங்களூர்… பெங்களூர்‘ என்று கோரஸாகச் சொன்னார்கள். அந்த வருட டூர் பெங்களூர் செல்வது என்று தீர்மானமானது.
”கும்பகோணத்தில் இருந்து பெங்களூர் செல்கின்றபோது அப்படியே காஞ்சிபுரம் ஸ்ரீமடம் சென்று மகா பெரியவாளை தரிசித்து விட்டு, அதன் பின் அங்கிருந்து பெங்களூர் செல்லலாம்” என்று ரமணி சொன்னபோது அனைத்து நண்பர்களும் இதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர் – ஒரே ஒருவரைத் தவிர.
யார் அந்த ஒருவர்?
அந்த ஒருவரும் ரமணியுடன் இதே வணிக வரி அலுவலகத்தில் பணி புரிபவர்தான். எல்லோருக்கும் நல்ல நண்பர்தான்.
ஆனால், இவர் நாத்திகவாதி. திராவிடக் கொள்கைகளில் மிகுந்த பற்று கொண்டவர். கடவுள் நம்பிக்கை கிடையாது. மகான்கள் என்றாலே வேப்பங்காய். தெய்வங்களைப் பற்றியோ, சந்நியாசிகளைப் பற்றியோ பேசினால் முகத்தைத் திருப்பிக் கொள்வதோடு, ஏகத்துக்கும் கிண்டல் செய்வார்.
இந்த நாத்திக நண்பருக்குக் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்குச் சென்று அதன் பின் பெங்களூர் புறப்பட்டுச் செல்வதில் உடன்பாடில்லை.
”நம்ம வீட்டுல இருக்கிறவங்களுக்குப் பட்டுப்புடவை வாங்க காஞ்சிபுரம் போனாலாவது சரின்னு சொல்லலாம்… அதை விட்டுட்டு ஒரு சந்நியாசியைப் பாக்கறதுக்காக ஏன் அங்கே போயி நம்ம நேரத்தை வீணாக்கணும்? நேரா பெங்களூர் போயிடலாமே?” என்று கேட்டார்.
ஆனால், ரமணி உட்பட மற்ற நண்பர்களுக்கு இதில் உடன்பாடில்லை. அந்த நாத்திக நண்பரைப் பார்த்து, ”உங்களோட நாத்திக உணர்வுக்கு நாங்க மதிப்பு கொடுக்கறோம். காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தால் மட்டும் அதற்கான வாய்ப்பு கிடைத்து விடாது. பெங்களூர் பயணத்தை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு அந்த மகானை தரிசிக்க இது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.
நாங்கள் மடத்துக்குள் போய் அவரைத் தரிசனம் பண்ணிட்டு போன சூடு தெரியாம வந்துடறோம். நீங்க அவரைத் தரிசிக்க வர வேண்டாம் சார். வேன்லயே உக்காந்துக்குங்க” என்று பணிவாகவும் பண்பாகவும் ரமணி சொல்ல… நாத்திக நண்பரும் ‘டபுள் ஓகே‘ சொல்லி விட்டார்.
குறித்த தினத்தில் கும்பகோணத்தில் இருந்து வணிக வரித்துறை நண்பர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் கிளம்பியது. காஞ்சிபுரத்தை அடைந்தது.
ஸ்ரீமடத்து வாசலில் வேன் நிற்க… நாத்திக அன்பரைத் தவிர, அனைவரும் கீழே இறங்கினார்கள்.
பக்தகோடிகளுக்கு மகா பெரியவா ஸ்ரீமடத்தினுள் தரிசனம் தந்து கொண்டிருந்ததால், திரளான அன்பர்கள் உள்ளே நுழைவதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.
ரமணியும் மற்ற நண்பர்களும் நாத்திக அன்பரைப் பார்த்து, ”நீங்க வண்டிலயே இருங்க. நாங்க உள்ளே போய் தரிசனம் பண்ணிட்டு வந்துடுறோம்” என்று சொல்லி விட்டு நகர முற்பட… நாத்திக நண்பருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை… ”இருங்க… உங்க கூட நானும் வரேன்” என்றார்.
ரமணிக்கு அதிர்ச்சி. சிரித்தவாறே, ”என்ன சார்… நீங்களும் வரீங்களா? எதுக்கு?” என்று கேட்டார்.
”இல்லே… இவ்வளவு பேர் இந்த மடத்துக்குள்ளே போறாங்களே… வராங்களே… அப்படி என்னதான் உள்ளே இருக்குனு பாத்துடலாமே…” என்று நக்கலும் நையாண்டியும் கலந்து சொன்னார்.
”சரி… உள்ளே வந்தா பெரியவாகிட்ட போறப்ப சட்டை, பனியனைக் கழற்றணுமே?” என்று ரமணி சொல்ல…
”அதெல்லாம் கழட்ட மாட்டேன். நான் என்ன, அவரை தரிசிக்கவா உள்ளே வரேன்?! உங்க கூட சும்மா வரேன். அவ்ளோதான். நீங்க மட்டுமில்லை. இந்த மடத்துக்குள்ள இருக்கிற யாரும் சட்டையைக் கழட்டுங்கன்னு என்னை வற்புறுத்த முடியாது” என்று நாத்திக நண்பர் அதிகார தோரணையில் சொல்ல… என்ன பதில் சொல்வதென்று யாருக்கும் புரியவில்லை.
”எல்லாம் பெரியவா விட்ட வழி” என்று முணுமுணுத்துக் கொண்டே ரமணி ஸ்ரீமடத்தினுள் செல்ல… அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கும் பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் கட்டுக்கோப்பாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
மகா பெரியவாளைத் தரிசிக்க நெருங்குகிற வேளையில் – அதாவது தங்கள் முறை வரும்போது தாங்கள் அணிந்திருந்த சட்டை மற்றும் பனியன்களைக் கழற்றி விட்டு வெற்றுடம்போடு மகானை நமஸ்கரித்தார்கள் பக்தர்கள்.
மகா பெரியவாளை இன்னும் ஒரு சில நிமிடங்களில் தரிசிக்கப் போகிறோம் என்கிற எண்ணம் ரமணி மற்றும் அவரது நண்பர்களுக்கு ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.
ரமணிக்கு முன்னால் சுமார் பத்து பக்தர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எனவே, தற்போதே சட்டை மற்றும் பனியன்களைக் கழற்றினால்தான், மகா பெரியவா
அருகே செல்லும்போது அந்த மகானை ஆனந்தமாக தரிசித்துப் பிரசாதம் பெறலாம் என்று எண்ணி, ரமணியும் நண்பர்களும் கழற்ற ஆரம்பித்தார்கள்.
கிட்டத்தட்ட இந்த வரிசையில் நிற்கின்ற ஆண் பக்தர்கள் அனைவரும் தாங்கள் அணிந்திருந்த சட்டை பனியன்களைக் கழற்றி விட்டிருந்தனர். நாத்திக நண்பர் மட்டும் ‘நான் கழற்றவே மாட்டேன்‘ என்று விடாப்பிடியாக அப்படியே இருந்தார்.
ரமணி மற்றும் நண்பர்களுக்கு முன்னால் நாத்திக அன்பர் நின்று கொண்டிருந்தார்.
மகா பெரியவாளைக் கிட்டத்தட்ட நெருங்கியும் சட்டையைக் கழற்றாமல் இருக்கும் நாத்திக அன்பரை அனைவரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.
ஆனால், நாத்திக அன்பர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மகா பெரியவாளை நோக்கியவாறு வரிசையில் நகர்ந்து கொண்டே வந்தார்.
இதோ, அடுத்த ஒரு சில விநாடிகளில் மகா பெரியவாளுக்கு முன்னே வந்து விட்டார் நாத்திக அன்பர்.
பார்வையில் ஒரு அலட்சியத்துடன் மகானைப் பார்க்க…. மகானது தீட்சண்யமான பார்வை நாத்திக அன்பரை ஊடுருவ… அடுத்த விநாடி நடந்ததுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
தான் அணிந்திருந்த சட்டை மற்றும் பனியனை விறுவிறுவென்று கழற்றி விட்டு, வெற்றுடம்போடு மகா பெரியவா திருச்சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
ரமணிக்கும், நண்பர்களுக்கும் ஆனந்த அதிர்ச்சி. ஒரு சில விநாடிகளுக்கு முன் வரை ‘சட்டை, பனியனைக் கழற்ற மாட்டேன்‘ என்று அதிகாரத்தோடு சொன்னவருக்குத் திடீரென என்ன ஆயிற்று என்று குழம்பினார்கள்.
நாத்திக அன்பரை ஏறெடுத்துப் பார்த்த மகா பெரியவா ஒரு சாத்துக்குடி பழத்தையும் விபூதி, குங்குமத்தையும் பிரசாதமாகக் கொடுத்து, புன்னகையோடு திருக்கரம் உயர்த்தி, ஆசி புரிந்து அனுப்பினார்.
அவருக்கு அடுத்து இந்த வரிசையில் சென்ற ரமணி மற்றும் நண்பர்களுக்கு வெறும் ஆசி மட்டுமே தவிர, பிரசாதம் தரவில்லை மகா பெரியவா.
எல்லோரும் வெளியே வந்தனர். நாத்திக அன்பரது முகத்தில் இனம் புரியாத ஒரு பிரகாசம். தன் கையில் இருந்த விபூதி மற்றும் குங்குமத்தை வாழ்க்கையில் முதல் முறையாக நெற்றியில் பூசிக் கொண்டார்.
அவரது கையில் இருந்த பிரசாதத்தைத்தான் ரமணியும் நண்பர்களும் எடுத்துக் கொள்ள நேரிட்டது.
ஆச்சரியம் மேலிட நாத்திக அன்பரை நெருங்கிய ரமணி, ”சார்… என்ன ஆச்சு? நீங்கள் நாத்திகவாதி அல்லவா? எப்படி இங்கே சட்டையைக் கழற்றினீர்கள்? எப்படி நமஸ்காரம் செய்தீர்கள்? அதையும் தாண்டி பெரியவா கொடுத்த பிரசாதத்தை உங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டிருக்கிறீர்களே… எப்படி சார்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார்.
நாத்திக அன்பரது முகத்தில் ஒரு பரவசம். ”எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அவரை நெருங்கின உடனே அவரைப் பார்த்தேன். அந்தப் பார்வை எனக்குள் ஓராயிரம் மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டது போன்ற உணர்வு. அதான், என்னை அறியாமல் சட்டையைக் கழற்றினேன். அவரது கால்களில் விழுந்தேன்” என்று சொல்ல… நாத்திகரையும் ஆஸ்திகர் ஆக்கும் வல்லமை கொண்ட அந்த மகானை இருந்த இடத்தில் இருந்தே மீண்டும் ஒரு முறை வணங்கி விட்டு வெளியே வந்தார்கள் ரமணியும், நண்பர்களும்.
இதன் பிறகு முழுக்க முழுக்க ஆன்மிகப் பாதைக்கு வந்து விட்டார் அந்த நாத்திக அன்பர். தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று கும்பகோணத்தில் வசித்து வருகிறார். தன்னால் ஆன இறை சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்.